பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

(இந்த விஷயம் குறித்து மூன்று முக்கியமான கண்ணோட்டங்களை இங்கு தொகுத்தளிக்கிறோம் – ஆசிரியர் குழு)

முதலில், அரசியல் நுழைந்தது திரு.கிரி குடியரசுத் தலைவரானபோது. அந்த சறுக்கல் திரு.கே ஆர் நாராயணன் வரை தொடர்ந்தது. கலாம் மட்டுமே , இந்திராவின் ஆட்சி வந்த பிறகு, அரசியல் சாராத முதல் குடியரசுத் தலைவர். அந்தப் பதவியின் கௌரவம் திரு.ஆர்.வி , திரு.எஸ்.டி.ஷர்மா வால் சற்றே மேம்பட்டாலும் கட்சி சாராத நிலை கலாம் ஒருவரால் மட்டுமே வந்தது. அந்த தேர்வைச் செய்ய அடல்ஜி போல் ஒரு பரந்த தேச சிந்தனை உள்ளவரால்தான் செய்யமுடியும்.

அரசியல் சார்புடன் வந்தாலும் திரு.ஆர்.வி சந்தித்த கடினமான நேரங்களை வேறு யாரும் சந்திக்கவில்லை. இன்றும் அதனால் அவர் மதிக்கப் படுகிறார்.

திரு.ஷர்மா, காங்கிரஸ்காரராக இருந்தாலும் அவருடைய நேர்மை தெள்ளத் தெளிவு. என்.டி.ராமாராவ் ஆட்சியை பாஸ்கர ராவை வைத்து இந்திரா கேலிக்கூத்தாக்கிய போது கவர்னராக இருந்த திரு. ஷர்மா , விதுரனின் நிலையை எடுத்து மதிப்பைப் பெற்றார்.

திரு.பிரனாப் 84ல் இந்திராவின் மரணத்திற்குப் பிறகு பிரதமராக வந்திருந்தால் இந்திய சரித்திரமே மாறியிருக்கும். அந்த ஓநாய்களின் மந்தையில் தனியாக இருந்த ஒரே தேசியவாதி. அவர் சமர்ப்பித்த ” கருப்புப் பணம் பற்றிய வெள்ளை அறிக்கை ( 16-மே-2012) ஒரு மைல்கல். காங்கிரஸ் அதை புதைக்க முற்பட்டாலும் , திரு.மோதி தலைமையிலான அரசு அதில் உள்ள பல பொதுவான அம்சங்களைச் செயல்படுத்தியது.

திரு.கோவிந்த் பற்றி அதிகம் கேள்விப்படவில்லை. படித்தவர். வழக்கறிஞராக திறம்பட பணியாற்றியவர். பா ஜ வின் தலித் அணியில் ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்…. என்றளவில் தெரிகிறது.

நல்லவேளை அதிகம் தெரிந்தவர் என்று அமிதாப் பச்சனையோ, ஜானி லீவர் போன்ற காமெடி நடிகரையோ அறிவிக்கவில்லை. திருமதி.பிரதீபா போன்றவர்களை அறிவிக்கவில்லை. திரு.கிரி , திரு. பக்ருதீன் போன்ற ரப்பர் ஸ்டாம்புகளை அறிவிக்கவில்லை. தலித் என்ற ஒரே தகுதி மட்டும் வைத்துக்கொண்டு பதவிக்கு வந்த திரு.கே.ஆர்.நாராயண் போன்றவரை அறிவிக்கவில்லை.

படித்தவர். பொறுப்பான பதவிகளை வகித்தவர். ஆர் எஸ் எஸ் காரர். இப்போதைக்கு இது போதும். வாழ்த்துகள் திரு. ராம்நாத் கோவிந்த்.

– திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

*******

ராம்நாத் கோவிந்த் – இந்த பெயர் அறிவிக்கப்படும் முன் பெரிதாக நான் இவரின் மேல் கவனம் செலுத்தவில்லை எப்படியும் ஒரு பட்டியல் சாதியினரோ அல்லது பழங்குடியினரோ தான் ஜனாதிபதியாக வருவார் என்று மட்டும் அறிந்திருந்தேன். திரௌபதி முர்மு என்ற ஜார்கண்ட் மாநில ஆளுநர் பெயர் தான் அதிகமாக அடிபட்டுக்கொண்டு இருந்தது. பெண் அதோடு பழங்குடியினர் என்பது அவருக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது ஆனால் அவரை அறிவித்திருந்தால் அது இன்னொரு பிரதிபா பாட்டில் என்ற அளவிலே தான் இருந்திருக்கும் ராம்நாத் கோவிந்த் இன்று சரியான நபராக அந்த பதவிக்கு முற்றும் தகுதி வாய்ந்தவராக அறியப்படுகிறார்.

இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி செயலராகவும் இருந்திருக்கிறார் அதோடு டெல்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக வக்கீல் பணி செய்து வந்திருக்கிறார். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது இந்த பதவிக்கு மிக முக்கியமான தேவை அது. அதோடு பெரும் அறிஞர் இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். 12 ஆண்டுகள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்திருக்கிறார் இன்று பீகார் கவர்னர்.

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். பாஜக சாதி ஹிந்துக்களுக்கும் உயர் சாதியினருக்குமான கட்சி அது தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு எதிரானது என்று தொடரப்பட்டு வரும் பொய் பிரசாரம் பல காலமாக பல் இளிக்கிறது. இருந்தும் ஊடக வியாபாரிகளாலும் இந்திய அரசியலில் செல்லாக்காசாகிப் போன இடதுசாரி அடிவருடிகளாலும் மற்ற எதிர் கட்சிகளாலும் இது தொடர்ந்து வாந்தியெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ், எகானாமிஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல மேலை நாட்டு இதழ்கள் தங்களை முற்போக்கு மற்றும் தாராளவாதிகள் என்று காண்பித்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் நம் ஊர் பழுப்பு ஆங்கிலேயர்களின் உச்சாடனத்தையே திரும்ப திரும்ப உருவேற்றி வருகின்றன. அவர்கள் சவப்பெட்டியில் அடித்த கடைசி ஆணி இது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் ஆன்மாவை மோதியை விட நன்றாக அறிந்தவர் வேறு யாரும் இல்லை என்பதையே இது மீண்டும் நிரூபிக்கிறது. இவரின் வெற்றி என்பது முடிவான ஒன்று வேறு வேட்பாளர்கள் யாரும் நிற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ராம்நாத் கோவிந்த் வருக முகலாயர்களும், பிரிட்டிஷ் கோமான்களும், நாட்டை சுரண்டியே பிழைத்த பழைய புத்திஜீவிகளும் அலங்கரித்த டெல்லி தர்பார் ஏழை விவசாயியின் மகனான உங்களை வரவேற்று வழிவிடட்டும்.

– ஆர்.கோபிநாத், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

******

திரு. அப்துல் கலாம்… திரு. பி.ஏ. சங்மா.. இப்போது திரு ராம்நாத் கோவிந்த்… பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது… இது சந்தர்ப்பவாத , தாஜா [ appeasement ] அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள்.

உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை.

தொன்னூறுகளில் பாஜகவைக்கண்டு சிறுபான்மையினர் பயந்ததை விட அதிகம் பயந்தவர்கள் ஹிந்துக்களே. காரணம் ஐம்பது ஆண்டுகளாக இந்த தேசத்தில் ஹிந்துக்கள் தரப்பை பேசுவதே மாபெரும் குற்றமாக முன்நிறுத்தப்பட்டு வந்தது…காந்திக்கு அவரது இறுதிக்காலத்தில் தலைக்கேறி இருந்த சிறுபான்மைப்பித்து , அடுத்த பல பத்தாண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட நேரு குடும்பம் கையாண்ட சிறுபான்மையினரை தாஜா செய்யும் ஆட்சி போன்றவற்றால் ஹிந்துக்கள் ஒரு மாதிரியான ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமுக்கு ஆட்பட்டிருந்தனர்.

அடிப்படையிலே பிரச்சினைகளைக்கண்டு ஒதுங்கிப்போக நினைக்கும் ஒரு சராசரி ஹிந்துவுக்கு , பாஜக முன்வைத்த கொள்கைகளான பொதுசிவில் சட்டம் , அயோத்தியில் ராமர் கோயில் , அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குதல் போன்றவை தேவையற்ற விஷயங்களாகவே தோன்றின,.. இந்தக்கட்சி நமக்காகத்தான் குரல் கொடுக்கிறது என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு வரவே ரொம்ப காலம் பிடித்தது. பாப்ரி கும்மட்ட இடிப்பு , அதைத்தொடர்ந்து தேசம் முழுக்க ஹிந்துவிரோதிகளான காங்கிரசும் , கம்யூனிஸ்ட்களும் மேற்கொண்ட தீவிரப்பிரச்சாரத்தால் cow belt என்றழைக்கப்படும் சில வடமாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே மாறிவிட்டது…. இந்த நிலையை மாற்ற கட்சி ரொம்பவே பிரயத்தனப்பட நேரிட்டது.

ஒரு இஸ்லாமியரோ , கிறித்தவரோ எந்தக்காலத்திலும் பாஜகவுக்கு ஓட்டுப்போடப்போவதில்லை…இது நம்மை விட பாஜக தலைமைக்கு மிக நன்றாகவே தெரியும்… ஆனால் , மேற்சொன்ன காரணங்களுக்காக கட்சியிடமிருந்து விலகி நிற்கும் சராசரி ஹிந்துவை பாஜக பக்கம் இழுக்க வேண்டுமென்றால் முதலில் கட்சி எந்த சிறுபான்மையினரையும் விரோதிகளாக பார்ப்பதில்லை என்பதை புரியவைக்கவேண்டும்.

திரு. அப்துல்கலாம் அவர்கள் பாஜகவின் தேர்வு அல்ல.. அவரை முன்மொழிந்தவர் முலாயம் சிங் யாதவ்…பின்னர் பாஜக அவரை ஆதரித்தது… தேசத்தை நேசிக்கும் இஸ்லாமியர்களை பாஜக புறக்கணிப்பதில்லை என்ற வலுவான செய்தியை திரு. அப்துல்கலாமின் தேர்வு ஹிந்துக்களிடம் சென்று சேர்த்தது.

அடுத்து திரு.பி. ஏ சங்மா ..இவரும் பாஜகவின் தேர்வு அல்ல…. இவரை முன்மொழிந்தவர் ஜெயலலிதா… பின்னர் பாஜக அவரை ஆதரித்தது.. அதனால் கிடைத்த பலன் என்ன என்பதை தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பாஜகவை பார்த்து தெரிந்துகொள்ளலாம்…இத்தனைக்கும் அவையெல்லாம் கிறித்தவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள்.

தற்போதைய நிலையில் திரு. ராம்காந்த் கோவிந்த் அவர்களை விட சிறந்த தேர்வு இருக்க வாய்ப்பில்லை… பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போல பாஜக நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி ஜெயிக்கவைக்கும் நிலை தற்போது இல்லை… ஜனாதிபதி தேர்வு முறை மிகவும் சிக்கலானது…கரணம் தப்பினால் மரணம்…

சிவசேனை கடந்த இரண்டு தேர்தல்களாக பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை. [ முதலில் மராட்டியர் என்பதற்காக பிரதிபா பாட்டீலுக்கும் , பின்னர் பிரனாப் முகர்ஜிக்கும் ஆதரவு தெரிவித்தனர்… ] அரைக்கிறுக்கன் உத்தவ் தாக்கரே இப்போதும் கூட ஆதரிப்பது நிச்சயமில்லை….ஜனாதிபதி தேர்தலுக்கு கொரடா உத்தரவும் கிடையாது..அவரவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்….[ இதனால்தான் காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை இந்திரா காந்தியால் தோற்கடிக்க முடிந்தது…]

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை [ இஸ்லாமியர் அல்லது தலித் யாரையாவது ] நிறுத்தினால் , அதற்கு சிவசேனா , டி.ஆர்.எஸ் , மற்றும் உதிரிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டால் பாஜகவின் நிலைமை சிக்கலாகிவிடும்… மேலும் அதே கூட்டணி 2019 தேர்தல் வரை நீடித்தால் பெரிய தலைவலியாகிவிடும்…

அதுமட்டுமல்ல சில விஷயங்களை பாஜக செய்தால் மட்டும்தான் தவறு என்ற வக்கிரமான நிலை நம்நாட்டில் நிலவுகிறது… பிரனாப் முகர்ஜி என்னும் பிராமணரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தால் அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்…அதே சமயம் எம்.எஸ் . ஸ்வாமிநாதன் அவர்களை பாஜக முன்நிறுத்தினால் , ஆகா. பாஜக உயர்சாதியினர் க‌ட்சி என்பது நிருபணமாகிவிட்டது என்று குதிப்பார்கள்…

மேற்கு வங்கத்தில் , தாரகேஷ்வர் கோயிலின் தலைமைப்பொறுப்பில் ஒரு மதவெறிபிடித்த இஸ்லாமியனை நியமித்திருக்கிறார் மம்தா… இதை எவருமே கண்டுகொள்ளவில்லை…இதே ஒரு இஸ்லாமியர் சார்ந்த அமைப்புக்கு [ வக்ஃப் வாரியம் போன்ற அரசு அமைப்பாக இருந்தாலும் கூட ] ஹிந்து ஒருவரை மோடி நியமித்திருந்தால் இந்நேரம் தேசமே பற்றி எரிந்திருக்கும்…

இந்த அவலநிலையெல்லாம் மாற இன்னும் கொஞ்ச நாளாகும்…அதுவரை பொறுத்துத்தான் ஆகவேண்டும்…இல்லாவிட்டால் சீமான் போல நரம்பு புடைக்க கழுதைபோல கத்திக்கொண்டே திரியவேண்டியதுதான் ..ஒரு ஓட்டு விழாது…

இதையெல்லாம் உத்தேசித்துத்தான் , திரு . ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்… இவர் கே.ஆர். நாராயணனைப்போல தலித் என்ற ஒரே காரணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல..[ கே.ஆர். நாராயணனின் நியமனத்தில் பல மரபு மீறல்கள் இருந்தன ..] இவர் நன்கு படித்தவர்… விளம்பரத்தை விரும்பாத , திறமையான நிர்வாகி… இவை எல்லாவற்றையும் விட சங்க பின்னணி கொண்டவர்… .இவரை தலித் என்ற ஒற்றை சட்டகத்தில் மட்டும் வைத்துப்பார்ப்பது தவறு. நல்லதே நடக்கும்.

– சரவணக்குமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

4 Replies to “பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்”

 1. முன்னாள் பிரதமரும் புனிதருமான மொரார்ஜி தேசாய் அவர்களிடம் தனி உதவியாளராக தொண்டு புரிந்தவர் திரு ராம்நாத் கோவிந்த். இவர் ஜனாதிபதி பதவிக்கு சிறந்த தேர்வாகும். மோடி மற்றும் ராம்நாத் கோவிந்த் கூட்டணி பதவிக் காலத்தில் இந்தியா அனைத்து மேன்மைகளையும் பெற்று உயரும் என்பது உறுதி.

 2. திரு.ராம்நாத் கோவிந்த அவா்கள் குடிமைத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா். வழக்றிஞராக உயா்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் பணியாற்றியவா் மாநிலங்களவை உறுப்பினா் என்று பல பல தகுதிகள். தேசம் பக்தி இந்து பண்பாட்டில் பெருமிதம் போன்றவை கூடுதல் தகுதிகள்.மிகச் சிறந்த தோ்வு. நிதீஷ்குமாா் தெலிங்கானா கட்சி தெலுங்கு தேசம் கட்சி சிவசேனா தமிழ்நாட்டின் அதிமுக -திரு பழனிச்சாமி அணியினா் ஆகியோா் ஆதரவை அறிவித்தாகிவிட்டது.வேறு என்ன.

  பதவிவேற்புக்கு நாள் குறித்து ஏற்பாடுகளைச் செய்யுங்கள் .

  ஜல்தி ஜல்தி..

 3. Abdul Kalam’s name for president was first proposed by Moopanar & not by mualayam singh.

  But then, does it really matter who becomes the president?

  He is just a figurehead with no powers.

  Whether it is Govind or Meira kumar or anyone else, it does not matter to the common man.

 4. Correction.

  K.R. Narayanan’s name (he also belongs to SC) name was proposed first by Moopanar & not Abdul kalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *