திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து பண்டைய நாகரீகங்களிலும் ஒட்டுமொத்த கலாசாரமும் இலக்கியமும் சமயம் சார்ந்ததாகவே இருந்தது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, திருக்குறள் உலகமனைத்திற்கும் நன்மை தரக்கூடிய நெறிகளைப் போதித்தாலும் அது இந்து தர்ம சாஸ்திரம் என்பதே உண்மை. திருவள்ளுவர் தடாலென்று வானத்திலிருந்து குதித்து தடாலடியாக 1330 குறள் எழுதிவிடவில்லை. அவரது பண்பாட்டில், சூழலில் ரிஷிகளும் முனிவர்களும் உபதேசித்து, வாழ்ந்து ஊறிய ஞானத்தைத் தான் தனது மொழியில் குறட்பாக்களாகப் படைத்தார். குறளை ஒழுங்காகக் கற்பவர்கள் எவருக்கும் உடனே புரியும் விஷயம் தான். ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், இந்து விரோத திராவிட இயக்க, கம்யூனிஸ்டு ஆசாமிகளும் அதைக் கற்க விரும்ப மாட்டார்கள், எதிர்ப்பார்கள். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் திருக்குறளைக் கற்பிக்க முடியாது. பொதுவெளியில் அதனை நீதிநூல் என்று நிலைநிறுத்த முடியாது. எனவே, திராவிட இயக்கம் உருவாக்கிய அந்தப் பொய் அப்படியே நீடிக்கட்டுமே. தமிழகம் “அமைதிப் பூங்காவா” இருக்கவேண்டாமா? – இப்படியும் ஒரு தரப்பு. திமுக கொத்தடிமைகள், அதீத செக்யுலர்வாதிகள் போன்றோர் பொதுவாக இப்படிக் கூறுவார்கள்.

இந்த மனநிலைக்குப் பின்னால் இரண்டு வக்கிரமான கண்ணோட்டங்கள் உள்ளன – 1) ஆபிரகாமிய மதத்தவர்கள் சமூகத்தில் comfortable ஆக உணரவேண்டும் என்பதற்காக இந்துமதத்தின் கூறுகளை எல்லாம் “பொதுமை” படுத்தி விடலாம். அவை இந்துமதம் சார்ந்ததல்ல என்று நாமே சொல்லி விடலாம். அதனால் இழப்பு ஒன்றும் இல்லை 2) இந்துமதம் என்பது பெருமைக்குரிய ஒன்றல்ல, அது ஒரு பிற்போக்கான சமாசாரம்: சாதிக்கொடுமை, பெண்ணடிமைத்தனம் எல்லாம் தான் அதில் உண்டு. யோகா, பிராணாயாமம், திருக்குறள், பொங்கல் பண்டிகை, கோயில் கட்டடக்கலை, பரதநாட்டியம் இதெல்லாம் தனித்தனி (திருக்குறள் “தமிழ்மறை”, பொங்கல் “தமிழர் திருநாள்”). இவற்றுக்கும் இந்துமதத்திற்கும் தொடர்பு கிடையாது. ஏனென்றால், இந்துமதத்தில் உன்னதமானது என்று எதுவும் கிடையாது.

மேற்சொன்ன ஹிந்து அடையாள மறுப்பு வாதங்களை வைப்பவர்கள் உலகின் மற்ற பூதாகாரமான “ஒற்றை பொது அடையாளங்கள்” எவற்றையும் இது போன்று கேள்விக்கு உட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றின் ஆக்கிரமிப்புகளையும், நேரடி வன்முறையையும் நியாயப் படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண் நகை. திருவள்ளுவரை மகரிஷியாக சித்தரித்தால் அலறுவார்கள், ஆனால் ஊரெங்கும் வெறிபிடித்து அலையும் கிறிஸ்தவ மதமாற்ற கும்பலுக்கு அடிவருடிகளாக இருப்பார்கள். திமுக கொத்தடிமைகள், சொந்த வாழ்வில் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவார்கள். அதே கையோடு இந்துமத வெறுப்பையே கோட்பாடாக வைத்திருக்கும் கட்சிக்கு ஏவல் நாய் போல வாக்களிப்பார்கள்.

இந்தப் போலித்தனத்தையும் அசிங்கம் பிடித்த இரட்டை வேடத்தையும் தமிழர்கள் விட்டொழித்தால் தான் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்பாடு காக்கப் படும். இல்லையென்றால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அதை அரித்துத் தின்று விடும். கண்முன்னால் இது நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் புத்தி வரவில்லையா?

மஞ்ச்சூரியன் சுவையாக இருக்கிறது, சாப்பிட ஆசை என்றால், அதை “உலகப் பொது உணவு” என்று சொல்லித்தான் உண்கிறீர்களா? சீன உணவு என்ற அடையாளத்தை மறுதலித்து விடுவீர்களா?

இந்து தர்ம நூலான திருக்குறளின் கருத்துக்கள் உன்னதமானவை. தமிழ் பேசும் கிறிஸ்தவன் அதைக் கற்க ஆசைப்படுகிறான் என்றால், தாராளமாகக் கற்கட்டும், அதன்படி நடக்கட்டும். ஆனால், அதற்காக அதன் இந்து அடையாளத்தை ஏன் வெறித்தனமாக மறுதலிக்க வேண்டும்? ஒரு உணவு வகையின் கலாசார அடையாளமே இவ்வளவு கவனமாகப் பாதுகாக்கப் படும்போது, ஆதாரமான பண்பாட்டு அடையாளத்தை நீர்த்துப் போக வைப்பீர்களா?

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டு இந்துக்கள் திராவிட இயக்கத்தின் மூளைச்சலவையால் இந்தக் கேவலமான கலாசார தற்கொலைக்கு உடன்பட வைக்கப்பட்டார்கள். தங்கள் சொந்த கலாசாரத்தின் மீதே ஒவ்வாமையும் அருவருப்பும் கொள்ள வைக்கப் பட்டார்கள். இனியும் இது தொடர வேண்டுமா? யோசியுங்கள்.

திருக்குறளை ஒரு சாதாரண நீதி நூல் போல வாசிப்பது என்பது மிக மேம்போக்கானது. அதில் உள்ள மையமான தத்துவப் பார்வையையும் நுட்பங்களையும் (இன்றைக்கு இந்துமதம் என அழைக்கப் படும்) வேதநெறி, சமணம், பௌத்தம் ஆகிய இந்திய தரிசனங்களின் அடிப்படை இன்றி புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று ஒரு குழும விவாதத்தின் போது நண்பர் ஒருவர் “திருக்குறளில் வரும் இந்துக் கடவுள்கள் பெயர்” என்று குறிப்பிட்டதும் சிலர் பிலுபிலுவென்றூ பிடித்துக் கொண்டார்கள். பாவிங்களா அவரையும் இந்துவாக்கிட்டீங்களா என்றார் ஒருவர். அப்போது இந்து என்ற சொல்லே கிடையாதே என்றார் இன்னொரு மேதாவி.

உடனே நண்பர்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

என்ற குறளைக் கொடுத்தார். அதற்கான மு.வ.உரை, கலைஞர் உரை, சாலமன் பாப்பையா உரை எல்லாவற்றிலும் இலக்குமி என்ற திருமகளையும், அவள் அக்காவான மூதேவியையும் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டி, அவர்கள் இந்து தெய்வங்கள் தானே என்று பரிதாபமாகக் கேட்டார். உடனே எதிர்த் தரப்பாளர்கள் இதில் இலக்குமி, மூதேவி என்பதெல்லாம் முக்கியமே அல்ல, அதைத் தூக்கி எறியுங்கள். ”பொறாமை குணம் கொண்டவனை விட்டு அறிவு, செல்வம் மறைந்து மடமை எனும் வறுமை குடி புகும்” – இது தான் சரியானது. இப்படித்த் தான் “சுத்திகரிக்கப் பட்டு” உரையெழுத வேண்டும்… என்றார்கள்.

இந்துமத ஒவ்வாமையை “பகுத்தறிவு” வேடம் போட்டு மறைக்கும் இந்த வாதத்தில் அடிப்படையிலேயே பிழை உள்ளது. திருக்குறள் ஏதோ திடீரென்று முளைத்த நூல் அல்ல. மணக்குடவர், பரிமேலழகர் காலத்திலிருந்து அது இங்கு பயிலப் பட்டு வருகிறது. அதற்கு ஒரு முறைமை உள்ளது. அதிலுள்ள மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளை கழற்றி எறிந்து தட்டையாக ஒரு நீதிபோதனையை உருவி எடுப்பது என்பது திருக்குறள் என்ற இலக்கியப் பிரதியை சிதைப்பதன்றி வேறில்லை.

உதாரணமாக, இந்தக் குறளிலேயே முக்கியமான குறிப்பு என்பது திருமகளும், மூதேவியும் அக்கா-தங்கை என்பதும், தங்கை அக்காவிடம் கைகாட்டி விடுவாள் என்பதுமாகும். இந்தக் குறியீட்டில் உள்ள தொன்மமும், அதன் ஆழ்ந்த விளக்கமுமே இதைக் கவிதையாக, தரிசனமாக ஆக்குகிறது. சாதாரணமாக “செல்வம் போகும் வறுமை வரும்” என்பது மட்டுமல்ல இது. இதை எத்தனை தடவை சொன்னாலும் பல “குறள் அன்பர்களுக்கு” புரிவதில்லை. இருந்தாலும் சொல்லி வைப்போம்.

(ஜடாயு எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து).

2 Replies to “திருக்குறளும் மஞ்ச்சூரியனும்”

 1. #இந்து என்ற பெயர் எப்போது வந்தது? தொல்லியல் மற்றும் #தமிழ் இலக்கியங்களின் பார்வை என்ன?

  ஹிந்து (இந்து) என்ற வார்த்தையே 200 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் ஜோன்ஸ் தான் தந்தார் என்று இங்கு பரவலாக பேசி வருகின்றனர். இதை சில இந்துத்துவவாதிகளும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உண்மையா? தொடர்ந்து படியுங்கள்…!

  பாரத மக்களை #இந்துக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. இதற்கு சான்றாக காலத்தால் முந்தைய #கல்வெட்டு இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது…!

  ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/DNa_inscription

  இதுதான் இன்று நமக்கு கிடைக்கும் காலத்தால் முந்தைய #இந்து என்ற சொல்லாடலுக்கு #தொல்லியல் சான்று. இது தவிர்த்து இதற்கு வேறு என்னென்ன சான்றுகள் உள்ளன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்….!

  அடுத்ததாக இஸ்லாமிய அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான #தாரிக்_அல்_ஹிந்த் எனும் நூலில் முக்கியமாக இந்நூல் எழுதப்பட்ட காலமான 1030 களில் இந்தியாவில் இருந்த தத்துவ மரபிற்கு அவர் #ஹிந்து என்று பெயரிட்டு எழுதி உள்ளார். அதாகப்பட்டது 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்….!

  அதோடு கி பி 5 ஆம் நுற்றாண்டில் #பூலாங்குறிச்சி தமிழ்(வட்டெழுத்து) கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது. அநேகமாய் இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் #கல்வெட்டும் பதிவாக இருக்கும். என்றாலும் இதை ஏற்பதில் பல குளறுபடிகள் உண்டு. ஏனென்றால் இதை பிரித்து எழுதியதை தவறாக புரிந்துகொண்டனர் என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆக இதை சற்று ஒதுக்கி வைக்கலாம்…!

  #ஆதாரம் ;

  https://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm

  ஹிந்து” என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று #சிவபெருமான் அருளிய விளக்கமாக நண்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் பதிவு செய்ததாவது

  “ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து”

  அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே ” ஹிந்து. ”

  #ஆதாரம் : மேரு தந்த்ரம்
  (31 வது அத்யாயம் )

  இதை தவிர ” ஹிந்து ” என்ற சொல் காளிகா புராணம், பவிஷ்ய புராணம், ப்ருஹந்நாரதீய புராணம், குலார்ணவ தந்த்ரம் முதலிய பழமையான நூல்களில் “ஹிந்து” என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரித்ர ஆய்வாளர்கள் மேரு தந்த்ரம் என்ற நூலின் காலமாக எட்டாம் நூற்றாண்டை சார்ந்த நூல் என்று கூறுகிறார்கள்….!

  அதோடு தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது #விஜய_நகர_சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில்,
  “#ஹிந்து_ராய_ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது……!

  ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் #ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த #ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “#ஹிந்துஸ்தான்_பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் #சத்ரபதி_சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது…..!

  ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் #கவிராஜ_பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு. தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே #ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது……!

  #பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது. ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன….!

  மிக முக்கியமாக #பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை #இந்து_ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார்….!

  “இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “#இந்துஞானிகள்” என்றார்..!

  (இது ஜடாயு அவர்கள் எழுதிய தமிழ் ஹிந்து எனும் தளத்திலிருந்து.)

  வடமொழியில் எழுதப்பட்ட #பிரகாஸ்பதி_ஆகமத்தில் (கி.மு. 4ம் நூற்றாண்டு)

  “ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
  தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே” என்ற வரிகள் உண்டு.

  அதாவது “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது….!

  அடுத்து #புத்த_ஸ்ம்ருதி (கி.மு. 4ம் நூற்றாண்டு)

  “ஹிம்ஸாயா தூயதே யஷ்ச ஸதாசரண தத்பர:
  வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்”

  “ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து என்கிறது”…..!

  மேலும், கிறிஸ்தவ மத நூலான பைபிள் பழைய ஏற்பாட்டில் பாரதத்தை #இந்து_தேசம் என்று சுட்டும் குறிப்புகள் உள்ளது …..!

  “இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள”

  #பைபிள்_பழைய_ஏற்பாடு_எஸ்தர் : 1-1

  ஆதாரம் : https://www.bible.com/ta/bible/339/EST.1.1-4.TAMILOV-BSI

  இது மட்டுமில்லாது தமிழ் #இலக்கியங்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு. ஆனால் இது இடத்தையோ மதத்தையோ குறிக்க பயன்படுத்தப்படாமல் மரபை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ,

  கி. பி 12 ஆம் நுற்றாண்டு #ஒட்டக்கூத்தர் இயற்றிய #குலோத்துங்க_சோழன்_உலாவில், குலோத்துங்க சோழனை “பொன் துவரை மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ”

  பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள்….!

  இங்கு இந்து என்ற சொல்லாடல் #சந்திர_மரபு என்ற பதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது…!

  இது மட்டுமல்லாது இதே பதத்தில் #திருமந்திரம், #தேவாரம், #திருவாசகம், #கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு….!

  ஆக தமிழ் இலக்கியங்களிலேயே இந்து என்ற சொல்லாடல் பயின்று வந்துள்ளதால் ஆங்கிலேயன் தான் இந்து என்று பெயரிட்டான் என்ற கூற்று #ஒவ்வாததாகிறது. இவ்வாறு, பொ.மு 500 தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு பரவி இருந்தது என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறியலாம்….!

 2. குடும்பத்துப் பெரியவர்கள், குருமார்கள் மூலம் அனுக்ரஹிக்கப்பட்டு, தோன்றியவைகளைக் கொண்டு என் குழந்தைகளுக்கு தினமும் திருக்குறளை பெருமையோடு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த திளைப்பு எல்லோருக்கும் கிட்ட, யூட்யூபில் போடலாமே எனத் தோன்றி 50 க்கும் மேலான பதிவுகள் முடிந்துள்ளன. சரிபார்த்து ஆசிர்வதியுங்கள்… எடு.
  https://www.youtube.com/watch?v=Yh24tbYj7fg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *