வீரசைவமும் சித்தாந்த சைவமும்

வீர சைவ மரபுக்கும் சித்தாந்த சைவமரபுக்கும் நெடுங்காலமாகவே நெருங்கிய உறவு இருந்து வந்திருக்கின்றது. ஆகம மரபில் வந்த சித்தாந்த சைவத்தின் சீர்திருத்த வடிவமாக (Liberation Theology of Saiva Siddhanta) எழுந்தது வீர சைவம் எனலாம். வீரசைவம் என்றாலே எம்மில் பலர் கன்னடத்தில் உள்ளதோர் சைவப் பிரிவென்றும், இலிங்கத்தைக் கழுத்தில் கட்டிக்கொண்டு திரிபவர்கள் என்றும், சைவசித்தாந்தத்தில் இருந்து வேறுபட்ட ஐக்கியவாத சைவம் என்றும் மேலோட்டமாக எண்ணிக்கொள்கின்றோம். உண்மையில் வீரசைவம் என்பது சித்தாந்தசைவம் கூறும் நடைமுறைகளை காலம், அறிவு, அனுபவத்திற்கேற்ற மாற்றங்களோடு நடைமுறைப்படுத்தும் யதார்த்த அனுபவ சைவ நெறி என்பது பலரும் அறியாதது.

சைவத்திலே பிறந்து வேத விதிப்படி ஒழுகி சிவ வழிபாடு செய்துவந்தாலும் சிவாகம விதிப்படி சிவலிங்கபூசை செய்யாமல் முத்தி சித்தியாது என்பது சைவசித்தாந்த அடிப்படைவிதி. இன்றுள்ள சைவர்களில் எத்தனை பேருக்கு சைவசித்தாந்த அடிப்படையேனும் தெரியும் என்பது ஒரு பெரிய கேள்வி. அவ்வாறு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆகமவிதிப்படி சிவதீட்சை பெற்று ஒழுகுபவர்கள் எத்தனை பேர்? அவ்வாறு சிவதீட்சை பெற்று நித்திய அனுட்டானம் தவறாது மரணபரியந்தம் தினமும் செய்துவருபவர்கள் எத்தனை பேர்? இப்படி சமய தீட்சை பெற்று தினமும் விதிப்படி சைவ சந்தியாவந்தனம் செய்பவர்களிலும் இரண்டாம் தீட்சையான விசேட தீட்சை எடுத்து நித்திய அனுட்டானத்தோடு சிவலிங்க பூசையையும் எழுந்தருளப்பண்ணி ஆகமவிதிப்படி தவறாது செய்து வருபவர்கள் எத்தனை பேர்? மாறிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் இவ்வழமைகள் அருகிக்கொண்டேபோகின்றதுன என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆர்வத்தோடு தம்மைச் சைவர்கள் என்றும், சைவசித்தாந்திகள் என்றும் கூறிக்கொள்ளும் எம்மில் பலரும் வெறும் புத்தகதோடு நிற்கும் சைவர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. இவர்கள்தான் சைவசித்தாந்தத்தைப் போதிக்கும் ஆசிரியர்களாவும் விளங்குகின்றார்கள் என்பதும் வருத்தத்துக்குரிய உண்மை. இவர்களும் காலத்துக்கொவ்வாத சாதி பேதம், வர்ணபேதம், பால் பேதம் பார்த்து அலைவதால் சைவம் என்றாலே பிற்போக்கான நெறி என்றும் காலத்துக்கொவ்வாத நடைமுறை என்றும் சைவர்களே சிந்திக்கும் அளவுக்கு நாம் உள்ளொம் என்பது எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால்.

இந்தச் சவாலை வீரசைவம் எவ்வாறு எதிர்கொண்டு எழுந்து நிற்கின்றது என்பது நமக்கு ஒரு பாடம்.

வீர சைவத்தில் பஞ்ச ஆசௌசங்கள் என்னும் ஐந்துவிதமான துடக்குகள் நடைமுறையில் நிராகரிக்கப்படுகின்றன. அவையாவன,

  1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு: இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
  2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு: இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
  3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு: ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் ஏற்படும் துடக்கு இது.
  4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு: இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு.
  5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு: இழிந்த சாதியினரைத் தீண்டுவதனால், அவர்கள் சமீபத்தில் வருவதனால், அவர்களுடன் நெருங்கிப் பழகுவதனால் வருகின்ற துடக்கு. இங்கு இழிந்த சாதியினர் என்பது இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்கள் என்று பொருள் கொள்வர்.

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போரக்கு
ஆசூசம் இல்லை அருமறை யோர்க்கே

என்னும் 2552 வது திருமந்திரப் பாடலும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

சைவசித்தாந்திகளான சைவர்கள் சைவசித்தாந்தம் தெரிந்திரா விட்டாலும், சமய தீட்சை எடுத்திரா விட்டாலும், விசேட தீட்சை பெற்று நித்தமும் சிவலிங்கபூசை செய்யாதிருந்தாலும் இந்த ஐந்து ஆசௌச துடக்குகளையும் தவறாது அனுசரிப்பவர் ஆவர். ஆனால் வீர சைவ மரபில் உள்ளவர்கள் இந்த ஐந்து ஆசௌசங்களையும் கடைப்பிடிப்பதில்லை. அது மட்டுமல்ல அவர்கள் பால்பேதம் சொல்லிப் பெண்களை ஆன்மீக விடயங்களில் இருந்தும் ஒதுக்கிவைப்பதும் இல்லை.

இன்று மேலைத் தேச கலாச்சாரத்தைக் கைக்கொண்டொழுகும் பலரும் இவ்வைந்தையும் கடைப்பிடிப்பதில்லைத்தானே; அவர்களும் பெண் அடக்குமுறைகளை ஆதரிப்பதில்லைத்தானே; அப்படியானால் அவர்களைப்போல் வீரசைவர்களும் இவ்வாறு வெறும் சமூகச்சிர்திருத்தக்காரர் தானா? என்றால் இவற்றினால் மட்டும் நாம் இவர்களைச் செம்மையான சீர்திருத்தச் சைவர்கள் என்று சொல்லுவதில்லை. இவர்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது ஆண், பெண் ஒவ்வொருவரும் சாதி, வர்ண, பால் வேறுபாடு இன்றி தினமும் தவறாது நித்திய சிவலிங்க பூசை செய்வதற்கேயாம்.

இவர்களுக்கு அழுக்கும் துடக்கும் இல்லாதபடியினால் தமது பூசைக்குரிய சிவலிங்கத்தை இட்டலிங்கமாக ஒரு பதக்கப்பெட்டியுள் வைத்துத் தமது கழுத்தில் எப்போதும் அணிந்திருப்பார்கள். சிவலிங்கம் எப்போதும் அவர்கள் உடலில் இருப்பதால் சிவாகம வழிப்படியான சிவபூசைக்குரிய பஞ்சுத்திகளும் அவர்களுக்கு மிக எளிமையானவை. இலிங்கம் காவுவதற்கு பூசைப்பெட்டியோ, அவற்றோடு காவுகின்ற பூசை உபகரணங்களோ தேவை இல்லை.

பூசை நேரத்தில் கழுத்தில் அணிந்துள்ள இட்டலிங்கத்தை எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து அதைச் சுத்திசெய்து விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து மலர் சாத்தி தூப தீபம் காட்டி தாம் உண்ணப்போகும் உணவையே நைவேத்தியமாக நிவேத்தித்து தோத்திரம் சொல்லிப் பூசையை நிறைவுசெய்து மீண்டும் இலிங்கத்தைக் கழுத்தில் கட்டியுள்ள் பதக்கப்பெட்டியுள் வைத்துப் பூசையை நிறைவு செய்து அதன் பின்னரே உணவு உண்பர்,

இவ்வாறு சைவ சித்தாந்த நெறியில்நின்று நித்திய சிவபூசை செய்யும் செந்நெறி நியமத்தைக் கொண்டொழுகுபவர்களே வீரசைவர்கள். பூசை முறையில் வேறுப்படிருக்கலாம். ஆயினும் தத்துவ நெறியிலும் அவர்கள் நம்மவர்களே. அவர்கள் தமக்கென்று சிறப்பு வழிக்காட்டிகளான குருமாரைக்கொண்டிருந்தாலும் நமது அருளாளர்களே அவர்களது அருளாளர்களும். தமிழ் மரபில் உள்ள வீர சைவர்களுக்கு நமது திருமுறைகளே அவர்களது தோத்திரங்கள்.

நவீன உலகில் நித்திய சிவலிங்க பூசையைக் கைக்கொண்டுள்ள நாமும் பல நாடுகளுக்கும் பயணம் செய்யும் காலங்களில் இடம், பொருள், ஏவல் குறித்து நமது சிவபூசையையும் ஏறக்குறைய இவ்வாறான சிவபூசையாக்கும் சந்தர்ப்பங்கள் பல. அதிலும் கைப்பெட்டியில் விமானத்துக்குள் சிவலிங்கத்தைக் கொண்டுசெல்வதற்கு முன்னர் பல பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்தையும் கைப்பரிசத்தையும் ஈர்த்தே பயணம் மேற்கொள்பவர் எனது இட்டலிங்கமூர்த்தி.

வீர சைவத்திலும் பார்க்க நமக்கு அன்னியமான பைரவம், காபாலிகம், மாவிரதம், பாசுபதம் போன்ற அகப்புறச் சமயங்களையே நமது ஆச்சாரியார்கள் போற்றிப் பாடியிருக்கின்றார்கள்.

வழிபாட்டில் மச்சம், மாமிசம், மது, மாது என்பவற்றுடன் வழிபடும் முறைகளைக் கூறுகின்ற வாம தந்திரங்கள் வழியாக சக்தியை முதலாகக் கொண்டு வழிபடுகின்ற வாமம் என்பது சைவத்தின் அகப்புறச்சமயங்கள் ஆறினுள் ஒன்று. இதே விதமான வழிபாட்டு முறைகளுடன் பைரவரை முதலாகக் கொண்ட மார்க்கம் பைரவம். பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்ட சிவன் பைரவ சன்னியாசி வடிவிலேயே வந்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது.

……….. .அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்

(பெரியபுராணம்)

இதையொத்த இன்னொரு அகச்சமயம் மாவிரதம். இவர்கள் அணியும் பஞ்சவடி என்னும்பூணூல் தலைமுடியினால் ஆனது. மானக்கஞ்சாறரின் மகளின் திருமண மேடையில் வந்து அவளுடைய கூந்தலை தனது பூணூலுக்காகக் கேட்ட சிவன் வந்தது ஒரு மாவிரதி வடிவத்தில் ஆகும்.

வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.

(பெரியபுராணம்)

இந்த தலைமயிரினால் ஆன பஞ்சவடி என்னும்பூணூல் அணியும் மாவிரதிகள், கபாலத்தைக் கையில் ஏந்தி அதில் பிச்சை ஏற்கும் கபாலிகள், உடலெங்கணும் நீறு பூசித் திரிகின்ற பாசுபதர் முதலானோரைத் தேவாரங்களிலும் பாடியுள்ளதைக் காணலாம்.

தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 67: 04)

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4 : 20: 03)

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4: 64: 04)

பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 91: 02)

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானை

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 90: 05)

ஆகவே செந்நெறியில் நிலைகொண்டுள்ள நித்திய சிவபூசைச் செல்வர்களான வீரசைவர்களை நாம் விரோதித்தலும், நிந்தித்தலும் தகாது. அவ்வாறே அவர்களும் உணர்ந்து சித்தாந்த சைவர்களை நிந்தியாது ஒழுகவேண்டும் என்பதே எமது அவா.

டாக்டர் லம்போதரன் இராமநாதன் கனடாவில் வாழ்ந்து வரும் மருத்துவர்.  IMHO – International Medical Health Organization என்னும் சேவை அமைப்பை நிறுவி அதன் இயக்குனராக இருந்து வருகிறார். குறிப்பாக இந்த அமைப்பு இலங்கையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சைவசித்தாந்த பீடம் என்னும் ஆன்மீக அமைப்பையும் நிறுவி, அதன்மூலம் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ்ச் சமுதாயத்தினரிடையே ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் விவரங்கள் இந்த இணையதளத்தில் காணலாம். தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து சைவசமயம் குறித்து எழுதி வருகிறார்.

3 Replies to “வீரசைவமும் சித்தாந்த சைவமும்”

  1. விபரேசன் தியாலஜியைப்போல வீரசைவத்தை கருதுவது ஐரோப்பிய மையவாதப்போக்கு! நம்முடை ஆன்மிக சமய மெய்யியல் மரபுகளை தியாலஜி என்ற நம்பிக்கைகோவையாக சுருக்குதல் தவறு! சத்திய யுகத்தை சமைக்கும் நமது நோக்கினை மேற்கத்தியர்கள் சொல்லும் விடுதலை இலக்காகவும் சுருக்கிவிடுதலும் சரியானதாகாது! ஐரோப்பிய மையவாத கிறித்தவமையவாத நோக்கிலே சத்தியத்துக்கோ தர்மத்துக்கோ இடம் கிடையாது! வைதீக சைவத்தின் சத்தியம் தர்மம் இரண்டையும் சிரமேற்கொள்ளும் வீரசைவம் ஆழ்ந்த உறுதியான பக்தி மற்றும் ஞானத்தையே ஆன்மவிடுதலைக்கும் சமூக பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் வழியாகக் காட்டுகிறது! தமிழகத்திலே எழுந்த பக்தி இயக்கத்தின் ஆன்மிக பின்புலம் லகுல பாசுபத சைவ யோக மரபு என்பதும் அதன் தொடர்ச்சியே பசவாதி சிவசரணர்களின் வீரசைவ பக்தியியக்கம் என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது! வீரசைவத்திலே வர்ணாசிரமத்தை ஏற்கும் சிரெளத்த சைவசித்தாந்திகளும் அதை நிராகரிக்கும் பசவமரபினரும் உளர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதே!

  2. நானும் ஒரு வீர சைவன் தான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல பதிவு நன்றி ஐயா

  3. வீரசைவம் அத்துவிதம், தத்துவங்கள் ஏன்னும் மகாவாக்கியப்பொருளை உணர்த்தும் நெறி.வேதாந்த சித்தாந்த உபநிடங்களை இணைத்து சமரச நன்னிலை பெற்ற நெறி.சமயம் அன்று.வள்ளலாரருக்கு வழிகாட்டியாக நெறி. குமார தேவரும்,சிதம்பரசுவாமிகளும்வழிகாட்டிகள்.உடலோடுஉயிர் அடையும் சொரூப முத்தி.வளர்க வீரசைவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *