தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

(எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் எழுதிய South India and her Mohammadan Invaders என்கிற புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையின் பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கிறன)

இத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.

குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது.

சிங்களர்களுக்கு எதிராகப் போரிட்ட குலசேகரனுக்கு உதவி செய்த சோழர்களான பல்லவராயரும், எதிரிலி சோழ சம்புவராயனின் மகனும் சிங்களப்படைகள் பாண்டிய நாட்டை விட்டு அகலுவதற்கு பெரிதும் உதவின் எனச் சொல்கின்றன சோழக் கல்வெட்டுக்கள். சிங்களப்படைகள் இலங்கை திரும்பிய பிறகு குலசேகர பாண்டியன் தொடர்ந்து போரிட்டு வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகவும் தெரிகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் போர் முடிந்த சிலகாலத்திற்குள்ளாக குலசேகரபாண்டியன் மரணமடைந்துவிட்டான்.

சோழனான மூன்றாம் குலோத்துங்கன், குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றும் பொருட்டு சிங்களர்களை எதிர்த்துப் போரிட்டதாகவும் (1182), பின்னர் அவனிடம் பிடிபட்ட சிங்களப் படையினரின் மூக்குகளை அறுத்து அவர்களைக் கடல்வழியாக இலங்கைக்கு விரட்டியடித்ததாகவும் திருக்கோலம்புதூர் கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியன் மதுரையிலிருந்து பின்வாங்கி ஓட நேரிட்டதாகவும் தெரிகிறது. மதுரை கைப்பற்றப்பட்டு விக்கிரம பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறாக பாண்டிய-சிங்களப் போர் இறுதியில் சோழர்களுக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் ஆரப்பாக்கம் கல்வெட்டின்படி இந்தப் போர்கள் 1175-ஆம் வருட காலத்திற்கு சற்று முன்னதக நிகழ்ந்திருக்க வேண்டும். இலங்கைப் பேரரசன் பராக்கிரமபாகுவின் பதினாறாவது வருட ஆட்சிக்காலத்தில் பாண்டிய-சிங்களப்போர்கள் நடைபெற்றதாக மஹாவம்சம் கூறுகிறது.

சோழர்களின் தலையீட்டினால் பாண்டிய அரசு மீண்டும் மதுரையை சிறிதளவு அதிகாரங்களுடன் ஆளத்துவங்குகிறது. அதேசமயம் பாண்டிய நாட்டின் மீது சோழர்கள் கொண்டிருந்த அதிகாரப் பிடியும் இப்போர்களின் காரணமாக தளர ஆரம்பித்தது. இந்தப் போர்கள் முடிவடைந்த சிறிது காலத்திற்குள்ளாக சோழர்களில் குறிப்பிடத்தக்க கடைசிச் சோழனான மூன்றாம் குலோத்துங்கன் அரியணை ஏறினான். அவனது ஆட்சிக்காலம் 1178 முதல் 1216-ஆம் ஆண்டுவரை எனத் தெரிகிறது.

குலசேகர பாண்டியன் இறந்து, வீரபாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியன் அரியணை ஏறிய பிறகும் பாண்டிய நாட்டில் உள் நாட்டுக் கலவரங்கள் முடிவுக்கு வரவில்லை என்கிற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இலங்கைச் சிங்களர்கள் தொடர்ந்து வீரபாண்டியனின் மகனுக்குத் தொடர்ந்து உதவி வந்ததாகவும் தெரிகிறது. மூன்றாம் குலோத்துங்கனின் பதினொன்றாவது ஆட்சிக்காலத்திய குறிப்புகள் வீரபாண்டியனின் மகனைப் பிடித்து அவனது மூக்கை அறுத்ததாகச் சொல்கிறது. இதனால் கோபமுற்ற, பாண்டிய அரியணையை இழந்த வீரபாண்டியன், இந்த அவமானத்தைத் துடைப்பதற்காக போரைத் துவக்கினான். அவனைப் பிடித்த மூன்றாம் குலோத்துங்கன் நெட்டூரில் அவனது தலையைத் துண்டித்ததாகவும் அதன் பின்னர் வீரபாண்டியனின் மனைவியை சிறைப்பிடித்துச் சென்றதாகவும் தெரிகிறது.

இப்படியாக தமிழகத்தின் மீதான சிங்களப்படையெடுப்பு முடிவுக்கு வருகிறது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *