முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2022 நிகழ்வில் தலைவர் அண்ணாமலை நிகழ்த்திய அந்த அரைமணி நேர உரை. பலரை அது மூச்சடைக்க வைத்திருக்கும் என்பதற்கப்பால் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. கடந்த 10 வருடங்களில் இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து இவ்வளவு தீர்க்கமான, விசாலமான, ஆழமான அரசியல், வரலாற்றுப் புரிதல்களை கொண்டதாக, இந்திய தேசிய நலனையும் ஈழத்தமிழர் மீது உண்மையான, பாசாங்கற்ற பரிவையும் ஒருங்கே உள்ளடக்கியதாக இப்படி ஓரு நேர்மையான பேச்சு தமிழ் மண்ணில் பேசப்பட்டிருக்கிறதா?
பல தசாப்தாங்களாக இப்பிரசினைக்காக உழைத்துவரும் பழ.நெடுமாறன் அதை உணர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த உரையின் முடிவில் அண்ணாமலையைப் பற்றி நெடுமாறன் கூறியது வெறும் முகஸ்துதி அல்ல. 1980களில் திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் இருந்து இந்திரா காந்தி என்ற தேசியத் தலைவரையும் தமிழ்நாட்டின் மானத்தையும் காப்பாற்றிய ஒரு பெருமைக்குரிய செயலை செய்த அரசியல்வாதி அவர். ஆனால் அதன்பின்பு தனித்தமிழ் பிரிவினைவாதம், திராவிட இயக்க, இடதுசாரி சாய்வுகள், அதனால் விளைந்த இந்துவெறுப்பு (பகவத்கீதையை அவதூறு செய்து அவர் எழுதிய புத்தகம் கொடும் விஷம்) என்று பல மலினங்களின் ஊடாக பயணித்தவர். இப்போதாவது அமைதியின், புரிந்துணர்வின், இந்திய தேசியத்தின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டால் நலம்.
மே-17 நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்பு என்ற செய்தி வந்த உடனேயே ஒரு மூடிய சிந்தனைப் பரப்பிற்குள்ளாகவே யோசித்துப் பழக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுல் பாஜக, இந்துத்துவ ஆதரவு குழுக்களுக்குள் சந்தேகங்கள், கசமுசாக்கள் ஓட ஆரம்பித்து விட்டிருந்தன. ஆனால் அவரது சமீபத்திய இலங்கைப் பயணம் மற்றும் இன்னபிற விஷயங்களை இணைத்துப் பார்க்கையில் அவரது இந்தப் பங்கேற்புக்கு பாஜக தேசிய தலைமை மற்றும் நமது வெளியுறவுத்துறையின் முழு ஆசிகளும் உள்ளன என்பது பலருக்கும் (நான் உட்பட) தெளிவாகத் தெரிந்து விட்டது.
உலக அரசியல் களத்தையும், அதில் நரேந்திர மோதி என்ற தலைவரின் ஒரு சொல்லுக்கு உள்ள வீச்சையும், அவரது ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தேசம் உலகில் இன்று பெற்றுள்ள இடத்தையும் பற்றி பொய்களாலும் மூளைச்சலவைகளாலும் மொண்ணையாக்கப் பட்டுள்ள சராசரி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மண்டையில் அறைந்து சொல்வதற்கு இதைவிடச் சிறந்த மேடை அவருக்கு வேறு என்ன கிடைத்திருக்க முடியும்? அந்த வாய்ப்பை ஒரு அங்குலம் கூட நழுவவிடாமல் அந்த ஒட்டுமொத்த நிகழ்வையுமே தனதாக்கிக் கொண்டுவிட்டார் அண்ணாமலை.
நாளுக்கு நாள் தலைவரின் நடவடிக்கைககள் ஒவ்வொன்றும் “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்” என்று வள்ளுவர் கூறிய தலைமைப் பண்புகளுக்கு இலக்கணமாகி வருகின்றன.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் இந்தியா அளிக்கும் உதவிகள் எந்தவிதமான நிபந்தனைகளுடன் இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ள முக்கியமான கட்டுரை. தினமணியில் வந்த இந்த கட்டுரை இலங்கையின் ஈழநாடு 16-5-2022 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.