மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீ

மூலம்: தீப் ஹல்தர் (Deep Halder) எழுதிய Blood Island: An Oral History of the Marichjhapi Massacre நூலிலிருந்து (ஹார்பர் காலின்ஸ் இந்தியா வெளியீடு, 2019)

தமிழில்: B.R.மகாதேவன்

1970களில் இஸ்லாமிய மதவெறித் தாக்குதல்களிலிருந்து தப்பி பங்களாதேசத்திலிருந்து திக்கற்று ஓடிவந்த இந்து அகதிகள் மீது அப்போதைய மேற்கு வங்க கம்யூனிஸ்டு அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்திய பயங்கர வன்முறை நிகழ்வுகள் மரிச்சபி படுகொலை என்று அழைக்கப் படுகிறது. நெஞ்சை உறையவைக்கும் அந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் சோகங்களை அவர்கள் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ள முக்கியமான ஆவணம் இந்த நூல்.

பங்களாதேஷ் வாழ்க்கை

‘பங்களாதேசத்தின் குலானா ஜில்லாவில் இருந்த லாகிகாய் கிராமத்தில் இருந்து வந்தவன். ஹிந்து முஸ்லிம்களிடையே கலவரங்களுனூடாக வாழ்ந்து வந்தவன். 1964-ல் ஒரு வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான இந்துக்கள் சொந்த கிராமத்தைவிட்டு விரட்டப்பட்டோம். அப்போது எனக்கு 16 வயது இருக்கும். சரியான வயது நினைவிலை. அப்போதெல்லாம் யாரிடமும் பிறப்புச் சான்றிதழ் எல்லாம் இருக்காதே. என் பெற்றோரை ஏற்கெனவே வேறொரு வன்முறையில் இழந்துவிட்டிருந்தேன். என் உறவினரின் வீட்டில்தான் வசித்து வந்தேன். இரண்டாவது கலவரம் வெடித்தபோது உறவினரோடு சேர்ந்து விரட்டப்பட்டோம்.

எனக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மனைவியின் உயிரைக் காப்பாற்றவேண்டி நாங்கள் அந்த இடத்தை விட்டுத் தப்பிக்க முடிவு செய்தோம். தெருவெங்கும் தலையில்லா முண்டங்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. கை கால் வெட்டுப்பட்டவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் ஒளிந்தபடி முனகிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளியில் எனது இறுதித் தேர்வு நடக்கவிருந்தது.அதை முடித்துவிட்டு இந்தியா வந்தால்தான் ஏதேனும் வேலை கிடைப்பது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.

என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக நாங்கள் எல்லையைக் கடக்க முயன்றபோதுதான் இந்தக் காயங்கள் எனக்கு ஏற்பட்டன. ஓர் இஸ்லாமிய கும்பல் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது. ‘நான் அவர்களைக் கொஞ்சம் தடுத்து நிறுத்துகிறேன். நீ ஓடித் தப்பித்துக்கொள்’ என்று என் மனைவியிடம் சொல்லி அவளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பினேன்.

என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்தது. என் மனைவியைக் காப்பாற்றியாகவேண்டும் என்று தீர்மானித்தேன். முடிந்தவரை அந்த கும்பலைத் தடுத்தேன். இரண்டு வாள் வெட்டுகள் தலையில் விழுந்தன. ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி விழுந்துவிட்டேன்.

நான் இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் போய்விட்டார்கள். பின்னர் எங்கள் குழுவில் இருந்து சிலர் என்னைத் தேடி வந்து பார்த்தனர். நான் குற்றுயிரும் குலையுயிருமாகத் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னைக் கைத்தாங்கலாக தூக்கிச் சென்றனர். கிடைத்த துணியை வைத்து காயங்களுக்குக் கட்டுப் போட்டார்கள். நிறைய ரத்தம் வெளியேறிவிட்டிருந்தது. ஆனால் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன்.

ஒரு வழியாக கல்கத்தா வந்து சேர்ந்தோம். அங்கு நிறைய தற்காலிக முகாம்கள் இருந்தன. அங்கிருந்து ராய்ப்பூரில் இருந்த நிரந்தர, தண்டகாரண்ய மனா முகாமுக்கு அகதிகளை அனுப்பினார்கள். அது மத்திய பிரதேசத்தில் அப்போது இருந்தது (இப்போதைய சத்தீஸ்கர்).

தண்டகாரண்ய அகதிகள் முகாம் வாழ்க்கை

முன்னால் இருந்த உலகில் இருள் மட்டுமே இருந்தது. தொலை தூரத்தில் தம்ஸா நதி கூழாங்கற்களை உருட்டியபடி பாய்ந்து கொண்டிருப்பது மிக மெலிதாகக் கேட்டது. கூடாரங்களுக்குப் பின்னால் அடர்ந்த வனம் சூழ்ந்திருந்தது. பூமியின் முடிவுப் பகுதி போலிருக்கிறது. அவர்களுடைய புதிய வீடு. கிராமம். எண் ஆறு: மலகான்கிரி.

அதிகாலையிலேயே வேலை ஆரம்பித்துவிடும். பெயருள்ள பெயரற்ற மரங்கள், பெரிய சிறிய மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிச் சாய்க்க வேண்டும். பீடி சுற்றவேண்டும். நாளொன்றுக்கு ஆயிரம் பீடிகள் சுற்றினால் இரண்டு ரூபாய் கிடைக்கும்.

மரங்களை வெட்டக் காட்டுக்கு உள்ளே வெகுதூரம் போகவேண்டியிருக்கும். கரடிகள் போன்ற வன் மிருகங்கள் உலவும் இடம் அது. குரங்குகள் அங்குமிங்கும் தாவிக் கொண்டிருக்கும். மனித நடமாட்டம் கண்டு பயந்துபோன குரங்கு ஒன்று மரம் வெட்டப் போன ஒருவரைக் கடித்துக் காயம்பண்ணிவிட்டது. இருள் பொந்துகளில் நாகங்கள் மறைந்திருந்தன. புதர் மறைவில் புலிகள் பதுங்கிக் காத்திருந்தன. அகதிகள் கூட்டம் கூட்டமாகவே எங்கும் சென்றார்கள். ஒவ்வொருவரும் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்று வந்தார்கள். பெண்கள் சமைத்து, குழந்தைகளை கவனித்துக்கொண்டு, பழைய முகாம்களில் செய்ததுபோல் கூடாரத்தைச் சுற்றி வீட்டுக்குத் தேவையான காய், கனிகளை நட ஆரம்பித்தனர்.

மரீச்சபி நோக்கிய பயணம்

பரந்து விரிந்த இசாமதி ஆற்றை சுக சந்த் பார்த்தார். உடம்பெல்லாம் காயத்துடன் ரத்தம் வழிய புதர் மறைவில் ஊர்ந்து வந்திருந்தார். ரூப சந்த், ரங்க பௌ, சச்சின், தோலா காகா என்று மெல்லிய குரலில் அழைத்தார். சற்று தள்ளி காட்டுச் செடிகளைத் தலைக்கு மேலே பிடித்தபடி மறைந்துகொண்டு ஆற்றின் கரையோரம் மெள்ள நகர்ந்தனர். இசாமதி ஆற்றில் படகு காத்திருந்தது. மெள்ள ஒவ்வொருவராக ஏறினர்.

இரவு, தன் இருள் திரையால் அவர்களைப் போர்த்தியிருந்தது. மேலே மின்னிக் கொண்டிருந்த சொற்ப நட்சத்திரங்கள் இருளை மேலும் அதிகரித்தன. திடீரென்று ஒரு ஒளிக்கற்றை அவர்கள் மீது பாய்ந்தது. அந்த ஒளி இவர்களைப் பார்த்து உரத்த குரலில் எச்சரித்தது. ‘திரும்பிவந்துவிடுங்கள். இல்லையென்றால் சுட்டுவிடுவோம்’.

நதிகளைக் காவல் காக்கும் போலீஸ்கள். ‘அந்தத் தீவில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. திரும்பி வந்துவிடுங்கள்’.

‘திரும்பி வருவதா… வந்து எங்கு போவது..?’ சுக சந்த் பதிலுக்குக் கத்தினார்.

‘வாக்குவாதத்துக்கான நேரம் இது அல்ல. திரும்பிப்போய்விடுங்கள். இல்லையென்றால் சுடுவேன்’.

‘எங்கே போக. எங்களுக்குப் போக்கிடம் இல்லை’ சுக சந்த் மீண்டும் சத்தமாகப் பேசினார்.

‘தண்டகாரண்யத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்…’

காவலர்களின் படகு இவர்களை நெருங்கியது.

காவலர்களின் கண்கள் காடுகளில் உலவும் புலியின் கண்களைப் போல் பயமுறுத்தியன. சுக சந்த் இதற்கு மேலும் என்ன வேதனை அனுபவிக்க இருக்கிறது என்று துணிந்து நின்றார்.

‘முடியாது. நாங்கள் மரிச்சபி தீவுக்குப் போயாகவேண்டும்’.

காவலர்கள் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தனர்.

சுக சந்தும் மற்றவர்களும் கைகளைத் தூக்கியபடியே சரணடைவதுபோல் போக்குக் காட்டி, சட்டென்று ஆற்றுக்குள் குதித்தனர்.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

அகதிகளுக்கு இடமில்லா கம்யூனிஸப் பொன்னுலகம்

அரசாங்கமானது எங்களை மரிச்சபியில் இருந்து விரட்டவும் கைதுசெய்யவும் காக்கி உடை ரவுடிகளை அனுப்பிவைத்தது. எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டனர். மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். சிலர் எந்த முகாமில் இருந்து வந்தார்களோ அந்த இடத்துக்குத் திரும்பினர். சிலர் தண்டகாரண்ய முகாமுக்குத் திரும்பினர். சிலர் மேற்கு வங்காளத்தில் பல பல பகுதிகளுக்குச் சிதறி ஓடினர்.

தொடர்ந்து நடந்த காவல் துறை அராஜகமானது தீவு வாசிகளை நிலைகுலைய வைத்தது. ஒரு நாள் இரவில் யாரோ ஒருவர் வந்து தீவில் இருந்த நல்ல தண்ணீர் கிணறில் விஷத்தைக் கலந்துவிட்டார். அதைக் குடித்தவர்களில் 13 பேர் அடுத்த நாளே இறந்தனர். குழந்தைகள் எல்லாம் எலிகளைப்போல், பூச்சி புழுக்களைப் போல் செத்து விழுந்தனர்.

இடதுசாரி அரசின் காவலர்களின் பாலியல் வெறியாட்டத்துக்குப் பயந்து பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். எங்கள் படகுகள் காவலர்களால் தாக்கப்பட்டு ஆற்றின் நடுவில் மூழ்கடிக்கப்பட்டன. அதில் சென்றவர்களும் அப்படியே மூழ்கி இறந்தனர்.

14, ஜூன், 1979 . இடதுசாரி அரசு இறுதித் தீர்மானம் எடுத்துவிட்டிருந்தது. காவல் வேட்டை நாய்கள் எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்ற வந்து குவிந்தன. வீடுகள் அனைத்தையும் தீவைத்துக் கொளுத்தினர். அங்கு இனி மேல் ஒரு உயிர் கூட, உடமை கூட இருக்கக்கூடாதென்று மேலிடம் உத்தரவிட்டிருந்தது போல அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்கினர்.

மரிச்சபி கனவு 1979, ஜனவரி 31-ல் முடிவுக்கு வந்தது.

மரீச்சபி தீவில் இருந்த குடிசைகளின் மேல் வைக்கப்பட்ட தீ ஓரிரு நாட்களில் அணைந்துவிட்டது. ஆனால் எங்கள் நெஞ்சில் எரியும் தீ இன்னும் அணையவில்லை.

*

One Reply to “மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீ”

  1. This peaceful religion ( !!) that won’t let you live peacefully anywhere. Complete exchange of population should have been done as recommended by Ambedkar and Patel. Gandhi, the egocentric, Peaceful appeaser, blackmailed them and we are still suffering. Gandhi alone is responsible for death of millions which includes Bangladesh war and the genocide of Hindus there.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *