நகரம் நானூறு
ஹரி கிருஷ்ணன்
சந்தவசந்தம் என்றொரு குழுமம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மரபுக் கவிதைகளுக்கான குழு இது. அங்கும் இந்தத் தொடரை இட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் குழுவின் தலைவர் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீட்டின் புகைப்படத்தை இட்டு, செங்கல்லைக் கேட்டால் கதை சொல்லும். இந்த வீடு இடிந்துகொண்டிருக்கிறது. இங்கே ஒரு பத்தடுக்கு எழும். பக்கத்து வீட்டில் எல்லோரும் அன்னியர்களாக இருப்பார்கள் என்று ஒரு வெண்பா இட்டிருந்தார். அப்போது நான் இட்டது இது:
தில்லைகங் காநகரில் சென்ற திசையெல்லாம்
எல்லையொன்றில்லா இடம்பிடிப்பு – கல்லறைமேல்
வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!
ஈடுண்டோ இங்கே இதற்கு.
தில்லை கங்கா நகர் (நங்கநல்லூரில் நான் 40 வருடகாலம் குடியிருந்த இடம்) புகைப்படத்தை இட முடியவில்லை. அந்தக் குறையை இன்று பெங்களூரில் தீர்த்துக் கொண்டேன். பெங்களூருக்கான வெண்பாவுடன் படம்.
வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.
ஹரி அவர்களே:
உங்கள் உயிர்த்துடிப்புள்ள எழுத்துக்கு, கவிதைகளுக்கு மிக்க நன்றி…., இதோ ஒரு நகர வெண்பா:
இடம்வல மெங்கும் கருங்கல்லில் காடு
விடம்போ லுயறுமேல் மாடி – குடிமகன்
நாயோடு பின்புறச் சந்தினில் இந்தியத்
தாயேநீ சென்றுனைப் பார்.
ஹரிபரி மிக்க நகரங்க ளூடே
ஹரிகவிக் கண்களில் காணும் – தெருவினில்
கல்லாகிப் போனது கட்டிடம் மட்டுமா
பொல்லா மனங்களும் தான் !
மனந்திறந்த வாழ்த்து, ‘மனோ‘கரமாய் வெண்பா
இனமாகத் தந்தீர் இதம்.
உங்களுடைய வாழ்த்துக்கும் நல்ல வெண்பாக்களை இங்கே இட்டதற்கும் நன்றி, மனோ.
ஹரி சார்:
பதில் குறள் அருமை …
(பத்து வருடம் முன்பு ‘பா’ என்றால் ‘பே’ என்று முழித்தவன் நான், உங்களை சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை)
anyways, இந்த பாத்தொடுப்புக்களை முடிக்க மேலும் இரு பா, just to close the topic of “greed in development”:
தான்தன தென்றோடும் மாக்கள் உளவரை
தானிந்த முன்னேற்ற மாயை – இனம்புரி
யாதொரு சோகத்தை தந்திடும் உள்ளத்தில்
தீதொடு நஞ்சுந் தரும்.
பண்பெனும் அன்பால் அடித்தளம் இட்டிட
விண்ணினை யெட்டும்நம் தேசம் – கணத்தில்
துயரெனும் பூகம்பம் தாக்கிடும் போதும்
அயராமல் நிற்கும்.இன் நாடு.
எனுக்கும் வெண்பா எழுத ஆசை ஆனால் நான் இனிமேல் தான் கற்க வேண்டும் .எங்கே எப்படி .உதவுங்கள் .
நன்றி
கணேஷ்ராம்