தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தையார், காலம் சென்ற பேராசிரியர் எஸ்.ஹரிஹரன் அவர்கள் தயாரித்துள்ள “தமிழ்-சம்ஸ்க்ருதம்” அகராதியின் வெளியீட்டு விழா, கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மியூஸிக் அகாடமியில் நடந்தது.

இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் முன்னிலையில் அவருடைய அனுக்ரஹத்துடன், மாண்புமிகு தமிழக ஆளுனர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று, அகராதியை வெளியிட்டார்.

சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் திரு.தினேஷ் காமத் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர் ஆர்.வன்னியராஜன் (ஆர்.எஸ்.எஸ். தமிழக-கேரள தலைவர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது பூஜ்ய சங்கராச்சரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பீடாதிபதிகள் மரபுப்படி தியானத்தில் அமர்ந்து மரியாதை செய்தார். மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால், “பூஜ்ய சங்கராச்சாரிய ஸ்வாமிகள் எழுந்து நிற்காமல் தமிழ்த்தாயை அவமதித்து விட்டார். அது கண்டிக்கத்தக்கது, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று திராவிட இனவெறியாளர்கள், தமிழ் பிரிவினைவாதிகள், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் அனைத்து தேச விரோத, ஹிந்து விரோத சக்திகளும் குரல் எழுப்பி போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

இவ்விழா ஹெச்.ராஜா அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்திய விழா. இது தமிழக அரசு விழா அல்ல. ஆளுனர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளையெல்லாம் அரசு நிகழ்ச்சிகளாகக் கருத முடியாது. ஆகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.

சரி, ஆளுனர் கலந்துகொள்வதால் தமிழ்த்தாய் வாழ்த்து பாட முடிவு செய்திருக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதைப் பூஜ்ய ஸ்வாமிகளிடம் சொல்லியிருக்க வேண்டும். தேசிய கீதம் பற்றியும் அதற்கான மரியாதைகளையும் நன்கு அறிந்திருக்கும் ஸ்வாமிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மாநில அரசு கீதம், அதற்கு எழுந்து நிற்க வேண்டும் என்று தெரியாமல் இருந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். இதுநாள் வரை அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கலாம். ஆகவே, ஹெச்.ராஜாவோ அல்லது அவருடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களோ ஸ்வாமிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

விழாவின் நிறைவில் தேசிய கீதம் பாடப்படும்போது ஸ்வாமிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அவர் தியானம் செய்துள்ளது தமிழ்த்தாயைப் போற்றி வழிபடும் செயலே அன்றி கிஞ்சித்தும் மரியாதைக் குறைவல்ல. மேலும், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் வேத மந்திரங்கள், திருமுறைகள் அல்லது பாடல்கள், கீர்த்தனைகள் போன்றவையே இறைவணக்கமாகப் பாடப்படும். அந்தச் சமயங்களில் பெரியவர்கள் அமர்ந்த நிலையில் தியானம் செய்வதே வழக்கம். அதே போன்றுதான் இவ்விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கடவுள் வாழ்த்தாகப் பாவித்துத் தியானம் செய்திருக்கிறார். மரியாதை என்கிற பெயரில் நின்றுகொண்டு அடுத்தவர்களை வேடிக்கைப் பார்ப்பதைவிட கண்களை மூடியபடி தியானம் செய்வது மிகவும் மேன்மையான செயலே.

இருப்பினும், தமிழை வைத்து அரசியல் வியாபரமும் மொழி வியாபாரமும், பிரிவினைவாதமும் செய்துகொண்டிருப்பவர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவார்கள் என்பதும், தமிழை ஆண்ட தெய்வத்தாய் ஆண்டாள் பிரச்சனையில் பெரிதும் பின்வாங்கப்பட்டிருக்கும் அவர்கள் அந்தப் பிரச்சனையைத் திசைத்திருப்ப இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதும் எதிர்பார்த்ததே. அதைப்போலவே நடந்துகொண்டும் இருக்கிறது. ஆகவே, இந்தத் தேச விரோத, ஹிந்து விரோத கும்பலின் அலறல்களையும், கண்டனங்களையும் புறந்தள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய பல உண்மைகளைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாகவும் கொள்ள வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து உருவான கதை

மனோன்மணீயம் பெருமாள் சுந்தரம் பிள்ளை அவர்கள் 1891ம் ஆண்டு எழுதிய “மனோன்மணீயம்” நாடகத்தில், தொடக்கத்தில் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து தமிழைத் தெய்வமாகப் போற்றி “தமிழ்த் தெய்வ வணக்கம்” என்கிற தலைப்பில் எழுதிய பஃறாழிசைக் கொச்சுக் கலிப்பா பாடலே ‘நீராருங் கடலுடுத்த…..’ என்ற பாடல்.

இந்த பாடலின் முடிவில்,

“ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”

என்று வருகின்றது.

அதாவது சம்ஸ்க்ருத மொழியை ‘ஆரியம்’ என்று குறிப்பிட்டு, அந்த சம்ஸ்க்ருத மொழி உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்திருப்பதைப்போல் சிதையாமல் சீரிய இளமையுடன் இருக்கும் உன் திறத்தை வியந்து, செயல் மறந்து வாழ்த்துகிறோம், என்று தமிழ்த் தெய்வ வணக்கத்தை நிறைவு செய்கிறார்.

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரிகத்தையும், நமது பாரத கலாச்சாரத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும், இசை மற்றும் கலைகளையும், பண்பாட்டையும் உலகெங்கும் பறைசாற்றிய ஒரு உன்னத மொழியை “உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்தது” என்று ஒருவர் கூறுவாரேயானால், அவர் மொழி வெறி கொண்டவரும் உள்ளம் முழுவதும் சம்ஸ்க்ருத வெறுப்பு உடையவருமாகத்தான் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கைக் கொண்டவராகவும், சைவ சித்தாந்தியாகவும் இருந்தாலும், மனோன்மணீயம் சுந்தரனாரின் சம்ஸ்க்ருத வெறுப்பும், திராவிட இனவெறியும் அனைவரும் அறிந்ததே.

ஆகையினால்தான், 1970ம் ஆண்டு தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, தமிழகத்திற்கென்று ஒரு மாநில கீதம் கொள்வதாகக் கொள்கை முடிவு செய்து, மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலைத் தேர்வு செய்தபோது, சம்ஸ்க்ருத மொழியை அவமதிக்கும் இரண்டாம் பத்தியை நீக்கிவிட்டு, முதல் பத்திக்குப்பிறகு, “உன் சீரளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என்கிற கடைசி வரியை மட்டும் இணைத்து, அதைத் “தமிழ்த்தாய் வாழ்த்து” என்கிற பெயரில் மாநில கீதமாக அறிமுகம் செய்தார்.

அதைப் பற்றிய அரசாணை வெளியிடும்போது, “ஒரு மொழியை வாழ்த்தும்போது மற்றொரு மொழியைக் கொச்சைப்படுத்துதல் கூடாது” என்று கூறவும் செய்தார். ஆனால் அவர் அப்படிக் கூறியது பொது மக்களுக்காக என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதுதான். ஏனென்றால், அன்றைய காலகட்டத்தில், தமிழகமெங்கும் சம்ஸ்க்ருதம் அறிந்த அறிஞர்கள் ஏராளமானோர் இருந்தார்கள் என்பதாலும், அவ்வாறு அந்தப் பத்தியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தால் நாடெங்கும் பெரும் பிரச்சனை உருவாகும் என்பதாலும் தான் அவர் அந்தப் பத்தியை நீக்கி வெளியிட்டார் என்பது திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், கருணாநிதியின் அரசியலையும் அறிந்தவர்களுக்குச் சுலபமாகப் புரியும். மேலும், தன்னுடைய கோழைத்தனத்தையும் பெருமையாக மாற்றிக்கொள்ளக் கூடிய சாமர்த்தியம் மிகுந்தவர் தான் கருணாநிதி என்பதும் தெரிந்ததே!

அதோடு மட்டுமல்லாமல், அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்த அரசாணையில் (Memo No: 3584/70-4dated 23 November 1970) “அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யும் விழாக்கள் அனைத்திலும் விழா தொடக்கத்தில் திரு.பி.சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய ‘மனோன்மணீயம்’ காவியத்திலுள்ள பாடலை ‘கடவுள் வாழ்த்து’ ஆகப் பாடவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துள்ளபடி, மோகனம் ராகத்திலும், திஸ்ரம் தாளத்திலும் தான் பாடவேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், பாடல் இசைக்கப்படும்போதோ, பாடப்படும்போதோ அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

நியாயமான கருத்தும் காஞ்சி மடத்தின் விளக்கமும்

இந்தப் பாடலைப் பற்றி “தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்” என்கிற கட்டுரை ஒன்றை எழுதியுள்ள எழுத்தாளர் ஜடாயு, தன் கட்டுரையில், “ஆரியம் போல் உலகவழக்கொழிந்து என்று எழுதியிருப்பது, அறிஞரான சுந்தரம்பிள்ளையும் கால்டுவெல் உருவாக்கிய ஆதாரமற்ற திராவிட இனவாதத்திற்கும் மொழிக் காழ்ப்புணர்வுக் கொள்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. உண்மையில், ஆரியம் என்று இங்கு சுட்டப்படும் சம்ஸ்கிருத மொழி உலகவழக்கு என்று சொல்லப்படும் பாமரர்களின் பேச்சு வழக்குத் தளத்தில் எப்போதுமே இயங்கியதில்லை என்னும்போது, அது எப்படி அழிந்தொழியும்? பல சம்ஸ்கிருத நாடகங்களிலேயே கூட, இடையிடையே வரும் உரையாடல்கள் பிராகிருதம், அபப்ரம்சம் முதலான பேச்சு மொழிகளிலும், கவிதைகள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளதை நாம் காணமுடியும். அந்தப் பேச்சு மொழிகளும் இன்றைய வட இந்திய மொழிகளும் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தின் வடிவங்களே” என்று கூறுகிறார்.

“உண்மையில், சுந்தரம்பிள்ளை இந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. கீதையும் உபநிஷதங்களும் சாகுந்தலமும் மேற்கத்திய அறிஞர்களால் பயிலப் பட்டுக் கொண்டிருந்தன. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை. ஒரு மாபெரும் நகைமுரணாக, அவரது பெயரிலும், அவர் எழுதிய இந்தப் பாட்டிலுமே சுந்தரம், நீர், வதனம், பரதகண்டம், தக்கணம், திராவிடம், திலகம், வாசனை, உலகம், திசை, பரம்(பொருள்), உதரம், உதித்தே என்று இத்தனை சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. மேலும், இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழும் பெருமதங்களின் (இந்துமதம், பௌத்தம், ஜைனம்) ஆதார நூல்களை உள்ளடக்கிய ஒரு மொழி சிதைந்து ஒழிந்தது என்று சுந்தரம்பிள்ளை கருதியிருந்தால் அது அபத்தமானது” என்று மேலும் குறிப்பிடுகிறார்.

ஜடாயு அவர்களின் இதே மாதிரியான கருத்தை சமூக வலைதளங்களில் நியாயமாகச் சிந்திப்பவர்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை குறித்து காஞ்சி மடம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “விழாக்களில் கடவுள் வாழ்த்து பாடும்போது பக்தர்கள் மட்டுமே எழுந்து நிற்பார்கள். மடாதிபதிகள் தியான நிலையில் இருந்து மரியாதை செலுத்துவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தையும் கடவுள் வாழ்த்துக்கு இணையான வழிபாடாகவே பாவித்து அவர் தியான நிலையில் இருந்தார். தேசிய கீதத்தைப் பொறுத்தவரை தேசத்துக்கு உண்டான மரியாதை கொடுப்பதற்காக எழுந்து நின்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, மேற்கூறப்பட்ட அரசாணையின்படி, காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்ய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல என்பது தெளிவாக நிரூபணம் ஆகின்றது. மேலும், அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். எழுந்து நின்று சுற்றிலும் பார்வையை அலையவிடுவதை விட, அமர்ந்த நிலையில் தியானத்தில் இருப்பது உயர்ந்த மேன்மைமிகு செயலாகும். இதே விளக்கத்தையும் காஞ்சி சங்கர மடம் அளித்துள்ளது. இதுவே போதும். வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை. எனவே, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராடுவது அபத்தம் ஆகும்.

அரசாணை வெளியிட்டவரே அமர்ந்திருந்த காட்சி

இதனிடையே இந்தப் பிரச்சனையக் கையில் எடுத்துக்கொண்ட ஹிந்து விரோத சக்திகள் ஆங்காங்கே ஆர்பாட்டங்களில் ஈடுபட்டன. தற்போது பலவீனமான நிலையில் திராணியற்று இருக்கும் தமிழக அரசும் அம்மாதிரியான ஆர்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் அனுமதி அளித்து வருகின்றது. இம்மாதிரி ஆர்பாட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2010ம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசு கோயமுத்தூரில் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது முதல் அமைச்சர் கருணாநிதி எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்ததும், அதே மாநாட்டின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்து நின்று மரியாதை செய்ததும், பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியாயின. அந்தப் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

இப்போது காஞ்சி சங்கராச்சாரியாரைக் கண்டித்துத் தூற்றிப் பேசுபவர்களும், ஆர்பாட்டம் நடத்துபவர்களும், பகிரங்க மன்னிப்புக் கோருபவர்களும் அப்போது வாய்மூடி மௌனமாக இருந்தது தற்போது வெளியாகி, அவர்களுடைய இரட்டை வேடம் தோலுரிக்கப்பட்டுள்ளது.

தோலுரிக்கப்பட்ட திராவிட இனவெறி

கருணாநிதி தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்தது வெளியானதைத் தொடர்ந்து மேலும் சில திராவிடப் போலித் தனங்கள் வெளியாயின.

பாரதிய ஜனதா கட்சியின் ஷெட்யூல்டு பிரிவினர் அணியின் மாநிலத்தலைவரும் ‘ஈ.வெ.ராவின் மறுபக்கம்’ புத்தகத்தை எழுதியவருமான ம.வெங்கடேசன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “1971ம் ஆண்டு (14-8-71), டாக்டர் பட்டம் பெற்ற கலைஞரைப் பாராட்டுவதற்காக விழா ஒன்றை சென்னை பகுத்தறிவாளர் கழகம் பெரியார் திடலில் நடத்தியது. ஈ.வெ.ரா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குன்றக்குடி அடிகளார், என்.டி.சுந்தரவடிவேலு, ஏ.என்.சட்டநாதன், கீ.வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். அப்போது புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய ஈவெரா, ‘கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள்தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?’ என்றார்” என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதியுள்ள ‘தந்தை பெரியார்’ (பக்கம்-569) என்ற நூலை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 12 ஆகஸ்டு 1971 அன்று தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரையையும் சுட்டிக் காட்டியுள்ளார் ம.வெங்கடேசன்.

ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி வழியில் தற்போதைய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் தன்னுடைய மேதாவிலாசத்தைக் காட்டி வருகிறார். சென்ற மாதம் நடைபெற்றப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஸ்டாலின், குடியரசு தினம் ஜனவரி 25 என்றும், பிறகு டிசம்பர் 25 என்றும், பின்னர் சுதந்திர தினம் ஜனவரி 15 என்றும் தவறாகக் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் பேசிய ஸ்டாலின் தேசிய கீதத்தை நாட்டுப்புறப்பாடல் என்றும் கூறித் தன் அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள தி.மு.க கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன் காஞ்சி சங்கராச்சாரியர் ஸ்ரீ விஜயேந்திரரைக் கண்டித்து நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் தானே தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதாகச் சொல்லி அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லிவிட்டுப் பின்னர் தப்பும் தவறுமாகப் பாடினார்.  இதன் வீடியோவை இங்கு காணலாம்.

தமிழ் பிரிவினைவாதமும், ஹிந்து விரோதமும், தேச விரோதமும் பரப்பிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்.

இவர்கள் போதாதென்று, தௌஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் அவர்கள் கொள்கைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடது என்றும், அவ்வாறான சூழ்நிலை அமையும்போது சிறுநீர் கழிக்கச் செல்வது போல வெளியேறிவிட வேண்டும் என்றும் முஸ்லிம் மக்களுக்கு வழிகாட்டுகின்றன. இதற்கெல்லாம் எந்த “தமிழ்” அமைப்புகளும் போராடவில்லை.

பகிரங்க மன்னிப்புக் கேட்பார்களா?

இன்று பேச இயலாத நிலையில் இருக்கும் கருணாநிதி 2010ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருந்ததற்காக, அவர் சார்பாக அவரது மகனும் தி.மு.க செயல்தலைவருமான ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் மோசமாக எழுதியும் பேசியும் அவமானப்படுத்தி அவமரியாதை செய்த ஈ.வெ.ரா சார்பாக திராவிடர் கழகத்தலைவர் வீரமணி பகிரங்க மன்னிப்புக் கோருவாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தப்பும் தவறுமாகப் பாடி அவமதித்த சுப்புலட்சுமி ஜகதீசன் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று சொன்ன நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பகிரங்க மன்னிப்புக் கோருவாரா?

தற்போது ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்துவரும் தேச விரோத ஹிந்து விரோத சக்திகள் தி.மு.க., தி.க., நாம் தமிழர் ஆகிய கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஆர்பாட்டமும் போராட்டமும் நடத்தி அவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது மரியாதை கொடுக்க வேண்டாம், அந்தச் சமயத்தில் வெளியேறிவிடுங்கள் என்று கூறும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராகப் போராடி அவர்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோருவார்களா? காஞ்சிப் பெரியவரைக் கண்டிக்கத் துணிந்த சினிமா இயக்குனர் அமீர், அவர் சமூகத்தைச் சேர்ந்த தௌஹீத் ஜமாத்தை ஏன் கண்டிக்கவில்லை?

தமிழ்த்தாயை வணங்குவார்களா?

1940ம் ஆண்டு கம்பன் விழாக் கழகத்தலைவர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் யோசனைப்படி வைத்தியநாத ஸ்தபதி அவர்கள் தமிழ்த்தாய்க்குப் பஞ்சலோக சிலை ஒன்றை வடித்தார். அதில் தமிழ்த்தாய் தாமரை மலர் மீது அமர்ந்து நான்கு கைகளில் முறையே ஜபமாலை, ஓலைச்சுவடிகள், தமிழ்ச்சுடர் மற்றும் செங்கோட்டு யாழ் ஏந்திக் காட்சித் தருவதாக வடித்திருந்தார்.

பிறகு, 1981ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் தமிழ்த்தாய் சிலையைத் திறந்து வைத்தார்.

கம்பன் விழாக்கழகத் தலைவர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்த்தாய்ய்கு என்று ஒரு கோவில் கட்டப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தில் கட்டப்பட்டது. இந்தத் திட்டம் முழுவதுமாக நிறைவேறுவதற்கு முன்பே சா.கணேசன் காலமானார். பிறகு அவருடைய மாணவர்களுள் ஒருவரான கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள் திட்டத்தைச் சிரமேற்கொண்டு முடித்தார்.

தமிழ்த்தாய்ச் சிலையின் ஒரு பக்கம் அகஸ்தியர் சிலையும் மறுபக்கம் தொல்காப்பியர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகள் இருக்கும் கருவறைக்கு வெளியே ஒரு பக்கம் “ஒலி”த்தாய் உருவமும் மறுபக்கம் “வரி”த்தாய் உருவமும் வடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. திரு கணபதி ஸ்தபதி அவர்கள் வடிவமைத்த இந்தத் தமிழ்த்தாய்க் கோவிலை 1993ம் அண்டு தி.மு.க தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்தக் கோவிலானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கம்பன் விழா நடக்கும்போது மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது. மற்றபடி இங்கே பூஜைகள் எதுவும் நடைபெறுவதில்லை (தமிழ்த்தாய் கோயில் பற்றிய செய்தி இங்கே).

ஆக, மேற்கண்டவாறு தமிழ்த்தாய்க்கு உருவகம் கொடுக்கப்பட்டுச் சிலைகள் வடிக்கப்பட்டாலும், அவற்றை வணங்கி வழிபாடு செய்ய நாத்திகத் திராவிட இனவெறியாளர்கள் யாவரும் தயாராக இல்லை.

தமிழ்த்தாயை வணங்க விருப்பம் இல்லாத, வழிபடத் தயாராக இல்லாத, “பகுத்தறிவு” பேசுபவர்களுக்கு, தமிழ்த்தாயைத் தெய்வமாகப் போற்றி மனதில் இருத்தித் தியானம் செய்த காஞ்சிப் பெரியவரைக் கண்டிக்க என்ன யோக்கியதை அல்லது அருகதை இருக்கின்றது?

மேலும், கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுரை மாநகரில் ருபாய் 100 கோடி செலவில் 300 அடி உயரம் கொண்ட தமிழ்த்தாய்ச் சிலை நிறுவப்படும் என்றும், அது ஏறக்குறைய அமெரிக்கச் சுதந்திர தேவி சிலையைப் போன்ற சூழலில் இருக்கும் என்றும் அறிவித்தார்.

காஞ்சிப் பெரியவரைக் கண்டிக்கத் துணிந்த பகுத்தறிவுவாதிகள் தமிழ்த்தாய்ச் சிலையை வணங்கி வழிபடுவார்களா? எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று கூட அரசாணையில் குறிப்பிடாதவர்கள் தமிழ்த்தாயை அரசு விழாக்களில் வழிபட வேண்டும் என்று அரசாணை வெளியிடுவார்களா?

காஞ்சி மடத்தின் தமிழ்ப்பணி

காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது.

தமிழர்களின் கலாச்சாரச் சின்னங்களான ஆலயங்களைப் பாதுகாத்தல், புனர்நிர்மாணம் செய்தல் போன்ற பணிகளில் மடம் ஈடுபட்டு வருகின்றது.

தமிழர்களின் தலைசிறந்த கலைகளுள் ஒன்றான சிற்பக்கலையை வளர்க்கவும், சிற்பக்கலைஞர்களைப் பெருக்கவும், சிற்பக்கலைப் பாடசாலை நடத்தி வருகின்றது.

ஆலயப் பராமரிப்பிற்கு ஆகமங்கள் பற்றிய அறிவு மிகவும் முக்கியம். அதற்காக ஆகம அறிஞர்களை உருவாக்கும் விதமாக சைவ ஆகம பாடசாலை நடத்தி வருகின்றது.

கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஆன்மிகப் பாரம்பரிய, கலாச்சார, இலக்கிய நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றது. அவற்றை நிரந்தரமாகப் பாதுகாக்க டிஜிடல் முறையிலும் பதிப்பித்து வருகின்றது.

தமிழ் இலக்கியவாதிகளையும், புலவர்களையும், ஒதுவார் சமூகத்தினரையும் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் அளித்து, நலவுதவிகளும் விருதுகளும், அளித்துப் பாராட்டி வருகின்றது.

சைவத் திருமுறைகள்,வைணவப் பிரபந்தங்கள் ஆகியவற்றை வளர்க்கும் விதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

மடத்திற்குச் சொந்தமான பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியை வளர்க்கும் விதமாகப் பல போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றது.

இவ்வாறு பல ஆண்டுகளாகக் காஞ்சி மடம் செய்து வரும் தமிழ்ப்பணிகளை (ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டால் பல பக்கங்கள் வரும்) கணக்கிட்டால், அவற்றில் 10% கூடத் திராவிட அமைப்புகளோ, திராவிடக் கட்சிகளின் அரசுகளோ செய்யவில்லை என்று உறுதிபடக் கூறலாம். இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு தமிழ்ப்பணிகள் செய்து வரும் மடத்துப் பெரியவர்கள், தமிழ்த்தாயை அவமதிப்பார்களா? உண்மை இவ்வாறு இருக்க, காஞ்சி சங்கராச்சாரியாரைக் குறை கூறவோ, கண்டிக்கவோ இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது? என்ன யோக்கியதை இருக்கிறது?

ஹிந்து ஒற்றுமையைக் குலைப்பதே நோக்கம்

உண்மையிலேயே தமிழ்ப்பற்று கொண்டு தமிழைத் தாயாகப் போற்றுபவர்கள் ஸ்வாமிகளின் நிலைப்பாட்டையும், காஞ்சி காமகோடி பீடம் தமிழ் மொழிக்குச் செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் மகத்தான சேவைகளையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆகவே அவர்கள் யாரும் ஸ்ரீ விஜயேந்திரரின் செயல்பாட்டில் தவறு காணவில்லை. ஆயினும் தவறு காண்பவர்களின் மனவுணர்வுகளுக்கு மதிப்பளித்து காஞ்சி மடத்தின் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை உண்மையான தமிழ் பற்றாளர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்நிலையில் தமிழ் ஹிந்துக்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். நாத்திக திராவிட இனவெறிக் கவிஞர் வைரமுத்து தெய்வத் தமிழ்த்தாய் ஆண்டாளை அவமதித்ததற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்கள் நடத்தி வருகையில் ஹிந்து விரோத திராவிட சக்திகள் பெரும் பின்னடவை அடைந்துள்ளன. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் பார்த்திராத அளவுக்கு ஹிந்துக்கள் திரண்டு வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வலிமை மிக்க ஹிந்து ஒற்றுமையைக் குலைக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்த ஹிந்து விரோத சக்திகள் ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்ட முயற்சித்தனர். பிராம்மணர்களுக்கும் அப்பிராம்மணர்களுக்குமான சண்டையாகவும், சைவர்களுக்கும் வைணவர்களுக்குமான சண்டையாகவும் மாற்றவும் முயற்சி செய்தனர். ஆயினும், அவர்கள் முயற்சிகள் பெரும் தோல்வி அடைந்தன.

அப்படியாகத் தோல்வி மேல் தோல்வி கண்ட நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி, அதைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆண்டாள் பிரச்சனையிலிருந்து மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர். இதைப் புறந்தள்ளுவதே தமிழ் ஹிந்துக்கள் செய்ய வேண்டியது. தமிழ் ஹிந்துக்களைப் பொறுத்தவரை, தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை இத்துடன் நிறுத்திவிட்டு, தெய்வத்தமிழ்த்தாய் ஆண்டாள் பற்றிய பிரச்சனையில் முழு கவனம் செலுத்தி நமது போராட்டங்களைத் தொடரவேண்டும். வைரமுத்து ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்புக் கேட்கும்வரைத் தொடரவேண்டும்.

அதன் பிறகும், ஹிந்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக திராவிட, கம்யூனிச, தமிழ் பிரிவினைவாத கும்பல்களைத் தமிழக மக்களுக்குத் தோலுறித்துக் காட்டும் செயல்பாடுகளைத் தொடரவேண்டும்.

7 Replies to “தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்”

  1. மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சிறந்த ஒரு பதிவு. உண்மைகள் தெளிவாக உரைக்கப் பட்டுள்ளன.

  2. The G.O clearly says the song is for government functions. It does not apply to private functions like the one Shankaracharya attended. Moreover, the GO simply says the song will be sung. Standing up during the song is not required. Much ado about nothing.

  3. மிக விரிவான, தெளிவான விளக்கம். தேசீய வாதிகள் பலருக்குக்கூட கூட இத்தனை விவரங்கள்/ உண்மைகள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. தமிழ் நாட்டின் பரிதாப நிலை, பொய்யும் திரித்து வெளியிடப்படும் கருத்துக்களும் உடனடியாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. உண்மையைச் சொல்ல வழியில்லை. இங்கு கண்ட உண்மைகளை முழுதும் வெளியிட எந்தத் தமிழ் பத்திரிகையாவது முன்வருமா?
    இந்த நிலையில் இந்த உண்மைகளை இங்கு வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.
    இத்தகைய விளக்கங்கள் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்படவேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடையே உண்மை பரவும்.

  4. In SriLanka Buddhist monks do not get up from their seats when President of the country or Prime Minister or any other distinguished visitors , local and foreign, visit them to pay respect. 70th independence celebrations took place today in SriLanka and Buddhist monks did not get up from their seats when national anthem was played at the ceremony. This has been in practice for a long time. Let my Indian brothers and sisters share this news with the so called Dravidian politicians.

  5. திரு ரிஷியின் தகவலுக்கு நன்றி. திராவிட அமைப்புக்களும் இடதுசாரிகம்யுனிஸ்டுகளும் ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து விட்டார் என்று கூச்சலும் குழப்பமும் செய்வது தமிழ் மொழி மீது உள்ள பற்றுதலால் அல்ல. அவர்களிடம் உள்ள மிக கடுமையான இந்து மத ஒழிப்பு வெறுப்பு. இதே தமிழ் தாய் வாழ்தை இங்குள்ள ஒரு முஸ்லிம் மத அமைப்பு தீயிட்டு எரித்து இருந்தாலும் இவர்கள் கண்டு கொள்ளளாமல் இருந்து இருப்பார்கள். யாராவது எதிர்த்தாலும் முஸ்லிம் மதத்தின் கடமைகளின்படி அப்படி செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று இந்திய அரசியல் அமைப்பு சட்ட உரிமை விளக்கமும் அளிப்பார்கள்.

  6. தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது அமர்ந்திருக்க கூடாது
    என்று தெரிந்தே அவர் அமர்ந்திருக்க மாட்டார்.அதே போல்
    எழுந்துநிற்க வேண்டும் என்று தெரிந்தே எழுந்து நிற்காமலும்
    இருந்திருக்கமாட்டார்.இவ்விஷயத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின்
    கவனக்குறைவே சங்கராச்சாரியார்க்கு இத்தகைய அவப்பெயரை
    ஏற்படுத்தியுள்ளது.எனக்கு தெரிந்து தமிழ்த்தாய் வாழ்த்து திடீரென
    பாடப்பட்டிருக்கும் அது போன்ற நேரத்தில் சாதாரண மனிதர்களைப்போல
    அவசர அவசரமாக எழுந்து நிற்கும் பழக்கமும், வழக்கமும், முறையும் இல்லாத காரணத்தால்
    அவர் அமர்ந்த நிலையிலேயே தமிழ்த்தாய்க்கு மரியாதை செய்திருக்கிறார்.
    என்ற நினைக்க தோன்றுகிறது.

  7. //இவ்விஷயத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின்
    கவனக்குறைவே சங்கராச்சாரியார்க்கு இத்தகைய அவப்பெயரை
    ஏற்படுத்தியுள்ளது.//
    இந்து மத ஒழிப்பை தங்களது அடிப்படை கொள்கையாக கொண்ட திராவிட அமைப்புகளும் கம்யுனிஸ்டுகளும் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.முயற்சி தோல்வியில் முடிந்தது.

    (edited and published)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *