நர்த்தன கணபதி

தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு
படந்தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர
வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட
நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே.

அகன்ற கால்களுக்கேற்ற பொற்சிலம்பு வயிற்றில் அணிந்த பாம்புக்கச்சையோடு அழகாக மிளிர, வெற்றிதரும் நடனத்தைச் செய்யும் தந்தையே வியந்து பார்த்து துடி (மிருதங்கம் போன்ற தோற்கருவி) கொட்டி இசைக்க, நின்று ஆடுகின்ற ஆனைக்கன்றை நினைப்பவர்களது வினைகள் இல்லாமலாகும்.

நர்த்தன கணபதியைக் குறித்த இந்த அழகிய பாடல் யாப்பருங்கலக் காரிகை என்ற பழைய யாப்பிலக்கண நூலில் ஒரு எடுத்துக்காட்டுச் செய்யுளாக வருகிறது. மூலம் எந்த நூலில் இருக்கும் என்று தேடிய போது, சிவஞானபோத வசனாலங்கார தீபம் என்ற நூலின் பதிப்புகளில் விநாயகர் வாழ்த்துச் செய்யுளாக கொடுக்கப் பட்டிருந்தது (இரண்டாம் அடியில் ‘பாம்பொடு தழீஇ’, கடைசி அடியில் ‘நின்றாடும் பொல்லார் தாள் நினைந்தார் தாம் உய்ந்தாரே’ ஆகிய பாடபேதங்களுடன்). இப்பாடல் பிற்காலத்தியதான இந்த நூலைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து தேடியபோது “விநாயகர் அகவல் விளக்கவுரையில் இப்பாடல் பெருங்கதையிலிருந்து எடுத்துக் காட்டுவதாய்ச் சொல்கிறார் இரத்தினசபாபதியார்”, என்று நண்பர் ஜாவா குமார் குறிப்பிட்டார்.

நர்த்தன கணபதி, பெலாவாடி வீரநாராயணர் ஆலயம், கர்நாடகம். ஹொய்சளர் காலம் (9-11ம் நூற்.). நன்றி: Madhu Jagdhish – Sculpture Enthusiast.


ஸ்ரீ கணேசர் மீது ஆதி சங்கரர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த “முதாகராத்த மோதகம்” என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.
மற்றொன்று ஒன்பது பாடல்கள் கொண்ட கணேச புஜங்கம். இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார். இங்கு கேட்கலாம்.

ரணத்க்ஷுத்³ரக⁴ண்டானினாதா³பி⁴ராமம்ʼ
சலத்தாண்ட³வோத்³த³ண்ட³வத்பத்³மதாலம் ।
லஸத்துந்தி³லாங்கோ³பரிவ்யாலஹாரம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ॥1॥

ஒலிக்கின்ற சிறுமணிகளின் இனிய ஸ்வரங்களால் மகிழ்வூட்டுபவர். தாண்டவ நடன அசைவுகளில் பாதத் தாமரைகளால் தாளமிடுபவர். தொந்திமேல் படரும் நாக ஹாரத்துடன் மிளிர்பவர். ஈசானரின் புதல்வரான கணாதீசரைப் போற்றுவோம்.

உத³ஞ்சத்³பு⁴ஜாவல்லரீத்³ருʼஶ்யமூலோ –
ச்சலத்³பூ⁴லதாவிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் ।
மருத்ஸுந்த³ரீசாமரை꞉ ஸேவ்யமானம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ॥5॥

புஜங்கள் மலர்க்கொடிகளென உயர்கின்ற காட்சியினால், வேரிலிருந்து அசைகின்ற கொடிகள் போல புருவங்கள் சுழல, தேவகன்னியர்களால் சாமரம் வீசி சேவிக்கப் படுபவர். ஈசானரின் புதல்வரான கணாதீசரைப் போற்றுவோம்.

(கணேச புஜங்கம் 1,5)

நுக்கேஹள்ளி (ஹாசன் அருகில், கர்நாடகம்) லக்ஷ்மி நரசிம்மர் ஆலய சுற்றில் உள்ள நர்த்தன கணபதி. 12ம் நூற்றாண்டு ஹொய்சளர் காலச் சிற்பம்.

மேற்காணும் அழகிய சிற்பத்தில் துதிக்கையில் விளையாட்டாக தண்டோடு பறித்த ஒரு தாமரையை ஏந்தியிருப்பதாக வடித்திருப்பது மிக அழகு. யானைகள் குளத்தில் இறங்கி தாமரைகளைத் தண்டோடு பறிக்கும் காட்சி நமது பழைய இலக்கியங்களில் நெடுக வரும் ஒன்று.

மேற்கூறியதில் உள்ள முதல் சுலோகத்தில் “சலத்-தாண்ட³வோத்³த³ண்ட³வத்-பத்³ம-தாலம்” என்ற வரிக்கு தாண்டவ நடன அசைவுகளில் பாதத் தாமரைகளால் தாளமிடுபவர் என்ற பொருளே பொதுவாகத் தரப்படுகிறது. ஒரு புத்தகத்தில் மட்டும் ‘அசைகின்ற தாண்டவ சமயத்தில் உயர்த்திய தண்டுடன் கூடிய தாமரைகளின் தாளத்தை உடையவர்’ என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, துதிக்கையில் உள்ள தாமரையின் அசைவு தாளத்தைக் காட்டுவது போல இருக்கிறதாம். நல்ல ரசமான பொருள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *