(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் நவீன காலப் பொருட்கள், அறிவியல், தொழில்நுட்பங்கள் இவற்றுக்கு கடந்த காலப் பொருட்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் எவையும் சளைத்தவை அல்ல. நாம் மேற்கத்தியமயமாகியிருக்கிறோம் என்பதனாலேயே அதுவே உயர்ந்தது என்று அர்த்தமில்லை.
காலனிய காலத்தில் நாம் பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, சமூகவியல்ரீதியாக மட்டுமே அடிமைப்படுத்தப்படவில்லை; ஆன்மிகரீதியாகவும், அடையாளரீதியாகவும் அடிமைப்படுத்தப் பட்டோம். சுரண்டப்பட்டோம் என்பதுதான் காந்தியடிகள் சொன்ன முக்கியமான விஷயம். சமூக, பொருளாதார, அரசியல் விஷயங்களில் பெற்ற சுதந்தரம் என்பது போதுமானதல்ல. ஆன்மிகரீதியாக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறவேண்டும். அதுவே முக்கியம். அது நடந்தால்தான் நாம் வாழ்வது நம் வாழ்க்கையாக இருக்கும்.
இன்றைய நமது உயரம், வளர்ச்சி என்பது வேறொருவரின் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருடைய வளர்ச்சி என்பது அவர் நல்ல ஆரோக்கியமான அவருடைய உடம்புக்கு உகந்த உணவை உட்கொண்டு ஒவ்வொரு உறுப்பும் அதனதன் அளவில் வளர்ந்து வரவேண்டும். நம்மைத் தோளுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவர் நம்மீது அக்கறை கொண்டு அதைச் செய்யவில்லை. ஆட்டிடையன் செல்லமாகத் தோளில் போட்டுக்கொண்டிருப்பதுபோன்றது அல்ல. அவன் நல் மேய்ப்பன் அல்ல; ஆடு திருடன். அதுமட்டுமல்ல தன் கிடைக்குக் கொண்டு சென்று வளர்ப்பவன் அல்ல. அறுத்துத் தின்னும் கசாப்புக்கடைக்காரன். அவனுடைய தோளில் இருந்து துள்ளிக் குதித்தாகவேண்டும். நமது சொந்தக் காலில் ஓடித் தப்பித்தாகவேண்டும். நமக்கான உணவை உட்கொண்டு நாம் வளர்ந்தாகவேண்டும். இருக்கும் கொம்பை வைத்து முட்டக் கற்றுக்கொண்டாகவேண்டும்.
நாம் ஒருவேளை பிரிட்டிஷரால் அடிமைப்படுத்தப்பட்டிருக்க வில்லையென்றால், நமது பாரம்பரிய சாதனைகள் நமக்கு முழுவதுமாகத் தெரியவந்திருந்தால், நாம் இயல்பாக நம் பாதையில் வளர அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும். இந்தக் கோணத்தில் நம் எதிர்காலத்தை வடிவமைப்பது தொடர்பாக நம் முன் மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று நவீன விஷயங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நம் கடந்த காலத்தை அப்படியே மீட்டுருவாக்கம் செய்வது. இரண்டாவதாக, நவீன கால விஷயங்களை நமது மரபுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்துவது. மூன்றாவது, மரபை ஒதுக்கிவிட்டு நவீன கால விஷயங்களை அப்படியே முழுவதுமாகப் பின்பற்றுவது.
இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் நாம் பின்பற்றவேண்டும் என்று பொதுப்படையாக எதையுமே சொல்லமுடியாது. ஒவ்வொரு விஷயம் சார்ந்தும் ஒரு வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் கடந்த காலத்தை மாற்றியமைக்க முடியாது.
மன்னராட்சி என்பது நமது மரபான ஆட்சி முறை. மக்களாட்சி என்பது நவீன கால வழிமுறை. இதில் நாம் மரபுக்கு நிச்சயம் திரும்ப முடியாது. நவீன கால வழிமுறையையே முழுவதுமாகப் பின்பற்றவேண்டியிருக்கும். இன்றைய அரசியல் தலைவர்கள் நமது முற்கால மன்னர்களைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள். பல கட்சிகளிலும் மன்னராட்சி வாரிசு அரசியலே நீடித்துவருகிறது. என்றாலும் நாம் மக்களாட்சியையேதான் தொடர்ந்து பின்பற்றியாகவேண்டும்.
நேற்றைய திண்ணைப் பள்ளியை இன்று கொண்டுவரத் தேவையில்லை. ஆனால், அன்று இருந்த தாய் மொழிக் கல்வியைக் கொண்டுவர முடியும். கொண்டுவர வேண்டும். சம்ஸ்கிருதம் ஒரு மொழியாகவே தேசம் முழுவதும் கற்றுத் தரப்பட்டது. பிற பாடங்கள் எல்லாம் தாய் மொழியில்தானே இருந்தன. ஆங்கிலம் வந்து சம்ஸ்கிருதத்தை மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழியையும் இடம்பெயர்த்துவிட்டது. இதை நிச்சயம் மாற்றவேண்டும்.
ஆதி காலத்தில் கல்வி என்பது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ளும் நற்குணங்கள், தொழில் குழுக்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் கல்வி, சமூகத்தின் பிற சடங்குகள், செயல்பாடுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் கல்வி, வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பெறும் படிப்பினை, முந்தைய தலைமுறையினர் கை மாற்றித் தரும் கலைகளில் இருந்து கற்பவை எனப் பல வடிவங்களில், பல இடங்களில் இருந்து கிடைத்திருக்கிறது. இந்த ஆரம்பகட்டக் கல்வியை ஒட்டு மொத்த பழங்குடி சமூகமும் சேர்ந்து கற்றுக்கொண்ட/கற்றுக் கொடுத்த கல்வி என்பதால் பழங்குடி சமூகக் கல்வி சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் கல்வி என்பது மேலே சொன்ன இறுக்கமான விதிகளாலோ சுய நல மதிப்பீடுகளாலோ கறைபடிந்திருக்கவில்லை.
இதன் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொழிலும் செய்நேர்த்தியை (ண்ணீஞுஞிடிச்டூடிண்ச்tடிணிண) நோக்கி நகரத் தொடங்கியதால் கல்வியானது தொழிற் குலம் சார்ந்த கல்வியாகப் பரிணமித்தது. ஆரம்ப பழங்குடிக் காலகட்டத்தில் வீடு கட்டுதல் என்றால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் ஒன்று கூடிக் கட்டிய நிலை மாறி இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டும் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற குலத்தின் தொழிலாக அது ஆனது. உலகம் முழுவதும் இருந்த இந்த வகைக் கல்வியை பாரதிய வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்து – ஜாதி சமூகக் கல்வி என்று சொல்லலாம். தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் எடுத்துக் காட்டியிருக்கும் இந்தியாவின் மேம்பட்ட நிலை என்பது இந்த ஜாதி சமூகக் கல்வி நிலவிய காலகட்டம் தான்.
அதோடு இந்தக் காலகட்டத்தில் பாரதத்தில் கல்வியானது பர வித்யா (ஆன்மிகக் கல்வி), அபர வித்யா (லௌகீகத் தேவைகள் சார்ந்த கல்வி) என இரண்டாகப் பரிணமிக்கவும் செய்தது. ஆன்மிகக் கல்வி என்பதை நெகிழ்வான அர்த்தத்தில் மதக் கல்வி என்றும் சமூக நலன் சார்ந்த உன்னத மதிப்பீடுகள் என்று சொல்லலாம்.இந்தக் காலகட்டத்திலும் கல்வியானது பொது நலனை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.
பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கான்வெண்ட் பள்ளிகளை கல்வியின் மூன்றாவது காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று சொல்லலாம். இந்தக் காலகட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்பான அச்சு ஊடகம் என்பது கல்விகற்றலின் சாத்தியங்களை, சாதகங்களைப் பெருக்கியிருக்கிறது. அதிலும் நவீன யுகத்தின் இணையம், வலைதளம் போன்றவை கற்றலை எல்லையற்று விரிவாக்கிவிட்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் பழங்குடி சமூகத்தைப் போலவே கல்வி என்பது வகுப்பறை, ஆசிரியர், வரையறுக்கப்பட்ட பாடம், பள்ளி என்ற வரையறைகளுக்கு உட்படாமல் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடிந்த சர்வ தேசக் கல்வியாகிவிட்டிருக்கிறது. ஆனால், இந்த மெக்காலே கல்வி பெரிதும் சுய நல மதிப்பீடுகளை முக்கியமாகக் கொண்டதாக மாறிவிட்டிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் அதை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ஐரோப்பிய குறிப்பாக ஆங்கிலேய தேசத்தின் வாழ்க்கைப் பார்வையும் அதற்கு அடித்தளமாக இருந்த கிறிஸ்தவ இறையியலும்தான் (அப்படி ஏதேனும் ஒன்றைச் சொல்ல முடியுமென்றால்).
ஒரு முள் செடி உலகம் முழுவதையும் முட்காடாக நிறைக்கத் துடிப்பதுபோல் சுய மைய – சுய நல – சுய மேட்டிமை உணர்வால் உந்தப்பட்ட அந்த உணர்வே உலகை இன்று மாபெரும் முள் வேலியாக உலகம் முழுவதும் படர்ந்துவருகிறது.
பழங்குடி சமூகக் கல்வி காலகட்டத்தில் மருத்துவம் என்பது பொது நல சேவையாக இருந்தது. ஜாதிக் கல்வி சார்ந்த காலகட்டத்திலும் மருத்துவம் என்பது செல்வம் ஈட்டும் பேராசைத் தொழிலாக இருந்திருக்கவில்லை. நோயைக் குணப்படுத்துவதே மருத்துவரின் பிரதான இலக்காக இருந்தது. மெக்காலே கல்வியில் மருத்துவம் என்பது நோயாளியை பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக மாற்றிவிட்டிருக்கிறது. மருத்துவர்கள் தமது சுய நலன் சார்ந்தே மருத்துவத்தை அணுகும் போக்கு பெருகிவிட்டிருக்கிறது. நவீன கால மருத்துவரின் பிழைகளுக்கு மெக்காலே கல்வி பொறுப்பாக முடியாது என்ற பதிலை ஒரு எல்லைவரைதான் ஏற்கமுடியும். உயிர் காக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் மருத்துவ மேதை, ஆராய்ச்சிக்கு உதவிய மருத்துவ நிறுவனத்தின் பேராசைக்கு வளைந்து கொடுத்தால் அது மெக்காலே மருத்துவக் கல்வியின் தோல்வியாகவே பார்க்கப்படவேண்டும்.
மெக்காலே கல்வியானது பழங்குடி சமூகக் கல்வி, ஜாதிக் கல்வி இரண்டையும் விட செய் நேர்த்தி, நிபுணத்துவம் மிகுந்ததாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜாதிக் கல்வி காலகட்டத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள், கலை மேன்மைகளைவிட இன்றைய சாதனைகள் மேலானவைதான் என்றாலும் ஜாதி சமூகத்தினரிடம் இருந்த பொது நல அக்கறை, சமூகப் பங்களிப்பு இன்றைய நிபுணத்துவத்தைவிட மேலானது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நிபுணத்துவம் என்பது மட்டுமே உயர் மதிப்பீடு அல்ல. அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்பல்லோ மருத்துவமனை அதி நவீன சிகிச்சையைத் தந்து கோடிகளைக் குவிப்பது பெருமையல்ல. சங்கர நேத்ராலயா குறைந்த செலவில் உயர்தர சிகிச்சையை அனைவருக்கும் தருவதே போற்றத் தகுந்தது. அப்பல்லோ மெக்காலே கல்வியின் உதாரணம். சங்கர நேத்ராலயா குலக் கல்வியின் சீர்திருத்தப்பட்ட வடிவம்.
இது ஒருபக்கமென்றால், மெக்காலே கல்வியின் இன்னொரு பெரிய பிழை அது உலகை ஒற்றைக் கிராமமாகச் சுருக்கி அதன் பன்மைத் தன்மையை அழிக்கப் பார்க்கிறது.உலகம் முழுவதிலும் ஷாப்பிங் மால்கள் ஒரே மாதிரியாக இருப்பதென்பது ஒவ்வொரு தேசத்தின் கட்டடக் கலையை அழித்தொழிக்கும் நாசகாரச் செயலே. உலகம் முழுவதும் கொக்ககோலா நிறுவனம் பெருகுவதென்பது பிற உள் நாட்டுபானங்களை அழிக்கும் செயல். இந்த ஒற்றைப்படைத் தன்மைக்கு முழு முதற் காரணம், நவீனக் கல்வியையும் நவீனக் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர்களின் தேசத்தில் இருந்த கிறிஸ்தவ சமயம். அது ஒற்றைப்படைத் தன்மையை தன்னுடைய அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. எனவே அந்த தேசங்களில் உருவாகும் சமூக, பொருளாதார, அரசியல் சக்திகளும் அப்படியான ஒற்றைப்படைத்தன்மையை மூர்க்கத்தனமாக முன்னிறுத்துகின்றன. விதையின் மரபணுக்கள்தானே இலைகளையும் கிளைகளையும் பூக்களையும் காய்களையும் தீர்மானிக்கின்றன.
கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன.
கிறிஸ்தவதேசத்தின் மொழியான ஆங்கிலமே இன்று உலகின் இணைப்பு மொழியாக இருக்கிறது. பாரதத்தில் கடந்த காலத்தில் சம்ஸ்கிருதம் இதே பங்கையே ஆற்றியது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி அறிஞரும் இந்தியாவின் பிற அனைத்து மொழிகளையும் கற்றுக்கொண்டு அறிவுப் பரிமாற்றம் செய்வதில் இருந்த சிரமத்தைப் போக்க பொது மொழியாக அனைவரும் சம்ஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டனர். உலகின் பிற பகுதிகளில் இருந்த அறிஞர்களும் கூட இந்திய ஞானத்தைப் பெற சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டதுண்டு. அதுபோலவே இன்றைய உலகின் அனைத்து அறிஞர்களும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆங்கிலத்தை உலக மக்கள் கற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், சம்ஸ்கிருதத்துக்கு இருந்திராத பன்மைத்துவ எதிர்ப்பு குணம் ஆங்கிலத்துக்கு இருப்பதால் அது உலகை இணைக்கும் உயரிய பணியைச் செய்யும் அதே நேரம் உலகின் மொழிப்பன்மைத்துவத்தை அழித்தும் வருகிறது.சமஸ்கிருதம் பாரத மொழிகளை இணைக்கும் புனித நூலாக இருந்தது. ஆங்கிலமோ இந்திய மொழிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறாக இருக்கிறது.
நவீன காலகட்ட கிறிஸ்தவத்துக்கு உலக மொழிகளை அங்கீகரித்து அவற்றைத் தொகுக்கும் மொழியாக பாலமாக இருக்கும் பண்பும் பக்குவமும் இல்லை. அது பிற மதங்களை நிராகரிக்கும் கிறிஸ்தவம் போலவே மொழிகளை நிராகரிக்கும் குணத்தையே கொண்டிருக்கிறது. அதனால்தான் சம்ஸ்கிருதம் பாரதம் முழுவதும் கற்றுத் தரப்பட்டபோதிலும் அது ஒரு தனி மொழியாக மட்டுமே கற்றுத் தரப்பட்டது. பிற வகுப்புகள் அனைத்தும் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் பாதிரிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட கான்வெண்ட்கள் உலகின் அனைத்து தாய்மொழிக் கல்வியையும் அழித்தொழித்தன.
(தொடரும்)