நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
அவமானப்படுத்தப்பட்ட சினத்துடன் தனது அரசவையிலிருந்து வெளியேறிய சிவாஜியை மீண்டும் ஔரங்கஸிப் பார்க்க விரும்பினாரா இல்லையா என்பதை வரலாறு எங்கும் பதிவுசெய்து வைத்திருக்கவில்லை. ஆனால், பறவை எங்கும் தப்பமுடியாத வகையில் தன்னுடைய வலையில் சிக்கியிருப்பதனை அவர் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை.
புலந்த்கானின் சிப்பாய்கள் இரவும், பகலும் சிவாஜியின் இருப்பிடத்தைச் சுற்றிக் கண்காணிப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஔரங்கஸிப்பின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த நிகாலோ மானூச்சியின் குறிப்பின்படி சிவாஜி ஒரு கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனையே பெர்னியர்போன்ற பிறரும் உறுதிசெய்கிறார்கள். சிவாஜி தங்குவதற்குத் தகுதியான வீடொன்றைக் கட்டும்படி ஔரங்கஸிப் ஃபிதா-இ-கான் என்பவருக்கு உத்தரவிடுகிறார். வீடு கட்டிமுடிக்கப்பட்டதும் சிவாஜி கூடாரத்திலிருந்து அங்கு மாறிவிடுவதாக ஏற்பாடு.
ஒன்றுமட்டும் உறுதி. சிவாஜி அந்த வீட்டிற்குக் குடியேறியதும் வெளியுலகம் தெரியாதபடி மறைந்துபோவார். ஔரங்கஸிப்பின் பிடியில் சிக்கிய எவரும் — அது அவருடைய தகப்பனாகவோ, அல்லது சகோதரர்களாகவோ, அல்லது வேறெந்த எதிரிகளாகவோ இருந்தாலும் — அவரால் கோட்டைகளிலும், பாதாளச் சிறைகளிலும் அடைக்கப்பட்ட பின்னர் வெளியே வந்ததாகச் சரித்திரமே இல்லை. சிவாஜியை அந்த வீட்டிற்குக் குடியேற்றியவுடன் அவரைக் கொன்றுபுதைக்கும் திட்டத்துடன் ஔரங்கஸிப் இருந்திருக்கலாமெனக் கூறுகிறார் மானூச்சி.
சிவாஜி மிகத் துணிச்சல்காரர் என்றாலும், நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்து கொள்கிறார். இதுபோன்ற இக்கட்டுகளிலிருந்து பலமுறை தப்பிய அனுபவம் அவருக்கு இருப்பதால் இந்தச் சூழ்நிலையையும் துணிவுடனே எதிர்க்க முடிவுசெய்கிறார்.
எது நடக்கக் கூடாததோ அது நடந்துவிட்டது; நடந்ததை இனிமாற்றுவது கடினம். தனக்கு இருக்கும் காலமும் மிகக் குறைவானது, எனவே தானும், தன்னுடன் வந்தவர்களும் ஆக்ராவிலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு தப்புவது என அவரது முக்கியஸ்தர்களுடன் ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். ஏராளமான திட்டங்கள் தீட்டப்பட்டுப் பின்னர் கைவிடப்பறன. உடனடியாக ஔரங்கஸிப் சிவாஜியின்மீது கொண்டுள்ள கோபத்தினைக் குறைக்கும்வண்ணம் மீண்டுமொருமுறை ஔரங்கஸிப்பைத் தான் சந்திக்க விரும்புவதாக சிவாஜியின் வக்கீலான ராகோ பலால் கோர்டே மூலமாக வேண்டுகோள்விடுக்கிறார். அத்துடன், தானும், தன்னுடன் வந்தவர்களும் தக்காணம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
பாதுஷாவை நேரில் சந்தித்து நடந்தவற்றைக் குறித்து விளக்கமளிக்கத் தான் விரும்புவதாகவும், அதற்கான அனுமதியைப் பெறும்படியும் கோர்டேயிடம் சொல்கிறார் சிவாஜி. அதன்படி ஒரு மனுவை ஔரங்கஸிப்பிடம் அளிக்கிறார் கோர்டே. ஆனால் ஔரங்கஸிப் அதற்குச் சரியான பதிலைச் சொல்லாமல், “நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன். பொறுமையாக இருக்கவும்.” என்கிற பதிலை அதே மனுவின் பின்புறம் அவருடைய கைப்பட எழுதி அனுப்புகிறார். சிவாஜியை என்னசெய்வது என்கிற இறுதி முடிவிற்கு ஔரங்கஸிப் இன்னும் வந்திருக்கவில்லை. இருவரின் சந்திப்பிற்கும் உதவிய ராஜா ஜெய்சிங், சிவாஜி ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என சத்தியம்செய்திருந்தார். இன்னொருபுறம் சைஸ்டாகானின் மனைவி சிவாஜியைக் கொல்லவேண்டும் என மீண்டும் மீண்டும் வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.
இந்தச் சூழ்நிலையில் ஔரங்கஸிப் தக்காணத்திலிருந்த ஜெய்சிங்குடன் தொடர்ந்து கடிதத் தொடர்புகொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார். தக்காணத்தை சிவாஜியிடம் ஒப்படைத்தால் பீஜப்பூர் படையெடுப்பு என்ன மாதிரியாக முடியும், சிவாஜிக்கு வேறேன்ன பதவிகள் தருவதாக ஜெய்சிங் உறுதியளித்தார் போன்ற தகவல்களைப்பெற ஔரங்கஸிப் முனைந்துகொண்டிருந்தார். சிவாஜியை விடுவித்தால் தக்காணத்தில் முகலாய அரசுக்கு நன்மைகள் எதுவும் உண்டா — அல்லது சிவாஜியைக் கொன்றால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்பதுபோன்ற கவலைகள் ஔரங்கஸிப்பை வறுத்துக்கொண்டிருந்தன.
அரசவையில் சிவாஜி நடந்துகொண்ட விதம் ஔரங்கஸிப்பைப் பெறும் சினம்கொள்ளச் செய்திருந்தது. தனக்கு அடிபணிய மறுப்பவர்களை ஔரங்கஸிப் விரும்பியதாகச் சரித்திரமில்லை. இருந்தாலும் அவரை உடனடியாகக் கொல்வதனை ஔரங்கஸிப் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, பாரசீகத்திலிருந்து படையெடுத்துவரும் இரண்டாம் ஷா-அப்பாஸுக்கு எதிராகச் சிவாஜியை காபூலுக்கு அனுப்பி வைக்கலாமா என்கிற யோசனையும் அவருக்கு இருந்தது. அவ்வாறு செய்தால் நாட்டின் தென்பகுதியில் தனக்கு இருக்கும் ஒரு பிரச்சினை குறையும் என்பது முக்கிய காரணம்.
சிவாஜி தக்காணத்தை விட்டுச் சென்றதிலிருந்து நிலமை வேறுவிதமாக மாறிவிட்டதால் சிவாஜியை ஆக்ராவிலிருந்து உடனடியாக விடுதலைசெய்ய வேண்டாம், அவரை அங்கேயே வைத்திருக்கச் சொல்லி ஜெய்சிங்கிடமிருந்து பதில்வருகிறது. தக்காணத்தில் உடனடியாகக் கோல்கொண்டா, பீஜப்பூர் ராஜ்ஜியங்களுக்கு எதிரான போர் முடிவுக்குவருவது சாத்தியமில்லை என்பதால் சிவாஜியினால் ஒரு பயனும் இல்லை என்பது ஜெய்சிங்கின் எண்ணம். எனவே சிவாஜியைக் குறித்தான நடவடிக்கைகளை சிறிது ஒத்திப்போட முடிவுசெய்கிறார் ஔரங்கஸிப்.
ஔரங்கஸிப்பிடமிருந்து தனது மனுவிற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் ஔரங்கஸிப்பின் முதல் அமைச்சரான ஜஃபார்கானின் உதவியை நாடத் தீர்மானிக்கிறார் சிவாஜி. பாதுஷாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்கிற கோரிக்கையுடன் ராகோ பலால் கோர்டே, ஜஃபார்கானிடம் அனுப்பிவைக்கப்படுகிறார்.
கோர்டேயும் ஜஃபார்கானைச் சந்தித்துக் கோரிக்கையை விளக்குகிறார். ஆனால் ஜஃபார்கானின் மனைவியும் சைஸ்டாகானின் மனைவியும் (சைஸ்டாகான் ஔரங்கஸிப்பின் தாய்மாமன். அவரது மகனான அப்துல் ஃபதேகானை சிவாஜி கொன்றுவிட்டார்) சகோதரிகளாதாலால், ஜஃபார்கானின் மனைவி சிவாஜி பாதுஷாவைச் சந்திக்க உதவக்கூடாது எனத் தன் கணவனிடம் தடைபோடுகிறாள். எனவே ஜஃபார்கான் ஔரங்கஸிப்பிடம், சிவாஜியுடன் நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். சிவாஜி ஆபத்தானவர், அவரை ஒருபோதும் நம்பக்கூடாது என ஜஃபார்கான் சொல்வதனை ஏற்கிறார் ஔரங்கஸிப்.
வேறுவழியின்றி, ஜஃபார்கானைத் தானே நேரில் சென்று சந்திக்கும் சிவாஜியை வரவேற்று உபசரிக்கும் ஜஃபார்கான், பாதுஷாவுடன் சந்திப்புநிகழ உதவுவதாக வெறும் வாய்வார்த்தைகளைச் சொல்லி அனுப்பிவைக்கிறார். பின்னர் சிவாஜி முகலாய அரசின் ஒவ்வொரு முக்கியஸ்தரையும் நேரில் சந்தித்து பாதுஷா தன்னை மீண்டும் தக்காணத்திற்கு அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கைவைக்கிறார். ஆனால் பாதுஷா தன்னைச் சந்திப்பதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார் என்றறியும் சிவாஜி, அதனை விடுத்து வேறு விதமான உபாயங்களை எடுக்க முடிவுசெய்கிறார்.
அதன்படி, தன்னுடன் வந்த ஏராளமான அலுவலகர்கள், பணியாளர்கள் காரணமாக முகலாய அரசிற்கு அனாவசியச் செலவுகள் ஏற்படுவதாகவும், ஆகவே அவர்களை உடனடியாக தக்காணத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என ஒரு மனுவை ஔரங்கஸிப்பிற்கு அனுப்பிவைக்கிறார் சிவாஜி. பாதுஷா விரும்பும்வரைக்கும் அவரது “மரியாதைக்குரிய விருந்தினராக” தான் ஆக்ராவில் இருக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடுகிறார். அதையும்விட தக்காணத்திலிருக்கும் தனது குடும்பத்தாரையும் ஆக்ராவுக்கு அழைத்துவந்து அவர்களை நிரந்தரமாக ஆக்ராவிலேயே குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் கூறும் சிவாஜியின் மனுவைப் படிக்கும் ஔரங்கஸிப் மனம்மகிழ்கிறார். சிவாஜி முழுமையாகத் தன்னிடம் சரணடைந்துவிட்டதாக நம்பும் ஔரங்கஸிப், சிவாஜியின் அலுவலர்களைத் திருப்பி அனுப்பினால் தனக்குச் செலவும் மிச்சமாகும், சிவாஜியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சிவாஜியின் விண்ணப்பத்திற்குச் சம்மதமளிக்கிறார்.
அதன்படி சிவாஜியுடன் வந்த அவரது பெரும்பாலானா அலுவலர்கள், பணியாளர்கள், படைகள் மீண்டும் தக்காணத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.
சிவாஜி உடனடியாக ஆக்ராவிலிருந்து தப்புவதற்கான வேறு உபாயங்களைத் தேட ஆரம்பித்தார். அதன் ஒரு பகுதியாக, தான் முகலாய அரசின் உயர்பதவி வகிக்கும் அலுவலகர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து, அவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அரசவையில் அது தனக்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர்களுடன் உரையாடத் தனக்கு அனுமதி வழங்குமாறு ஔரங்கஸிப்பிடம் கோரிக்கை வைக்கிறார்.
அப்படிச் செய்வதில் தவறொன்றும் இல்லை என்பதால் ஔரங்கஸிப் அதற்கு அனுமதியளிக்கிறார்.
எனவே சிவாஜி முகலாய அரசின் முக்கியஸ்தர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசுகிறார். அவர்கள் மத்தியில் பெரும் நல்லெண்ணத்தை விதைக்கிறார். சந்தித்த ஒவ்வொருவரிடமும் பாதுஷாவுக்கு அடிபணிந்து அவருக்குச் சேவைசெய்ய தான் முடிவு செய்திருப்பதாகச் சொல்லுகிறார். அது உடனடியாக புலந்த்கான்போன்ற உளவாளிகள்மூலம் ஔரங்கஸிப்பிற்குச் தெரிவிக்கப்படுகிறது. சிவாஜி தன் மனதை மாற்றிக கொண்டு சரியான திசையில் அடியெடுத்துவைக்க ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்ப ஆரம்பிக்கிறார்கள்.
சிவாஜி, ஒருசிலர் தவிர தன்னுடன் மீதமிருந்த தனது அனைத்து முக்கியஸ்தர்களையும் ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்கு அனுப்பிவைத்து, வட இந்தியத் தட்பவெப்பம் தனது முக்கியஸ்தர்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்தார். ஔரங்கஸிப் அதற்கு ஆட்சேபனைகள் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் பிரதாப்ராவ் குஜ்ஜார் போன்றவர்கள் சிவாஜியை எதிரி நாட்டில் அனாதரவாக விட்டுச்செல்ல மறுத்து, அவருடனேயே ஆக்ராவில் தங்கியிருக்கிறார்கள். சிவாஜி அவர்களுடன் ரகசிய சந்திப்புகள் நடத்தித் தனது திட்டத்தை அவர்களிடம் விளக்குகிறார். அதனைத் தொடர்ந்து முக்கிஸ்தர்கள் ஆக்ராவைவிட்டுக் கிளம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தக்காணத்திற்குச் செல்வதுபோல போக்குக் காட்டிவிட்டு மாறுவேடங்களில் ஆக்ராவெங்கும் சுற்றித் திரிகிறார்கள். சிவாஜிக்கு ஏதேனும் ஆபத்து நிகழுமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை முன்னேற்பாடுகளுடனும் அவர்கள் இருக்கிறார்கள்.
சிவாஜி ஆக்ராவைச் சேர்ந்தவர்களைத் தன்னுடைய வேலைகளுக்குப் பணியமர்த்திக் கொள்கிறார். அவருடன் மிகமிக நெருக்கமான மராட்டாக்களும், சாம்பாஜியும் மட்டுமே உடனிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு சிவாஜி தனது தலையெழுத்தை ஏற்று ஔரங்கஸிப்பிற்குப் பணி செய்ய மனதைத் தேற்றிக்கொண்டதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
சிவாஜி ஒவ்வொரு வியாழக் கிழமையையும் ஒரு திருவிழாவாக நடத்தி, மதக் கொண்டாட்டங்களைக் கொண்டாட ஆரம்பித்தார். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங்கும், மராட்டாவான பாலாஜி ஆவோஜி சிட்னிஸ் போன்றவர்களும் இந்தக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். கூடை, கூடையாகப் பழங்களும், பலகாரங்களும் ஆக்ராவின் முஸ்லிம் ஹக்கீம்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்களின் கவனிப்பில் தன்னுடைய உடல்நிலை சிறப்பாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கிறார் சிவாஜி.
சில வாரங்கள் கழித்து, தனது கடவுளர்களும், ஆக்ரா மருத்துவர்களும் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காலத்தில் தன்னை வியாதியிலிருந்து குணப்படுத்திவிட்டார்கள் என்றுகூறி, முன்பைவிடவும் இரண்டுமடங்கு பழங்களும், பலகாரங்களும் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இது இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், தான் வாழ்வதெற்கென ஃபிதா-இ-கான் கட்டிக் கொண்டிருக்கும் வீடு கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒண்றிரண்டு நாட்களில் தன்னை அங்கு அனுப்பிவைக்கப் போவதாகவும் உலவும் வதந்திகளைக் கேள்விப்படுகிறார் சிவாஜி.
அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். சிவாஜியுடன் மிகவும் நட்பு பாராட்டும் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங், முகலாய அரசு முக்கிஸ்தர்களுக்கு ஏராளமான லஞ்சம் கொடுத்து சிவாஜிக்கெதிரான ஔரங்கஸிப்பின் மனோபாவத்தை அறிய முயல்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன. எனவே அதனை மறைமுகமாக சிவாஜிக்குத் தெரியப்படுத்துகிறார் ராம்சிங்.
[தொடரும்]