புதிய பொற்காலத்தை நோக்கி – 3

முந்தைய பகுதிகளை படிக்க

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

ஐரோப்பா அல்லாத நாடுகளின் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் தேடல்கள், வளர்ச்சிகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேறுபட்டிருந்தன. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் மையம் அழிக்கப்பட்ட அரசியல் அமைப்பு இருந்தது. எனவே அங்கு இருந்த சமூக அமைப்பு அதிகாரக் குவிப்புக்கு எதிரான அந்த அரசாங்கத்துக்கு இசைவானதாக இருந்தது. எனவே அவர்களுக்கு தங்களுடைய தொழில் பட்டறைகள் பிரமாண்டமானதாகவும் தொழில் கருவிகள் ராட்சஸத்தனமாகவும் இருந்தாகவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.

இரும்பு, எஃகு உலைகள், விதைக் கலப்பைகள் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் எளிமையானதாகவும் சிறியதாகவும் இருந்தன. இது நம் சமூக, அரசியல் விழிப்புணர்வினால் உருவானவையே. அதோடு அந்தத் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவியல் கோட்பாடுகள், விதிமுறைகள் ஆகியவை தொடர்பான நல்ல புரிதலும் இருந்தது. 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த தொழில்நுட்பங்கள், தொழில் கருவிகள் எல்லாம் அறிவியல் கோட்பாட்டளவிலும் கலையம்சத்திலும் தரத்திலும் உயர் தரத்தினதாக இருந்தன.

1750 வாக்கில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்து உலகத் தொழில்துறை உற்பத்தியில் 73% உற்பத்தி செய்துவந்துள்ளது என்பது நமக்கு இன்று தெரியும். 1830 வரைகூட இந்த இரு நாட்டுப் பொருளாதாரமும் 60% உலகத் தொழில்துறை உற்பத்தியைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்-கின்றன.

பழங்கால இந்தியாவில் சிறந்துவிளங்கிய தொழில்நுட்பத்தின் விளைவாக பயனடைந்த முக்கியமான துறை விவசாயம். நீர்பாசன வசதிகள், அருமையான கலப்பைகள், ஆண்டுதோறுமான மழையளவைக் கணிக்கும் திறமை, ஊடு பயிர் சாகுபதி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டுக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளுதல் என பல விஷயங்களில் பழங்கால பாரதம் முன்னணியில் இருந்திருக்கிறது.

இன்று 20ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 5-6 டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதான் இன்றைய உலகில் மிகப் பெரிய சாதனை. ஆனால், 1760 வாக்கிலேயே தமிழ் நாட்டின் செங்கல்பட்டில் இதே அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது

ஐரோப்பாவில் விதைக் கலப்பையை 1662-ல் கொரிந்தியாவின் ஜோசஃப் லொகாடெலி என்பவர் முதன் முதலில் பயன்படுத்தியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 1730 வாக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வர மேலும் ஐம்பது ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்தக் கலப்பை எப்போது என்று கணிக்க முடியாத பன்னெடுங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.

இந்த எளிய கலப்பை பற்றி  கேப்டன் ஹால்காட் மிகவும் விரிவாக அழகாக விவரித்திருக்கிறார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் விதைக் கலப்பை-யானது நம் விதைக் கலப்பையைவிட சில சாதக அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் நம் விதைக் கலப்பையானது விதைகளை சரியாக, சமமாக விதைப்பதில்லை என்று ஏதோ ஒரு நூலில் படித்திருக்கிறேன். இந்தியக் கலப்பையில் அப்படியான எந்தவொரு குறையும் இல்லை. பத்து அங்குல இடைவெளியில் 18 அங்குல நீளம் கொண்ட மூன்று கூரான பல் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு பல்லின் மேல் பாகத்தில் ஒரு அங்குல விட்டமும் மூன்று அடி நீளமும் கொண்ட மூங்கில் குழல் செருகப்பட்டுள்ளது. இந்த மூன்று மூங்கில் குழாய்களும் நேராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மேல் முனைகள் கிட்டத்தட்ட அருகருகே இருப்பதுபோல் முக்கோண வடிவில் கொண்டுவரப்பட்டு ஒரு மரக் கிண்ணத்தின் அடிப்பாகம் வழியாக செருகப்பட்டுள்ளன. இந்த அமைப்பானது நன்கு கயிறுகளால் கலப்பையின் வெவ்வேறு பாகங்களுடன் கட்டப்பட்டு அசையாதவாறு ஆக்கப்பட்டுள்ளது. 

நிலத்தை உழும்போது இந்த கிண்ணத்தில் விதையை நிரப்பிக் கொண்டு செல்வதில்லை. கையால் அவ்வப்போது அதில் போட்டுக்-கொண்டே செல்வார்கள். இந்த வேலையை கலப்பைக்கு அருகில் இடப்பக்கமாக நடந்துவரும் பெண் செய்தபடியே வருவார். விதைகளை ஒரு பையில் அல்லது பெரிய கூடையில் போட்டு முன்னால் வைத்துக்கொண்டு வருவார். அவருடைய மணிக்கட்டு கிண்ணத்தின் மேல் ஊன்றியபடி இருக்கும். கை முழுவதும் தானிய விதைகள் இருக்கும்.   விரல்களை அவர் லேசாக அசைத்து விதைகளை கிண்ணத்தில் விழச் செய்து மூன்று பல்களுக்கும் சரியான அளவில் கிடைக்கச் செய்வார்.வலது கையில் இருக்கும் விதைகள் முழுவதும் தீர்ந்ததும் இடது கையால் எடுத்து வலது கையை நிரப்புவார். கலப்பை நகர்ந்து கொண்டிருக்கும் வரையில் வலது கை கிண்ணத்தின் மேலேயே இருக்கும். கையை எடுத்துவிட்டால் விதை இல்லாமல் அந்த இடம் வெற்றிடமாகிவிடும்.

இந்த வழி முறையில் அல்லாமல் வேறு வழியில் செயல்படும் விதைக் கலப்பையானது நிச்சயம் இந்த அளவுக்கு விதைகளை சமமாக நிலம் முழுவதும் ஊன்றவே முடியாது. நம் இங்கிலாந்து விதைக் கலப்பையின் குறைபாட்டுக்கான சரியான தீர்வு இங்கு இருக்கிறது. உழும்போது இரண்டு பேர் இருந்தாகவேண்டும் என்ற விஷயமானது இந்தக் கலப்பையை நம் நாட்டில் அறிமுகப்படுத்த தடையாக இருக்கக்கூடும். இது தொடர்பாக முடிவெடுக்கும் பொறுப்பை விஷயம் தெரிந்தவர்களிடம் நான் விட்டுவிடுகிறேன். ஆனால், கிண்ணத்தை நிரப்பும் வேலையை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பதும் ஒரு ஏக்கர் நிலத்தை வெகு சீக்கிரமே விதைத்து முடிக்க முடிவதையும் கணக்கில் கொண்டுபார்த்தால் கூடுதல் செலவு என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்றே தோன்றுகிறது. அது அநேகமாக சொற்பமே அதிகமாக இருக்கும்.அதோடு நம் நாட்டு விதைக் கலப்பையானது மிக மிக விலை அதிகமானது. இந்திய விதைக் கலப்பை ஒரு சில ஷில்லிங் தான் இருக்கும்.

இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒரு நண்பர் சொன்னார், அவருடைய தாத்தா தனது பண்ணையில் அவரே விதைத்துவந்தாராம். நம் நாட்டு விதைக் கலப்பையை உபயோகித்ததில் விதைகள் சமமாக விழவில்லையாம். அதனால் அவர் அதை ஒரு ஓரமாக எடுத்து-வைத்து-விட்டாராம். ஆனால், விதைக் கலப்பை வழியில் விதைப்பது நல்லது என்பதைத் தெரிந்துகொண்ட அவர் நேர் கோட்டில் பல துளைகள் கொண்ட ஒரு கலப்பையில் கைகளால் விதைகளைப் போட்டபடியே உழுதுவருகிறாராம். இது மிகவும் கடினமான வேலை. மேலும் இதற்கு சிறுவர்களை அவர் பயன்படுத்துகிறார். குளிர் காலத்தில் அவர்களுடைய கைகள் விறைத்துப் போயிருக்கும் என்பதால் ஒவ்வொரு துளையிலும் நிறைய கோதுமைவிதைகளைப் போட்டு-விடுகிறார்களாம். எனினும் பலர் முந்தைய கலப்பைக்கு மாற்றாக இதையே பயன்படுத்திவருகிறார்கள்.

பின்னால் இருந்தபடியே குழிகளை மூடிக் கொண்டே வரும் கிடைமட்ட பலகை கொண்ட ஏரை இங்கிலாந்தில் பயன்படுத்து-கிறோமா என்று தெரியவில்லை. இல்லையென்றால்,  அந்த இந்தியக் கலப்பையும் அது செயல்படுத்தப்படும் விதமும் நமக்கு ஒரு நல்ல கண் திறப்பாகவே இருக்கும். அதுபோல் களைகளைப் பிடுங்கும் கலப்பை பற்றியும் இங்கிலாந்தில் நமக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. விதைக் கலப்பையைப் போலவே மூன்று பற்களில் மூன்று மண்வெட்டிகள் (களைக் கொத்திகள்) சம இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும்.

பாரம்பரிய இந்திய விவசாயக் கருவிகள்

‘நீர்ப்பாசனம், விவசாயம் எல்லாம் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் அல்லதான். ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அளவுக்கு விரிவாகவும் தொழில் நேர்த்தியுடனும் உலகில் வேறு எங்குமே பின்பற்றப்பட-வில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் வாக்கர்.

18-ம் நூற்றாண்டு இந்தியாவில் மழைப்பாசனம் போன்ற இயற்கைப் பாசனம் நீங்கலாக மனித முயற்சிகளாலான செயற்கையான நீர்ப்பாசன வழிமுறைகள் ஒப்பீட்டளவில் பெருமளவில் இருந்திருக்க வில்லை’ என்று இன்றைய நம் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள குறிப்புக்கு முற்றிலும் மாறானதாக இது இருக்கிறது.

ஆசியர்களைப் போலவேதான் உலகின் பிற பகுதியினரும் உழவுக்குக் காளைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்தது ‘பாச்சஸ் கடவுள்’ என்று சொல்கிறார்கள். இந்தியாவில் இருந்து காளைகளை ஐரோப்பாவுக்கு முதன் முதலில் கொண்டு வந்தவர் அவரே என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து நிலத்தை உழும் கலையானது இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்ததாக நாம் புரிந்துகொள்ளலாம்.

ஜோதிடம் தொடர்பாக இந்திய அறிவுஜீவி வர்க்கத்திடம் ஒருவித எள்ளல் மனப்பான்மை இருப்பதைப் பார்க்கமுடியும். எங்கோ இருக்கும் கோள்கள் ஒரு மனிதருடைய வாழ்க்கையைப் பாதிக்குமா என்று கிண்டலடிப்பார்கள். இந்த ஜோதிடம் தட்பவெப்ப நிலைகளைக் கணிப்பதிலும் விவசாயத்திலும் பெரும் பங்காற்றியிருப்பதை பிரிட்டிஷார் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் வாக்கர் இதுபற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

பருவ நிலை மாற்றங்கள், தட்ப வெப்ப மாற்றம் ஆகியவற்றை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள். பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மழை, பனி அதிகம் பொழியும். அதனால் ஹிந்து விவசாயி நிலவின் மற்றும் பிற கிரகங்களின் பல்வேறு நிலைகளை மையமாகக் கொண்டு தன் பணிகளை வடிவமைக்கிறார்.

ஜோதிடர் தன் கைவசம் இருக்கும் ஏடுகளைப் புரட்டி கால நிலைகள் பற்றி ஆருடம் சொல்கிறார். இது முழுக்கவுமே மூட நம்பிக்கை அல்ல.   பயிர்கள் எல்லாம் கிரகங்களின் சில நிலைகளுக்கு ஏற்ப வேகமாக வளர்ந்து, காய்த்து, கனிந்து வருகின்றன.

இதற்கு அடுத்ததாக அவர் சொல்பவைதான் பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றன. ஐரோப்பியர்கள் ஜோதிட நம்பிக்கைக்கு எதிரானவர்கள் என்பதுதானே பொதுவான நம்பிக்கை. அலெக்சாண்டர் வாக்கர் அப்படி இல்லை என்று தெரிவிக்கிறார்.

முற்காலத்தில் ஐரோப்பாவிலும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து விதை நடும் காலத்தைத் தீர்மானிப்பது போன்றவற்றைச் செய்திருக்கிறார்கள். சில குறிப்பிட்ட நட்சத்திர அமைப்புக்கு முன்பாக விதைக்க ஆரம்பிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்-கிறது. ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஜோதிடர்கள் கால நிலைகளை முன்கூட்டியே கணித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

பேகன் தனது ‘நேச்சுரல் ஹிஸ்டரி’ என்ற நூலில் விதைகள், கேசம், நகம், மூலிகைகள், வேலிகள் எல்லாம் வளர்பிறை காலத்தில் வேகமாக வளரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மிக சமீப காலம் வரையிலும் சித்திரை புத்தாண்டின் போது பஞ்சாங்கம் வாசிப்பதை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் அமர்ந்து கேட்பார்கள். அந்த ஆண்டு மழை எவ்வளவு பொழியும் என்பதுபற்றி அதில் சொல்லப்படுவதற்கு ஏற்ப அந்த ஆண்டுக்கான விவசாயப் பணிகளைத் தீர்மானித்துக்கொள்வார்கள். இன்று பருவநிலை மாற்றங்களை செயற்கைக்கோள் படங்களின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கமுடிகிறது. புயல், வெள்ளம் போன்றவை குறித்து தகவல்கள் கிடைத்து எளிதில் நிவாரணப்பணிகளை முன்னெடுக்க வழி பிறந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு முழுவதுமான மழை, வெய்யில், காற்று வீச்சு தொடர்பான புள்ளிவிவரங்கள்  எல்லாம் எளிதில் துல்லியமாகக் கணிக்கவும் படுகின்றன. ஆனால், அறுவடை நேரத்தில் மழை பெய்து பயிர்கள் வீணாவதும் நாற்று நட்ட பின்னும் மழை வராமல் வாடுவதுமாக நடந்துவருகின்றன. இந்த இரண்டுதுறைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டால்தான் இப்படியான பேரிடர்களில் இருந்து தப்பிக்க முடியும்.

கிராமப்புற விவசாயம் பற்றி அழகாக வருணிக்கும் அலெக்சாண்டர் வாக்கர் அங்கு வீடுகள் அமைந்திருக்கும் விதத்தைப் பற்றிப் புதிய கோணத்தைப் பதிவு செய்கிறார். பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு ஜாதியின் வீடுகளும் தனித்தனி குடியிருப்பாக இருப்பதை ஒடுக்குமுறையில் அடையாளமாகவே சொல்வார்கள். அலெக்சாண்டர் வாக்கரோ அதன் பின்னால் இருக்கும் இயல்பான வேறொரு அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

மலபார் மக்களும் நம்மவர்கள் போலவே கிராமப்புற வாழ்க்கையை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். நாயர்கள், நம்பூதிரிகள் ஆகியோரின் வீடுகள் பரஸ்பரம் மிகுந்த இடைவெளியுடன் இருக்கின்றன. கிராமப்புற வாழ்க்கையின் விளைவாக இப்படியான இடைவெளிகள் கொண்ட குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இப்படி இருந்தால்தான் தோட்டம் துரவுகள், வளவுகள்  ஆகியவற்றை நன்கு அனுபவிக்க முடியும். விவசாயப் பணிகளை முன்னெடுக்க முடியும். கால்நடை-களுக்குப் போதிய தீவனம் கொடுக்கப் போதுமான இட வசதி இல்லாதபோது அவர்கள் பரஸ்பர புரிதலுடன் தமது மேய்ச்சல் நிலங்களை மிகுந்த இடைவெளியுடன் தூர தூரமாக இருக்கும்படி அமைத்துக்கொண்டார்கள்.

இதில் அவர் சொல்லாமல் விட்டிருக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கடைநிலை ஜாதியினருடைய வீடுகள் விøளை நிலங்களுக்கு அருகில் அல்லது அதன் மத்தியில் அதாவது பணியிடங்களுக்கு வெகு அருகில் அமைந்திருந்தன. இதை நம்மவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஊருக்குக் அமைந்த குடியிருப்பு என்று ஒடுக்குமுறையில் அடையாளமாகவே பார்ப்பது வழக்கம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்வதுபோல் பாலைவன தேசங்களில் இருந்து வந்து ஆக்கிரமித்தவர்கள் பாரதம் வந்ததும் மாறிவிட்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் நீருக்குள் இருந்தாலும் கற்களின் குணம் மாறாமலேயே இருக்கும் என்றாலும்  சிற்சில கூழாங்கற்களாக ஆவதையும் பார்க்கத்தானே செய்கிறோம். அனைத்துக் கற்களுமே அப்படி லிங்க வடிவிலும், சாளக்ராமமாகவும் ஆகிவிடாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதுபோல் சமூக, மத விஷயத்திலும் நடந்திருக்காதா என்ற வருத்தத்தை அது ஏற்படுத்திவருகிறது. பிரிட்டிஷ் ஆவணங்கள் இந்த மாற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

முஹமதியர்கள் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட  பிற நாடுகளைவிட இந்தியாவில் மிதமாகவும் பொறுத்துப் போகும் குணம் கொண்டவர்-களாகவும் முன்னேற்றம், நாகரிகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியும்வந்திருக்கிறார்கள். இந்துக்களின் தொடர்பும் முன்னு-தாரணமுமே அதைச் செய்திருக்கும் என்று நாம் நம்ப இடமுண்டு.

இந்துக்களைப் பார்த்து உத்வேகம் பெற்றும் அவர்களுடன் கலந்து வாழ்ந்தும் வந்ததன் மூலமும் முஹமதியர்களும் அமைதி காலக் கலைகளை கற்றுக்கொண்டு பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்ட ஆரம்பித்தனர். எனினும் இரு தரப்பினரின் பணிகளுக்கு இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் உண்டு.

முசல்மான்கள் கட்டிய குளங்கள் எல்லாம் ஆடம்பரம், அலங்காரம், படாடோபம் ஆகிய நோக்கில் கட்டப்பட்டவை. அவர்கள் கட்டிய-வற்றில் பெரும்பாலானவை மிக அதிக செலவை இழுத்துவிட்டவை. நீர்ப்பாசனத்துக்குப் பயன்படாதவை. அலி மர்தன் கால்வாய் ஒன்று மட்டுமே விதிவிலக்காக நியாயமான பயனுள்ள பணி.

இந்திய நீர்பாசனமானது அடிப்படையில் கிணறுகளைச் சார்ந்தது. மழை நீரைத் தடுத்து அணைகள் கட்டுவதும் உண்டு. என்றாலும் இந்த மிகப் பெரிய நீர்த்தேக்கங்கள் அல்லாமல் இந்தியா எண்ணற்ற கிணறுகள் வெட்டப்பட்ட நாடு. அலெக்சாண்டர் வாக்கர் இது பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் வெட்டப்படும் கிணறுகளில் பெரும்பாலானவை நீர்ப்பா-சனத்துக்காகவே கட்டப்பட்டவையே. கிணற்றிலிருந்து நீரானது ஏற்றம் மூலம் மனிதர்களால் அல்லது காளைகளால் இழுக்கப்படும். அதன் பிறகு கிணற்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருக்கும் வாய்க்காலில் விடப்பட்டு அது எல்லா திசைகளிலும் கிளை பிரிந்து சென்று வெகு தொலைவில் இருக்கும் பயிர்களின் வேர்மடியையும் நனைக்கும். கிணற்றில் ஏற்றம் இறைப்பதைப் பார்ப்பதென்பது கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கான எளிமையும் பயன்பாடும் நிறைந்தது. நீர்ப்பாசனக் கலைக்கான உற்சாகமான உதாரணமாகத் திகழ்கிறது. அதைக் கண்ணால் பார்ப்பதென்பதே மிகப் பெரிய மனநிறைவையும் அமைதியையும் தரக்கூடியது.

இப்படிச் செழிப்பானதாக இருந்தால் அது பிரிட்டிஷாரின் கண்களை உறுத்தியிருக்குமே என்ற சந்தேகம் ஒருவருக்கு இதற்குள் இயல்பாகவே எழுந்திருக்கும். ஆமாம், அதை அவர்கள் தமது முழு அறிவையும் தந்திரத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சுரண்டினார்கள். அழித்தொழித்தார்கள்.

(தொடரும்)

One Reply to “புதிய பொற்காலத்தை நோக்கி – 3”

  1. கட்டுரைத்தொடர் பிரமாதம்! ஒவ்வொரு Quoteக்கும் citation reference போடுங்கள்! நிறைய மேற்கோள்கள் நூல்கள் நூலாசிரியர்கள் வருகிறார்! மேற்கொண்டு ஆராய்பவர்களுக்குப் பயனுடையதாக இருக்கும்! Foot note லோ அல்லது அடைப்புக்குறியுள்ளோ ஆசாரியர் ஆண்டு குறிப்பிடலாம்! முன்னது பொறுத்தமானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *