அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

சங்க இலக்கியத்தில் நாணம் என்பது ஓர் ஆடவனைச் சுட்டியும் வருகிறது. வள்ளுவரோ நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை.

நாணம் ஆணுக்கும் உரியதே. பயிர்ப்பும் ஆணுக்கும் உண்டு. இதைப் பேராசிரியர் தி வேணுகோபாலன் (நாகநந்தி) எங்களுக்கு விளக்கியதைப் பலவருடங்களுக்கு முன்பு மரத்தடி குழுவில் எழுதியிருந்தேன். இப்போது தேடிப் பிடித்தேன். இதோ (நன்றி: மரத்தடி குழுமம்).

சங்கராபரணம் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அர்த்தம் தெரியாமல் ‘ப்ரோசே வா ரெவரு’வாவைக் கடித்துக் கடித்துத் துப்புவாரே ஒரு பாகவதர், அவரைத் திட்டிவிட்டு வரும் சங்கர சாஸ்திரிகளிடம் குட்டிச் சங்கரன் கற்றுக்கொள்வது போல்தான் இந்த நான்கு குணங்களுக்கும் நான் பொருள் கற்றுக் கொண்டேன்.

ஒரு கவியரங்கம் நடந்துகொண்டிருக்கிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. இன்னும் இருபது பூர்த்தியாவில்லை. ஒரு பெரிய கவிஞர் (பேரெல்லாம் வேண்டாம்) கவிதை படிக்கிறார். அந்தக் கவிதையில் இந்த ‘அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு’ வந்தது. எங்க ஆசிரியர் பார்வையாளர்களுக்கு மத்தியில், எங்க பக்கத்தில், உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் உட்காருவது என்றாலே, அப்பா பக்கத்தில் உட்கார்ந்த குட்டிப் பொண்ணைப் போல எங்களுக்கு சந்தோஷம் பொத்துக்கொண்டு போகும். ஜிப்பா கையை உருவிக்கொண்டு எழுந்தார். அப்படி எழுந்தார் என்றால் எதிராளி காலி என்று அர்த்தம். அவர் அப்படி எழும் போதே நாங்கள் ‘தோ தோ தோ… வரப் போவுது பார் பாம்’ என்று சிரித்துக் கொள்வோம்.

‘இந்த நான்கு சொற்களுக்கும் என்ன பொருள்?’ என்றார். அச்சம் என்றால் பயம் என்று பொருள் சொன்னார் பெ.க. ‘மடம் என்றால் முட்டாத்தனமா?’ என்று என் ஆசிரியர் ரொம்ப சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல் தலையைக் கொஞ்சம்போற அசைத்துவிட்டு, ‘நாணம் என்றால் வெட்கம்’ என்றார் பெ.க. ‘அப்போ பயிர்ப்பு என்றால்’ என்று திருப்பிக் கேட்டார் எ.ஆ. குழம்புகிறார் பெ.க. நா தடுமாறுகிறது. யோசிக்கிறார். சிரிக்கிறார்.

‘நாமே பொருள் உணராத சொற்களை நம் எழுத்தில் பயன்படுத்தலாமா’ என்று கேட்டார் எ.ஆ. அப்புறம் அங்கே சந்தைக் கடையானது. அது போகட்டும்.

வீட்டுக்குப் போகும் வழியில் பொருள் கேட்டேன். ‘இலக்கியத்தயும், நம்ம வாழ்க்கை முறையையும் சரியாப் புரிஞ்சுக்காத முட்டாப் பசங்க செஞ்ச மிகப் பெரிய குழப்படி இந்த நாலு வார்த்தைக்கும் வழங்கி வரும் அர்த்தம். அதுவும் இடைக்காலப் புலவர்கள் நிறையவே இந்தச் சொற்களைப் போட்டுக் குழப்படி பண்ணிவிட்டார்கள்.’

‘இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? புரிய வேண்டாமோ மக்குப் பசங்களுக்கு? ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம்’ என்றார்.

‘எங்க சார் இருக்கணும் இந்தக் குணமெல்லாம்’

‘சொல்லிடலாம். ஆனா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று பார்க்கிறேன்,’ என்று ஒரு கணம் தயங்கினார். ‘சரி பரவாயில்லை. பசங்களுக்குத் தெரியாத விஷயம் கூட ஒண்ணு இருக்கா என்ன? அதுவும் இந்த விஷயம்னா எனக்குக் கத்துக் கொடுக்க மாட்டீங்களா என்ன?’ என்றபடி ஆரம்பித்தார்.

இந்த பூர்வ பீடிகைக்குக் காரணமும் அதுதான். சின்னப் பசங்க காதைப் பொத்திக்கோங்க. இல்லாட்டி, பொத்திக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யுங்க.😉

இரண்டு பேர் தனிமையில் இருக்கும் போது- அதான் சயனக் கிருகம் என்று சொல்வாங்களே- அங்க இருக்க வேண்டிய குணம் அது நாலும். சரியாச் சொல்லப் போனால் முதல் மூணும். பொய் அச்சம். பொய் நாணம். பொய் மடம்.

‘ஐயோ, இப்பவா! யாரானும் வருவாங்கப்பா… நான் மாட்டேன்’. அச்சம். பொய் அச்சம். இது ஒரு வகை என்றால், சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் துடைப்பக் கட்டையைத் திருப்பிக்கொண்டு நாலு போடு போடும் அதே பெண், சயன அறையில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்தால் ‘ஐயோ! கரப்பூ பா… எனக்கு கரப்புன்னா ரொம்ப ரொம்ப பயம்’ என்று baby talk செய்துகொண்டு கண்ணைப் பொத்திக்கொள்வது இன்னொரு வகை. உடனே இவருக்கு வீராவேசம் வந்து விடும். விட்டேனா பார் அந்தக் கரப்பானை என்று அறை முழுக்க [:))] தேடுவார். இதுக்கு இன்னும் உட்பிரிவுகள் நிறைய சொல்லலாம்.

‘சீ போடா… கொஞ்சமானும் வெக்கமிருக்கா பாரு…’. பொய் நாணம். ‘எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது’ என்று சொல்லும் நாணம்.

அப்புறம் என்ன ஆகும், உட்கார்ந்து பேசுவாங்க. சாதாரணமாகத்தான். வேற மாதிரி எல்லாம் இல்லை. நம்ம ஆளுக்குப் புதுப் பொண்டாட்டியப் பாத்ததும் அறிவு ஊற்று அப்படியே பொத்துக்கொள்ளும். (வயசாக வயசாக அம்மையாரைப் பார்த்தால் அறிவு ஊற்றா! தூக்கிப் போட்டு ஊத்திடுவாங்க அஆங்). இந்த அம்மாவுக்கு இவன் உடற பீலா எல்லாம் முதலிலேயே தெரியும். அட ஒரு கெமிஸ்ட்டுன்னு வச்சுக்கோங்களேன். திடீர்னு ரசாயனத்தை எல்லாம் பெரூசா விளக்குவான். இந்த அம்மா அது எல்லாத்தையும் கரை கண்டவங்களா இருப்பாங்க. இல்லாட்டி, இசையில் இவனுக்குத் தெரிந்ததெல்லாம் நாலு துணுக்காக இருக்கும். அந்தம்மா கர்நாடக சங்கீதத்தைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அவங்க கிட்ட போயி, ‘இந்த பந்துவராளிக்கும் சுபபந்துவராளிக்கும் என்ன வித்தியாசம்னா’ என்று அலட்ட ஆரம்பிப்பான். அறிவுப் பரிமாற்றமா நடக்கிறது அங்கே? இதெல்லாம் sweet nothing. இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையா?

இந்த மாதிரி சமயங்களில் எல்லாம், ‘சரி போறும் ரொம்ப அலட்ட வேணாம். எனக்கும் தெரியும்’ என்று சொல்ல மாட்டார்கள். சொல்லக் கூடாது. ஆண் இருக்கிறானே, இந்தச் சமயத்தில் அம்மாகிட்ட போய் அன்றன்று படித்து வந்ததைச் சொல்லுகின்ற குழந்தை. அவனை அப்படி அடித்துவிட்டால் போச்சு. அதிலிருந்து எழ அதிக நேரம் பிடிக்கும் அவனுக்கு.

அப்படிப் பண்ணாம, ‘அட’ ஒரு ஆச்சரியப் பார்வை. ‘எவ்ளோ தெரியறதுப்பா ஒங்குளுக்கு… ஐய்ய்ய்யோ!’ தலையை ஒரு பக்கம் சாய்த்து பிரமிப்பான ஒரு கண் வீச்சு. அவ்ளோதான். ஐயாவுக்கு கால் ஆகாயத்தில் இருக்கும். அன்னிக்கு விழறவன் என்னிக்கும் எழ மாட்டான்.

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை. இது மடம்.

‘இவை மூன்றும் கலந்துனக்கு நான் தருவேன். கோலம் செய் துங்கக் கரிச்சட்டி மூஞ்சிக் காதலனே, நீ நமக்கு மங்காத வாழ்வளிக்க வா.’ ‘எனக்கு’ இல்லீங்க. ‘நமக்கு’. இவன் சரியா இருந்தா வாழ்வு மங்காமல் நிற்கும். இல்லாட்டி, அவள் வாழ்வையும் கெடுப்பான், தன்னைத் தானேயும் அழித்துக்கொள்வான்.

சரி. நாலாவது என்ன ஆச்சு என்று கேட்கிறாய். பாக்கி வைக்கவில்லை. சொல்லிவிடுகிறேன். பயிர்ப்பு என்றால், தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி. இந்த உணர்ச்சி ஆம்பிளைக்கும் உண்டு. பெண்ணுக்கு இந்த உணர்வு மிகக் கூர்மையாக இருக்கும்.

இந்தப் பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். ‘மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்’ என்று ஏன் கோவப்பட்டான் நம்ம ஆளு?’நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்’ என்று அவன் கொதிப்பது பிற்காலத்தில் கற்பிக்கப்பட்ட பொருளை உடைய குணங்களுக்கு. பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் பாரதி செய்தது கொஞ்சமில்லை.

இந்த நாணம் வேறு, வள்ளுவர் நாணுடைமையில் சொல்லும் நாணம் வேறு என்பது பொதுவுக்குச் சொல்லும் மொழி.

ஏற்பதும் விடுப்பதும் அவரவர் விருப்பம்.

One Reply to “அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”

  1. மிக அருமையான கட்டுரை. மீண்டும் கலாசாலைக் காலங்கட்கு அழைத்துச் சென்றது இப்பதிவு. நன்றி அய்யா,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *