காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு

காட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் Hari Krishnan ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம். தமிழ் அகராதியில் தேடியபோது “விலங்காண்டி, நாகரிகமற்றவன், முரடன்; காட்டில்வாழ்வோன்” என்று பொருள் தந்தது. ஆனால், சொல்லின் உருவாக்கம் பற்றி தகவல் ஏதும் இல்லை. அனேகமாக, காட்டு மிருக ஆண்டி என்பது ஒருவிதமாக மருவி, காட்டுமிராண்டி ஆகியிருக்கலாம் என்று ஹரிகி கூறினார். இப்படித் தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன். ‘மிராண்டி’ என்பதற்கு வேறு எந்தவகையிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும்போது அல்லது அவற்றில் உள்ள கருத்துக்களை எடுத்து எழுதும்போது, savage, barbarian ஆகிய சொற்களுக்கு இணையாக நேரடி தமிழ்ச்சொல் ஏதும் காணப்படாததால், 19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடையாளர்கள் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

உடனே, ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது. என்னிடம் முதலில் இக்கேள்வியை எழுப்பிய அறிஞர் சம்ஸ்கிருதத்திலும் அப்படி ஒரு சொல் இல்லை என்று தெரிவித்தார். எனவே, பெரும்பாலும் மற்ற இந்திய மொழிகளின் பழைய நூல்களிலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

ஏன்? ஏனென்றால், அப்படி ஒரு கருத்தாக்கமே நமது இந்துப் பண்பாட்டில், இந்திய சிந்தனை முறையில் இல்லை என்பதே காரணம். கானகவாசிகள், மலைவாசிகள், வேடர்கள் ஆகியோரை நாகரிகமற்றவர்கள் என்று இந்தியப் பண்பாடு ஒருபோதும் கருதியதில்லை, அவர்கள் இந்து சமுதாயத்தின், அதன் கலாசாரத்தின் அங்கமாகவே இருந்தனர். சிவன், விஷ்ணு, துர்க்கை, காளி, விநாயகர், முருகன், ஐயப்பன், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் என எந்த தெய்வ வடிவத்தையும் அவதாரத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதில் கானக மக்களின், கானக கலாசாரத்தின் கூறுகள் பிரிக்க முடியாதபடி உள்ளதை நாம் காணமுடியும்.

வன்ய (வனம் சார்ந்தவர்), நிஷாத³, புலிந்த³, பி⁴ல்ல போன்ற பல சொற்களால் கானக மக்கள் பண்டைய சம்ஸ்கிருத இலக்கியங்களில் குறிக்கப் பட்டனர். யஜுர்வேதத்தின் ஸ்ரீ ருத்ரம் ‘நமோ வன்யாய’ ‘நிஷாதே³ப்⁴ய:’ என்று ருத்ரனின் பல வடிவங்களைப் பாடும்போது இவர்களையும் குறிப்பிடுகிறது. வால்மீகி ராமாயணம் நிஷாதர்களின் அரசனான குகனை ராமனுக்கு இணையான ஒரு அரசகுமாரனாக, ராமனால் அன்புடன் தழுவிக்கொள்ளப் படுபவனாக சித்தரிக்கிறது. மகாபாரதமும், ராஜசூய யாகத்தில் தருமனின் அரச மரியாதைக்கு உரியவன் என்பதாக நிஷாத இளவரசனான ஏகலவ்யனைக் குறிப்பிடுகிறது. ஆதி சங்கரர் இயற்றிய சுப்ரமணிய புஜங்கம் ‘புலிந்தே³ஶ கன்யா’ என்று வள்ளியை அழைக்கிறது.

சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிஞ்சி நிலத்து மக்களான குறவர், எயினர், வேடர் ஆகியோர் “காட்டுமிராண்டிகளாக” ஒரு போதும் கருதப்படவில்லை. அவர்களது வழிபாடுகளையும், வீரச்செயல்களையும், வாழ்க்கை முறையையும் மதிப்புக்குரியவையாகவே இந்த நூல்கள் சித்தரிக்கின்றன.

“கானவர் தம் மாமகளிர் கனகமணி விலகு காளத்தி மலையே” – தேவாரம். இதில் காட்டில் வாழும் சமுதாயத்தினரை ‘கானவர்’ என்றும் அவர்களது பெண்களை ‘மாமகளிர்’ என்றும் சம்பந்தர் சுட்டுகிறார். “கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்” – நாச்சியார் திருமொழி. இதில் கண்ணனின் குலத்தை ‘காடு வாழ் சாதி’ என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

இத்தகைய பழைய தமிழ்ச் சொற்கள் எதுவும் savages, barbarians என்பதைக் குறிக்க பொருத்தமில்லாதவை என்பதால் தான் காட்டுமிராண்டி என்ற சொல் உருவாக்கப் பட்டது.

பி.கு:

பின்னாளில் ஈ.வெ.ராமசாமி என்பவர் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை” என்று ஒரு கருத்தைக் கூறினார். அவரைத் தமிழரில் ஒரு சாரார் ‘பெரியார்’ என்றும் ‘தந்தை’ என்றும் கூட அழைத்து வருகின்றனர்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு”

  1. என்ன ஒரு பொறுப்பற்ற, அரைவேக்காட்டுத்தனமான நுனிப்புல் வாதாம். காட்டுமிராண்டி என்ற சொல் உள்ளதோ இல்லையோ, யார் சொன்னது இந்து பண்பாட்டில் காடு வாழ் மக்களை இழிவாக பார்க்கும் பண்பு இல்லை என்று? பிறகு என் மஹாபாரதத்தில் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாய் கேட்டார்? அவனை இழிவாக பார்த்தாரா இல்லையா? இன்னும் விசேஷமாக வேண்டுமா – பாவகதிதில் 4.14.46 (ஸ்காந்தம், அத்யாயம், ஸ்லோகம்) சொல்றிகத்து, நிஷாதன் என்பவன் ‘கல்மஷத்தினால் ‘அதாவது ‘அழுக்கினால்’ பிறப்பவன் என்று வெளிப்படையாகவே கூறுகிறது. இது இழிவந்தரி வேறு என்ன? ஆழ்வார் ஒருவர் குஹனை ‘ஏழை, ஏதலன், கீழ்மகன் என என்னாது’ என்றுரைக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? ராமர் குஹனை அவன் கீழ்மகனாகவே இருந்தாலும் அவனை ‘கீழ்மகன்’ என எண்ணவில்லை என்று தான் பொருள். அதாவது , அந்த சமுதாயம் நிஷாதனை கீழ்மகனாகவே தான் பார்த்து இருக்கிறது. தன் சமுதாயத்தினுள் இருக்கும் சூத்திரனையே படு இழிவாய் கருதிய சில இந்து நூல்கள், காடு வாழ் மக்களை மட்டமாய், இழிவாக காண்பது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாதது அல்ல.

  2. //தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம். தமிழ் அகராதியில் தேடியபோது “விலங்காண்டி, நாகரிகமற்றவன், முரடன்; காட்டில்வாழ்வோன்” என்று பொருள் தந்தது. ஆனால், சொல்லின் உருவாக்கம் பற்றி தகவல் ஏதும் இல்லை.//

    எப்படி நுழைந்தது என்பதே தவறு. கட்டுரை இச்சொல் முன்பு இல்லவே இல்லை என்று சொல்லிவிட்டு ”நுழைந்தது” எனலாமா? இருந்தால்தானே நுழைவதற்கு?

    ”19ல் நூற்றாண்டில்”… என்று நிறுத்தாமல் எப்படி? எப்போது? யாரால் உருவாக்கப்பட்டது? என்று ஆராய்ச்சி செய்து எழுதுங்கள்.

    ஓர் கூட்டத்தவரை, அவர்தம் வாழுமிடத்தையும் வாழ்க்கை முறையையும் அடிப்படைகளாக வைத்து, ஏற்றியோ அல்லது இழிவாகவோ பார்க்கும் வழக்கம் என்று மனித வர்க்கம் தொடங்கியதோ அன்றிலிருந்து என்று முடியுமோ அன்று வரைக்கும் தொடரும் மனித இயற்கை குணம். காதல், காமம், கவலை, பயம், அருவருப்பு, விருப்பு, வெறுப்பு இவை எல்லாம் இயறகை குணங்கள். அந்நியரை வெறுப்பது; அவரைக்கண்டு பயப்படுவது; அவரை அருவருப்போடு பார்த்து விலகுவது – காட்டுவாசிகளின் மேல் எழும் உணர்வுகள். ஆதிகாலத்தில் இல்லை … இப்போதுதான் என்று மனித இயற்கை உணர்வுகளைக் குறிப்பிட முடியாது.

    காட்டுமிராண்டி என்ற சொல் இல்லாமலிருந்திருக்கலாம்; ஆனால், அக்கூட்டம் உள்ளுழையும் போது, அதைச்சுட்ட சொற்கள் இல்லாமலாப் போயிருக்கும்?

    தமிழ் மொழியியல் வல்லுனர்களைக் கேட்கலாமே?

  3. நீசன், சண்டாளன், கருமசண்டாளன்,பரமசண்டாளன், கொலைஞன்,நாய்க்கெரிப்போன் புக்கசன்,என்ற சொற்களின் பொருள் என்ன ?

    உயிரியில் பரிணாமம் மட்டும் நடக்கவில்லை. பரிணாமம் நடக்காத துறையே கிடையாது. ஆகவே சமூகவியல் துறை பரிணாமம் நடந்து வருகின்றது.குறைகள் தவறுகள் திருத்தப்பட்டு வருகின்றது. நல்ல கருத்துக்களை பதிவு செய்யும் போது படிக்க சுவையாக உள்ளது.
    ஜடாயு அவர்களின் கட்டுரைகள் பயனுள்ளவைகள்.வாழ்க.தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *