பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை

பொன்னியின் செல்வன் பாகம்-1 (PS-1) சனிக்கிழமையன்று குடும்பமாக சென்று பார்த்தோம். ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. கூர்மையான சினிமா ரசனை கொண்ட என் மகள்கள் உட்பட எல்லாருக்குமே படம் பிடித்திருந்தது.

ஒரு நாவலாக பொ.செ. கதையமைப்பிலும், விவரணைகளிலும் உள்ள போதாமைகள், வார இதழ் தொடர்கதையாக வந்ததால் ஏற்பட்ட விபரீதங்கள், அதன் வரலாற்று ஆதாரங்கள் இத்யாதி குறித்து நவீன இலக்கிய விமர்சகர்கள் நிரம்ப எழுதிவிட்டார்கள். இது அனைத்தையும் தாண்டி, இந்த நாவல் ஒரு cult கிளாசிக் ஆக ஆனதற்கும் அவ்வாறு நீடிப்பதற்கும் வலுவான காரணங்கள் உள்ளன. நன்கு அறியப்பட்ட மாமன்னன் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தைக் களமாக்கி ஒரு பெரிய கதையை எளிதாக கல்கி எழுதியிருக்கலாம். ஆனால் அதை விடுத்து, அதற்கு சற்று முன்னதாக சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய முப்பதாண்டு கால குழப்பத்தைக் களமாக்கி, ஆதித்த கரிகாலன் கொலை என்ற வரலாற்றுப் புதிரைச் சுற்றி, மிகச் சொற்பமான கல்வெட்டு செய்திகளை வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை அவர் சிந்தித்தார். இது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது. கூடவே தமிழ்ப் பண்பாடு, வரலாறு சார்ந்த பல செய்திகளையும் நுண்தகவல்களையும் இயல்பான போக்கில் அந்த நாவலுக்கு உள்ளே இணைத்து அதற்கு ஒரு அபாரமான கலைக்களஞ்சியத் தன்மையையும் அளித்து விட்டார். இதுவே அந்த நாவலின் பரவலான வெற்றிக்கும், வசீகரத்திற்கும் காரணம். பொன்னியின் செல்வன் வாசித்த ஒரே காரணத்தினால் தான் வரலாறு, சமயம், தத்துவம், சிற்பக் கலை, கோயில் கட்டடக் கலை, பயணம் ஆகியவற்றில் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றிலோ ஆர்வம் உண்டாயிற்று என்று கூறும் பல நண்பர்களை அறிவேன். அந்த நாவலின் வீச்சு அத்தகையது.

ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. 15 முதல் 20 வயதிற்குள் வாசிக்கப் படவேண்டிய நாவல் அது. ஒரு குறிப்பிட்ட வயதில், பருவத்தில் அதை நாவலாக வாசித்தவர்கள் அதன் மொழியையும், நடையையும், நுட்பங்களையும் எல்லாம் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் சினிமா வடிவில் அதைப் பார்க்கையில் ஒருவித அதிருப்தியையே அடைவார்கள். ஏனென்றால் அந்த நாவலை மன அளவில் அவர்கள் தங்கள் இளமைக் காலத்துடன் தொடர்பு படுத்தி வைத்திருப்பவர்கள். கடந்து சென்ற இளமையின் மீள்உருவாக்கங்கள், நினைவுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் எதுவும் அசலுக்கு நிகராவதில்லை என்பதைப் போலத் தான் இது. ஆனால் நேரடியாக ஹாரி பாட்டர் சினிமாக்களையே முதலில் பார்ப்பவர்களுக்கு அந்தப் பிரசினை இல்லை. அவர்கள் அதை உள்ளபடியே ரசிப்பார்கள்.

சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். அபாரமான காட்சிப் படுத்தல்களின் (விஷுவல்ஸ்) வழி இந்தத் திரைப்படம் பெருமளவில் நாவலில் உள்ள அந்த வசீகரத்தைக் கொண்டு வந்துள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளிலும் ஒளிப்பதிவின் நேர்த்தியும் துல்லியமும் வெளிப்படுகிறது. VFX தொழில்நுட்பம் சமைத்திருக்கும் ஜாலங்கள் விழிகளை விரியவைத்து, மனம் மயக்குகின்றன. தமிழ் சினிமாவில் சமீபகாலங்களில் வரலாற்றுத் திரைப்படம் என்று எதுவுமே வரவில்லை என்பதால், பலர் “சோழர் காலக் கதை” என்றால் சிவாஜி கணேசனின் ஆவேச நீள வசனங்களையும் ஜிகினா ஒப்பனைகளையுமே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அத்தகைய சபல எதிர்பார்ப்புகளை சிறிதும் சட்டை செய்யாமல், இந்தப் படத்தின் வசனங்கள் சுருக்காகவும், அதே சமயம் பல முக்கிய இடங்களில் நாவலில் உள்ள உரையாடல் மொழியையும் வாசகங்களையும் அப்படியே எடுத்தாள்வதாகவும் அமைந்துள்ளன. ஒப்பனைகளும் மிகப் பொருத்தமாக உள்ளன. குறிப்பாக அரச உடைகள் நேர்த்தியாகவும் தகதகா மினுக்குகள் இல்லாமல் அமர்ச்சையாகவும் உள்ளது சிறப்பு.

ஜெயம் ரவி உட்பட அனைத்து நடிகர்களும் சோடை போகாமல் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம் மூவரின் நடிப்பும் மிக அருமை. உண்மையில் இவர்கள் நடித்துள்ள நந்தினி, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் ஆகிய பாத்திரங்களே மனதில் பதியும் வகையில் சிறப்பாக படத்தில் வெளிப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், மற்ற பாத்திரங்கள் இவற்றைப் போல அவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான். குறிப்பாக, கதையின் protagonist என்றே சொல்லத் தகுந்த வந்தியத் தேவனின் ஆளுமையை இளமை, குறும்புத்தனம், வீரம், சாகசம், புத்திக் கூர்மை என பல அம்சங்களும் கலந்து மிகவும் விரும்பத் தக்க வகையில் கல்கி படைத்திருப்பார். இந்தப் படத்தில் அந்தப் பாத்திரம் சரியாக வரவில்லை. கேளிக்கைத் தனத்துடன் அசடு வழியக் கூடிய ஒரு பேர்வழி என்பது போல ஆகிவிட்டது. அதே போல அருண்மொழி வர்மனின் அலாதியான மனப் போக்கைப் பற்றிய சித்திரம் இல்லாததால், ஆபத்துக் காலத்திலும் அவர் படைகளை எல்லாம் விட்டுவிட்டு திடீரென்று யானைமேல் உட்கார்ந்து காட்டுக்குள் தனியாகப் போவது ஏதோ சிறுபிள்ளைத்தனம் போன்ற தோற்றம் தருகிறது. குந்தவை, பூங்குழலி பாத்திரங்களின் விஷயத்திலும் இக்குறை உள்ளது. இரண்டரை மணிநேரப் படத்தில் இத்தனை பாத்திரங்களின் பரிமாணங்களையும் கொண்டு வருவது கடினம்தான், ஆயினும் வேறு சில தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து, இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் இறுதியில் வரும் கப்பல் சண்டை, விபத்துக் காட்சியின் பிரம்மாண்டம் தொழில்நுட்ப ரீதியாக அருமையாக உள்ளது. ஆனால், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் போன்ற ஹாலிவுட் படங்களின் நகல் காட்சி போன்ற ஒன்றை அதே தரத்துடன் செய்துகாட்ட முடியும் என்பதைத் தாண்டி, படத்தின் கதைப்போக்கிற்கோ கருவுக்கோ அந்தக் காட்சி எந்தவகையிலும் பெரிதாக பங்களிக்கவில்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் வரும் ஆதித்த கரிகாலன் போர்க்காட்சி சிறப்பாக இருந்தது, மறுபடியும் அதே போன்ற இன்னொரு போர்க்காட்சியை தவிர்த்திருக்கலாம். நாவலில் ஆ. கரிகாலன் தனது மனத்தைத் திறந்து பேசும் அந்த காட்சி போர்க்களத்தில் நிகழ்வதில்லை, அவர்கள் மாமல்லபுரக் கடற்கரையில் அமர்ந்து பேசுவதாக நினைவு. அதை அவ்வாறே காட்டியிருக்கலாம்.

பின்னணி இசை பல இடங்களில் அழுத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. ஆனால் பாடல்களும், அவற்றின் இசையமைப்பும் வழக்கமான மணிரத்னத் தனத்திற்குள்ளும் ஏ ஆர் ரஹ்மானிய மோஸ்தரிலும் சிக்கிச் சீரழிந்திருந்தன. பாடல்களின் போது நல்ல தமிழ்ப்புலமையும், செவியுணர்வும் கொண்ட எனக்கே பல இடங்களில் சொற்கள் விளங்கவில்லை. பெங்களூரின் பல திரையரங்குகளில் இப்போது வழமையாகிவிட்ட சப் டைட்டில்கள் மூலம் தான் அவற்றின் பொருளைத் தெரிந்து கொள்ள முடிந்தது 🙂 அந்த அளவுக்கு கூச்சலும், இசைச்சித்ரவதையும் அவற்றில் இருந்தன. நடனங்களைப் பொறுத்த வரையில், தேவராளன் ஆட்டத்தில் அசைவுகள் மட்டுமே இருந்தன, அதன் முக்கியக் கூறான சன்னதம், குறி சொல்லுதல் ஆகியவை காண்பிக்கப் படவில்லை. பழையாறையில் நிகழும் கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாவலில் வரும் கம்சன் – கிருஷ்ணன் நாடகத்திற்கான நடனமும் ஒட்டவில்லை. “ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே” என்ற பாடலின் வரிகள் அபத்தம்.

படத்தில் மத, அரசியல் சீண்டல்கள் என்று திட்டமிட்டு ஏதும் நுழைக்கப் படவில்லை என்பது ஒரு பெரிய ஆசுவாசம். சைவ, வைணவ சண்டை ஒரு காட்சியில் சகஜமாக காட்டப் படுகிறது. பங்காளிகள் ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் அன்னியன் நாட்டைக் கைப்பற்றுவான் என்ற பொதுவான ராஜதர்மம் கூறப் படுகிறது. வேதமந்திரங்கள் ஓதும் காட்சிகளும், கோயில்களும், வழிபாடுகளும், பாத்திரங்களின் நெற்றியில் விபூதி, குங்குமம், திலகம் இத்யாதி சின்னங்களும் தேவையான அளவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. படம் வெளிவருவதற்கு முன்பு இது குறித்து உருவான பதற்றங்களை படம் அர்த்தமற்றதாக்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி.

நாவலுக்கு முரணாக படத்தில் ஏதேனும் காட்டப் படுமா என்றவகைப் பதற்றங்களையும் படம் பொய்யாக்கி விட்டது. உண்மையில் மூலக்கதையில் உள்ள தர்க்கப்பிழை கொண்ட, தேவையற்ற சமாசாரங்களை தனது படைப்புச் சுதந்திரத்தின் பெயரால் இயக்குனர் தவிர்த்திருக்கலாம் (உதாரணமாக, அருண்மொழியை “அடையாளம் கண்டுகொள்ளாமல்” அவரும் வந்தியத்தேவனும் சண்டைபோடும் காட்சி). ஆனால் அவற்றைக் கூட விசுவாசமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார். நாவலில் உள்ள “ஊமை ராணி” சமாசாரத்தை ஒரு மாய யதார்த்தம் போலக் கூட படத்தில் காட்டிச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அதுவும் அப்படியே மூலத்தில் உள்ளது போலத் தான் வரும் என்பது இந்தப் படத்தின் கடைசியில் இரண்டாம் பாகம் என்று அறிவிப்பு போட்டு, ஐஸ்வர்யா ராய் ஊமை ராணியாக நீந்தும் காட்சியிலேயே வெளிப்பட்டு விட்டது. நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒரு பயங்கரமான “தூண்டில்” அது என்று இயக்குனர் நினைக்கிறார் போலிருக்கிறது. சிரிப்புத் தான் வருகிறது. அரங்கை விட்டு வெளியே வந்த உடனேயே நாவலைப் படித்திருக்காத என் மகள்களும் மனைவியும் பலவித காம்பினேஷன்களை யோசித்து, அந்த “மர்மத்தை” ஊகித்து விட்டார்கள் 🙂

படத்தில் வரும் கத்தி, மாளிகை, கோட்டை, சிம்மாசனம், கப்பல் எல்லாம் வரலாற்று பூர்வமாக அந்தக் காலகட்டத்தின் படியே துல்லியமாக உள்ளதா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற விஷயங்கள் எப்படியோ, ஆனால் சோழர் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிந்திருக்கும் வழக்கம் இல்லை என்ற முக்கியமான வரலாற்றுக் குறிப்பை சோழ இளவரசி முதல் ஓடக்கார பூங்குழலி வரை முற்றிலும் 100% முழுமையாக கடைப்பிடித்திருக்கிறார்கள் 🙂

பொதுவாக வரலாற்றுக் கால படம் என்றால் அதில் பாலியல் காட்சிகளையும், வன்முறைகளையும் கணிசமான அளவில் காண்பிப்பது ஹாலிவுட் படங்களின் ஃபார்முலா. OTT தொடர்களைப் பற்றி சொல்லாமல் இருப்பதே மேல். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எந்தவித ஆபாசங்களும் இல்லாமல் குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்த்துக் களிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்துள்ளது சிறப்பு. இரண்டாம் பாகமும் இப்படியே இருக்கும் என்று நம்புவோம்.

இது ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம், entertainer. சோழர் வரலாற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு பிரபல கிளாசிக் நாவலின் கதையைச் சொல்கிறது என்பது ஒரு தற்செயல், அவ்வளவே. மற்றபடி, இதன் ப்ரமோக்களில் கூறப்பட்டது போல இந்தப் படத்தைப் பார்த்து விட்டு தமிழ் நாட்டு வரலாற்றிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஏன் மூல நாவலிலுமே கூட ஆர்வம் கொண்டு கணிசமான மக்கள் அவை குறித்து தேடலில் ஈடுபடுவார்கள், வாசிப்பார்கள், கற்பார்கள் என்பதெல்லாம் அதீதமான எதிர்பார்ப்பு. நீலகண்ட சாஸ்திரி, குடவாயில் போன்ற பெயர் உதிர்ப்புகள் எல்லாம் படத்திற்கான ஒரு பெரிய பில்ட் அப் என்பதைத் தாண்டி எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போடவில்லை. Troy என்ற ஹாலிவுட் ஹிட் படத்தைப் பார்த்தவர்களில் எத்தனை பேர் இலியட் இதிகாசத்தையும், கிரேக்க வரலாற்றையும் தேடிச் சென்று வாசித்திருப்பார்கள்? 1% கூட இருக்காது. ஆனால் அக்கிலிஸ், ஹெக்டர், ஹெலன் போன்ற பெயர்கள் அவர்களுக்கு அன்னியமாக இருக்காது, இந்த இதிகாச நாயகர்களைப் பற்றிய முற்றிலும் சினிமா அடிப்படையிலான ஒரு சிறு பரிச்சயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதே தான் பொன்னியின் செல்வன் விஷயத்திலும் நிகழும். தஞ்சாவூர் போனால் நந்தினியின் மாளிகையைப் பார்க்க முடியுமா என்று dumb மேல்தட்டு சுற்றுலா பயணிகள் கூகிளில் தேடிப் பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறது 🙂

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் மூன்று தலைமுறைகளை வசீகரித்த கல்கியின் கிளாசிக் நாவல் இப்படி ஒரு கச்சிதமான திரைவடிவம் பெற்றிருக்கிறது என்பதே ஒரு பெரும் வெற்றி. இப்படி ஒரு சினிமாவை சாத்தியமாக்கிய இயக்குனர் மணிரத்னத்திற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

3 Replies to “பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை”

 1. அந்த வெற்று மாறனுக்கு சில ஆதரவுகள் கிளம்புகின்றன, அந்த காலத்தில் சோழர்கள் அபரிமிதமான பிராமண ஆதரவு கொண்டிருந்தார்களா, அந்த கரிகாலன் விவகாரத்தில் என்னதான் நடந்தது, நிரம்ப படித்தவரான பாலகிருஷ்ணன் ஐ.ஏ.ஸ் கூட ஒருமாதிரியாக பேசுகின்றாரே ஏன் என கேட்டார்கள் அன்பர்கள்

  நாமும் அவர் வீடியோவினை கண்டோம், சில பதில் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம்

  அவர் சொல்வது போல ராஜராஜசோழனும் ராஜேந்திரமும் மட்டும் யாகமோ வழிபாடுகளோ பார்ப்பனர்களுக்கு இடமும் வீடும் கொடுக்கவில்லை அது பாரத வழமையாய் இருந்தது, அதை முற்கால சோழர்கள் செய்தார்கள், பாண்டிய பெரும் வழுதி செய்தான், சேரமன்னர்கள் மிக பெரிதாக செய்தார்கள்

  அந்த பார்ப்பனர்களே பஞ்சாங்கம் பார்த்து வெள்ளம், வறட்சி,போர், வியூகம், ஆலயம், நல்ல நேரம் என என்னென்னவோ சொல்லிகொடுத்தார்கள், அது அரசனுக்கும் நாட்டுக்கும் நன்மை கொண்டுவந்தது, அதனால் அவர்களை அருகில் வைத்து கொண்டார்கள்

  இது பாரதம் முழுக்க இருந்த நிலை, அவர்களுக்கான குடியிருப்பே மங்கலம் என்றாயிற்று, சதுர்வேதி மங்கலம் போன்றவை அப்படி வந்தவையே

  ராஜராஜ சோழனுக்கு முந்தைய நாயன்மார் வரிசையிலே பல பிராமணர்கள் உண்டு, அதன் முற்காலத்திலே உண்டு

  அதனால் ராஜராஜ சோழனே பார்பனர்களை அழைத்து வந்தான் என்பதெல்லாம் பொய்

  பாலகிருஷ்ணன் சொன்ன அடுத்தவாதம் ஆதித்த கரிகாலன் கொலைபற்றியது

  அது பாண்டியருக்கும் சோழருக்கும் சண்டை நடந்த காலமல்ல, அது பாண்டியர் சேரர் சிங்களவர் கூட்டணிக்கும் சோழருக்கும் நடந்த யுத்தம்

  அப்பொழுது சேரநாடு வழுவிழந்தது, அங்கிருந்த குருகுலத்து முன்குடுமி அந்தணர்கள் பாண்டிய நாட்டுக்கு வந்தார்கள், அவர்களை பாண்டிய மன்னன் வீரபாண்டியன் ஆதரித்தான்

  சேரநாட்டு அந்தணர்கள் கொஞ்சம் நுணுக்கமானவர்கள் அவர்களின் போர்கலையும், வர்ம கலையும் இன்னும் சூட்சுமான விஷயங்களும் தனிதன்மையானவை

  அவர்கள் அதை கொண்டு தங்களுக்கு ஆதரவளித்த பாண்டியனை பெரும் பலமிக்கவனாக்க முயன்றார்கள், இங்குதான் அஞ்சினான் ஆதித்த கரிகாலன்

  ஒரு போர் தொடங்குமுன் சில சமரசங்கள் பேசபடும், அப்படியே போர் முடிந்தபின்பும் பேசபடும்

  அப்படி போர் என முடிவாகி அதில் தோற்று வீரபாண்டியன் தலைமறவாக இருந்தான் அப்பொழுது பேச்சுவார்த்தை நடந்தது, சேரநாட்டு அந்தணருக்கும் சோழருக்கும் நடந்தது

  ஆதித்த கரிகாலன் முதலில் சரியாகத்தான் பேசினான், களத்தில் அல்லாதவனையும் ஆயுதம் அல்லாதவனையும் கொல்லுதல் அறமாகாது எனும் அக்கால விதிக்கு கட்டுபட்ட்வன் போல் நடித்தான்

  சில சமாதான ஒப்பந்தம் பேசலாம் என நாளை இழுத்துகொண்டே இன்னொரு பக்கம் வஞ்சகமாக காட்டுக்குள் மறைந்திருந்த வீரபாண்டியனை அக்கால விதிகளை மீறி கொன்றான்

  நிச்சயம் அது அதர்மம், பெரும் அதர்மம்

  அதற்கு பழிவாங்கத்தான் அதாவது நீ எங்களை வஞ்சித்தாய் அல்லவா? நாங்கள் உன்னை வஞ்சிப்போம் என களமிறங்கிய சேரநாட்டு அந்தணரும் பாண்டிய குழுக்களும் ஆதித்த கரிகாலனை திட்டமிட்டு சரித்தன‌

  அதன் பின் ஆட்சி மதுராந்தகனிடம் சென்றது, ராஜராஜன் எனும் அருள்மொழி நாடோடியாகத்தான் திரிந்தான்

  உண்மையில் ஆதித்த கரிகாலன் கொலையில் யாரெல்லாம் உண்டு என்பதை அவன் நாடோடியாக அலைந்தே கண்டறிந்தான் அதில் சோழநாட்டு தொடர்புகளும் உள்வீட்டு விவகாரமும் இருந்தது

  அவன் பாண்டியநாட்டின் பெரும் ஆதரவாக சேரநாடு இருப்பதை உணர்ந்தான், எல்லா ஆபத்துக்களையும் எல்லா பகைவர்களையும் அளந்துவிட்டுத்தான் அரியணை ஏறினான்

  அப்படி ஏறியவனுக்கு நிச்சயம் பாண்டியரும் சேரரும் தங்கள் வம்சத்தை அழிக்க நினைப்பார்கள் என தெரியும், அதனால் முந்திகொண்டு சேரநாட்டை தாக்கினான்

  அப்பொழுதுதான் அவனின் “காந்தளூர் சாலை” தாக்குதல் நடந்தது, சேரநாடு பலவீனமானது

  சேரநாட்டை அடக்கினால் பாண்டியர் தானாக அடங்குவார்கள் என்ற அவன் கணக்கு சரியானது, அப்படியே இலங்கையிலும் ஈழ மன்னர்களையும் சிங்களவரையும் அடக்கினான்

  அதன் பின்பே தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் விசாரணையினை தொடக்கினான், ஆனால் கைது செய்யபட்ட ரவிதாசன் போன்றோரை கொல்லாமல் மொட்டை அடித்து விரட்டிவிட்டான்

  அதற்கு காரணம் அவர்கள் பிராமணன் என்பதால் அல்ல விஷயம் வேறு

  அக்காலத்தில் அடிக்கடி போர்கள் நடந்ததால் சில விதிகள் வகுக்கபட்டன. அந்தணர், பசு, பெண்கள், குழந்தைகள் இவர்களை கொல்ல கூடாது என்பது

  போர்காலம் தவிர பிராமணர் தவறு செய்தால் தண்டனை நிச்சயம், கொல்ல கூட செய்யலாம் ஆனால் அதனில் சில விதிவிலக்குகள் இருந்தன‌

  பெரும் அறிஞர்களையும், குருகுல விற்பனர்களையும், பெரும் வீரர்களை உருவாக்கும் குருமார்களையும் கொல்ல கூடாது என்பது, அதற்கு காரணம் அவர்களை கொன்றால் அந்த பெரும் அறிவினை இழக்க வேண்டிவரும் என்பதால்

  இன்று எதிரி முகாமில் இருப்பவர் நாளை நம்முகாமுக்கே வரலாம் இன்னும் அவர்களை நாம் பயன்படுத்தலாம் அல்லது யாரோ ஒருவருக்கு அக்கலை பயன்படும் எனும் ரீதியில் அறிஞர்களை கொல்ல கூடாது எனும் விதி இருந்தது

  இப்பொழுதும் பெரும் விஞ்ஞானிகள் இன்னொரு நாட்டில் சிக்கினால் கொல்லமாட்டார்கள், அந்த அறிவினை நாசமாக்க விடமாட்டார்கள்

  இதுதான் அக்காலத்தில் நடந்தது, கொலையில் சிக்கியவர்களெல்லாம் பெரும் வித்தகர்கள்

  இன்னொன்று அவர்களிடம் நியாயம் இருந்தது, ஆதித்த கரிகாலன் சத்தியத்தை மீறினான் எனும் உண்மை இருந்தது

  ராஜராஜன் அஞ்சிய பெரும் விஷயம் இந்த அந்தணர்களை கொன்றால் தன் நாட்டு அந்தணர்க்கும் ஆத்திரம் வரும், சேரநாடு கொந்தளிக்கும் இதெல்லாம் தனக்கு சரியானது அல்ல என உணர்ந்துதான் விடுவித்தான்

  அவன் அந்த பிராமணர்களை விடுவிக்க அவர்களின் சாதி துணைக்குவரவில்லை, அவர்களின் பெரும் அறிவும் குருமார்கள் என அவர்கள் இருந்த ஸ்தானமுமே காரணம்

  ராஜராஜன் அவர்களை விடுவித்து தன்னையும் காத்து கொண்டதும் நடந்தது

  பின் என்னாயிற்று?

  ராஜராஜசோழன் எல்லோரையும் அடக்கி பெரும் மன்னனாக வாழ்ந்து முடிந்தான், அவன் மகன் அவனைவிட பெரும் மன்னனாக வாழ்ந்தான்

  ஆனால் ஆதித்த கரிகாலன் பாண்டியருக்கு செய்த அநீதிக்காக பாண்டிய வம்சமும் சேரநாட்டு அந்தணர்களும் கருவிகொண்டே இருந்தனர்

  அடுத்த 75 ஆண்டுகளில் சேரநாட்டு அந்தணர்கள் தங்களின் பயிற்சியால் மிகசிறந்த வீரனை உருவாக்கினார்கள், அவன் எல்லா வீரகலைகளிலும் தேர்ந்தான்

  குதிரைகள் முதல் யானைகள் வரை சைகையிலே அடக்கும் பயிற்சி இருந்தது, வர்மகலையில் கை தேர்ந்தவனானான், நோக்குவர்மமெல்லாம் அவனுக்கு எளிதாய் வந்தன‌

  சோழ வம்சத்தை பழிவாங்க அவனை பெரும் வீரனாக சக்திவாய்ந்தவனாக மாற்றியிருந்தார்கள் சேரநாட்டு அந்தணர்கள்

  ஆம் அவனே ஜடாவர்ம சுந்தரபாண்டியனாக எழுந்தான், சோழ வம்சத்தை முற்றிலும் முடித்து ராஜராஜசோழனின் பெரும் சாம்ராஜ்யத்தை தன் காலடியில் வைத்தான்

  அவன் ஆட்சியில் அவனுக்கு எதிரிகளே இல்லாவண்ணம் எங்கும் அவன் கொடிபறந்தது

  சோழர் பரம்பரையினையே அவன் முடித்து வைத்து அவன் உருவாக்கிய பெரும் பாண்டிய சாம்ரஜ்யம் 130ம் ஆண்டை தொட்டபொழுதுதான் மாலிக்காபூர் மதுரை வந்தான், அவனை தொடர்ந்து துக்ளக் வந்தான்

  துக்ளக் நியமித்த சுல்தானை ஒழிக்கத்தான் நாயக்கர்கள் வந்தார்கள், பின் வெள்ளையன் ஆட்சி வந்தது

  ஆக ஆதித்த கரிகாலன் கொலையும் அதற்கு 100 ஆண்டுகள் கழித்து பாண்டியர் எழுந்து சோழவம்சத்தை கருவறுத்ததுமே வரலாறு

  இங்கு சொல்லவருவது பிராமணர்கள் எக்காலமும் இருந்தார்கள், மூவேந்தரிடம் மட்டுமல்ல எல்லா மன்னர்களிடமும் இருந்தார்கள், ஆனால் மன்னன் அவர்களை பயன்படுத்தினானே தவிர அவர்கள் மன்னனை ஆட்டுவிக்கவில்லை

  ராஜராஜனின் தளபதி பிரம்மராயர் கூட பிராமணரே

  ஆக வெற்றிமாறனின் உளறலுக்கு பதிலளிக்கின்றேன் என சில விஷயங்களை அவருக்கு ஆதரவாக சொன்னால் அந்த பாலகிருஷ்ணனும் உளறுகின்றார் என்பதே அர்த்தம்

  இந்துமதம் என்பது அந்நியன் வைத்த பெயரே, ராஜராஜசோழன் சைவன் அதனால் இந்து அல்ல என்பது இந்திய ராணுவத்தின் தரைபடை வீரனை நோக்கி அவன் தரைபடை வீரன் இந்திய ராணுவம் அல்ல என சொல்வது போல் மடமையானது

  இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே லிங்கமே, ஒரே வகை திருநீறே, ஒரே கைலாசமே, அந்த லிங்கத்தை வழிபட்டவன் இந்து எனும் சனாதர்மத்தை பின்பற்றியவனே அதை ஏன் பாலகிருஷ்ணன் போன்றோர் சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியம்

 2. இராஜராஜச் சோழனையோ/ இராஜேந்திரச் சோழனையோ தேடிப் படித்தவர்களுக்கு ஒன்று மட்டும் மிகத் தெளிவாக விளங்கும். அதாவது இன்று சனாதனத்தை ஒழிப்போம், ஆரியம், பார்ப்பனீயம், தீண்டாமை, சாதியம் என்று எந்த சமயத்தை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்களோ அதே சமயத்தைப் பின்பற்றியவர்கள் தான் சோழ அரசர்கள் என்பதை சோழர்களைத் தேடி படித்தவர்கள் நன்கு அறிவார்கள். இதனால்தான் இராஜராஜ சோழனை இன்று இந்து இல்லை என்று பிரிப்பவர்கள் அவர் ஒரு பார்ப்பன அடிமை என்றும் புறம் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க சித்தாந்த ரீதியாக சிலர் சோழர்களை வைதீகம் அல்லாத தனித்த சைவ அடையாளம் உடையவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இவர்கள் இலக்கிய/ கல்வெட்டு/ செப்பேட்டு தகவல்களை திரித்து/அவர்களுக்கு ஒவ்வா சான்றுகளை புறம்தள்ளுபவர்களே ஆவர்.!

  அதாவது “மனுவே சோழ மன்னர்கள் எல்லோருக்கும் முதல்வன்” என்ற திருவாலங்காட்டு செப்பேட்டின் வாசகங்களை மிக எளிதாக இந்த மனு வேறு அந்த மனு வேறு என்று மடைமாற்றி விடுவார்கள். “மனுவே பராந்தகனாக அவதரித்தான், இவன் இந்திரனைப் போன்றவன்” என்ற செப்பேட்டு வாசகங்களை விழுங்கிவிட்டு இதற்கு புது புது கற்பிதங்கள் கொடுக்க முனைவார்கள். ஆனால் மேற்கூறிய வாசகங்கள் முதற்கொண்டு “பரசுராமர் நிர்மாணம் செய்த கேரளத்தை வென்றவன்” போன்ற செப்பேட்டு வாசகங்கள் மற்றும் இராமாயண மகாபாரத கதாப்பாத்திர நிகழ்வுகளை தன்னுடன்/ நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பதெல்லாம் சோழர்காலத்தில் இயல்பாக இருந்த பழக்கங்களில் ஒன்று.!

  “திரிபுவனத்தையும் காப்பதில் நிபுணனான தாமரைக் கண்ணனே அருண்மொழி வர்ம்மனாக அவதரித்தான் என்பதை அவனது உடலில் உள்ள சின்னங்களால் கண்டறிந்து அவனை இளவரசனாக அபிஷேகம் செய்து பூபாரத்தைத் தாங்கினான்”

  – திருவாலங்காட்டு செப்பேடு.

  “அஜனிபுஜயுகேன ப்ராஸதீர்கேள தீப்தாம் சரியம் அகில சரீராசலேஷிணீம் ஆததான: அஸிகரமத ரேகாரூபிணௌ சங்கசக்ரௌ த்ததருமொழிவர்ம்மா தஸ்ய ஸூனு: முகுந்த”

  – ஏசலாம் செப்பேடு

  பொருள் : முகுந்தனாகிய விஷ்ணுவே அவனுக்கு அருள்மொழிவர்மன் என்ற மகனாகப் பிறந்தான். அவன் அங்கங்கள் எல்லாம் உளி மிகுந்த திருமகளை, வேல்போல் நீண்ட ஒரு புஜங்களிலும் தாங்கினான். அவனுடைய கரங்களில் வாளும் இரேகை வடிவில் சங்கும் சக்கரமும் இருந்தன.

  மேலும் இராஜேந்திரச் சோழன் கங்கைநீரை மிக எளிமையாகக் கொண்டுவந்ததால் இராமனின் முன்னோனான “பகீரதனையே” வென்றவன் என்றும் அழைக்கப்படுகிறான். மேலும் கரந்தைச் செப்பேட்டில் அவன் இளம் பருவத்திலேயே “எல்லா வேதங்களையும் சாத்திரங்களையும்” அறிந்தவனாய், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் தேரேறுதல் இவைகளில் மிக்க பயிற்சியுள்ளவனும், வாட்போரின் நுணுக்கங்களை அறிந்தவனும், படைக்கலங்களில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்கினான் என்ற தகவல் காணக் கிடைக்கிறது.!

  ஆகவே சோழர்கள் வேதங்களையும், ஆகமங்களையும் முழுமையாக அறிந்திருந்தனர். அதை பின்பற்றியே கோவில்கள் கட்டினார்கள் என்பது வெளிப்படை. அதே சமயம் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் அதிலுள்ள கதாப்பாத்திரங்களையும்கூட போற்றி வாழ்ந்துள்ளனர். உதாரணமாக திருவாலங்காட்டு செப்பேடு இராஜராஜ சோழனின் இலங்கை வெற்றியை பதிவு செய்யும்போது இராமனின் இலங்கை வெற்றியுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறது.!

  “இரகு குலத்தின் இந்திரனான ஸ்ரீராமன், அனுமன்களில் இந்திரன் போன்ற சுக்ரீவன், ஆஞ்சநேயன் முதலானோரைக் கொண்டு கடலில் சேதுவைக் கட்டி இலங்கை அரசனைக் கூரிய முனையையுடைய அம்புகளால் கொன்றான்”

  – திருவாலங்காட்டு செப்பேடு.

  வரலாறு இப்படி இருக்க, தன்னை சைவன் என்று அடையாளப்படுத்த நினைக்கும் சிலர் வேதங்களை சைவத்தினின்று பிரிக்க முற்படுகின்றனர். வேத, வைதீகத் தொடர்பில்லாத சமயமே சைவம் என்று வலியுறுத்த முற்படுகின்றனர். ஆனால் சங்க இலக்கியங்களில் மிகப் பழமையானதாக கருதப்படும் புறநானூறில் வேதங்களைத் தந்தவர் சிவபெருமான் என்பது மிகத் தெளிவாக பதியப்பட்டுள்ளது. உதாரணமாக,

  “நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
  ஆறுணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்அன்ன பொய் உணர்ந்து பொய்ஓராது மெய்கொளீஇ
  மூவேழ் துறையும் முட்டின்று போகிய
  உரைசால் சிறப்பின் உரவோர் மருக”

  – புறநானூறு.

  பொருள் : மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, ‘முழுமுதற் கடவுளாகிய’ சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே.

  அதாவது இங்கு ஈரிரண்டின் என்ற வார்த்தையானது ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களையும், ஆறுணர்ந்த என்ற வார்த்தையானது சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு உறுப்புகளையும் கூறுகிறது. இங்கே சிலர் வேதம் என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்றும் வேதங்களின் பெயர்கள் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கேட்பார்கள். இதற்கு சான்றாக அப்பர் பெருமானின் ஒரு பாடலை எப்போதும் மேற்கோளிடுவார்கள். அதாவது,

  “ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு,ஆறங்கம், வேதம், தெரித்தானை”

  – அப்பர் பெருமான்.

  இந்த பாடலை வைத்து அறம், பொருள், இன்பம், வீடுதான் தமிழர்களின் வேதங்கள் என்றும் இதைத்தான் நான்மறை என்றும் கூறுகிறார்கள். இங்கே அப்பர் பெருமான் அறம் பொருள் இன்பம் வீட்டைத்தான் வேதமாகக் கருதியிருந்தால் அறம், பொருள், இன்பம், வீடு முதலிய வேதம் என்றுதான் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அறம் பொருள் இன்பம் வீடு என்று பதிவுசெய்துவிட்டு ஆறங்கம் என்ற சொல்லாடலை பதிந்த பின்புதான் வேதம் என்கிறார். இது நான் மேலே பதிந்த புறநானூற்றுப்பாடலில் உள்ள ஆறு உறுப்புகளையே குறிப்பிடுகிறது என்பதை அறிக. உண்மை இப்படி இருக்க அறம் பொருள் இன்பம் வீடு முதலியவை எப்படி தமிழ் வேதங்களாக இருந்திருக்க முடியும்? ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இராஜேந்திரச் சோழன் காலத்தில் இருந்த கல்வி நிலையங்களில் ஏன் ரிக் யஜூர் சாம அதர்வ வேதங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது? ஏன் வேதங்களாக அறம், பொருள், இன்பம், வீடு போன்ற நான்மறையை சோழர்கால கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.!

  மேலும் “நற்பனுவல் நால் வேதத்து” என்ற புறநானூற்று வாசகம் பதிவு செய்யும் நால் வேதத்தையே திருமுறைகளும் பதிவு செய்கிறது. உதாரணமாக “கேள்வியர் நாள்தொறும் ஓதும் நால்வேதத்தர் கேடிலா வேள்வி செயந்தணர்” என்ற வாசகத்தில் நான்கு வேதங்களை ஓதியே வேள்வி செய்துள்ளனர் என்பது தெளிவு. அதேப்போல “வேதியர்கள் வேள்வி யொழியாது மறைநாளும் ஓதி” என்ற வாசகம் நான்மறை ஓதி வேள்வி செய்ததாக குறிப்பிடுவதன் மூலம் நான்மறையும், நால்வேதமும் ஒன்றென்பதை புரிந்துகொள்ளலாம். மேலும்

  “இருக்கு வேதம் முறைமுறை இருக்குச் சொல்லி எந்தைநீ சரண”

  “இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை”

  போன்ற திருமுறை வாசகங்கள் ரிக் வேதத்தை நான்மறைகளில் ஒன்றாகவும் பதிவு செய்வதைக்காண்க. இதேப்போல திருமுறைகளில் சாமவேதமும் பல இடங்களில் பயின்றுவருகிறது. இக்கூற்றை ஏற்காதவர்கள் கீழ்காணும் வரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமையாகிறது. அதாவது

  “நான்மறையோடு ஆறங்கம் நவின்ற நாவர்”

  “அங்கமொ ராறுடை வேள்வியான வருமறை நான்கும்”

  “நான்மறையோடு ஆறங்கம் வல்லானை”

  என்பது போன்ற திருமுறை வாசகங்களின் மூலம் நான்மறைக்கும் ஆறு அங்கங்கள் உண்டு என்பதை ஏற்க வேண்டும். மேலும் நால்வேதத்திற்கும் ஆறு அங்கங்கள் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்வதோடு அறம் பொருள் இன்பம் வீட்டிற்கான ஆறங்கம் எங்கே உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆகவே வேதமுதல்வனான எம்பெருமானிடமிருந்து வேதங்களை எப்படி பிரிக்க முடியாதோ அதேப்போல சைவத்திலிருந்தும் வேதங்களைப் பிரிக்க முடியாது. அதேப்போல சைவர்களான சோழர்களிடமிருந்தும் வேதங்களைப் பிரிக்க முடியாது..!

  ஆதித்தச் சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட பள்ளிப்படை கல்வெட்டு ஒன்றில் ஆறு சமயங்கள் இருந்ததாகவும் அந்த ஆறு சமயங்களில் இருந்தவர்களும் அக்காலத்தில் நடந்த இந்திரவிழாவில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறு சமயங்களும் வேதங்களைப் பொதுவாக ஏற்ற சமயங்களே ஆகும். இந்த ஆறு சமயங்களும்தான் இன்று இந்துமதம் என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது. ஆகவே சோழர்களை சைவர்கள் என்பது எவ்வளவு சரியானதோ அதேப்போல இந்துக்கள் என்பதும் மிகச் சரியானதே..!

  – பா இந்துவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *