ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

(“தூத்துக்குடி மக்கள் விழிப்புணர்வு இயக்கம்”  என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டது என்ற குறிப்புடன் கீழ்க்கண்ட பதிவு எங்களுக்குக் கிடைத்தது.  அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் – ஆசிரியர் குழு)

1992 இல் ஸ்டெர்லைட் ஆலை நிறுவ மஹாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அம்மாநில அரசு. அங்குள்ள மக்கள் ஒரு ஆண்டு காலம் நடத்திய போராட்டத்தால் அந்த ஆலைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

01.10.1994 அன்று அதே தாமிர ஆலையை தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம் அருகில் சிப்காட் வளாகத்தில் அமைக்க தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தது.

31.10.1994 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போதே ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்குழு அமைக்கப்பட்டு அந்த ஆலைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தது.

14.10.1996 அன்று தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை வழங்கியது.

கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த ஜனவரி 1997 இல் ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியைத் துவக்கியது. ஆலையைச் சுறியுள்ள பகுதியில் பலர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகினர்.

23.11.1998 – ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

01.12.1998 – ஆலை இயங்க அனுமதி அளித்த உயர்நீதி மன்றம் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு “நீரி” – தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனத்திற்கு (NEERI – National Environmental Engineering Research Institute) உத்தரவு.

அதன்படி நவம்பர் 1998 இல் ஆலையை ஆய்வு செய்து பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிய நீரி குழு, பின்னர் 09.02.1999 அன்று குறைகள் சரி செய்யப் பட்டு விட்டதாகத் தெரிவித்தது.

விதிமீறல், சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக 28.09.2010 இல் ஆலையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு.

01.10.2010 இல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஆலை மீண்டும் இயங்கத் துவங்கியது.

23.03.2013 அன்று சல்பர் டை ஆக்ஸைடு ஆதிக அளவில் வெளியேறி தூத்துக்குடி நகரில் ஏராளமான பேருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்பட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டது.

அதனால் 29.03.2013 இல் தமிழக அரசு ஆணை மூலம் ஆலை மூடப்பட்டது.

02.04.2013 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆலை இயங்க அனுமதி அளித்தது உச்சநீதி மன்றம்.

இப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதும் பின்னர் உச்ச நீதி மன்ற உத்தரவு பெற்று இயங்குவதுமாக 3 முறை நடந்துள்ளது.

இதற்கிடையில் ஆலையை விரிவாக்கம் செய்து தாமிர உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

2009 இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது) அனுமதி பெறப் பட்ட அந்த விரிவாக்கப் பனிகளை 2017 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கும்போது அதனால் தங்கள் கிராமம் முழுமையாக பாதிக்கப் படும் எனக் கூறி ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 17.02.2018 அன்று தங்கள் கிராமத்தில் போராட்டத்தைத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நகரில் விவிடி சிக்னல் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கிராம மக்கள் அனைவரையும் கைது செய்தது காவல்துறை.

அதில் நாம் தமிழர் கட்சியினர் இருவர், மதிமுக ஒருவர், வழக்கறிஞர் இருவர், குமரெட்டியாபுரம் கிராம இளைஞர்கள் இருவர், புரட்சிகர இளைஞர் விடுதலை முன்னணி இயக்கத்தின் சுஜித் ஆகிய 8 பேர் மட்டும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர் அமைப்பினர் மட்டுமே பெரும்பங்கு வகித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவானது நகர வர்த்தகர்கள், மற்றும் அனைத்து தரப்பினரை ஒருங்கிணைத்து புது வடிவம் பெற்றது.

பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மனி நகரில் உள்ள தன்பாடு உப்பு உற்பத்தியாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு கூட்டத்தில் “FOIL VEDANTA” என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவர் சமதர்மதாஸ் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வேகமெடுக்கத் துவங்கியது.

மார்ச் 24 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் அதிகாரம் என்ற நக்சல்பாரி ஆதரவு அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கின் தீர்ப்பு படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடைத்தது.

எந்த அரசியல் கட்சியையும் முன்னிறுத்தாமல் கும்ரெட்டியாபுரம் கிராம மக்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் சாத்வீகமான முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்

அந்த கூட்டத்திலேயே நக்சல்பாரி ஆதரவு இயக்கமான புரட்சிகர இளைஞர் விடுதலை முன்னணி இயக்கத்தின் சுஜித் என்ற நபரின் பேச்சு ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்ற மக்களின் உணர்வை திசை திருப்பும் விதமாக இருந்தது.

அரசியல், சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்ற ஒரே நோக்கத்துடன் வந்திருந்த மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் , விஎச்பி தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிட்டு பிரிவினை உணர்வைத் தூண்டும் அவர்களின் இயக்கத்தின் உண்மை முகத்தைக் காட்டினார்.

கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் மன்னிப்பு கோரினார் அவர்.

24.04.2018 அன்று மக்கள் பேரணி என்ற பெயரில் தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க பல்லாயிரக் கணக்கில் கூடினர்.

குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி இந்த இரு நிகழ்ச்சிகளையும் திரைக்குப் பின் இருந்து திட்டமிட்டு இயக்கியவர்கள் நக்சல்பாரி ஆதரவு இயக்கமான மக்கள் அதிகாரம், புரட்சிகர இயக்கங்களே. அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி நகரில் தங்கி மக்களோடு தங்கி இருந்து தங்கள் செயல் திட்டங்களை வகுத்தனர்.

இவை குறித்து காவல்துறை உளவு அமைப்புகள் மூலம் தகவல்கள் திரட்டப் பட்டு அவ்வப்போது மாநில அரசுக்கு அனுப்பப் பட்ட நிலையிலும், அரசுத் தரப்பில் எந்த வித உறுதியான நடவடிக்கை எடுக்க அனுமதி கிடைக்காததால் கையறு நிலையில் நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலை காவல்துறைக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் உணர்வை அரசுக்கு எதிரான குறிப்பாக காவல்துறைக்கு எதிரான வெறியாக மாற்றும் சதியை அரங்கேற்றத் திட்டமிட்டனர் நக்சல்பாரி ஆதரவு புரட்சிகர அமைப்புகள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைக்கு அனுமதி மறுத்த போலீசார் சமாதானக் கூட்டம் நடத்தி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமாக நடத்த அனுமதிப்பதாகக் கூறினர்.

அதனை ஏற்றுக் கொண்ட விநாயக மூர்த்தி, பாத்திமா பாபு ஆகியோரை போராட்டக் குழுவிலிருந்து நீக்குவதாகவும் முன்பே திட்டமிட்ட படி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கச் செய்தார்கள் பின்னணியில் இருந்த புரட்சிகர அமைப்பினர்.

144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்து நிலைமை மோசமானால் துப்பாக்கிச்சூடு நடத்தும் நிலை ஏற்படும் என்பதையும் காவல்துறையினர் முன்பே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மே 22 அன்று காலை பனிமய மாதா ஆலயத்தில் கூடிய கடலோர மீனவ கிராம மக்களை லியோ ஜெயசீலன் உள்ளிட்ட பல பங்கு தந்தைகள் ஆசியோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையின் எச்சரிக்கையையும் மதிக்காமல் அனைவரும் புறப்பட்டனர்.

சுமார் 2000 பேருடன் ஊர்வலமாகப் புறப்பட்ட போராட்டக் காரர்களோடு வழி நெடுகிலும் ஏராளமானோர் இணைந்து கொண்டனர்.

துவக்கத்தில் வெறும் கையுடன் வந்த கூட்டத்தில் பெட்ரோல் குண்டு, நாட்டு வெடி குண்டுகளோடு பல நபர்கள் முன்பே திட்டமிட்டபடி ஊடுருவினர்.

தென்பாகம் காவல் நிலையம் அருகில் காவலர்களையும் தடுப்புகளையும் தள்ளி விட்டு சென்றவர்கள், விவிடி சிக்னல் அருகில் தடுத்து நிறுத்திய காவலர்களையும் தள்ளி விட்டு செல்ல முயன்ற போது காவலர்கள் தடியடிப் பிரயோகம் செய்தனர்.

காவலர்களை கம்பு, கற்களால் சரமாரியாகத் தாக்கத் துவங்கினர் போராட்டக் காரர்கள். அவர்களிடமிருந்து உயிர் தப்ப சுவர் ஏறிக் குதித்து ஓடும் நிலை காவலர்களுக்கு ஏற்பட்டது.

3 ஆம் மைல் ரயில்வே பாலம் அருகில் தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களுக்கும் அதே கதிதான்.

கட்டுக்கடங்காமல் ஆயிரக் கணக்கானோர் காவல் தடுப்பை மீறி வருவதைக் கண்டதும் எஃப்.சி.ஐ குடோன் முன்பாக காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியது.

அதையும் மீறி முன்னேறிச் சென்ற கும்பல் பைபாஸ் ரோடு பாலத்திற்கு அடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கி அவர்களது இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர். அதனை முன்னின்று ஒருங்கிணைத்தவர் ஒரு கன்னியாஸ்திரி என சொல்லப்படுவதுதான் மிகவும் அதிர்ச்சியான விஷயம்.(வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளதாம் விரைவில் வெளியாகுமாம்)

காவலர் தாக்குதல். பைக் எரிப்பு என மிக ஆக்ரோஷமாக ஆயிரக்கணக்கானோர் கட்டுக்கடங்காமல் திரண்டு வருவதைக் கண்டு இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் (உயர் அதிகாரிகள் உள்பட) திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச் சாலையில் மேற்கு நோக்கி ஓடி பின்வாங்கினர்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நுழைந்த புரட்சிகர அமைப்பினர் முன்பே திட்டமிட்டபடி அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனங்களையும் காவல்துறை வாகனம், அரசுத் துறை வாகனங்களை தீக்கிரையாக்கி ஆட்சியர் அலுவலகத்தைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளே நுழைய முற்பட்டனர்.

அவர்களைத் தடுக்கும் வகையில் தடியடி நடத்திய காவலர்களின் முயற்சி பலனளிக்காமல் போகவே, புரட்சிகர கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது.

புரட்சிகர இளைஞர் விடுதலை முன்னணி அமைப்பின் தமிழரசன் (ஆதாரம் : 27.05.2018 தினத்தந்தி நாளிதழ்), மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜெயராம் (ஊசிலம்பட்டியைச் சேர்ந்தவர்) ஆகியோர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப் பட்டனர். அதற்குள்ளாக ஆவேசமாக கும்பலாக வந்த பொது மக்களில் பலரும் துப்பாக்கி குண்டுகளால் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் அனைவரையும் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள இந்த கொடூரமான சம்பவங்கள் அனைத்திற்கும் யார் பொறுப்பு?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது அரசுக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டது ஏன்?

முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்?

வாழ்வா சாவா? போராடி வாழப் போகிறோமா? போபால் போல் சாகப் போகிறோமா? என்றெல்லாம் உணர்ச்சிகரமான போஸ்டர்கள் போட்டதின் பின்னணி என்ன?

கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா?

அடங்க மறு! அத்து மீறு!! என்பது போன்ற கோஷங்களை எழுப்பி இளைஞர்களை சூடேற்றி தவறாக வழி நடத்தும் சில்லரைக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் யாருமே மே 22 போராட்டக் களத்தில் முன்னணியில் இல்லையே ஏன்?

போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தும் என்பது அவர்களுக்கெல்லாம் முன்பே தெரிந்து விட்டதா?

அமைதியான போராட்டம் எனில் காவலர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது ஏன்?

தூத்துக்குடிக் காரர்கள் வீரர்கள் .. காவலர்களை ஓட விடுகிறார்கள் என மகிழ்ச்சியாக பதிவுகள் போட்டு இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியது ஏன்?

துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாகவே பைபாஸ் ரோடு பாலத்திற்கு கீழ் பைக்குகளை எரித்து எரியுது பார்.. எரியுது பார் என்று சிரித்துக் கொண்டே ஆடி மகிழ்ந்தது ஏன்?

மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய மதத் தலைவரான பங்கு தந்தை லியோ ஜெயசீலன் போன்றவர்கள் 144 தடை உத்தரவை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சென்றது ஏன்?

உயிரிழந்த 13 பேரில் 7 பேர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய உறவினர்கள் கையெழுத்திட்ட நிலையில் மீதமுள்ள ஆறு பேருடைய உறவினர்கள், ஃபாதர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வோம் . அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என சொல்வது ஏன்?

இப்படி நம் மனதில் எழும் விடை தெரியா கேள்விகள் ஏராளம்..

உங்களுக்குத் தெரியுமா?

அமைதியாகப்போராடிய அப்பாவி மக்களை போலீஸ் அநியாயமாகச் சுட்டு விட்டதாக பிரச்சாரம் செய்யப் படுகிறதே.. நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை..

ஏன் தெரியுமா ?

வீடு புகுந்து இளைஞர்களைப் பிடித்து செல்கிறது போலீஸ் என்று சொல்லப் படும் நிலையில் குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த யாரும் அது போன்ற கைது நடவடிக்கை உள்பட எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள்..

எப்படி?

காரணம் இதுதான்..

குமரெட்டியாபுரம் கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல.

அதனால்தான் மே 22 அன்று காலையில் காவல்துறை கைது செய்து அழைத்து சென்ற போது அவர்களோடு மோதலில் ஈடுபடாமல் வேனில் சென்று இப்போது எந்த பாதிப்பும் இன்றி இயல்பு நிலையில் உள்ளனர்.

தூத்துக்குடி மக்களே..

நக்சல்பாரி ஆதரவு புரட்சிகர அமைப்புகளை ஆதரித்து தினந்தோறும் போராட்ட வாழ்வு வாழப் போகிறோமா?

நம்ம ஊரு சிறுவர்களை கல்,பெட்ரோல் குண்டு வீசும் ரவுடிகளாக ஆக்கப் போகிறோமா?

நம் குடும்பத்தின், தெருவின், நகரத்தின், மாநிலத்தின், நாட்டின் நலனை மனதில் கொண்டு சிந்தித்து செயல்படுவீர் !

4 Replies to “ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்”

 1. The article is one sided. For argument sake, let us assume that terrorists had infiltrated the crowd & encouraged the mob. What was the police intelligence doing? Were they not aware of this?

  The high court mentioned about a week earlier to the agitation, that going by the pamphlets distributed against sterlite, they apprehended violence., Even after this, the police did not act.

  Ok, now coming to the firing. U are supposed to use rubber bullets first & shoot at the leg. This was not followed.

  When asked the police said that rubber bullets were not available. What a careless attitude!

  ok, now the 13 persons killed. – were all of them terrorists? If yes, let the police say so. Why was a woman standing in the crowd shot in the mouth?

  How many policeman were killed or injured in this agitation?

  There are many unanswered questions.

  The truth is we have a spineless govt remote controlled by the BJP at the centre who have taken money from industrialists & are least interested un people’s welfare.

  take utrb frm me. The sterlite unit wil open shortly aftera high court order.

 2. குமரெட்டியாபுரம் கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல.

  அதனால்தான் மே 22 அன்று காலையில் காவல்துறை கைது செய்து அழைத்து சென்ற போது அவர்களோடு மோதலில் ஈடுபடாமல் வேனில் சென்று இப்போது எந்த பாதிப்பும் இன்றி இயல்பு நிலையில் உள்ளனர்.

  தூத்துக்குடி மக்களே..

  நக்சல்பாரி ஆதரவு புரட்சிகர அமைப்புகளை ஆதரித்து தினந்தோறும் போராட்ட வாழ்வு வாழப் போகிறோமா?

  நம்ம ஊரு சிறுவர்களை கல்,பெட்ரோல் குண்டு வீசும் ரவுடிகளாக ஆக்கப் போகிறோமா?

  நம் குடும்பத்தின், தெருவின், நகரத்தின், மாநிலத்தின், நாட்டின் நலனை மனதில் கொண்டு சிந்தித்து செயல்படுவீர் !
  ————————————-
  தூத்துக்குடி பிரச்சனை குறித்து கருத்துக்கள் தெரிவிப்பவா்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்விகள். அருமை.அருமை.பாராட்டுக்கள்.

 3. தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம்
  ——
  முன்புள்ள நிலை தொடரவேண்டும்.தமிழ் ஹிந்துவிலும் ஆட்சேபகரமான பதிவுகளைச் செய்பவா்கள் இருக்கின்றார்களா என்ன ?

 4. பிரிட்டிஷ் தமிழ் செய்தி ஒலிபரப்பில் தெரிவிக்கபட்ட செய்தியில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக பாதிரி சக்திவேல் என்பவர் தெரிவிக்கிறார் தூத்துக்குடியில் மக்கள் தேடித் தேடி கொல்லப்பட்டுள்ளனர். குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறார் அவருடன நிற்பவர் மோடியின் கைகளில் மக்களின் குருதி என்று விளம்பரம் எழுதிய அட்டையை வைத்திருக்கிறார். திட்டமிட்டே செயல்படுகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *