பேட்ட வெற்றிப் படம் தான். ஆனால், ரஜினியின் வெற்றி அல்ல
ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்…
இவையெல்லாம் கபாலிக்கு முன்.
கபாலிக்குப் பின்னரான ரஜினி ”பச்சைத் தமிழர்’, தமிழ் கேங்ஸ்டர், ஜாதிச் சீண்டல், இஸ்லாமிய அப்பீஸ்மெண்ட், இந்து விரோதம், மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடறவர் (?).
இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான்.
ரஜினி, அர்ஜுன், விஜய்காந்த் போன்றவர்களின் காலகட்டத்திலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ பெயர்கள் கொண்ட அடியாட்கள், வில்லன்கள் படங்களும் வரத்தான் செய்திருக்கின்றன.
ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது.
திமுகவால் முன்னெடுக்கப்பட்ட முதல்கட்ட இந்து விரோதப் படங்கள் பெரிய அளவுக்கு அபாயகரமாக இருந்திருக்கவில்லை. பெரிதும் அது அசட்டு பிராமண எதிர்ப்பு என்ற அளவில் மட்டுமே இருந்தது. அதோடு அப்போது கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் குறைவு. மேலும் திராவிட நாடு என்ற போலி கருத்தியலை மையமாகக் கொண்டு திமுக செயல்பட்டது.
இடைப்பட்ட காலத்திய அர்ஜுன், விஜயகாந்த் வகையறா இஸ்லாமிய எதிர்ப்புப் படங்கள் எல்லாம் தெளிவாக பாகிஸ்தானை அதாவது தொலைதூர எதிரியை வீழ்த்தும் படங்கள். தமிழக சக இஸ்லாமியரை விமர்சிக்கும் படங்கள் அல்ல. அதுபோல் டேவிட் பில்லா, மார்க் ஆண்டனி என்றெல்லாம் வைக்கப்பட்ட பெயர்கள் தாண்டி கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் மேலான வெறுப்பாகக்கூட அவை இருந்ததில்லை. பாதிரியார்கள், கன்யாஸ்த்ரீகள் எல்லாரும் மிக மிக உயர்வான விதத்திலேயே இடைப்பட்ட காலத்துப் படங்களிலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய அரசியல் திட்டமிடல் இல்லாமல் வெறும் சினிமா என்ற அளவில் எடுக்கப்பட்டவையே.
ஆனால், இப்போதைய இந்து விரோதம் என்பது மிகவும் அபாயகரமானது. இன்றைய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முந்தைய காலகட்டங்களைவிடத் தெளிவான இலக்குகளுடன் மிகத் தெளிவான திட்டமிடலுடன் மாபெரும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக இயங்குகிறார்கள்.
இந்து மதம், இந்து அரசியல் கட்சிகள், இந்துத்துவம், சிவசேனை, ஸ்ரீராம் சேனா, பசுப் பாதுகாப்பு இயக்கங்கள் என இந்து தரப்பில் பல வகைகள் இருக்கின்றன.
இந்து அரசியல் கட்சியான பாஜகவுக்கு இந்துத்துவர்கள், சிவசேனை, ஸ்ரீராம் சேனா, தொகாடியா, பஜங்க்தள் என பிற அமைப்புகள், நபர்களுடன் கணிசமான இடைவெளி இருக்கிறது. இது மிகவும் இயல்பான, நியாயமான விஷயமே.
ஆனால், எதிர்த்தரப்பில் இப்படியான பல பிரிவுகளிருந்தாலும் அவர்களுக்கிடையே எந்த விலகலும் கிடையாது. அவர்கள் ஒரே உடலாக, ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபன், பாகிஸ்தான், வஹாபிஸம், பிரிவினைவாத முஸ்லிம்கள், ஒவைஸிக்கள், இஸ்லாமிய வணிகர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என இவர்களிலும் சில வித்தியாசங்கள் உண்டு என்றாலும் பெரும்பாலும் ஒற்றை உடலாகவே இருப்பார்கள்.
அமீர்கான் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை விமர்சித்து இஸ்லாமிய தீவிரவாதத்தை விமர்சித்து என்றும் பேசிவிடமாட்டார். சோனியா காந்தி பாதிரியார்கள் மீதோ கிறிஸ்தவ அடிப்படைவாத இயக்கங்கள் குறித்தோ எதுவும் பேசிவிடமாட்டார்.
சைமனோ, பாரதிராஜாவோ, கமல்ஹாசனோ, விஜய் சேதுபதியோ, பிரகாஷ்ராஜோ, டேனியலோ, ஸ்டீஃபனோ யாராக இருந்தாலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதி பற்றி விமர்சித்து எதுவுமே சொல்லிவிடமாட்டார்கள். இந்து அடிப்படைவாதியை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இந்துக்களை மட்டுமே விமர்சிப்பார்கள். இப்போது ரஜினியும் தனது சமீபத்திய திரைப்படங்கள் மூலம் அந்தக் கும்பலில் ஐக்கியமாகியிருக்கிறார்.
பேட்ட படத்தில் காதலர் தினத்தை எதிர்க்கும் ஸ்ரீராம் சேனா, பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதாகச் சித்திரிக்கப்படும் உத்தரபிரதேசக் குறுங்குழுக்கள் மீதுதான் விமர்சனம் வைக்கப்படுகிறது. காலாவில் சிவசேனை மீது விமர்சனம் வைக்கப்பட்டது (கபாலி படத்தில் மேட்டுக்குடியை வம்புக்கு இழுக்கும் போக்கு இருந்தது).
விஷயம் என்னவென்றால், இந்து இயக்கங்களிடையே இருக்கும் இந்த ஷேடுகள் எல்லாமே இந்துக்களின் பார்வையில், இந்துக்களின் தரப்பில் இருப்பவை மட்டுமே. எதிரிகளுக்கு இந்து அடிப்படைவாதியும் ஒன்றுதான்… எளிய இந்துவும் ஒன்றுதான். இருவருமே எதிர்க்கப்படவேண்டியவர்களே. அழிக்கப்படவேண்டியவர்களே.
எந்தவொரு எளிய இந்துவும் எதிரிகளின் வன்முறை மீது விமர்சனம் வைத்தாலோ இந்து இயக்கங்களின் மீது சாதகமான கருத்து சொன்னாலோ உடனடியாக இந்து அடிப்படைவாதி என்று வெளிப்படையாக முத்திரைகுத்தி ஒதுக்கப்படுவார். எதுவும் செய்யாமல் இருந்தால் மறைமுகமாக ஒதுக்கப்படுவார். அவ்வளவுதான்.
பேட்ட படத்தில் கிறிஸ்தவக் கல்லூரி, கிறிஸ்தவ ரெளடி பற்றியும் காட்டப்படுகிறது. ரஜினி அவர்களையும் பந்தாடுகிறார். மணல் கொள்ளை செய்யும் ஜாதி வெறி பிடித்த தமிழ்க் குழுவும் வருகிறது. தேவாரம், சிங்காரம், பூங்கொடி என்று பெயர்களில் இருந்து எந்த ஜாதி என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு தந்திரம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த ஜாதி என்று தெரிந்துவிட்டால் அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டார்கள். காதலர் தினத்தை எதிர்ப்பவர்களை பாமக அடையாளத்துடன் காட்டவும் முடியாது. எனவே, இந்த விஷயத்தில் வெகுவாக அடக்கிவாசிக்கிறார்.
இஸ்லாம் பிரதர்களை வில்லன்களாகக் காட்டவே முடியாது. ஆக இருக்கவே இருக்கிறது இந்துத்துவ குழுக்கள். அவர்களை வில்லனாக விலாவாரியாகச் சித்திரிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இந்துத்துவ இயக்கங்கள் இருக்கும் இடமே தெரியாதே. அப்படியே இருக்கும் சொற்ப இந்துத்துவர்களும் வெட்டிக் கொல்லப்படத்தானே செய்கிறார்கள். ஆனால், அவர்களைத்தான் வில்லனாகக் காட்டியாகவேண்டும். எனவே தமிழகத்தில் இருந்து ஓடிப் போய் உத்தரபிரதேசத்தில் இந்துத்துவ குண்டாவாக இருக்கும் ஒருவர் என்று படுசெயற்கையாக ஒட்டுப் போடுகிறார்கள்.
மணல் மாஃபியா வில்லனுடைய மகனான அவனை தமிழகத்திலேயே இருக்க வைத்து அவனையே எதிர்த்துப் பந்தாடுவதாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கலாம். அல்லது கிறிஸ்தவ வில்லனையே பிரதான வில்லனாகக் காட்டியிருக்கலாம். இந்தக் கதையில் அவர்கள்தான் இயல்பான வில்லன்களாக இருக்கின்றனர். தமிழ் யதார்த்த உலகிலும் மண்ணைத் திருடி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும் அதே வில்லன்கள்தான்.
உண்மையில் கபாலிக்கு முந்தைய ரஜினி நிச்சயம் அதைத்தான் செய்துமிருப்பார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை ரஜினிகாந்த் தனது நீண்ட தயக்கத்துக்குப் பின் அரசியலுக்கு வர முடிவு செய்த பின்னரான படங்கள் அவருடைய இயல்புக்கும் சிந்தனைக்கும் தேச உணர்வுக்கும் எதிரானதாகவே இருக்கின்றன.
ஜெயலலிதா எப்படி தனது அரசியல் வாழ்க்கையில் ஜெயேந்திரர் கைது, எழுவர் விடுதலை ஆதரவு, சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம், இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு, இந்துவர் படுகொலைகளை அலட்சியப்படுத்தியது, மோதி எதிர்ப்பு, பொருளாதார தனியுரிமை என அவருக்கு சற்றும் பிடிக்காத அவருடைய கருத்துகளுக்கு எதிரான செயல்களைச் செய்யவைக்கப்பட்டாரோ அதுபோலவே ரஜினியும் தனது படங்களில் தனது முந்தைய நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்படவைக்கப்படுகிறாரா?
ஜெயலலிதாவுக்கு கடைசிவரை அம்மா என்ற போலி பிம்பம் உருவாக்கித் தரப்பட்டதுபோல் ரஜினிக்கு மரண மாஸ் என்ற பிம்பம் உருவாக்கித் தரப்படுகிறதா?
கோவை தொடர் குண்டு வெடிப்பு நடந்தபோது எல்லா இஸ்லாமியர்களும் கெட்டவர்கள் அல்ல என்று உடனடியாகப் பதறியபடியே பேட்டி கொடுத்தவர் இந்து அடிப்படைவாத இயக்கங்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் காரணமல்ல… அவர்கள் அப்படித் தூண்டப்படுகிறார்கள் என்றோ இந்துக்கள் எல்லாரும் அதற்காக எதிர்க்கப்படக்கூடாது என்றோதான் சொல்லியிருக்கவேண்டும். ஆன்மிக அரசியல் என்பது அனைவரையும் அரவணைப்பதுதானே. எளியவர்களின் அரசியல்தானே. திரைப்படத்தில் அந்தத் தெளிவு, அக்கறை காணப்படவில்லை.
அதேநேரம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சமூக விரோதிகளை வெளிப்படையாக விமர்சித்தது ஒரு ஆச்சரியமே. நரேந்திர மோதியை பலசாலி என்று பேசியது இன்னொரு ஆச்சரியமே.
மோதி ஆண்டாலும் ராகுல் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்ற ரஜினியிஸம் ஒருபக்கம்…
ஆன்மிக அரசியல் என்ற சாத்விக அறிவிப்பு ஒருபக்கம்…
சமூக விரோதிகள் மீதான விமர்சனம், எதற்கெடுத்தாலும் போராட்டமென்றால் நாடு சுடுகாடாகிவிடும் என்ற வெளிப்படையான அரச அடக்குமுறைவாதம் ஒருபக்கம்…
இந்து விரோதக் கதையாடல்கள் ஒருபக்கம்…
மொத்தத்தில் ரஜினி அல்லது ரஜினியை பகடைக்காயாக வைத்து உருட்டுபவர் மூணு சீட்டுக்காரன் போல் தந்திரமாக விளையாடுகிறார். ஏதோ ஒன்றில்தான் உண்மை ஒளிந்திருக்கிறது.
இவற்றில் என்னவாக இருக்கும்… என்னவாக இருக்கலாம்… என்ற யூகங்கள் கேள்விகளுக்கெல்லாம் இடமே இல்லை. என்னவாக இருக்கவேண்டும் என்று ஒரே ஒரு எதிர்பார்ப்புமட்டுமே உண்டு. கபாலிக்கு முந்தைய ரஜினிதான் வேண்டும்.
பேட்டயில் கபாலிக்கு முந்தைய ரஜினி இருக்கிறார். ஆனால், கபாலிக்குப் பிந்தைய அரசியலுடன் இருக்கிறார்.
அதுதான் பெரிய பிரச்னை.
ஒன்று நல்ல நடிகராகவே இருந்துவிடவேண்டும்.
அல்லது நல்ல அரசியல்வாதியாக வரவேண்டும்.
நடிப்பில் (படத்தில்) அரசியலைக் கலக்கக்கூடாது.
அதைவிட அரசியலில் நடிப்பைக் கலக்கக்கூடாது.
(தொடரும்)
அடுத்த பகுதி >>
// இஸ்லாம் பிரதர்களை வில்லன்களாகக் காட்டவே முடியாது // நீங்க தமிழ் சினிமா பார்த்த்தே இல்லியா? பாகிஸ்தான் தீவிரவாதின்னு ஒரு படத்தில கூட கேள்விப்பட்டதே இல்லியா? தமிழ் படம் 2.0-வையாய்வது பாருங்க.