சாணக்கிய நீதி – 4

This entry is part 1 of 8 in the series சாணக்கிய நீதி

சென்ற பதிவில் நம்மைப்பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மையை எப்போது, எப்படி அறிந்துகொள்ளலாம் என்று சாணக்கியர் அறிவித்ததைப் பார்த்தோம்.  மேலே பார்ப்போமா?

யோ த்4ருவாணி பரித்யஜ்ய அத்4ருவம் பரிஷேயதே  |

த்ரு4வாணி தஸ்ய நஶ்யந்தி அத்4ருவம் நஷ்டமேவ ச  ||  13  ||

பதவுரை:  எவர் நிலையானவற்றை விட்டுவிட்டு நிலையற்றதை சுற்றித் திரிகிறாரோ, நிலையானவை அவரை விட்டுச் சென்றுவிடும்;  நிலையற்றவை தொலைந்தவையே  —  13

விளக்கம்:  சாணக்கியரின் இதே சொற்களையே, திருவள்ளுவரும்,

தேராங்கண் தெளிவும், தெளிந்தான்கண்

ஐயுறவும் தீரா இடும்பை தரும்

எனப் பகர்ந்திருக்கிறார்.

பெரிய வங்கிகள் நமது பணத்திற்கு நியாயமான, ஆனால் குறைவான வட்டி தருகின்றன.  அதுபோல, தங்க நகைகள், வீடுகள், நிலம் ஆகியவை நிலையான பொருள்கள்.  என்றும் அவை நமது செல்வத்தைப் பாதுகாக்கும்.  எனவே, நாம் ஈட்டும் பணத்தை வங்கியில் முதலிடுவதோ, அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவதோ முதலுக்கு மோசமில்லாது பாதுகாத்துத் தரும். 

அன்றி, சீட்டுப் பிடிக்கிறார்கள், அதிக வட்டி தருகிறார்கள், பொருளாதார நெருக்கடியில் ஏறி இறங்கும் ஸ்டாக்குகள், மற்ற எண்ணற்ற இடங்களில் முதலீடு செய்வதோ, மார்ஜின் என்று சொல்லப்படும் செயலியை வைத்து, அளவுக்கு மீறிக் கடன்வாங்கி முதலீடு செய்வதோ, மற்றும் சட்டத்துக்கு எதிரான பிரமிடு திட்டங்களில் ஈடுபடுவதோ, நஷ்டத்தையே விளைவிக்கின்றன என்பது கண்கூடு.  இதை நாம் பல ஊடகளில் அறிந்துகொண்டுதான் இருக்கிறோம். 

அதைத்தான் சாணக்கியரும் வலியுறுத்துகிறார்.

வரயேது குலஜாம் ப்ராஞ்ஞோ விரூபாமபி கன்யகாம்  |

ரூபவதீம் ந நீசஸ்ய விவாஹ:  ஸத்3ருஶே குலே  \\  14  ||

பதவுரை:  அறிவாளி அழகில்லாவிடிலும் நற்குடியிலும், தனக்குச் சமமான குடியிலும் உதித்த பெண்களையே நாடவேண்டும்;  அழகிருந்தாலும் இழிகுடிப் (பெண்களுடன்) திருமணம் கூடாது  —  14

விளக்கம்:  இப்பொழுது வாழ்க்கைத் துணையை எங்கு நாடிப் பெறவேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது.  ஒவ்வொருவரும் தனக்கு மிகவும் அழகான பெண்களே இல்லத்தரசியாக வரவேண்டும் என விரும்புகின்றனர்.  அழகிருந்தால் நல்ல குணம் கட்டாயம் இருக்கும் என்று எப்படி நம்புவது?  நற்குடியில் பிறந்தால், எப்படி இருந்தாலும், நல்லபடி குழந்தைகள் வளர்க்கப்படுவர்;  ஆகவே, அக அழகு மிகுந்தே இருக்கும்.

“திருமணத்திற்குப் பிறகு உங்களுடைய லக்கேஜ் வரக்கூடாது,” என்று வரப்போகும் கணவனின் பெற்றோரை நல்லபடி வளர்க்கப்பட்ட பெண்கள், வரப்போகும் கணவனுக்கு நிபந்தனை விதிக்கமாட்டார்கள்.  அவர்களைத் தமது பெற்றோர்போலத்தான் அன்புடனும், பரிவுடனும் நடத்துவர்.  அந்த அக அழகே அழகு, புற அழகில் அறிவாளி மயங்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார், கௌடில்யர்.

பாதரசம் பார்க்கப் பளபளப்பாக இருக்கும், பருகினால் நஞ்சு;  அதுபோலத்தான் தீக்குடியில் பிறந்து வளர்ந்த பெண்கள் இருப்பர் என்று அறியவேண்டும்.  அது அப்பெண்களின் தவறல்ல;  யாரும் தாம் பிறக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பது இயலாது.  ஆயினும்,

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு

என செந்நாப்போதார் வள்ளுவரும் வலியுறுத்தியிருப்பது சாணக்கியர் சொல்லை ஆமோதிப்பதுபோலத்தானே உள்ளது!

தமக்குச் சமமானவர் என்றால் என்ன என்று சிந்திப்போம்.  நமது செல்வச் செழிப்பு, கல்வி, வளரும் சூழ்நிலை, வரவு-செலவு செய்யும் விதம், நன்மை-தீமையைப் பற்றிய அறிவு, பணிவு, பெரியோருக்கு மதிப்பு, சட்ட-ஒழுங்கை அனுசரிப்பது இவை பொருத்தமாக, சமமாக உள்ளவர் என்றே புரிந்துகொள்ளுதல் அவசியம்.

‘சேற்றில்தான் செந்தாமரை வளர்கிறது.  அது அழகானது.  அது சேற்றில் விளைகிறது என்பதற்காகத் தள்ளிவிடுவது முறையா?’ என்ற கேள்வியைப் பலரும் முன்வைப்பர்.  இது எதற்காக என்றால், அழகானவர் எங்கு பிறந்து வளர்ந்தார் என்பது முக்கியமல்ல என்பதே அது.

ஆனால், அதுவல்ல உண்மைக் கருத்து.  ஏழையாக இருப்பினும், நல்ல வளர்ப்பு, குணம், அக அழகு பொருந்தியவரே, சேற்றில் மலர்ந்த செந்தாமரையாவர்.  புற அழகு இல்லாத சேறாக இருப்பினும், அக அழகு பொருந்திய செந்தாமரையாவர்.

பெண்களுக்கு மட்டும் இது பொருந்துமா, ஆண்களுக்கும் இது பொருந்தவேண்டாமா என்று கேட்டால், ஆமெனத் தலையசைக்கத்த் வேண்டும்.  பெண்ணைப் பெற்றவரும், தமது செல்விக்கு மேற்கூறிய அறிவுரைப்படியே வரன் தேடவேண்டும். பெண்களும், அப்படிப்பட்ட ஆணையே மணாளனாக ஏற்கவேன்டும் என்பதே பொருள்.

நகீ2நாம் ச நதீ3நாம் ச ஶ்ருங்கீ3ணாம் ஶ்ஸ்த்ரபாணிநாம்  |

விஶ்வாஸோ நைவ கர்த்தவ்ய: ஸ்த்ரீஷு ராஜகுலேஷு ச \\  15  ||

பதவுரை:  நகமுள்ளவையையும், ஆற்றையும், கொம்புள்ளவற்றையும், ஆயுதமேந்தியவரையும், பெண்டிரையும், அரசகுலத்தோரையும் நம்பி எச்செயலையும் செய்யற்க — 15

விளக்கம்:  எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடவேண்டும் என்றவர், எதை, யாரை நம்பி எச்செயலையும் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.  மனிதருடன், மிருகங்களையும், இயற்கையையும் அதில் சேர்த்துவிடுவது நமக்கு வியப்பாக இருக்கிறது.  அப்படி வரிசைப்படுத்தியவர், முறைப்படி வரிசைப் படுத்தியிருக்கிறாரா, அன்றி தொடர்பின்றி வரிசைப் படுத்தியுள்ளாரா என்ற ஐயமும் எழுகிறது.  அதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு ஏன் அப்படி எழுதியிருக்கிறார் என்று பார்ப்போமா?

நகமுள்ளவை என்று பொத்தாம் பொதுவாக எழுதியுள்ளாரே, ஆண்-பெண்-திருநங்கைகள் உள்பட அனைத்து மனிதருக்கும் நகம் இருக்கிறதே, அப்படியானால் அனைத்து மனிதரிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று சொல்கிறரா என்றால், அவரது செய்யுளை முழுவதும் படித்தால் அப்படியல்ல, நகம்படைத்த மனிதரில் எவர்மீது நம்பிக்கை வைத்துச் செயலாற்றக்கூடாது என்று சொல்கிறார் என்று விளங்கும்.  எனவே, அத்தகைய இழிகுணம் படைத்த – நகமுள்ள – மாந்தரை மட்டும் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டு, மற்றவரை கணக்கிலிருந்து விட்டுவிடுவோம். 

ஆகவே, நகமுள்ள மிருகங்கள மட்டும் குறிப்பிடுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.  வீட்டு மிருகங்களில் நாயும், பூனையும்தான் நகமுள்ளவை.  மற்றவை காட்டு விலங்குகளே.  நிச்சயமாகக் காட்டுமிருகங்களை நாம் நம்பமாட்ட்டோம்.  ஏனெனில், அவை நம்மை அடித்து விழுங்கிவிடும் என்று அறிவோம். 

வாலைக் குழைத்துவரும் நாய்தான்,

அது மனிதனுக்குத் தோழனடி பாப்பா,

என்றுதானே அமரகவி பாரதியார் பாடியிருக்கிறார், அந்த நாயை நாம் நம்பக்கூடாதா என்று கேட்கிறீர்களா?  உங்களில் எத்தனைபேருக்கு நாயைக் கண்டால் பயமில்லை, சொல்லுங்கள்!  வெறிபிடித்தால், தன்னை வளர்த்தவரையே கடிக்கும் பிராணியல்லவா, அது!  பொதுவாக நாய்கள் தன்னை வளர்ப்பவரிடம்தான் நன்றியுடன் இருக்கும், மற்றவரிடம் அல்ல.

பூனையோ, அப்படியல்ல; அதற்கு எவரிடமும் நன்றி கிடையாது.  அது விரும்பாதபோது அதை அணுகினாலோ, அதைத் தூக்கினாலோ, நகத்தால் பிராண்டிவிடும்.  பொதுவாக அதை அன்புடன் தூக்கி விளையாட விழையும் குழந்தைகள்தான் அதன் பிராண்டுதலுக்கு உட்படுவர்.

நம் வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாதது நீர்; அந்த அமுதத்தை நமக்கு அளிப்பது ஆறு.  அந்த ஆற்றை நம்பக்கூடாதா? 

முழங்கால் அளவுகூட நீர் ஓடவில்லை, வெறும் மணல்தான் ஓடுகிறது என்று நம்பி ஆற்றில் இறங்கி நடக்கிறோம்.  எங்கோ மழை பெய்கிறது.  வெள்ளமாகப் பெருக்கிடும் நீர் சில் விநாடிகளிலேயே நம்மை அடித்துச் சென்றுவிடும்.  ஆறு அங்குலத்திற்கு மேல் ஓடும் நீர் நாம் பயணிக்கு காரையே புறட்டிப்போடும் வல்லமை உள்ளது என்று ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.  ஆற்றங்கரையில் பயிரிட்டு அழியக்கொடுத்தவரின் கதைகளையும் நாம் அறிவோம். 

ஆற்று நீரை அணையில் சேமித்து உபயோகிக்கிறோம்.  ஆயினும், வான் பொய்த்தால், அணை நீரும் வற்றிவிடும்.  இதையும் நாம் அறிவோம்.  ஆக, ஆறு இப்படித்தான் செயல்படும் என நம்பிச் செயல்பட இயலுமா?

கொம்புள்ளவை ஆடும், மாடும்.  அவை சாதுவான விலங்குகளாக இருப்பினும், துன்புறுத்துகிறோம் என நினைத்தால், அவை நம்மைத் தாக்கத் தயங்கா. 

ஆயுதம் வைத்திருப்பவர் நம்மைக் காக்கவும் செய்வர், நம்மிடமிருந்து திருடவும் செய்வர்.  அவர் சினப்படும் அளவுக்கு நடந்தால் நம்மைத் தாக்கவும் செய்வர்.  ஆகவே, அவரிடம் எச்சரிக்கையாகத்தான் நடந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு சிறந்த ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்,’ என்ற சொலவடையை நாம் அறிவோம்.  தாய்க்குலமான பெண்களை நாம் வழிபடுகிறோம்.  தாயன்புக்கு மேலாக எதுவுமே இல்லை.  அப்படியிருந்தும் ஏன் பெண்களை நம்பி எச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் சொல்கிறார்.

அவர் எல்லாப் பெண்களையுமே அப்படிச் சொல்லியுள்ளார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.  மெலும் வரும் பாக்களில் பெண்களைப் புகழ்ந்துள்ளார். முந்தைய செய்யுள்களில் அவர் எப்படிப்பட்ட பெண்கள் தீயவர் என்று எடுத்தியம்பிக்கிறார்.  அப்படிப்பட்ட பெண்களையே அவர் குறிப்பிடுகிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, சாணக்கியர் பெண்களுக்கு எதிரானவர் என்று பட்டம் கட்டிவிடக்கூடாது. 

ஆயுதம் உள்ளவரை நம்பக்கூடாது என்று அவர் குறிப்பிடும்போது அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தான் என்று நாம் அறிவோம்.  எனவே, அவர் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களைமட்டும் நம்பாதே என்று சொல்கிறார் என்று வாதிடக் கூடாது.  ஒற்றை வரியையோ சொல்லையோ எடுத்துக்கொண்டு நமது நிலைப்பாடை நிலைநிறுத்த முயலுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஈடாகும்,  அது விவாதம் – சான்றின் அடிப்படையில் எழாத நிலைப்பாடு.  அஸ்திவாரமில்லாக் கட்டிடமாய் அடிபட்டுப் போகும்.

இறுதியாக அரசவழி வந்தவர் – அவர்களில் நல்லவர் நாட்டுக்காக மட்டுமே எச்செயலையும் செய்வர்; எனவே, நாட்டுக்குத் தீங்கு விளையும் என்றால், எவரையும் காவுகொடுப்பர்.  அது நாமாகவும் இருக்கலாம்.  எத்தனையெத்தனை இலட்சக்கணக்கான மக்கள் அரசருக்காக அழிந்துள்ளனர்?  இராமாயணம், மகாபாரதம், இவையுடன், உலகத்தில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்கள் அரசரால்தானே நிகழ்ந்துள்ளன!  ஆகவே, இன்று நம்முடன் நட்புடன் இருக்கும், இனிக்க இனிக்கப் பேசும் அரச குடும்பத்தவர் (இக்காலத்தில் நாட்டுத் தலைவர்களும், அவர்களின் குடும்பத்தவரும்) தம் மேன்மைக்காக நாளை நம்மை நட்டாற்றில் விடவும் அஞ்சார்.

விஷாத3ப்யம்ருதம் க்3ராஹ்யமேத்4யாத3பி காஞ்நம்  |

நீசாத3ப்யுத்தமா வித்3யா ஸ்த்ரீரத்நம் து3ஷ்குலாத3பி  \\  16  ||

பதவுரை:  அமுதம் நஞ்சிலிருந்தாலும், பொன் தீயிலிருந்தாலும், உயர் கல்வியுள்ளவர் தாழ்ந்தவராக இருப்பினும், பெண் மாணிக்கம் தீய குடியிலிருந்தாலும் எடுத்துக்கொள்க – 16

விளக்கம்:  நஞ்சில் அமுதமா?  என்ன விளையாடுகிறீர்கள் என்று கேட்டால், உயிர்காக்கும் எல்லா மருந்துகளும் நஞ்சுதான் என்றே மருத்துவம் இயம்புகின்றது.  ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சா’கும்.  ஆயினும், அந்த நஞ்சும் அளவோடு உட்சென்றால் அது உயிரைக் காக்கும் அமுதமாகும்.

பொன்னை உருக்க உருக்கத்தான் அதில் இருக்கும் கசடுகள் நீங்கும்.  அதைத்தான் புடம் போடுவது என்று பெரியோர் சொல்வர்.  அப்படிப்பட்ட வெப்பத்தையும், பொறுக்க இயலாச் சூட்டையும் எதிர்கொண்டுதான் தங்கம் தூய்மையாகிறது.  அது நெருப்பில் உள்ளது என்று விட்டுவிடமாட்டோம்.  கவனமாக எடுத்துத்தான் பாதுகாப்போம்.

‘அறிஞனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு,’ என்பது தமிழ் முதுமொழி.  அறிவு, ஞானம், எவரிடமிருந்தாலும் அதை பெறத் தயங்கக்கூடாது.  ‘நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே,’ என்பதே அறிவுரை.  வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்.  அவர்தான் நான்கு வேதங்களையும் தொகுத்து நமக்களித்தவர்.  தமிழர் போற்றும் திருவள்ளுவர் நெசவாளி.  இன்னும் பல சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  அறிவு எங்கிருப்பினும் அதை தேடிச்சென்று அடையவேண்டும்.

நாம் போற்றும் பெண்களை வரிசைப் படுத்துவோம்.  இசைக்குயில் எம்.எஸ். சுப்பலட்சுமியைப் போன்று இசையுலகில் உயர்ந்து நிற்பவர், நம் மனதைத் தன் குரலால் கொள்ளைகொண்டவர் எவருளர்? 

ஒளவை எப்படி இருப்பார் என்றால் இவரைப் போலத்தான் என்று மக்கள் மார்தட்டும் அளவுக்கு ஒளவையைத் தமிழ் சமூகத்தின் கண்முன் நிறுத்தியவர் கே.பி. சுந்தராம்பாள்.  இவரைப்போல தமிழ்ப்பாடல்களைப் பிசிரின்றிப் பாட எவரால் இயலும்.  முருகபக்தியைப் பரப்பியர் இவர் என்றால் மிகையாகாது.

முதன்முதலில் மருத்துவக் கல்லூரில் சேர்ந்து முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் உயர்கல்வி பெறப் பிள்ளையார்சுழி போட்டார்.  தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டார்.

இன்னும் பல உதாரணங்கள் தரலாம்.  இந்த இரண்டே பெண் இரத்தினங்களின் வரலாற்றை நோக்கின், சாணக்கியரின் கூற்றை அவர் மெய்ப்படுத்தியுள்ளனர் என்றறிவோம்.  உலகமே அவர்களைப் போற்றுகின்றது.

ஸ்த்ரீணாம் த்வி3கு3ண ஆஹாரோ புத்3தி4ஸ்தாஸாம் சதுர்கு3ணா  |

ஸாஹஸம் ஷட்கு3ணம் சைவ காமோ(அ)ஷ்டகு3ண உச்யதே  \\  17  ||

பதவுரை:  பெண்களுடைய உணவு இருமடங்கு, அவர்களின் அறிவு நான்மடங்கு, துணிச்சல் ஆறுமடங்கும், வேட்கை (விருப்பம்) எட்டுமடங்கு என்று சொல்லப்படுகிறது – 17

விளக்கம்:  மணியனைய பெண்கள் தீய குடியில் தோன்றினாலும் அவர்களைப் போற்றவேண்டும், அவர்களைப் புறந்தள்ளக்கூடாது என்ற சாணக்கியர், பெண்களின் திறமையை ஆண்களுடன் ஒப்பிடுகிறார். 

அவர்கள் ஆண்களைவிட இருமடங்கு உணவு உண்பார்கள் என்று தொடங்குகிறார்,  இரு மடங்கா?  பெண்கள் ஆண்களைவிட உடலால் சிறியவர்கள், மெலிந்தவர்கள், அப்படியிருக்க இருமடங்கு உணவை உண்டு எப்படி மெலிந்திருக்க இயலும்? 

தாய்மை எய்துவது பெண்கள்தான்.  அவர்கள் தாய்மையுற்றிருக்கும்போது தனக்கு மட்டுமின்றி தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உணவு உண்ணவேண்டும்,  ஆறிலிருந்து ஏழு பவுண்ட் (மூன்று கிலோ) உள்ள குழந்தைக்காக அவர்களின் எடை கருத்தரித்த காலத்தில் இருபது பவுண்ட் (எட்டு கிலோ) வரை கூடுகிறது.  இதற்காக அவர்கள் அதிகமாக உணவு உண்ண வேண்டியுள்ளது.

குழந்தை பிறந்த பின்னர் அந்த எடை குறைந்தாலும், மகவுக்குப் பாலூட்டவேண்டி அதிகமான, சத்துள்ள உணவு உண்ணும் தேவை ஏற்படுகிறது.

இதையே மற்றவர் சொல்கிறார்கள், சொல்லப்படுகிறது என்று சாணக்கியர் சொல்கிறார் போலும்.

அறிவில் பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு சிறந்தவர் என்று சொல்கிறார்கல் என்று புகழ்கிறார்; இதிலிருந்து அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று சொல்வதை விட்டுவிடவேண்டும்.  பிறப்பிலிருந்து பெண் பலவிதமனா பொறுப்புகளைச் சுமக்கிறாள்.  வீட்டுவேலை, தையல், சமையல், வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, கணவனைப் போற்றுதல், தன்னைத் தற்காத்தல் போன்ற எத்தனை எத்தனை பொறுப்புகள்!  இதைச் செவ்வனே செய்ய மதிநுட்பம் தேவையல்லவா?  அதனாலேயே அவர்களுக்கு நான்குமடங்கு அறிவிருக்கிறது என்று சொல்கிறார்.

துணிச்சலை எடுத்துக்கொண்டால் ஆறுமடங்கு அதிகமாம்.  எப்படி?  அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் ஆண்களையே சார்ந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  பெண்ணுரிமைக்குத் தற்காலத்தில் அதிகம் குரல்கொடுக்கப் படுகிறது என்றாலும், அது படித்த பட்டினத்துப் பெண்களுக்கே சாதகம் செய்திருக்கிறது.  ஆகவே, அவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டால்தான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமாளிக்க இயலும். ஆனால், அசட்டுத் துணிச்சல் எதற்கும் உதவாது.  அமைதியாக இருந்தே துணிவுடன் செயல்பட இயலும்.  அப்படி அமைதியாகவே, துணிச்சலுடன் செயல்பட்டு, தங்கள் மதியூகத்தினைக் கையாண்டு பெண்கள் நாணல்போல் வளைந்துகொடுத்துத் தங்கள் இலக்கை அடைந்துள்ளனர். 

அவர்களின் ‘காமம்’ எட்டுமடங்கு என்று சொல்வதை எப்படி நம்புவது?

அதற்குமுன் ‘காமம்’ என்ற வடமொழிச் சொல் எவற்றைச் சுட்டுகிறது என்று அறிந்தால்தான் இந்தச் செய்யுளின் உட்பொருளை அறிந்துணர இயலும். 

காமம் – வேட்கை (தேடிச் செல்லல், நாடிச் செல்லல்), விருப்பம், அனைத்து விருப்பங்கள் நாட்டம், தேவை, சிற்றின்ப விருப்பம்,

திருமணத்தின்போதுகூட மந்திரங்கள், ‘தர்மம், காமம், அர்த்தம்’, இவற்றை நிறைவேற்றிக்கொள்ளத் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதாகச் சொல்கின்றன.  வள்ளுவரின் திருமறையும், அறம், பொருள், இன்பம் என்றே வரிசைப் படுத்தி, ‘வீடு தேடுதலை’ ஆங்காங்கு முத்துக்களாக உதிர்க்கின்றது.

ஆக, காமம் என்பதை ‘அறம், பொருள்’, இன்பம்’ இவற்றின் தேடலின் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளலாம்.  அதை ஆண்கள் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரங்கள் சொன்னாலும், அதற்கு உறுதுணையாக விரும்பிச் செய்வது – செய்யவைக்க உறுதுணை என்று மந்திரங்கள் சொல்வது பெண்கள்தான்!  அந்தப் பெண் வாழ்க்கத் துணையாக, வாழ்க்கை வண்டியின் உறுதுணையாக இழுக்காவிடில் ஆண்களால் எதையும் செய்ய இயலாது என்று வேதங்களும் உணர்ந்து சொல்லியுள்ளன.  ஆகவே, அதற்குத் துணைநிற்க ஆணைவிட அதிக வேட்கை இருந்தால்தான் இயலும்.

உலகில் காணப்படும் பூசல்களும், சண்டை சச்சரவுகளும், போர்களும், ஏமாற்றுதல்களும், பாலியியல் கொடுமைகளும் ஆண்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முனைவதால்தானே நடந்தேறுகின்றன; பெண்களா  இப்படித் தேடித் திரிகின்றனர் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

உலகில் நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானே என்ற எண்ணமும் நமக்குள் எழுகிறது.

ஆண்கள் எதற்காகச் செல்வத்தைத் தேடுகின்றனர்? போருக்குச் செல்கின்றனர்?  மற்றவரை ஏமாற்றிப் பொருள் சேர்க்கின்றனர்?  பாலியல் கொடுமை செய்கின்றனர்? புகழைத் தேடுகின்றனர்?  எல்லாம் பெண்களுக்காகவே!  வாளின் கூர்மையைவிட எழுதுகோல் கூர்மை வாய்ந்தது.  அதையும்விட்க் கூர்மையானது ஏந்திழையாரின் பார்வை – இதுதான் உண்மை.

பாவைக்காகப் பாராளும் உரிமையையே துறந்தான், ஆங்கிலேய அரசன்.  இதுவும் உண்மை. 

எதனால்? அந்தப் பெண்ணுடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்பதால்தானே!  ஆக, எவரின் விருப்பம் வென்றது?  அந்தப் பெண்பெண்ணின் விருப்பம்தானே!  ஆகவே, பெண்களின் விருப்பம் கத்தியின்றி, யுத்தமின்றி ஒரு உலகப் பேரரசையே வென்றிருக்கிறது, அதாவது துறக்கச் செய்திருக்கிறது.

இதைத்தான் முன்கூட்டியே சாணக்கியர் கூறியிருக்கிறார் போலும்!

(தொடரும்)

Series Navigationசாணக்கிய நீதி – 8 >>சாணக்கிய நீதி – 7 >><strong>சாணக்கிய நீதி – 6</strong> >>சாணக்கிய நீதி – 5 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *