பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.
<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
தொடர்ச்சி…
அக்பர் மதுவிற்கும், ஓப்பியம் போன்ற போதை மருந்துகளுக்கும் அடிமையானதொரு மனிதர். மனசாட்சியை உறுத்தும்படியான கொடூரங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்த்தி முடித்த அக்பர், அந்தச் செயல்களையெல்லாம் மறப்பதற்கானதொரு வடிகாலாகவே இந்தப் போதைப் பழக்கத்தை உபயோகித்திருக்க வேண்டும்.
வின்செண்ட் ஸ்மித், “அக்பர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியில் குடிகாரராக, போதைமருந்து உபயோகிப்பாளராகவே கழித்தார். இந்தப் பழக்கம் அவரது தைமூர் அரச பரம்பரையிலிருந்து அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அக்பரின் பாட்டனான பாபரை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ளவே இயலாது. அவரது தகப்பனான ஹுமாயுனோ அதனையும் விட மோசமான ஓப்பியத்திற்கு அடிமையானதொரு மனிதர். நன்றாக போதையை ஏற்றிக் கொண்ட அக்பர் அரசவையில் செய்த மோசமான செயல்கள் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் உதாரணத்தைத் தொடர்ந்து அவரது அரசவையில் இருந்த அத்தனை பேர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்கள்.
அக்பரின் இரண்டு மகன்கள் (முராத் மற்றும் தானியெல்) இந்தப் போதைப் பழக்கங்கள் காரணமாக இளவயதிலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது மகனான ஜஹாங்கிர் அவரது உடல் உறுதியின் காரணமாக பிழைத்துக் கிடந்தார். ஜஹாங்கிரின் குடிப்பழக்கம் உலகப் பிரசித்தமானது. மூக்கு முட்டக் குடித்த அக்பர் யானையின் மீதேறி, யமுனையில் படகுகளைக் கட்டி அமைக்கப்பட்ட பாலத்தின் மீது வேகமாக ஓடியிருக்கிறார். சூரத்தில் குடித்துவிட்டு அருகிலிருப்பவர்களுடன் கத்திச் சண்டை போட முயன்ற சம்பவங்களும் உண்டு”.
****
இந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வது என்னவென்றால், பல சிறிய ராஜ்ஜியங்களாகச் சிதறிக்கிடந்த இந்திய அரசுகளை வென்று அவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றுபடுத்தி ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கியவர் அக்பரே என்பது. ஆனால் அதில் சிறிதும் உண்மை இல்லை. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோன்றதொரு முடிவுக்கு வருவது தவறானேதேயாகும்.
முதலில் மனதளவிலோ அல்லது உடலளவிலோ அல்லது இன, மொழி வழியாகவோ அக்பர் ஒரு இந்தியரில்லை. அவர் முற்றிலும் இந்தியாவிற்கு அன்னியப்பட்டதொரு ஆக்கிரமிப்பாளர். அவருடைய எண்ணமெல்லாம் இந்தியர்களை வென்று, அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் கலாச்சார, வாழ்வாதாரங்களை அழிப்பதாக மட்டுமே இருந்திருக்க முடியுமே தவிர அவர்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக இருக்கவே முடியாது. அவ்வாறு அக்பர் இந்தியர்களுக்கு நன்மைகள் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாறாக அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியர்களின் மொழி, இன, கலாச்சார, பொருளாதார அடையாளங்களை அழிப்பதாக, குறிப்பாக ஹிந்துக்களை அவமதிப்பதாக மட்டுமே இருந்தது என்பதினை யாராலும் மறுக்க இயலாது.
அக்பர் மட்டுமில்லை. அவருக்கு அடுத்து வந்த அவரது வாரிசுகளும் தங்களை இந்திய வம்சாவளியினராகக் காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் தைமூர் குடும்பமும், சக்டாய் (Chagtai) அரசும் மட்டுமே அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். துருக்கியையும், இராக், இரான், சிரியா, ஆப்கானிஸ்தான், அபிசீனிய நாடுகளைத் தங்களின் தந்தையர் நாடாகவும், மெக்காவையும், மெதினாவையும் தங்களின் வழிபடு இடமாகவும், இந்திய ஹிந்துக்களைத் தங்களில் எதிரிகளாகவும் மட்டுமே கருதி வந்தனர். இந்திய ஹிந்துக்களைப் படுகொலை செய்வதனையும், அவர்களின் வழிபாட்டிடங்களை அழிப்பதனையும் தங்களின் புனிதக் கடமையாகவும் செய்து வந்தார்கள் என்பதனைப் பார்க்கையில் சரியான சிந்தனையுள்ள இந்தியர்கள் எவரும் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.
எங்கிருந்தோ வந்து தங்களின் ஊரைத் திருடியும், கொள்ளையடித்தும், தங்களின் பெண்களின் கற்பைச் சூறையாடியும் வாழும் ஒருவன், தங்களுடைன், தங்களுடைய ஊரிலேயே வசிப்பதால் அவன் அந்த ஊரைச் சேர்ந்தவனாகிவிடுவானா என்ன? உண்மையில் அக்பரின் நடவடிக்கைகளினால் வெறுத்துப் போயிருந்த இந்தியர்கள் அவரை பெருந்தொல்லையாகவே கருதினார்கள். அக்பர் இறந்ததும் ஒரு பெரும் தொல்லை ஒழுந்ததாகப் பெருமூச்சு விட்ட இந்தியர்களே அதிகமிருந்தார்கள்.
இந்தியர்களுக்கு முற்றிலும் அன்னியரான அக்பர் இந்தியக் குடிமக்களை மிகக் கொடூரமாக அடக்கி ஆண்டார். இதனைக் குறித்துக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “உண்மையில் இதுபோன்றதொரு கொடுமையான அரசன் உலகில் எங்கும் இருந்ததில்லை. அக்பரின் ஒரே குறிக்கோள் இந்தியர்களை அடக்கியாள்வது மட்டும்தான். அவரது மொத்த ஆட்சியும் அடுத்த நாடுகளைத் தாக்கிப் பிடிப்பது என்பது மட்டுமே முக்கியமானதொரு செயலாக இருந்தது. ஒவ்வொரு சுதந்திர இந்திய அரசையும் வென்று அடிமைப்படுத்துவதே அக்பரின் தலையாய இலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. ராணி துர்காவதியின் கீழ் வாழ்ந்த கோண்ட்வானா ராஜ்ஜிய மக்கள் நிச்சயமாக ஆசிப்கானின் (அக்பரி தளபதி) கீழ் வாழ்வதனைவிடவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்…”
அக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன்.
அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள். சித்தூர், ரந்தம்பூர், கலிஞ்சார், குஜராத், பெங்கால், பிகார், ஒரிசா, காஷ்மீர் கண்டேஷ், அகமத் நகர், அஸீர்கத், பன்ஸ்வாடா, டோங்க்பூர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்சால்மீர், சிரோஹி, காபூல், நாகர்கோட், பூன்தி…..என அளவிடமுடியாத இந்திய நகரங்கள் அக்பரிடம் சிக்கிச் சின்னாபின்னமடைந்தன என்பதன்றோ உண்மை?
வென்ற அரசர்களின் பெண்களை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட அக்பரை எப்படி அசோகனுக்கு இணையாகக் கூறமுடியும்? நாளெல்லாம் போதை மருந்து உண்டு, அடுத்தவனை அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத அக்பருடன், தூய ஒழுக்கமும், பக்தியும் கொண்டு தங்களின் வாழ்நாளைக் கழித்த ஒரே ஒரு ஹிந்து சிற்றரசனுக்குக் கூட இணையில்லாதவர் அக்பர்.
தோற்ற ஹிந்து அரசனின் பெண்களைத் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் அடைத்த நாளில் இருந்த அந்தப் பெண்ணின் வாழ்வு முடியும் வரைக்கும் அவள் அதனை விட்டு வெளியே வரவே முடியாது. அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ அந்தப் பெண்ணைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் அடைந்து கிடக்கும் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்ட, ஹிந்து அரசனால் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதியை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை வயிறார உணவு கூட அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பில்லை. கழிப்பிட, குளியறைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு கரண்டியளவு எண்ணெயைக் கூட அந்தப் பெண்கள் பெறமுடியாத கொடூரத்தில்தான் வாழ்ந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் உழலும் தங்களின் பெண்ணை எண்ணி வருந்தும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையைக் குறித்து சிறிது எண்ணிப்பாருங்கள். மனசாட்சியுள்ள எந்த அரசனாவது இதுபோன்றதொரு செயலைச் செய்யத் துணிவானா?
சில நேரங்களில் அந்தப்புரப் பெண்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் உண்டு. உதாரணமாக ஜஹாங்கிரின் மனைவியான மன்பாய். இத்தனைக்கும் மன்பாயின் சகோதரன் அக்பரின் அரசவையில் ஒரு குறிப்பிடத்தக்க பதவியில் இருந்தவர். இஸ்லாமிய வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அந்தப் பெண்கள் பரிசாக அளிக்கப்பட்டார்கள். சட்ட ரீதியான மனைவிகள் அந்தப்புரத்துப் பெண்கள் எவரேனும் கருவடைந்தால் அவர்களைக் கொன்றார்கள். தங்களின் பிள்ளைகளுக்குப் போட்டியாக அவளின் பிள்ளை வந்துவிடக்கூடாது என்பதற்காக. கட்டாயக் கருக்கலைப்புகளும் உண்டு. இவை அத்தனையும் ஹிந்து அரசர்களைக் கேவலப்படுத்துவதற்காக மட்டுமே அக்பர் என்னும் கயவனால் செய்யப்பட்டவை.
பல ஹிந்துக் கோவில்கள் அக்பரால் இஸ்லாமிய பயணியர் விடுதிகளாக, மசூதிகளாக, குதிரைகள் கட்டும் லாயமாக மாற்றப்பட்டிருக்கின்றனவே அன்றி இந்திய வரலாற்றாசிரியர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் போல அக்பர் “எல்லா மதங்களையும் சமமாக பாவித்தற்கான” ஆதாரங்கள் எதுவுமில்லை. அக்பர் அடிப்படையில் சந்தேகமில்லாமல் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். எல்லா மதங்களையும் சமமாக நினைத்த “அக்பர் தி கிரேட்” ஏன் ஒரே ஒரு மசூதியைக் கூட பயணியர் விடுதியாக, குதிரை லாயமாக மாற்றவில்லை?
(தொடரும்)
****