இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான். அவர் நாவில் அயனும் அறியா பெருமையுடைய இசைப்பயில் ஷடாக்ஷரத்தை, தன் திருக்கை வேலால் தீட்டினான். தானே காக்கும் தமிழால் தன்னை பாடும்படியும் பணிந்தான். தமிழோடு இசைப்பாடல் பாடியறியாதவரான நம் ஸ்வாமி, செய்வதறியாது திகைக்க,”முத்தை தரு பத்தி..” எனத்தொடங்கும் முதலடியை எடுத்துக்கொடுத்தான் குமரன். அருளாளர் தம் எழுத்து என்றும் மறையாமல் மாறாமலிருப்பதற்கு காரணம் அவையெல்லாம் ஆண்டவனே அடியெடுத்து கொடுத்ததாலன்றி மற்றில்லை. இவை காலங்கள் கடந்து நிற்பவை. எல்லா காலத்தும் பொருள்படுபவை. எண்ணியதை கைக்கொண்டு தருபவை.
அடியெடுத்து அருளிய கந்தனின் பெருமைகளை, “வாக்கிற்கோர் அருணகிரி” என்று புகழும்படி தன் வாக் வண்மையால் வாரி வழங்கினார் நம் ஸ்வாமி.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே !!
படித்தோர் பாமரர் வாசியர கேட்போரெல்லோரையும் பரவசப்படுத்தும் பாடல் இது. “முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது. அஃதாவது “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண! முத்திக்கொரு வித்துக் குருபர…” என்பது வரை சிவபெருமானே சொல்வது போல் உள்ள சிவவாசகம் என்றும், “முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து….” என்பது வரையில் குஹவாசகம் என்றும், அதற்கு மேலுள்ள பாடல், நம் ஸ்வாமியின் குருவாசகம் என்றும் கருதுவர். இந்த மேன்மையால் இந்த பாடலில் சிவ, குஹ, குரு வாசகங்கள் மூன்றும் நிறைந்துள்ளன என்று கொண்டாடலாம்.
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண :
முத்து போன்ற வெண்மையும் நேர்த்தியும் கொண்ட பல்வரிசையும் (முத்தைத்தரு பத்தி), அழகிய சிரிப்பும் (திருநகை) உடைய தெய்வயானையின் (அத்திக்கு – ஹஸ்திக்கு) தலைவனே (இறை), சக்தி வேல் தாங்கிய சரவணப்பெருமாளே (சத்திச் சரவண) என்பது பொதுவாக வழங்கும் பொருள். குமரனின் பெருமை பாடத்துவங்கிய நம் ஸ்வாமி, தேவஸேனையின் சம்பந்தத்தையிட்டுச் சொல்லுவானேன் எனில், தேவஸேனை க்ரியா சக்தியின் அம்ஸமாகிறாள். அவளையிட்டு கர்மயோகத்தில் முதற்முன்னம் இழிந்து பக்தி பண்ணவர் என்பதால் அவளை கொண்டாடி, அவள் சம்பந்தத்தால் குஹனின் பெருமையை பாடுகிறார். க்ரியா சக்தியான இவள் தன் திருநகைப்பு எல்லாம் சித்திக்க வைக்கும் வல்லமை பொருந்தியது. அது கொண்டு பந்தபாசம் கூட எளிதில் அறுக்கலாம். அத்தகைய நகையை பாடுதற் முறைதானே ? மேலும், இந்த நகை முத்தி, பத்தி, திரு ஆகியவை தரவல்லது. திருவருளும், அத்தால் விளைந்த பத்தியும் (அன்பும்), பத்தியின் ஏற்றத்தால் முக்தியும் கிடைக்கும் என்று பொருள் கொள்ளவேண்டியது. இத்தகு மேன்மை பொருந்திய தேவஸேனையின் தலைவன் ஆனபடியால், அருளும், பத்தியும், முத்தியும் இவனே தரவல்லான் என்றாகிறது. மேலும் இவையெல்லாம் நம் ஸ்வாமிக்கு சக்த்யாயுதத்தை கொண்டு நாவில் தீற்றினான் என்பதால் திருக்கை சக்திவேலை கொண்டாடுகிறார்.
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பரமற்கு:
மேற்சொன்ன காரணத்தால், முத்தி தரவல்ல ஒரு தனி வித்து இவனே (முத்திக்கொரு வித்து) என்றாகிறது. மேலும் முக்திக்கான வித்தை(பீஜத்தை) குறிப்பதாகக் கொண்டு அது ஹம்ஸ மந்திர உபதேஸம் பற்றியது என்றெண்ணத் தட்டில்லை. இந்த ஞானத்தை அவரிவரென்றில்லாமல், உலகமுதல்வனான பரமேச்வரனுக்கே உபதேஸித்து, அவருக்கே குருவும் ஆனவன். அதனால் குருபரனென விளங்குபவன். இவ்வாரெல்லாம் குகனை புகழ்வது நம் ஸ்வாமியில்லை. பரசிவனாரே (எனவோதும் முக்கட்பரமற்கு). அதுவும் முக்கட்பரமன். மூன்று கண்களாக சூர்ய, சந்த்ர, அக்னியை உடைய பரமசிவன். வேதத்தின் மத்ய பதமாக விளங்கும் திருவைந்தெழுத்தால் உணரப்படுபவன். அவனாலே முக்திக்கொரு தனி வித்து என்று கொண்டாடப்படுபவன் என்றால், குமரனின் மேன்மையை வேறேயென்ன சொல்ல?
சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண:
வேதமுதல்வனான பரமேஸ்வரன் அப்படிச்சொல்ல காரணம் என்ன? புராண ப்ரமாணமாக விளங்கும் தகப்பன் ஸ்வாமியான சரித்திரத்தால் (சுருதியின் முற்பட்டது கற்பித்து), அயனும், அரியும், அரனும் கூட அறியாமல் நின்ற வேத ரஹஸ்யமான “ஸதாசிவோஹம் – ஸுப்ரமண்யோஹம்” என்னும் உயர்படியை விளக்கினான். ப்ரணவத்தின் விரிவே ஸ்ருதிகள். ஆனபடியால் அது ஸ்ருதிக்கு முற்பட்டதாகிறது. ஸ்ருதிகளை பாலனம் செய்த ப்ரஹ்மன், அதன் முற்பட்ட வடிவிற்கு பொருளறியாமல் நிற்க, அவனை அந்த பணியில் அமர்த்திய பரமேஸ்வரனும் அதே நிலையில் கலங்கி நிற்க, மூலப்பொருளின் முழுமையான வடிவை குருவாய் இருந்து உபதேஸித்தான் ஞானஸ்கந்தன். அவனை கொண்டு அரிக்கும், அயனுக்கும்(இருவரும்) தொடங்கி முப்பத்தி முக்கோடி அமரர் கூட்டத்திற்கும் (முப்பத்து முவர்க்கத்து அமரரும்) அடிபணிய உபதேஸித்து அருளினான்.
ஸ்ருதி அநாதியானது. அதன் தோற்றத்தின் காலம் என்பது இன்றளவும் வாதம் செய்யப்படுவது. அதற்கும் முற்பட்ட ப்ரணவம், ஸ்ருஷ்டி காலம் தொடங்கி நிலைத்திருப்பது. இதையெல்லாம் வகுத்தவனுக்கே பொருள்விளங்கா நிலையில், அவனுக்கும் சேர்த்தே உபதேஸித்தானெனில் குமரனின் நிலை என்னவென்று அறிய இதுவே சிறந்த உதாஹரணமாகும்.
பத்துத்தலை தத்தக் கணைதொடு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது:
இனி முருகனின் மாமனான மாலவனின் வீர ப்ரதாபங்களை வரிசையாகச் சொல்கிறார்.
‘சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் ஹரி நாரணன்றன்’ பெருமையை முதலில் பாடுகிறார். தஸக்ரீவமும் அறுந்து விழும்படி கணைகள் தொடுத்தான் (பத்துத்தலை தத்தக் கணைதொடு). இது இலங்கையர் கோனிடமிருந்து அமரரை சிறைமீட்க மேற்கொண்ட யுத்தம். ‘செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மை’ என்றும், ‘காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேரா அயோத்தியர் வேந்தன்’ என்றும் கொண்டாடுவார் விட்டுசித்தர்.
இதில் வானரங்களாலான சேனையாவது இருந்தது. முன்பொருநாள் பாற்கடலை கடந்து அம்ருதமெடுக்க முனைந்த போது, மத்தாகிய மந்தர மலை நிலைகுலைய, அதை தான் மட்டும் முன்னின்று, கூர்மாவதாரம் கொண்டு, தோள்வலிமையால் தாங்கினான். ‘மாயிரும்குன்றம் ஓன்று மத்தாக, மாசுணம் அதனோடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடு விண்டலற, படுதிரை விசும்பிடைப் படர, சேயிரு விசும்பும் திங்களும் சுடரும், தேவும் தாமுடன் திசைப்ப, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்’ என்று இந்நிகழ்ச்சியின் சீர்மையை பாடுவார் கலியன்.
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக, பத்தற்கு இரதத்தைக் கடவிய:
முன்னர் சொன்ன இரண்டும் அவுணர் மாளவும் அமரர் வாழவும் வேண்டிச் செய்த வீரச்செயல்கள். ஆனால் அடியடைந்தாருக்காய் செய்த அற்புதங்கள் இவ்வீரச்செயலுக்கும் மேம்பட்டன. அப்படி இரண்டு செயல்களை இனிப் பாடுகிறார்.
பாஞ்சாலி குழல் முடிக்கவே நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி பெற, யுத்த தர்மத்திலிருந்து சிறிதும் பிறழாமல் கண்ணன் செய்தவை நாமறிந்ததே. அதிலும் வனவாஸத்தில் திரௌபதியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றவனும், யுத்தத்தின் பதிமூன்றாம் நாள் சக்ர வ்யூஹத்தில் அபிமன்யு இறக்க காரணமானவனுமான ஜெயத்ரதனின் தலையைக் கிள்ள தன் சக்ராயுதத்தை கொண்டு, சூரியனை மறைத்து, பகல் பொழுதை சில வினாடி இரவாக்கினான் (பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக). இப்படியும், இன்னும் பல வகையாலும், யுத்த பூமியில் அர்ஜுன ஸாரதியாகி, அவனுக்கு தேரூர்ந்து (பத்தற்கு இரதத்தைக் கடவி), பாண்டவர்களை வழிநடாத்தி போரில் அறம் வெல்லும்படி செய்தான்.
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்:
இப்படி அடியவருக்காய் எளிமையும், அவார் தம் எதிரிகளுக்காய் வீரமும் பொங்கும் குணக்குன்றான பச்சை வண்ணன், துன்பமெனின் கடிதில் வந்து அருள்வதில் கார்மேகமொக்கும் கண்ணனே(பச்சைப்புயல்), மெச்சும்படி(மெச்சத் தகுபொருள்) பக்தரை பரிபாலனம் செய்து அருளுபவன் கந்தன் என்கிறார்.
இதனால் அடியவருக்கு துயர்வருங்கால், அவர் முன் உடனே வந்து காக்கும் குணம் பெருக்க உடையவன் கந்தன் என்னும்படி.
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே:
என்னையும் தாங்கி, பரிவு கொண்டருளும் நாள் என்றோ? என்று கேட்கிறார் நம் ஸ்வாமி.
பாடலின் முதல் பாதியால், ஞானம் வழங்குவதில் தன் தந்தையினும் மேலானவன் என்றும், தன் வீரத்தால் அடியார் துயரறுத்து அருளுவதில் தன் மாமனான மாலவனினும் மேலானவன் என்றும் கொள்ளாமல், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யன் சிவ – விஷ்ணு ஐக்ய ஸ்வரூபன் என்று கொள்ள வேண்டும். (பரமேஸ்வரன் தன் அருள் பாலனாகவும், அரிகேசவன் தன் மருகோனாகவும் இருப்பதால் தான் ஞானமும் வீரமும் தாங்கி நம்மை பரிபாலனம் செய்து அருளுகிறான் என்று சீரலைவாய் அமர்ந்த பெருமாளை நம் ஸ்வாமியும் பாடுகிறார்.)
பாடலின் அடுத்த பாதி முழுவதும், அடியார் வாழவும், அவுணர் மாளவும் வேண்டி ஆறுமுகன் நிகழ்த்திய யுத்தம் வெகு விமர்சையாக பாடப்படுகிறது. சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட. யுத்தங்களை வர்ணித்து பாடும் பரணி இலக்கியத்திற்கான லக்ஷணங்களை வெகு லாவகமாக சுருக்கி, சுவை பட, சந்தம் நிறைந்த சொற்கட்டோடு இங்கு பாடியிருக்கிறார் நம் ஸ்வாமி.
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி:
யுத்த பூமியின் கோரத்தை ரசித்த படி பைரவி தேவி ஆடுகிறாள். தன் கருத்த மேனியில் மாலை சூரியன் படிந்து மஞ்சள் நிறமும் மின்ன, காலில் கட்டிய சிலம்பின் மணிகள் தித், தித், தை!! தித், தித், தை!! (தித்தித்தெய) என்று ஜதியெழுப்ப , அந்த ஜதிக்கேற்ப தன் பாதங்களால் அடவெடுத்து (ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்து) ஆடிக் களிக்கிறாள்.
திக்கொட்க நடிக்க, கழுகொடு கழுதாட:
அந்த ந்ருத்யத்தின் வீர்யத்தால் போர்க்களத்தில் மட்டுமின்றி, எல்லா திசையும் நடுங்கும் படி (திக்கொட்க நடிக்க) அதிர நடித்தாளாம். அவளாடினால், அவள் கூட்டத்தாருக்கும் கொண்டாட்டம் தானே? அதனால் வானில் பறந்து களித்தபடி, பிணம் கொத்தும் கழுகுகளும் (கழுகொடு), பேய்களும் (கழுதாட) அவளோடு சேர்ந்து குதித்தும் நடித்தும் மகிழ்ந்தன.
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத:
திக்கிற்கொருவராக எண்திக்கும் தாங்கும் பைரவர்கள் எண்மரும் (திக்குப்பரி அட்டப் பயிரவர்) பைரவியின் ஜதிக்கு தகுந்தவாறு தாங்களும் தாளமெழுப்பினர். தொக்கு தொகு வென்றும், த்ரிகடக என்றும் எழுந்த தாளத்திற்கு சமர்களத்தில் பைரவி அழகாக கூத்தாடினாள் (சித்ரப்பவுரி).
கொத்துப்பறை கொட்ட களமிசை:
வீர வாத்யங்கள் முழங்கும் களத்தில் பறையிசை எழுந்தது.
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ:
அந்த போர்க்களத்தில் கிடைத்த ரத்த மாம்ஸ வாசனையால் ஈர்க்கப்பட்டு வயதான ஆந்தைகள் (முதுகூகை) மரப்பொந்துகளிலிருந்து ‘குக்குக்குகு குக்குக்’ என்று சப்தமெழுப்பின. ஆரவாரத்தோடு அவையெழுப்பிய ஓசை “ஓடும் எதிரிகளை ஓடிப்பிடி (புக்குப் பிடி), குத்தி புதைத்துவிடு (குத்திப்புதை)” என்பது போலிருந்தது. அப்படி குரலெழுப்பியவை இரவு நேரத்தில் பறந்து வட்டமடித்து நின்றன.
நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட்டு :
வீரபாகுத்தேவரை விட்டு சமாதானம் செய்ய முயன்றும், தானே நல்வழிகளை எடுத்துச் சொல்லியும், சூரபன்மனிடம் எவ்வித மாற்றமும் இல்லை. உண்மையில் அவனை நட்பு கொள்ளவே குமரனும் முயன்றான். அது விரும்பாமல், தன் அகந்தையால் தர்மத்தை வெறுத்து ஒதுக்கியதன் விளைவே அவனது மரணம். மனம் திருந்தி, திருவடியில் அபயம் புகுந்தவனை, தன் மயிலாகவும், குக்குட த்வஜமாகவும் கொண்டான் என்பதும் நாமறிந்ததே. இப்படி ஸ்நேஹம் பாராட்டாத அசுரர்களை சம்ஹரித்து, யுத்த காலத்தில் ஆடிய பைரவிக்கும், அவள் பண்டு பரிவாரங்களும் பலியிட்டான் ஸ்கந்தன்.
குலகிரிகுத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே:
இந்த பலி போர்க்களம் புகும் முன்பே, கிரௌஞ்ச மலையை பொடிபொடியாய் வீழ்த்தியதிலே தொடங்கியது. கிரௌஞ்சகிரியை குலமலை (குலகிரி) என்கிறார். சூரனின் பட்ணத்திற்குள் யாரும் புகமுடியாமல் தடுத்து வந்தான் கிரௌஞ்சன். அவன் நொடிந்து போனான் (குத்துப்பட) என்ற செய்தியை கேட்டபோதே சூரன் கலங்கினான். அதுவே அவன் முதல் மரணம். அம்மலையை அஞ்சாமல் தகர்த்தான் என்றபோதே குமரவிடங்கனின் பலம் புரிந்திருக்க வேண்டும். அங்கும் அவன் அஹங்காரம் அவனை சிந்திக்கவிடாமல் தடுத்தது. அம்மலை விழுந்தது போலவே, பலம் பொருந்திய தாரகன், சிம்ஹமுகன், சூரபத்மன் என்று எல்லோரும் மாள வேல் தொடுத்து போர் செய்யவல்ல பெருமாள் என்கிறார்.
சிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும். நம்மை ஆட்டுவிக்கும் ஆணவம், கன்மம் இத்யாதிகளை கொன்று பலியிட்டு, நம்முள் போற்றத்தக்க ஞானம் கலக்கும்படி செய்யட்டும். ஞானதத்வநிதியான ஹம்ச மந்த்ர லக்ஷணம் பெருக்கெடுக்கட்டும்.
(மதுசூதனன் கலைச்செல்வன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
படித்தேன்.மகிழ்ந்தேன். பாராட்டுகின்றேன். தொடரட்டும் அறப்பணி.திருப்புகழ் சமஸ்கிருத பாடல்கள் போல் வல்லினம் ஒங்க வரும் ஒரு அருமையான நூல். அனைவரையும்சென்றடைய வேண்டிய சிறப்பு அதற்கு உண்டு.
wonderful manipravala lyrics. in this songs lord siva,sakthi, vishnu all are worshipped. in my childhood who were week in speech in tamil, were asked by elders to memorise and sing this song. this song was well sung by our TMS in arunagirinathar tamil movie music by t r pappa.
மிகவும் அருமையான விளக்க உரை. இருப்பினும் இன்னும் சற்று எளிய மக்களுக்காக புரியும்படி எளிய தமிழில் அளித்தால் நன்றாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. நன்றி!
எனது கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
மிகவும் விரிவான விளக்கம். மிக்க நன்றி. இப்பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கான பொருளை சொற்பொருள் வடிவில் தனித்தனியே வழங்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.