ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

உடலும் மனமும் சேர்ந்தே உலகில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்பது தான் அனைவருக்கும் இயல்பாக பொதுப்புத்தியில் தோன்றுகிறது. எனவே, இவற்றையே சேதனம் (உணர்வு) என்று சொல்லி விடலாமே? இவைகளைக் காட்டிலும் வேறாக ஆத்ம சைதன்யம் உள்ளது என்று எவ்வாறு கூற முடியும்?

ஆத்ம சைதன்யத்தைச் சார்ந்தே
உடலும் புலன்களும் மனமும் புத்தியும்
தங்கள் செயல்களில் இயங்குகின்றன
சூரியனின் ஒளியில்
மக்கள் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்வது போல. 

– ஆத்மபோதம் 20 (ஸ்ரீ சங்கரர்) 

आत्मचैतन्यमाश्रित्य देहेन्द्रियमनोधियः ।
स्वक्रियार्थेषु वर्तन्ते सूर्यालोकं यथा जनाः । २०॥

சூரிய ஒளி என்பது இங்கு பொதுப்பொருளில் ஒளி என்பதைக் குறிக்கும். இருளில் ஒரு பொருளும் துலங்குவதில்லை, ஒளியே அவற்றைப் பிரகாசப்படுத்துகிறது. அது போல, ஆத்ம சைதன்யமே ஜடப்பொருள்களான உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றுக்கு உணர்வு நிலையைக் கொடுக்கிறது. இந்த உபமானத்தில் மற்றோர் கருத்தும் உள்ளது. சூரியன் உதித்ததும் மக்களனைவரும் எழுந்து தங்கள் காரியங்களைத் தொடங்குகின்றனர். சிலர் நல்ல காரியம் செய்கின்றனர், சிலர் கெட்ட காரியம் செய்கின்றனர். அவர்கள் அனைவரையும் தூண்டிய போதிலும் (சோதனம்), இந்த நல்ல, கெட்ட காரியங்களின் பலன்கள் தன்னொளியால் தானே பிரகாசிக்கும் (சுயம்பிரகாசம்) ஒளிப்பொருளான சூரியனைச் சென்று தீண்டுவதில்லை. அது போல, உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சென்று தீண்டுவதில்லை. அது இவையனைத்திற்கும் சாட்சியாக மாத்திரமே உள்ளது.

உலகில் அனைவரும், ‘நான் பிறந்தேன், நான் வளர்ந்தேன், நான் குட்டை, நான் கருப்பு, நான் பார்க்கிறேன், நான் கேட்கிறேன்’ என எல்லாவற்றையும் தன்னை (ஆத்மாவை) சார்ந்ததாகத் தானே என்ணுகின்றனர்? பின்பு ஆத்மா எந்த விகாரமும் (மாறுபாடுகளும்) அற்றது என்று எவ்வாறு கூற முடியும்?

உடல் புலன்கள் ஆகியவற்றின் குணங்களும் செய்கைகளும் 
மாசற்ற சத்தியமும் ஞானமும் (ஸத்-சித்) ஆன ஆத்மாவிடம் இருப்பதாக
பிழையாக எண்ணுகின்றனர்
பகுத்தறிவின்மையால் 
ஆகாயத்தில் நீலநிறம் முதலான தன்மைகள் உள்ளன 
என்று எண்ணுவது போல. 

– ஆத்மபோதம் 21 

देहेन्द्रियगुणान्कर्माण्यमले सच्चिदात्मनि ।
अध्यस्यन्त्यविवेकेन गगने नीलतादिवत् ॥ २१॥

கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்

(வானத்தின் நீலநிறம் பற்றிய உண்மை அறிவு நவீன அறிவியலில் Raman Effect போன்ற கருத்தாக்கங்களால் தான் முழுதாக விளக்கப்பட்டது, அதற்கு முன்பு அது யாருக்கும் தெரியாது என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் இங்கு மிக இயல்பாக சகஜமாக, அந்த அறிவியல் கொள்கையை சங்கரர் ஒரு உவமையாக எடுத்தாண்டிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்).

ஆனாலும், ஒவ்வொருவரும், *நான்* இதனை செய்கிறேன், *நான்* இதனை அனுபவிக்கிறேன் என்று தான் எண்ணுகின்றனர். இந்த செய்கைத் தன்மையும், நுகர்ச்சித் தன்மையும் உடலையும் புலன்களையும் மட்டும் சார்ந்ததாகக் கூற முடியாதாகையால், அவை ஆத்மாவிடம் இருப்பதாகத் தானே கூறவேண்டும்?

அக்ஞானத்தினால்
மனதின் போக்குகளான 
செய்கைத்தன்மை முதலானவற்றை
ஆத்மாவில் இருப்பதாக கற்பித்துக் கொள்கின்றனர் 
நீரின் அசைவுகளை 
நீரில் தோன்றும் நிலவின் அசைவுகளாக எண்ணுவது போல. 

– ஆத்மபோதம் 22 

अज्ञानान्मानसोपाधेः कर्तृत्वादीनि चात्मनि ।
कल्प्यन्तेऽम्बुगते चन्द्रे चलनादि यथाम्भसः । २२॥

நீரில் நிலவின் பிம்பத்தைப் பார்க்கும்போது  நிலவு அசைவதாகத் தோன்றுகிறது. உண்மையில் அசைவது நீர்தானேயொழிய நிலவல்ல. ஆகாயத்திலுள்ள நிலவுக்கு அசைவு ஏதும் இல்லை. அதுபோல, செய்கைத் தன்மையும் (கர்த்ருத்வம்) நுகர்ச்சித் தன்மையும் (போக்த்ருத்வம்) மனத்தைச் சார்ந்தவை. அவை மனத்தின் போக்குகளே (உபாதி) அன்றி ஆத்மாவுடையதல்ல. மனதின் ஸ்வரூபத்தையும் ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் பிரித்தறியாதவர்களுக்கே அக்ஞானத்தால் மனதின் போக்குகள் ஆத்மாவைச் சார்ந்தவை என்று தோன்றுகின்றன.

ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக வேதாந்த தத்துவத்தின் ஆழமான கருத்துக்களை படிப்படியாக அற்புதமாக விளக்கிச் செல்கிறது. சங்கரரின் சீடரான பத்மபாதர் இந்நூலுக்கு சிறப்பான உரையொன்றையும் எழுதியிருக்கிறார்.

ஞானத்தேடலில் ஆரம்பப் படிநிலைகளில் உள்ளவர்களும் கற்றுப் புரிந்துகொள்ளும் படியான ‘லகு ப்ரகரணம்’ (எளிய தத்துவநூல்) என்று இந்த நூல் கூறப்படுகிறது.

ஆத்மபோதம் முழுமையாக தமிழுரையுடன் வெளிவந்திருந்திருக்கிறது

1)  சிருங்கேரி பீடம் வெளியிட்டுள்ள  ‘ஜகத்குரு கிரந்தமாலா’ என்ற சங்கரரின் நூற்தொகுதியில் பாகம்-7ல் இந்த நூல் உள்ளது. வெளியீடு:  ஸ்ரீ லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர பிரதிஷ்டா டிரஸ்ட், ராஜபாளையம். மேலும் விவரங்கள் இங்கே.

2) சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம், சுவாமி ஸுப்ரஜானந்தரின் தமிழுரையுடன் வெளியிட்டுள்ள பதிப்பை ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

One Reply to “ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்”

 1. ஸ்ரீ சங்கரரின் ஆத்ம போதம் அரிய அத்வைத நூல்.இதைப் பயில்வதற்குமுன் சாதகர்கள் அதற்கேற்ற தகுதியைப் பெறவேண்டும். இது வெறுமனே படித்துப் பொழுதுபோக்குவதற்கான நூல் அல்ல.
  இதனை ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் அருமையான தமிழ் செய்யுள்களாக ஆக்கித் தந்திருக்கிறார். இதன் பின்னணி சுவையானது. ஒரு முஸ்லிம் அன்பர் இதனை சம்ஸ்கிருத மூலத்திலிருந்து மொழிபெயர்த்து, தமிழ் செய்யுள்களாக எழுதி ஸ்ரீ மஹர்ஷிகளுக்கு அனுப்பிவைத்தார். இதைப் படித்துப் பார்த்த மஹர்ஷிகள், ஏதோ உந்துதலினால் தானே எழுதத் தொடங்கினார்.அவருக்கு அப்போது பார்வை சரியில்லை; மின்சார விளக்கும் இல்லை. இருந்தாலும் flash light உதவியுடன் கிடுகிடுவென இவற்றை எழுதிமுடித்தார். உதாரணத்திற்குச் சில பாடல்கள்:

  மங்கலம்

  ஆன்மாவின் போதமரு ளாசானாஞ் சங்கரனவ்
  வான்மாவுக் கன்னிய னாவனோ –வான்மாவா
  யென்னகத் தேயிருந் தின்றுதமிழ் சொல்வானு
  மன்னவ னன்றிமற் றார்.

  நூல்

  தவங்களினாற் பாவந் தவிர்ந்தவராய்ச் சாந்தி
  யவிர்ந்தவரா யாசையறுத் தாராய்ப்- பவமுக்தி
  யாதரமார்ந் தாருக் கடையத் தகுமான்ம
  போதமா மீது புகல். 1.

  அறிவொன்றே நேர்முக்தி சாதன மாகும்
  பிறசா தனங்களின் பேறா –மறிவின்றி
  யாகாது முக்தியுற லக்கினியின் றிப்பாக
  மாகாத வாறென் றறி. 2.

  அறியாமைக் குப்பகை யன்றதனாற் கன்ம
  மறியாமை தன்னை யகற்றா- தறிவே
  யழிக்குமறி யாமையொளி யந்தகா ரக்கும்
  பொழிக்குமா யென்றே யுணர். 3.

  திக்கிடங் காலமுத றேடாம லென்றுமெத்
  திக்குமார்ந் தேகுளிர்முன் றீர்ப்பதா- யெக்களங்கு
  மற்றனித் யானந்த வான்மதீர்த் தத்துட்டோய்
  வுற்றவ னார்செய்கை யொன்றின்றி-மற்றவன்
  யாவு மறிந்தோனா யெங்குநிறைந் தாரமிர்த
  னாவ னெனவே யறி. 68.

  படிப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும் இவை மிக எளிய பாடல். இதைப் பதம் பிரித்து எழுதிக் கொண்டால் பொருள் தானாகவே விளங்கும்! மலைக்க வைக்கும் கலைச் சொற்கள் இல்லை. நமது சமய, ஆன்மீக இலக்கியத்தில் [வாய்மொழியாகவே கூட] சிறிது பரிச்சயம் இருந்தாலும் பொருள் எளிதில் விளங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *