சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்

சைவசமயத்தில் மொழிப்போர் என்ற இந்த முக்கியமான நூல் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1897-1971) எழுதிய சில நூல்கள் மட்டும் கட்டுரைகளின் நேர்த்தியான தொகுப்பாகும். பிள்ளையவர்களின் பிரதான சீடராக விளங்கிய ச.இரத்னவேலனின் மாணவரான ஊடகவியலாளர் சௌந்திர.சொக்கலிங்கம் இந்த நூலின் தொகுப்பாளர் மற்றும் பதிப்பாசிரியர்.

பிள்ளையவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை அனைத்தும் சைவசமய அமைப்புகளின் பிரசுரங்கள், சைவ இதழ்கள் ஆகியவற்றிலேயே வெளிவந்துள்ளன. இன்னும் அச்சில் வராத எழுத்துக்களும் உள்ளன என்றும் பதிப்பாசிரியர் சொக்கலிங்கம் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார். ஆவணப்படுத்துதல் என்ற வகையில் இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, மேற்கோள் சான்றுகளுடனும், முக்கியமான அடிக்குறிப்புகளுடனும் கொடுத்திருப்பது, அவரது நீடித்த உழைப்புக்கும்  சிரத்தைக்கும் சான்று பகர்கின்றது. திருநெல்வேலிச் சைவசமய வட்டங்களுக்கு வெளியே பெரிதும் அறியப்பட்டிராத பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அரும்பணிகளையும் நூலின் தொடக்கத்தில் அவரே ஒரு விரிவான கட்டுரையாக எழுதியிருப்பது சிறப்பு.

தனது வாழ்நாள் முழுவதையும் சைவசமயப் பணிக்கே அர்ப்பணித்து, சாத்திர ஆசிரியராகவும், சமய போதகராகவும், சொற்பொழிவாளராகவும், நூலாசிரியராகவும் பிள்ளையவர்கள் விளங்கினார்.  சைவ சித்தாந்த சாத்திர விரிவுரைகளோடு கூடவே, அன்றைய அரசியல் சூழலில் சைவ சமயத்தின் மீது பெரும் பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த பல்வேறு கருத்துக்கள் குறித்து கண்டனங்களையும், மறுப்புகளையும், விமரிசனங்களையும் அவர் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.  “தமிழர்ச்சனைக் கலகம்” என்ற பெயரில்  சைவசமயத்திலிருந்தும் கோயில்களிலிருந்தும் சம்ஸ்கிருத மந்திரங்களையும், சம்ஸ்கிருத சாஸ்திர நூல்களையும் அகற்றவேண்டும் என்ற நோக்கில் கடும் பிரசாரம் திராவிட இயக்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட சைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் போன்ற ஆதீனகர்த்தர்களே அந்த வலையால் இழுக்கப்பட்டு மதிமயங்கினர்.  அந்தச் சூழலில் அதற்கு எதிர்த்தரப்பில் பாரம்பரியமான சைவ மரபின் குரலாக ஓங்கி ஒலித்தவர் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அந்தக் கலகத்தின் சுவடுகள் இன்றும் தமிழ்ச்சூழலில் மறைந்த பாடில்லை.  அரசாணைகள் மூலமும்  சைவர்களுக்கு உள்ளேயே உள்ள துவேஷ கருத்தியலாளர்கள் மூலமும் அந்தப் பிரசாரம் இன்றும் தொடர்கிறது. இதனை முன்னிட்டே இந்த விவகாரம் தொடர்பான  பிள்ளையவர்களின் மூன்று நூல்கள் விசேஷமாக மையப்படுத்தப்பட்டு இத்தொகுப்பில் தரப்பட்டுள்ளன என்று கருதுகிறேன்.


முதலாவது “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்” என்ற நூல். சம்ஸ்கிருதமே பாரத நாட்டின் பொதுமொழி; சைவம் என்பது பாரத நாடெங்கும் பரவியுள்ள வேதநெறியில் கிளைத்த சமயமே அன்றி “தமிழர் மதம்” அல்ல என்பதைத் தமிழிலக்கிய ஆதாரங்களிலிருந்தே நிறுவுவதுடன் இந்த நூல் தொடங்குகிறது.  பிறகு “மந்திரம் என்றால் என்ன, தமிழில் மந்திரங்கள் உண்டா, அவை சைவாலயங்களில் புழங்கினவா, திருமுறை மந்திரங்கள், மந்திரங்களை மொழிமாற்றலாமா, புதிதாக சிருட்டிக்கலாமா, மனங்கலந்த பக்திக்கு சம்ஸ்கிருத மந்திரங்கள் தடையாகுமா என்று ஒவ்வொரு கேள்வியையும் எடுத்துக் கொண்டு சிறப்பாக அலசுகிறார்.

“அர்ச்சனை பாட்டேயாகும்’ – ஏழாந்திருமுறை. அதைப் பாடியவர் சுந்தர். அவர் எந்தச் சைவாலயத்திலாவது பதிகங்கள் பாடி அர்ச்சனை செய்திருக்கின்றனரா? இல்லை. ஆகையால் அவ்வடி நவீனர் கொள்கைக்கு இசையாது…  அர்ச்சனைக்குப் பாட்டு என்று இல்லை.  பாட்டே அர்ச்சனை, அவ்வேறுபாடறிக..

தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித் தோன்றின. திருமுறைகள் பிந்தியவை. அம்முந்திய காலங்களில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ் மறைகள் மந்திரங்களாக ஓதப்பட்டன? சம்ஸ்கிருத வேதமந்திரங்களே இன்றே போல் அன்றும் ஓதப்பட்டன. அவ்வோதுகைக்கு முந்திய காலமென்பதில்லை. இருந்தால் அது சைவாலயங்களும் தோன்றாத காலமேயாகும்”

(சைவ சமயத்தில் மொழிப்போர், பக். 150)

வேறு எந்த மாகாணத்திலும் இப்படிக் கிளர்ச்சிகள் இல்லாதபோது தமிழ்நாட்டின் நவீனர் மட்டும் இதில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

“மாகாண மொழி மந்திரக் கிளர்ச்சிக்கு மூலம் சமயாபிமானமன்று. மொழி வெறியே.  அவ்வாலயங்கள் பொதுவுடைமையாய் இருந்து வருவதை மாகாண மொழி மந்திரம் அடியோடு கெடுத்துவிடும்.  அம்மந்திரம் புகுத்தப்படட்டும். தமிழகச் சைவருக்கும் ஆந்திரச் சைவாலயங்கள் சேவா யோக்கியம் ஆகுமா? ஆகா.  அங்கு தெலுங்கு மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது.  ஆந்திரச் சைவருக்குத் தமிழ் சைவாலயங்கள் சேவா யோக்கியம் ஆகுமா? ஆகா. அங்கு தமிழ் மந்திரம் புகுந்திருக்கும்…  இது சைவசமயத்துக்குப் பெருங்கேடு. அக்கேட்டுக்குப் பாமரரும் பண்டிதருமே இரையாவர்… சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதுக. அக்கேடில்லை. அவ்வோதுகையில் சிவ சங்கர சம்பு ஹர உமா பார்வதி விநாயக சுப்ரமண்ய முதலிய சப்தங்களாவது எங்கும் ஒன்றுபோல் ஒலித்துக் கொண்டிருக்கும். பாமரரும் அதைக்கேட்டு மகிழ்வர். அதுவே அவருக்கு இலாபம்..”  (பக். 165-166).   

“தமிழ்வெறி” என்ற பகுதியில்  சைவத்தை தமிழ் என்ற மொழிச்சிமிழுக்குள் அடைப்பதன் அபத்தங்களையும், அபாயங்களையும் எடுத்துரைக்கிறார் (பக். 168-173). பிற மதங்களுடனான ஒப்பீடுகளையும்,  கிறிஸ்தவத்தில்  தமிழில் பைபிள் படிக்கிறார்களே போன்ற வாதங்களுக்குச் சூடான பதிலடிகளையும் தருகிறார்.

“அந்நவீனர் செய்யுஞ் சைவத் துரோகம் அச்சந் தருகிறது. அவர் விரைவில் திருந்துக. தமிழை விட்டாலுஞ் சைவஞ் சீவிக்கும். சைவத்தை விட்டால் தமிழுக்குச் சீவனமில்லை”  (பக். 173)  


அடுத்துள்ளது “நம: பார்வதீ பதயே” என்ற நூல்.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதமெங்கும் பிரசித்தமாக உள்ளது “நம: பார்வதீபதயே ஹரஹர மஹாதேவ” என்ற தெய்வீக கோஷம். ஒரு கோஷத்தை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, இதற்காக ஒரு நூல் எழுதவேண்டுமா என்ற எண்ணம் தோன்றக் கூடும். எனக்கும் தோன்றியது. ஆனால் எந்தச்சூழலில் பிள்ளையவர்கள் இதனை எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் தான் இதன் முக்கியத்துவம் புரியும்.

இந்த மகத்தான முழக்கத்தைத் தமிழ்நாட்டில் வழக்கொழியச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இதை அகற்றி மாற்றாக “தமிழ்” முழக்கங்களைப் பரப்ப வேண்டும் என்று 1930கள் முதலே பிரசாரங்கள் வலுப்பெற்று வந்த நிலையில், அதற்கு எதிர்வினையாக இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார்.

வந்தே மாதரம் என்ற தேசிய கோஷம் அடிமைத்தளையை அறுத்தெறிந்து சுதந்திர வேட்கை கொள்ள உத்வேகம் அளித்தது போல இந்த கோஷம் பிறவியின் மூலத்தளையை அறுத்தெறிந்து முக்திக்கு வழிகாட்டும் என்று அருமையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். பார்வதி கல்யாண புராண வரலாற்றையும், அன்றிலிருந்து தான் சகல ஜீவன்களும் உய்யும் வகையில் இந்த கோஷத்தை தேவர்கள் எழுப்பினார்கள் என்பதையும் விவரிக்கிறார். ஸ்ரீருத்ரம், உபநிஷதங்கள் ஆகியவற்றிலிருந்து சைவபரமான அழகிய விளக்கங்கள் தருகிறார். உமா, பார்வதீ ஆகிய நாமங்களின் மகிமையைக் கூறுகிறார். கேனோபநிஷதம் இறுதிப்பகுதியில் வரும் “உமாம் ஹைமவதீம்” என்ற பதத்தினால் ஈர்க்கப்பட்டே, தமிழில் பெரும்புலமை பெற்றிருந்த அவர் தமது மகளுக்கு “ஹைமவதீ” என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

திருவாசகத்தில் வரும் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வாசகம் இப்போது ஒரு தனிப்பட்ட கோஷமாக எல்லா இடங்களிலும் மிகவும் பிரலபமாக உள்ளது. இது பாரம்பரியமாக வரும் கோஷமாக இருக்கலாம் என்றே நானும் எண்ணியிருந்தேன். சொல்லப் போனால் எங்கள் வீட்டிலும் பூஜை, பஜனைகளில் நம: பார்வதீபதயே என்ற  கோஷத்திற்குப் பிறகு அந்த கோஷத்தையும் கூறுவது வழக்கம்.  ஆனால் அந்த கோஷம் சம்ஸ்கிருத வெறுப்பினால்,  சைவ சமய மரபைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் தனித்தமிழ் கோஷ்டியாரால் வலிந்து உருவாக்கப் பட்ட ஒன்று இந்த நூலின் மூலம் அறிந்து கொண்டேன்.  

“(தென்னாடுடைய என்ற) அம்முழக்கம் புதியது. சைவ சம்பிரதாயத்துக்கு மாறானது. மேலே சொன்ன வெறுப்பையும் வெறியையும் அடிப்படையாகக் கொண்டது. சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது”  (பக். 207).

தவறான விஷயங்களை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தாவிட்டால்  காலப்போக்கில் பிராபல்யத்தின் மூலமாகவே அவை நிலைபெற்று விடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

“தமிழர் கண்டார் எனப்படுஞ் சிவனுக்கு, ஒரு தமிழ் மனைவி அகப்படாமற் போனதேன்? அவன் ‘மலைக்கு மருமகன்’ ஆனான். ‘மலையாள் மணவாளா’ என்றதுங் காண்க. அம்மலையாவது இமயம். அது தமிழகத்துக்குப் பலநூறு மைல்களுக்கு அப்பாலுள்ளது. மலையாள் பார்வதி… ஆகவே சிவன் தென்னாட்டுக் கடவுளென்பது அபத்தப் பிரசங்கம்.. சைவசமய தெய்வமான சிவபெருமானுக்கு அநாதியான இருப்பிடம் கயிலை மலையே என்பதறிக. அதுவே சிவலோகம்” (பக். 208)


“நாடும் நவீனரும்” இத்தொகுப்பின் இறுதிப்பகுதியாகவும் செம்பாதியாகவும் உள்ளது. 1960ல் வெளிவந்த இந்த நூல் 125 தலைப்புகளின் கீழ்  கேள்வி-பதில், விவாதம், கண்டனம், விமர்சனம் என்ற பாணியில் அமைந்துள்ளது. “நவீனர்” என்று ஆசிரியரால் குறிக்கப் படும் சைவர்களை எதிர்த்தரப்பாக்கி விஷயங்கள் அலசப்படுகின்றன. இவையனைத்தும் அக்காலகட்டத்தில் பத்திரிகைகளில் பிரபலங்களும் இன்னபிறரும் கூறிய கருத்துக்களின் மீது முன்வைக்கப் பட்ட எதிர்வினைகளாக அமைந்துள்ளன. எனவே, 20-ம் நூற்றாண்டில்   சைவ சமயத்திற்கு உள்ளாக திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் உருவாக்கிய தாக்கத்தால் ஏற்பட்ட  கலகத்தையும்  அது சார்ந்த முக்கிய சர்ச்சைகளையும் ஒரு தொடர் விவாதமாக குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இந்த நூல் அளிக்கிறது எனலாம்.  “நவீனர்க”ளின் பிரதிநிதிகளாக குன்றக்குடி அடிகளார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், ஈவே.ரா, மறைமலை அடிகளார், காங்கிரஸ் காரர்கள் என்று பலதரப்பட்டோர் வருகின்றனர்.

“சம்ஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேன்டும் என்றால் அத்தகைய சிவபெருமானை மூட்டைகட்டி அனுப்புவோம்” என்று குன்றக்குடி அடிகளார் கூறியதற்கான உக்கிரமான கண்டனம் (பக். 263-268) மிகச்சிறப்பாக உள்ளது. ஒரு சைவஆதீனகர்த்தரையே தமது தெய்வத்தைக் குறித்து இப்படிப் பேசவைக்குமளவு மேற்கூறிய இந்து விரோத இயக்கங்களின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை இதனை வாசிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் உணரவேண்டும். திராவிட இயக்கத்தினர் பரப்பிய “ஆரியப் படையெடுப்பு” கட்டுக்கதைகளை தமக்கே உரிய பாணியில் சைவ சாஸ்திரங்களின் அடிப்படையில் பிள்ளையவர்கள் மறுக்கிறார் (பக். 299).  “ஆரியப்படை” என்று சங்க இலக்கியங்களில் காணும் சொல்லுக்கு அவர் அளிக்கும் விளக்கம் அருமையானது.

“தமிழ் மன்னர் ஆரியப்படையை வென்றாரெனச் சங்க இலக்கியங்களில் அங்கங்கே வரும். அவ்வாரியப் படையாவது யாது? அதிலுள்ள ஆரியரென்பது தமிழ்ச்சொல். தீயவரென்பது அதற்கருத்தம். ஆர்ய: என்பது சம்ஸ்கிருதம், நல்லவரென்பது அதற்குப் பொருள். தீயவரென்ற பொருளும் அதற்குண்டென அம்மொழி கூறவில்லை. ஆனால் தமிழ் நிகண்டு இவ்விரு சொல்லையும் ஒன்றாக்கி அவ்விரண்டு பொருளையும் கூறிவிட்டது… “  (பக். 300).

தனித்தமிழ் இயக்கத்தைக் கண்டித்து சம்ஸ்கிருதத்தை விரோதிக்கும் அவ்வியக்கத்தவர்கள் கொண்டுள்ள ஆங்கில மோகத்தையும் ஆங்கில ஆட்சியைப் போற்றும் அவர்களது அடிமைத்தனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்  (பக். 301-305).  

“நாத்திகம் முதல் சைவசித்தாந்தம் வரையுள்ள சர்வ சமயங்களுக்கும் ஆகரமாயிருப்பது சம்ஸ்கிருதமொன்றே. தொல்காப்பியர் முதலிய முற்காலப் புலவரும் சற்றுப்பின்வந்த புலவரும் அம்மொழியில் விற்பன்னராகி அதன் வாயிலாய்ச் சைவ சமய ஞானமும் ஆசார அனுட்டானங்களும் உடையவராய்த் திகழ்ந்தனர்.. அவரை மதித்து அவர் வழியிற் சென்றவரே, தமிழ் மாத்திரங் கற்றவரும் சாமானியரும். அதனால் அவரிடமும் அச்சமய ஆசார அனுட்டானங்கள் உளவாயின”.  (பக். 301).

“தனித்தமிழ் விருப்பம் தமிழுக்கு ஆக்கமே அளியாதென்பது திண்ணம். தமிழ்ப்பெருநூல்களைக் கொன்றொழிப்பதற்கே அவ்விருப்பம் புறப்பட்டிருக்கிறது. அதனால் பெரிதும் பாதிக்கப்படுவன சைவத்தமிழ் நூல்களே. சைவ சமூகம் அதனை உணருமா?” (பக். 305).   

இராமலிங்கர் (வள்ளலார்) கொள்கைகளின் மீதான பாரம்பரிய சைவத் தரப்பின் காத்திரமான விமர்சனம் 11 தலைப்புகளில் இந்த நூலில் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது (பக். 332 – 345).  “இராமலிங்கர் திருவருட்பா சாத்திரக் குப்பை தானே”  என்ற தர்க்கபூர்வமான பதிலடியாகட்டும், “இராமலிங்கர் தாயுமானாருக்குக் கூறிய ஜோஸ்யம்” என்ற நையாண்டியாகட்டும்,  பிள்ளையவர்களின் கூர்மையான வாதத் திறமும், அவரது பன்முக சமயப் புலமையும்  அற்புதமாக இப்பகுதியில் வெளிப்பட்டிருக்கின்றன.

“சமய வரம்பு” என்ற அடிப்படையான கருத்தாக்கத்தை  திராவிட இயக்க வெறுப்புணர்வுப் பிரசாரத்தால் மதிமயங்கி திசைமாறி குழப்பத்தில் ஆழ்ந்துபோன சைவர்களுக்கு எடுத்துரைக்க  பிள்ளையவர்கள் படாதபாடு பட்டிருக்கிறார். “மொழிக்கும் ஆன்மவளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்” “கடவுளுக்கு சகல பாஷைகளும் தெரியுமா”  “பல மொழிகளில் அர்ச்சனை செய்வது சாத்தியமா”  “மதம் மக்களை மதிக்க வேண்டுமா? மக்கள் மதத்தை மதிக்க வேண்டுமா?”  “சைவமும் வளரும் தமிழும் பறிபோகாது” “திராவிடக் கழகமும் அருள்நெறித் திருக்கூட்டமும்” ஆகிய தலைப்புகளில் உள்ள விஷயங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  இத்தகைய சர்ச்சைகள் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகின்றன. “சமய வரம்பு” என்பதன் முக்கியத்துவம் துரதிர்ஷ்டவசமாக இன்றும் தமிழ்நாட்டு சைவ சமயத்தினரிடையில்  உணரப்படவில்லை என்பது சோகம்.


ஒட்டுமொத்தமாக சைவ உலகிற்குப் பிள்ளையவர்களின் மகத்தான பங்களிப்பு  மிகச்சிறப்பானது என்பதில் ஐயமில்லை. மற்றபடி, அவரது அணுகுமுறை மற்றும் அவரது சில கருத்துக்கள் மீதான விமர்சனங்களையும் முழுமை கருதி இங்கு பதிவு செய்கிறேன்.

பிள்ளையவர்களின் உரைகளும் எழுத்துக்களும் பெரிதும் வெகுஜன அளவிலேயே நிகழ்ந்தன என்பதால், தடாலடியான பொதுப்படுத்தல்களும்,  நுட்பங்கள் மீது கவனம் கொள்ளாமையும் அங்கங்கு காணக்கிடைக்கின்றன. நூலின் உள் அட்டையிலேயே “அறிவிப்பு 1” என்ற தலைப்பில் இது பற்றிய எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது என்றாலும்,  இவற்றை இன்று வாசிக்கும் வாசகனுக்கு முகச்சுளிப்பையும்  கசப்புணர்வுகளையும் இது கட்டாயம் ஏற்படுத்தும்.  சம்ஸ்கிருதம், சைவ வரம்பு குறித்த முடிபான விஷயத்தில் உடன்பாடு இருந்தாலும், இத்திறக்கில்  எஸ்.வையாபுரிப்புள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றவர்களின்  அணுகுமுறைக்கும்  ஈசுரமூர்த்திப் பிள்ளையின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடுகளைக் காண முடியும்.  பிள்ளையவர்கள் பெரும்புலவர் என்றாலும், அவரது நோக்கும் அணுகுமுறையும் முற்றிலும் மரபு சார்ந்தது, ஆய்வு நெறி சார்ந்ததல்ல என்பதைக் கருத்தில் கொண்டு அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும்.

ஆன்மீகத் தளத்தில் சமயம் என்பது சாதி வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்க வேண்டும் என்று பிள்ளையவர்கள் கூறினாலும், ஆலயப் பிரவேசம் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன என்பது புலப்படவில்லை. “ஆதிசைவர் என்றொரு சாதியார் உளர். அவரும் சாதியாற் பிராமணரே. அவருக்குச் சமயம் சைவமே” (பக். 112) என்று குறிப்பதிலிருந்து, ஆதிசைவர்களின் வர்ணம் பற்றிய குழப்பம் அவருக்கு இல்லை என்பது தெரிகிறது. “சாதி குலம் பிறப்பு மதம் அவசியமா” (பக். 328) என்ற பகுதியிலிருந்து அவர்  சாதி விஷயத்தில் முற்றிலும் சம்பிரதாயமான, ஆசாரவாத மன நிலையே கொண்டிருந்தார் என்பது புலப்படுகிறது.

இந்து, இந்துமதம் ஆகிய சொற்களை முற்றிலும் எதிர்மறையாகவும் வெறுப்புடனும் முன்முடிவுடன் பிள்ளை கருதுகிறார் (பக். 364-373). “இந்து என்ற பெயர் இழிந்த பொருளுடையது”  (பக். 216-219) என்பதற்கு “பங்கஜவல்லி கதை” போன்றவற்றில் இருந்தெல்லாம் மேற்கோள்களைத் தரும் பிள்ளையவர்கள், இந்து என்ற பெயர் வேதநெறி சார்ந்த பாரத நாட்டினர் அனைவரையும் குறிப்பதற்கு பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது என்பதற்கான சான்றுகள் சுதேசிய சம்ஸ்கிருத அறிஞர்களும்,  மதன்மோகன் மாளவியா, வீர சாவர்க்கர் போன்ற தேசியவாதிகளும் எழுதிய நூல்களில் தரப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்கவே இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. “ஹிந்து என்னும் சொல்” (2011) என்ற எனது கட்டுரையில் இச்சான்றுகளில் சிலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

“நவீனர்க”ளைக் கடுமையாக சாடும் பிள்ளையவர்கள், அவர்களை உருவாக்கிய திராவிட இயக்கத்தின் கிறிஸ்தவ பின்னணி குறித்து பெரிதாக் கண்டுகொள்ளவில்லை. அவர் மீண்டும் மீண்டும் கூறும் “வேதாகம” என்ற சொல்லே இப்போது “கிறிஸ்தவச் சொல்” போல ஆகிவிட்டது. ஆயினும், ஜி.யு.போப் குறித்த ஓர் விமர்சனம் (பக். 170) தவிர்த்து, கிறிஸ்தவ மிஷனரிகளும் அமைப்புகளும் தமிழ்நாட்டு அரசியலில் செலுத்திவரும் ஆதிக்கம் குறித்து அவர் கவனப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.  

பார்ப்பன வெறுப்பின் காரணமாக சம்ஸ்கிருதத்தை சைவர் ஒதுக்குவது தவறு என்று சரியாகவே கூறும் பிள்ளையவர்கள், தாமே சிற்சில இடங்களில் பார்ப்பனர் மீது குற்றங்களையும் மோசமான பொதுப்படுத்தல்களையும் சுமத்துகிறார்.  “சம்ஸ்கிருதம் பார்ப்பன மொழி; அதைக் கற்றல் கூடாது என்பது பார்ப்பனர் கொள்கை” (பக். 96) என்பது அபாண்டம். வேதாத்யயனம் தவிர்த்த பொதுவான சம்ஸ்கிருத, சாஸ்திரக் கல்வியை அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் தமிழ் பிராமணர்கள் கற்றுக்கொடுத்து வந்துள்ளனர் என்பதே உண்மை. 1960களின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சம்ஸ்கிருதமும் சேர்த்து ஒழிக்கப்பட்டதற்கு முன்புவரை, அரசுப்பள்ளிகளின் சம்ஸ்கிருத ஆசிரியர்களாகவும் பெருமளவில் பிராமணர்களே இருந்துள்ளனர். மேலும், உ.வே.சாமிநாதையர்,. மகாகவி பாரதியார்,  இரா.இராகவையங்கார் போன்றோர் முதல் தமிழ் நவீன இலக்கியம், கதை, கட்டுரை, பத்திரிகை, சினிமா என பலவற்றிலும் ஏராளமான தமிழ்ப் பிராமணர்கள் தமிழில் பேசியும் எழுதியும் புகழ்பெற்ற காலத்தில் வாழ்ந்த பிள்ளையவர்கள் “தமிழ்ப்பார்ப்பனர் தமிழை தம் சொந்தமொழி என்று கருதுவதில்லை.. தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து அம்மொழியைத் தமக்கயலாக் கொள்வது நன்றி கோறலேயாம்..” (பக். 111)  என்று கூசாமல் எழுதுகிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

சைவசமயம் தொடர்பான விஷயங்களில் முற்றிலும் மரபார்ந்த சிந்தனை கொண்ட பிள்ளையவர்கள், வேதம் அனைவருக்கும் பொதுவா என்பதில் புரட்சிகரமான கருத்து கொண்டிருந்தார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. “ஆகலின், ஆதிசைவ சீலர் தமிழ்ச் சைவருக்கும் வேதாப்பியாசத்தின் மூலம் வேதப்பயனை உணர்த்துக” (பக். 113-114) என்கிறார்.  இக்கருத்து  வைதிக சைவத்தினுடையது அல்ல.  மாறாக ஆரிய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகிய நவீன இந்து குருமார்களின் கருத்து என்பதைக் கவனிக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் மீது பிள்ளையவர்கள் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் என்பது சுவாமிஜியின் மேற்கோள்களை அவர் சில இடங்களில் தருவதிலிருந்து புலனாகிறது. அவரது இக்கருத்தினை இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஆதிசைவ சிவாச்சாரியார்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டும் சுமார்த்த பிராமணர்களில் சிலர் தான் “வேதத்தின் சத்தியார்த்தம் உலகெங்கும் விளங்குவது திண்ணம்” என்ற அவரது கூற்றை மெய்ப்பித்திருக்கின்றனர். மாபெரும் தியாகசீலரான ம.ரா.ஜம்புநாத கனபாடிகள் நான்கு வேத சம்ஹிதைகளையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  கடலங்குடி நடேச சாஸ்திரிகள், சூரியநாராயண சாஸ்திரிகள் போன்றோர் தான் உபநிஷதங்களையும்,  சங்கரர், ஸ்ரீகண்டர் ஆகியோரவது பிரம்ம ஸூத்ர பாஷ்யங்களையும், சைவ புராணங்களையும் தமிழாக்கம் செய்திருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.


ஒரு சைவராகவும், தமிழ் ஊடகவியலாளராகவும் சௌந்திர.சொக்கலிங்கம் மிகச்சிறப்பானதொரு பணியைச் செய்திருக்கிறார். தனது ஆசிரிய மரபிற்குச் செய்யும் நன்றிக்கடனாகவும்,  இன்றைய சைவசமய அபிமானிகளுக்கு ஒரு சிறப்பான கொடையாகவும்  இந்த நூலை ஆக்கி அளித்திருக்கிறார்.  இந்த நூலிற்கு உரிமையுடைவர்களான தமிழ்நாட்டுச் சைவர்கள் அனைவரும் இதனைக் கற்று, இதிலுள்ள கருத்துக்களின் மீதான பரப்புரைகளும் விவாதங்களும் நிகழ்த்துவதே  இந்த நூல் வெளிவந்ததற்கான உண்மையான பயனாக இருக்கும்.

சைவ சமயத்தில் மொழிப்போர்
தொகுப்பும் பதிப்பும்: சௌந்திர. சொக்கலிங்கம்
வெளியீடு: சைவசித்தாந்த சபை, சங்கரன்கோயில் & சிவநெறிக்கழகம், திருநெல்வேலி நகரம்
பதிப்பு: செம்பொருள் பதிப்பகம்
நூலை இணையம் மூலம் இங்கு வாங்கலாம்.

இந்த நூலின் முதல் பதிப்பு பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பதிப்பு விரைவில் வெளிவருகிறது. அதுகுறித்த விவரங்கள் கீழே.


3 Replies to “சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்”

 1. பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு என்பது வரவேற்க வேண்டியது, இதை நாம் முன்பே வலியுறுத்தினோம்

  தமிழகம் 1970க்கு பின் தேசியவாதிகளுக்கு அச்சுறுத்தலான மாநிலமாகிவிட்டது, இந்திரா தாக்கபட்டது, ராஜிவ் கொல்லபட்டது, அத்வாணி தப்பியது, மூப்பனார் தாக்கபட்டது, டி.என் ஷேஷன் உயிர்தப்பியது என எல்லா தேசியவாதிகளும் பெரும் மிரட்டலை சந்தித்த இடம் இது

  இங்கு தேசியம் பேசும்பொழுது பெரும் மிரட்டல் வரும், உயிர் ஆபத்து வரும் அது அண்ணாமலைக்கும் வந்தது, பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு முதல் சமூக ஊடக மிரட்டல் வரை அவருக்கு வந்தது

  அதனால் பாதுகாப்பு வலுபடுத்தபட்டுள்ளது, இது நல்ல விஷயம், பெரும் பாதுகாப்போடு அவரின் தேசிய பணி தொடரட்டும்

 2. தமிழகத்தில் எப்பொழுதும் சில திறமையானவர்கள் உருவாகி வருவார்கள் அதிலும் தெற்கில் இருந்து பலர் வருவார்கள், அப்படி வருபவர்களை மடைமாற்றி அந்த பெரும் சிங்கங்களை அடிமாடாக்கி, ஓடவிரட்டி கடைசியில் கிட்டதட்ட பைத்தியகார நிலமைக்கு கொண்டுவந்துவிடும் திராவிட கட்சிகள்

  அவர்கள் நிச்சயம் ஓரளவு அறிவாளிகளாக தொடக்கத்தில் அடையாளம் காணபடுவார்கள் ஆனால் திராவிட சித்தாந்தம் என உள்ளே புகுந்தபின் அறிவு கொஞ்சம் மங்கும், பின் அந்த சிங்கங்கள் மெல்ல வண்டி இழுக்கும் மாடுகளாகும் காலவோட்டத்தில் அந்த மாடுகளும் சுருங்கி குரைக்கும் நாயாகும்

  திராவிட கட்சிகள் செய்யும் மிகபெரிய கொடுமை இது

  பொதுவாக எழுத்தாளனுக்கும் பேச்சாளனுக்கும் சம்பாதிக்க தெரியாது அல்லது வராது, இவர்களின் திறமையினை தனக்கு தேவைபடும் அளவு உறிஞ்சியபின் அவர்கள் வாழ வழியில்லை என்றபின் ஒரு மாதிரி அடக்கி ஆள்வார்கள்

  அந்த சிங்கங்களும் நாயாக மாறி குரைக்க தொடங்கியிருக்கும்

  உண்மையில் அவை திறமை மிக்கவை, தேசிய கட்சியில் சேர்ந்திருந்தால் மிகபெரிய இடத்தை பெற்றிருக்கும் ஆனால் திராவிட கட்சிகள் அவர்களை அடிமாடாக்கி வைத்து நாயுமாக்கி பின் தவளையுமாக்கி வைத்திருக்கும்

  இவர்கள் முதலில் வீழ்வது தமிழ் எனும் போலி உணர்வு பின் அப்பட்டமான பிராமண வெறுப்பு இன்னும் பலவகை வெறுப்பில் வீழ்ந்து தலமையினை குளிரிவக்க பேசி, காசுக்கு கையேந்தி திசைமாறிவிடுவார்கள்

  அதை தவிர அவர்களுக்கு வேறுவழியுமில்லை, ஒரு திராவிட முத்திரை அல்லது தமிழ் முத்திரை விழுந்தபின் அவர்களால் மேலெழவும் தெரியாது, காலை பிடித்து வாழ்வதை தவிர வழியும் தெரியாது

  இந்த அநீதிக்கு மிகபெரிய உதாரணம் வலம்புரி ஜாண்

  நெல்லமாவட்ட சிறிய மீன்பிடி கிராமத்தில் பிறந்த அந்த ஜாண் 24 வயதிலே பெரும் திறமையும் ஆங்கில அறிவும் கொண்டிருந்தார், அந்நேரமே ஒரு தேசிய கட்சி அவரை அடையாளம் கண்டிருக்குமாயின் இன்று சசிதரூர் போல ஒரு அடையாளம் அகில இந்திய அளவில் அவருக்கு இருந்திருக்கும்

  ஆனால் திராவிட முத்திரை கருணாநிதி ராமசந்திரன் என அலைபாய வைத்து, அந்த பெரும் அறிவாளியினை தன் பத்திரிகைக்கு காவலாய் வைத்து எம்ஜி ராம்சந்திரன் கையாண்டார்

  ராமசந்திரனுக்கு ஒரு நல்ல குணம் உண்டு, உரிய திறமைக்கான அங்கீகாரம் கொடுப்பார் அவ்வகையில் அவரை மேல்சபை எம்பியாக்கினார்

  ஜாணின் விதி சசிகலாவிடம் ஜெயா வீழ்ந்த காலங்களில் தொடங்கி அது ஜெயா ஜாண் மோதலாக தொடங்கி பின் ஜாணுக்கு அடைக்கலமின்றி ஆறுதலுமின்றி அவர் திசைமாறி அவர்மேல் வழக்கெல்லாம் போட்டு அவரும் மிகுந்த சிரமத்தில் பரிதாபமாக செத்தார்

  எவ்வளவு பெரும் வார்த்தை சித்தன்? எவ்வளவு பெரும் உலக விஷயங்களை அழகு ஆங்கிலத்தில் கடப்பவன்? அந்த மாபெரும் அறிவாளி திராவிட கும்பலால் வீழ்த்தபட்டான்

  இன்னும் யார் யாரையோ காட்டமுடியும்

  நெல்லை கண்ணன் போன்றோர் ஓரளவு தமிழ் அறிஞர் ஆனால் என்னாயிற்று அப்பட்டமான பிராமண வெறுப்பும் அதுசந்திக்குமிடமான திராவிட ஆதரவும் இன்று அவரை “பிரபல தீவிரவாதி” என்ற அளவுக்கு கொண்டு சென்றாயிற்று, நெல்லை மாவட்டத்தில் போலிஸ் என் கவுண்டர் என்றால் பலர் நெல்லை கண்ணனை தேடும் அளவு நிலமை பரிதாபமாயிற்று

  இன்னும் பலரை காட்டலாம், வாழ்வுக்கும் வசதிக்கும் திமுகவிடம் அடைக்கலமாகி பதவியும் பெற்று வாழ்கின்றனர்

  பேசுவதெல்லாம் ஆன்மீகமும் சிவதத்துவமும் ஆனால் சிவன் கோவில் இடிபட்டால் கனத்த அமைதி, அவ்வகையில் எல்லோரும் சாக்கிய நாயனாராக தங்களையே நினைத்து கொள்கின்றார்கள்

  இவர்களுக்கு சம்பாதிக்க தெரியாது மாறாக எழுத பேசமட்டும் தெரியும், இதை கொண்டு தேர்தலில் எப்படி வாக்குக்கு 10 ஆயிரம் கொடுப்பது எப்படி பணமழை பொழிவது?

  இதனால் இவர்களை விட்டுவிட்டு தேர்தல் நேரம் தொகுதியில் யார் மணல், கல் ,இன்னும் டாஸ்மாக் சரக்கில் கோடி குவித்து வைத்திருப்பானோ அவனுக்கு சீட் கொடுத்துவிட்டு இவர்களை குரைக்க மட்டும் வைத்து கொள்ளும் திராவிட கட்சிகள்

  பணம் செலவழித்து வந்தவன் சம்பாதிப்பான் அவனால் பலகட்சி தாண்டியும் பதவி வாழ்வு பெறமுடியும் ஆனால் இந்த பிராய்லர் கோழிகள் நிலை பரிதாபம்

  இந்த பரிதாபத்துகுரியவர் வரிசையில்தான் நாஞ்சில் சம்பத்தும் வருகின்றார், அவர் கிருபானந்தவாரியாரால் அடையாளம் காட்டபட்ட சிறுவன், பின் தமிழும் இலக்கியமும் அழகாய் வந்தன‌

  ஆனால் பன்றியிடம் ஊறும் பால் போல எல்லாம் வீணாயிற்று

  அவர் பெரும் அடையாளமாக வந்திருக்கலாம் காலம் இருந்தது, ஆனால் வைகோவினை தலைவன் என்றபின் என்னாகும்?

  திராவிடம் ஒருவனை எப்படியெல்லாம் சரித்தது என்பதற்கு அவரும் ஒரு உதாரணம்

  நாஞ்சில்நாட்டின் பிரபலமான தான் இன்னும் காசுக்கு குரைப்பதையும் தன் அளவு பேசதெரியாத தமிழிசை கவர்னர் அளவுக்கு சென்றதும் அவரால் ஏற்றுகொள்ள முடியாத விஷயம் அதனால் உளறத்தான் செய்வார்

  அதை அவர் உணரவேண்டும் தன் திராவிட கொள்கை தன்னை சரித்ததையும் தேசிய கொள்கை தமிழிசை அக்காவினை உயர்த்தியதையும் அவர் எண்ணிபார்க்க வேண்டும்

  திராவிடம் என உழைத்து அவர் இன்று குரைக்கும் நிலைக்கு வந்திருப்பதையும் தேசியத்துகாக உழைத்த அக்கா பெரும் இடம் பெற்றிருப்பதையும் அவர் உணரவேண்டும் அல்லது யாரும் சொன்னால் ஏற்க வேண்டும்

  அவர் தமிழிசை அக்காவினை விமர்சித்தற்காக வழக்கு என்பதெல்லாம் அபத்தம்

  அவருக்கு தேவை இருவிஷயங்கள், முதலில் மனநிலையினை நல்ல வல்லுனர்கள் கொண்டு ஆராய்ந்து உரிய சிகிச்சை அளிக்கலாம்

  இல்லை பாஜகவினர் நன்கொடை திரட்டி அவருக்கு ஒரு இன்னொவா கார் வாங்கி கொடுக்கலாம் அது போதும்,, அதை மட்டும் கொடுத்து பார்த்தால் மிக உருக்கமான தேசபக்தனை ஒரு நொடியில் உருவாக்கிவிடலாம்

  வழக்குக்கு செலவழிப்பதை விட காருக்கு செலவழித்தால் மாபெரும் வெற்றி நிச்சயம், தேசியத்தையும் நொடியில் வளர்த்துவிடலாம், திராவிடவாதிகளை அப்படித்தான் திருத்தமுடியும்

 3. அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார்.

  கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை இந்து கல்லூரியில் பேராசிரியரானார்.

  அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வி நிலையங்கள் அமைத்து கல்வியோடு மதமாற்றமும் செய்தபொழுது விழித்துகொண்ட இந்துக்களின் தனவான்களும் ஆதீனங்களும் இந்து கல்லூரிகளை அமைத்தனர், யாழ்பாணத்தில் அது தொடங்கி தமிழகத்திலும் பரவிற்று

  அப்படி அமைந்தவைதான் நெல்லை, நாகர்கோவில் பகுதியிலுள்ள இந்து கல்லூரிகள்

  இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. இந்து ஆதீனங்களால் நடத்தபட்ட கல்லூரி அடு.

  சில காலங்களில் அவர் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார்

  பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல ஆராய்ச்சிகளை செய்தார்
  அவருடைய தமிழ் அவரை உந்தி தள்ளியது, மனோன்மணியம் எனும் ஒப்பற்ற நாடக நூலை எழுதினார்,
  இன்றுவரை மிகசிறந்த நாடக நூல் அது

  அந்த நூலில் வரும் பாடல்தான், நீராருங் கடலுடுத்த நிலமடந்தை எனும் அற்புதமான பாடல்
  அந்த பாடல்தான் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்து என தமிழக அரசால் அங்கீகரிக்கபட்டது

  இதில் திராவிட கருணாநிதியின் அரசு ஒரு தந்திரம் செய்தது

  ஆம் அதுவரை கடவுள் வாழ்த்து என்பதுதான் இந்துக்கள் மரபாய் இருந்தது, தமிழர்கள் இந்துக்கள் என்பதால் அவர்கள் பாடலிலும் கடவுள் வாழ்த்துத்தான் பிரதானம்

  விநாயகர், சரஸ்வதி என ஞானத்துக்கான தெய்வங்களை வாழ்த்திவிட்டுத்தான் பாடினார்கள், வள்ளுவனே கடவுள் வாழ்த்துத்தான் பாடினான்

  தமிழர் வரலாற்றில் மொழிவாழ்த்த்து என எதுவுமில்லை, இன்றளவும் வேறு மாநிலத்தில் மொழிவாழ்த்தெல்லாம் இல்லை, கடவுள் வாழ்த்துத்தான் உண்டு

  இவர்கள் கடவுள் வாழ்த்தை மாற்றி மொழிவாழ்த்தாய் ஆக்க்கினார்கள், இந்துமண்ணின் கடவுள் வாழ்த்து எனும் மரபே மறக்கடிக்கபட்டது’

  அது பின்னாளில் மொழிவாழ்த்தும் மாறி “கல்லகுடி கொண்ட கருணாநிதி” எனும் அளவுக்கு மாறியது விபரீதம்
  திராவிட அரசியலின் திசைமாறிய பயணம் இது

  சுந்தரனார் நல்ல தமிழர், ஆனால் வெள்ளையன் ஆட்சியில் திருநெல்வேலியினை “டின்னவேலி” என்றபொழுதும், திருவனந்தபுரம் எனும் அழகிய தமிழ்பெயரை டிரிவண்ட்ரம்” என்றதும் தார்சட்டி தூக்கவில்லை, தண்டவாளத்தில் தலைவத்து படுக்கவில்லை

  மாறாக தமிழுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தார்

  பின்னாளில் அவர் பணி தொடங்கிய நெல்லையிலே பல்கலைகழகம் வந்தபொழுது கொஞ்சமும் தயங்காமல் அவர் பெயரினை சூட்டினார்கள் திராவிட அரசியலார்கள், நெல்லை பல்கலைகழகத்திற்குத்தான் பாரதியார் பெயர் சூட்டபட்டிருக்க வேண்டும்

  ஆனால் அது கோவை பக்கம் அமைந்துவிட்டதால், சுந்தரனார் அவரின் மனோன்மணியம் எனும் அடையாளத்துடன் நெல்லை பல்கலைகழகத்தில் அமர்ந்துவிட்டார்

  இதில் திராவிடம் இன்னொரு மகா நுணுக்கமான அரசியலும் செய்தது, ஆம் சாதி அரசியல்
  நெல்லை தூத்துகுடி பக்கம் பிள்ளைமார் சமூகத்தின் வாக்குகளை வாங்கும் ஆசை திமுகவுக்கு எக்காலமும் உண்டு

  ஆனால் வ.உ.சிதம்பரம் பிள்ளை தேசியவாதி, ராபி சேதுபிள்ளை ,வையாபுரி பிள்ளை போன்றவகர்களெல்லாம் இருந்தார்கள் அதிலும் சேதுபிள்ளை பெயரில்தான் அந்த கல்லூரி அமைக்கபட்டிருக்க வேண்டும்

  இன்னொரு பெரிய பிரபலம் நீலகண்ட சாஸ்த்ரியார், இவர் நெல்லைமாவட்டம் கல்லிடைகுறிச்சிக்காரர் மிகபெரிய அறிவாளி, சென்னை பல்கலைகழக பேராசிரியர், அவர்தான் தென்னக வரலாற்றையெல்லாம் மிக சிரமபட்டு தொகுத்தார்

  அவர் எழுதிய வரலாற்று குறிப்புகள்தான் பின்னாளில் கல்கி, சாண்டில்யன் என எல்லா புனைவு எழுத்தாளருக்கும் மைய கதையினை வழங்கிற்று

  இவர் பிராமணர் என்பதால் ஒதுக்கபட்டார், சேதுபிள்ளை போன்றவர்கள் தேசியவாத சிந்தனை கொண்டவர்கள் என்பதால் ஒதுக்கபட்டனர்

  இதனால் தமிழ்தாய் வாழ்த்து தந்தவர் என‌ சுந்தரம் பிள்ளையினை பிடித்து அமுக்கிவிட்டார்கள், பல்கலைகழகத்துக்கு அவர் பெயரை வைத்து நெல்லை பக்கம் திமுக வாக்கு வங்கியினை பிடித்து கொண்டார்கள்

  இது திமுகவின் சாதி ஒழிப்பு அரசியல் என நம்பிகொள்ளுங்கள்

  இந்த பாடலிலும் ஒரு தந்திரம் செய்தது திமுக, ஆம் சுந்தரனாரின் முழு பாடல் என்பது இப்படி வரும்

  “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!,..
  “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்”
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”

  ஆம் கடவுள் நம்பிக்கை கொண்ட அந்த சுந்தரம் பிள்ளை என்ன எழுதினார் என்றால் எல்லா உயிரையும் உலகையும் படைத்து படிளக்கும் பரம்பொருள் போல் உன்னில் உதித்த கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் பலவாக பிரிந்தாலும் சமஸ்கிருதம் போல் பாலி மொழி போல் வழக்கொழியாமல் நீ இளமையாக இருக்கின்றாய் என்பதாகும்

  அதாவது கடவுள் இருப்பதை ஒப்புகொண்டு அப்படியே கன்னடமும் மலையாளமும் தெலுங்கும் உனக்கு குறைந்தது அல்ல என சொல்லும் வரி

  இதை எல்லாம் மறைத்து முதல் 4 வரியினை மட்டும் எடுத்து போட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடினார் கருணாநிதி அவர்கள்?

  ஏன் அப்படி செய்தார் என்றால் அதுதான் திராவிட அரசியல்

  இன்று அந்த மனோன்மணியம் சுந்தரனாருக்கு பிறந்த நாள், தமிழ்தாய் வாழ்த்துக்காக நாடகம் எழுதாமல் நாடகத்தின் ஒரு பகுதியில் ஒரு கவிதை எழுதியவர், அது தமிழ்தாய் வாழ்த்தாகும் என அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார், கனவிலும் காணமுடியா விஷயங்களை, இல்லாத விஷயங்களை இருப்பதாக சொல்லி குழப்புவதுதான் திராவிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *