இருண்டு கிடந்த தன் வீட்டிலிருந்து நந்தன் வெளியேறினான். கீழத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே இருளில் மூழ்கியிருந்தன. தெரு முனையில் ஒரு விளக்கு இருந்தது. ஆனால், அதன் காலடியைச் சூழ்ந்திருந்த இருளைக்கூட விரட்டமுடியாமல் பரிதாபமாகத் தோற்றுக்கொண்டிருந்தது.
நந்தன் வானை நிமிர்ந்து பார்த்தான். உலகம் முழுவதற்குமான நிலவு சேரியையும் ஒளியூட்டிக்கொண்டிருந்தது. ஆனால், நடுத்தெருவையும் மேலத் தெருவையும் போலவே கட்டப்பட்ட கீழத் தெரு வீடுகளின் நான்கு சுவர்களுக்கும் தாழிட்ட கதவுகளுக்கும் மூடிய ஜன்னல்களுக்கும் நடுவிலும் இருளே கவிழ்ந்திருந்தது. நந்தன் செருப்பை அணிந்தால் சத்தம் கேட்டுவிடும் என்று வெற்றுக்காலுடன் தெருவில் இறங்கினான். விடிந்தால் திருமணம். ஊரும் உறவும் மண்டபத்துக்குப் போய்விட்டன. நந்தன் முக்கியமான வேலை என்று சொல்லி வீடு திரும்பியிருந்தான். அந்த முக்கிய வேலை என்ன என்பது நாளை அவர்களுக்குத் தெரியவரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.
மேலைக் காற்று சுழன்றடித்துக் கொண்டுவந்த மேகங்களால் நிலவு மறைக்கப்படவே தெருவிலும் இருள் சூழத் தொடங்க நந்தன் தடுமாறியபடியே நடந்தான். இரவுகளில் முழித்திருப்பவனை எல்லா தெரு நாய்களும் ஒரே குரலில் எதிர்த்தன. ஊர் முழுவதையும் இணைத்தபடி ஓடிய ஒவ்வொரு வீட்டுச் சாக்கடையும் ஊரெல்லையில் ஒன்று கூடி நதிபோல் ஓடிக் கொண்டிருந்தது. இருளிலும் உணரமுடியும் வண்ணம் அதன் வாடை வெளியெங்கும் பரவியிருந்தது. இருளுக்குப் பழகிய கண்களும் நாற்றத்துக்குப் பழகிய நாசிகளும் கொண்டவர்கள் தத்தமது வளைகளுக்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒளிக்கு ஏங்கிய கண்களும் தூய காற்றுக்கு ஏங்கிய நாசியும் கொண்ட நந்தன் ஊரைவிட உயரமாக, ஊரிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மலைக் கோவிலில் இருந்து தெரிந்த மெல்லிய பொன்னிற ஒளிப் புள்ளியை பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்.
மலை அடிவாரத்தை அடைந்தவன் நின்றெரியும் காய்ந்த குச்சிகளைக் கட்டி பந்தம் உருவாக்கி அடிவார முகப்பு வளைவில் எரிந்துகொண்டிருந்த அணையா விளக்கில் பற்றவைத்துக் கொண்டு மலையேறத் தொடங்கினான். பந்தத்தை இடமும் வலமுமாக அசைத்ததில் கிடைத்த ஒளியில் ஒவ்வொரு அடி நிலமாக முளைக்க அதில் கால்வைத்து நடந்தான் நந்தன். குறுகலான மலைப்பாதை. ஒருபக்கம் வானுயர்ந்த மலை… மறுபக்கம் அதல பாதாளம். மலையைச் சுற்றி வளைத்திருக்கும் பாம்பு போல் சாலை சுற்றி வளைந்து சென்றது. பாதி ஏறியிருக்கும் நிலையிலேயே சூரியன் உதிக்கத் தொடங்கியது. மலைமுகட்டில் முதல் கதிரொளி பட்டதைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் நந்தனை மெய்மறக்கச் செய்தது. ஊர் அப்போதும் இருளில் மூழ்கியே இருந்தது. சூரிய ஒளி வந்தபின் பந்தத்தை என்ன செய்ய? இதுவரை வழி காட்டியதற்கு நன்றியாக உடன் எடுத்துச் செல்லவா… வேலை முடிந்ததென விட்டெறியவா… குழம்பிய நந்தன் அருகில் ஓடிய மலை நீரோடையில் பந்தத்தை நனைத்து மலைக் காட்டில் வீசி எறிகிறான். தோளில் புரளும் கேசம் அலைபாய மலை உச்சியை எட்டியவன் மலைக்கோவிலின் திறந்தே இருந்த வாயிலினுள் வலது காலை எடுத்துவைத்து நுழைகிறான். கண்ணில் தென்பட்ட முதல் துறவியின் காலில் விழுந்து வணங்கினான். பிரம்மத்தை வணங்கும் பிரம்மம் என சலனமின்றி இருந்த துறவி எழுந்தவனை தலை தொட்டு ஆசீர்வதித்தார் அவனுக்குத் தேவைப்படக்கூடுமென.
இளவயதினன் இப்படி நெடுஞ்சாண்கிடையாக திறந்த வெளியில் விழுந்து வணங்குவது அரிதென்பதால் சற்று யோசித்த துறவி நந்தன் பேசுவதைக் கேட்கப் புலன் குவித்து நின்றார்.
நான் துறவறம் மேற்கொள்ள விரும்புகிறேன்… நந்தன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
லௌகீகத் தேவை இந்த வயதில் காலில் விழவைக்காது என்பது தெரிந்த துறவி, இள வயது உத்வேகம் இப்படி ஒரு தீர்மானத்தை எடுக்கவைக்கும் என்பதை நினைவுகூர்ந்தார்.
மெள்ளப் புன்முறுவல் பூத்தபடியே, இந்த ‘நான்’ யார் என்பதைத் தெரிந்துகொள்ளலாமா?
சாம்பசிவன் – சிவகாமி தம்பதியின் மகன் நந்தன்.
அப்பறம்…
இயற்பியல் இளங்கலை முடித்தவன்…
அப்பறம்…
வங்கிப் பணியாளன்.
அப்பறம்
பறையன்.
அப்பறம்…
இன்று நடக்கவிருந்த திருமணத்தை விட்டுவிட்டு வந்தவன்…
துறவி அதைக்கேட்டதும் சற்று அதிர்கிறார்.
பிறகு கண்களை மூடி தியானித்துவிட்டு நிதானமாகச் சொல்கிறார்: இவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு தனியாக வா… இங்கு ஒருவருக்கு மட்டும்தான் இடம் உண்டு. என்று ஆகாயத்தைக் காட்டிச் சொல்லியபடியே மடாலயத்துக்குள் செல்கிறார் துறவி.
நந்தன் அவரையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நிற்கிறான். பிறகு துறவி காட்டிய வானை நிமிர்ந்து பார்க்கிறான். கதிரவனின் சுடரொளி கண்ணைக் கூச வைக்கிறது. கைகளைக் குவித்து சூரியனைப் பார்க்கிறான். பிறகு துறவியின் அறைக்குச் செல்கிறான். அறைக்குள் வரும் வெளிச்சம் மட்டுப்படுவதைத் திரும்பிப் பார்க்காமலேயே உணரும் துறவி, ‘வந்திருப்பது யார்’ என்கிறார்…
‘கேட்பது யார்’ என்கிறான் நந்தன்.
துறவி புன்முறுவல் பூத்தபடியே ‘உள்ளே வா’ என்கிறார்.
இடதுகாலை எடுத்துவைத்து உள்ளே நுழைகிறான் நந்தன்.
***
நந்தன் இந்த மடாலயத்தில் சேர வந்திருப்பது தெரிந்ததும் அவனுடைய அம்மா, அப்பா, தம்பி, முறைப்பெண் அனைவரும் அழுத கண்களுடன் திரும்ப அழைத்துச் செல்ல வருகிறார்கள். துறவியின் மூடிய அறை முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.
சாமி… எம் புள்ளையைத் திருப்பிக் கொடுத்துடுங்க…
உள்ளிருந்து குரல் மட்டும் கேட்கிறது: உங்க புள்ளை இங்க இல்லையே அம்மா…
இல்லை இங்கதான் இருக்கான்.
அவன் உங்க புள்ளை இல்லையே அம்மா.
நாங்க பெக்காம வானத்துல இருந்தா வந்து குதிச்சான்.
அவன் உங்க பிள்ளையா பிறந்திருக்கலாம். ஆனா, இப்ப அவன் உங்க பிள்ளை இல்லியே அம்மா.
பொம்பளை வேண்டாம்னு துறக்கலாம். பொன் வேண்டாம்னு துறக்கலாம். பெத்தவங்கலை எப்படித் துறக்க முடியும் சாமி?
துறந்துட்டானேம்மா…
அவனை வந்து சொல்லச் சொல்லுங்க.
சிறிது நேரம் மவுனம் நிலவுகிறது.
அவனைப் பாக்காம நாங்க இங்க இருந்து போகமாட்டோம். துறவியின் அறை முன்பாக அமர்கிறார்கள்.
மேலும் சிறிது நேரம் கழிகிறது.
அறைக்குள் சிறு சலனம் கேட்கிறது. நந்தனின் குடும்பத்தினர் பதறியபடியே எழுகிறார்கள். மூடிக் கிடந்த கதவு மெள்ளத் திறக்கிறது. மழிக்கப்பட்ட தலையுடன் வெண்ணிற உடையில் நந்தன் வெளிப்படுகிறான்.
நந்தனின் குடும்பத்தினர் ஒருகணம் அதிர்கிறார்கள். மறுகணம் கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. அவர்களையறியாமலேயே கைகூப்பி வணங்குகின்றனர். நந்தனார் பெருமூச்சுவிடபடியே கண்களை மூடிக்கொள்கிறார். கைகளைத் தூக்கி ஆசி வழங்கிவிட்டு உள்ளே செல்கிறார். கதவு மெள்ள மூடிக் கொள்கிறது.
***
கோவில் வழிபாடுகளை ஒருங்கிணைத்தல், கோசாலையைப் பராமரித்தல், கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளைப் பாதுகாத்தல், மடப்பள்ளியின் வரவு செலவைக் கவனித்தல் என நந்தனுக்கு பயிற்சி காலப் பணிகள் தரப்படுகின்றன. லௌகீக வாழ்க்கையில் இருந்து விலகி உன்னதமான துறவு வாழ்க்கையை வாழத் தீர்மானித்த நந்தனுக்கு அதையே செய்ய வேண்டிவருவது குறித்து அதிருப்தி ஏற்படுகிறது.
ஸ்வாமி… மாட்டைக் குளிப்பாட்டவும் வரவு செலவைக் கவனிக்கவும் இங்கு வரவில்லை. எதிலிருந்து தப்பிக்க நினைத்தேனோ அதை நோக்கியே ஓடுவதுபோல் இருக்கிறது.
ஒருவர் தன் இலக்கில் எவ்வளவு உறுதியும் அர்ப்பண உணர்வும் கொண்டிருக்கிறார் என்பதைச் சோதிப்பதற்கான எளிய வழி இது. காதல் தோல்வியினாலோ பெற்றோர் கடிந்துகொண்டதினாலோ ஒரு வேகத்தில் துறவை நோக்கி ஓடிவருபவர்கள் ஏராளம். அவர்களை வடிகட்ட இந்த வழிமுறை மிகவும் அவசியம். சுமார் ஒரு வருடத்துக்காவது இந்தப் பணிகளை ஒருவர் செய்தாகவேண்டும். அதன் பிறகும் துறவியாகவேண்டும் என்று இதே துடிப்புடன் இருந்தால் அடுத்தகட்ட பரீட்சை வைக்கப்படும். நீ இப்போது அடுத்தகட்டப் பரீட்சைக்குத் தயார்.
மீண்டும் பரீட்சையா…
ஆமாம்… பரதேசியாக சில காலம் நீ அலைந்து திரிந்து உலகியல் அனுபவம் பெற வேண்டும்.
ஆக துறவைத் தவிர எல்லா வேலைகளையும் செய்யச் சொல்வீர்கள் அல்லவா.?
வில்வ மரத்தினடியில் நிற்கும் துறவி மடாலயத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார். நந்தன் மடாயலத்துக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு வருடமோ இரண்டு வருடமோ எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால், மடாலயத்தின் கிளைகள் உள்ள ஊர்களுக்கே சென்று வா. மடாலயத்தின் கிளைகளிலேயே தங்கிக்கொள். அதில் சில அனுகூலங்கள் உண்டு. சில அவசியங்கள் உண்டு.
இந்தப் பரதேசிப் பயணத்தின் நோக்கம் என்ன ஸ்வாமிஜி.
உலகியலைப் புரிந்துகொண்டு துறவியல் நோக்கி நகர்வதுதான்.
அப்படியானால் ஒரு மடாலயக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவி என்ன பயன். புழுதித்தரையில் கால்கள் பட ஊரெங்கும் உலகமெங்கும் அலைந்து திரிந்தால்தானே உலகோடு பழக முடியும். உலகியலைப் புரிந்துகொள்ள முடியும்.
எல்லா ஸ்தாபகர்களும் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் பேரில் ஓர் அமைப்பு உருவானதும் அதற்கான விதிமுறைகள், ஒழுங்குகள், கண்காணிப்புகள் வந்துவிடும். அமைப்புத் துறவிகள் அதையே பின்பற்றியாகவேண்டும்.
மன்னிக்க வேண்டும் ஸ்வாமிஜி. நான் கிளைகளில் சரியாகச் சொல்வதென்றால் கூடுகளில் முடங்கும் பறவை அல்ல. வானில் அலையச் சிறகுகள் எனக்கு உண்டு.
வீசும் காற்றில் வில்வ இலை ஒன்று நந்தனாரின் தலையில் விழுகிறது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்து வான் பார்க்கிறார். மடாலய வில்வ மரத்தின் கிளைகளும் இலைகளும் பொன்னிறக் கிரணங்களால் ஒளி பெறத் தொடங்கிய பெருவானத்தை துண்டு துண்டாகக் காட்டுகின்றன. நந்தனார் தன் பார்வையைச் சற்று நகர்த்துகிறார். முழு வானமும் தக தகக்கும் சூரியனும் கண்ணில் தெரிகின்றன. ஆசியாக விழுந்த வில்வ இலையைக் கைகளுக்குள் பொதிந்து நெஞ்சில் இருத்தி வணங்கி வெண்ணுடை காற்றில் படபடக்க தூரத்துத் தொடுவானில் உதிக்கத் தொடங்கிய சூரியனை நோக்கி நடக்கிறார்.
***
நீர் கண்ட இடம் குளித்து நிழல் கண்ட இடம் படுத்து கால் போன போக்கில் நடக்கிறார். ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று யாசகம் கேட்கிறார். தருவதை உண்கிறார்.
மடாலயத் துறவி சமைத்த உணவை யாசகமாக வாங்கிக் கொள்ளக்கூடாது என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஏன் ஸ்வாமிஜி…
முதல் காரணம் இயற்கைக் கிடைக்கும் பழங்கள், காய்களை தைரியமாகச் சாப்பிடலாம். மனிதர் சமைக்கும் உணவென்றால் பயன்படுத்தப்படும் நீர் மாசுபடாததாக இருக்கவேண்டும். தருபவர்களின் கை, அகப்பைகள் சுத்தமாக இருக்கவேண்டும். நோய் தொற்றிவிடக்கூடாதல்லவா..? சுவைக்காக அதில் சேர்க்கப்படும் காரம், மசாலா போன்ற பொருட்கள் நாம் தவிக்கவேண்டியவை. அதைவிட சமைக்கும் உணவின் சுவை பிடித்துப்போய்விட்டதென்றால் நாளை உன் கால்கள் அந்த வீட்டையே சுற்றிவரத் தொடங்கிவிடும்.
நந்தனார் ஒரு வீட்டில் யாசகம் கேட்கும்போது வீட்டுக்குள் ஒரு உரையாடல் கேட்கிறது. அது சமைக்காத உணவை யாசகம் பெறுவதற்கு வேறொரு காரணத்தைச் சொல்கிறது. வீட்டில் இருக்கும் குழந்தை தன் ஆச்சியிடம், ‘அரிசியை ஏன் கொடுக்கிறாய்… வேறு ஆட்களுக்கு சமைத்த உணவைத்தானே தருவாய்’ என்று கேட்கிறது.
‘அவர்கள் பிச்சைக்காரர்கள்… இவர் துறவி’ என்கிறாள் ஆச்சி.
‘ரெண்டு பேருமே சாப்பாடு வேணும்னுதான கேட்கறாங்க ஆயா. அவங்களுக்கு சமைச்சதைக் கொடுக்கற. இவங்களுக்கு சமைக்காம கொடுக்கறியே… பாவம் இல்லையா… எங்க போய் சமைச்சுப்பாங்க?’
‘சத்திரங்கள்ல சமைச்சுப்பாங்க. இல்லைன்னா மூணு கல்லை நட்டு வெச்சு உடைஞ்ச பானைத் துண்டுல கூட சமைச்சுப்பாங்க.’
‘இவங்களுக்கும் சமைச்சதையே கொடுக்கலாமே. எதுக்காக இவங்களைக் கஷ்டப்படுத்தற..? எந்தவகையில இவங்க மத்தவங்களைவிட தாழ்ந்தவங்க.’
இவங்க மத்தவங்களைவிட உசந்தவங்கங்றதுனாலதான் சமைக்காத உணவைத் தர்றோம்.
என்ன சொல்லற ஆயா… இவங்களை உயர்வா நினைச்சா இவங்களுக்குத்தான வேலையைக் குறைக்கற மாதிரி சமைச்சதைக் கொடுக்கணும். தலைகீழா இருக்கே.
அப்படி இல்லைம்மா. இவங்க சுத்த பத்தமா இருப்பாங்க. இவங்களுக்கு நாம கொடுக்கற உணவும் சுத்த பத்தமா இருக்கணும். யார் சுத்தமா இருக்காங்க… யாரு தீட்டா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறது கஷ்டம்ங்கறதுனால துறவிங்க சுத்தபத்தமா ஆக்கிக்க முடிஞ்ச உணவாதான் வாங்கிப்பாங்க. காயையோ பழத்தையோ அரிசியையோ அவங்களே தண்ணியில அலசும்போது அது சுத்தமாகிடும். சமைச்ச உணவை அப்படிக் கழுவமுடியாது இல்லியா. அதனால துறவிங்க எப்பவுமே தாங்களே கழுவிக்கற மாதிரியான உணவை மட்டுமே வாங்கிப்பாங்க.
உரையாடலைக் கேட்கும் நந்தனார், பரவாயில்லையம்மா… தீட்டு பத்து எல்லாம் நான் பார்க்கமாட்டேன். அன்பாகக் கொடுக்கும் எதையும் வாங்கிக் கொள்வேன் என்கிறார்.
இல்லீங்க சாமி… மருமக வீட்டுக்கு விலக்கு. குழந்தை எதுவோ தெரியாம பேசுது.
பரவாயில்லையம்மா… சமைச்ச உணவை உங்க மருமக கையால கொடுக்கச் சொல்லுங்க. வாங்கிக்கறேன்.
ஆச்சி அதிர்ந்து என்ன சொல்றீங்க சாமி.
ஆதி சங்கரனுக்கு ஆதி சிவன் சொல்லித் தந்தது அதுதானம்மா…
சாமி தீண்டாமை பாக்கறது தப்பு… தீட்டு பாக்கறது தப்பில்லையே சாமி..
யார் சொன்னா… தீண்டாமையும் தப்பில்லை… அதுக்குக் காரணமான தீட்டும் தப்பில்லையம்மா… உடம்புக்குத்தானம்மா தீட்டு… ஆன்மாவுக்கு ஏது தீட்டு?
ஆச்சி தயங்கியபடியே உள்ளே செல்கிறார். மருமகளின் குரல் உரத்துக் கேட்கிறது. முடியாது. நான் மாட்டேன் என்று அவர் பதறுகிறார்.
ஆச்சி வெளியே வந்து அரிசியைக் கொடுக்க முற்படுகிறார். நந்தனார் ஏந்திய திருவோட்டை மூடியபடியே, இன்று நான் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உங்கள் மருமகளின் விருப்பம் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த வழியே திரும்புகிறார். ஆச்சி பின்னால் ஓடி வந்தபடியே கெஞ்சுகிறார். சாமி வாசல் தேடி வந்த தெய்வத்துக்கு ஒரு வாய் சாப்பாடு போடாம அனுப்பின பாவம் வேண்டாம் சாமி… பிடிவாதம் பிடிக்காதிங்க… வாங்கிக்கோங்க… எத்தனி ஜென்மம் எடுத்தாலும் என் குடும்பம் இந்த பாவத்தை போக்க முடியாம போயிரும்…
அப்படி இல்லையம்மா… உங்களுக்கு எந்த பாவமும் வராது. நான் நிறைந்த மனதுடன்தான் திரும்பியிருக்கிறேன். பதறாமல் விடு திரும்புங்கள் என்கிறார்.
சாமி நீங்க போகக்கூடாது… எங்க கையல ஒரு வாய் சாப்பிடாம நீங்க இந்த ஊரை விட்டுப் போகக்கூடாது என்று காலில் விழுந்து மன்றாடுகிறார்.
நந்தனார் சிரித்தபடியே சரியம்மா… நான் ஊரெல்லையில் இருக்கும் ஆலமரத்தடியில் உங்கள் அன்னபூரணி மருமகளின் வருகைக்காகக் காத்திருப்பேன் என்று சொல்லியபடியே சென்று செல்கிறார்.
அன்றைய சூரியன் என்றுமில்லாத தகிப்புடன் அந்த கிராமத்தின் மேல் பாய்கிறது. பாட்டியும் மருமகளும் என்ன செய்யவென்று தெரியாமல் தவிக்கிறார்கள். நண்பகல் ஆகி பிற்பகல் ஆகி மாலை வந்து பின் மாலையும் வருகிறது. நந்தனார் எதுவும் நடவாததுபோல் கோவிலில் உழவாரப் பணி முடித்துவிட்டு துண்டை விரித்து ஆலமரத்திண்டில் தலை சாய்க்கிறார். நிம்மதியாகத் தூங்குகிறார். மருமகளும் பாட்டியும் தூக்கம் வராமல் புரண்டு படுக்கிறார்கள்.
மறு நாள் பொழுது புலர்கிறது. நந்தனார் கோவில் குளத்தில் குளித்துவிட்டு உழவாரப் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார். நேரம் ஆக ஆக அவருக்கு உடல் வலு குறைகிறது. மதியம் வாக்கில் தலை சுற்றி விழப்போகிறவர் ஒருவழியாக தடுமாறி கண்கள் இருள ஆலமரத்தடியில் வந்து அமர்கிறார். இதைப் பார்க்கும் பாட்டி விழுந்தடித்து வீட்டுக்கு ஓடுகிறார். மருமகளிடம் விஷயத்தைச் சொல்லி உணவை எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கச் சொல்கிறார். அவரும் வேறு வழியின்றிப் புறப்படுகிறார். வாசலில் கால் வைத்ததும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்குகிறது. நடக்க நடக்க காற்றின் வேகம் அதிகரித்து வானில் மழை மேகங்கள் திரள்கின்றன. உணவுக் கலயத்தின் மேலே மூடியிருக்கும் வாழை இலையை காற்றில் பறக்காமல் இறுகப் பற்றுகிறார். வானில் இடி இடிக்கிறது. கோடை மழை கொட்ட ஆரம்பிக்கிறது. சொட்டச் சொட்ட நனைந்தபடியே மருமகள் நிலம் அதிர நடந்துவருகிறாள். உடன் வரும் பாட்டி நந்தனாரை எழுந்திருக்கச் சொல்கிறார். உடல் களைத்து பசி மயக்கத்தில் படுத்திருக்கும் நந்தனார் சற்று சிரமப்பட்டபடியே எழுந்திருக்கிறார்.
சொட்டச் சொட்ட நனைந்து நிற்கும் மருமகளையும் பாட்டியையும் பார்க்கிறார். கவிழ்த்து வைத்த திருவோட்டை தூய மழை நீரால் கழுவி கனிவுடன் நீட்டுகிறார். மருமகள் அகப்பையால் உணவை அள்ளி எடுத்துக் கொடுக்கிறார். நந்தனார் அந்த உணவைத் தொட்டு வணங்கி எடுத்து உண்கிறார். பாட்டியும் மருமகளும் அவர் உண்பதையே தாயன்புடன் பார்த்தபடி நிற்கிறார்கள்.
***
நந்தனார் ஒரு ஊர் கலுங்கில் அமர்ந்து கொண்டிருக்கிறார். சற்று தள்ளி அவருடைய வெண்ணுடை காய்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் வேகமாக வந்து இரண்டு கனிகளை நந்தனார் அருகில் வைத்து வனங்கிவிட்டுச் செல்கிறார். நந்தனார் நீரோடையில் அதைக் கழுவி உண்ணத் தொடங்குகிறார். பாழ் நெற்றியுடன் வரும் ஒருவர் நந்தனாரைப் பார்த்து ‘உழைச்சு சாப்பிட வேண்டியதுதானே. இப்படி சோம்பேறியா உட்கார்ந்து, கையேந்தித் தின்ன வெட்கமா இல்லையா’ என்கிறார்.
வலது கை கொடுப்பதை இடது கை வாங்கிக் கொண்டால் அதில் என்ன தவறு? இந்த உலகின் எல்லா உயிர்களும் ஒரே பரம்பொருளில் இருந்து கிளைத்தவையே… ஒரே பேரருளின் அங்கங்களே…
இந்தக் கதையெல்லாம் வேண்டாம். தாயும் புள்ளையும்ன்னாலுமே வாயும் வயிறும் வேறுதான். அவன் நெற்றி வியர்வை நிலத்துல சிந்த உழக்கறவன். நீங்கல்லாம் அப்படியா..?
யார் உழைக்கவில்லை..? உடல் வருந்திச் செய்தால்தான் உழைப்பா… மனதையும் மூளையையும் பயன்படுத்திச் செய்யும் உழைப்பு உழைப்பு இல்லையா? இன்றைய காலத்தில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்களுக்கு உடல் உழைப்பில் இருந்து விலக்கு கொடுத்ததன் காரணம் என்ன தெரியுமா. அப்படிக் கிடைக்கும் விடுதலையைப் பயன்படுத்தி மக்கள் நலனுக்கு மூளையை உபயோகிப்பதற்குத்தான்.
ஒரு விஞ்ஞானி உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெற்றால் மக்களுக்கு புதியவற்றைக் கண்டுபிடித்து அவர்களுடைய வேலையை எளிதாக்குகிறார். மருத்துவர் நோய் நொடிகளைத் தீர்க்க மருந்து கண்டுபிடித்துத் தருகிறார். துறவிகள் என்ன செய்கிறார்கள்.. வெறுமனே சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்குவதைத்தவிர…
புறத்தேவைகள், உடல் சார்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தினால் வரும் கேள்வி இது. மனிதனுக்கு மனம் சார்ந்த தேவைகள் எத்தனையோ இருக்கின்றன. அதோடு மனிதன் அவனுடைய விலங்கு குணங்க ளில் இருந்து மேலெழுந்து ஒன்றுபட்டு ஒரு சமூகமாக வாழ வேண்டிய அவசியம் இருக்கிறது. மதமும் ஆன்மிகமும் இந்த விஷயங்களை கவனித்துக்கொள்கின்றன.
மதங்கள் எங்கே மனிதர்களை ஒற்றுமைப்படுத்துகின்றன. அடித்துக்கொண்டு சாகத்தானே வைக்கின்றன.
மதங்கள், ஆன்மிக வழிமுறைகள் இவற்றின் பங்களிப்பை எடைபோடுவதென்றால் அவை சார்ந்து சண்டைகள் நடக்கும் நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பேசக்கூடாது. எஞ்சிய நாட்களில் எந்த மோதலும் இல்லாமல் இருக்க அந்த ஆன்மிகமும் மதமுமே காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். ஆன்மிகமும் மதங்களும் உருவாகி இருக்கவில்லையென்றால் மனித இனம் இப்போதைவிட படு மோசமாக சண்டையிட்டு மடிந்திருக்கும். அதோடு, சமூகம் என்பது பல்வேறு தொழில்களை பல்வேறு துறைகளை அடிப்படையாகக் கொண்டது. துறவியைப் பார்த்து வயலில் உழ வேண்டியதுதானே என்று கேட்கும் ஒருவர் மன்னரைப் பார்த்து அந்தக் கேள்வியை என்றேனும் கேட்டதுண்டா..?
மன்னர் ஆட்சி நிர்வாகம் செய்கிறாரே…
துறவியின் நிர்வாகம் அதைவிட உயர்ந்தது நண்பா…
நீங்கள் சொல்லும் துறவிகள் கற்பனையில் மட்டுமே இருக்கிறார்கள். நிஜத்தில் இருப்பவர்களெல்லாம் ப்ராடுகள்தான்.
என்ன மீன்கள் கிடக்கும் என்பது எந்தக் குளத்தில் வலை வீசுகிறாய் என்பதைப் பொறுத்தது. ராமகிருஷ்ணர்களைக் கண்டடைய வேண்டுமென்றால் நீங்கள் விவேகானந்தனாக இருக்கவேண்டும். உங்களை நான் ஒன்று கேட்கிறேன்… சாமியார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்களே… நீங்கள் நல்ல சாமியாராக இருந்து காட்டவேண்டியதுதானே… ஆடத் தெரிந்த மாட்டை ஆடிக் கற… மக்கள் மீது அக்கறை இருந்தால் மக்களுடைய உணர்வுகளை மதித்து அதன்படி நடந்து அவர்கள் மனதைக் கவர்ந்து அவர்களுக்கு நல்லது செய்யலாமே. நல்ல நாத்திகர்களைவிட மோசமான ஆத்திகர்கூட மேல் என்பதுதானே இன்றும் உண்மையாக இருக்கிறது. இருளைப் பழிப்பதைவிட ஒற்றை அரிக்கேன் விளக்கை ஏற்றி வைப்பது நல்லது. அரிக்கேன் விளக்கில் இருந்து ஒளியைவிட புகை அதிகம் வருகிறதென்றால் கண்ணாடியைத் துடையுங்கள் அல்லது மாற்றுங்கள். விளக்கை அணைக்காதீர்கள்.
(தொடரும்)
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.