அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4

4.  வாராத வாக்காளர் வாக்குப்பதிவு

போன பகுதிலே வாக்காளர் பெருமக்கள் எப்படி வாக்காளர் பட்டியல்லே தங்கள் பேரைப் பதிஞ்சுக்கறது அப்படீங்கறதைப் பத்திப் பார்த்தோம்.  பதிஞ்சாச்சு, தேர்தல் நாள்லே போய் ஓட்டுப்போட வேண்டியதுதானேன்னு நீங்க கேக்கறீங்க.

வாஸ்தம்தான்.  முன்னாலேயே சொல்லியிருக்கேன் – அமெரிக்காவுலே தேர்தல் நாள் விடுமுறை இல்லை,  வாக்கைப் பதிஞ்சுட்டு, வேலைபார்க்கப் போகணும்னு.  முற்காலத்திலே – அப்படீன்னா, கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேன்னு நீங்க நினைச்சுடக்கூடாது.  இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேன்னு எடுத்துக்கணும்.

“ஏன்ய்யா, அப்ப இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேன்னு சொல்லாமே, முற்காலத்துலேன்னு சொல்லி எங்களை ஏன் குழப்பறே”ங்கறீங்களா?  சும்மா, ஒரு ஜோக்குக்காகத்தான்.  விஷயத்துக்கு வருவோம்.

The New Yorkers Who Waited to Vote in the Midterms | The New Yorker

முற்காலத்துலே, அமெரிக்காவுலே நிறைய வாக்குச் சாவடிகள் இருக்கும்.  அங்கங்கே இருக்கற பள்ளிக்கூடம், சர்ச்சு, அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸுல உள்ள பொதுக்கூடம் – இதுலெல்லாம் வாக்குச் சாவடிகள் வைப்பாங்க.  தேர்தல்ல இந்த வாக்குச் சாவடிகள்லே பணிசெய்யறத்துக்கு நிறையத் தன்னார்வலர்கள் வருவாங்க. 

லீவு இல்லேன்னா எப்படி நிறையத் தன்னார்வலர்கள் வருவாங்கன்னு கேட்கறீங்களா?  ஓய்வுபெற்ற பெருமக்கள்தான் அவங்க.  பொழுதுபோகாம சும்மா வீட்டுல உட்கார்ந்து இருக்கறதுக்கு, பொதுசேவை செய்வோம், பொழுதும் போனமாதிரி இருக்கும் அப்படீங்கற நல்ல எண்ணம்தான்.

நிறைய வாக்குச் சாவடிகள், நிறையத் தன்னார்வலர்கள் இருந்தா, நிறையப்பேர் ஒரே சமயத்துலே வந்து சீக்கிரமா ஓட்டுப் போட்டுட்டுப் போகலாம்.  ஆனா, ஏதோ அரசியல்வாதிங்க பண்ணின குழப்பத்துலே, வாக்குப் போடறதைக் குறைக்கணும்னு – அதுதாங்க, மத்தக்கட்சிக்காரங்க அதிகமா உள்ள இடத்துலே வாக்குச் சாவடிகளைக் கம்மிபண்ண ஆரம்பிச்சாங்க.

அது எப்படின்னு கேக்கறீங்களா?

இப்ப யானைக்கட்சி ஒரு கவுன்ட்டில, அதுதாங்க, ஜில்லாவுலே பெரும்பான்மை இடத்தைப் பிடிச்சிருக்காங்கன்னு வச்சுங்கங்க.  அந்த ஜில்லாவுலே, கழுதைக்கட்சி ஆளுங்க நிறையப்பேரு ஒரு ஊருலே இருக்காங்கன்னும் வச்சுங்கங்க.  அவங்கள்ளாம், அன்னாடம் காச்சி, வேலைக்குப் போயி துட்டு கொண்டுவந்தாத்தான் வீட்டுலே ரொட்டி சாப்பிடலாம்னும் வச்சுக்குங்க.  அந்த ஊருல கழுதைக்கட்சி ஆளுங்க இந்தத் தடவை அதிகமான அளவுலே ஓட்டுப்போட்டா, யானைக்கட்சியோட பெரும்பான்மை குறைஞ்சுடும்னும் வச்சுக்குங்க. 

இதை எப்படித் தடுக்கறது?  கழுதைக்கட்சி ஆளுங்க நிறைய இருக்கற ஊரிலே குறைச்சலான வாக்குச் சாவடிங்களை வச்சா, நிறையப்பேரு ஓட்டுப்போட முடியாதுல்ல?[i] வரிசைலே நிறையப்பேரு இருப்பாங்க, வேலைக்கும் போகணும், மணிக்கணக்குலே நின்னு ஓட்டுப்போடவும் முடியாது.  அதுனால கூட்டத்தைப் பார்த்துட்டு, வரிசைலே நிக்காம போயிடுவாங்க.  இப்படி எதிர்க்கட்சி ஓட்டு அதிகமா விழாமப் பார்த்துக்கலாம், இல்லையா?

இது என்ன அநியாயமா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.  இதெல்லாம் அரசியல்ல சகஜம்.  இதைவிடத் தில்லாலங்கடி வேலையெல்லாம் நிறைய நடக்குது.  அதைப்பத்தி நம்ப பேசக்கூடாது.  ஆனா, எதுவும் சட்டத்துக்குப் புறம்பானதில்லே.  பெரிய இடத்து விவகாரம் விட்டுடங்க.  உங்க குழந்தைங்க ரொம்பப் படுத்தறபோது நான் கொடுத்திருக்கற சுட்டிகளுக்குப் போயி, அதைப் படிச்சு, உங்களுக்கு விளக்கிச் சொல்லச் சொல்லுங்க.[ii] [iii] [iv] அவங்க உங்க பக்கமே ஜன்மத்துக்கும் தலையை வச்சுப் படுக்கமாட்டாங்க. 

அதுமட்டுமில்ல, வாக்காளர் பதிவுச் சீட்டைமட்டும் அடையாளம் காட்டினாப் போதாது, நீங்க சீட்டுல குறிப்பிட்டிருக்கற வாக்காளர்தானாங்கறத்துக்கு – நீங்க அந்த முகவரிலதான இருக்கீங்களானு நிரூபிக்க அரசு அடையாளச் சீட்டு போன்றவைகளைக் காட்டணும்.

ஏற்கனவே, ஏன்டா/டீ/ய்யா/ங்க ஓட்டுப்போடணும், நேரமே இல்லேனு பிழைப்பைத் தேடற ஏழை ஆளுங்க/அம்மாங்க இந்தத் தொல்லையும் கொடுத்தா ஓட்டுச் சாவடிப்பக்கம் தலைவைச்சுப் படுப்பாங்கன்னா நினைக்கறீங்க?  அதுவுமில்லாம, வாக்குச் சாவடிகளும் தள்ளி இருந்து, வரிசைலேயும் மணிக்கணக்கா நிக்கணும்னா — போதும், போதும், ஒரு அரிசோனன்.  இத்தனை தொல்லை இருந்தும் எப்படி 2020 அதிபர் தேர்தல்ல எக்கச்சக்கமா வாக்குப் பதிவு நடந்திருக்கு? இது மோசடிதானே… ?

இங்கே பாருங்க, நான் திரும்பத் திரும்பச் சொல்லிட்டேன், தமிழ்லே எனக்குப் பிடிக்காத வார்த்தை.- மோசடி.  நான் மேலே எழுதணுமா, வேண்டாமா?

சரிங்க, ஒரு அரிசோனன், இனிமே சொல்லமாட்டேன் அப்படீங்கறீங்களா?

ஓகே!

அதுக்குத்தாங்க ‘வராத வாக்காளர்’ பதிவுமுறை இருக்கு.  நீங்க வராத வாக்காளராப் பதிவு செஞ்சிட்டா, வாக்குச்சீட்டே உங்களைத் தேடிவரும்.

NC mail-in, absentee voting in 2020 Election questions and answers
வராத வாக்காளர் சீட்டுக் கவர்

என்ன வாயைப் பிளக்கறீங்க?  ஏங்க, வாக்குச் சீட்டு வீட்டுகே வரும்னா, அதை நடுவிலே யாரும் ஆட்டையைப் போட்டுட்டாங்கன்னா, தங்களுக்கு வேண்டிய ஆளுகளுக்கு வாககைப் பதிவு செஞ்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா அப்படின்னு இழுக்கறீங்களா?

அது நடக்காது.  எப்படிக்கறதைப் பின்னாலே சொல்றேன்.  அதுக்கு முன்னாலே, வராத வாக்காளராப் பதிவுசெய்யறதுக்குள்ள விதிமுறைகள் என்னன்னு பார்ப்போம்.

முதல்ல உங்க அரிசோனா மாநிலத்திலே எப்படின்னு கேட்கறீங்க.  சொல்றேன்.

வாக்காளராப் பதிவுபண்ன மனு அனுப்பறபோதே, நீங்க நிரந்தர வராத வாக்காளரா இருக்கப்போறீங்கன்னு பதிஞ்சுட்டாப்போதும்,  எப்பத் தேர்தல் நடந்தாலும், அதுக்கு ஒரு மாதம், இல்லே இருபதுநாள் முன்னாலேயே வாக்குச் சீட்டு உங்கவீட்டுக்கு உங்களைத் தேடி வந்துடும்.

முகவரி மாறிப்போச்சுன்னா, அதை நீங்க முன்னாளேயே தெரிவிக்கனும்.  இல்லைனா, அதைப் போஸ்ட் ஆபீஸ் உங்க புது முகவரிக்குத் திருப்பி அனுப்பாது. தேர்தல் பதிவாளர் அலுவலகத்துக்கே திருப்பி அனுப்பிடும்.

ஆனா, எல்லா மாநிலங்களிலும் இவ்வளவு சுளுவா வேலை நடக்காது. ஒவ்வொரு மாநிலத்திலேயும் வராத வாக்காளர் வாக்குச்சீட்டு பெறுவதற்கு என்ன விதிமுறைகள் இருக்குன்னு நான் கொடுத்திருக்கற சுட்டிகளைச் சொடுக்கிப் பாருங்க.[v],[vi]

சில மாநிலங்களில் நீங்க தேர்தல் சமயத்திலே ஊரிலே இருக்கமாட்டீங்கன்னா, அரசு அலுவலகத்துக்குப் போயி, உங்க அடையாளத்தைக் காட்டி, காரணத்தைச் சொல்லி, வாக்குச் சீட்டை வாங்கி, உங்க வாக்கைப் பதிவுசெய்து கொடுத்துடலாம்.

இன்னும் சில இடத்திலே, “என்னால ஓட்டுச் சாவடிக்கு வந்து, வரிசைலே நின்னு ஓட்டுப்போட இயலாது.  நான் மாற்றுத் திறனாளர், இல்லாதபோனா, வ்யசாகிப் போச்சு, நாற்காலி வண்டிலேதான் வீட்டிலேயே இங்கே, அங்கே போகமுடியும், என்னை ஓட்டுச்சாவடிக்குக் கூட்டிப்போக யாரும் இல்லை.” இப்ப்டி நம்பக்கூடிய காரணமாச் சொல்லி, அதுக்குச் சான்றும் கொடுத்து, வராத வாக்காளராப் பதிவு செஞ்சுக்கலாம்.

ஏனுங்கோ, இத்தனை எச்சா கஷ்டப்பட்டு, ஓட்டுப் போடத்தான் வேணுங்களான்னு ஒரு கொங்குநாட்டு அன்பர் கேட்பது தெரிகிறது.  இங்கே வயசானவங்கதான் நிறையப்பேருங்க ஒழுங்கா வாக்குப் பதிவாங்க.  அவங்களுக்கும் பொழுதுபோகணுமில்லையா?  மேலும், சலுகை வேணூம்னா ஓட்டுப்போடனும்.  நிறைய முதுபெருமக்கள் வாக்களிக்கறதுனால, எல்லாக் கட்சிக்காரங்களும் அவங்களுக்கு வேணும்கறதைச் செஞ்சுட்டு, வாக்களிக்கவும் வசதிசெய்து கொடுக்கறாங்க.

கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடையதா?!' -அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குழந்தைகளை தாக்கும் மர்ம நோய் | Kawasaki disease spread over America and Europe among kids
கோவிட் துன்பம்

இந்த வருசம் தீநுண்கிருமி, அதாங்க, கோவிட்-19, படாத பாடு படுத்துதில்ல – அதுனால, சுளுவா வராத வாக்காளர் வாக்குச் சீட்டு மூலமா வாக்களிக்கறது, தேர்தல் நாளுக்கு முன்னாலேயே ஊரிலே சில இடங்களிலிலே சில வாக்குச் சாவடிகளைத் திறந்துவைச்சு ஓட்டுப்போட வாங்க, வாங்கன்னு வருந்தி அழைச்சு வாக்காளர்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்தாங்க.

என்ன வசதின்னு சொல்றேன். அதுக்கு முன்னாலே, கள்ள ஓட்டை எப்படித் தடுக்க விதிமுறைகள் செஞ்சிருக்காங்கன்னு விளக்கறேன்.  அப்படியாவது, மோசடி, மோசடின்னு சொல்றதை நிறுத்தறீங்களான்னு பார்ப்போம்.

என்ன ஒரு அரிசோனன், எங்களை மோசடின்னு சொல்லாதேன்னு சொல்லிட்டு, நீங்களே இப்படி…

சரிங்க, சரிங்க, தப்புதான்!  கன்னத்திலே போட்டுக்கறேன்.

முதல்ல, அரிசோனாவிலே எப்படி நடவடிக்கை எடுக்கறாங்கன்னு சொல்றேன்:

தேர்தலுக்கு கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு முன்னாலே உங்களுக்கு வராத வாக்காளர் வாக்குச்சீட்டு தபால்ல வந்துசேரும்.  அதைப் பிரிச்சா, வாக்குச்சீட்டும், அதைச் செல்வில்லாமல் திருப்பி அனுப்ப ஒரு கவரும் இருக்கும்.  அந்தக் கவரின் பின்பக்கத்துலே நீங்கதான் வாக்கை பதிவுசெஞ்சீங்கன்னு கையெழுத்துப் போடனும்.  சந்தேகம் வந்தா உங்களைத் தொடர்புகொள்ளத் தொலைபேசி எண்ணும் கேட்டிருக்கும்.  தொலைபேசி எண்ணைக் கொடுக்கறது நல்லது.

உங்க வாக்குச்சீட்டு கவுன்ட்டிப் பதிவாளர் அலுவலகத்துக்குப் போனவுடனே, அங்கே இருக்கும் அதிகாரி ஒருத்தர், கவரில் இருக்கற கோட்டுக் குறியீட்டை (bar code) மின்னணு எந்திரம் மூலம் சோதனைசெஞ்சு, அது யாருகிட்டேந்து வந்திருக்குன்னு பரீசீலனை பண்ணுவார்.  என்னோட வாக்குச் சீட்டுன்னு வைச்சுங்க்குங்க.  உடனே, கணினி ‘ஒரு அரிசோனன்’கிட்டேந்து இந்த வாக்குச் சீட்டு வந்திருக்குன்னு தெரிவிக்கும்.  அந்த அதிகாரி, கணினிலே ‘ஒரு அரிசோனன்’கிட்டேந்து வாக்குச் சீட்டு வந்தாச்சுன்னு பதிவார்.  அதை நானும் இணையம் மூலமா என் வாக்குச் சீட்டு போய்ச் சேர்ந்துதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

அடுத்தபடியா, அந்த வாக்குச் சீட்டு வந்திருக்கற கவரிலே இருக்கற என் கையெழுத்தோட, கணினிலே இருக்கற இரண்டு கையெழுத்துகளோட – ஒண்ணு, வாக்காளர் மனுவிலே இருக்கறது, அடுத்தது, ஓட்டுநர் உரிமம் – அதுதாங்க, டிரைவர் லைசென்ஸ் – அதிலே இருக்க்ற கையெழுத்து – ஒப்பிட்டுப் பார்ப்பார்.  சரியா இருந்தா, ‘ஒரு அரிசோனன்’ கிட்டேயிருந்துதான் வாக்குச் சீட்டு வந்திருக்குன்னு முடிவுசெய்து, கணினிலே பதிவார்.  அதையும் இணையத்தில் தெரிஞ்சுக்கலாம்.

அதெல்லாம் சரிங்க, யாராவது உங்க வாக்குச் சீட்டை ஆட்டையைப் போட்டு…

ஒருத்தருக்கு வர்ற கடிதங்களைத் திருடறதோ, அதைக் கொடுக்காமல் தூக்கிப்போடறதோ, சட்டப்படி குற்றம்.  மாட்டிக்கிட்டா, கம்பி எண்ணவேண்டியதுதான். பொதுவா, நமக்கு வாக்குச் சீட்டு வரமா இருக்காது. 

போகட்டுங்க, ஏழைப்பட்டவங்ககிட்ட் சம்திங் கொடுத்து ஓட்டுச் சீட்டை வாங்கி அனுப்பிச்சா..?

அதுவும் சட்டப்படி குற்றங்க,  வேட்பாளர் உள்பட சம்பந்தப்பட்டவங்க, கம்பி எண்ணனுங்க.

என்னாங்க இது, எதைச் சொன்னாலும் சட்டப்படி குற்றம், கம்பி எண்ணனும்கறீங்க..  வயசாகிப்போச்சு, கையெழுத்துப்போடறப்ப கை நடுங்குது.  முதல்ல போட்ட கையெழுத்து மாதிரி இல்லேண்ணா..?

அதுதான் தொலைபேசி எண்ணைக் கொடுக்குறோமில்ல.  அவுக, சந்தேகம்னா, கூப்பிட்டு, கேட்கவேண்டிய கேள்விகளைக் கேட்டு, வாக்களிச்சது யாருன்னு உறுதிபடுத்திக்குவாங்க/

சரி, மத்த மானிலங்கள்ல…?  

அரிசோனா மாதிரி அத்தனை சுளு இல்லீங்க.  சில மாநிலங்கள்ல நம்ம கையெழுத்தை நாமதான் போட்டோம்னு ஒரு நோட்டரி பப்ளிக்கிட்ட (Notary Public) சான்று வாங்கி அனுப்பனும்.  நம்ம ஊருலே அரசாங்க அதிகாரிகிட்ட (கெசடட் ஆபீசர்) கையெழுத்து வாங்கி அனுப்பற மாதிரி.

அப்ப அவரு நம்ம யாருக்கு ஓட்டுப் போட்டோம்னு பார்க்கமாட்டாரா?

அவர் நம்ம கையெழுத்து சரியான்னுதான் உறுதிசெய்வாரே தவிர, நாம யாருக்கு ஓட்டுப்போட்டோம்னு பார்க்கமாட்டார்.  கையெழுத்தை உறுதிசெஞ்சவுடனேயே, வாக்குச் சீட்டுகள் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அடுக்கி வைப்பாங்க.  ஆகவே, நாம யாருக்கு ஓட்டுப்போட்டோன்னு அவங்களுக்குத் தெரியாது.  கவலையே படாதீங்க.

எந்தெந்த மாநிலத்தில் எப்படி எப்படி வராத வாக்கைத் திருப்பி அனுப்பனும்னு சுட்டி கொடுத்திருக்கேன். விவரமாத் தெரிஞ்சுக்கணும்னுனா அங்கே போய்ப் பாருங்க.[vii]

இந்த வருசம் கோவிட் கோவிட்னு ஒரு நுண்தீக்கிருமி…

“ஒரு அரிசோனன், உங்களுக்கு ரொம்பத்தான் கிண்டல்.  கோவிட்னு சொன்னா எங்களுக்குத் தெரியாதா?”

சரிங்க, உங்க கவனம் எங்கேயும் போயிடக்கூடாதுன்னுதான் அப்பப்ப இப்படிக் கொஞ்சம் இடக்காப் பேசறேன், அவ்வளவுதான்.  கண்டுக்காதீங்க.

இந்த ஆண்டு கோவிட் தொல்லையினால வரிசையா நின்னு வாக்களிக்கறது எவ்வளவு துன்பம், சொல்லுங்க.  ஓட்டுப் போடறோம்னுட்டு, கோவிட்டை வாங்கிட்டு வரக்கூடாது இல்லையா?

ஆகையினாலே, வராத வாக்காளர் சீட்டைக் கொஞ்சம் சுளுவாக் கொடுக்க ஆரம்பிச்சாங்க.  அதுமட்டுமில்லாம, நேரிலே வந்து ஒருவாரம் பத்து நாள் முன்னாலேயே ஓட்டுப் போடவும் அனுமதி கொடுத்தாங்க.  வாக்குச் சாவடிங்க ரொம்பக் கம்மிதான்.  இருந்தாலும், முன்னால வந்து சட்டுனு ஓட்டுப் போடலாம், இல்லீங்களா?

பாருங்க, இப்படி நல்லது செய்யலாம்னு ஆரம்பிக்கறபோது அதிபர் டிரம்ப் ஒரு வேலை செஞ்சாரு.  ஒண்ணில்லேங்க, பலவிதமான் வேலை செஞ்சாரு.

முதல்ல முதல்ல செஞ்ச வேலையைப் பார்ப்போம்.

இங்கே, அஞ்சல்துறைகிட்டத் தானியங்கி, அதுதாங்க ஆட்டோமாடிக் சார்ட்டிங் எந்திரங்கள் நிறைய இருக்கு.  அதுங்ககிட்டக் கட்டுக்கட்டா அஞ்சல்களைக் கொடுத்தா, அது நிமிசமா எந்தெந்த அஞ்சலை எந்தெந்த ஊருக்கு அனுப்பணும்னு பிரிச்சுக் கொடுத்துடும். 

அந்த அஞ்சல்துறைத் தலைமை அதிகாரி அதிபர் டிரம்ப்புக்கு ரொம்ப வேண்டியவர்.  அவர் திடும்னு, பணம் இல்லை, அதுனால ஆட்டோமாடிக் சார்ட்டிங்க் எந்திரகளை உபயோகிக்க முடியாது.  ஓவர்டைம் கொடுத்து ஆளுங்களை வேலைக்கும் வைக்க முடியாதுன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு

இது நியாயம்தானே, காசு இல்லாதப்போ, எப்படி அதிகமான ஆளுங்களை வேலைக்கு வைக்க முடியும், ஓவர்டைம் கொடுக்கமுடியும்னு அப்பாவித்தனமாக் கேட்காதீங்க.

மணிக்கு 35000 அஞ்சல்களைப் பிரிக்கக்கூடிய — குறைஞ்சபட்சம் 19 சார்டிங் எந்திரங்களை பிரிச்சுப் போட்டுட்டாங்க.  இதுக்குக் காரணம் அதிபர் டிரம்ப்க்கு நிறையத் தேர்தல் நிதியுதவி செஞ்ச லூயிஸ் டெஜாய் அப்படீங்கற போஸ்டமாஸ்டர் ஜெனரல்.  இவர் கடந்த கோடைக்காலத்திலேதான் இந்தப் பதவிக்கு வந்தார். டிரம்ப் அமெரிக்க அஞ்சல்துறைக்கு வரவேண்டிய நிதிப்பணத்தைக் கொடுக்காமல் நிறுத்திவைத்தார்[viii].. காரணம் வராத வாக்காளர்கள் அவருக்கு எதிரா ஓட்டுப்போட்டா என்ன பண்றதுங்கற பயம்.

இதோட, அஞ்சல் துறையையே கொஞ்சம்கொஞ்சமா அக்குவேறு, ஆணிவேராப் பிரிச்சு அஞ்சல்துறையே இல்லாமல் பண்றதும் இந்த லூயிஸ் டெஜாயோட நோக்கமா இருந்தது.

அட, இப்படியுமா நடக்கும்னு மூக்குலே விரலை வைக்காதீங்க.  ஓட்டுச் சாவடியைத் தாக்கறது, ஓட்டுகளைத் திருடறது எல்லாம் இங்கே பண்ணமுடியாது.  இப்படி மறைமுகமா செஞ்சாவது தன் பதவியைத் தக்கவச்சுகலாமங்கற ஒரு நப்பாசை.  இதுக்கு முன்னால இருந்தவங்க இப்படியெல்லாம் செஞ்சதில்லே.  வேறவிதமா ஏழை எளியவங்க வந்து ஓட்டுப்போடறதைப் பலவிதமாத் தடுக்க முயற்சி பண்ணினாங்க.  இது ஒரு புதுமுயற்சி.

உடனே, எதிர்க்கட்சிக்காரங்க ஊடகங்கள்ளாம் பலமாக் கூக்குரல் கொடுத்தாங்க, இப்படியும் அநியாயம் நடக்கலாமான்னு.

100+ Interesting things ideas in 2020 | trump cartoons, trump humor, caricature

அதிபர் டிரம்ப் அதுக்கெல்லாம் மசியலை.  வராத வாக்காளர்கள் ஓட்டைத் தடுத்துப்பிட்டு, வேறவிதமாத் தன் ஆதரவாளர்கள் தனக்கு ஓட்டுப்போட ஒரு வழியை ரூம்போட்டு – எங்கேனு கேட்காதீங்க – வெள்ளை மாளிகைலே எத்தனையே ரூம்கள் இருக்கு, அதிலே ஒரு ரூம்னு வைச்சுக்குங்களேன்.

அது என்ன வழி, என்ன ஐடியான்னு கேட்கிறீங்களா?

அதை அடுத்த பதிவுலே சொல்றேன்.

[தொடரும்]


[i]       Southern U.S. states have closed 1200 polling places in recent years: rights group by Andy Sullivan, Reuters, Sep 9, 2019, https://www.reuters.com/article/us-usa-election-locations-idUSKCN1VV09J

[ii]      Your State-by-State Guide to GOP Voter Suppression by Jacob Weindling, Paste Magazine, Oct 16, 2018, https://www.pastemagazine.com/politics/2018-elections/your-state-by-state-guide-to-gop-voter-suppression/#kansas

[iii]     Block the Vote: Voter Suppression in 2020, News and Commentary, ACLU 100 Years, https://www.aclu.org/news/civil-liberties/block-the-vote-voter-suppression-in-2020/

[iv] Kentucky Slashes Number of Polling Places Ahead of Primary—Especially Where Black Voters Live by Madison Pauly, Mother Jones Magazine, June 21, 2020, https://www.motherjones.com/politics/2020/06/kentucky-slashes-polling-places-voting-rights-mcgrath-booker-lebron-james/

[v] Absentee Ballot Rules, Vote.org, https://www.vote.org/absentee-voting-rules/

[vi]      Excusess to Vote Absentee, National Conference of State Legislatures, https://www.ncsl.org/research/elections-and-campaigns/vopp-table-2-excuses-to-vote-absentee.aspx

[vii]     How States Verifhy Voted Absentee Ballots? National Conference of State Legislatures, Apr 17, 2020, https://www.ncsl.org/research/elections-and-campaigns/vopp-table-14-how-states-verify-voted-absentee.aspx

[viii]    The USPS is shutting down mail-sorting machines crucial for processing absentee ballots as the 2020 election looms by Aaron Holmes, Business Insider, August 13, 2020

5 Replies to “அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4”

 1. மிக நன்று,
  வாக்குச்சீட்டில் யானை கழுதை படம் இருக்குமா?

 2. வாக்குச்சீட்டில் யானை கழுதை படம் இருக்குமா?

 3. ரொம்ப அருமையான பதிவு. முந்தைய பதிவுகளைப் படிக்கமுடியவில்லையே’ன்னு வருந்துறேன். இந்தியாவுலதான் தேர்தல்’ல தில்லுமுள்ளு இருக்கும்னு பாத்தா, அங்க இதயெல்லாம் துக்கிச் சாப்பிடுவாங்க போல. அப்புறம் என்ன ஜனநாயகம்’னு பேச்சு.
  ப.பாண்டியராஜா

 4. //வாக்குச்சீட்டில் யானை கழுதை படம் இருக்குமா?//

  இருக்காதுங்க. படிச்சுப் பார்த்துதான் ஓட்டுப் போடணும். கைநாட்டுன்னா, படிக்கத் தெரிஞ்சவர் ஒருத்தர் உதவியோட ஓட்டுப் போடலாமுங்க, சாமியோவ்!

 5. //முந்தைய பதிவுகளைப் படிக்கமுடியவில்லையே’ன்னு வருந்துறேன். //

  இந்தப் பதிவுலேயே கீழே போனா, மத்தப் பதிவுக்கான சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *