சொல்லுங்கள் மகாத்மாவே

வல்லாதிக்க சக்தியால் வஞ்சகமாய்க் கவரப்பட்ட ஆநிரைகளை அமைதியாப் போராடி மீட்டவன் நீ. ஐயமே இல்லை ஐயனே நீ ஆராதிக்கத் தக்கவனே. எதிரியின் கோட்டை நோக்கிய உன் படையெடுப்பு இந்த உலகம் இதுவரையிலும் காணாததுதான் (நம் முன்னோரின் ரத்தமே உன்னை வழி நடத்தியது எனினும் நீ சாதித்ததும் பெரும் சாதனையே).

கண்ணிவெடிகள் பதித்த நிலத்தைக் கால்பாவாமல் கடக்கும் வெண்புறாவாய் கோட்டையை நெருங்கியது உன் படை. கொத்தளங்களில் கூர் அம்புகளுடன் நின்ற எதிரிப் படை, உன் படையினரின் கைகளில் பறந்த வெள்ளைக் கொடி கண்டு திகைத்து நின்றது.

இதைவிடப் பெரிய ஆச்சரியம் உன் கையில் இருந்ததோ வெறும் ஒற்றை ஊன்றுகோல்!

நீ வில்லுடன் வந்து நின்றிருந்தால் அவர்கள் பீரங்கி குண்டு மழை பொழிந்தே உன்னை வீழ்த்தியிருப்பார்கள். நீ வாளுடன் வந்து நின்றிருந்தால் சூரியனே அஸ்தமிக்காத தேசத்தின் கண்கூச மின்னும் பேனட் துவக்குகள் கொண்டே வீழ்த்தியிருப்பார்கள். நீ கூர் ஈட்டியுடன் களம் புகுந்திருந்தால் கண்ணி வெடி பதித்தே  உன்னையும் உன் படையையும் கொன்று குவித்திருப்பார்கள். உன் கையில் இருந்ததோ ஒற்றை ஊன்றுகோல். உன் ஒட்டு மொத்தப் படையின் வசம் இருந்ததோ வெண்ணிறக் கொடிகள் (எதிரிகளிடம் இல்லாமல் இருந்ததும் அவை மட்டுமே).

நீ கோட்டை நோக்கி வீர நடைபோட்டபோது, அகழிகளில் இருந்த முதலைகளே உன் பாதங்களைத் தாங்கிப் பிடித்தன.  மறித்து நின்ற துவக்குகள் விருட்டென்று விலகி வழிவிட்டன.  அரையாடையுடன் வந்த உன்னைக் கண்டு திகைத்து நின்றான் உனக்குமாகச் சேர்த்து உடை அணிந்திருந்த மேதகு மன்னன். சட்டென்று நீ தரையில் அமர்ந்ததைக்கண்டு அதிர்ந்தான் ஆக்கிரமிப்பு சாம்ராஜ்ஜியத்தின் அநீதி பதி. வேறு வழியின்றி உன் அருகில் உனக்கு சமமாக அவனும் உட்கார்ந்து பேச ஆரம்பித்ததைக் கண்டு உலகமே வியந்தது.

மென்மையான குரலில் நீ சொன்னாய், ஓநாய்களை  நேசிக் கிறேன்; அவற்றின் கூர் நகங்களை மட்டுமே வெறுக்கிறேன்.

உயிர் பயம் கண்களில் மின்ன ஓடித் தப்பிக்க முயலும் மென் விலங்குகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிய அந்த வன் மிருகம், முன்னால் வந்து தலை குனிந்து நின்ற பசுவை என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்தது. இந்த இரையை எப்படியும் வெருண்டோடச் செய்து வேட்டையாடவேண்டும் என்று அதன் சுற்றங்களையெல்லாம் சுற்றி வளைத்துத் தாக்கியபோதும் அன்றலர்ந்த தாமரை போலவே உன் அழகு முகம் இருக்கக் கண்டு யோசித்தான் அவனியை அடக்கி ஒடுக்கிய அரக்கன்.

அருகில் நெருங்கி உன் காதில் எதையோ சொன்னான்; நீயும் ரகசியமாக அவன் காதில் எதையோ சொன்னாய். நீண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் அதி ஆச்சரியமாய் ஆவினங்கள் உன் வசம் ஒப்படைக்கப்பட்டன. மேதகு மன்னனின் மாண்பு மிகு தளபதி சிறு சிராய்ப்பின்றித் தன் கூடாரம் கலைத்து நம் கோட்டை விடுத்து சொந்த நாடு திரும்பினான்.

நீ ஒற்றை ஆயுதம் கூட ஏந்தாமல் ஒட்டு மொத்த தேசத்தையும் உன் பின் அணி திரட்டியது பூமியை அளந்த காலடி போல் முதல் அதிசயம். சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி உன் அஹிம்சைக்கு அடிபணிந்து பின்வாங்கியது விண்ணையும் அளந்த இரண்டாம் காலடிபோல் இரண்டாம் அதிசயம். ஆனால், உயரமான வாமனரே, உம் விஸ்வரூப தரிசனம் கண்டு பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த பக்தன் அதிரும் வகையில் மூன்றாம் காலடியை உன் தலையிலேயே வைத்து அழுத்தி உன்னையே ஏன் பாதளத்தில் தள்ளிக்கொண்டாய்?

அதோடு நின்றாயா? ஏகாதிபத்திய மாபலியை விரட்டிய நீ அந்த அரக்க வேந்தனின் அடியாளிடம் ஏன் ஒப்படைத்தாய் உன்னிடம் தரப்பட்ட உயரிய அரியாசனத்தை?

அவன் முதல் வேலையாய் நம் ஆவினங்களை மேலை நுகத்தடியில் பிணைத்தான். மைய அதிகாரச் சாட்டைகொண்டு அடித்தான். பாரம்பரிய வரலாற்றைக் காயடித்தான். அடிமை மொழி கொண்டு லாடம் அடித்தான். மீட்கப்பட்ட ஆவினங்கள் இன்றும் இழுத்துச் செல்கின்றன காலனி அரக்கனின் கடுஞ்சுமை மூட்டைகளை.

ஆவினங்களை மீட்டுத் தந்ததோடு ஒதுங்கிக்கொண்டு விட்டேனே; என் மீது எந்தப் பழியும் இல்லை என்கிறாய். உண்மைதான். ஆனால், இன்றைய கேள்வி ஏன் நீ ஒதுங்கிக் கொண்டாய் என்பதுதானே? அது கூட நீ உன்னத உயரத்தில் சஞ்சரித்த உத்தமர் என்பதால் இருந்திருக்கலாம். ஆனால், உன் உண்மைத் தொண்டர் அனைவரையும் ஒரேயடியாய் ஓரங்கட்டிவிட்டு அந்நிய மோகியிடமே ஆட்சியைக் கொடுத்தது ஏன்?

சுதந்தர தேசம் ஜனிக்க வேண்டிய நாளும் நட்சத்திரமும் கோட்டான்கள் வேட்டையாடும் கொடும் நள்ளிரவா? நம் முதல் விடுதலைப் பிரகடனம் உலகின் ஆதி மொழியில் அமையாமல் அடிமை மொழியில் அமைந்தது ஏன்?

உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?

சுதந்தரக் காற்றை என்னை சுவாசிக்கவே விடவில்லையே… யாமோ கள்வன் என்று உரத்த குரலில் முழங்கவேண்டாம் உத்தமரே… ஏனெனில் உடைத்துக் காட்டினால் அம்பலமாகப்போவது உன் திருட்டுச் சலங்கையின் போலி பரல்கள்தான்.

சொல் உத்தமனே…

காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?

ஆரம்பித்த நாள் முதல் அறுபடாமல் நீ நூற்ற சுதேசி ராட்டையை விறகாக உடைத்து வீதியில் வீசி எறிந்தான். நம் பாரம்பரிய ஆலயத்தை இடித்துப் படிக்கல்லாக்கியே  எழுப்பினான் போலி மதச்சார்பின்மையின் பேரணைக்கட்டுகளை. உன் ராமனின் தீப ஆராதனை சுடரில் அல்லவா பற்ற வைத்துக்கொண்டான் தனது அதிகாரப் புகைச் சுருட்டுகளை. நீ உன் உயிரைக் கொடுத்து நூற்ற எளிமையின் கதர்த்துணியை கழிப்பறை மிதியடியாக அல்லவா காலில் போட்டு மிதித்தான்.

நீ ஏமாற்றப்பட்டாயா ஏமாற்றினாயா?

அவன் யாரென்று தெரியாதா உனக்கு? அல்லது தெரிந்தேதான் செய்தாயா உன் திரு விளையாடல்களை.

முட்டை விரிசலுறும் விதத்திலிருந்தே தெரிந்திருக்கவில்லையா உள்ளிருந்தது கோர விழிகளும் கூர் நகங்களும் கொண்ட மேலைக் கழுகென்று.

நீ ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத்தான் செயல்பட்டிருக்கிறாயா? புரிந்துகொள்ளாதது பின்னால் அணிவகுத்த எங்களின் தவறுதானா?

அடித்து அடித்து இறுக்கப்பட்ட அடிமைக் கம்பத்துக்கு உயவு நீராய் ஊற்றப்பட்டவையா நீயும் உன் உபதேசங்களும்.

போர்ப்படை திரட்டும் முன் ஊர் ஊராகச் சென்று ஆவினங்களை மீட்டெடுத்து முற்காலப் புல்வெளிகளில் மேயவிடுவேன் என்றாய். ஆனால், மேலை நுகத்தடியில் பூட்ட விரும்பியவனை ஆதியிலிருந்தே உன் அருகில் அமர்த்தியும் கொண்டாய். அதீத மனிதாபிமானம் பேசி ஓரங்கட்டினாய் தர்ம ஆவேசம் கொண்ட மண்ணின் மைந்தர்களை. அதீத அன்பைப் பொழிந்து அரவணைத்தாய் அராஜகம் பேசிய அந்நியர்கள் சிலரை. சிறு நீரோடைகள் அமைத்து, சிறு தடுப்பணைகள் அமைத்து, இயற்கை உரங்கள் இட்டு, உள்ளூர் பொருள் கொண்டு, உள்ளூர் தேவை நிறைவேற்றி ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு சுதந்தர உலகமாக்குவேன் என்றாய். ஆனால், உன் லட்சியங்களின் ராட்டைகளை உடைத்துக் குளிர் காய்ந்துகொண்டவனையே ஏன் உன் அருகில் இருத்தியும் கொண்டாய்.

உன் ஆஸ்ரமத்து பஜன்களில் என்றாவது காலணி கழற்றி கால் மடித்து அமர்ந்ததுண்டா விபத்தாய் ஜனித்த உன் விபரீதச் சீடன்? நீ பார்த்துப் பார்த்துக் கொய்த மலர்கொண்டு, பக்தியுடன் தொடுத்த சுதேசிப் பூமாலை உன் கண்முன்தானே ஓரமாய் வீசி எறியப்பட்டது? ஒவ்வொரு மலரிலும் அமர்ந்து நீ சேகரித்த தியாகத்தின் தேன் துளிகள் உன் கண் முன் தானே கொட்டப்பட்டன அதிகாரத்தின் கழிப்பறைகளில். உன் கால் நுனி மகரந்தங்கள் பட்டுக் கருத்தரித்த தாமரை மலர்கள் தேசத் தடாகங்கள் முழுவதும் பூத்திருக்க அந்தக் கொடும் பனிபிரதேசத்து அந்நிய ரோஜாவை அனைத்துக்கும் மேலாக ஏன் அவலட்சணமாய்ச் சூட்டினாய்?

கிராம ராஜ்ஜியக் கனவுகளை செதில் செதிலாக வெட்டி எறிந்து செதுக்கிய அரசியல் சாசனச் சிலையை ஆதி முதல் அனுபந்தம் வரை அருகில் இருந்து பார்க்கத்தானே செய்தாய்?

ஞானக் குழந்தைக்கு மூல முலைப் பாலூட்ட வேண்டிய பெருந்தேவி நீ செவிலித் தாயிடம் ஏன் தூக்கிக் கொடுத்தாய் சின்னஞ்சிறு பாலகனை. அந்தப் பச்சிளம் பாலகனுக்கு மேலைச் சங்கில் புகட்டப்பட்ட திரிந்துபோன பால் என்ன கேடு விளைவிக்குமென்று உன் தீர்க்க தரிசனத்துக்குத் தெரியவே இல்லையா?

சொல்லுங்கள் மகாத்மாவே

நீங்கள் அமுதமா… மெல்லக் கொல்லும் மென் விஷமா?

ஆசை ஆசையாய் பெற்றெடுத்த குழந்தைக்கு சுதேசிச் சர்க்கரையும் சுதந்தர நெய்யையும் சேனை தொட்டு  ஊட்டியிருக்கவேண்டிய நீ  உன் போலி சிஷ்யனிடம் ஏன் பொறுப்பை ஒப்படைத்தாய்? அவனுடைய  கரங்களின் நகக்கண்ணில் தேங்கியிருந்த நவீன அழுக்குகள்தானே  தேச குழந்தையின் முதல் சுவையாகிப் போனது. அந்த முதல் அமிலச்  சொட்டு சேணையினால் சுய வலிமையின் சொந்தக் கால்கள் முதலில் தள்ளாடத் தொடங்கின… தன்னியல்பான வளர்ச்சியின் கைகள் அதன் பின் மெள்ள முடங்கின. முன்னோர்களின் ஞானத்தின் கண்கள் இருளத்தொடங்கின… சுதந்தர மூளையின் நரம்புகள் பிசகத் தொடங்கின. எதையும் சகித்துக்கொள்ளும் அடிமை ரத்தம் உடம்பெல்லாம் ஓடத் தொடங்கின. கலப்பட சேணையின் கலங்கிய மூலக்கூறுகள் பல்கிப் பெருகி நீர் மேல் மிதக்கும் எண்ணெய்ப் படலமாக ரத்த நாளங்கள் முழுவதும் படர்ந்து நிற்கின்றன.

ஆநிரைகளை உன்னிடம் ஒப்படைத்த அராஜக மன்னன் அன்று உன் காதில் மெள்ள ஓதியதுதான் என்ன..? அவனுக்கு நீ கொடுத்த உத்தரவாதம் தானென்ன..? நீங்கள் தைரியமாகப் போங்கள் இந்த(இந்து) மந்தையை உங்கள் சமூகத்தையே பின் தொடரச் செய்வேன் என்று உன் இயல்பான மென்மையான குரலில் சொன்னாயா? உடலால் எம்மவராக உணர்வால் உம்மவராக நீவிர் உருவாக்கிய போலிக் கூட்டத்தின் பெருந்தலைவனிடமே ஒப்படைக்கிறேன்  எம்(நம்) தேசத்தை… பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்கும் எம்(நம்) சுரங்கங்களின் சாவியை உம் அடியாளிடமே கொடுத்து வைக்கிறேன் என்று சொன்னாயா? ஆட்சி எங்களிடம் வந்தாலும் அதிகாரம் உம்மிடமே இருக்கும் என்று உறுதி கொடுத்தாயா?

நீங்கள் கூடிப் பேசி உருவாக்கிய கோமாளித் தீர்மானமா எம் சுதந்தரப் பிரகடனம்? 

நீ கால் வைத்த இடங்களில் எல்லாம் எப்படி அன்று முளைத்தன அகழிகளின் முதலைகள்? நீ உன்னுடைய மெலிந்த கைகளால் தள்ளியதும் எப்படி அன்று திறந்துகொண்டன பிரமாண்ட கோட்டைக் கதவுகள்? நீ நடக்க நடக்க எப்படி அன்று வழி விட்டு விலகின கூர் ஈட்டிகள் பொருத்தப்பட்ட துவக்குகள்?

கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள்  சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்.

அதுவரை மண்டையைப் பிளந்த ஆதிக்க குண்டாந்தடிகள் அமைதியாகிப் போனது ஏன்? உரிமைக் குரல் எழுப்பிய வீரர்களின் குரல்வளையை நெருக்கிய தூக்குக் கயிறுகள் உங்கள் கழுத்தில் மாலையாய் மட்டுமே போடப்பட்டதேன். கூடி நின்ற கூட்டங்களின் மீட்சிக்கான ஒற்றை வாயிலில் நின்று கொண்டு சீறிப் பாய்ந்த ஒரு கோடி புல்லட்களில் ஒன்றாவது உங்கள் சிகையையாவது சிராய்த்துச் சென்றதா என்ன? 

உன் ஆதி சத்யாகிரகத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாகத் திரும்பியிருந்தாய் நீ. சொந்த மண்ணில் கால் பதித்த மறுகணமே உனக்கு மகாத்மா பட்டம் எப்படி மாலையாய் சூட்டப்பட்டது. சுதந்தரம் என் பிறப்புரிமை என்று முழங்கிய உன் வழிகாட்டிகளெல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஒட்டு மொத்த தேசத்தின் உன்னதப் பிரதிநிதியாய் இடைச்செருகலாக வந்த நீ இறுதிவரை நீடித்தது எப்படி? வேத பூமியின் விநாயக ஊர்வலங்களை நீ ஏன் வீதி தோறும் கொண்டு செல்லவில்லை? அந்நிய மதத்தின் ஆண்டவனே அனைவருக்குமான ஆண்டவன் என அமைதிப் போராட்டங்களின் ஆரம்ப முழக்கமாக அதை ஏன் பரிந்துரைத்தாய்? நீ உயர்த்திப் பிடித்தது உண்மையில் வெண்ணிறக் கொடியா… காவி நீக்கம் செய்து வெளிற்றிய கந்தல் கொடியா?

உன் அருகே எதனால் வந்தமர்ந்தான் ஏகாதிபத்திய மாமன்னன்? விசித்திர நிகழ்வுகளை நாங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டுமோ? உன் காதில் அந்த சாத்தான் ஓதிய வேதம்தான் என்ன? புன்முறுவல் பூத்தபடியே நீ உரைத்த பதிலுரைதான் என்ன?

சொல்லுங்கள் மகாத்மாவே

நீங்கள் பசுவா… பசுத் தோல் போர்த்திய புலியா?

என் மரணத்துக்குப் பின் நடந்தவற்றுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்கிறீரா எம் அன்புக்கும் உரியவரே…

மலை ஊற்றருகே நடப்படும் விதை தானே கரையெங்கும் முளைத்து நிற்கும். நம் தேசமெங்கும் வேர் ஊன்றிக் கிளை பரப்பி, நில்லாமல் வீசும்  காற்றில் பேயாட்டம் போடும்  இன்றைய மரங்கள் அனைத்துமே நீ ஊன்றிய முள் மரத்தின் விதையில் இருந்து முளைத்தவைதானே. அந்த மரங்களின் கிளைகளில் பூத்துக்குலுங்கும் போலி மதச்சார்பின் மலர்களில் இருந்து வீசும் இந்து விரோத வாடைக்கு நீ அல்லாமல் யார் பொறுப்பு..? அந்த மரங்களில் காய்த்துத் தொங்கும் அதீதச் சலுகைக் கனிகளின் திமிர் நிறைந்த கசப்புக்கு நீயல்லாமல் யார் பொறுப்பு?

சொல்லுங்கள் மகாத்மாவே

நீங்கள் அவதாரமா… அரிதாரமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *