தேவிக்குகந்த நவராத்திரி — 4

மீனாட்சி பாலகணேஷ்

7.  சிவசக்தி ஆனந்த தாண்டவம்

        தேவி ‘லாஸ்யம்’ எனப்படும் நளினம் அழகும் மிகுந்த நாட்டியவடிவத்தில் மிகவும் விருப்பம்கொண்டவள்;  இது பெண்கள் ஆடும் ஒருவகை நடனம்.  சக்தியும் சிவனும் ஒருவருக்கொருவர் சமமானதால் (சக்தியும் சிவனும் இணைபிரிக்க முடியாதவர்கள்) சக்தி ‘ஸமயா’ எனவும் அறியப்படுகிறாள்.  சதாசிவன் வலிமை வாய்ந்த கம்பீரமான ஆனந்த ‘தாண்டவ’நடனத்தில் விருப்பம் கொண்டவன்.   நவரசங்களும் தளும்பும்  இந்த நடனங்களை தேவியும் சிவனும் இடையறாது ஆடிக்களிக்கின்றனர்.  உலகின் தாயும் தந்தையுமாகிய இருவரும் உயிர்கள்மீது கொண்ட எல்லையற்ற கருணையால் ஒருவரோடொருவர் இணைந்து இந்த நடனத்தை ஆடியபடியே உலகைப்படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளுகின்றனர்.  இந்த நடனம் நின்றுவிட்டால், உலகம் அழிந்துவிடும்.  ஆகவே, உலகம் இடையறாது செயல்பட, அம்மையும் ஐயனும் இடையறாது ஆனந்தநடமிடுகின்றனராம்.

பிரகிருதி வடிவமாகிய சக்தி லாஸ்யநர்த்தனமும், புருஷவடிவமாகிய சதாசிவன் தாண்டவநர்த்தனமும் செய்துகொண்டு ஒருவரையொருவர் பார்க்கும்போதே உலகம் உற்பத்தியாகின்றது.  ஆகவே இவர்கள் இருவரும் உலகத்தின் தாய்தந்தையர் என்கின்றார் சௌந்தர்யலஹரியில் ஆதிசங்கர பகவத்பாதர்.

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா

        நவாத்மானம் மன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்

        உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திச்ய-தயயா

        ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜனகஜனனீமத் ஜகதிதம்

(சௌந்தர்யலஹரி- 41)

இக்காட்சியே இங்கு அவர்கள் நடனத்தை முனிபுங்கவர்கள் காண்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

         8.  பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல்

       சிவபிரானின் திருவிளையாடலால் மதுரையில் வைகைநதி பெருக்கெடுத்துக் கரைகளை உடைத்துக்கொண்டோடுகிறது.  வீட்டுக்கோர் ஆள்வந்து, மண்ணை வெட்டி எடுத்துக் கரைக்கு அணைகட்டுமாறு பாண்டியமன்னன் உத்தரவிடுகிறான்.  தனக்கு உதவ ஒருவரும் இல்லாத பிட்டுவிற்கும் கிழவி வந்திக்கு உதவிசெய்ய ஈசனே கூலியாளாய் வந்து, அவளிடம் சுவைமிகுந்த பிட்டினைக் கூலியாக வாங்கி உண்டு, வேலையை ஒழுங்காகச்செய்யாமல் இருக்கவே, பாண்டியன் சினம்கொண்டு, தன் கைப்பிரம்பால் கூலியாளை (சிவபிரானை) அடிக்கின்றான்.  அந்த அடி, கூலியாளான ஈசன்முதுகில் மட்டுமின்றி, அனைத்து மக்கள், அரசனின் சேவகன், வந்திக்கிழவி, அரசன் ஆகிய எல்லோரின் முதுகிலும் விழுகிறது.  அப்பொழுது அரசன் ஈசனின் திருவிளையாடலை உணர்கின்றான்.  இக்காட்சியே அடுத்த கருப்பொருளாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

(நவராத்திரி தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *