நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்

மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ’நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை 2016 ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது,  மத்திய அரசு அந்த வருடம் முதலே நாடு முழுவதிலும் நடத்துவதற்கு அனுமதி அளித்தது. பின்னர்  2017 ஆம் வருடம் முதல் அது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் வருடா வருடம் மாணவர்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பலவும் ஆரம்ப முதலே நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்து விட்டு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

அதிமுக அரசு எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியது.  அதன் தலைவர்களும் அந்த வாக்குறுதியை தொடர்ந்து மக்களிடத்தில் தேர்தலின் போது பரப்புரை ஆற்றி வந்தார்கள்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஜூன் ஐந்தாம் தேதி நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்துள்ளது. அந்தக் குழு தேர்வின் தாக்கம் குறித்து மக்களிடத்தில் கருத்துகளைப் பெற்று ஒரு மாத காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்குமெனச் சொல்லப்பட்டுள்ளது.

அதற்காக வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பு திமுகவின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் சமூக நீதியைப் பாதுகாப்பது எனவும், முந்தைய திமுக ஆட்சியில்  கொண்டு வந்த முறையான பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முயற்சிக்கும் திமுக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விசயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள  இடங்கள், இடப்பகிர்வு பற்றிய அடிப்படை விபரங்கள் மற்றும் நீட் தேர்வு மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகிய   விசயங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றின் மூலம் நீட் தேர்வு உண்டாக்கியுள்ள கள மாற்றங்களை நம்மால் அறிய முடியும். அதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறித்த ஆதாரங்கள் மூலம் தொகுக்கப்பட்ட விபரங்கள் கட்டுரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விபரங்கள் முழுமையாக இல்லாததால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ்    சேர்க்கை மட்டுமே இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் முதல் கலந்தாய்வை ஒட்டிய சேர்க்கைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுகின்றன. இந்த விபரங்கள் தனிப்பட்ட முயற்சியில் பொது வெளியில் கிடைத்த ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்யப்படுவதால், சுமார் 1-2% அளவு தவறுகள் நேர வாய்ப்புள்ளது.   

அட்டவணை 1 தமிழகத்தில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் மற்றும் பகிர்வு முறை பற்றிய அடிப்படை விபரங்களைக் கொடுக்கிறது.  

அட்டவணை  1 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் பகிர்வு  -2020

மாநிலத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்கள்  3650
அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) மற்றும் ஐஆர்டிடி (IRTT) வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்    619
தமிழக மாணவர்களுக்கான பிரத்யேக இடங்கள்  3031
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு – 7.5%  227
பொது ஒதுக்கீட்டுக்கான இடங்கள்  2804

அட்டவணை 2 தமிழக அரசு 2020 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக வருடா வருடம் 7.5% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் பலன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்படுகிறது.

அட்டவணை  2 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு -227

சமூகப் பிரிவுகள்அரசு இட  ஒதுக்கீடு  (%)ஒதுக்கீட்டின் படி கிடைக்க வேண்டிய இடங்கள் (Round off)கிடைத்த இடங்கள்  கிடைத்த இடங்களின் விகிதாசாரம்  
பொதுப் பிரிவு  (OC)317000
பிற்பட்ட வகுப்பு ( BC)27617834.4
பிற்பட்ட வகுப்பு-முஸ்லிம்கள்  37125.3
மிகவும் பிற்பட்ட வகுப்பு ( MBC)20458035.2
பட்டியலின வகுப்பு  (SC)17344720.7
பட்டியலின வகுப்பு –  அருந்ததியர்3783.5
மலைவாழ் மக்கள்  (ST)1221

மேற்கண்ட அட்டவணை மாநில அரசின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் சமூகத்தின் பின் தங்கிய மற்றும் பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முழு பலன்களையும் பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. பொதுப் பிரிவு மாணவர்கள் யாருக்கும் இடங்கள் செல்லவில்லை.

அட்டவணை 3 7.5% ஒதுக்கீடு போக மீதி இடங்களுக்கான ஒதுக்கீடு

சமூகப் பிரிவுகள்அரசு ஒதுக்கீடு  (%)ஒதுக்கீட்டின் படி கிடைக்க வேண்டிய இடங்கள்கிடைத்துள்ள இடங்கள்கிடைத்துள்ள இடங்களின்  விழுக்காடு ( Rounded off)
பொதுப்பிரிவு318691073.8*
பிற்பட்ட வகுப்பு  27757134047.8
பிற்பட்ட வகுப்பு- முஸ்லிம்3841194.2
மிகவும் பிற்பட்ட வகுப்பு  2056069424.8
பட்டியலின வகுப்பு  1542143115.4
பட்டியலின வகுப்பு- அருந்ததியர்384853.0
மலைவாழ் மக்கள்  129291.0

*முன்னேறிய வகுப்பு மாணவர்கள் மட்டும்

மேற்கண்ட அட்டவணை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவப் பட்டப் படிப்பில் அதிகமான பேர் சேர்ந்துள்ளதைக் காட்டுகிறது. மலை வாழ் மக்களின் குழந்தைகள் மட்டும் ஒதுக்கீட்டு அளவே பலன் பெற்றுள்ளனர். அதற்குக் காரணம் போட்டியிடும் மாணவர்கள் எண்ணிக்கையே குறைவாக உள்ளதாக இருக்கலாம். .  

மேற்குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிக பலன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதியின் அடிப்படை. எனவே நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் முற்றிலும் தவறாகிறது.  உண்மையில் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த அதிகம் பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். எனவே சமூக நீதி தற்போது மிக அதிகமாகியுள்ளது.

முன்னர் 2006ஆம் வருடம் திமுக ஆட்சியின் போது  பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்களை வைத்து மருத்துவ சேர்க்கை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு வரை அந்த முறையானது தொடர்ந்து வந்தது. அதில் மொத்தமாக அந்தக் கால கட்டம் முழுவதும் மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெறும் 213 பேர் மட்டுமே. அதாவது மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் வருட சராசரி வெறும் 19 பேர். அது மருத்துவப் படிப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 0,7 விழுக்காடு மட்டுமே வருகிறது.

அப்போதெல்லாம் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் போதிக்கப்படவே இல்லை. பதினொன்றாம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் புரிந்து கொள்வது மாணவர்களுக்குக் கடினம். மேலும் தமிழக அரசின் ‘ப்ளூ பிரிண்ட்’ என்னும் முறை மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற்று வந்தனர். மேலும் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றப்படவேயில்லை.

தமிழக அரசு 2017 ஆம் வருடத்தில்  பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது, பதினொன்றாம் வகுப்பு பாடங்களை வகுப்புகளில் போதிக்கத் துவங்கியது, மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசே பயிற்சி அளித்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம் தமிழக மாணவர்கள் இயற்கையாகவே நீட் தேர்வில் அதிக அளவில் வெற்றி பெற ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் நுழைவுத் தேர்வை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் சேர்த்தப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமின்றி புரிந்து படிக்க முடிகிறது. . 

எனவே மருத்துவப் படிப்பு சம்பந்தமாக முன்னர் நிலவி வந்த சிரமங்களுக்குக் காரணம் மாணவர்கள் அல்ல; நமது மாநில  கல்வித் துறையில் நிலவிய குறைபாடுகள் தான். தமிழக மாணவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். முறையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் போது, அவர்கள் நன்கு வெற்றி பெறுவார்கள். அதைத் தான்  இப்போது அவர்கள் சாதித்துக் காட்டி வருகிறார்கள்.

நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்கள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெறுவதும், தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகிறது. சென்ற 2020 ஆம் வருடம் நடந்த தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சராசரி – 56.44%. ஆனால் தமிழ்நாடு விகிதம் – 57.44%. 2019 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது ஒரே வருடத்தில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 9% அதிகரித்து தேசிய அளவில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. தமிழக மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் முதல் முறையாக எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.  

மேலும் நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் உள்ள உயர்தர மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய அளவிலான எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட நிறுவங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்ற வருடம் முதன் முறையாக முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அது மட்டுமன்றி, அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நமது மாணவர்கள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள பெரிய மருத்துவ கல்வி நிறுவங்களில் சேர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மோடி அரசு கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் பதினோரு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற எந்தவொரு  மாநிலத்துக்கும் கிடக்காத பேருதவி. அதன் மூலம் அடுத்து வரும் சில மாதங்களில் சுமார் 1750 மருத்துவ இடங்கள் நமக்குக் கிடைக்க உள்ளன. அவை தொடர்ந்து வரும் நான்கு ஆண்டுகளில் மேலும் உயரும்.

எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் சமூக நீதி அதிகரித்து, வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆகவே தமிழக அரசு கள உண்மைகளை ஆய்வு செய்து, நீட் மூலம் மேலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மாநில பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு  24,000 கோடி ரூபாய் அளவு உள்ளது. தேவையான சிறு பயிற்சிகளை ஆசிரியர்களுக்குக் கொடுத்து, கட்டமைப்புகளை வலுப்படுத்தும் போது நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்கு சுலபமாகத் தயார் செய்ய முடியும். அதன் மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அவர்களால் போட்டியிட முடியும். ஏனெனில் உலகின் பல பகுதிகளிலும் உயர் படிப்புகளுக்குப் போட்டித் தேர்வுகள் உள்ளன.

இந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையை மாநில அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இப்போதுள்ள முறையில் முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் குறைவான மருத்துவ படிப்பு இடங்களே கிடைத்து வருவதாகத்  தெரிகிறது. அவர்களின் மக்கள் தொகை தமிழகத்தில்  தோரயமாக பத்து விழுக்காடு அளவு இருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெற்றுள்ள மருத்துவ இடங்கள் சுமார் 3.8%  மட்டுமே.

எனவே முன்னேறிய பிரிவினரில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை. அதற்காகத் தான் மோடி அரசு 2019 ஆம் வருடம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவனருக்காக பத்து விழுக்காடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சட்ட ரீதியாக் கிடைக்க வேண்டிய பலன்களை உறுதிப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஒட்டு மொத்த சமூக நீதியுடன் கூடிய புதிய தமிழகம் உருவாகும்.

One Reply to “நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *