ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

நமது கல்வெட்டுகளில் சம்பந்தபெருமான் ஆணைநமதென்றபிரான் என்று அழகாக குறிக்கப்படுகின்றார்.

சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை அருளியவர் ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான்.

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்.

உலகவழக்கில் நாம் பலருக்கு உறுதிபாடுகளை அளித்தாலும், சில விஷயத்தில் நாம் நம்பும் அல்லது நமக்கு நன்றாக தெரிந்த செய்தியை சத்தியமாக என்று முக்கியத்துவம் கொடுத்து உறுதியளிப்போம். காரணம் அந்த செய்தியின் மீது நமக்கு உள்ள நம்பிக்கை.மேலும் அது நடக்கும் என்ற நம்பிக்கை.

உலகவழக்கில் நாம் சத்தியம் என்று சொல்வதுபோல், பெருமான் *ஆணை நமதே * என்று திருமுறைகளில் நமக்கு உறுதியளிக்கின்றார்.

திருநனிப்பள்ளி தேவாரத்தில்,

“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “

என்றும்.

திருவேதிக்குடி தேவாரத்தில்,

“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர்,
அந்தவுலகெய்தி அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”

என்றும்,

கோளறுபதிகத்தில்,

“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”

என்றும்,

சீர்காழி தேவாரத்தில்,

“வான்இடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்
மற்று இதற்கு ஆணையும் நமதே “

-என்றும் ,நான்கு இடங்களில் ஆணை நமதே என்று உறுதியளித்து பாடி அருளியுள்ளார்.

சைவத்திருமுறைகளில் ஞானசம்பந்தபெருமான் மட்டுமே தேவாரங்களை பாராயணம் செய்வோர், ஓதுவோர் வினை கழியும், சிவபுண்ணியம் அடையலாம் என்பதை ஆணைநமதே என்று கூறிஉறுதிபட பாடியுள்ளார்.

சைவத்திருமுறைகளை தொகுத்த ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகளுக்கு இவ்வாக்கு பிடித்தமாகிவிட்டது போல.

அவர் தாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில், சம்பந்தரை, “ஆணைநமதுஎன்னவல்லான் “என்று புகழ்கின்றார். அவ்வரிகள்,

“முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான் “என்பதாகும்.

” ஆணை நமது ” என்று அருளியதால் திருஞானசம்பந்த பெருமானை “ஆணை நமதென்ற பெருமான் “என்று குறிப்பிட்டனர்.

நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர்.

திருமயம் விராச்சிமலை கோயில், குலசேகர பாண்டியன் 16 ஆண்டு சாசனத்தில்,

“பெரிய திருக்கூட்டத்து தவணை முதலியார் மாணிக்கவாசகர் ஆணை நமதென்ற பெருமாள் ஆன கோவில் வாசகப் பிச்சு முதலியார் “என்று ஒருவர் குறிப்பிடப்படுகின்றார்.

பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது.

நார்த்தாமலையில் உள்ள திருமலைக் கடம்பர்கோயில், மாறவர்ம சுந்தர பாண்டியன் ஒன்பதாம் ஆண்டு கல்வெட்டில் கையொப்பம் இட்ட ஒருவர், “குடியுடையான் ஆணை நமதென்ற பெருமாள் ” என்பதாகும்.

இவ்வாறு திருஞானசம்பந்த பெருமானின் ஆணை நமதே என்ற திருவாக்கினை மக்கள் பெயராக சூட்டிக்கொண்டதன் மூலம், சம்பந்தர் பெருமான் மீது அக்கால பக்தர்கள் கொண்ட அன்பும் பக்தியினையும், சம்பந்த பெருமான் மகத்துவத்தையும் நாம் உணர்ந்துக்கொள்ளமுடியும்.

“ஆணை நமதென்ற பிரான் திருவடிகள் போற்றி “

சிவார்ப்பணம்.

(தில்லை எஸ்.கார்த்திகேய சிவம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

2 Replies to “ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்”

  1. அருமையான பதிவு. “ஆணை நமதே” என்று ஆணித்தரமாகச் சொல்லவேண்டு மென்றால் அது அவருடைய தெய்வ அம்சத்தைக் காட்டுகிறது.இதை நன்கு உணர்ந்தவர் அருணகிரிநாதர். அவர் சம்பந்தர் முருகனின் அவதாரமே என்ற கொள்கை உடையவர். இதைப் பல பாடல்களில் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கந்தரந்தாதியின் 29வது பாடலில் சம்பந்தருக்குமேல் வேறு தெய்வமில்லை என்று பாடியிருக்கிறார்.

    திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
    திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
    திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
    திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே

    திகழும் அலங்கல் கழல் பணிவார் சொற்படி செய்ய
    (ஓ) தி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண்
    (பூ) தி கமழும் மலம் கற்பு அருளும் என்னா அமண் சேனை
    (உபா) தி கழு மலங்கற்கு உரைத்தோன் அலது இல்லை தெய்வங்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *