ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்

இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே.

ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்‌ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டேன். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா?” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்‌ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.

சைக்கிளில் தினம் முப்பது மைல்கள் சென்று புத்தகம் விற்று வாழ்க்கையைக் கடத்தும் ’பாதி’ என்ற என் முன் காட்சி தந்த காந்தி போன்ற ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னேன். கிராம மக்கள் எல்லோரும் கூடி தம்முடன் வாழும் ஒரு கிராமத்தானுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொன்னேன்.

வாழ்க்கையின் குணமும், வாழ்க்கை மதிப்புகளும் சக மனிதனைப் பற்றிய பார்வைகளும் எவ்வளவு மாறிவிட்டன. இன்றும் காந்திகளைப் பார்க்கிறோம். காந்தி என்ற பெயர் தாங்கியவர்கள்.. நன்றாயிருக்கிறது வாதம். முருகன் என்று பெயர் வைத்து விட்டால், கோவணம் அணிந்து மலை உச்சிக்குப் போய் நிறக வேண்டுமா என்ன?

நான் புர்லாவுக்குப் போன புதிதில் USSR என்று அன்று அறியப்பட்ட ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தொன்பதாவது காங்கிரஸ் நடந்தது. 1951-ல், ரொம்ப காலத்துக்குப் பின் நடக்கும் காங்கிரஸ் அது. நான் சோவியத் நாடு, சோவியத் லிட்டரேச்சர் எல்லாம் வாங்கி வந்தேனா. 19-வது காங்கிரஸும் அதன் தீர்மானங்களும் அடங்கிய பத்திரிகைகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அப்போது இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று 19-வது காங்கிரஸை வரவேற்றுப் பேசும் முக்கிய பொறுப்பு ஜார்ஜ் மெலங்கோவ் என்ற இளம் தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவருக்குத் தரப்பட்டது. இது ஸ்டாலின் தன் வாரிசை தன் கட்சிக்கும், ரஷ்யாவுக்கும், உலகுக்கும் அறிவிக்கும் செயல் என்று அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்டது.

ஸ்டாலினிச ரஷ்யா விளம்பரப் படம் (1936)

அத்தோடு ஸ்டாலினின், Economic Problems Facing USSR என்றோ என்னவோ, (அது கம்யூனிஸ்ட் பார்ட்டி என்றும் இருக்கலாம், USSR என்றும் இருக்கலாம்,சரியாக நினைவில் இல்லை). ஒரு நீண்ட பெரிய அறிக்கை ஸ்டாலின் பெயரில் வெளியிடப்பட்டது. அது எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டு பிரசாரப் படுத்தப் பட்டது. ஏதோ 100 பக்கங்களுக்கு இருக்கும். சின்ன புத்தகம் மாதிரி.. அது ஏதோ மார்க்ஸிஸம், லெனினிஸம் தத்துவத்திற்கு ஸ்டாலின் தன் தரப்பில் தந்துள்ள தத்துவார்த்த பங்களிப்பு போன்று பலத்த தண்டோராவுடன் தரப்பட்டது. எல்லா கம்யூனிஸ்ட் பார்ட்டிகளும் அதை வரவேற்றுப் புகழ்ந்து பேசி, தீர்மானங்கள் நிறைவேற்றின. இந்திய, கம்யூனிஸ்ட் கட்சியும் சரி. அதன் தமிழ் நாட்டுக்கிளையும் சரி. அதோடு மாலெங்கோவின் புகழும் பாடின. மாலெங்கோவ் மாஸ்கோ நகர கம்யூனிஸ்ட் பார்ட்டியின் தலைவராகவோ இல்லை செயலாளராகவோ இருந்தார் என்று நினைவு. அந்த புதிய பொருளாதாரக் கொள்கை என்னவென்று நான் படித்ததில்லை. எனக்குப்புரியவும் புரியாது. ஆனால் அதற்குக் கிடைத்த பிரசாரம் 19-வது காங்கிரஸையும், மாலெங்கோவையும் என் நினைவில் வலுவாகப் பதித்த காரியம் செய்தது. இது நான் புர்லா சேர்ந்த ஆரம்ப காலத்தில். 1951 என்று நினைப்பு. ஆனால் ஆறு வருடங்கள் கழித்து 1956-ல், ஸ்டாலின் 1953-ல் இறந்த பிறகு, மூன்று வருட காலத்திற்குள், மாபெரும் புரட்சிகர மாற்றங்கள், சரித்திர மாற்றங்கள் ரஷ்யாவில், கம்யூனிஸ்டு பார்ட்டியில் நிகழ்ந்தன.

1956 உலக சரித்திரத்தில், கம்யூனிஸ்ட் பார்ட்டியில், நம்மூரையும் சேர்த்து, மிக முக்கியத்வம் வாய்ந்த வருடம். அதற்குக் காரணம், அந்த வருடம் USSR – ன் 20-வது காங்கிரஸ் நடந்தது. அதில் நடக்கவிருந்த புரட்சிகர மாற்றங்களுக்கு முன் தயாரிப்பான சில நிகழ்வுகள் அதற்கு முந்திய வருடங்களில் நிகழ்ந்தன. ஒன்று ஸ்டாலின் இறந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே ரகசிய போலீஸின் தலைவராக இருந்த ஸ்டாலின் பிறந்த ஜியார்ஜியாவைச் சேர்ந்த ’லாவ்ரெண்டி பெரியா’வை முதலில் சுட்டுக் கொன்றார்கள். அவர் உயிரோடு இருந்தால் இவர்களைக் கொன்று தீர்த்திருப்பார் என்று க்ருஷ்சேவே சொன்னார் என்று நினைவு எனக்கு. கம்யூனிஸ்ட் பார்டியின் தலைவர் தான் ரஷ்ய அரசின் மறைமுக சர்வாதிகாரி என்ற நிலை மாறி, ஸ்டாலின் தன் வாரிசாக நியமித்துச்சென்ற மாலங்கோவ், வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்த வ்யாசெஸ்லாவ் மொலடோவ், நிகொலாய் புல்கானின், காகனோவிச் என்று எல்லோரும் சேர்ந்து கூட்டாட்சி நடத்தப் போவதாக பிரகடனம் செய்தார்கள். பின் மெல்ல மெல்ல மாலெங்கோவ், மொலொடோவ் காகனோவிச் என்று (எனக்கு நினைவிருக்கும் வரை) எல்லோரும் வீட்டுக்கு அனுப்பபட்டனர். க்ருஷ்செவும் நிகோலெய் புல்கானினும் தான் மிகுந்தனர். பின்னர் புல்கானினையும் வீட்டுக்கு அனுப்பினர்.

க்ருஷ்சேவ் கம்யூனிஸ்ட் பார்ட்டி செக்ரடரியாக, எல்லா அதிகாரங்களும் கொண்ட, சர்வாதிகாரியாக ஆகிவிட்டார் என்பதற்கு அவர் 20-வது காங்கிரஸுக்கு அளித்த புரட்சிகர திடுக்கிட வைக்கும் உரையே சாட்சி. எல்லா நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அது பலத்த அடியாக விழுந்தது. நேற்று வரை ராமபிரானாக பூசிக்கப்பட்ட மனிதர் உண்மையில் ராவணனாக்கும் என்று லட்சுமணனே பிரகடனம் செய்தால் எப்படி இருக்கும்?

உலகம் முழுதும் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஸ்டாலின் தான் கண்கண்ட தெய்வம். அவர் சொன்னது தான் தெய்வவாக்கு. அது மீறப்படக் கூடாதது. ஒவ்வொரு சொல்லும் ஆழமாக, வெகு தீவிரத்துடன் பக்தியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், கட்சி கூட்டங்களில் மார்க்ஸ், ஏஞ்செல்ஸ், லெனின், ஸ்டாலின் நால்வர் படங்களும் மிகப் பெரிதாக அலங்கரிக்கும். ஒரு வேளை ஒரே ஒரு விதி விலக்கு. இருக்கக்கூடும். ஆனால் அது வெளியே சொல்லப் படாதது. சைனாவின் மாவ் ட்சே துங். அவர் ஒரு தனி ராஜ்யத்தின் கடவுள். அவர் ஸ்டாலினை கடவுளாக, ஏன் தனக்கு ஒரு சமதையான தலைவராகக் கூட அங்கீகரித்ததில்லை. ஆனால் அது பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆக, ஸ்டாலின் என்ற கடவுளுக்கு, தவறே செய்யாத, கருணை மிகுந்த, மார்க்ஸும் லெனினும் வெளிக்கொணர்ந்த, உலகுக்கு அறிமுகப் படுத்திய சோஷலிஸத்தை முதலில் சோவியத் ரஷ்யாவில் நடைமுறைக்குக் கொணர்ந்த அந்த பகவானை யாரும் ஏதும் சொல்லக் கூடுமா?

அப்படியாப்பட்ட பெருமைகளும் புகழும் வாய்ந்த ஜோஸஃப் விஸாரியானோவிச் ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன், தன் கூட்டாளிகளையெல்லாம் பொய் வழக்குகளில் சிக்க வைத்துக் கொன்றவன். அவனுடைய யதேச்சாதிகாரப் போக்கினால், ரஷ்ய மக்கள் லக்ஷக்கணக்கில் உயிர் இழந்தனர்.

“தன் அருகில் இருப்பவர்களைக் கூட எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம். இப்படித்தான் மாஸ்கோ சதி வழக்குகளில் அவர் தனக்கு போட்டியாக இருக்கக் கூடும் என்று நினைத்த கிரோவ் போன்றவர்கள் கொல்லப் பட்டனர். அவர் இறப்பதற்கு முன் யூத டாக்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுக்கு அவரைக் கொல்ல சதி நடப்பதாகவும், அதற்கு யூத டாக்டர்கள் உடந்தை என்றும் சந்தேகம் எழவே, அவர்கள் கைது செய்யப் பட்டு பொய் வழக்குகள் தொடரப்பட்டு எங்களில் யார் யார் உயிருக்கு ஆபத்து என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இதற்கு ரகஸ்ய போலீஸ் தலைவரான லாவ்ரெண்டி பெரியாவும் உடந்தையாக இருந்தார். ஸ்டாலின் இப்போது உயிரோடு இருந்திருப்பாரானால் அது தான் நடந்திருக்கும். வெகுகாலம் அவருடன் நெருங்கியிருந்த மொலொடோவே முதல் பலியாகியிருப்பார். மொலொடோவின் மனைவியின் பேரில் ஸ்டாலின் சந்தேகப்பட்டு அவர் மனைவியை சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டி இருந்தது மொலொடோவுக்கு. அவருடைய குதூகலத்துக்கு எங்களையெல்லாம் பொம்மையாக்கி நாடகமாடி ஸ்டாலின் கைகொட்டி குதூகலிப்பார். எல்லோர் முன்னும் என்னை கோபக் டான்ஸ் ஆடு என்று சொன்னால் நான் கோபக் ஆடவேண்டும், ஆடியிருக்கிறேன்…”

என்று ஒரு நீண்ட குற்றபபத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ் தன் 20வது காங்கிரஸ் உரையில் (கோபக் என்பது உக்ரெயினின் பாரம்பரிய நாட்டு நடனம். க்ருஷ்சேவ் உக்ரெய்ன் நாட்டுக்காரர்)

யாரும் எதுவும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. க்ருஷ்சேவ் ஸ்டாலினின் கொடூரத்தையும் யதேச்சாதிகாரத்தையும் தான் கடுமையாக சாடினாரே ஒழிய கம்யூனிஸ்ட் பார்ட்டி தான் இன்னமும் நமக்கு வழிகாட்டி என்பதை வலியுறுத்த அவர் தவறவில்லை.

இந்த உரை உலகம் முழுதும் பெரும் புயலைக் கிளப்பியது. இதற்கு சில வருஷங்கள் முன்னால் லைஃப் பத்திரிகை ஸ்டாலினின் கொலை பாதகங்களையும் அவரது ரத்தப் பசியையும் பற்றி எழுதியபோது எல்லா கம்யூனிஸ்ட் அரசுகளும், கட்சிகளும் அவற்றுக்கு வாய்ப்பாடாக போதிக்கப்பட்ட கோஷமாகிய “அமெரிக்க முதலாளித்துவ பொய் பிரசாரம்” என்றே பதிலுக்குக் கூச்சலிட்டன. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. ஒன்று சீன கம்யூனிஸ்டுக்கு ஆதரவாகவும் (இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தலைமையிலும்) இன்னொன்று டாங்கே தரப்பு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிவருடியாகவும் ஆனது. ஏதாவது ஒரு அன்னிய கம்யூனிஸ்ட் கட்சி சொல்படி கேட்டுத்தான் இவர்களுக்குப் பழக்கப் படுத்தப் பட்டிருந்தார்கள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வழிப் பிரிந்த இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் க்ருஷ்சேவை திருத்தல் வாதி என்று பழித்து தம் ரத்தக்கறைகளைத் துடைத்துக் கொண்டனர். மறு பிரிவு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பிரிவு, “இது எங்களுக்கு அப்பவே தெரியும். ஆனால் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தக் கூடாது, அமெரிக்க சதிக்கு உடந்தையாகக் கூடாது என்று மௌனம் சாதித்தோம்” என்று ஒரு விநோத விளக்கம் தந்தார்கள். நம்மூர் கம்யூனிஸ்ட் தத்துவவாதியும், இலக்கிய போராளியுமான சிதம்பர ரகுநாதன் இந்த விளக்கம் தர நான் படித்திருக்கிறேன்.

இவ்வளவு தூரம் இது பற்றி விரிவாக எழுதக் காரணமே, உலகின் பாதி மக்கள் தொகையை வசீகரித்தோ, அல்லது அடக்கி ஆண்டோ கம்யூனிஸ்ட் கட்சி தன் வசப்படுத்தி இருந்தது. ஸ்டாலின் இந்த மொத்த மக்கள் தொகைக்கும் வழிகாட்டியாக, தொழத்தகும் தெய்வமாக, இருந்தார். சுமார் 35 வருட காலம் ஒரு பெரும் தேசத்தின் சரித்திரத்தை மாற்றி அமைத்த, ஒரு விவசாய நாட்டை பலம் பொருந்திய வல்லரசாக ஆக்கி, ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் ரஷ்ய மக்களின் தேசப்பற்றைத் துணையாகக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் வெற்றி கண்டு தன் நாட்டை நாஜிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றினார். இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சரித்திர நாயகர்களில் அவரும் ஒருவர். அவர் பற்றிய கட்டமைக்கப் பட்ட பிரமைகளும், கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் கட்டமைக்கப் பட்ட பிரமைகளும் ஒரு நாள் கட்சி உரையில் அகன்றது மிகப் பெரிய சரித்திர நிகழ்வு. அது என் பார்வையையும் சிந்தனைகளையும் வெகுவாகப் பாதித்த நிகழ்வு. அதன் பிறகு ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய, சோஷலிஸ தத்துவம் பற்றிய பிரமைகளும் வெகு சீக்கிரம் விலக ஆரம்பித்தன.

சிதம்பர ரகுநாதன்

வேடிக்கை என்னவென்றால் அது உலக அளவில் வீழ்ச்சி அடையத் தொடங்கிய பிறகு தான் தமிழ் நாட்டில் முற்போக்குகளின் கூச்சலும் அதை நம்பிய தொண்டர் குழாத்தின் வளர்ச்சியும் ஆரம்பமாயின. பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் பங்குகொள்ள வந்தவன் முதலாளியின் மகளைக் காதலிக்க ஆரம்பித்துத் தான் அப்போராட்டத்தின் முதல் அடிவைப்பைத் தொடங்குகிறான். இது அன்றைய முற்போக்கு இலக்கியத்தின் பரம பிதாவான, வழிகாட்டியான சிதம்பர ரகுநாதனின் முதல் முற்போக்கு நாவல் ’பஞ்சும் பசியும்’ நமக்குக் காட்டிய பாட்டாளிகளின் போராட்ட தரிசனம். அந்த நாவல் ஐம்பதுகளின் கடைசியில் தான் வந்தது என்று நினைப்பு. அதாவது க்ருஷ்சேவின் 20-வது காங்கிரஸ் உரைக்குப் பிறகு. ஸ்டாலினின் கொடூர செயல்கள் பற்றி எங்களுக்கு முன்னரே தெரியும் என்று சொன்ன பிறகு. அவர் எழுதிய பாட்டாளிகள் போராட்டத்துக்கு வழிகாட்டிய கதை ஒன்றையும் அதற்குச் சில வருடங்கள் முன்பு படித்தேன். கதையின் தலைப்பு எனக்கு நினைவில் இல்லை. கதை சுருக்கமாக இப்படிச் செல்கிறது:

சிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். “போலீஸ் துரத்துகிறது. நான் தப்பி ஓடும் வரை அவர்களைத் தடுத்து நிறுத்து “ என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். போலீஸ் இதற்குள் வந்து விடுகிறது. தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண் தன் இடுப்பில் இருந்த தன் குழந்தையை கதவின் நிலைப்படியில் ஓங்கி அறைகிறாள். இதைப் பார்த்துத் திகைத்து நின்றது போலீஸ். இந்த நேரத்துக்குள் பாட்டாளி தப்பி ஓடிவிடுகிறான்.

இந்தக் கதையைப் படித்த பிறகு ரகுநாதன் கதைகள் தொகுப்பிலிருந்தும், அவருடைய இலக்கிய விமர்சனம் புத்தகத்திலிருந்தும் சிதம்பர ரகுநாதன் மீது இருந்த என் பிடிப்பு முற்றிலுமாக இல்லாது போயிற்று. ஆனால் இந்த எழுத்துக்கள் ரகுநாதனை தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின் குருவாக ஆக்கி விட்டன. சிஷ்யர்கள் தமக்கு வேண்டிய குருவைத் தேடிக்கொண்டனர். கட்சியும் தமக்கேற்ற பிரசாரகரைக் கண்டறிந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் நான் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஆனதையும் அமெரிக்கவிலிருந்து எனக்கு மணிஆர்டரில் பணம் வருவதையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகுக்கு அவ்வப்போது முரசறிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்னவோ எதற்கெடுத்தாலும் அடிக்கடி மாஸ்கோ ஆஸ்பத்திரிக்குத் தான் சிகித்சைக்குச் சென்றனர். நம்மூர் ஆஸ்பத்திரிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று!

[ வெங்கட் சாமிநாதன் எழுதிவரும் “நினைவுகளின் சுவட்டில்” சுயசரிதை தொடரில் ஒரு பகுதி இது. மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.]

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

7 Replies to “ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்”

  1. ரஷ்யா மிக்க செல்வாக்கோடு இருந்த காலங்களில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மூலமாக மலிவு விலையில் கணக்கு, விளையாட்டு பௌதிகம் ( இயற்பியல்)- physics – இவையெல்லாம் மக்களுக்கு கிடைத்தன. தரமான புத்தகங்கள். இந்த நல்ல புத்தகங்களுடன் சேர்த்து காரல் மார்க்சின் ” தாஸ் கேபிடல் ” என்ற புத்தகம் மூணு பாகம் வாங்கி வந்தார் என் அண்ணன். என் தந்தையார் அந்த காலத்தில் எட்டு வகுப்பு வரை படித்தவர். எங்களூரிலேயே அவர்தான் அதிக படிப்பு படித்தவர்.

    என் அண்ணன் வாங்கிவந்த மூலதனம் என்ற தாஸ் கேபிடலை வாசித்து முடித்தார். அதன் பிறகு, சொன்னார்- ” இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஏனெனில் எல்லாம் அரசுக்கே சொந்தம் என்றால் , நாட்டில் எல்லாமே கெட்டுப்போய்விடும். எவனும் பொதுச்சொத்தை ஒழுங்காக கவனித்து பராமரிக்க மாட்டான். கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம், ஹர்த்தால், மறியல், கதவடைப்பு என்று சொல்லி , நாட்டில் உற்பத்தி, தயாரிப்பு நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் தீய சக்திகள். எனவே, கம்யூனிஸ்டுகள் நிர்வாகம் செய்தால் எல்லோரும் மரங்களிலிருந்து அகலமான பெரிய இலைகளை பறித்துத்தான் மானத்தை மறைத்துக்கொள்ள வேண்டும், உணவு, உடை, தண்ணீர், எல்லாமே பஞ்சமாகி , வறுமையில் அனைவரும் சமம் என்ற நிலை தான் ஏற்படும் ” என்றார்.

    ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திலும், லெனின் காலத்திலும் நடந்த கொலைகள் பலகோடி. அதே போல 1949 – 1969 – ஆகிய ஆண்டுகளில் நடந்த முறையே சீன கம்யூனிஸ்டு புரட்சி, மற்றும் சீன கலாசாரப்புரட்சி ஆகியவை மூலம் பல கோடி பொதுமக்கள் மாசே துங்கால் கொன்று மேலுலகு சென்றனர். கம்யூனிசம் என்பது வன்முறை, ஜனநாயக உரிமை மறுப்பு , ஒரு கட்சி சர்வாதிகாரம் ஆகியவற்றின் தொகுப்பு. வெங்கட் சுவாமிநாதன் அவர்களின் கட்டுரை அருமை. நன்றிகள் பல . வணங்குகிறேன்.

  2. //தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் நான் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஆனதையும் அமெரிக்கவிலிருந்து எனக்கு மணிஆர்டரில் பணம் வருவதையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகுக்கு அவ்வப்போது முரசறிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்னவோ எதற்கெடுத்தாலும் அடிக்கடி மாஸ்கோ ஆஸ்பத்திரிக்குத் தான் சிகித்சைக்குச் சென்றனர். நம்மூர் ஆஸ்பத்திரிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று!//

    அருமை.

    நான் என்று உங்களைச் சுட்டிக்காட்டுவதைவிட அவர்களை எதிர்ப்போர் எல்லோரையும் எனச் சொல்லியிருக்கலாம் என்று கருதுகிறேன்.

    பொதுவாக அவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டோரெல்லோரையும் சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றே சொல்வார்கள். ஆனால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ கே.ஜி.பி. மற்றும் என்.ஐ. சீ ஏஜென்டாக இருப்பதை உணரவே மாட்டார்கள். ஒரு வேளை விரும்பியே இருக்கிறார்களோ என்னவோ.

    இந்தக் கதைகளையெல்லாம் அறியாதவர்கள் கூட சி.ஐ.ஏ.வை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கே.ஜி.பி. மற்றும் என்.ஐ.சீ யை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள். நமக்கு மிகச் சமீபத்தில் இருக்கும் தீமை இவையே (நமது கம்யூனிச இந்தியர்கள் உட்பட) என்பதை எப்போது உணரப் போகிறோம் நாம்.

  3. எனது அனுபவத்தில் நான் நிறைய கம்யுனிஸ்டுகளை கண்டுருகிறேன், அவர்கள் பேசுவதெல்லாம் எதோ மன நலம் பாதிக்கப்பட்டவரை போல அல்லது வெறுப்பின்,விரக்தியின் உச்சியில் இருப்பவரை போலவே பேசுவார்கள் …….நேர்மறையாக சிந்திக்கவே மாட்டார்கள் ….அவர்களிடம் ஒரு அதிகார மனோபாவமும் தெரியும் ….அவர்களின் சித்தாந்தம் அப்பிடி …அவர்களை சொல்லி குற்றம் இல்லை………..

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

  4. சோஷலிசம்.ஜனநாயக சோஷலிசம் என்றெல்லாம் நாட‌கமாடிய அரசியல் வாதிகள் கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் கொண்டு குவித்துள்ளனர்.

    ஒரு நல்ல முதலாளியிடம் இந்தத் தொகை கிடைத்தால் பல்லாயிரம் தொழில்கள் பெருகும்.’ஏழைப் பங்காளர்கள்’ தாங்கள் பணக்காரர்களாக ஆனதோடு சரி.
    ஏழைகள் வாழ்வில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. வாழ்க ஜனநாயக சோஷலிசம்!

  5. பொதுவுடைமைக் கொள்கைகளில் சில அடித்தட்டு மக்கள் உழைப்பாளிகளுக்குச் சாதகமாக இருந்தாலும் கூட, அவற்றை நிர்வகிக்கும் சிலர் (ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த தலைவர்கள் சுயநலம் இல்லாமல், அவர்கள் தத்துவங்களை சத்தியம் என்று நம்பி ஒரு பெரிய யுகப் புரட்சியை எதிர்பார்த்து ஏமாந்து மடிந்து போனவர்கள்) இப்போது உழைப்பாளர்களுக்கு ஆதரவாக இல்லை. பேரு முதலாளிகள் ஆதரவு அவர்களுக்குத் தேவைப் படுகிறது. கீழ் மட்டத்தில் தொழிற் சங்கங்களை நிர்வகிக்கும் நடுத்தர வர்க்கத்துப் பேர்வழிகள் தாங்கள் என்னவோ காரல் மார்க்ஸ் வழி வந்தவர்களைப் போல பேசி வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதெல்லாம் தொழிற் சங்க இயக்கத்தில் தங்கள் எதிராளிகளை (எதிரிகளை அல்ல) ஒழித்துக் கட்ட போடுகின்ற வேஷம். வெள்ளைக் காலர் ஊழியர்கள் மத்தியில் இவர்கள் கையாளும் தந்திரம் என்ன தெரியுமா? தங்களோடு ஒத்துப் போகாதவர்களை “தனிமைப் படுத்து! தாக்கு! அழித்து விடு” ( Isolate, attack and eliminate) என்பது. இப்போதெல்லாம் இவர்கள் சாயம் வெளித்துப் போய்விட்டது. நமுத்துப் போன சிவகாசி பட்டாசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *