ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்

தினமலர் சென்னை பதிப்பில் இன்று (14 மார்ச் 2021) வெளிவந்துள்ள கட்டுரை. நன்றி: தினமலர்.

கட்சிவாரி, ஜாதிவாரி, மைனாரிட்டி, ஆண், பெண் என, பல வர்க்கங்களாக வாக்காளர்கள் அடையாளப்படுத்தப் படுகின்றனர். அதன்படி பார்த்தால், நான் ஒரு ஹிந்துத்துவா வாக்காளன். அது என்ன ஹிந்துத்துவா வாக்காளன்?

சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு.

(1) இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது. அதேநேரத்தில், இடஒதுக்கீட்டிற்கு உரிய ஜாதியினரில், இன்னும் வறுமையில் உழல்பவர்கள் பலர் இருக்கின்றனர்.இவர்களை இட ஒதுக்கீட்டின் பலன், இன்னும் சென்றடைய வில்லை. அவர்கள் ஜாதி அடையாளத்தால் ஏற்பட்ட பாதிப்பு, வறுமையால் ஏற்பட்ட பாதிப்பு என, இரட்டை துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.இதை சரி செய்ய, உள் ஒதுக்கீடு என்ற கருவியை பயன்படுத்தி, வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்போருக்கு, அந்தந்த சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டில், 5௦ சதவீதத்தையோ அல்லது எந்த அளவு பொருத்தமாக இருக்குமோ, அந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.வசதி படைத்தவர்களின் வரன்முறையிலும், எண்ணிக்கையிலும், வரும் குழப்பம் போல இல்லாமல், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாகவே வரையறுக்கப் படுவதால், இதை நடைமுறைப்படுத்துவதும் எளிது. இதனால், வசதி படைத்தவர்களும், இட ஒதுக்கீட்டிற்கு வெளியே செல்ல வேண்டிய பிரச்னை வராது.

(2) ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன.இந்த நிலை மாற, ஆலயங்கள், அரசு துறைகளின் கீழ் இல்லாமல், சுதந்திர வாரியத்தின் கீழ் அமைய வேண்டும். இது, பெரும் பணி. முதல்வரின் முதல் கையெழுத்தில், அமல்படுத்தக் கூடிய விஷயமல்ல. ஆனால், இரண்டாண்டுகளில் நடைமுறைப்படுத்துவது என்ற வரையறையோடு, முறைகளை நிர்ணயிக்க ஒரு நிபுணர் குழுவையும், உடனடியாக அமைக்க வேண்டும்.இதில், கோவில் குடிகளையும், அவர்களுக்கான மானியங்களையும், உடனடியாக மீட்டெடுப்பதற்கான வழிவகையும் செய்ய வேண்டும்.

(3) இந்த கோரிக்கை, போலி அறிவு ஜீவிகளாலும், பெயரளவு முற்போக்காளர்களாலும், நிச்சயம் கேலிக்கு உள்ளாக்கப்படும். எனினும், கிராமப் பொருளாதாரத்தில், விவசாயத்தில், நஞ்சில்லா உணவு உற்பத்தியில், சுற்றுப்புற சூழல் மேம்பாட்டில், மக்கள் ஆரோக்கியத்தில், சூழலுக்கு கேடில்லா எரிசக்தி உற்பத்தியில், இது, பெரும் மாற்றங்களை கொண்டு வரும். முந்தைய ஆட்சியில், பசு மாடுகளும், ஆடுகளும் இலவசமாக கொடுக்கப்பட்டன. அதையொட்டிய தொடர் திட்டங்களை பற்றி யோசிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, மாட்டு சாணத்தையும், சிறுநீரையும், நெல் கொள்முதல் செய்வதை போல, அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

(4) சாணத்தில் இருந்து மீத்தேன் எரிபொருள் தயார் செய்ய முடியும். அதை, மின்சாரமாக மாற்றலாம் அல்லது சமையல் எரிவாயுவாக பயன்படுத்தலாம். மீத்தேன் எடுத்த பின் உள்ள கழிவை, மிகச்சிறந்த எருவாக, விவசாயிகளுக்கு அடக்க விலைக்கு கொடுக்கலாம். ‘அர்க்’ எனப்படும், வடித்தெடுத்த சிறுநீரை பூச்சி விரட்டியாகவும், மருந்துகளாகவும், பயிர்களுக்கு நுண்ணுாட்டங்களாகவும், தயாரித்து விற்பனை செய்ய முடியும். இது, கிராமங்களில் வருமானத்தை பெருக்கும்.

இலவசமாக, தானமாக மாதம், 1,௦௦௦ ரூபாய், 1,500 ரூபாய் என, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை தருவதற்கு பதில், பொருளாதாரத்தையும் தற்சார்பையும் மேம்படுத்தும், இந்த வகை திட்டங்களை செயல்படுத்த, அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.


கட்டுரையாசிரியர் கும்பகோணம் கண்ணன் ஆர்.எஸ்.எஸ்., தஞ்சை கோட்ட இணைத் தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *