வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

முந்தைய பகுதிகள்:

சைவமும் வேதமும்

சைவசமயக் குரவர்களாகிய நால்வரின் திருமுறைகளிலும் வேதம் உயர்வாகப் பேசப்படுகின்றது. தமிழ் ஞானசம்பந்தர் தம்மை,”நற்றமிழ் ஞானசம் பந்தன், நான்மறை கற்றவன்” என்று கூறிக் கொள்கின்றார்.

nalvar1

தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தருடைய திருஅவதாரமே வேதநெறியைத் தழைத்தோங்கச் செய்தலையும் மிகுசைவத் துறையை விளங்கச் செய்தலையும் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

அவருடைய தந்தையார் சிவபாத இருதயர் கவுணிய கோத்திரத்தவர்.( இக்காலத்தில் கவுண்டின்ய கோத்திரம் என வழங்கப்படுகின்றது.); ‘அந்தணர் தங்குடி முதல்வர்.’ ‘இப்புவி வாழத் தவஞ்செய் இயல்பினார்’;. சிவபாத இருதயர் தமிழ்நாட்டில் சமணர், சாக்கியர்களின் பொய்மிகுந்து, “ஆதி அருமறை வழக்கம்” அருகி, சிவனடியார்களிடத்தில் திருநீறு முதலிய சைவசாதனங்கள் போற்றப் பெறாதொழிதலைக் கண்டு வருந்தினார். இறைவனிடத்தில், “பரசமயம் நிராகரித்து நீறாக்கும் “ திருப்புதல்வனை வேண்டித் தவம் புரிந்தார். அவருடைய வேண்டுகோளுக் கிரங்கிய இறைவன்,

“பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க ……
சிவம்பெருக்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்
திருவவதாரம் செய்தார்”

என தெய்வச் சேக்கிழார் பெருமான் மொழிகின்றார். திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் ‘இருக்குமொழிப் பிள்ளையார்’ எனும் சிறப்புப் பெயராலும் குறிக்கின்றார். இருக்குவேதம் எனும் ஒரு வேதம் இருந்தாலும், இப்பெயர் வேதங்கள் நான்கினையும் பொதுவாகக் குறிக்கும்.

வேதமொழிகளுக்கு ‘நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை, கற்றவன்” அருளிய மொழிகள் பின்னாளில் தென்னாட்டுச் சைவசித்தாந்த தத்துவத்திற்கு அடிகோலியது. எடுத்துக் காட்டாகத் தென்னாட்டு சைவசித்தாந்தம் உயிரைப் ‘பசு’ என்றும் இறைவனைப் ‘பதி’ என்றும் , உயிர் இறைவனை அறிய ஒட்டாமல் மறைக்கும் அறியாமையைப் ‘பாசம்’ என்றும் கூறும். இம்மூன்று பொருள்களையும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தத்தின் சிறப்பு. இறைவனைப் பசுபதி என வேதம் பேசுதலைப் போலத் திருமுறைகளும் ஓதும். திருஞான சம்பந்தப் பிள்ளையார் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்.

meditating_shivaஉயிர்களைப் பசுக்கள் என்றும் ஈசனைப் பசுபதி என்றும் கூறுவதற்குக் காரணத்தை ஜாபால்ய உபநிஷத் கூறுகின்றது. “புல்லைப் புசிப்பனவும் அறிவுக் குறைபாடு உடையனவும், உடையானால் உழவு முதலியதொழில்களில் ஏவப்படுவனவும் துக்கமுடையனவாகவும் இயமானனால் கட்டப் படுவனவுமாயுள்ளன பசுக்கள். அவ்வாறே பாசபந்தமுடைய சீவன்களாகிய பசுக்களும். பசுக்களை கட்டவிழ்ப்பவனும் ஏவுவனுமாகிய எஜமானனைப் போல முற்றுணர்விற்கும் ஈச சத்தத்திற்கும்( சொல்) உரிய பசுபதியும்.. ”.

வேதம் கூறும் அத்துவிதத்திற்கு உண்மையான, சரியான பொருள் இன்னது என்பதைத் திருஞானசம்பந்தர் ”ஈறாய் முதலொன்றாய்” எனும் திருவீழிமிழலைப் பதிகத் திருப்பாடலில் எடுத்துரைக்கின்றார்.

வேதமொழிகளைத் தாங்கி, அவற்றுக்குச் சரியான விளக்கம் தரும் சிறப்பினை நோக்கி, சிவவேதியராகிய நம்பியண்டார் நம்பிகள்,

“பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே”

எனப் போற்றினார்.

சமணசமயத்தினின்றும் சைவத்திற்கு மீண்ட அப்பர்சுவாமிகள், தம்முடைய நீண்ட வாழ் நாள் சிவவழிபாடின்றி கழிந்ததற்கு வருந்தி,

“தொண்டனேன் பட்டதென்னே தூயகா விரியின் நன்னீர்
கொண்டு இருக்கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்த வாறே”
என்று பாடுகின்றார்.

எனவே, தமிழோடிசை பாடல் மறந்தறியாத அப்பரடிகள் ‘தென்தமிழும் வடமொழியும் மறைகள் நான்கும்’ ஆன ஈசனை, ‘இருக்கு ஓதி இருமொழிகளிலும் துதித்து வழிபட்டாரெனவும் தெரிகின்றது.

“அருச்சனை பாட்டேயாகும், அதனால் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என இறைவனால் பணிக்கப் பெற்ற நம்பியாரூரர், திருவாரூர்ப் பெருமான் தம்மை யாட்கொண்டருளுமாறு , அடியவரை வேண்டும்போது, “தொண்டர்களே! – யான் அந்தணர்களை வெறுக்க மாட்டேன்; வெறுக்கின்றவர்களுக்குத் துணைபோகின்றவனும் ஆகேன். ”( வேதியர் தம்மை வெகுளேன், வெகுண்டவர்க் குந்துணை யாகேன், 8.73.5) எனவேதம் கற்றோரிடத்தில் தமக்கிருக்கும் பயபக்தியையும் வேதங்கற்றோரிடத்தும் அவர்களை வெறுப்போரிடத்தும் சைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஒழுக்கத்தையும் கூறுகின்றார்.

“வேதப் பயனாம் சைவம்” என்றார் சேக்கிழார் பெருமான்.(பெரியபுராணம் 1219)

வைதிகசைவம் எனும் வழக்கு

தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம்.

“இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ”
என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10)

“மழை வழங்குக மன்னவன் ஓங்குக
பிழையில் பல்வள னெல்லாம் பிறங்குக
தழைக அஞ்செழுத்து ஓசை தரையெலாம்
பழைய வைதிக சைவம் பரக்கவே

– கோயிற் புராணம், திருவிழாச்சருக்கம், 53

என உமாபதி சிவனார் வைதிக சைவத்தை வாழ்த்தியருளினார்.

“வீடு வைதிக சைவம் பகரும்” எனச்சிவப்பிரகாசம் (31) கூறும்.

திராவிட மாபாடியம் அருளிய மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில்,

“நலம் மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப்
பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவும் சமயங்களொராறும் மகிழ்ச்சி கூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன”,

காமாட்சியம்மை இறைவன் கண்களைத் தன் திருக்கரங்களாற் புதைத்ததாகப் படுகிறார்.

உபநிடதங்கள் வேதாந்தம் எனப்படும். சைவசந்தானக் குரவர்கள் “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்” என்றும், “ வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றால் சைவத் திறத்தடைவர்” என்றும் சைவத்திற்கும் வேத உபநிடதங்களுக்கும் உள்ள உறவை விளக்கியிருக்கின்றனர். இந்த உறவைக் குமரகுருபர சுவாமிகள் மேலும் சுவைபட விளக்கியுள்ளார்.

வேதம் ஒரு கனிமரம். அம்மரத்தினிடத்து விளையும் பயன்கள் பல. அவற்றுள் பலர் இலையையே நன்றெனக் கொண்டு மகிழ்ந்தனர். வேறு சிலர் தளிரைக் கொண்டு மகிழ்ந்தனர். இவ்வாறே சிலர் அரும்பையும், சிலர் மலரையும் பலர் பிஞ்சையும், வேறு பலர் காயையும் நன்று எனக் கொண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு அந்த ஆறு உறுப்புக்களும் அவர்களுக்கு அவ்வாறு பயன்படுவனவாகவே இருந்தன. ஆனால் வேதம் என்னும் அந்த மரத்தின் உச்சியில் பழுத்த வேதாந்தம் என்னும் தெவிட்டாத அருங்கனியை எடுத்துப் பிழிந்து சாரமாகக் கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதைப் பருகினோர் சிலரே எனச் சைவம் வேதாந்தமாகிய உபநிடதத்தைப் பயன் கொண்ட சிறப்பக் குமரகுருபர முனிவர் விளக்கினார்.

“ஓரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த
ஆரா இன்ப அருங்கனி பிழிந்த
சாரங் கொண்ட சைவசித்தாந்தத்
தேனமுது அருந்தினர் சிலரே”

(பண்டார மும்மணிக்கோவை)

இந்தக் கனிமர உவமையை விரித்து இலை, தழை முதலியன கொண்டு மகிழ்ந்த வேத மதங்கள் இன்னின்ன என்று காசிவாசி திரு செந்தினாதய்யர் அவர்கள் தம்முடைய சிவஞான வசனாலங்கார தீபத்தில் விளக்கியுள்ளார்கள்.

“ இங்கே வேத மரத்து இலையினால் தார்க்கிக மதத்தினரும், தளிரினால் மீமாஞ்சக மதத்தினரும், அரும்பினாற் சாங்கிய மதத்தினரும், மலரினால் யோக மதத்தினரும், பிஞ்சினாற் பாஞ்சராத்திர மதத்தினரும், காயினால் ஏகான்மவாத மதத்தினரும் ஆக மூலப்பிரகிருதியைப் பற்றிய அறுவித சமயத்தினர் சூசிக்கப்பட்டார். உச்சியிற் பழுத்த பழத்தினாற் சிவாத்துவித வேதாந்தமும்,

‘சைவசித்தாந்தமும் வேதசாரமாயிருத்தலான்” என சுப்பிரபேதாகமமும்,
“இந்தச் சித்தாந்தம் வேத சாரம்” என்று மகுடாகமும்,
“வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என்று சிவப்பிரகாசமும் கூறுமாற்றால், உச்சியிற் பழுத்த சிவாத்துவித வேதாந்தமாகிய பழத்தின் சாரத்தினாற் சைவ சித்தாந்தமும் குறிக்கப்பட்டனவாம் என்க”.

kumaraguruparaகுமரகுருபரசுவாமிகளின் இப்பாடலில், வேதங்களும் உபநிடதங்களும் அனைத்துத் தத்துவச் சிந்தனைகளுக்கும் அடிப்படையான கருத்துக்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகின்றது. இலை, அரும்பு, மலர், காய் முதலியன தோன்ற மரம் உயிருடன் இருத்தல் இன்றியமையாதது. மரம் உயிருடன் இருந்தால்தானே அதில் மலர் முதலியன தோன்றி கனியாகும். மரத்தையே ஒழித்துவிட்டால் கனி எப்படிக் கிடைக்கும்?

எனவே, சைவசமயச் சான்றோர்கள் தம் நூல்களில் மரபுவழி வேதத்தை யுடன்பட்டுப் போற்றி வந்துள்ளனர்.

இவையெல்லாம் தென்னாட்டுச் சைவசித்தாந்தம் வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் அளித்து வரும் ஏற்றத்திற்குச் சில சான்றுகளாம்.

“வைதிக சைவம் “ என்றால் சைவநூல்களிற் கூறிய பொருள்களுக்கு ஏற்ப வேதநூல்களுக்குப் பொருள்கொண்டு அதனைத் தழுவிச்செல்லுதல் என்று பொருள்.

சைவப்புறம், வேதப்புறம், வைதிகர் யார்

வேதத்தின் சிலபகுதிகள் சைவச்செந்நெறிக்குப் புறம்பாகப் பிறரால் பொருள் கொள்ளப்படுகின்றன. வேதத்தின் உண்மைப்பொருளை மறைத்து இவ்வாறு பொய்ப்பொருளை இந்த வேதியர்கள் கூறிப் பாவப்பட்டுத் தாமுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பர் என அவர்கள் தக்கன் வேள்வியில் பங்கேற்றுச் சிவத்துரோகம் செய்தமையால் ததீசி முனிவர் சாபமிட்டனர் எனக் கந்தபுராணம், காஞ்சிப்புராணம் முதலிய சிவபுராணங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டு வைதிகப் பிராமணர்களிற் சிலர் தமிழையும் சைவத்தையும் இகழ்ந்து பேசுவதற்குக் காரணம் இந்தச்சாபமே போலும். இத்தகைய பிராமணர்களைக் காஞ்சிப்புராணம் “வைதிகப் புறத்தவர்கள்” என்கின்றது.

“ வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட்டு,
உய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை,
ஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாதரித்துப்
பொய்திகழ் நரகின் உய்க்கும்” (தக்கேசப் படலம் 23)

எனும் இப்பாடலால் வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை என்பதும் வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே என்பது தெளிவாகும்.

இன்று வைதிகர் என்றசொல், சுருங்கி, புரோகிதத் தொழில் செய்கின்ற பிராமணர்களுக்கே உரியதாக வழங்கி வருகின்றது. இந்தப் பொருள் மாற்றத்திற்குச் சங்கரமடத்தினருக்கே நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பொருள் சுருக்கம் சமுதாயத்திலும் சமயநெறியிலும் பலவித வேண்டாத தாக்கங்களை விளைத்துவிட்டது. தமிழகத்தில் வழங்கும் சைவத்திற்கு மரபு வழிச் சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம் என்று பெயர் சைவப் பெரியோர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இது காறும் கூறியவற்றால், தமிழ் சைவத் துறையும், சைவசித்தாந்தம் என்ற தத்துவப் பிரிவும் வேதநெறியின் வழிவந்தனவே ஆகும் என்பதும், சங்ககாலம் தொட்டு இன்றுவரை உள்ள தமிழ், சைவ இலக்கியங்களும், வாழும் மரபுகளும் அக்கருத்தை உறுதி செய்வதும் புலனாகும்.

முற்றும்.

2 Replies to “வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4”

  1. //உயிர்களைப் பசுக்கள் என்றும் ஈசனைப் பசுபதி என்றும் கூறுவதற்குக் காரணத்தை ஜாபால்ய உபநிஷத் கூறுகின்றது. “புல்லைப் புசிப்பனவும் அறிவுக் குறைபாடு உடையனவும், உடையானால் உழவு முதலியதொழில்களில் ஏவப்படுவனவும் துக்கமுடையனவாகவும் இயமானனால் கட்டப் படுவனவுமாயுள்ளன பசுக்கள். அவ்வாறே பாசபந்தமுடைய சீவன்களாகிய பசுக்களும். பசுக்களை கட்டவிழ்ப்பவனும் ஏவுவனுமாகிய எஜமானனைப் போல முற்றுணர்விற்கும் ஈச சத்தத்திற்கும்( சொல்) உரிய பசுபதியும்.. ”.//

    ஓஹோ இதுதான் பசு, பதி பாசமா??? பொய் சொல்லாமல் சொல்லவேண்டுமெனில் இன்றுதான் இதற்கான விளக்கத்தைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

  2. ஆனால் சைவம்-வைதீக விரோதம் போற்றி, சமீப காலமாக நம் கொங்கதேசத்தில் தமிழ்முறை என்ற பேரில் கோயில் கும்பாபிஷேகங்கள், கல்யாணங்கள் மற்றும் இன்னபிற சுப/அசுப காரியங்கள் செய்ய ஒரு குழு சுற்றி வருகிறது. இவர்கள் எல்லாம் யார்..? இவர்களின் பின்னணி என்ன? சூழ்ச்சிகள் என்னென்ன?? இவற்றால் நாம் என்னென்ன இழப்புகளை சந்தித்தோம், சந்திக்க இருக்கிறோம், இவர்கள் ஏன் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் என்பதை துகிளுரித்துக் காட்டும் ஆதாரங்களுடன் கூடிய பதிவு.

    https://www.karikkuruvi.com/2015/02/blog-post_9.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *