இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

அர்ஜுன் சம்பத்தமிழக மீனவர் வாழ்வுரிமை மாநாடு தூத்துக்குடியில் கடந்த செப்டெம்பர் 26, 2010 அன்று நடைபெற்றது. மீனவர்கள் வாழ்வுரிமை தொடர்பான முக்கிய கோரிக்கைகளுடன் கூடிய கருத்தரங்கமும் நடை பெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களுடன், இந்து துறவி பேரவை தலைவர் சதாசிவானந்தா, இந்து மீனவர் நலச் சங்க தலைவர் டாக்டர் ராஜன், மதிமுக., மாநில துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை, தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழநெடுமாறன், தேசியவாத காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் டென்சன், நாம் தமிழர் மாவட்ட தலைவர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதலில் மீனவர்களின் நலன் வேண்டி கணபதி வேள்வி, திருமுறை ஓதுதல் மற்றும் அதிபத்த நாயனார் வழிபாடு நடந்தது. இதில் வேதவிற்பனர்கள் தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி யாக வழிபாடு நடத்தினர். இதன் பின்னர் நடந்த மீனவர்களின் நலன் காத்திடுவோம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். இந்த மாநாடு துவங்குவதற்கு முன்பே இந்து மக்கள் கட்சியினர் ‘‘மீனவர்களுக்கே தெரியாத அவர்களின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளவும், அவர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசை வலியுறுத்தியே இந்த மாநாடு நடத்துகிறோம்’’ என அறிவித்திருந்தனர்.

“பழங்காலத்தில் மீனவர்கள் எல்லோருமே இந்துக்கள் தான். காலப் போக்கில் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர். 400 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் தங்களது உயிரையும் உடமைகளையும் பாதுகாத்திட கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். சிவனுக்கு தொண்டு செய்யும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் ஒரு மீனவர். இவரது வலையில் தங்கமீன் சிக்கிய போதும் சிவனுக்கு காணிக்கையாக அதை படைத்துள்ளார். இதனை ஒரு திருவிழாவாக இன்றும் நாகை மாவட்டத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அதிபத்த நாயனார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழாவின் போது மீனவர்களுக்கென்று ஒருநாள் மண்டகப்படியே உண்டு. இவர்களுக்கென்று அங்கு தனி வாயிலே உள்ளது. ஆனால் இன்று அது அடைக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் திருவிழாவின் போது ஒருநாள் மலையில் தங்கி விழா கொண்டாட மீனவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு அது இன்றும் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவின் போது தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைப்பது மீனவர்கள் தான். ஆனால் இன்று அந்த உரிமைகள் மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகின்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் போது கொடியேற்ற கயிறை இன்றும் மீனவர்கள்தான் கொடுத்து வருகின்றனர். ஆனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதி-களில்தான் ஏராளமான மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர்” என்று அடுக்கடுக்காக மீனவர்களுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவை இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க மாநில அமைப்பாளர் திருப்பதி கூறுகிறார்.

“இன்று தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது. இந்திய கடல் எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களை இந்திய ராணுவம் கைது செய்தாலும் மரியாதையுடன் நடத்தப் பட்டு மீண்டும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் நம்ம மீனவர்கள் தெரியாமல் அங்கு போனால், நிர்வாணப்படுத்தி சித்திரவதைப்படுத்தி கொலை செய்யப்படுகின்றனர்.

நம் மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை ராணுவத்தினரை ஐ.நா. சபை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்படவுள்ள சுனாமி வீடுகள் தரமற்றதாக உள்ளது. தமிழகத்தின் மீனவளத்துறை செயல்படாமல் முடங்கிவிட்டது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மீனவர்களுக்கு இந்து கோயில்களில் மறுக்கப்படும் உரிமைகளை மீட்கவும்தான் இந்த மாநாடு’’ என்று அவர் மேலும் கூறினார்.

மீனவர் வாழ்வுரிமை மாநாடு அழைப்பிதழ்

இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானங்கள்

  • தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படையினருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. தமிழக மீனவர்களின் உயிரையும்/ உடைமையையும் பாதுகாக்க வேண்டியது மத்திய/ மாநில அரசுகளின் கடமையாகும். இலங்கை அரசுடனான நல்லுறவிற்கு தமிழக மீனவர்களின் உயிரை விலையாகக் கொடுப்பதை ஒப்புக் கொள்ள முடியாது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்லும் பழக்கம் கிடையாது. தமிழகம் மற்றும் இந்தியா மீது வெறுப்புணர்வு கொண்டுள்ள இலங்கை அரசு தொடர்ந்து சர்வதேச விதிகளை மீறி இந்த அக்கிரமங்களை செய்­து வருகிறது. எனவே இந்திய அரசு இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டு இலங்கையை பணியவைக்கும் முகமாக இலங்கை அரசுமீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.
  • இலங்கை உடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செ­ய்து கச்சத்தீவை இந்தியாவின் நிலப்பரப்பாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். கட்சத்தீவு ஒப்பந்தம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும்.
  • ராமர் சேது பாலத்திற்கு சேதம் விளைவிக்காமலும்/ மீனவர் நலனுக்கு உகந்த நிலையிலும் ராமர் சேது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். இந்த திட்டத்தில் முக்கிய பணியான துறைமுக மேம்பாடு/ புதிய துறைமுகங்களை உருவாக்குதல்/ மீன்வள ஆதாரங்களை மேம்படுத்துதல்/ கப்பல் கட்டும் புதிய துறைமுகங்களை உருவாக்குதல்/ மீனவர்களுக்கு மீன்பிடி நவீன உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்குரிய பயிற்சியை வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் எந்தவிதமான தடையையும் விதிக்கவில்லை. எனவே இத்திட்டத்தில் மிக முக்கிய பகுதிகளான மேற்கண்ட மீனவர் நலத்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
  • கடற்கரையும்/ கடற்சார்ந்த பகுதிகளும் மற்றும் கடல் ஆகியவற்றில் முதலுரிமை மீனவர்களுக்கே. வனத்துறை எப்படி வனவாசி மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றதோ அதுபோல மத்திய மாநில அரசுகள் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மீனவர்களுக்கே முதலுரிமை வழங்கிட வேண்டும். இயற்கையோடு போராடும் மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் கடற்துறையினராக பதிவு செ­ய்து அவர்களுக்கான சலுகைகள் பெற சட்டத்திருத்தம் செ­ய்ய வேண்டும்.
  • கடல் மற்றும் கடல் சார்ந்த இடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இரசாயன தொழிற்சாலை கூடாது. பெரும் இலாப நோக்கில் செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் முன்னுரிமை வழங்கக் கூடாது. மீனவர்களை கடல் பகுதியிலிருந்து வெளியேற்றக்கூடாது.
  • ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் சமய/ சடங்குகள் செய்­ய வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை துறைமுக நிர்வாகம் செய்­திட வேண்டும். சமய/ சடங்குகள் செ­ய்வதற்கு அந்த இடத்திலேயே விநாயகர் மற்றும் இந்து கடவுளர்களின் கோவில்கள் அமைத்து தர வேண்டும். தூத்துக்குடி துறைமுக சுனாமி நகரில் கிறித்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கொடுத்ததுபோல இந்து கோவில்கள் அமைத்திடவும் அனுமதி வழங்கிட வேண்டும். கரை வலை மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு போதிய தொழில் பாதுகாப்பு/நிவாரண உதவிகள் மற்றும் வங்கிக் கடன் வசதிகள் ஆகியவற்றை செய்­து தந்திட வேண்டும்.
  • உள்நாட்டு மீனவர்கள் சுமார் 7500 பேர் உள்ளனர்/ கடல் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும். புன்னைக்காயல் தூண்டில் பாலத்திட்டம்/ பெரியதாளை தூண்டில் பால திட்டம் ஆகிய வற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும். மீனவர்கள் உயிர் இழப்பு சம்பவங்களின் போதும்/ காணாமல் போவது ஆகிய விபத்துக்கள் நேரிடும் போது 7 ஆண்டுகளுக்கு பிறகே நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி விபத்து நடந்த உடனே உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
  • இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மீனவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மதம் மாற்றியதைத் தவிர வேறு எந்த சாதனையும் இதர அமைப்புகளால் நடக்கவில்லை. மதம் மாறாத இந்து மீனவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பும் இது நாள் வரை பெரிதாக கிட்டவில்லை. அவர்களது பிரச்சனைகளை பேச அமைப்புகள் பெரிதாக உருவாகவில்லை. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இவ்வாறு மாநாடுகள், போராட்டங்கள் என்று எடுத்து செய்வது பாராட்டுக்குரியது.

9 Replies to “இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு”

  1. சிறந்த முயற்சி. மாநாடு நடத்தியவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் ஏற்ற நெய்க்குடங்களைச்சுமந்து சென்று மலையுச்சியில் தீபம் ஏற்றுபவர்கள் பர்வதராஜ குலம் சார்ந்த மரபினர்தாம். இவர்கள் அப்பகுதியில் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் (ஆறு, ஏரி, குளங்களில்) ஈடுபடுபவர்கள்.

    ///■ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் சமய/ சடங்குகள் செய்­ய வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை துறைமுக நிர்வாகம் செய்­திட வேண்டும். சமய/ சடங்குகள் செ­ய்வதற்கு அந்த இடத்திலேயே விநாயகர் மற்றும் இந்து கடவுளர்களின் கோவில்கள் அமைத்து தர வேண்டும்.///

    ஆதியிலிருந்தே ஒவ்வொரு மீனவர் சிற்றூரிலும், கடற்கரையோரம் அம்மன் கோயில் ஒன்று வெவ்வேறு திருநாமங்களுடன் அருள் செய்துவந்திருக்கின்றன. இப்படி இருந்த ஒரு அம்மன் கோயில்தான் வேளாங்கண்ணி மாதா கோயிலாக உருமாறியிருக்கும் வாய்ப்பு உள்ளது.

    காவிரியின் முகத்துவாரத்தில் பூம்புகாரிலுள்ள அம்மன் கோயில் மிகச்சிறியது ஆனால் பழமை பார்த்தாலே தெரியும். அதைச் சரியாகச் செப்பனிட்டு பராமரிக்காத அரசு, அருகில் (கடல் ஓர வழியாக 5 கி.மி. தெற்கில்) இருக்கும் தரங்கம்பாடியின் டேனிஷ் காலனியின் கல்லறைகளுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. நமது முதல்வருக்கு ராஜ ராஜன் வாழ்ந்த அரண்மனையை விட அவரது கல்லறை எங்கே என்ற தேடல்தான் நெஞ்சில் தைத்த முள்ளாக உறுத்துகிறது. பிணத்தால் கிடைக்கும் ஓட்டுக்கள் இவர்களுக்கு மிக முக்கியம்.

    மீனவர் சமுதாயம் உயிரைப் பணயம் வைத்துத் தொழில் செய்யும் ஒன்று. ஆண்டுக்கு 45 நாட்கள் மீன் உற்பத்தி, சுற்றுச்சூழல் காரணமாக மீன்பிடிக்க முடியாது. இதுபோக மழை, புயல் என்று சில மாதங்கள். இவர்களுக்கு சில நாட்கள் எதுவும் கிடைக்காது. கிடைத்தால் பரிசு மழை போல பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலுள்ள மீன்கள் கிடைக்கலாம். இவர்களைத்தக்க முறையில் வழிநடத்த இளம் சேவகர்கள் (counsellers) தேவை. சென்னை அருகிலுள்ள கோவளம் குப்பம் மீனவர் சமுதாயம் முன்னேறக் காரணம் அருகிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றின் சில அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியும், நிறுவனத்தின் பொருளாதார உதவிகளுமே. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இத்தகு உதவியைச் செய்து வருகிறார்கள். இக்கிராமத்தில் கூட ஒரு கன்னி அம்மன் கோயில் சிறப்பாக இயங்குகிறது. இக்கிராமத்தில் இஸ்லாமியர் பெருமளவில் இருந்தாலும், சென்னை பேராயத்தின் சர்ச் ஒன்று பெரிய பள்ளியுடன் இயங்கி வந்தாலும், மீனவர்கள் மதமாற்றம் ஆகவில்லை என்பது நிறைவளிக்கும் செய்தி. இதன் பின்னால் முப்பது ஆண்டுக்கால முயற்சிகள் உள்ளன என்பது தெரியாத தகவல்.

  2. மீனவர்களுக்கு அவர்களின் பாரம்பரியத்தை புரிய வைத்தாலே போதும் . கிறிஸ்துவ பாதிரியார்கள் மீனவர்களின் முன்னோர்களை மிரட்டியும் ஏமாற்றியும் தான் மதம் மாற்றி உள்ளனர் .

  3. நான் அறிந்தவரை பல இடங்களில் கிருத்துவ பாதிரியார்களின் ஆதிக்கம் மீன் பிடி தொழிலில் உள்ளது. அவர்கள் கூறுவதுதான் சட்டமாக உள்ளது. தங்கள் அதிகாரத்தை கொண்டு பல மீனவர்களை மதம் மாற்றி உள்ளனர்.
    இந்த இழி நிலை மாறவேண்டும். மதம் மாறியவர்கள் மீண்டும் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும். இந்து மக்கள் கட்சியின் பணிகளை நாம் பாராட்ட வேண்டும்.

  4. Pingback: Indli.com
  5. சார் இதே மாதிரி நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கோவில்களில் கடல் நீராட்டம்(தீர்த்தவாரி) திருவிழாவின் பொது பல கிலோமீட்டர் கள் கடந்து வரும் கடவுளர்களுக்கு பாதுகாப்பும் வழி நடை உபயங்களும் மீனவர்களே நடத்தி கொண்டு இருந்தனர். திருமலைராயன் பட்டினம் வரை மீனவர்கள் மிக கொண்டாட்டமாகவும்,உற்சாகமாகவும் கடவுளர்களுடனே காவல் போல் வந்து திரும்பவும் வழி அனுப்புவார்கள். எனக்கு தெரிந்து அன்று நாகை சவுந்திரராஜ பெருமாள் சார்த்தி கொள்ளும் விசேஷ அலங்காரம் செம்படவ கொண்டை என்று கூறப்படும் மீனவ கொண்டையே. நடுவில் ஒரு மசூதி வழி செல்வார். அப்போது அங்கு அணைத்து முஸ்லிம் தரப்பினரும் சாம்பிராணி தூப உபயம் என்று ஒன்று உண்டு. இது நடந்ததாக நான் சொல்வது சுமார் 17 / 18 வருடங்களுக்கு முன்னர். தற்போது எதோ ஒரு சில மீனவ பகுதி மக்கள் மட்டும் திருமலைராயன் paatinathukku கடவுளர்கள் வரும்பொழுது செய்வதாக கேள்வி. மசூதி உபயம் ,,,,????

  6. இதே போல் வியாச பௌர்ணமி என்று கூறப்படும் வியாச பூஜை திருவிழாவும் அவர்கள் இடையே நடைபெற்று வருகிறது. இதையும் நான் நாகை வாழ் மீனவர்களிடம் கொண்டாடப்பட்டு வந்ததை கண் கூடாக பார்த்துள்ளேன். ஏனோ இன்று அங்கு சென்று பார்க்க முடியாத நிலைமை. இப்பொழுதும் அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை.

  7. அருமையான நிகழ்வு! ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எல்லோரும் கோவில்களில் தரிசனம் செய்யவும், ஹிந்து மக்கள் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது போல அந்தந்த ஊர்களில் அவர்களின் முறை திருவிழாவின் மண்டகப் படியை செய்ய அனுமதிக்க வேண்டும்! அப்போது தான் நம் ஒற்றுமை பலப் படும்! வெறும் வார்த்தைகள் அல்ல தற்போதைய தேவை, செயல் தானே! ஒன்று படுவோம்! நம் மதத்தவர்களை அறியாமையிலிருந்து விழித்தெழச் செய்வோம்!
    எழுமின்! விழிமின்!
    நன்றி!

  8. அருமையான நிகழ்வு! ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எல்லோரும் கோவில்களில் தரிசனம் செய்யவும், ஹிந்து மக்கள் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது போல அந்தந்த ஊர்களில் அவர்களின் முறை திருவிழாவின் மண்டகப் படியை செய்ய அனுமதிக்க வேண்டும்! இதே போல் வியாச பௌர்ணமி என்று கூறப்படும் வியாச பூஜை திருவிழாவும் அவர்கள் இடையே நடைபெற்று வருகிறது. இதையும் நான் நாகை வாழ் மீனவர்களிடம் கொண்டாடப்பட்டு வந்ததை கண் கூடாக பார்த்துள்ளேன். ஏனோ இன்று அங்கு சென்று பார்க்க முடியாத நிலைமை. இப்பொழுதும் அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை.நான் அறிந்தவரை பல இடங்களில் கிருத்துவ பாதிரியார்களின் ஆதிக்கம் மீன் பிடி தொழிலில் உள்ளது. அவர்கள் கூறுவதுதான் சட்டமாக உள்ளது. தங்கள் அதிகாரத்தை கொண்டு பல மீனவர்களை மதம் மாற்றி உள்ளனர். இந்த இழி நிலை மாறவேண்டும். மதம் மாறியவர்கள் மீண்டும் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும். இந்து மக்கள் கட்சியின் பணிகளை நான் மனதார பாராட்டுகிறேன் அய்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *