சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம். 

தொடர்ச்சி.. 

ஒரு நாள் கிராமமொன்றின் அரச மரத்தடியில் ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். நந்தனாரும் செல்கிறார். வீட்டு வாசலுக்குச் சென்றவர் சற்று தயங்கியபடியே நிற்கவே… தைரியமா உள்ள வாங்க… கவுண்டன் வீடுதானென்கிறார் அந்த விவசாயி. நந்தனாருக்கு அந்த ஒரு வாக்கியம் பல உண்மைகளைப் புரியவைக்கிறது. துறவிகள் கூட தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிரித்துப் பார்ப்பது உண்டு போலிருக்கிறது. அதோடு பசியால் வாடுபவரைப் பார்த்ததும் மனமிளகும் இந்த விவசாயிக்கு தனது சாதி குறித்த பெருமிதமும் தாழ்த்தப்பட்ட ஜாதி குறித்து தாழ்வான பார்வையும் இருக்கிறது என்ற விஷயங்கள் புரிகின்றன.

கவுண்டன் என்ன பறையன் என்ன… கடவுள் முன்னால எல்லாரும் ஒண்ணுதான் என்கிறார் நந்தனார்.

அதெப்படி ஒண்ணாக முடியும். வெள்ளாடு செம்மறியாட்டோட சேர்றதில்லை… செம்மறியாடு மலை ஆட்டோட சேர்றதில்லை… ஆடு மாடுகளுக்கே வித்தியாசம் இருக்கும்போது மனுஷனுக்குள்ள இருக்காதா என்ன..? கடவுளே ஒண்ணா இல்லை… அப்பறம் தான அவர் படைச்ச உயிர்கள் ஒண்ணா இருக்க என்றபடியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் விவசாயி.

நீங்க சொல்றது தப்பு. வித்தியாசமா இருக்கறதுனாலயே வெறுக்கறது சரியில்லை. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பலம்… ஒவ்வொரு பலவீனம்; பறவைக்கு இறக்கை, மீனுக்கு செதில், சிங்கத்துக்குப் பிடரி, மயிலுக்குத் தோகை… இதெல் லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமானது மட்டுமே. இது உசந்தது அது தாழ்ந்ததுன்னு எதுவும் கிடையாது… பசி, தூக்கம், நோய் நொடி, இனப்பெருக்கம்னு எல்லா உயிர்களின் அடிப்படைகளும் ஒண்ணுதான். ஒரு உடம்புல கை ஒரு வேலை செய்யுது… கால் ஒரு வேலை செய்யுது… வயிறு ஒரு வேலை செய்யுது வாய் ஒரு வேலை செய்யுது… கை உசந்ததா கால் உசந்ததா… வாய் உசந்ததா வயிறு உசந்ததா..? ஒவ்வொண்ணுக் கும் ஒவ்வொரு வேலை… எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு மனுஷன். அதுமாதிரி ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு வேலை செய்யுது… எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.

பலகைபோட்டு பரதேசியை அமரவைத்து இலையில் உணவு பரிமாறியபடியே, அது என்னமோ உண்மைதான். ஆனால், எல்லா உறுப்பையுமே எப்படி ஒண்ணா நடத்தமுடியும். முகத்துக்கு தர்ற மரியாதையை காலுக்குத் தரமுடியுமா. வாய்க்குத் தர்ற மரியாதையை வயித்துக்குத் தரமுடியுமா..? பால் தர்ற பசுவுக்கு தொழுவம்… தேர் இழுக்கற குதிரைக்கு லாயம்… வண்டி இழுக்கற மாட்டுக்கு களத்து மேடு… ஊர் மேயற கழுதைக்கு தெரு… பீ திங்கற பன்னிக்குச் சாக்கடை… மாட்டைக் கும்படுற சாதியும் மாட்டை வெட்டித் திங்கற சாதியும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?

அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது… இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க…

பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்…’ என்கிறார்.

பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. “என்னங்க ஐயா… பசியா படுத்துக் கிடந்தவனைப் பார்த்ததுமே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சாப்பாடு போடணுங்கற நல்ல மனசு உள்ள உங்களுக்குள்ள இப்படி ஒரு வெறுப்பு இருக்கறதை நினைச்சே பார்க்க முடியலை… என்னை மன்னிச்சிருங்க. ஒரு பறையருக்கு உணவு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல சாப்பிட எனக்கு விருப்பமில்லை என்று சொன்னபடியே இலையை மூடிவிட்டு எழுந்திருக்கிறார்.

அந்த இலையை அப்படியே எடுத்துட்டுப் போய் நாய்க்குப் போடுங்க என்று சொல்கிறார் விவசாயி.

பரதேசி புன்முறுவல் பூத்தபடியே அதை எடுத்துச் சென்று தெருவில் போடுகிறார். நேராக ஆற்றுக்குச் சென்று கை கழுவிவிட்டு மரத்தடியில் படுத்துக்கொள்கிறார். இரவின் கொடூர இருள் அக்ரஹாரத்தை மட்டுமல்லாமல் நடுத்தெருவையும் மூழ்கடித்திருப்பதைப் பெருமூச்சுவிட்டபடியே பார்க்கிறார். உயரமான கோபுரத்தில் எரியும் விளக்கொளி இருளை விரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே மெள்ளக் கண்களை மூடுகிறார். நள்ளிரவில் பசியின் வலி தாங்க முடியாமல் எழுந்து சென்று நீர் அருந்திவிட்டுப் படுத்துக்கொள் கிறார். அப்போது தொலைவில் ஒரு ஒளிப் புள்ளி அவரை நோக்கி வருவது தெரிகிறது. பாதி உணவில் எழுந்து போக சொன்ன விவசாயியின் மனைவி அரிகேன் விளக்கை எடுத்தபடி வருவது தெரிந்தது.

பரதேசி தூங்காமல் இருப்பதைப் பார்த்ததும் சாமி என்னை மன்னிச்சிடுங்க… என்று காலில் விழுகிறார்.

உடன் எடுத்து வந்த இலையையும் உணவுப் பாத்திரத்தையும் மேடையில் வைக்கிறார்.

சாப்பிடுங்க சாமி… நீங்க இங்க பட்டினியா இருக்கும்போது அங்க எங்களால சாப்பிட முடியலை…

பசிச்ச வயிறுக்கு சாப்பாடு போடற உங்க கணவரோட நல்ல மனசை பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோங்க… அந்த மனசுல இருக்கற ஜாதி உணர்வை மாத்தப் பாருங்க…

என்ன பண்ண சாமி… அம்மன் வசிக்கற புத்துலதான் பாம்பும் வசிக்குது என்று சொல்லியபடியே பரிமாறுகிறார்.

***

ஊர் ஊராகச் செல்கையில் இன்னொரு நாள் நந்தனாருக்கு உடல் நலமின்றிப் போகிறது. ஊர் நுழைவாயிலில் இருக்கும் கலுங்கில் படுத்துக்கொள்கிறார். அப்போது அந்த வழியாகச் செல்லும் ஒரு பெண் இவருக்கு அருகில் வந்து பார்க்கிறார். உடல் அனலாகக் கொதிக்கிறது. அவரை எழுந்திரிக்கச் சொல்லி கையைப் பிடித்தபடியே தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கஞ்சி வைத்துக் கொடுத்து மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளச் சொல்கிறார். தூங்குவதற்கு முன் அவருடைய தலைமாட்டில் அமர்ந்து ஜெபிக்கிறார்கள். பரதேசி மெல்லிய புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்கிறார். ஜெபம் முடிந்ததும் அவர் நெற்றியில் சிலுவைக் குறியிடுகிறார்கள். இரவு முழுவதும் கண் விழித்து அவரைப் பார்த்துக் கொள்கிறார்கள். மறு நாள் பொழுது விடிகிறது. பரதேசிக்கு உடல் நிலை மெள்ள தேறுகிறது. இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். உடல் நன்கு குணமானதும் ஒரு பாதிரியார் அந்த வீட்டுக்கு வருகிறார். மெள்ள பேச்சுக் கொடுப்பவர் இயேசுவில் ஐக்கியமாகிவிடுங்களேன் என்கிறார்.

பரதேசி புன்முறுவல் பூத்தபடியே, இயேசுவும் தெய்வங்கறதை ஏத்துக்கறேன். ஆனா இயேசுமட்டுமே தெய்வங்கறதைத்தான் ஏத்துக்க முடியலை…

சக மனுஷன் மேல வெறுப்பை உமிழச் சொல்ற உங்க தெய்வத்தைவிட அன்பை போதிக்கற எங்க தெய்வம் உசந்ததுதான..

நம்ம தெய்வம் சக மனுஷனை எங்க வெறுக்கச் சொல்லியிருக்கு… நாம செய்யற தப்புக்கு நம்ம தெய்வத்தைப் பழிக்கலாமா… அப்பறம் கிறிஸ்தவம் சக மனுஷங்க மேல அன்பை எங்க போதிக்குது? பூர்வகுடிகள், பிற மதத்தவர்கள்னு உலகம் பூரா அது கொன்னு குவிச்சவங்களோட எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு. ப்ராட்டஸ்டண்டுன்னும் கத்தோலிக்கர்ன்னு சண்டை போட்டு கொன்னு குவிச்சது தெரியுமா… இவ்வளவு ஏன் நம்ம நாட்டுல கூட உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே… உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க…

தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார்.

இந்துக்கள் செய்யற எல்லாத் தப்புக்கும் இந்து மதம் காரணமில்லை. அதுவும் போக மேரியைக் கும்பிடறதுன்னா மாரியைக் கும்பிடக்கூடாதுன்னு சொல்றது முட்டாள்த்தனமா தெரியலியா… இந்துவா இருந்த போது நீங்க என்னிக்காவது உங்க கருமாரியைத்தான் எல்லாரும் கும்பிடனும்னு என்னிக்காவது யார் கிட்டயாவது சொல்லியிருக்கீங்களா..? சென்னைக்கு எப்படிப் போகணும்னு மதுரைல இருக்கறவங்க கிட்ட கேட்டா வடக்க போகணும்னு சொல்லுவாங்க. கர்நாடகால இருக்கறவங்க கிட்ட கேட்டா தெற்க போகணும்னு சொல்லுவாங்க. சென்னைக்குப் போகணும்னா வடக்க தான் போகணும்னு சொல்லு அப்படின்னு கர்நாடகாகாரனை மதுரைக்காரன் மிரட்டினா அதுமாதிரி முட்டாள்த்தனம் வேற என்ன இருக்கும் சொல்லுங்க… அவங்க அவங்க இருக்கற இடத்துல இருந்து அவங்களுக்கான ஒரு திசை, ஒரு பாதை இருக்கு. எல்லாருக்கும் ஒரே திசைன்னு சொல்ல முடியுமா? மதத்தோட பங்கு மக்கள் மனசுல அன்பை விதைக்கறதுதான். நாந்தான் உசந்தவன்னு சொல்றது இல்லை. நீங்க காட்டின அன்புக்கு இயேசு மேல உங்களுக்கு இருக்கற விசுவாசம்தான் காரணம்னா அந்த இயேசுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனா, என் சிவனை கைவிட்டுட்டு வரணும்னு சொல்ற இயேசுவை எனக்குப் பிடிக்காது. அடுத்தவங்க மேல காட்டற அன்பு ஆத்மார்த்தமானதா இருக்கணும். மதம் மாத்தறதுக்காக அன்பு காட்டறதுங்கறது மதத்தை மட்டுமல்ல அன்பையுமே கொச்சைப்படுத்திடுது. அன்புங்கற மலை உச்சிக்குப் போக அல்லா, இயேசு, சிவன் அப்படின்னு எத்தனையோ பாதைகள். பாதையிலேயே படுத்துக்கொண்டுவிடக்கூடாது. பயணம் என்பது சிகரம் நோக்கி இருக்கவேண்டும் என்கிறார்.

பாதிரியார் மவுனமாகக் கேட்கிறார்.

தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா… அது மாதிரி நம்ம தாய் மதமும் தயாராவே இருக்கு. ஆனா நீங்க உடனே வரணும்னு அவசியமில்லை. விவேகானந்தர் என்ன சொல்றார்ன்னா ஒரு இந்து மேலும் நல்ல இந்துவா ஆகணும். ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவரா ஆகணும் அப்படின்னு சொல்றாரு. அதுக்கு முயற்சி செய்யுங்க. அது முடியாமப் போகும்போது அல்லது தாயோட அருமை புரியும்போது திரும்பி வாங்க… திருந்தி வாங்க… என்று சொல்லி பாதிரியாரின் நெற்றியில் திருநீறு இட்டு ஆசி வழங்கி அந்தக் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்படுகிறார்.

*

தமிழகத்தில் யாத்திரை முடித்த பிறகு இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் காவி உடைக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார். இந்த தேசத்தை காவி இணைக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார். கயாவில் போதி மரத்தினடியில் தியானத்தில் இருக்கும்போது புத்தரின் ஆன்மா இவருக்குள் வந்து இறங்குகிறது.

*

பரதேசி வாழ்க்கை முடிந்த பிறகு மடாலயம் திரும்புகிறார் நந்தனர். அங்கு இளைய மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார். மடாதிபதியானதும் முதல் வேலையாக அந்த மடாலயத்தால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்குப் புறப்படுகிறார். சன்னதித் தெருவின் வாசலில் பல்லக்கு ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இளைய மடாதிபதியை அதில் அமரவைத்து சுமந்து செல்வது வழக்கம். அதன்படியே அவரை அதில் ஏறச் சொல்கிறார்கள். அவரும் ஏறி அமர்ந்துகொள்கிறார்.

பல்லக்கைச் சுமந்து செல்பவர்களில் ஒரு முதியவரும் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகப் பல்லக்கு தூக்கிவந்தவர்கள். மடாதிபதி மீதான பக்தியினால் அவர் அதை விருப்பத்துடன் செய்கிறார். ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. சுமையைத் தூக்கியபடி மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. சற்று கூன் விழுந்து விட்டதால் பல்லக்கு அவர் தூக்கும் பகுதியில் சரிந்தும் இருக்கிறது. கோவில் தர்மகர்த்தா அந்த முதியவரை சுடு சொல்லால் திட்டுகிறார். ‘வேகமா போ… வேகமா போ’ என்கிறார்… அது இளைய மடாதிபதியின் காதில் ‘சர்ப்ப சர்ப்ப’ என்று கேட்கிறது. இளைய மடாதிபதிக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. சட்டென்று பல்லக்கை நிறுத்தச் சொல்கிறார்.

‘என்ன விஷயம்’ என்று கேட்கிறார்.

‘ஒரு பெருசு படுத்துது’ என்று தர்மகர்த்தா சொல்கிறார்.

இளையவர் அவரை எச்சரித்துவிட்டு பல்லக்கில் இருந்து கீழே இறங்குகிறார். அந்த முதியவர் நடுங்கும் உடலுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளைய மடாதிபதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. ‘ஐயா’ என்று அழைக்கிறார். கண் பார்வை மங்கி காது மந்தமாகியிருக்கும் பெரியவர் தடுமாறியபடியே தாங்குகோலைப் பிடித்தபடி நின்றுகொண்டிருக்கிறார். இளைய மடாதிபதி மெள்ள அவரைத் தொடுகிறார். திரும்பிப் பார்க்கும் பெரியவர் பதறிப்போய் தாங்குகோலை நழுவ விடுகிறார். அது இளையவர் மேல் விழுகிறது. சுற்றியிருப்பவர்கள் திட்ட ஆரம்பிக்கவே பெரியவர் பயந்து நடுங்கியபடியே இளையவரின் காலில் விழப்போகிறார். சட்டென்று அவரைத் தூக்கிப் பிடித்து இளையவர் அவரைக் கைத் தாங்கலாக அரவணைத்துக் கொள்கிறார்.

தர்மகர்த்தாவும் பிற நிர்வாகிகளும் அந்த முதியவரை ஓரமாக அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். இளைய மடாதிபதி அவர்களை விலகி நிற்கச் சொல்லிவிட்டு பெரியவரை பல்லக்கின் நடுப்பகுதிக்கு அழைத்துவருகிறார். பல்லக்கினுள் உள்ளே ஏறி அமரச் சொல்கிறார். பெரியவரோ பதறியபடியே மறுக்கிறார்.

‘இத்தனை காலம் எங்களைத் தூக்கியிருக்கீங்களே.. கொஞ்சம் நேரம் நான் தூக்கறேன்’ என்கிறார் இளையவர்.

பெரியவர் முடியவே முடியாதென்று மறுக்கிறார்.

இளையவர் அவரைக் கட்டாயப்படுத்தி பல்லக்கில் ஏற்றிவிடுகிறார். முன்னால் சென்று பல்லக்கின் தாங்குகோலைத் தூக்குகிறார். தர்மகர்த்தாவும் பிற பணியாளர்களும் பல்லக்கைத் தாங்களே தூக்குவதாகச் சொல்கிறார்கள். இளையவர் அவர்களை தள்ளி நிற்கச் சொல்கிறார். மடாலயத்தின் பிற துறவிகளைப் பார்க்கிறார். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் அவர்கள் மெள்ள நடந்துவந்து பல்லக்கின் ஒவ்வொரு கால்களையும் தூக்கிக்கொள்கிறார்கள். தர்மகர்த்தாவும் பணியாளர்களும் வேண்டாம் என்று வழியை மறிக்கவே, நாங்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் இது என்று சொல்லி அவர்களை ஒதுங்கி நிற்கச் சொல்கிறார்கள்.

பல்லக்கு புறப்படுகிறது. உள்ளே இருக்கும் முதியவர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று ஜெபித்தபடியே வருகிறார். வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் புகழை இளையவர் பாடுகிறார். அனைவரும் அதைப் பாடியபடியே பின்னால் வருகிறார்கள். பல்லக்கு கோவிலை அடைகிறது. இதற்குள் சன்னிதானத்தில் இருக்கும் மூத்த மடாதிபதிக்கு இங்கு நடந்தவை சென்று சேர்ந்துவிட்டிருக்கிறது. அவர் கோபத்துடன் கோவில் வாசலுக்கு விரைகிறார். பல்லக்கு கோவிலுக்குள் நுழைகையில் நிறுத்து என்று உத்தரவிடுகிறார்.

இளைய மடாதிபதி பல்லக்கைச் சுமந்தபடியே அவருக்கு குரு வணக்கம் தெரிவிக்கிறார்.

என்ன செய்கிறீர் இளைய தம்புரானே… யாரை யார் தூக்குவது..?

எங்கும் உறைபவனே என்னிலும் இப்பெரியாரிலும் உறைகிறானெனில் யாரால் யார் தூக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு இடமேது மூத்தவரே…

மூத்த மடாதிபதி பதில் சொல்லவியலாமல் வழிவிட்டு நிற்கிறார். பல்லக்கு கொடிமரம் அருகில் இறக்கப்படுகிறது. பெரியவர் வேக வேகமாக கீழே இறங்குகிறார். இளையவர் அவரைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்கிறார். அன்றைய தீப ஆராதனையில் கற்பூரவில்லைகள் சூரியன் போல் பிரகாசிக்கின்றன. பின்புற ஒளிவட்ட அகல் விளக்கு மூன்று முறை பிரகாசமாக எரிந்து ஒளிர்கிறது. பக்தர் கூட்டம் அதைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.

*

இளைய மடாதிபதி மெள்ள மெள்ள ஒவ்வொரு சீர்திருத்தமாக முன்னெடுக்கிறார். மடாலயத்தின் கீழ் வரும் கோவில்களில் பாரம்பரிய ஓவியங்கள், சிலைகள் எல்லாம் சுண்ணம் பூசப்பட்டும், மணல் வீச்சு முறையிலும் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு கோவிலில் நடக்கும் மணல் வீச்சு சுத்திகரிப்புப் பணிகளைப் பார்க்கும் இளையவர் பதறி அடித்து உடனே நிறுத்தச் சொல்கிறார். எண்ணெய்ப் பிசுக்குகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அந்தப் பணியினால் சிலைகள் மூளியாகிப் போவதைப் பார்த்து அதிர்கிறார். உடனே அனைத்து கோவில்களிலும் ஆரம்பிக்கப் பட்டிருந்த புனரமைப்புப் பணிகளை நிறுத்துகிறார். அந்த காண்டிராக்ட் எடுத்து கணிசமான பணம் சேர்க்க விரும்பிய அரசியல்வாதி கோபம் கொள்கிறார். இளைய மடாதிபதி எதிர்கொள்ளவிருக்கும் விஷ அம்பு மழையின் முதல் அம்பு அவன். இளையவர் சீயக்காய் மூலம் கைகளால் அந்தச் சிலைகளில் இருந்து மெதுவாக என்ணெய் பிசுக்கை நீக்க தானே முன்னின்று உழவாரப் பணிகளை ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் பக்தர் கூட்டம் அலை அலையாக வந்து அந்தப் பணியில் ஈடுபடுகிறது.

*

மடாலயத்தின் சார்பில் பட்டிமன்றங்கள் நடப்பது வழக்கம். பொதுவாக எல்லா பட்டிமன்றங்களிலும் சிவபெருமானின் பெருமையையே பேசுவார்கள். அதிலும் இதுபோன்ற மடாதிபதிகள் சிவனுடைய பெருமைகளைப் பேசும் பக்கத்தில் தான் நின்று வாதாடுவார்கள். இளைய மடாதிபதியோ அதில் மாறுபட்டுச் செயல்படுகிறார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொன்னது சரியே. வாதப் பிரதிவாதத்தில் நெற்றிக்கண்ணுக்கு என்ன வேலை. தன் தரப்பை நியாயப்படுத்த முடியாமல் சிவபெருமான் வன்முறையைக் கைக்கொண்டது மிகப் பெரிய தவறு என்று துணிந்து வாதாடுகிறார். பார்வையாளர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைகிறார்கள். காவி உடை, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கழுத்தில் உத்திராட்சமாலை எனச் சிவப்பழ மாக இருக்கும் இளைய மடாதிபதி சிவனையே எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து அந்த நக்கீரரே உயிர் பற்று வந்துவிட்டாரோ என்று கலங்கினர். ஆனால், அதை மட்டுமே பேசி நிறுத்தியிருந்தா ரென்றால், வறட்டு நாத்திகமாகிப் போயிருக்கும். எம்பெருமான் ஒருபோதும் அப்படிச் செய்திருக்கமாட்டார். அந்தக் கதையை எழுதியவர்தான், சாதாரண மனிதர் ஒருவர் சிவ பெருமானையே எதிர்த்துப் பேசுவதா என்று சினந்து பக்தி மிகுதியால் நெற்றிக் கண்ணைத் திறக்கவைத்துவிட்டார் என்று அந்த வாதத்தை நிறைவு செய்கிறார்.

*

சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களைப் படிக்கக்கூடாதென்று இருக்கும் நடைமுறையை மாற்றுகிறார். 364 நாட்களும் படிக்கும் பழக்கம் கொண்ட பிராமணர்கள் சரஸ்வதி பூஜையன்று தமது புத்தகங்களை இறைவனாக வைத்து வழிபடுவது சரியே… ஏட்டுக் கல்வியில் இருந்து சற்று விலகியிருந்த பிற சாதியினர் சரஸ்வதி பூஜையன்று புனித நூல்களைப் படிப்பதை தமது விழாவாக முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லி மடாலயத்தில் சரஸ்வதி பூஜையன்று தேவாரம் திருவாசகம் படிக்க வைக்கிறார்.

*

பொதுவாக மடாலயங்களில் கோ பூஜை செய்யப்படுவது வழக்கம். பசு புனிதமானதுதான். அதே நேரம் காளையும் எருமையும் கூடப் புனிதமானவையே… காளை உழவுக்குப் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது. அதோடு அது சிவனின் வாகனமும் கூட. எருமைப் பால் பசுவின் பாலைவிட மனிதர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. எனவே அவையும் உயர்வானவையே என்று சொல்லி கோ பூஜையை அனைத்து ஆவினங்களுக்கும் விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

*

ஆன்மிக குருக்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாத பூஜை செய்வது வழக்கம். இளைய மடாதிபதி எல்லா தொழில்களும் உயர்வானவையே என்பதை உணர்த்தும் வகையில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள், மலைக் குறவர்கள், செருப்புத் தைப்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், பிணம் எரிப்பவர்கள், மலம் அள்ளுபவர்கள் என கடைநிலைப் பணிகள் செய்யும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் காலையில் மடத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து பாத பூஜை செய்து கௌரவிக்கிறார். அதுபோல் பிறழ் பால் மனிதர்களையும் அழைத்து மரியாதை செய்கிறார். இந்தக் குறியீட்டு மரியாதையோடு நிறுத்தாமல் அந்தத் தொழில்களை விஞ்ஞானரீதியில் மேம்படுத்த ஆய்வு மையம் ஒன்றை அமைக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்து தலைமை விஞ்ஞானியை அழைத்துவந்து அந்த மையத்தை ஆரம்பித்து வைக்கும் இளைய மடாதிபதி புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளோடு இருக்கும் கிரகத்தை மேம்படுத்தும் பணிகளும் நடக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறார்.

*

மடங்களில் நடக்கும் நிர்வாக முறைகேடுகளைத் தட்டிக் கேட்கிறார். ஒரு முறை மடத்துக்கு சொந்தமான சமையல் பாத்திரங்கள் மிகவும் பழதாகிவிட்டதால் ஏலம் போட முடிவெடுக்கப்படுகிறது. மகா சன்னிதானத்திடம் நிர்வாக தலைவர் அனுமதி கேட்கிறார். சன்னிதானமும் சரி என்று சொல்லிவிடுகிறார். ஆனால், பழையது என்று சொல்லி ஒரு சில மாதங்களுக்கு முன்பாக வாங்கிய புதிய பாத்திரங்களை நிர்வாகி ஏலம் விட்டு தன் ஆட்களை வைத்துக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார் என்பது இளைய மடாதிபதிக்குத் தெரியவருகிறது. பொதுவாக இப்படியான ஏலம் நடக்கும் இடத்துக்கு மடாதிபதிகள் வருவது கிடையாது. ஆனால், இளையவரோ முறைகேடுகள் நடந்தால் அதைத் தடுக்க சம்பிரதாயத்தை மீற வேண்டியிருந்தால் தவறில்லை என்று ஏலம் போடப்படும் இடத்துக்குச் செல்கிறார். புதிய பாத்திரங்கள் ஏலத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஏலத்தைத் தடுக்கிறார்.

இதனால், நிர்வாகிக்கு இளையவர் மேல் கோபம் வருகிறது.

அதுபோல் மடத்துக்கு சொந்தமான நிலங்களை அறங் காவலர்கள் தம்முடைய பினாமிகளுக்குக் கொடுத்து அந்த நிலத்தின் வருவாயை அவர்களே அனுபவிப்பது தெரியவருகிறது. உடனடியாக நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு ஏழை விவசாயிகளுக்கு குறைந்த குத்தகையில் தானே முன்னின்று வழங்குகிறார் இளைய தம்புரான்.

இதனால் ஆத்திரமடையும் மடத்து நிர்வாகிகள் இளையவரை அங்கிருந்து துரத்தத் திட்டமிடுகிறார்கள். பொதுவாக மகா சன்னிதானங்கள் ஏதேனும் கோவில் அல்லது விழாக்களுக்கு வரும்போது கட்டளைத் தம்புரான்கள்தான் அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து கால் அலம்பி பாத பூஜை செய்ய வேண்டும். ஆனால், இளையவரை ஓரங்கட்டிவிட்டு மடாலய நிர்வாகிகள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு முறை வைதீஸ்வரன் கோவிலுக்கு மகா சான்னிதானம் வந்த போது இளையவர் பாத பூஜைசெய்ய முன்னால் வருகிறார். அத்தனை மக்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தி விட்டு அறங்காவலர் நிர்வாகி தானே அந்த பாத பூஜையைச் செய்கிறார்.

குரு சிஷ்ய உறவில் ஊதியம் வாங்கும் ஊழியர் இடையில் புகுவது தவறு என்று இளையவர் மகா சன்னிதானத்திடம் சென்று முறையிடுகிறார். ஆனால், சன்னிதானம் இளையவரைக் கடிந்து கொள்கிறார். விஷயம் என்னவென்றால், மகா சன்னிதானத்தின் காலை நான் கழுவுவதா… நானும் ஒரு மடாதிபதிதானே என்று இளையவர் திமிராகப் பேசியதாக அறங்காவலர்கள் கோள்மூட்டி விட்டிருக்கிறார்கள்.

*

ஒருமுறை மகா சன்னிதானம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வேறொரு ஊருக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்பிய இளையவருக்கு அப்போதுதான் தகவல் தெரியவருகிறது. என்ன செய்ய என்றே தெரியவில்லை. நள்ளிரவில் தொலைவில் இருக்கும் மருத்துவ மனைக்குச் செல்ல வேறு வாகனங்களும் கிடைக்காது. மடத்து கடை நிலைப் பணியாளரிடம் இருக்கும் சைக்கிளை வாங்கிக்கொண்டு பத்து மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைகிறார். அன்று பார்த்து நல்ல மழை வேறு. இருட்டும் மழையும் சேர்ந்து சதி செய்தபோதும் இளையவர் கிட்டத்தட்ட உயிரைப் பணையம் வைத்து விரைந்து நள்ளிரவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்.

மகா சன்னிதானம் நல்ல தூக்கத்தில் இருக்கிறார். இளையவர் வந்தது அவருக்குத் தெரியாது. சிறிது நேரம் அருகில் இருந்து பார்க்கிறவர், மருத்துவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்துவிட்டு மறு நாள் மடத்து பூஜைகள் முடங்கக் கூடாதென்று இரவே மடம் திரும்புகிறார்.

ஆனால், அவர் வந்து போனதை மடத்து நிர்வாகிகள் பெரிய சன்னிதானத்திடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். வேறொரு ஊரில் இருந்தவருக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே திரும்பும்படி இரண்டு நாட்களுக்கு முன்னமே செய்தி அனுப்பிவிட்டதாகவும் இளையவர் திரும்பிவராமல் இருந்ததோடு ஊர் திரும்பிய பிறகும் மருத்துவமனைக்கு வந்து பார்க்காமல் மடத்திலேயே இருப்பதாகவும் கோள் மூட்டுகிறார்கள். உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையவரிடம் சொல்லவும் இல்லை.

சிகிச்சை முடிந்து மடம் திரும்பும் மகா சன்னிதானம் இளையவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இப்படியான மனஸ்தாபங்கள் போததென்று ஒருமுறை இளையவர் மடத்தைத் தானே கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் மகா சன்னிதானத்தைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் மடத்து நிர்வாகிகள் அவதூறு பரப்புகிறார்கள். இப்படியான நிலையில் இனியும் இங்கு தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று புரிந்துகொண்ட இளையவர் நேராக மகா சன்னிதானத்திடம் சென்று நடந்தவற்றை முறையிடுகிறார். மகா சன்னிதானத்தின் காலில் விழுந்து விழுந்த நிலையிலேயே தன் தரப்பு நியாயங்களை சொல்லிப்புரியவைக் கிறார்.

(தொடரும்)

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம். 

One Reply to “சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2”

  1. Sambo Magha Deva

    Swami Ambethkhar, Bhaghavan Nandanar, Ulaga nadapu, kula equivality, Western byproduct marketing unknown Jesus, dignity of labour, Shankara Siva Shankara. Starting Ok subsequent thoughts Ok – needs still better alignment . Wait and read rest.
    ஊர் மேயற கழுதைக்கு தெரு… பீ திங்கற பன்னிக்குச் சாக்கடை – uncontrollable laughter
    – DMK, DK stock

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *