கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

அவளைத் தேடி…

நான் முதன்முதலில் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றபோது வெள்ளைக்காரர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதுபோலத்தான் தோன்றும்.  எனவே, கொரியர், சீனர், ஜப்பானியர் இவர்களுக்குள் முகத் தோற்றத்தில் வேறுபாடு கண்டுகொள்ள முடியாத நிலைதான்.

மூன்று மாதங்கள் [ஒரு செமிஸ்டர்] மிஷிகன் மாநிலத்திலுள்ள ஒக்லாந்து பல்கலைக்கசகத்தில் கழித்துவிட்டு, உதவித்தொகை கிடைக்கிறது என்று கென்டாக்கி மாநிலத்தில், லேக்சிண்டன் நகரில் உள்ள யுனிவெர்சிட்டி ஆஃப் கென்டாக்கிக்கு வந்து சேர்ந்தேன்.

“இதுதான் உங்கள் அறை.  உங்களுடன் இன்னும் இரண்டு மேல்நிலைப்படிப்பு மாணவர்களும் இருப்பார்கள்.”  என்று பல்கலைக் கழகத்துப் பொறியியல் துறையின் மாணவர் அறை ஒன்றில்  என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் எனது பேராசிரியரின் உதவியாளர்.

ஓரிரு நிமிடங்களில் அறைக்கதவு திறக்கப்பட்டது.  ஓரியண்டல் முகத்தோற்றமுடைய ஒரு மாணவர் உள்ளே எட்டிப்பார்த்து, புன்னகைத்தார்.

நான் எழுந்து நின்று, “என் பெயர் ….  இங்கு புதிதாக மேல்நிலைப் படிப்புக்கு வந்திருக்கிறேன்.” என்று அறிமுகம் செய்து கொண்டேன்.  என்னைவிட இரண்டு-மூன்றங்குலங்கள் குட்டையாக, ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் பக்கவாட்டில் பருத்திருந்தார் அவர்.

“நான் சொல் பாக்.” என்று அறிமுகம் செய்துகொண்டார் அந்த மாணவர்.

“கொட்டைப் பாக்கு கேள்விப்பட்டிருக்கிறோம்.  இது என்ன சொல் பாக்கு?” என்று மனதில் வரும் சிரிப்பு முகத்தில் தொன்றிவிடாமல் தடுத்துக்கொண்டு, “நீங்கள் சீனரா?” என்று கேட்டேன்.

இல்லை என்பதுபோலச் சிரித்துக்கொண்டே தலையாட்டினார் அவர்.

“ஓ.கே!  அப்படியானால் நீங்கள் ஜப்பானியராகத்தான் இருக்கவேண்டும்!” என்று ஜேம்ஸ் பான்ட் பாணியில் ஏதோ ஒரு இரகசியத்தைக் கண்டுபிடித்ததுபோலச் சொன்னேன்.

பழையபடியும் இல்லை என்பதுபோலத் தலை ஆடியது.  ஆனால் அவர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.  “நான் ஒரு கொரியன்.” என்று பதில் சொன்னார்.

Image result for கொரியா map“கொரியா, கொரியா?” சிலகணம் விழித்த நான். அது எங்கே இருக்கிறது என்று யோசித்தேன். பிறகுதான் நினைவுக்கு வந்தது – முயல்குட்டி தொங்குவதுபோல ஜப்பானுக்கு மேற்கே, சீனாவின் நிலப்பரப்பிலிருந்து தொங்கும் ஒரு நாடு அது என்பது நினைவுக்கு வந்தது.

அந்த முயல் குட்டியை இரண்டாக வகிர்ந்து, வட கொரியா, தென் கொரியா என்று குறிப்பிடப்படுவதும் நினைவுக்கு வந்தது.  ஆக, முதன் முதலாக ஒரு கொரியரைச் சந்திக்கிறோமா?  இவர் வட கொரியரா, தென் கொரியரா என்ற கேள்வி என்னையும் அறியாமல் என்னிடமிருந்து கிளம்பிவிட்டது.

சிரித்த அவர், “மூன்றாக இருந்த கொரியா ஒன்றாக இணைந்தது.  இப்பொழுது இரண்டாகத் துண்டிக்கப்பட்டது.  நான் தென்கொரியன்.” என்று பெரிதாகச் சிரித்தார்.

“நீங்கள் ஜப்பானியரா என்று கேட்டபோது உங்கள் முகம் மாறியதே, அது ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டேன்.

“சீனாவையும், ஜப்பானையும் அறிந்த நீங்கள் கொரியாவைப் பற்றி அறியாதமாதிரி இருந்ததே, அதுதான்!’  என்று மழுப்பினார்.  அது உண்மைக் காரணம் அல்ல என்று புரிந்தது.

இருந்தபோதிலும், மேலே கேட்பது அழகல்ல என்று சும்மா இருந்துவிட்டேன். அவர் முகம் மாறிய காரணத்தை நான் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் கழித்து கொரியா சென்றபோதுதான் அறிந்துகொண்டேன்.

அவரும் நானும் ஒரு வகுப்புகூட ஒன்றாகச் செல்லப் போவதில்லை என்று தெரிந்துகொண்டேன்.

“நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீகள்?” என்று கேட்டார்.

“தாற்காலிகமாக கூப்பர்ஸ்டவுனில் [மாணவர் குடியிருப்பு] என் சகலையுடன் தங்கி இருக்கிறேன்.  ரூம் தேடவேண்டும்.”

“நல்லதாகப் போயிற்று.  என் ரூம்மேட் பொன்செமிஸ்ட்டருடன் போய்விட்டார்.  வேண்டுமென்றால் நீங்கள் என்னுடன் தங்கிக்கொள்ளலாம்.”

பருத்தி புடவையாய்க் காய்த்ததுபோன்ற மகிழ்ச்சி எனக்கு.

“எவ்வளவு வாடகை?” என்று துடித்தேன்.

“அதைப்பற்றி என்ன கவலை.  யுனிவரிசிட்டிக்குக் கொடுக்கவேண்டியதில் பாதிப் பாதியைப் பகிர்ந்துகொள்வோம்.” என்று தனது கொட்டைப் பாக்குப் பற்கள் தெரியச் சிரித்தார், நான் சந்தித்த முதல் கொரியர் சொல் பாக்.

அவர் என்னைப்போல மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்திருக்கிறாரா என்று கேட்டபோது, “இல்லை.  எனது அம்மா ஒரு அமெரிக்கரைத் திருமணம் செய்துகொண்டார்.  அவர் இங்கு வரும்போது எங்கு வந்துவிட்டேன்.  உயர்நிலைப்பள்ளியிலிருந்து அமெரிக்காவில்தான் படிக்கிறேன்” என்று பதில் சொன்னார்.

அவர் குரலில் சுவாரஸ்யம் இல்லாதது எனக்கு நன்றாகவே தெரிந்தது.

“நான் அதிகம் பெர்சனல் விஷயத்தைக் கேட்டுவிட்டேனோ?” என்று தயங்கினேன்.

“இல்லை.” என்று அமைதியானார்.

இந்தியர்களுக்கே உள்ள மூக்கை நுழைக்கும் பழக்கம் – விஷயத்தைத் துருவிக் கேட்கும் பழக்கம் — முழுவதும் என்னை விட்டுப் போகவில்லை என்றாலும், அதற்குமேல் கேட்கக் கூடாது என்று தெரிந்தேதான் இருந்தது.

நாள்கள்சில சென்றபின், அவரது தந்தை இறந்துவிட்டபின், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவ ஒருவரை அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார் என்று அவரே சொன்னார்.

முதல் மூன்று மாதங்கள் நான் மிஷிகனில் இருந்தபொது ஒரு வெள்ளை அமெரிக்கரும், ஒரு இந்தியரும் சேர்ந்து ஒரு அபார்ட்மென்ட்டில் குடி இருந்தோம்.  அமெரிக்கர் மாணவர் அல்லர்.  ஆனால், அவரிடம் அளவுடனேயே பேசமுடிந்தது.  ஒரு இந்தியர், அதுவும் மாணவரும் கூட இருந்தது அதைக் குறைக்கவும் வாய்ப்பாக இருந்திருக்கலாம்.

ஆனால், இந்தக் கொரியருடன் பழகுவது ஒரு இந்தியருடன் பழகுவதுபோலத்தான் இருந்தது. ஃப்ரீயாகப் பழகமுடிந்தது என்று சொல்வோமே, அப்படித்தான் இருந்தது.  நான் பிற்காலத்தில் நிறையக் கொரியர்களுடன் பழகுவதற்கு அது ஒரு முன்னோடியாக அமைத்ததோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

சிலமாதங்கள் கழிந்து எனது மனைவியும், மகனும் அமெரிக்கா வந்தவுடன் நான் வேறொரு அபார்ட்மென்ட்டுக்குச் சென்றுவிட்டேன்.  சிலசமயங்கள் அவரை என் வீட்டுக்குச் சாப்பிட அழைப்பேன்.  அவருக்கு என் மகனிடம் மிகுந்த அன்பு இருந்தது.  வீட்டுக்கு வரும்போது, அவனுக்கு ஏதாவது பிஸ்கட், தின்பண்டங்கள் வாங்கி வருவார்.  வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார்.

அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு என்னிடமும் என் மனைவியிடமும், ஒருநாள் தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.

அவரிடம் இருந்து நான் கொரியாவைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடியவில்லை.  அவர் தனது கொரியவாழ்க்கையைப பற்றிப் பேசவிரும்பவில்லை என்றுமட்டும் தெரிந்தது.  எனவே, நானும் அதுபற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது.  காரணம்சொல்ல மறுத்துவிட்டார்.  சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

ஒருவாரம் சென்றதும் என்னிடம் தொலைபேசியில் ஒரு பெண் பேசினார்.  “நான்தான் சொல் அம்மா[mother Chol].  உங்களைப் பற்றி என் மகன் சொல்லி இருக்கிறான்.  அவன் எங்கே என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“அவர் படிப்பை விட்டுவிடப் போகிறேன் என்று சொன்னார்.  காரணம் சொல்லவில்லை.  உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

தான் சொல் பாக்கின் அபார்ட்மென்ட்டில் இருப்பதாகவும், தன்னை வந்து பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அங்கு சென்று “சொல் அம்மா”வை — கிட்டத்தட்ட ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும் ஒரு கொரியப் பெண்மணியை முதன்முதலாக ஒரு கொரியப் பெண்மணியைப் பார்த்தேன்.

அழுதழுது அவர்கள் கண்கள் கலங்கி இருந்தது தெரிந்தது.

என்னைப் பார்த்ததும் எழுந்துவந்து என் கையைப் பிடித்துக்கொண்டார்கள்.

அவரது மகன் சொல் பாக் ஒரு பெண்ணைக் காதலித்தாராம்.  அந்தப் பெண் அவனது உறவை முறித்துக்கொண்டு ஸ்போக்கேன் என்ற ஊருக்குச் சென்றுவிட்டாளாம்.  அவளைத் தேடிப்போவதாக ஒரு கடிதம் அவரது அபார்ட்மென்ட்டில் ஒரு மேசையின்மேல், இருந்ததாம்.  மகனிடமிருந்து பத்துப் பதினைந்து நாளாக ஒரு தகவலும் இல்லையே என்று லெக்சிங்டனுக்கு வந்திருக்கிறார்கள், “சொல் அம்மா”.

இப்படி ஒரு கடிதத்தைப் பார்த்ததும் பதறிப்போய் யாரைக் கேட்பது, என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்தபோது அங்கிருந்த தொலைபேசியின் அருகிலிருந்த அட்ரஸ் புத்தகத்தில் முதல்பக்கத்தைல் எனது தொலைபேசி எண்ணும் பெயரும் ஒரு இருப்பது கண்ணில் பட்டதாலும், என்னைப்பற்றி சொல் பாக் அவரிடம் சொல்லி இருந்ததாலும், என்னிடம் விசாரிக்கலாம் என்று கூப்பிட்டு இருக்கிறார்கள்.

korean-masksஎனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  நான் சொல் பாக்கின் அபார்ட்மென்ட்டில் தங்கி இருக்கும் பொது பார்பரா என்னும் ஒரு பெண்ணுடன் பேசுவார் என்பது, அவர் “பார்பரா, கேள்” என்று சொல்வது மூலம் தெரிந்துகொண்டேன்.  உடனே அவருக்கு தனிமை கொடுக்கவேண்டும் என்பதற்காக அங்கிருந்து சென்றுவிடுவேன்.  ஆனால், அவர் அப்பெண்ணைக் காதலித்தார் என்றோ, அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது என்றோ எனக்குத் தெரியாமலே போய்விட்டது!

“ஒரு மகன் கொரியாவில் போய்விட்டான்.  இவனும் போனால் நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினார்கள்.  நான் என்னால் இயன்ற அளவு சமாதானம் செய்து, மற்ற நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன்.

அவர்களுக்கும் எனக்குத் தெரிந்த அளவுக்குத்தான் தெரிந்திருந்தது.

இரண்டு நாள்கள் சென்றபின், அபார்ட்மென்ட்டைக் காலிசெய்து பல்கலைக்கழக் குடியிருப்பு அதிகாரியிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு, “சொல் அம்மா” சென்றுவிட்டார்கள்.  நானும் அவருக்கு என்னாலியன்ற உதவியைச் செய்தேண்.

சொல் பாக் என்ன ஆனார், அவரது காதலியை அவர் சந்தித்தாரா, என்ன ஆயிற்று,  அவரது அம்மா – “சொல் அம்மா” என்ன ஆனார்கள் என்று இன்றுவரை நானறியேன்.

தமிழ் இளைஞர்களில் காதல் தோல்வியை, அவர்களின் மன வருத்தத்தை, ஒரு தாயின் துயரை — அந்தக் கொரியரிடமும், அவரது தாயார் “சொல் அம்மா”விடமும் கண்டேன்.

எங்கிருந்தாலும் நான் முதலில் சந்தித்த கொரியர் “சொல் பாக்” இனிது வாழ்ந்திருக்க வேண்டும், அவரது அம்மாவிடம் மீண்டும் தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்று நப்பாசைப்படுவதைவிட வேறு எதுவும் செய்யமுடியவில்லையே என்ற கையாலாகாத்தனமே இன்னும் எப்போதாவது என் நெஞ்சை சுரண்டிப்பார்க்கிறது. .

[உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது]

[கையாலாகாத்தனம் தொடரும்]

One Reply to “கையாலாகாதவனாகிப்போனேன்! — 6”

  1. நமது சமூதாயத்தில் மகத்தான சாதனைகள் செய்தவா்களை போற்ற வேண்டும். நேற்று இந்திய விமானப்படையின் முதல் இந்திய தளபதி திரு.அா்ஜன் சிங் காலமாகிவிட்டாா்.அவா் போன்றவா்களை குறித்த கட்டுரைகளை எழுத வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *