தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

ஸ்ரீ சங்கரர் அருளிய சௌந்தரிய லஹரியிலிருந்து நான்கு பாடல்கள் (தமிழாக்கம் எனது). தேவியின் திருவிழிகளின் அழகையும் விசாலத்தையும் கருணையையும் முழுமையையும் அற்புதமாக இவை எடுத்துரைக்கின்றன.

பசுபதிக்கு உறைவிடமெனத்
தன் இதயத்தை அளித்தவளே
ஈரம் ததும்பும்
செம்மையும் வெண்மையும் கருமையும் மிளிரும்
உனது விழிகளால்
சோணை கங்கை சூரியபுத்திரி யமுனை என
மூன்று தீர்த்தங்களின் பாவமழிக்கும் சங்கமத்தை
எம்மைப் புனிதமாக்குவதற்காக
உருவாக்குகிறாய்.

– சுலோகம் 54

சோணை நதியின் நீர் செந்நிறமாகவும், கங்கை நதியின் நுரைபுரளும் நீர் தூய வெண்ணிறத்திலும், யமுனை நீர் கறுப்பாகவும் இருக்குமென்பது வழக்கு.

செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.

பவித்ரீகர்தும்ʼ ந꞉ பஶுபதி-பராதீ⁴ன-ஹ்ருʼத³யே
த³யாமித்ரைர்-நேத்ரை-ரருண-த⁴வல-ஶ்யாம-ருசிபி⁴꞉ ।
நத³꞉ ஶோணோ க³ங்கா³ தபனதனயேதி த்⁴ருவமமும்ʼ
த்ரயாணாம்ʼ தீர்தா²னாமுபனயஸி ஸம்பே⁴த³மனக⁴ம் ॥ 54 ॥

மலையரசன் குலதிலகமே
காதுவரை நீண்டு
இறக்கைகள் போல
கூந்தல் கற்றைகளைத் தீண்டும்
உனது இரு விழிகள்
புரமெரித்தவரின் சாந்த மனத்தைக்
கலங்கடிப்பதற்கென்றே
காதுவரை இழுக்கப்பட்ட
மன்மத பாணத்தின் திறமையை
நடித்துக் காட்டுகின்றன.

– சுலோகம் 52

தவத்தில் ஆழ்ந்திருக்கும் ஈசனின் சித்தத்தில் குடிகொண்டிருக்கும் சாந்த ரசத்தைக் கலைத்து சிருங்கார ரசத்தைத் தோற்றுவிப்பதையே பயனாகக் கொண்ட கண்கள்.

…. விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டம் எல்லாம்
பழிக்கும் படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

என்பது அபிராமி அந்தாதி.

அம்புகளுக்கு இருபக்கங்களிலும் இறக்கைகளைக் கட்டுவது மரபு. தேவியின் விழியம்பில் கட்டப்பட்ட இறக்கைகள் போல சுருண்ட கூந்தல் கற்றைகள் இருக்கின்றன.

க³தே கர்ணாப்⁴யர்ணம்ʼ க³ருத இவ பக்ஷ்மாணி த³த⁴தீ
புராம்ʼ பே⁴த்துஶ்சித்த-ப்ரஶம-ரஸ-வித்³ராவண-ப²லே ।
இமே நேத்ரே கோ³த்ராத⁴ர-பதி-குலோத்தம்ʼஸ-கலிகே
தவாகர்ணாக்ருʼஷ்ட-ஸ்மர-ஶர-விலாஸம்ʼ கலயத꞉ ॥ 52 ॥

செவிகளைச் சென்று தீண்டும் உன் விழிகள்
தங்களைப் பற்றிக் கோள்சொல்லுமோ என அஞ்சி
மூடாத கண்களுடன் நீரின் அடியாழத்தில்
ஒளிந்திருக்கின்றன பெண்மீன்கள்.
அபர்ணா,
அவ்விழிகளில் உறையும் திருவும்
பகலில் கருங்குவளை மலர்களின் மூடிய இதழ்க்கதவை விட்டுவந்து
இரவில் அவற்றைத் திறந்துகொண்டு பிரவேசிக்கிறாள்.

– சுலோகம் 56

உலகெங்கும் பார்வையைச் செலுத்தும் தேவியின் விசாலமான கண்களாகிய மீன்களைப் போன்றே மூடாதிருக்கின்றன நீரின் அடியாழத்தினுள் சிறுபெண்மீன்களின் கண்களும். அகமும் புறமும், அமைதியும் இயக்கமும், அண்டமும் பிண்டமும், சிறிதும் பெரிதும் எல்லாம் அவளது அருட்பார்வையின் வீச்சுகளன்றி வேறென்ன?

கருங்குவளை இரவில் மலர்ந்து, பகலில் மூடியிருப்பது. காலராத்ரியும் மோகராத்ரியுமான மகாமாயையின் யோகநித்திரையில் அவளது விழிகளின் சோபையான திரு கள்ளத்தனமாக வெளியே வந்து இரவில் மலர்ந்திருக்கும் புஷ்பத்தின் கதவுகளைத் திறந்துகொண்டு உள்நுழைகிறாள். உதிக்கின்ற செங்கதிரென மகாமாயையின் விழிதிறக்கும் சமயம் மலர்க்கதவம் மூடுகிறது. ஆனால் இரவில் அதனுள் நுழைந்த திரு உள்ளே சிறைப்படவில்லை. வெளிப்போந்து மீண்டும் மகாமாயையின் விழிகளின் சோபையுடன் ஐக்கியமாகி விடுகிறாள்.

பகலில் தாமரை மலருக்குள் நுழைந்து குடைந்து நாள்மறந்து தேனருந்தி அந்தியில் அதன் மூடிய இதழ்களுக்குள்ளேயே அஸ்தமனமாகும் களிவண்டைக் குறித்து காளிதாசன் முதலான கவிகள் எல்லோரும் பாடியிருக்கிறார்கள். அந்தக் கவிவர்ணனையை இந்த சுலோகத்தில் புரட்டிப் போடுகிறார் அன்னையின் பாதத்தாமரைகளில் சதா சஞ்சரிக்கும் வண்டான ஸ்ரீ சங்கரர்.

அபர்ணா = இலையற்றவள் (அ+பர்ணா). ஈசனைக் குறித்து மலைமகள் தவம் செய்கையில் பழுத்து உதிரும் இலைகளைக் கூட உண்ணாமலிருந்ததால் இப்பெயர். கடன்படாதிருப்பவள் (அப+ரு’ணா) என்றும் கூறுவதுண்டு. பூஜித்துக் கேட்கும் வரங்களை உடனுக்குடன் கொடுத்து அனுக்கிரப்பதால் பக்தர்களிடம் கடன்படாதிருப்பவள்.

தவாபர்ணே கர்ணேஜபனயனபைஶுன்யசகிதா
நிலீயந்தே தோயே நியதமனிமேஷா꞉ ஶப²ரிகா꞉ ।

இயம்ʼ ச ஶ்ரீர்ப³த்³த⁴ச்ச²த³புடகவாடம்ʼ குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விக⁴டய்ய ப்ரவிஶதி
॥ 58 ॥

பகலைப் பிரசவிக்கிறது
இரவியென உனது வலது விழி
இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி
சிறிதே மலர்ந்த பொற்கமலமென
உனது மூன்றாவது விழி
பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும்
அந்தியைச் சமைக்கிறது.

– சுலோகம் 48

பகலும் இரவும் எனத் தொடரும் இயற்கையின் லயத்தில் அன்னையின் எழிலையே ஞானியர் காண்கின்றனர். மகாகவி பாரதியாரும் சக்தி விளக்கம் என்ற பாடலில் இதனைப் பாடியுள்ளார்.

காலை இளவெயிலின் காட்சி – அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் – சுடர் நேமி
யனைத்துமவள் ஆட்சி.

அந்தியின் அழகைப் பார்த்து ‘உமை கவிதை செய்கின்றாள்’ என்று வேறொரு பாடலில் மெய்சிலிர்க்கிறார்.

அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

அமைதியொடு பார்த்திடுவாய், மின்னே, பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமைகவிதை செய்கின்றாள், எழுந்துநின்றே
உரைத்திடுவோம், “பல்லாண்டு வாழ்க” என்றே.

– பாஞ்சாலி சபதம் – மாலை வருணனை. அர்ஜுனன் திரௌபதிக்குக் கூறுவது.

அஹ꞉ ஸூதே ஸவ்யம்ʼ தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம்ʼ வாமம்ʼ தே ஸ்ருʼஜதி ரஜனீ-நாயகதயா ।
த்ருʼதீயா தே த்³ருʼஷ்டிர்-த³ரத³லித-ஹேமாம்பு³ஜ-ருசி꞉
ஸமாத⁴த்தே ஸந்த்⁴யாம்ʼ தி³வஸ-நிஶயோரந்தரசரீம் ॥ 48 ॥

One Reply to “தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி”

  1. முழு சவுந்தர்ய லஹரியும் இனிய தமிழில் விளக்கமாக எழுதினால் அனைவரும் மகிழலாம். உதாரணத்துக்கு நான்கை மட்டும் சுவைக்க வைத்து ஆர்வத்தை தூண்டிவிட்டீர்களே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *