அக்பர் என்னும் கயவன் – 15

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் நிதி நிர்வாகம் மோசமென்றால் அவரின் பொது நிர்வாகம் அதையும் விட மோசமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. “கிடைத்த வரைக்கும் சுருட்டு” என்பதே பொதுவானதொரு கொள்கையாக, சட்டமாக இருந்தது. சட்ட விரோதமான காரியங்களும், கொடூரமான சித்திரவதைகளும், வன்முறைகளும், முடிவே இல்லாமல் தொடர்ந்த போர்களும், அக்பருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சிகளும், சொந்த நாட்டு மக்களின் மீது கொள்ளையடிப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட அக்பரின் படையெடுப்புகளும், வாள்முனை மதமாற்றங்களும், அப்பாவிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு பணம் பறிக்கும் செயல்களும், படுகொலைகளும், லஞ்ச லாவண்யங்களும், பெண்களைத் தூக்கிச் செல்லுவதும், திருட்டும், வழிப்பறிக் கொள்ளையும், ஹிந்து வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் என அகராதியில் உள்ள அத்தனை கொடூரங்களும் அக்பரின் ஆட்சியில் நிகழ்ந்தன.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் மொத்த நிர்வாகமும் சுயநலம் பிடித்த அயோக்கியக் கூட்டத்தின் கையில் இருந்தது. அவர்களின் ஒரே குறிக்கோள் தங்களுக்கும், தங்களின் கீழிருக்கும் படையணிகளுக்கும் தேவையானவற்றை எப்பாடுபட்டாவது அப்பாவிப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவது என்பதில் மட்டுமே இருந்தது. அவ்வாறு தாங்கள் கேட்பதைத் தரமறுக்கும் அப்பாவிகள் மீது மிகக் கொடூரமான தண்டனைகளை அளித்தார்கள். கை அல்லது காலை வெட்டுவது, யானைகளைக் கொண்டு நசுக்கிக் கொல்லுவது, தலையை வெட்டுவது, சாட்டையால் கடுமையாக விளாசுவது போன்ற கொடூரச் செயல்களை அவர்கள் அரங்கேற்றினார்கள். எனவே இஸ்லாமிய அரசர்களின் கீழ் இருந்த இந்தியர்கள் இருந்த காலம் இஸ்லாமிய அரசர்களின் கொடூரச் செயல்களையும், அவர்களினால் அடக்கியாளப்பட்டவர்களின் துயரங்களையும் மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.”

அக்பரின் நீதி, நிர்வாகச் சிறப்புகளை பொய்யாக எழுதும் இந்திய வரலாற்றாசிரியன், அக்பரைப் போல இந்தியர்களை அடக்கியாண்ட, அவர்களைக் கொள்ளையடித்த, கற்பழித்த பிற இஸ்லாமிய அரசர்களுடன் ஒப்பிட்டு அவர்களை விடவும் அக்பர் சிறந்தவர் என்பது போன்றதொரு மாயத்தோற்றத்தை நம்முன்னே உருவாக்க விழைகிறார்கள். ஆனால் அது அத்தனை எளிதான ஒன்றில்லை. அக்பரின் கீழ் சுகமாக வாழ்ந்த இந்தியனின் வரலாறு எங்குமே எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவன் பட்ட துன்பமும், துயரமுமே எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது. வின்செண்ட் ஸ்மித் சொல்வதுபோல அக்பரின் ஆட்சி பொதுமக்களின் நலனுக்காக நடந்த ஆட்சி என்பதற்கான ஆதாரமே இல்லை.

அதேசமயம் அக்பரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அவரைக் குறித்து இல்லாத கதைகளை மட்டுமே எழுதி வைத்த அவரது வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அக்பரை ஒரு “பேரரசர்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதே பொய்களையே மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்பரின் “சிறந்த” ஆட்சிக்கு ஆதாரம் இல்லையென்றாலும் அவரது கொலைகார, கொள்ளைக்கார ஆட்சிக்கு ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றனவே. பின் எதற்காக இன்னும் அக்பரைக் குறித்தான கட்டுக்கதைகளை இன்னும் நம்மீது திணிக்கிறார்கள்?

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

அக்பரின் மொத்த அரசாங்க அமைப்பும் ராணுவம் சார்ந்தது. தூரத்துப் பிராந்தியங்களில் ஆளுகிற அரசப்பிரதிநிதி எந்தவிதமான சட்ட, திட்டங்களுக்கும் கட்டுப்படாதவர். தான் நினைத்ததையே சட்டமாக அங்கு பிரயோகிக்கமுடியும். அங்கு வாழுகிற குடிமகன் அந்த பிரதிநிதி சொல்வதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கமுடியும். அப்படி நடக்காதவன் மீதான தண்டனை மிகக்கடுமையானது.

அபுல் ஃபஸல், “அக்பர் ஹிந்துஸ்தானத்தை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த இஸ்லாமிய அரசர்கள் (துருக்கி, இரான் போன்றவை) விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசின் வரியாக வசூலித்தார்கள். ஆனால் அக்பரோ மூன்றில் ஒருபகுதியை தனக்கென வசூலித்தார்”. அதாகப்பட்டது பாரசீக அரசனை விடவும் இரண்டு மடங்கு வரி. இதன் பயனாக சாதாரண விவசாயி பெரும் துன்பமடைந்தான்.

இஸ்லாமிய அடிப்படைவாத மனோபாவமும், மதவெறியும் கொண்டவரான அக்பரின் ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் பெரும் துன்பமைடைந்தனர் என்பதே உண்மை.

அபுல் ஃபசல், “குரானில் சொல்லப்பட்டிருக்கும் கொடூரமான தண்டனைகளான கை, கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் அக்பரால் ஹிந்துக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுகிற நேரத்தில் அக்பரோ அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களோ சாதாரண நீதிமன்ற  நடவடிக்கைகளையோ அல்லது சாட்சிகளை விசாரிப்பது போன்றவற்றையோ செய்யவில்லை” என்கிறார். ஒவ்வொரு படைவீரனும் அக்பருக்கு எதிரானவர்களைக் கொல்ல ஆணையிடப்பட்டிருந்தான். எனவே யாரும், யாரையும் கொலை செய்வது எளிதாகியிருந்தது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரியை பெரிதுக் கொண்டாடுகிறவர்கள். ஆனால் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவ்வாறு நேரடியாக அபுல் ஃபசலின் பொய்களை நம்புதல் கூடாது என்கிறார். அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரி முற்றிலும் புனைகதைகளால் ஆனதொரு கட்டுக்தையேயன்றி அதில் துளியும் உண்மையில்லை.

அக்பரும் தோடர்மல்லும் நடத்திய நிர்வாகம் ஏழைகைளைச் சுரண்டி, அரசாங்க வருமானத்தை (அதாகப்பட்டது அக்பரின்) கூட்டுவதற்காகச் செய்யப்பட்ட நிர்வாகம். கல்வியறிவற்ற அக்பர் ஒரு மரமண்டை மனிதர். ஏழைகளுக்கு உதவுவதும், குடிமக்களின் வாழ்வைச் சிறக்கச் செய்வது எல்லாம் அவரால் புரிந்து கொள்ளவே முடியாததொரு விஷயம். ஜாகிர்களைப் பிரிப்பது, குதிரைகளுக்கு முத்திரையிடுவது போன்றவை அனைத்துமே அக்பரின் வருமானத்தைப் பெருக்கச் செய்த செயல்கள் மட்டுமே.

ஆனால் முன்யோசனையற்ற, சுயநலம் மிகுந்த திட்டங்களினால் நிகழ்ந்த கொடுமைகள் ஏராளம். உதாரனமாக கண்மூடித்தனமாக ஜாகிர்களைப் பிரித்து, விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்ததன் காரணமாக 1595-ஆம் வருடம் முதல் 1598-ஆம் வருடம் வரை கொடுமையான பஞ்சங்கள் வட இந்தியாவை வாட்டியதனைச் சொல்லலாம். பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்த வரிகள் முகலாய அரசின் ஆறு நகரங்களைச் சேர்ந்த கஜானாவில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் அக்பர் அதிலிருந்து ஒரே ஒரு பைசாவைக் கூடக் கூட்டம், கூட்டமாகச் செத்து விழும் தனது குடிமக்களுக்குச் செலவு செய்யவில்லை.

அக்பரின் கீழ் பணிபுரிந்த அவரின் அத்தனை அலுவலகர்களும் சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றிப் பிழைத்தனர். ஒரு அரசன் பிறப்பிக்கும் உத்தரவும் மேலிருந்து கீழ் வரைக்கும் அத்தனை அலுவலகர்களாளும் நேர்மையாகச் செய்யப்படுவது இயலாத ஒன்று என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எல்லாவிதமான ஏமாற்றுக் காரியங்களும், லஞ்ச ஊழல்களும் எல்லா மட்டத்திலும் பல்கிப் பெருகியிருந்தது.

தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது,

“இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படியாக தங்களின் திறந்த வாயுடன் ஹிந்துக்கள் திவானின் முன்னால் நிற்கவேண்டும். ஒரு காஃபிர் ஹிந்துவானவன் இஸ்லாமிய அரசனுக்குத் தனது பணிவைத் தெரிவிப்பதுடன், அந்த இஸ்லாமிய அரசனின் பாதுகாப்பையும் வேண்டி நின்று, இஸ்லாமின் பெருமையையும் அவனுக்கு உணர்த்தும். இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் எனவும் மற்றக் கடவுளர்கள் எல்லாம் பொய்யானவர்கள் என்பதினை அவனுக்குக் காட்டும்.

ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள். ஹிந்துக்களைக் கண்ட இடத்தில் கொல்லவும், கொள்ளையடிக்கவும், அவர்களையும், அவர்களின் பெண்களையும் அடிமைகளாக்கவும் முஸ்தபா (முகமது நபி) கட்டளையிட்டிருக்கிறார். ஒன்று ஹிந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட, அடிமைகளாக்கப்பட்ட, அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற குரான் உத்தரவிடுகிறது.”

(தொடரும்)

One Reply to “அக்பர் என்னும் கயவன் – 15”

  1. நல்ல வேளை கடவுள் இறப்பு என்ற ஒன்றை வைத்துவிட்டான் இல்லாவிட்டால் கயவன் அக்பர் இன்றும் அரசாட்சி நடத்துவான்இதற்கு இப்போதைய ஓட்டு பொருக்கி சில்லறை கட்சிகளும் அமைச்சர் என்ற போர்வையில் நாய் போல்சுற்றி கொண்டிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *