‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

(1)

சிவ பரம்பொருளின் மேல் கொண்ட காதலால் தன் பக்தியென்னும் கருப்பஞ் சாற்றினிலே, தமிழ்த் தேன்கலந்து, ஞானப் பால்கலந்து, சிவநெறிச் செழுங்கனித் தீஞ்சுவை கலந்து வாசகம் பாடிய மணிவாசகப்பெருமான் வான் கலந்த பெருநாள் வரவிருக்கிறது. திருப்பெருந்துறை, தில்லை ஆகிய தலங்களில் இந்நாள் வெகு ப்ரசித்தம். தில்லை பெரியகோயிலில் ஞானாகாச நடனமாடி ஸபா பிரவேசம் செய்யும் கூத்தர், மணிவாசகரை தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளும் காட்சி கண்டு இன்புற புறக்கண் மட்டும் போதாது.

மூவர் முதலிகளில் நின்றும் வேறுபடுத்தி, வாதவூரர் என்று தனித்து வழங்கப்படும் மணிவாசகர், இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட விதமும், அவர் பாடல்களில் பரவலாக இருக்கும் தத்வ விசாரங்களும் அறிந்து மேம்பட ஆயுசு ஒன்று போதாது. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம், அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர் கைக்கொண்ட கருத்தியல், அவரோடு தொடர்புடைய தலங்கள் இவற்றையெல்லாம் அறிதல் அன்பர்க்கு பெருவுகப்பாம்.

மாணிக்கவாசகர் – ஆவுடையார் கோயில்: சந்திரபிரபை வாகனம்.

அது நிற்க. உலகளாவிய வரலாற்று கருத்துக்களத்தில், சமயங்களின் வரலாறு அறிதல் சற்றே கடினமான கார்யம் தான். சமயச்சார்புடையோர் பெரும்பாலும் அதை தங்கள் பக்ஷத்தில் பொருத்தி பார்த்தே பேசுவர். அதை அறிவியல் ரீதியான காலக்கணக்குகளை கொண்டு அளவிடுதல் பெரும்பாலும் இயலாமல் போகும். அது அப்படி இருக்க, அச்சமயத்தின் பேரில் நம்பிக்கையில்லாவிடினும் பரவாயில்லை, ஆனால் காழ்ப்போடு இருப்பவர்கள் இப்படிப்பட்ட கார்யங்களில் இறங்கினால் அது அவரவர் அறிவறிநிலையை பிரதிபலிக்குமன்றி மற்றில்லை.

தென்னிந்தியாவில் சைவ சமயம், சங்கம் மருவிய காலம் முதல் செம்மை பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. (அதற்கும் முற்பட்டதென்பது சில ஆய்வாளர்கள் கருத்து.) அதையடுத்து வந்த காரைக்கால் பேயார் முதலான நாயன்மார் பெருமக்கள் பலபடிகளாலும் இறைவனைத் தமிழால் பாடிப் பரவினர். இவர்தம் காலக்கணக்கெல்லாம் அறிந்து சொல்லப் பலநிலைகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். அதெல்லாம் ஆராய்ந்து அறிஞர்கள் அவரவர் காலத்தில் கிடைத்த குறிப்புகள் கொண்டு சில நிர்ணயங்களை செய்துள்ளார்கள். இது போல அவ்வடியார் பெருமக்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை குறித்தும் பலரும் ஆராய்ந்து முடிவுகளுக்கு வந்துள்ளனர். இது போன்ற சமயம், சமயத்தின் வளர்ச்சிக் காலம், தத்வ பேதங்கள், அவை சார்ந்த சமூகவியல், சமூக மாற்றங்கள் இவையெல்லாம் அறிய சமயம் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாராய்ச்சிகள் பொதுமக்களும் அறியும் வண்ணம் நூல்களாகவோ தொகுப்புகளாகவோ வரவேண்டும்.

அப்படி வந்த நூல்களில் சமீபத்தில் சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது. சித்தாந்த பெருமன்றம் இது போல வரலாற்று ஆய்வு தலைப்புகளை, ஆய்வாளர்களைக் கொண்டு பேசவும் எழுதவும் செய்வது வரவேற்று பாராட்டத் தக்கது. அந்நூலில் மாணிக்கவாசகரின் கால ஆராய்ச்சி, அரிமர்த்தன பாண்டியன் யார் என்பதை பாண்டிய குலோதயம் என்னும் வடமொழி நூல் கொண்டு நிர்ணயம் செய்யும் பாங்கு, மாணிக்கவாசகர் எழுப்பிய திருப்பெருந்துறை கோயில் எது என்பன போன்ற ஆராய்ச்சிகள் மிகவும் நேர்த்தியாக, வாதங்களும், காரணிகளும் எளிதில் புரியும்படி எடுத்து முன்வைக்கப்பட்டுள்ளது. என் போன்ற, வரலாற்றில் ஆழ்ந்த அனுபவமோ, அறிவோ, கல்வியோ இல்லாத, வரலாற்று நாவல்கள் கூட அதிகம் படித்தறியாத, ஆர்வம் மட்டுமே உள்ளவர்க்கும் விளங்கும்படி எளிமையான மொழியில் யாத்துள்ளார்கள். இதற்காக என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

அந்நூலில் மேற்சொன்ன தலைப்புகள் போக சில ஆராய்ச்சி தலைப்புகளை எடுத்துள்ளார் நூலாசிரியர். அதில் ஒன்று திருப்பெருந்துறையில் இப்போது பிரபலமாக இருக்கும் ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி திருக்கோயில். அக்கோயிலின் விக்ரஹ ப்ரதிஷ்டை, பூஜா கார்யங்கள், அனுஷ்டானங்கள் இவையெல்லாம் ஆழ்ந்து அறிந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை. அதை இவர் போன்ற மூத்த ஆய்வாளர் நிச்சயம் செய்திருப்பார். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அப்படி ஆய்ந்தறிந்த அவர் தம் கண்டுபிடிப்புகள் மிகவும் புதிதாக உள்ளது. அதனால் அத்திருக்கோயில் பற்றிய இவரது கண்டுபிடிப்புகளில் சந்தேகங்கள் பலதும் எழுந்துள்ளது.

சமீபத்தில் மாணிக்கவாசகர் பற்றி ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காகத் தரவுகள் சேர்க்கும் போது திருப்பெருந்துறைத் திருக்கோயில் பற்றியும் அதன் தத்வ விவரங்கள் பற்றியும் அங்கு இறைவனுக்கு வழிவழியாட்செய்யும் பூஜகர்கள் தம் கருத்து, இத்திருக்கோயில் பற்றிய மற்ற ஆய்வுகள் எல்லாம் கருத்தில் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் இந்நூலும் வெளிவந்ததால் ஆர்வமிகுதியால் வாங்கிப் படித்தேன். மற்றைய பகுதிகளில் தேர்ந்த ஆய்வுக்குறிப்புகளுடன் இருந்த செய்திகள் சிலவிடங்களில் எவ்வித பின்புலமும் இல்லாமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் மட்டுமே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழறிந்த, திருநீறு பூசும் அடியார் எல்ல்லோருக்கும் கடமையான படியால் அவற்றில் சில சந்தேகங்களுக்கு மட்டுமாவது இங்கே விடையளிக்க முயல்கிறேன்.

அஜபாநடன த்யாகராஜரின் அடி தொழுது தொடர்கிறேன்.

(2)

நூல் அறிமுகம் – தலைப்புகளும், பக்கங்களும்:

இந்நூலுக்குள் நுழையும் முன் இதில் விளக்கப்பட்டுள்ள தலைப்புகளை பார்க்கலாம். பதிப்பாசிரியரின் (முனைவர்.சா.சரவணன் ஐயா அவர்கள் ) உரையை தொடர்ந்து நூலாசிரியர் முனைவர். ஆ.பத்மாவதி அம்மையார் அவர்கள் மூன்று தலைப்புகளில் கட்டுரைகள் வரைந்துள்ளார். அதில் முதலில் ஆவுடையார் கோயில் பற்றியும், அடுத்து திருப்பெருந்துறை திருத்தலத்தில் உள்ள ஆதி கைலாசநாதர் என்ற பெயரில் உள்ள தொன்மையான மற்றோர் கோயில் பற்றியும், நரியை பரியாக்கிய தத்துவம் என்ற தலைப்பில் ஒன்றுமாம்.

இவைத்தவிர மூன்று வெவ்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்ட பழைய கட்டுரைகள் பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. அவை முறையே:

1. நரியும் – பரியும், ஆசிரியர் திரு.சிவயோகி.இரத்தினசபாபதி பிள்ளை
(வெளியீடு: “சித்தாந்தம்,1968,மலர் – 41,இதழ் – 11 & 12)

2. மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி, ஆசிரியர் திரு. கே.ஜி. சேஷய்யர், மதுரை தமிழ்ச் சங்கத்தின் 13வது ஆண்டுக் கூட்டத்தில் வாசிக்க பெற்றது.
(செந்தமிழ் பத்திரிகையில் பின்னர் வெளிவந்துள்ளது)

3. திருப்பெருந்துறை என்பது தமிழ்நாட்டு ஆளுடையார் கோவிலே – ஆசிரியர் திரு.எஸ். இராதாகிருஷ்ணன் ஐயர் B.A., F.M.U.,
(செந்தமிழ் பத்திரிகையில் வெளிவந்த மேற்சொன்ன கட்டுரைக்கு அதே பத்தரிகையில் பின்னர் எழுதிய மறுப்புக் கட்டுரை)

A5 அளவில் அச்சிடப்பட்டுள்ள இந்நூலில் மொத்தம் 184 பக்கங்கள். இதில் பதிப்பாசிரியர் உரை 6 பக்கங்கள், பின்னிணைப்புகள் எல்லாம் சேர்ந்து 102 பக்கங்கள். தலைப்பு, படங்கள் இவையெல்லாம் 8 பக்கங்கள். இந்திய தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை பகுதிகள் 6 பக்கங்கள். இதெல்லாம் கழித்தால் நூலாசிரியர் தம் கருத்துக்கள் எழுத்து வடிவில் 62 பக்கங்கள் மட்டும் தான். சரியாக நூலின் அளவில் இரண்டில் ஒரு பங்கு.

ஆனால் அதில் அவர் சொல்ல வந்துள்ள மூன்று தலைப்புகளையும் சாதுர்யமாகவே தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக முதல் தலைப்பு. மாணிக்கவாசகர் தம் சரித்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அவர்தம் ஆலயத் திருப்பணியை பற்றிய விசாரம். இன்று நாம் திருப்பெருந்துறை திருத்தலத்தில் பார்க்கும் புகழ் பெற்ற ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயில் தான் உண்மையில் மணிவாசகர் எடுப்பித்த திருக்கோயிலா என்னும் கண்ணோட்டதோடு ஆராய்ச்சியை துவங்குகிறார். கட்டிடக்கலையியல், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் காரணங்கள் சிலவற்றை தெளிவாக முன்வைத்து இக்கோயிலாக இருக்கவியலாது என்பதை கூறுகிறார். இது முதல் கட்டுரையின் முன்பகுதி.

அப்படியாயின் இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன.

ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது?

இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்?

இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்.

அங்கு விசாரம் செய்யப்படும் கருத்துக்களையும் அதற்கு நம் தெளிவுகளையும் இனிப் பார்க்கலாம்.

(3)

மணிவாசகர் எடுப்பித்த திருப்பெருந்துறை கோயில்:

சுந்தரர் தொகுத்த திருத்தொண்டர் தொகையில் இடம் பெறாததால், மாணிக்கவாசகரை சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடவில்லை. அதனால் மற்றைய நாயன்மார் சரித்திரம் போலன்றிக்கே இவர் தம் வரலாறு அறிய நாம் தமிழிலும் வடமொழியிலுமாக உள்ள வேறு நூல்களை துணைக்கொள்ள வேண்டியதாயுள்ளது. அந்நூல்களிலெல்லாம் கருத்து மாறுபாடுகள் பெருமளவில் இல்லை. அங்கனாயினும் இறைவன் அவருக்கு திருப்பெருந்துறையில் நயன, ஸ்பர்ச மற்றும் திருவடி திக்ஷைகளால் அருளிய பாங்கும், அத்திருத்தலத்தில் மாணிக்கவாசகர் ஒரு திருக்கோயில் எடுத்து இறைவனை வணங்கிய செய்தியும் எவ்விதக் குழப்பமுமின்றி பேசப்பட்டுள்ளது.

ஆகையால் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் இறைவனுக்கு திருக்கோயில் எடுப்பித்தார் என்பதில் எதுவும் விசாரமில்லை. ஆயினும் திருப்பெருந்துறை என்னும் ஊர் எங்கு உள்ளது என்பதும், மாணிக்கவாசகர் அவ்வூரில் எடுப்பித்த கோயில் எது என்பதும் வரலாற்று ஆய்வாளர்களால் இன்றும் பேசப்படும் ஒரு தலைப்பு. திருப்பெருந்துறை என்பது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் தான் என்பது பெரும்பாலும் அனைவரும் ஒப்புக்கொண்டது தான். (அது கேரளத்தில் இருக்கும் வைக்கம் ஷேத்திரம் என்ற கூற்று அடிப்படையில் சில தவறான அனுமானங்களை கொண்டது. அதை பற்றி மற்றொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்)

அடுத்த கேள்வி, ஆவுடையார் கோயில் என்ற பெயரில் இன்று விளங்கி வரும் கோயில் தான் மாணிக்கவாசகர் எடுப்பித்ததா என்பதுதான். திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீஆத்மநாதசுவாமி கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கிறது. விசாலமான கட்டிடக்கலைக்கும், மிகவும் நுணுக்கமான சிற்பக்கலைக்கும் பெயர்பெற்று விளங்கும் இக்கோயிலின் கருங்கல் கொடுங்கைகள் மிகவும் ப்ரசித்தம். முனைவர் ஆ.பத்மாவதி அம்மையார் இக்கோயிலின் கட்டிடக்கலை அமைப்பு, சிற்பவியல், கல்வெட்டுகள் ஆகியவற்றை பேசிமுடித்து இக்கோயிலின் காலம் பொ யு 16-17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கணிக்கிறார். இதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்கும்படியாகவேயுள்ளது. தமிழகக்கோயில்கள் இந்நிலப்பரப்பை ஆண்ட பல மன்னர்கள் காலங்களிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. அளவில் பெருத்து, அழகியலிலும் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டு 8-9 ஆம் நூற்றாண்டு தொடங்கி சற்றேறக்குறைய ஆயிரமாண்டுகள் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. ஆயினும், இக்கோயில்களில் தொன்மைக்கு சான்றாய் ஓரிரு சிற்பங்கள், கல்வெட்டுகள்(அல்லது துண்டுக் கல்வெட்டுகளாயினும்) இருக்கும். ஆனால் இக்கோயிலில் அது போல் வரலாற்று தொன்மைக்கு சான்றாய் எதுவுமே இல்லை என்பது உண்மையே. அதனால் இத்திருக்கோயில் மாணிக்கவாசகர் எடுத்ததுதானா என்ற சந்தேகம் ஞாயமே.

ஆவுடையார் கோயில் – கருவறை விமானம்

இதுவரை கருத்துக்களின் அடிப்படையில் நம்மோடு ஒன்று பட்டு ப்ரயாணிக்கும் நூலாசிரியர் இதற்கு பின் தான் தம் அனுமானங்களை அடுக்குகிறார். ப்ரபல சிவஸ்தலமாக விளங்கும் இக்கோயில் அங்கு ஏற்படும்முன் அந்த இடத்தில் என்ன இருந்தது என்று யூகிக்க துவங்கி தம் ஆராய்ச்சி விளையாட்டை துவங்குகிறார்.

அவர் தம் கேள்விகளில் முதல் சில கேள்விகளை பார்ப்போம்  (தொடர்புடைய நூலின் பக்கங்கள் படங்களாக இங்கே).

1. இத்திருக்கோயில் கருவறையில் லிங்கபாணம் இல்லாமல் ஆவுடையார் மட்டும் உள்ளது. அதில் லிங்க பாணத்தை பொருத்த துளை இருக்கிறதா, இல்லையா?

2. இருக்கிறதென்றால், ஏன் லிங்கபாணம் பொருத்தப்படவில்லை?

3. இல்லையென்றால் அது ஆவுடையார் இல்லையே. அப்படியாயின் அது என்ன?

இவர் தம் ஆராய்ச்சியின் (உள்)நோக்கத்தை இந்த 3 கேள்விகளுக்கு விடைகாணும் பாணியிலேயே எளிதில் அறியலாம்.

முதல் கேள்வி மிகவும் ஞாயமானது. ஆராய்ச்சி பார்வையில்லாமல் கூட ஆவுடையார் கோயிலின் கருவறையை பார்க்கும் யாருக்கும் எளிதில் எழும். இதற்கு பதில் காணுதல் அவ்வளவு கடினமான கார்யமில்லையே. அத்திருக்கோயிலில் இறைவனுக்கு தொண்டு புரியும் பூஜகர்களை கேட்டால் சொல்லியிருப்பார்கள் அவ்வாவுடையாரில் துளையிருக்கா இல்லையாவென்று. அவர்களிடம் கேட்க மனம் விரும்பாவிட்டாலென்ன, திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை அணுகியிருந்தால் அவர் தெளிவு படுத்தியிருப்பாரே. அவரை தொடர்பு கொள்ள சித்தாந்த பெருமன்றத்தார் உதவியிருப்பார்களே. இப்படி அடிப்படை ஆதார தோற்றுவாயில்களாக உள்ள யாரையும் சென்று கேளாமல் செய்யப்படும் இது போன்ற விளையாட்டுகள் எந்த வகை ஆராய்ச்சியை சேரும்?

லிங்க ப்ரதிஷ்டைக்கு துளை இருக்கிறதா இல்லையா என்பதை கொஞ்சமும் ஆராயாமல், ஆசிரியர் ஆகக்கூடிய இரண்டு காட்சிகளை விவாதிக்கிறார்.

துளை இருந்து, லிங்கபாணம் அமைக்கப்படவில்லையென்றால், ஏன் அமைக்கப்படவில்லை என்பது அடுத்த கேள்வி. கல்வெட்டு ஆதாரங்களின் படி (இந்திய தொல்லியல்துறை ஆண்டறிக்கை 1925) இக்கோயிலின் மண்டபத்தில் உள்ள பாடல் கல்வெட்டு மூலம் பொயு 1599-1603க்கு இடைப்பட்ட காலத்தில் இத்திருக்கோயில் பெருமளவில் ஒரு திருப்பணி பரதேசி முத்திரை வாமதேவ பண்டாரம் என்பவரின் மேற்பார்வையில் நடந்து இருப்பது தெரிகிறது. அவர் திருவாவடுதுறை மடத்தின் நியமனத்தால் அவ்வூரின் கிளைமடத்தில் இருந்து தொண்டு செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி திருப்பணி காலத்திலிருந்தே கோயிலுடன் தொடர்புடைய திருவாவடுதுறை ஆதீனத்தாரிடம் இக்கேள்விகளை முன்வைக்காமல் அல்லது கலந்து தெளிவு பெறாமல் மனம் போன போக்கில் ஒரு முடிவுக்கு வருவது எவ்விதத்தில் ஆராய்ச்சியாகும்?

இந்த கருத்தையெல்லாம் 3-4 வரிகளில் முடித்துவிட்டு, முக்கியமான மூன்றாவது கேள்விக்கு பாய்ந்து தன் கற்பனை முடிவுகளுக்கு அடித்தளம் அமைக்கிறார் ஆராய்ச்சியாளர். அது வேறொன்றுமில்லை, அந்த ஆவுடையாரில் துளை இல்லாமல் இருப்பின், அது ஆவுடையாராகாது. அது ஒரு பீடம் தானே(இதில் பீடம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்). அப்படியாயின் அந்த பீடத்தின் மேல் இருந்தது யார் என்ற கேள்வி.

இன்னும் துளையிருக்கிறதா இல்லையா என்ற 2வது கேள்விக்கே விடை காணப்படவில்லை. அதற்குள்ளாக துளையில்லாமல் இருந்தால் அது பீடம் தானே. அந்த பீடத்தில் இருந்த இறை வடிவம் யாரென்று கேள்விகேட்டு, அவராகவே ஒரு முடிவுக்கு வந்து மேலே நகர்கிறார்.

(அது யாரென்ற கேள்வியோடு மட்டும் முடித்திருந்தாலும், ஆர்வத்தால் வரலாற்று நாவலாசிரியர்களான அறிஞர் பெருமக்கள் மூலம், பாண்டிய ப்ரதாநி ஒருவர் பாண்டிய நாட்டில் எடுத்த திருக்கோயிலை பற்றி எதையாவது கற்பனை வண்ணம் பூசி மெருகேற்றி எழுதி, ஏற்கனவே நாவல் வழி வரலாறறியும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு விருந்து படைத்திருப்பார்கள். இப்போதும் தட்டில்லை, அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு இன்னும் ஆறுமாதங்களுள்ளன.)

அந்த இறைவடிவம் யாரென்றும், ஏன் ஆராய்ச்சியாளர் அந்த முடிவுக்கு வந்தார் என்பதையும் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

சித்தம் தெளிவீர்காள் , அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ , முத்தி யாகுமே !!

(சித்தமாசு நீங்கி, அறிவு தெளிவு பெற்று, சிவானந்த முக்தியடைய, ஸ்ரீ த்யாகேசப்பெருமானை மலர்தூவி வழிபடுமாறு காழிப்பிள்ளையர் பாடுகிறார். ஆரூர் பூங்கோயிலின் நான்கு கோபுர வாயிலிலும் நிறைய பூக்கடைகள் உண்டு என்பது மேலதிகச்செய்தி)

(4)

கோயில் அமைப்பில் குழப்பமும் தெளிவும்:

மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயிலின் கருவறையில் இருப்பது என்ன மூர்த்தம்? லிங்கபாணம் ஏன் இல்லை? ஆவுடையாரில் துளை உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு தெளிவேதும் இல்லாமல், அது பீடமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் துவங்கி, அது பீடம் தான் என்று அடுத்த வரியிலேயே எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல் அறிவித்து, அப்படியானால் அந்த பீடத்தின் மேலிருந்த தெய்வம் எது என்று நகர்கிறார் ஆசிரியர். (மன்னிக்கவும்,இவ்விடம் தொடங்கி இவரை ஆராய்ச்சியாளர் என்று அழைக்க மறுத்து ஆசிரியர் என்றே விளிக்கிறேன் )

இது போன்று செய்யப்படுவது ஒரு வித உளவியல் தாக்குதல். இந்நூலை படிக்கும் வரலாற்று ஆர்வமோ, தெளிவோ, ஆசிரியரின் பின்புலமோ அறியாத சைவ அன்பர்கள், இந்நூல் சித்தாந்த பெருமன்றத்தால் வெளியிடப்பட்டது என்பதை மட்டும் கருத்தில் கொண்டு வாங்கி படித்து குழம்பிப்போவார்கள். இப்படி ஒரு படுபாதகச்செயலை செய்தல் தானவர்க்கு எளிதாம், அன்றி சான்றோர் செயலாகுமா? தனிமனித நம்பிக்கையை அற்பமான வாதங்களால் சிதைக்கலாமென்றெண்ணி சிரிப்புக்கு உள்ளாகிறார் ஆசிரியர்.

சரி, இந்த மேதாவிலாச ஆராய்ச்சியின் விளைவாக அந்த பீடத்தில் (ஆசிரியர் மூன்றே வரியில் அது பீடம் தான் என்று சாதித்தே விட்டார்.) என்ன தெய்வம் இருந்தது என்று முடிவுக்கு வருகிறார் என்று பார்க்கலாம். அது எப்படி, ஏன் என்பதை பிறகு விளக்குகிறேன்.

நூலின் இந்த கட்டுரை பகுதிக்கு “அவரின்றி வேறு யார்?” என்று அழுத்தமாக ஒரு தலைப்பிட்டுள்ளார். அந்த தலைப்பின் த்வனியே அவர் கொண்டுள்ள சார்பு ஸர்வநிச்சயமாக விளங்கும். கட்டுரையின் முதல் வரி, சைவ அடியார்களுக்கு சம்மட்டி அடி. “அப்பர், ஞானசம்பந்தர் செய்த சைவ மலர்ச்சிக்குப் பின்னர் சிவன் வீரக்கடவுள், வெற்றிக்கடவுள்!! அதற்கு முன்னர்..??” என்று துவங்குகிறார்.நிற்க.

(தொடர்புடைய நூல் பக்கங்களின் படங்கள் இங்கே)

இதில் உற்று நோக்கினால் புரியும் இவரின் ஆழ்மனது அங்கலாய்ப்பு, பக்தி இயக்கக்காலமாக கருதப்படும் காலகட்டத்தில், “சைவ மறுமலர்ச்சி” என்று கூட சொல்லாமல், “சைவ மலர்ச்சி” என்கிறார். இதன் மூலம் அவர் நிறுவ விழைவது என்ன? சைவம் என்ற சமயமே மூவர் முதலிகள் காலத்தில் தான் தமிழகத்தில் மலர்ந்தது என்ற பச்சைப்பொய்யை அடியாரிடம் பரப்ப வேண்டிய எண்ணம் தான். தொல்தமிழர் வாழ்க்கை குறிப்புகளுக்கு நமக்கு சான்றாக கிடைக்கும் சங்கநூல்களிலெல்லாம் சிவனாரின் பெருமைகள் பாடப்படவில்லையா? இறைவனின் வீரச்செயல்கள் பேசப்படவில்லையா? இவர்கள் அதையெல்லாம் அறியாதவர்களா? நிச்சயம் இல்லை.

தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே மதமாக இருந்தது, அவற்றை அழித்து சைவ வைணவ சமயங்கள் மலர்ந்தன என்னும் கருத்தோடு, அடிப்படையில் யோசிக்கும் திறனற்ற சில விஷமிகள், ஆராய்ச்சி என்ற பெயரில் பரப்பிய பொய்யுரையை மெய்யெனக் கற்று, அந்த இழி செயலை செம்மையாய் செய்யும் பண்பின் வெளிப்பாடு தான் இது. இதனால் இவர்கள் அறிவிக்க விழைவது? தமிழகத்தில் சிவ வழிபாடு பரவியது பொயு 6-7 ஆம் நூற்றாண்டில் தான் என்பதே.

ஆவுடையார் கோயில்: மாணிக்கவாசகருக்கு தீட்சை

அடிப்படையில் சைவ சமய விஷயஞானமிருந்தால், மூவர் முதலிகளுக்கு குறைந்த பக்ஷம் ஒன்றிரெண்டு நூற்றாண்டாவது முன்பே பிறந்து சிவனைப் பாடிய காரைக்கால் பேயாரின் நூல்களை புரட்டியாவது பார்த்திருப்பார். சிவனாரின் வீரச்செயல்களை வரிசையிட்டுப்பாடியுள்ளாள் அற்புதத் திருவந்தாதியில். விஷயமறியாது பிதற்றுவோருக்கு எளிதில் புரியவைக்கலாம். ஆனால் விஷமமாக அறிந்து கொண்டு விஷத்தைக் கக்குவார்க்கு பொறுமை காக்கவேண்டிய அவஸ்யமில்லை.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், நூலாசிரியரின் கருத்துப்படி அந்த பீடத்தின் மேல் இருந்த தெய்வம் யார் என்று சொல்லட்டுமா? இந்திரன். அதற்கு அம்மை சொல்லும் காரணங்கள் இன்னும் நகைச்சுவை. (நாற்காலியை பிடித்துக்கொண்டு வாசிக்கவும். ஒரே தாவலில் ஒன்பது யோஜனை தாண்டப்போகிறார்.)

சிவனாரின் அட்டவீரட்ட செயல்கள் பரவலாகும் முன், தமிழகத்தில் இந்திரன் தான் வீரக்கடவுளாம். போரில் இறந்த வீரர்கள் வீரசுவர்க்கமான இந்திரலோகம் ஏகுவராம். அவர் தான் மழைக்கும் நீர்நிலைகளுக்கும் இறைவனாம். அதனால் தான் எல்லா ஊரிலும் நீர்நிலைகளின் கரையில் குதிரை மற்றும் யானைப்படையுடன் “அய்யன் மகா சாஸ்தா ” நிறுவப்பட்டிருக்கிறாராம். சாஸ்தா தான் இந்திரனாம்…!!

மனோவேகம், வாயுவேகமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கும் இந்நூலாசிரியரின் ஆராய்ச்சி வேகம்.

ஆக, பீடம் —> இந்திரன் —> சாஸ்தா.

///சாஸ்தாதான் மஹாராஜா. சபைக்கு அதிபதி. அதனால் அவர் சபையில் தான் ஊர்க்கூட்டமும் பொதுக்கூட்டமும் நடக்கும். பின்னர் அந்த இடத்தை விஷ்ணு பிடித்து சபாபதி ஆகியிருக்கிறார். இதற்கெல்லாம் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. /// இது நூலாசிரியரின் கூற்று.

நேரடியாகவே கேட்க்கிறேன். என்ன தான் வேண்டும் நூலாசிரியருக்கு? அக்கோயில் திருமாலின் கோயிலென்று சொல்ல விழைகிறாரா? இந்திரன் சாத்தனாகி, சாத்தன் திருமாலானார் என்றால், இவையென்ன இந்நாளைய மந்திரி பதவிகளா, அடித்து பிடுங்க? சிவபெருமான் மீது ஏனிந்த காழ்ப்பு நூலாசிரியருக்கு? இந்திரன் மீது என்ன கரிசனம் இவர்களுக்கு? பதில் மிகவும் எளிது. சமீப காலமாக சில அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்த பின்புலத்தில் இருப்பவர்கள் மிகவும் முயற்சித்து செய்து வரும் ஒரு கார்யம், ‘தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்தில் சமணமும், பௌத்தமும் தழைத்து விளங்கியது. அக்காலத்தே சமுதாயமே அமைதி, அறம், அன்பு ஆகியன சார்ந்து இருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம், சைவ வைணவாதி வைதீக சமயங்களை பரப்பி சமண பௌத்தத்தை வீழ்த்தினார்கள். அதுவரை எல்லோரும் ஒன்றென்று இருந்த சமுதாயம், பல படிநிலைகளாக பிரிந்தது’ என்னும் உளுத்துப்போன பொய்தான் அது.

உலக வரலாற்றில் சமயம் சார்ந்த அரசியல் எல்லா காலத்திலும், எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளன. அவற்றால் நிகழ்ந்த மாற்றங்களும் எண்ணற்றவை. இவற்றை சரியான ஆவணங்கள் கொண்டு காலக்கணக்கோடு ஆராய்ந்து அறிவிக்கவேண்டுமே தவிர, காழ்ப்பு கொண்டு ஆராயக்கூடாது. ஆஸேது ஹிமாசலம் பாரத புண்ய பூமியில் விளங்கி வரும் திருத்தலங்களெல்லாம் சமண-பௌத்த தலங்கள் என்று பிதற்றுவார் உண்டு. அவர்களை நகைத்து புறந்தள்ளலாம். ஆனால் வரலாற்றுத்துறையில் அனுபவத்தோடு, இப்படி ஒரு விஷமக் கற்பனையை செய்து ஆராய்ச்சி என்றிதற்கு பெயரிட்டுள்ளதை கண்டிக்க வேண்டியது கட்டாயம்.

மயிலை சீனி வேங்கடசாமியாரின் கதை புத்தகங்களைப் படித்துத்தேறிய அடிப்பொடிகள் இப்படி பேசலாமெனினும், இதை சைவ சித்தாந்த பெருமன்றம் ஆராய்ச்சி என்று உச்சிமேல் கொண்டாடி, இதை சொற்பொழிவாக நிகழ்த்திய அபத்தம் மட்டுமில்லாமல், நூலாக வேறு பதிப்பித்து இக்காழ்ப்பை ஆவணப்படுத்துவானேன்? சைவ சமய வரலாற்றை ஆராய்ந்து சொல்ல அறிஞர்கள் மலிந்து விட்டனரா தமிழகத்தில்? சிவனாருக்கே வெளிச்சம்.

ஆகட்டும். இந்திரன் அல்லது இந்திரனாக மாறிய சாஸ்தா தான் அங்கு கோயில் கொண்டிருந்தார் என்பதை நிர்தாரணம் செய்ய நூலாசிரியர் கைக்கொண்ட இரண்டு நகைச்சுவை யுத்திகளை சொல்லி, மேலே போகலாம்.

1. கோயிலின் மண்டப ப்ராகாரங்களில் குதிரை சிலைகளும், அவற்றை தாங்கியிருக்கும் வீரர் சிலைகளும் மலிந்து கிடக்கின்றனவாம். சிவன் கோயிலில் எதற்கு இத்தனை குதிரைகள்? ஐயனார் கோயிலில் தானே குதிரைகள் இருக்கும்? அதனால் உள்ளேயிருந்தவர் சாஸ்தா தான்.

2. இங்கேயுள்ள அம்மையின் பெயர் யோகநாயகி. சாஸ்தா யோகபட்டத்துடன் யோகநிலையில் இருப்பவர். அதனால் அவர் தேவியும் யோகநாயகியாகவே காட்டப்படுவார். அதனால் அக்கோயில் இறைவியும் யோகநாயகியென்றே இருத்தல் வேண்டும். இதுவும் ஒரு முக்கியமான சான்று.

வெய்ய வினை தீர , ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ , வையம் உமதாமே

ஸ்ரீ த்யாகராஜ மஹாராஜோ விஜயதே.

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

கட்டுரையாசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் கட்டிடக் கலை நிபுணர்.  கோயில் கலைகள், சிற்பவியல், சமயம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்.  இவற்றைக் குறித்து தொடர்ந்து உரையாற்றியும், எழுதியும்  வருகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

7 Replies to “‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1”

 1. திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செய்வதே அறிவுடைமை. ஸ்ரீமாணிக்க வாசகா் வரலாறு குறித்து இவ்வளவு விசயங்கள் உள்ளதா ?

  பண்டீதர்கள் தங்களின் பாண்டியத்தை பறை சாற்ற நடத்தப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் கேடுதான்.வீண் மனித வள விரயம்.

 2. சைவ சித்தாந்த பெருமன்றம் சைவத்தை இழிவு படுத்தும் செயலை செய்துள்ள இந்த பத்மாவதி என்பவரின் நூலை வெளியிட்டதன் மூலம் தனது அறிவு மற்றும் ஞான வறட்சியை வெளிப்படுத்தி உள்ளது. சிவபிரானுக்கு உரு, அரு , அருஉரு என்று மூன்று நிலைகள் உண்டு. நடராஜர், தட்சிணாமூர்த்தி ஆகியவை சிவபிரானின் உரு, இலிங்கத்திருமேனி அருஉரு, சோதி வடிவம் அரு . சைவத்தை பற்றி ஒன்றும் அறியா அறிவிலிகள் இத்தகைய பொய்யான வரலாற்று திரிபுகளை எழுதுவதன் மூலம் , இந்து மதத்தின் மீது தங்களுக்கு இருக்கும் ஞானம் சூனியம் என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்து கின்றனர்.

 3. உயிர் சார்ந்ததின் வண்ணமாகும் தன்மையுடையது.

  முனைவர் ஆ. பத்மாவதி எவருடன் சார்ந்து அவர்தம் கல்வெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று ஆராயுங்கள். அவருடைய சொற்பொழிவுகள் அடங்கிய காணொளியை யூடியூப்பில் கேட்டு அவர்தம் சிந்தனைத் திறன் எவ்விதம் உள்ளது என்பதை ஆராயுங்கள்.

  அவர் காணொளிகளைக் கேட்ட மாத்திரத்தில் அவர்தம் தென் இந்திய சமய வரலாற்றுத் தெளிவு எவ்விதம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

  அதன்பின், ஏன் மணிவாசகரின் வரலாற்றை இலக்கியங்களின் வழியும் மணிவாசகர் காலத்தில் புத்தத் துறவிகளோடு நடந்த விவாதம் எந்த நூற்றாண்டில் நிகழ்ந்திருக்குமென்று ஏற்கனவே ஆய்வு கட்டுரைகள் இருக்க அவற்றை அறியாது கல்வெட்டு ஆராய்ச்சிகளின் வழி வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் அந்நூலை இயற்றினார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  சோழியன் குடுமி சும்மா ஆடாது!

  இந்நூல் வெளியாவதற்கான பின்புலம் ஒன்று இருக்க வேண்டும்!

  அதற்கு ஏன் சென்னை சைவ சித்தாந்த கழகம் துணைப் போக வேண்டும்?

  ஆழமறியாமல் காலை விட்டு விட்டார்கள் போலிருக்கின்றது.

 4. முனைவர் திருமதி.பத்மாவதி, அவர்கள் தமிழர் கலங்க படுத்தவே “காலமும் கருத்தும் “,என்ற நூலை ஐயா முனைவர் திரு.சரவணன், துனையுடன் (),இயற்றி இருக்கிறார் இது அவர் கள் படித்த படிப்புக்கு உகந்த செயல் அல்ல, மாணிக்கவாசகர் மலர்அடிகள் போற்றி போற்றி, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.

 5. சிவாய நம
  அடியேனும் தங்கள் கருத்துகளுக்கு உடன்படுகின்ரேன்.

 6. ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமாக அருவமாகக்கண்டு தியானிக்க ஏற்பட்ட தலமாகும். இது சாதாரண மனித அறிவிற்கு உட்பட்டதல்ல. இது உணரவேண்டிய ஒன்று என்பதை அறிவாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 7. இதுபோன்ற ஆராய்ச்சிகளால் மேலும் திருவாசக நூலின் அருமை பெருமை உலகறியப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *