சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

சீனா உயிரிப் போருக்காகத் தயாரித்ததாகவே வைத்துக்கொள்வோம். நம் நாட்டுக்குள் விமானம் மூலம் வந்தவர்களால் தானே அது பரவியிருக்கும். அவர்களை மட்டும் இரண்டு வார காலம் அல்லது ஒரு மாதம் தனிமைப்படுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னை எதுவும் வந்திருக்காதே.

எல்லாம் நடந்து முடிந்தபின் இப்படிச் செய்திருக்கலாமே அப்படிச் செய்திருக்கலாமே என்று சொல்வது எளிது. சீனா சொல்லியிருந்தால் மட்டுமே இதை உலகம் செய்திருக்க முடியும். சீனா இதைச் சொல்லவே இல்லை. எனவே உலகில் எந்த நாட்டிலுமே இப்படிச் செய்ய முடிந்திருக்கவில்லை. விமானத்தில் வரும் நபர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் தனிமைப்படுத்துவது என்றால் மனித உரிமை மீறல் என்று கொடிபிடித்திருப்பார்கள். தப்ளிக் மாநாட்டினரை மருத்துவ ஆய்வுக்கு வாருங்கள் என்று அழைத்தபோது என்னவெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பின.

அது மதவாத நோக்கில் செய்யப்பட்ட தாக்குதல் தானே. அதே காலகட்டத்தில் எத்தனையோ கூட்டங்கள் நடந்தன. ஜக்கி வாசுதேவ் கூட நவீன சிவராத்திரி விழா நடத்தினார்.

ஆனால், அதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பரிசோதனைக்குக் கூப்பிட்டபோது வரத்தானே செய்தார்கள். அவர்களில் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பதால் மேற்கொண்டு எதுவும் தேவையில்லை என்று மருத்துவர்கள்தானே சொன்னார்கள். ஆனால் தப்ளீக் விவகாரம் அப்படி இல்லையே. அவர்கள் நோய்த் தொற்றுடன் இருந்தார்கள். தேசம் முழுவதும் கள்ளத்தனமாக ஊடுருவவும் செய்தார்கள்.

அவர்களினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையே.

அது என்னமோ உண்மைதான். ஆனால், அவர்களுடைய நோக்கமும் செயல்களும் அப்படி இருந்திருக்கவில்லையே. பேரழிவு ஏற்படும் என்ற பயம் இருந்தநிலையிலும் சிகிச்சைக்கு வர மறுத்ததும் நோயைப் பரப்பும் வகையில் தேசம் முழுவதும் கிளம்பிச் சென்றதும் கண்டிக்கத் தக்கதுதானே. அதுவும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிராத காலம் அது. அவர்கள் பேரழிவை ஏற்படுத்தும் நோக்கில் மனித வெடிகுண்டாக தேசம் முழுவதும் ஊடுருவினார்கள். அது வெடிக்காதது தெய்வ செயல். ஒரு புனிதப் போராகவே அதைச் செய்தார்கள். அதில் நாம் தப்பியது நம் முன்னோர்கள் செய்த புண்ணியம்.

வெளி மாநிலத் தொழிலாளர்களை இந்த அரசு பட்டினி போட்டுக் கொன்றது. ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே செல்ல வைத்தது. அதெல்லாம் பெரும் கொடுமை இல்லையா.

எங்கு நடந்தது இது.

ஏன் நம் தேசத்தில் தான்.

எந்த மாநிலத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

பிஹார், ஒரிஸா தொழிலாளர்கள்தான்.

நீங்கள் சொல்லும் இந்தப் பயணம் நடந்த அடுத்த சில மாதங்களில் நடந்த தேர்தலில் பிஹாரில் யார் ஆட்சியைப் பிடித்தார்கள். சொல்லுங்கள். பி.ஜே.பி. தானே வென்றது. நீங்கள் சொன்னதுபோல் சக மாநிலத் தொழிலாளர்கள் உண்மையிலேயே பட்டினி போடப்பட்டு நடைபிணமாக நடக்க வைக்கப்பட்டிருந்தால் பிஜேபி வென்றிருக்க முடியுமா. நினைத்துப் பாருங்கள் ஐநூறு, ஆயிரம் மைல்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட காலத்தில் கடைகள், ஹோட்டல்கள் எதுவும் இல்லாத நிலையில் கையில் காசும் இல்லாத மக்கள் கூட்டம் எப்படி குடும்பத்துடன், மூட்டை முடிச்சுகளுடன் நடந்திருக்கமுடியும்.

அப்படியானால் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்ததாக வெளியான புகைப்படங்கள் எல்லாம் பொய்யா.

ஆமாம். மியான்மர், பங்களாதேசம் என பல நாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள்தான் அப்படி சிறிது தூரம் நடந்தார்கள். அது ஊடகங்கள் அவர்களை வைத்து நடத்திய ஃபோட்டோஷூட்தான்.

இதற்கு என்ன ஆதாரம்.

சக மாநிலத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் நிவாரண உதவிகள் தரும்போது ஆதார் அட்டை போன்றவற்றைக் கேட்டுப் பெறுவதென்று முடிவானதும் அங்கு மறைந்து தங்கியிருந்த ஊடுருவல்கார்ர்கள் பிடிபடாமல் இருக்க நடை பயணம் மேற்கொண்டனர். ஊடகங்கள் அதை புலம் பெயர் தொழிலாளர்களின் பயணமாகச் சித்திரித்தனர். உண்மையான சக மாநிலத் தொழிலாளர்கள் எல்லாம் அரசுகள் ஏற்பாடு செய்த ரயில்கள், பஸ்களில் ஏறி சொந்த ஊர் திரும்பினர். அதனால்தான் அவர்கள் அந்த உதவி செய்து தந்த மத்திய அரசுக்கு வாக்களித்து நன்றி செலுத்தினார்கள்.

முதல் அலையை ஓரளவுக்கு நம் தேசம் சமாளித்தது உண்மைதான். ஆனால், இரண்டாவது அலையில் தேசம் முழுவதும் பிணங்கள் விழுகின்றன. ஆக்ஸிஜன் போதிய அளவு இல்லை. தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லை. அயல்நாடுகளில் இருந்து வாங்கவும் அனுமதிக்கவில்லை. நதிகளில் பிணங்கள் மிதக்கின்றன. சுடுகாடுகளில் தீ அணையாமல் எரிகிறது. கூட்டம் கூட்டமாகப் போட்டு எரிக்கிறார்கள். மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வரவேற்பறையில் வராண்டாக்களில் நடு வீதியில் நோயாளிகள் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். ரெம்டெசிவிர் மருந்துக்கான கவுண்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த இரண்டாம் அலையில் இறந்த ஒவ்வொரு உயிருக்கும் இந்த அரசுதான் காரணம்.

சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போமோ முதலில்?

நம் தேசம் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

எதில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்?

மரணங்கள் பற்றி அரசு தரும் அறிக்கைகள் பொய்யானவை.

பிற நாடுகள் தரும் இறப்பு அறிக்கைகள் மட்டும் உண்மையா.

ஆம் அவை உண்மையே.

அதெப்படி. அயல்நாடுகள் தரும் இறப்புக் கணக்கு மட்டும் சரி. நம் நாடு தருபவை மட்டும் பொய்யா. லட்சம் பேரில் 200 பேர் இறக்கிறார்கள் என்பதுதான் சராசரியாக அமெரிக்கா, இத்தாலி, ஃப்ரான்ஸ், பிரேஸில் என 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இறப்பு விகிதமாக இருக்கிறது. இந்தியாவில் அது எவ்வளவு தெரியுமா வெறும் 18 பேர் மட்டுமே. நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், படுக்கை வசதிகள் இல்லாத, ஆக்ஸிஜன் இல்லாத, மருந்துகள் இல்லாத, சுடுகாடுகள் முடிவற்று எரியக்கூடிய, ஆறுகளில் எல்லாம் பிணங்கள் மிதக்கக்கூடிய இந்தியாவில் இறப்புவிகிதம் உலகின் பிற 100 நாடுகளையும் விட பல மடங்கு குறைவு. ஒருவேளை நம் நாட்டின் அளவுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாட்டினர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் மரண விகிதம் என்பது லட்சம் பேருக்கு வெறும் 200 என்பதாக இருந்திருக்காது. இரண்டாயிரமாக, இருபதாயிரமாக இருந்திருக்கும். முதல் அலையில் நம் தேசத்தில் இறப்பு என்பது இதைவிடவும் 100 மடங்கு குறைவு. இந்திய வெப்பத்தில் சீன வைரஸ் சீக்கிரம் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதாவது, துணிந்து திடீரென்று அமல்படுத்திய ஊரடங்கினாலோ, இந்திய மருத்துவ நிர்வாகம், கட்டமைப்பினாலோ அல்ல. அந்த வைரஸ் பலவீனமாக இருந்ததால் மக்கள் பிழைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

அது உண்மை தானே. சளியையும் அதன் மூலமான மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும் வைரஸின் தாக்கம் பனி பிரதேசங்களில் தானே அதிகமாக இருக்கும். வெப்ப மண்டலப் பகுதிகளில் குறைவாகத்தானே இருக்கும்.

ஆக, இப்போது இறப்பு விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பாராட்டை இந்தியாவுக்குத் தர மறுத்து பழியை வைரஸ் மேல் போடுகிறீர்கள்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் மார்ச் 2021 முதல் வாரத்தில் Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) கொடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்ததென்பது மிகவும் தவறு. இந்தியாவில் உள்ள கொரானா வைரஸ் உருமாறிவிட்டிருக்கிறது. இது மிகவும் அபாயகரமானது. வேகமாகப் பரவும். ஆட்களைக் கொல்லும் என்றெல்லாம் மார்ச் மாத முதல் வாரத்திலேயே அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தியாகவேண்டும். இல்லையென்றால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இது போன்ற ஒரு விஞ்ஞானிகள் குழுதான் சென்ற ஆண்டு ஊரடங்கு போடச் சொல்லி அறிவுறுத்தியது. அரசும் அதைச் செய்தது.

அதனால்தான் நோய் தாக்குதலும் இறப்பும் இருந்திருக்கவில்லை.

அது உண்மையில்லை. மத்திய அரசுதான் ஊரடங்கு அறிவித்தது. ஆனால், நாடு முழுவதுமான மாநில அரசுகள் அதை பொருட்படுத்தவே இல்லை. நிவாரணப் பொருள் தருகிறேன் 2000 ரூபாய் ரேஷன் கடையில் தருகிறேன், அன்னதானம் செய்கிறேன் என்று மாநிலங்கள் முழுவதும் கூடி கும்மியடிக்கவிட்டார்கள். பேருந்து ஏற்பாடு செய்திருப்பதாகப் பொய் சொல்லி ஆயிரக்கணக்கில் வெளி மாநிலத் தொழிலாளர்களை ஒரே இடத்தில் கூடச் செய்தனர். ஐம்பது பேர் போக வேண்டிய பஸ்களில் 200 பேர் அடைத்துக்கொண்டு சென்றார்கள். கறிக்கடைகள், சந்தைகள் என சுற்றித் திரியத்தான் செய்தார்கள். வீட்டு மொட்டை மாடியில் தனித்தனியாக நின்று கை தட்டுங்கள், அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னால் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று கொண்டாடினார்கள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஒரே கூரையின் கீழ் குழுமி இருந்தார்கள். ஒன்றாக ஊர் திரும்பினார்கள். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. அதுமட்டுமா படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தச் சொல்லி இதே மருத்துவ கவுன்சில்தான் 2021 ஜனவரி வாக்கில் ஆலோசனை வழங்கியது.

திடீரென்று மார்ச் மாதம் வந்து, வைரஸ் உருமாறிவிட்டது. எல்லாரும் வீட்டுக்குள் போங்கள் என்று சொன்னால் யாருக்கு நம்பிக்கை வரும். புலி வருகிறது என்று பயமுறுத்திய கதைதான். முதல் முறை உலகமே நம்மை பயமுறுத்தியது. எதுவும் நடக்கவில்லையென்பதால் யாருமே இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சுனாமி விஷயத்திலும் இதுபோல் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெரிய அலை வரப்போகிறது. ஊரே அழியப் போகிறது என்று பெரிதாக எச்சரிக்கை விடுப்பார்கள். ஒன்றும் நடக்காது. கொரானா அலை என்பது மிகவும் புதிதானது. எனவே மெதுவாகத்தான் பயமும் விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கையும் வரும். எதிர்க்கட்சிகள் சென்ற முறை ஊரடங்கு போட்டபோதே பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று பெரும் கூப்பாடு போட்டது. எந்த பிரதமருக்குத்தான் மறுபடியும் அந்த ரிஸ்கை எடுக்கத் துணிவிருக்கும்.

இதே INSACOG குழுகூட எங்கள் ஆய்வு முடிவுகளை நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டோம். அவர்கள் அதை பிரதருக்குத் தெரிவித்தார்களா… அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று தான் சொன்னார்கள். தமது ஆய்வு முடிவுகளில் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருந்தால் அவர்கள் நேராக பிரதமரைப் பார்த்து நாளைக்கே ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஒருவேளை அவர் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் பிற அனைத்து கட்சிகளுக்கும் அதை அனுப்பியிருக்கலாம்.

எல்லாம் நடந்து முடிந்த பின், நாங்கள்தான் அன்றைக்கே சொன்னோமே என்று சிணுங்குகிறார்கள். ஒவ்வொரு வெடிகுண்டு வெடிப்புக்குப் பின்னாலும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மாநில அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை அனுப்பினோம் என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். என்ன விஷயமென்றால் இப்படியான எச்சரிக்கைகள், அறிக்கைகள் எப்போதும் தரப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.

இரண்டாவது அலை பற்றிய அபாய அறிக்கைகள் சென்ற ஆண்டு ஆகஸ்டிலிருந்தே இதே மருத்துவக் குழுக்களால் பல முறை தரப்பட்டது. ஊடகங்களில் அதை எத்தனை முறை காட்டினார்கள் தெரியுமா. மழை மற்றும் குளிர் காலத்தில் அதிக இறப்பு இருக்கும் என்று பயமுறுத்தினார்கள். அரசு பயந்து பயந்து எல்லா ஏற்பாட்டையும் செய்தது. மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீறிக்கொண்டே இருந்தார்கள். இவ்வளவு ஏன்… இந்தமுறை இத்தனை மரணங்கள் நடந்த பின்னரும் எல்லா கடைகளிலும் மக்கள் ஒட்டி உரசி கூடிக் குழுமிதான் நிற்கிறார்கள். முகக் கவசத்தை முறையாக அணிவதே இல்லை. இப்படியான மக்கள் திரளை யாரால்தான் எப்படித்தான் கையாள முடியும். மார்ச் மாதம் விஞ்ஞானிகள் சொன்னதை வைத்து ஊரடங்கை அமல் செய்திருந்தால் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க அரசு செய்யும் தந்திரம் என்றுதான் அனைவரும் எதிர்த்திருப்பார்கள். தேர்தலைத் தள்ளிப் போடும் யுக்தி என்றுதான் விமர்சித்திருப்பார்கள். அதைக்கூடப் பொருட்படுத்தாமல் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கலாம் தான். ஆனால், மருத்துவ உலகின் எச்சரிக்கைகள் பலவும் கண் முன்னே பொய்த்துத்தானே போயிருந்தன.

சரி, ஊரடங்குதான் விதிக்க முடியவில்லை. ரெம்டெசிவர் போன்ற மருந்துக்கான முன்னேற்பாட்டைச் செய்திருக்கலாமே.

இந்த ரெம்டிசிவர் மருந்து தொடர்பான கூத்துகள் இன்னும் கொடுமை. அந்த மருந்து இந்த நோயைக் குணப்படுத்துவதில் அத்தனை வலிமை வாய்ந்தது அல்ல. நிபுணத்துவ மருத்துவ அமைப்புகள் அந்த மருந்து இந்த நோயைக் குணப்படுத்தும் என்று சான்றிதழ் வழங்கியிருக்கவில்லை. சில எமர்ஜென்ஸி கேஸ்களில் இதைத் தருவதால் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று லேசாகப் பரிந்துரைத்திருக்கிறது. அது ஒரு சப்ளிமெண்ட் போன்றதுதான். உயிர் போவதைத் தடுக்க முடியாது. ஏற்கெனவே பிழைக்க வாய்ப்பு உள்ள ஒருவரை மருத்துவமனையில் இருந்து சற்று சீக்கிரமே டிஸ்சார்ஜ் ஆக்க உதவும். அவ்வளவுதான்.

ஏனென்றால், கொரானா வைரஸ் தாக்குதலைத் தடுக்க என்று தயாரிக்கப்பட்ட மருந்து அல்ல. அதைப் பயன்படுத்துவதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதிக ஆக்ஸிஜன் தரவேண்டிய அவசியம் ஏற்படும். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் இப்படி பலவீனமான மருந்தைத் தருவதால் நடக்கும் முக்கியமான மோசமான பின்விளைவு என்னவென்றால் அந்த நோய்க் கிருமி கூடுதல் பலம்பெற்றுவிடும். இந்த மருந்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வைரஸானது உருமாறி வேறொரு வடிவத்தைப் பெற்றுவிடும். இதனால் என்ன ஆகுமென்றால் புதிதாக அந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு முந்தைய தடுப்பூசிகள் தந்த பாதுகாப்பைத் தரமுடியாமல் போய்விடும். அது நாட்டு மக்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். நோயையும் பகையையும் மிச்சம் வைக்கக்கூடாதென்று சொல்வார்கள்.

இவை எதுவும் புரியாமல் மக்கள் கூட்டம் உடனே அது என்னமோ நோயை முழுவதுமாக்க் குணப்படுத்திவிடும் என்று தாமாகவே நினைத்துக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். பல மருத்துவர்களை ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள். விஷயம் தெரிந்த மருத்துவர்கள் இதனால் பெரிய பலன் எதுவும் இல்லை என்று சொல்ல பயப்படுகிறார்கள். ஏனென்றால், நாளை ஒருவேளை அந்த நோயாளி இறந்துவிட்டால் நீங்கள் அதைப் பரிந்துரைத்திருந்தால் எங்கள் அன்புக்குரியவர் பிழைத்திருப்பாரே என்ற கேள்வி நோயாளிகளின் உறவினரிடம் இருப்பதால் எதற்கு வம்பு என்று சொல்லி அதைப் பரிந்துரைத்துவிடுகிறார்கள். அது ஒரு அலோபதி மருந்து என்பதால் அதை அவர்களால் முற்றாக நிராகரிக்கவும் முடியவில்லை. கபசுரக் குடிநீர் போன்ற சித்த, ஆயுவேத மருந்தாக இருந்திருந்தால் தைரியமாக அதெல்லாம் தரமுடியாது என்று சொல்லிவிட்டிருப்பார்கள்.

ஆனால், அரசு அதன் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கலாமே.

இவையெல்லாம் திடீரென்று எழும் பிரச்னைகள். இன்று கேட்டதும் நாளை லட்சக்கணக்கில் தயாரித்துவிட முடியாது.

இப்படியான மருந்து தயாரிப்புகளை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது தவறுதானே.

அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லையே. தனியாருக்கு இவற்றில் பெரும் சுதந்தரம் தரப்பட்டிருக்கிறதே. ஆனால், சில அடிப்படைத் தரக்கட்டுப்பாடுகள் அவசியம். அது தேசம் முழுமைக்கும் ஒரே மாதிரி இருந்தாகவேண்டும். இப்படி விதிவிலக்கான விஷயங்களை வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களுக்கும் தனியான முழு அதிகாரம் பெற்ற மருத்துவ கவுன்சில்கள் அமைக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் சரியல்ல. மீதி 99 மருந்துகளின் உற்பத்தியிலும் தரத்திலும் செய் நேர்த்தி இருப்பதற்கு இந்த தேசிய மைய அமைப்புதான் காரணம். நாளையே நீங்களோ நானோ ஒரு மருந்தைக் கண்டுபிடித்து எல்லாருக்கும் வழங்கிவிடமுடியாது. தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் ஒப்புதல் பெற்றாக வேண்டியிருக்கும். இவையெல்லாம் நன்கு பரிசோதனை செய்து உருவாகியிருக்கும் நடைமுறைகள். சிற்சில இடர்பாடுகளை வைத்து அவற்றை விமர்சித்துவிட முடியாது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *