டி.என்.ஆர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் நேற்று தனது 87ம் வயதில் மறைந்தார். அவரது மறைவு தமிழுலகிற்கு மாபெரும் பேரிழப்பாகும்.
திருவையாற்றைப் பூர்வீகமாகக் கொண்ட டி.என்.ஆர் தஞ்சாவூரில் வெற்றிகரமான வழக்கறிஞராகவும் நன்கறியப்பட்ட அறிஞராகவும் திகழ்ந்தார். இளமைப்பருவத்திலிருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்த இவர், ஐம்பது வயதுக்குப்பின் தனது வழக்கறிஞர் பணியை விடுத்து, முழுநேரமும் தமிழ்ப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். சைவசித்தாந்தத்திலும், பாரதியார் படைப்புகளிலும், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலானோரின் ஆங்கில செவ்வியல் இலக்கியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
சைவத்திருமுறைகளின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் நேர்த்தியாக மொழிபெயர்த்தது இவரது மாபெரும் பங்களிப்பாகும். திருஞானசம்பந்தர் (முதல் திருமுறை), திருநாவுக்கரசர் (ஆறாம் திருமுறை), திருவாசகம் (எட்டாம் திருமுறை), ஒன்பதாம், பதினொன்றாம் திருமுறைகளின் சில பகுதிகள், பெரியபுராணம் முழுமையும் (பன்னிரண்டாம் திருமுறை), சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் ஆகியவை இதில் அடங்கும். திருவாசகத்தை ஏற்கனவே ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலும், அதில் பிழைகளும், பொருட்குற்றங்களும், சைவவிரோத கருத்துக்களும் நிறைந்திருந்தன. அதற்கு மாற்றாக டி.என்.ஆர் செய்த சிறப்பான மொழியாக்கம் துல்லியமானதாகவும், மாணிக்கவாசகரின் உள்ளத்தைப் பிசிறின்றி பிரதிபலிப்பதாகவும் உள்ளதாக சைவ அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த மொழிபெயர்ப்புகளை Thevaaram.org பன்னிரு திருமுறை இணையத்தில் அந்தந்த திருமுறைகளின் கீழ் காணலாம். பெரியபுராணத்தின் மீது கொண்ட தீவிரமான ஈடுபாட்டால், சேக்கிழார் அடிப்பொடி என்ற சிறப்புப் பெயருடனே அழைக்கப் பட்டார்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வாயிலாக தமிழக அரசு வெளிக்கொணர்ந்த பாரதியார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதிக்கு வழிகாட்டியாகவும், பதிப்பாசிரியராகவும் இருந்தவர் டி.என்.ஆர். அத்துடன், சீனி.விசுவநாதன் வெளிக்கொணர்ந்த கால வரிசையில் பாரதியார் படைப்புகள் என்ற மாபெரும் தொகுதிக்கு பெரும் ஊக்கமளித்து அணிந்துரையும் வழங்கினார்.
வாழ்நாள் முழுவதும் தீராத ஆர்வம் கொண்ட படிப்பாளியாக விளங்கிய டி.என்.ஆர் அவர்களது இல்லத்தில் அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட புத்தக சேமிப்பில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் நூலகங்களில் ஒன்று என்று ஆய்வாளர்கள் அதைக் குறிப்பிடுவார்கள்.
அவரது புதல்வர்கள் நால்வரும் தந்தைக்கேற்ற தனயன்களாக தத்தம் துறைகளில் சிறப்புற்று விளங்குகின்றனர். இவர்களுள், வழக்கறிஞராக விளங்கும் டி.ஆர்.ரமேஷ் ஆலய வழிபடுவோர் சங்கம் வாயிலாக தமிழகக் கோயில்களின் நிர்வாகத்திலும் பாதுகாப்பிலும் இந்து அறநிலையத்துறை காட்டி வரும் மெத்தனம் குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளில் முன்னிற்பவர். கோயில்களை அரசின் பிடியிலிருந்து மீட்கும் இயக்கத்தில் மிக முக்கியமான பங்களிப்புகளை செய்து வருகிறார்.
டி.என்.ஆர் அவர்களை ஒரு முறை 2009ல் கும்பகோணத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சந்தித்து, ஆசிபெற்று உரையாடும் நற்பேறு கிடைத்தது. விபூதி துலங்கும் தோற்றத்துடன் மிடுக்காக இருந்த பெரியவர், மிகவும் எளிமையாகவும் சகஜமாகவும் பேசியது நினைவில் எழுகிறது.
டி.என்.ஆர். அவர்கள் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.