சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

கோள்கள் விண்மீன்கள் ஆகியவை பூவுலக வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிர்ணயிக்க முடியுமா?

stars, galaxies and planetsமுடியும் என சோதிடர்கள் கூறுகிறார்கள். முடியாது என பொதுவாக வானியல் விஞ்ஞானிகள் (astronomers) கருதுகிறார்கள். ஆழ்ந்த உளவியலாளர்கள் (deep psychologists) சில ஆழ்மன உண்மைகளை வெளிப்படுத்தும் ஒருவித கருவியாக சோதிடம் பயன்படுவதாக கருதுகிறார்கள். உண்மையில் சோதிடர்கள் சிறந்த ஆலோசனை வழங்கும் திறமை படைத்தவர்கள் மட்டுமே என்பதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.

ஆதிகால மனிதர்கள் இரவு வான்களில் நிலவும் விண்மீன் கூட்டங்களின் நகர்வுகளில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதை உணர்ந்தார்கள். அவற்றின் மூலம் இயற்கை மாறுதல்களை கணிக்க முடியும் என்பதையும் கண்டறிந்தார்கள். நம் பண்டைய ரிஷிகள் ஒரு ஆழமான ஒழுங்கு பிரபஞ்சமெங்கிலும் கூடவே நம் அக-பிரபஞ்சத்துள்ளும் வியாபித்திருப்பதை உணர்ந்தார்கள். இதனை அவர்கள் ரிதம் என அழைத்தனர்.

நம் அக-பிரபஞ்சத்தை புற பிரபஞ்சத்துடன் இணைத்து இயற்கை சுழலுடன் ஒன்றியதோர் வாழ்க்கை முறையையும் ஆன்மிக சாதனை முறையையும் அவர்கள் நமக்கு அமைத்து தந்தனர். நம் ஒழுக்கம், நம் நடவடிக்கைகள் இவற்றினை நம்மை சுற்றி உள்ள அனைத்துடனும் இணைக்கும் இணைப்புகளை தேடியவாறே இருந்தனர். வேதரிஷிகள் கண்ட இந்த தரிசனத்தை பல தளங்களில் செயல்படுத்த பாரத பண்பாடு முயன்றவாறே வருகிறது. ஜோதிடமும் அத்தகைய ஒரு முயற்சி என்றே கருதவேண்டும்.

தொடக்க காலங்களில் வானியலும் (asronomy) சோதிடமும் (astrology) ஒன்றையொன்று சார்ந்தே இருந்தன. நல்ல நேரம், நல்ல நாள் ஆகியவை ‘நாம் தனியானவர்கள் அல்ல இந்த பிரபஞ்சம் எனும் மாபெரும் இயக்கத்துடன் ஒருங்கிணைந்தவர்கள்’ எனும் உணர்வினை நம்மிடம் ஏற்படுத்த உதவுகின்றன.

இயற்பியலாளர் சுபாஷ் கக் கூறுகிறார் – “வேத தெய்வங்கள் பல நட்சத்திரக்கூட்டங்களின் தலைமை சக்தியாக கருதப்படுகின்றன. ..சோதிடம் எப்படி செயல்படுகிறது? கோள்களோ விண்மீன்களோ பௌதீக ரீதியாக மானுட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ பாதிக்கின்றன என கருதமுடியாது ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சில ஆழ்ந்த ஒழுங்குமுறைகளின் வெளிப்படு தன்மையே சோதிடம் மூலமாக வெளிப்படுகிறது என கருதலாம். அதாவது சோதிடம் என்பது இயற்கையின் நிர்ணய சக்தியினை நாம் நம்க்கு புரியும்படியான சில குறியீடுகள் மூலம் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்பதே ஆகும்.”

சங்க தமிழ் நூல்கள் நம்முடைய இந்த பழமையான பண்பாட்டு அம்சம் பண்டை தமிழர் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாக இருந்ததென்பதை காட்டுகின்றன. திருப்பரங்குன்றக் கோவில் சித்திர மண்டபத்தில் ராசி சக்கரம் ‘சுடர் நேமி’ சித்திரமாக தீட்டப்பட்டு அங்கு வழிபட வரும் மக்கள் கோள்நாட்கள் ஆகியவற்றின் நிலையை அறிய ஏதுவாக இருந்தது என பரிபாடல் தெரிவிக்கிறது.

‘என்றூள் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படு வோரும்’
(பரிபாடல் 19:46-47)

கோள்களின் நிலையின் அடிப்படையில் மழை வருமா என உரைக்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. மழைக்கோளாக வெள்ளி கருதப்பட்டது.அது வடபக்கத்து தாழுமாயின் மழை உண்டாகும் என்றும் தெற்காக எழுந்தால் மழை இல்லை என்பதும் பண்டை தமிழர் நம்பிக்கை ஆகும்.

“வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயம்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
(பதிற்றுப்பத்து 24:23-25)

திருமணம் செய்வதற்கு நல்ல நாளாக திங்களும் ரோகிணி நட்சத்திரமும் கூடியிருக்கும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அகநானூறு சொல்கிறது

அம் கண் இருவிசும்பு விளங்க, திங்கட்
சக்டம் மருண்டிய துகள் தீர் கூட்டத்து
கடிநகர் புனைந்து கடவுட் பேணி
(அகம் 136:4-6 )

[சகடம்-ரோகிணி]

panchangamஇவ்வாறு வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.

ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது. சுவாமி விவேகானந்தரும் சோதிடத்தின் மீதான அதீத நம்பிக்கையை கடுமையாகவே சாடுகிறார்: “பொதுவாகவே சோதிடம் இன்ன பிற மர்மமான விஷயங்கள் குறித்த நம்பிக்கைகள் எல்லாம் ஒரு பலவீனமான மனதின் அடையாளங்கள். எனவே இத்தகைய விஷயங்கள் உங்கள் மனதில் பிரதானமாக விளங்க ஆரம்பித்ததென்றால் உடனே நல்ல மருத்துவரை பார்த்து நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள்“.

குறிப்பாக செவ்வாய் தோஷம் இத்யாதிகளால் திருமணங்களை முறிப்பது அல்லது சில பெண்கள் இத்தகைய நம்பிக்கைகளால் திருமணம் ஆகாமல் இருப்பது போன்றவை சமுதாயத்தில் அதீத சோதிட நம்பிக்கைகளால் – குறிப்பாக தவறான நம்பிக்கைகளால் ஏற்பட்டுவிட்ட விகாரங்கள். குமுதம் சோதிடம் எனும் சோதிட இதழின் ஆசிரியர் ராஜகோபால் கூறுகிறார் – “சோதிடத்தின் பெயரால் வீணான மனக்குழப்பங்களுக்கு இந்துக்கள் இடம் தரலாகாது”.

திருஞான சம்பந்த பெருமான் இத்தகைய மன உளைச்சல்களுக்கு இடம் தராமல் இறைவன் மீதுள்ள நம்பிக்கையால் இவற்றினை கடக்கலாம் என ‘வேயுறு தோளி பங்கன்’ என தொடங்கும் ‘கோளறு திருப்பதிகம்’ எனும் பாடல்களை திருமறைக்காடு எனும் வேதாரண்ய திருத்தலத்தில் அருளியுள்ளார்.

navagrahaஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டொடு ஆறும்
உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

எனக்கூறும் ஞானசம்பந்த பெருமான்,

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

என இந்துக்களாகிய நமக்கு உறுதியாக ஆணையிட்டு கூறியுள்ளதையும் நினைக்கவேண்டும்.

எனவே சோதிடம் என்பது நம் பண்பாட்டின் ஒரு அம்சம். நல்ல நாள் நல்ல நேரம் பார்ப்பது ஒரு கலை. அதன் அறிவியல் பூர்வ தொடர்புகளை கண்டறிவது ஒரு தேவை. அதே நேரத்தில் அதன் பெயரால் மோசடிகள் மூடநம்பிக்கைகளுக்கு நம்மை நாமே பலியாகிவிடாமல் காத்துக்கொள்வது நமது கடமை.

இந்த வீடியோவில் மேற்கத்திய நாடுகளில் ‘வேத சோதிடம்’ (Vedic astrology) எனும் சோதிடக்கலையை அறிவியல் பூர்வமாக சோதிக்கும் நிகழ்ச்சியை காணலாம்.

இதனை நிகழ்த்துபவர் சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பகுத்தறிவு வாத (உண்மையான பகுத்தறிவுங்க) இதழான Skeptic இதழை நடத்துபவருமான மைக்கேல் ஷெர்மர் என்பவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 Replies to “சோதிடம் என்பது உண்மையா பொய்யா?”

  1. தெளிவான, அருமையான விளக்கம் அரவிந்தன். ஜோதிடம் என்ற ஒரு கருவியை நமது வாழ்வில் மகிழ்ச்சிக்காக உபயோகப் படுத்த வேண்டுமே அல்லாது அதற்கு அடிமையாகி விடக் கூடாது என்ற கருத்து நடுநிலைமையாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

    ஜோதிடம் பற்றி முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரை, வேறு ஒரு விதமான பார்வைக்காக –

    ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் – பாகம் 1

    ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் – பாகம் 2

  2. ஜடாயு ஐயா,

    ////தெளிவான, அருமையான விளக்கம் அரவிந்தன். ஜோதிடம் என்ற ஒரு கருவியை நமது வாழ்வில் மகிழ்ச்சிக்காக உபயோகப் படுத்த வேண்டுமே ///

    மகிழ்ச்சிக்காக எப்படி உபயோகிப்பது என்று ஒரு உதாரணம் தர முடியுமா?

    டிவியில் ராசிபலன், கை ஜோதிடம், கல் ஜோதிடம், பிரமிட் ஜோதிடம், நம்பர் ஜோதிடம், எனர்ஜி ஜோதிடம் என்று பல காமெடி நிகழ்ச்சிகள் அடிக்கடி வருகின்றன. அதை எல்லாம் பார்த்து பார்த்து விலா வலிக்க சிரிக்கிறோம். அது ஜோதிடத்தால் நமக்கு கிடைக்கும் நல்ல மகிழ்ச்சி.

    மேலும், திராவிட பகுத்தறிவின் படி ஜோதிடம் சரியா இல்லையா? கோபாலசாமி வைக்கோ ஆகிவிடுகிறார். ஜயலலிதா அம்மையார் ஜெயலலிதாஆ ஆகி விடுகிறார். ஆற்காட்டார் வீராசாமி அவர்கள் வீராஸ்வாமி ஆகி விடுகிறார். இதெல்லாம் நல்ல ஜோசியமா, கெட்ட ஜோசியமா ஐயா? இது பகுத்தறிவா இல்லையா? இதை நம்பலாமா?

    நன்றி

    ஜயராமன்

  3. // மகிழ்ச்சிக்காக எப்படி உபயோகிப்பது என்று ஒரு உதாரணம் தர முடியுமா? //

    இதோ சோதிடம் பற்றிய ஒரு பதிவில் உங்கள் கமெண்டை பார்க்கிறேன்.. சந்தோஷமாக இருக்கிறது. நல்ல உதாரணம் தானே?

    :))

  4. வணக்கம் அரவிந்தன்:

    சோதிடம் என்பது அறிவியலா? ஆம் என்று நீங்கள் வாதிட முயற்சி செய்கிறீர்கள்.

    இங்கு சோதிடம் வேத மரபா, தமிழ் மரபா, அல்லது இரண்டும் கலந்ததா என்ற ஆய்வு இரண்டாம் பட்சம்.

    இயற்கையை ஆய்ந்து எதிர்வு கூற முடியும் என்பதே அறிவியலின் அடிப்படை. Hypothesis, Experimentation, Theory, Prediction, Consistency and Replication, Improvement due to Falsification of contradictory evidence என்பதே அறிவியல் முறையின் சாரம் எனலாம்.

    அந்த வகையில் சோதிடம் ஒரு பல இடங்களில் சறுக்கிறது. சோதிடம் ஒரு பூரண முறை போன்றே தன்னை வெளிப்படுத்துகிறது. எங்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன? எங்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த இந்த சோதிட அணுகுமுறைகளை பிழை என்று ஏடுகளில் பகிரப்படுகின்றன? மேலும், சோதிடம் எதிர்காலத்தைப் பற்றி அல்லது ஒன்றின் தன்மையைப் பற்றி கூறுகையில் consistent ஆக இல்லை. மேலும் வேறு வேறு சோதிடர்கள் ஒரே தகவலைக் குடுக்கும் பொழுது வேறு வேறு மாதிரி சோதிடம் சொல்லுகிறார்கள்.

    மேலே நீங்கள் மைக்கேல் ஷெர்மர் ஒரு குறும்படத்தை தந்துள்ளீகள். நீங்கள் தந்த பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதின் ஆய்வு முறையில் (Methodology)பல குறைபாடுகள் உண்டு. இங்கு முக்கிய குறைகள் சிலவற்றை சுட்ட விரும்புகிறேன்.

    முதலாவதாக இவர் ஒரே ஒரு வேத சோதிடரின் கூற்றுக்களை மட்டுமே ஆய்வுகு உட்படுத்துகிறார். அடிப்படையில் பல வேத சோதடர்களின் கூற்றுக்களை பெற்று ஒப்புடுவது, consistency வலுச் சேர்த்திருக்கும்.

    இரண்டாவது கூற்றுக்கள் subjective ஆக அமைந்துள்ளன.
    இந்த நபர் அழகானவர். இந்த நபர் கலைகளில் ஈடுபாடு உள்ளவர். இந்த நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். இந்த நபருக்கு சமிபத்தில் ஒரு பாரிய இழப்பு ஏற்பட்டது.

    இவை எல்லாம் subjective கூற்றுக்கள். அதை அந்த நபர்களிடமே எவ்வளவு பொருந்துகிறது என்று கேட்பதும் இங்கு subjetive ஆக அமைகிறது. ‘இந்த நபர் அழகானவர்’ என்ற கூற்றை யார் மறுதலித்து இல்லை இல்லை நான் அழகற்றவர் என்று ஒத்துக்கொள்வர்! இந்த நபர் கலாகளில் ஈடுபாடு உடையவர் என்றால், ஆமாம் ஓவியம், இசை, நடனம் என்ற எண்ணற்ற கலைகளில் ஒன்றில் ஈடுபாடு இருக்கத்தானே செய்யும்.

    இந்த ஆய்வு எவ்வாறு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றால் துல்லியமான தகவல்களைக் கேட்டிருக்கலாம். இவர் எந்த இனம்? இவர் எந்த மொழியைப் பேசுகிறார்? எவர் எந்த தொழிற்துறையில் வேலை செய்கிறார்? இவரின் என்ன படிப்பு படித்து இருக்கிறார்? போன்ற கேளிவிகள். இந்த கேள்விகளுக்கு முதலே நபர்களிடம் இருந்து பதிலை எடுத்து பின்னர் ஒப்பிட்டு பாத்திருக்க வேண்டும்.

    மேலும் இந்த ஆய்வில் ஒரு Control Group இல்லை. அதாவது வேறு ஒரு நபர் வேத சோதிடம் இல்லாமல் கூற்றுக்களை முன்வைத்திருக்கலாம். மேலும் வேறு சோதிட முறைகளுடன் ஒப்பிட்டும் பாத்திருக்கலாம்.

    உங்களின் ஜடாயு போன்றோரின் ஆக்கங்களை ஆர்வத்தோடு வாசிக்கிறேன். பல இடங்களில் கருத்துக்கள் உடன்படவிட்டாலும், நிச்சியமாக ஒரு வேறு பட்ட பார்வையைத் தருகிறீர்கள். நன்றி.

  5. என்னைக்கேட்டால் ஜோதிடம் மெய் என்றுதான் சொல்வேன்.

  6. ஜோதிடம் பிழைப்பதற்கு நல்ல வழி(ஏமாற்று வழி). ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை. ஜோதிடம் சொல்பவன் ஏமாற்றுக்காரம், கேட்பவன் ஏமாறுபவன். இவர்கள் எப்பொழுது அறிவு பெறுவார்களோ தெரியவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு மூடநம்பிக்கை இல்லை.

  7. பார்த்திபன் ஒரு படத்தில் ரம்பாவை பார்த்து
    “ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறதே” என்று வர்ணித்து காமெடி பண்ணியதுண்டு.
    அது போல ராம்கோபால் “கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மூட நம்பிக்கை இல்லை” என்று சொல்வதைப் பார்த்தவுடன்
    “ஒரு மூட நம்பிக்கையே மூட நம்பிக்கை இல்லை என்று சொல்கிறதே!!!” என்று சொல்லத்தோன்றுகிறது. கடவுள் என்பதே மூட நம்பிக்கை, அதை இவர் நம்புவாராம். ஆனால் மத்ததை எல்லாம் மூட நம்பிக்கை என்று நம்ப மாட்டாராம். சரியான காமெடி பீசு. மொத்தமா நம்புகிறவர்கள் கூட O.K. ஆனால் இந்த அரைகுறை ஆசாமிகள் ஆபத்து.

  8. I agree to the above said facts. For more information about astrology. Log on to https://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that ‘ jaamakkol astrology software’ has been introduced only by this website.

  9. சு பாலச்சந்திரன்

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் ஜோதிடம் குறித்து இந்த வாரத்து ராணி தமிழ் வாரப்பத்திரிக்கையின் தீபாவளி மலரில் ( 31.10.2010 ) திரை நடிகரும், இந்த தலைமுறையில் தமிழில் மிகச்சிறந்த பதிப்பாளரும், பேச்சாளருமாகிய திரு ராஜேஷ் அவர்கள் எழுதியுள்ள தொடர்கட்டுரையின் சாராம்சத்தை கீழே சுருக்கமாக தருகிறேன். ஜோதிடம் குறித்த அவரது அனுபவம் ஓர் நீண்ட தொடராக வர உள்ளது. பிரதி செவ்வாய் கிழமை தோறும் வெளிவரும் தினத்தந்தி குடும்பத்தின் புகழ் பெற்ற தமிழ் வாரப்பத்திரிக்கையான ராணி யில் இக்கட்டுரை தொடர் வெளிவருகிறது. ஆர்வமுள்ளோர் படித்து பலன் பெறலாம். இனி திரு ராஜேஷ் அவர்களின் கட்டுரையின் சுருக்கம் வருமாறு:-

    ” நான் தந்தை பெரியாரின் படைப்புக்கள் அனைத்தையும் ஆழ்ந்து படித்தவன். காரல் மார்க்ஸ் அவர்களின் மார்க்சீய படைப்புக்களையும், உலக சரித்திரம், இந்திய சரித்திரம், உலகப் புகழ் பெற்ற நாத்திகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ( agnostics ) ஆகியோரின் படைப்புக்களை ஆழ்ந்து வாசித்துள்ளேன். ஆனால் எனக்கு ஜோதிடம் ஒரு அதிசயமாக உள்ளது. எனக்குத்தெரிந்து வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை ஐம்பது வருடங்களுக்கு முன்பே மிக துல்லியமாக எப்படி கணித்தார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகே இது பற்றி ஆராய ஆரம்பித்தேன். ஜோதிடத்தில் தொண்ணூற்று ஐந்து சதவீதம் சரியாக வருவதை அனுபவத்தில் பார்த்த பிறகே என் அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இக்கட்டுரை தொடரை எழுத ஆரம்பித்தேன். மற்றவர்கள் என்னை என் கருத்துக்களை என்ன விமரிசனம் செய்வார்களோ என்ற கவலை இல்லாமல் இதை எழுத தொடங்குகிறேன் “என்று ஆரம்பித்துள்ளார்.

  10. அன்புடையீர்,

    சினிமா நடிகர் திரு ராஜேஷ் அவர்களின் புதிய கட்டுரை தொடர்

    திரு ராஜேஷ் அவர்கள் பள்ளி ஆசிரியராக தனது பணியை தொடக்கி பிறகு சினிமா, நாடகம், என்று பல்துறை வித்தகர் ஆனவர். தந்தை பெரியாரின் நூல்கள் அனைத்தையும் கசடற கற்றவர். ,மேலும் காரல் மார்க்சு எழுதிய நூல்களையும், உலகவரலாறு , இந்திய வரலாறு மற்றும் உண்மைபகுத்தறிவாளர்கள் ( Agnostics like R G INGERSOLL) எழுதிய அனைத்து நூல்களையும் கற்றவர். ஜோதிடத்தில் சுமார் முப்பது வருட ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர். இன்றைய தமிழகத்தில் தமிழில் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே நான் அவரது பேச்சை கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றேன்.
    ராஜேஷ் எழுதியதை கீழே தந்துள்ளேன்:

    “எல்லா அற்புதங்களையும், அதிசயங்களையும் விஞ்ஞானத்தால் விளக்க முடியும்.- சிக்மண்டு பிராய்டு உளவியல் தந்தை

    ஜோதிட விஷயத்தில் ஒன்றுக்கு நூறு முறை சோதித்துப்பார்த்து, தெளிவு பெற்ற பின்னரே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். முதலில் என்னை பலிகடாவாக்கி சோதித்தேன்.பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் , நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், பெரிய அரசியல்வாதிகள் வரை பரீட்சை பண்ணி பார்த்தேன்.

    அதற்கு அடுத்தபடியாக – சிறைக்குச் சென்றவர்கள், நக்சல்பாரிகள்,கொலையாளிகள்,விலைமாதர்கள், விதவைகள், விவாகரத்து செய்தவர்கள், ஊனமுற்றவர்கள், கடைசி காலத்தில் மணம் செய்தவர்கள், திருமணமே ஆகாமல் இருக்கிறவர்கள், பல மணம் செய்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்கள்,திருமணமாகி 10 நாட்களுக்குள் வெளிநாடு சென்றவர்கள்,இறந்தே பிறந்த குழந்தைகள், பிறந்து 15 நாட்களுக்குள் இறந்த மழலைகள், 90 வயதை தாண்டியவர்கள், பார்வை அற்றவர்கள், காது கேளாதவர்கள், பாதியில் கண் தெரியாமல் போனவர்கள், இளம் வயதில் விதவையானவர்கள் என் பல ரகமானவர்களை சோதித்தேன்.
    சோதனையில் எனக்குக் கிடைத்தது வியப்புத்தான்! வியந்தேன் என்பதைத்தவிர, ஒன்றும் ஒன்றும் சொல்வதற்கில்லை.நான் தந்தை பெரியாரை நன்றாகப் படித்தவன்.வான சாஸ்திரத்தை ஓரளவு படித்துள்ளேன். உலக வரலாறு, இந்திய வரலாறு, மனித குல வரலாறு, மேல்நாட்டு நாத்திகர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மற்றும் நாஸ்டர் டாமஸ் பற்றியெல்லாம் ஆழப்படித்திருக்கிறேன். எந்த நேரத்தையும் வீணாக்காமல் படித்துக்கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் ஜோதிடம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

    எது உண்மை என்பதை தேடுவதில் எனக்கு சிறு பிள்ளையில் இருந்தே ஒரு ஆர்வம் இருக்கிறது.எந்த ஒரு கொள்கையும், கருத்தும் யாருக்கும் சொந்தமில்லை. அது நிரந்தரமுமில்லை என்று நினைப்பவன். மாறும் என்பதே மாறாத விதி. மாறுதல் இல்லாமல் மாறுதல் இல்லை என்ற காரல் மார்க்சின் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவன்.

    பகுத்தறிவாலும், மார்க்சிய சிந்தனையாலும் , விஞ்ஞான ரீதியிலும், தர்க்க ரீதியிலும் ஜோதிடத்தை நிரூபிக்க முடியாது.கேலி செய்வதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.ஜோதிடம் பொய், கடவுள் இல்லை என்றுகூட பலமணி நேரம் பேசலாம். அதற்கு முக்கியம் நம்முடைய அறிவும், அனுபவமும், ஆராய்ச்சி திறனுமாகும். ஆனால் ஜோதிடத்தில் உண்மையை தேடவேண்டும் என்பதே எனது நோக்கம்.

    இதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளாவது நேரடி அனுபவம் இருக்க வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளில் வாழ்ந்த பல்வேறு வகையான மனிதர்களின் ஜாதகங்களை அலசி ஆராய வேண்டும், ஆராய்ந்துள்ளேன்.

    நான் பார்த்த ஜோதிடத்தின் வகைகள் – நாடி ஜோதிடம், பிறந்த நாள், நட்சத்திரம், தேதி வைத்துப்பார்க்கும் ஜோதிடம், முகம் பார்த்து சொல்லும் ஜோதிடம், புகைப்படத்தை பார்த்து சொல்லும் ஜோதிடம், எண் கணிதம்,வந்த நேரத்தை வைத்து ஜோதிடம் சொல்வது, தொலைந்து போனவர்களுக்கு ஏடு பார்த்து சொல்வது, இ எஸ் பி சக்தி உள்ளவர்கள், சாமியார்களிடம் குறி கேட்பது, கை ரேகை ஜோதிடம், கட்டை விரல் ஜோதிடம்,நமது உடலில் என்ன நோய் உள்ளது; அதை எப்படி போக்குவ அது என்று சொல்லும் நாடி, மரத்தடி சாமியார்கள், மந்திரத்தில் வாயைக்கட்டும் சாமியார்கள், நாயைக்கட்டும் சாமியார்கள்,குடுகுடுப்பைக்காரர்கள்,உலோகப்பாம்பை நகர வைப்பவர்கள், போன்றவர்களால் நான் தெரிந்துகொண்ட பல விஷயங்களைப்பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    ஜாதக அலங்காரம் என்று ஒன்று இருக்கிறது.அதைப் படித்து, அதன்படி நடக்கிறதா என்றும் பார்த்தேன். வாதத்துக்கு எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு எழுபது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். எல்லாவற்றையும் விட, துல்லியமாக நடந்தவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளேன்.அதைக்கண்ட பிறகு தான் ஜோதிடத்தில் நம்பிக்கையும், அதைப்பற்றிய ஒரு ஆய்வும் எனக்கு ஏற்பட்டது.

    1960 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு விஷயங்களை நான் கேள்விப்பட்டதுண்டு. பலரின் வாழ்வில் நடந்ததும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. 1912 ஆம் ஆண்டில் இருந்து எங்கள் குடும்பத்தில் ஜாதகப்படி நடந்த விஷயங்களை எங்கள் தாத்தா, பாட்டி மற்றும் ஊரில் உள்ள பெரியவர்களிடம் இருந்தும் சேகரித்தேன்.என்னிடம் பத்தாயிரம் வருடத்துக்கு பஞ்சாங்கம் இருக்கிறது. அது ஒரு ரஷ்ய விஞ்ஞானி கணித்தது.

    1985 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நான் ஜோதிட சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அந்த அறிவையும், வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களையும் வைத்து ஆராய்ந்தேன். அவைகளைப்பார்க்கும்போது , ஏறக்குறைய 95 சதவீதம் எல்லாமே ஜோதிடப்படியே நடக்கிறது என்பதை கண்கூடாக உணர்ந்தேன்.

    பலர் பல்வேறு பூஜைகளும், பரிகாரங்களும், யாகங்களும் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.என்னைப்பொருத்தவரையில் வாஸ்து, பெயர் மாற்றம், எண் கணிதம், நல்ல நேரம், கெட்டநேரம், கோவிலுக்கு செல்லுதல், வேண்டுதல், திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்தல், தாயத்து கட்டுதல், – இதில் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல நேரம், கெட்டநேரம், நான் பார்ப்பதில்லை.என்னுடைய திருமணத்தில் ஜாதகப்பொருத்தம் பார்க்கவில்லை.என் குடும்பத்தில் இதுவரையில் யாருக்கும் ஜாதகப்பொருத்தம் பார்த்ததே இல்லை.’இன்னாருக்கு இன்னார்தான் அமைவார்கள், எது நடக்குமோ அது நடந்தே தீரும்…. அதுவும் ஜாதகப்படியே நடக்கும் என்பதில் அதிக நம்பிக்கை உடையவன்.

    இந்தியாவில்தான் புகழ் பெற்ற ஜோதிடர்கள் இருந்திருக்கிறார்கள். புராண இதிகாசங்கள் அனைத்திலும் வரும் நிகழ்ச்சிகள் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.ஆனால் ஜோதிடம் என்பது ஒரு கடல் போன்றது.அதற்கு எல்லை கிடையாது.ஜோதிடத்தை முழுவதுமாகக் கற்றவர்கள் என்று யாருமே கிடையாது. கற்கவும் முடியாது. என்றாலும், இந்த ஜோதிடம் எப்படி உண்மையாகிறது என்பதுதான் எனக்குள்ள ஆச்சரியம்.என் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களும் சரி, துயர சம்பவங்களும் சரி …. பல கணிப்புக்கள் சரியாகவே நடந்துள்ளன.அதுவும், 50 ஆண்டுகள் , 25 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியவைகள் நடந்ததுதான் அதிசயம்
    .
    ஜோதிடத்தில் எப்படி இவ்வளவு துல்லியமாக எதிர்காலத்தை சொல்ல முடிகிறது என்ற வியப்பினால் தான் இந்த ஆய்வில் இறங்கினேன். இறக்கும்வரை உண்மைகளைத் தேடிக்கொண்டே இருக்கவேண்டும். அது ஜோதிடம் என்று இல்லை. நாம் விரும்பும், அதிசயிக்கும் எந்த ஒன்றாகவும் அது இருக்கலாம். நான் அனுபவித்த, உணர்ந்த விஷயங்களை ஜோதிட ஞானமுள்ள பல்வேறு நபர்களுடன் விவாதித்து இருக்கிறேன்.தெரியாத- அறிமுகம் இல்லாத நிறைய நபர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தேன். அதன் மூலமே பல உண்மைகளைக்கண்டேன்.

    அப்படி அனுபவித்த, பார்த்த, சோதித்த, கேள்விப்பட்ட உண்மைகள் என்னோடு மடிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். நமது மக்களிடம் பதிவு பண்ணும் பழக்கம் அதிகமில்லை.ஆனால் யூதர்களிடம் பதிவு செய்யும் வழக்கம் நிரம்ப உண்டு. என் வாழ்நாளுக்குள் எனக்கு கிடைக்கின்ற அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும், அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். ராணி வார இதழில் செவ்வாய்க்கிழமை தோறும் என்னுடைய அனுபவங்களை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதில், ஜோதிடம் உண்மை என்று நிரூபிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. எண்ணமுமல்ல ! இந்தத் தொடரை படித்து யார்-யார் எப்படி விமர்சித்தாலும் எதைப்பற்றியும் நினைக்காமல் என் வாழ்க்கையில் நடந்தவற்றை , பார்த்தவற்றை , கேட்டவற்றை. அனுபவித்ததைப்பற்றி எழுதுகிறேன். இதில் கடுகளவு பொய் கலந்தோ, மிகைப்படுத்தியோ கூற வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.என்னுடைய அனுபவங்களை படிப்பவர்கள் – ஜோதிடத்தில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததைப்போன்ற ஒரு உணர்வைப் பெறலாம். காத்திருங்கள். ஒவ்வொரு வாரமும் பரபரப்போடு சந்திப்போம்.” என்று திரு ராஜேஷ் அவர்கள் கட்டுரையை முடித்துள்ளார்.

    ஜோதிடம் ஒரு உண்மையே.அறிவியல் என்று இன்று சொல்லப்படும் விஞ்ஞானம் அடிக்கடி மேலும் ஆராய்ச்சிகள் செய்து பழைய தியரிகள் பலவும் திருத்தி எழுதப்படுகின்றன. அதே போல ஜோதிடமும் பூமியும் சுழற்சி வேகம், மற்றும் பூமி சுற்றும் திசை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பொருத்தும், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியவற்றின் வேகம் மற்றும் அவை பயணிக்கும் திசை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களை கணக்கில் கொண்டும் கணக்கீடுகளில் தேவையான மாறுதல்கள் அடிக்கடி செய்யப்பட வேண்டிய துறை ஆகும். ஜோதிடம் விஞ்ஞானம் இல்லை என்று சொல்பவர்கள் அத்துறை பற்றிய அறிவு இல்லாததாலேயே இந்த குற்றச்சாட்டை எழுப்புகின்றனர். எல்லாத்துறையிலும் ஏமாற்றுபவர்களும் மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். அதற்காக அந்த துறையையே ஒட்டுமொத்தமாக குறை கூறக்கூடாது. பின் உலகிலேயே எந்தத்துறையும் தப்பாது.

    தங்கள் அன்புள்ள

    சு பாலச்சந்திரன்

  11. ராம் கோபால், க்ரிஷ் போன்ற நண்பர்களின் சிந்தனைக்கு ! நீங்கள் “கஞ்சனூர்ப் பஞ்சாங்கம்” எனப்படும் “பாம்புப் பஞ்சாங்கம்” வாங்கிப் பாருங்கள். உங்கள் சொந்த வாழ்க்கைக்கு இதைப் பின்பற்றச் சொல்லி நான் பரிந்துரை செய்வதாக நினைக்கவேண்டாம். அது உங்கள் உரிமை. ஆனால், அதில் சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்த செய்திகளை விநாடி துல்லியமாகத் தந்திருப்பார்கள். அந்தக் குறிப்புகள் 1000 telescope-களை வைத்துக்கொண்டு, 10,000 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிடும் கிரகண காலக் குறிப்புகளிலிருந்து கடுகளவும் மாறுபட்டிருக்காது. இந்தக் கலையை எந்த அறிவியல் அறிஞரிடமும் லஞ்சம் கொடுத்து இவர்கள் பெறவில்லை. மேலும், ஒரு ஆண்டின் மொத்தமான மழைப்பொழிவு நிலை குறித்தும் பஞ்சாங்கம் தரும் குறிப்புகள் தவறுவதில்லை. மாறாக, வானியல் அறிஞர்கள் “மழை பெய்யும்” என்று அறிவித்து, வானம் “வறண்டு” நின்ற நாட்கள் எத்தனையோ !

    நான் விஞ்ஞானத்தை விமரிசிக்கவில்லை. அப்துல் கலாம் போன்ற உண்மை அறிஞர்கள், இந்தியாவில், ஏன், உலகத்தின் பல பாகங்களில், இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இறைவனையும் மறுப்பதில்லை; வான சாஸ்திரத்தையும் மறுப்பதில்லை. தங்களை அறிஞர்கள் என்றோ அல்லது அறிஞர்களின் வழி நடைபோடுபவர்கள் என்றோ தவறாகவும் மிகையாகவும் கருதிக் கொள்ளும் “அதிமேதாவிகள்” மட்டுமே எதற்கெடுத்தாலும் கடவுள் மறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டு வீண் வாதம் செய்கிறார்கள்.

    மற்றபடி, எல்லாத்துறையிலும் போலிகள் இருப்பதுபோல், வான சாஸ்திரத் துறையிலும் போலிகள் இருப்பது தவிர்க்க முடியாதது. இது குறித்து ஏற்கெனவே திரு சு.பாலச்சந்திரன் என்பவரின் மறுமொழியின் கடைசிப்பகுதி விளக்கியிருக்கிறது. ஜன நாயகம், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயர்களில் தங்களுக்கு ABCD கூடத் தெரியாத விஷயங்களிலெல்லாம் எதிர்க் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு அவலம். இது அனேகமாக நம் நாட்டில் தான் அரங்கேறிக்கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.

  12. இவர்கள் கடவுள் மறுப்பு செய்பவர்கள் இல்லை
    அப்படி இருந்தால் மற்ற மதங்களின் கடவுளர்கள், கொள்கைகள் இவற்றையும் விமர்சிக்க வேண்டுமே?ஆகவே இவர்கள் ஹிந்து சமயமும், அது சார்ந்த தத்துவங்கள்,கலைகள் இவைகளை மட்டுமே விமர்சிப்பவர்கள்.
    இந்து சமயம் மட்டுமே விஞ்ஞான அறிவையும் ஒப்புக் கொள்கிறது.
    கிறிஸ்தவம் டார்வினின் பரிணாமக் கொள்கையை பல காலம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. அதனால் அது கிறிஸ்தவ நாடுகளில் பாடப் புத்தகங்களில் கூட இடம் பெறாமல் இருந்ததுஇப்போதுதான் சர்ச் அதை ஒப்புக் கொண்டுள்ளது.
    அதே போல்தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை நெடுங்காலமாக் சர்ச் ஒப்புக் கொள்ளவில்லை.விஞ்ஞான உண்மைகளை கண்டு பிடித்து வெளியே சொல்பவர்கள் கழுவில் ஏற்றப் பட்டார்கள்.

  13. ASTROLOGY IS 100% TRUE BUT THE ASTROLOGER WHO PREDICTS DO NOT SPEND TIME TO NOTICE PLUS AND MINUS FACTORS IN THE HOROSCOPE BUT PREDICT WRONGLY TRYING TO PLEASE THE CUSTOMERS FROM WHOM HE RECEIVES MONEY. A TRUE ASTROLOGER IS THE ONE WHO DO NOT EXPECT ANY MONEY FROM ANY ONE BUT SHOULD FIRST CAST THE CORRECT HOROSCOPE FIRST, THEN EXAMINE THE HAPPENINGS IN THE PAST PERIOD OF LIFE BEFORE PREDICTING THE FUTURE. YSR REDDYS ( EX AP CM ) DEATH BY ACCIDENT WAS PREDICTED BY MANY ASTROLGERS AND WAS IN THE WEBSITES LONG AGO. SIMILARLY FOR A YOUNG PROMISING FUTURE TURK PM IN WAITING WHO REMAINS STILL UNMARRIED HAS GOT MANY PREDICTIONS IN SOME WEBSITES WHICH REMAINS TO BE SEEN IN FUTURE. SO ONE NEEDS THE CORRECT HOROSCOPE, GOOD ASTROLOGER , THE ONE WHO EXAMINE THE PAST PERIOD AND GIVES PREDICTIONS FOR FUTURE. PRESENT ASTROLOGERS WHO HAVE LOT OF PEOPLE WAITING WITH PRE- APPOINTMENTS DO NOT PREDICT CORRECTLY SINCE THEY DO NOT SPEND TIME TO ARRIVE A CORRECT HOROSCOPE ( THEY SIMPLY GO BY THE HOROSCOPE BROUGHT BY CUSTOMERS ) DO NOT EXAMINE THE PAST PERIOD BEFORE GIVING THE FUTURE. ( IT MIGHT TAKE MIN 2 HOURS TO DO THIS ). HENCE MOST OF THE PREDICTIONS GO WRONG. A GOOD ASTROLOGER IS THE ONE WHO CAN GIVE ANALSYSIS FOR A TWIN BIRTH PEOPLE WHILE THE TWIN BROTHER OF FIRST WILL BE A MULTI MILLIONARIE AND THE SECOND TWIN BROTHER IS A POVERTY STICKEN PERSON. WHY SUCH VARIATION FOR TWO PEOPLE BORN TO THE SAME MOTHER AT SAME TIME AND HOLDING THE SAME HOROSCOPE. IF THAT ASTROLOGER CORRECTLY ANALYSIS BETWEEN THE TWIN BROTHERS OR TWIN SISTERS, THEY ARE THE BEST ONE TO BE CONSULTED BY ANYONE. CUSTOMERS MUST HAVE KNOWLEDGE OF ASTROLOGY TO QUESTION THE ASTROLOGER WHO MUST ANSWER TO ALL THE DOUBTS OF CUSTOMERS INSTEAD OF BURSTING HIS ANGER ON THEM.

  14. Accept life as it is in raw form
    Nature is god
    No one in the western country or US or russia or scandinavian countries look astrology.
    Divorce, accidents ,health problems, death,success failure all are natural.. ..Dont predict it….
    Before 1940 life expectancy was less than 40
    now it is more than 80 in japan…….
    If astrolgy is science how this can happen. ….
    instead try to change our countries HDI to 0.9

    like norway or switzerland…….

    no astrologer is required
    everybodies life will be perfect… .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *