எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்

எழுநூறாண்டு பழைமையான ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்

தீபாவளிப் பண்டிகை வந்து விட்டாலே இது எமக்கான பண்டிகை அல்ல என்றும் இது வட நாட்டார் பண்டிகை தான் என்று தொடர்ந்து சிலர் சமூக வலைத்தளங்கள் வழியே பேசுவதை, எழுதுவதை கேட்கிறோம். படிக்கிறோம்.

அதற்கு அவர்கள் பல விநோதமான முன்வைப்புக்களைச் செய்வதையும் காண்கிறோம்.

இரணியன் தமிழன், இராவணன் தமிழன், நரகாசுரன் தமிழன், சூரபத்மன் தமிழன் என்றெல்லாம் பரவிவருகின்ற இந்த வியாதிக்கு இலகுவில் மருந்து கிடையாது.

தீபாவளி நரகாசூர சம்ஹாரத்தோடு தொடர்புடையதாக பேசப்படுவதால், முப்பாட்டன் நரகாசூரனுக்கு வீர வணக்கம் என்றெல்லாம் கூட எழுதுகிறார்கள்.

அது சரி, நரகாசூரன் பிரக்ஜோதிஷபுரத்தை – அதாவது இன்றைய அசாம் பகுதியை – ஆண்ட அரசன் என்ற குறிப்பு மகாபாரதத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. அப்போது எப்படி அசாம் அரசன் தமிழன் ஆவான் ? என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.

சர்வதேச சமூகமே உலக இந்துக்களின் பொதுவிழாவாக தீபாவளியை கணிக்கத் தொடங்கிய பிறகு, இந்த நகைச்சுவை வாதங்கள் அதிகரித்திருக்கின்றன.

ஆனால், ஒரு கேள்வி மட்டும் பதில் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

அது, அப்படி எல்லாம் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடியிருந்தால் ஏன் அது பற்றிய செய்திகள் பழைய நூல்களில் கிடைக்கவில்லை? ஏதாவது தீபாவளி பற்றிய கல்வெட்டுகள், சாசனங்களாவது தமிழில் கிடைத்ததா ?

என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கார்த்திகைத் தீபம் குறித்து வியந்து விதந்துரைக்கும் பலப்பல செய்திகளை பழந்தமிழிலக்கியங்களில் பரக்கக் காண முடிகிற போதும், தீபாவளி என்று குறித்துத் தேடினால் கிடைப்பது மிகச்சிலவே.

இது பற்றி ஆராய்ந்த கல்வெட்டு அறிஞரான குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் பொ.பி 1542 க்குரிய திருமலை திருப்பதி கல்வெட்டை தீபாவளிக்கான பழைய ஆதாரமாக குறிப்பிடுகிறார்.

தீவாளி அதிரசப்படி இரண்டு என்று தீபாவளி திருவமுதுக் கட்டளையாக அது விளங்குகின்றது.

அது போலவே, பொ.பி 1753 ஆம் ஆண்டுக்குரியதான செப்பேடு ஒன்றையும் அவர் அடையாளப்படுத்துகிறார். அது திருவாரூரிலுள்ள சித்தாய்மூர் சிவாலயத்தில் நடந்த “தீவாளி அபிஷேக விழா” குறித்த செப்பேடு ஆகும்.

எனினும் இவை கூட, நாயக்கர் காலத்தை ஒட்டியனவாகவே காணப்படுகின்றன. ஆக, இக்காலத்திற்கு முன்னர் தீபாவளி தமிழர்களால் கொண்டாடப்படவில்லையா ? என்ற கேள்வி எழலாம்.

மிகவும் அதிசயமான முறையில் பழைமையான இலங்கை தமிழ் இலக்கியமான சரசோதி மாலையில் தீபாவளி கொண்டாடப்பட்டது பற்றிய மிகப்பழைய குறிப்பு கிடைக்கிறது.

பொதுயுகம் 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது இந்நூல்.

இரவி நற்துலை சேர் மாதம் இராக்கதிர் குறையும் பக்கம்
வரு பதினான்கு வந்த வைகறைப் பொழுது தன்னில்
உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய்
மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே.

என்று இந்நூல் சொல்கிறது.

ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசியில் எண்ணெய் வைத்து வெந்நீரில் கங்கா ஸ்நானம் செய்வதால் பித்ரு தேவர்களும் மகிழ்ச்சியடைவர் என்று மிக அழகாக தீபாவலி என்று தெளிவாக இந்நூல் சொல்கிறது.

சரசோதிமாலை என்ற இந்நூலின் ஏழாவது படலமான தெய்வவிரதப் படலத்தில் உள்ள தீபாவளி குறித்த இச் செய்யுளுக்கு அடுத்த செய்யுளில் ‘ஆரல் நலமாமதி’ என்று திருக்கார்த்திகை தீபமும் சொல்லப்படுவதால், அதுவும் இதுவும் அப்போதே தனித்தனியாகவே வழக்கில் இருந்தமையும் தெரிகின்றது.

இலங்கை தமிழ் இலக்கியங்களில் மிகப்பழைமையானதாக கருதப்படும் இந்த சரசோதி மாலை போசராச பண்டிதரால் எழுதப்பட்டது.

ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றியும் ஜோதிட நம்பிக்கைகள் குறித்தும் பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் நூலான இந்த சரசோதிமாலையை இங்கு தரவிறக்கிப் படிக்கலாம்:

https://tinyurl.com/sarasothimalai

வியப்பு யாதெனில், இந்நூல் இலங்கையில் தம்பதெனியவை இராஜதானியாக கொண்டு அரசாண்ட சிங்கள அரசனான பராக்கிரமபாகுவின் அரண்மனையில் தான் அரங்கேறியிருக்கிறது.

இந்த போசராச பண்டிதர் குறித்த அரசனின் அரசவைப்புலவராக விளங்கியிருக்க வேண்டும். தவிரவும் இந்நூல் ஒரு ஜோதிட நூலாகும்.

இந்நூல் எழுந்த 14ஆம் நூற்றாண்டு மிக முக்கியமானது.

அக்காலத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது.

இலங்கையின் தென்முனையான தேவிநுவரையில் இருந்த புகழ்பெற்ற விஷ்ணு கோயிலொன்று அக்காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது அப்பகுதியில் தமிழர்கள் இல்லாத போதும் கோயில் இருக்கிறது. சிங்கள மக்கள் அங்கே விஷ்ணு மூர்த்தியை வழிபாடு செய்வதை காண முடிகிறது.

அக்கோயிலில் போசராசபண்டிதர் அர்ச்சகராக விளங்கினார் என்றும் கருதப்படுகிறது. தேவிநுவரை என்பதே தேனுவரையென்று மருவியிருக்கிறது. தேனுவரைப்பெருமாள் என்றும் இவருக்கு மறுபெயர் சொல்லப்படுகிறது.

சரசோதிமாலை அரங்கேறிய காலம் கி.பி.1310. இந்த காலப்பகுதியில், பாண்டியப்பேரரசு திடீரென வீழ்ச்சியடைகிறது. அரசுரிமைக்காக இரண்டு இளவரசர்களிடையே பாண்டிய நாட்டில் உள்நாட்டுப்போர் தொடங்குகிறது. வடஇந்தியாவிலிருந்து முஸ்லிம்களின் படையெடுப்பு தொடங்குகிறது. தமிழ்நாடெங்கும் பேரழிவு ஏற்படுகிறது. தமிழரசர்களால் தலைதூக்கவே முடியவில்லை.

சில ஆண்டுகளுக்குள் மதுரையில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் தமிழ்நாடு விசயநகரப் பேரரசுக்குள் அடங்குகிறது. தமிழ்நாட்டிலே குழப்பம் மிகுந்தது! அந்நியரின் கெடுபிடிகள் அதிகரித்தன. கோவில்கள் எரிக்கப்பட்டன. அல்லது கொள்ளையடிக்கப்பட்டன!.

இந்தக்காலத்திலே, தமிழ்மக்கள் பெருமளவில் இலங்கையிலே குடிபுகுந்திருக்க வேண்டும். வடஇலங்கையிலிருந்த ஆரியச்சக்கரவர்த்திகள் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தனியரசு செய்யத் தொடங்கியிருக்க வேண்டும் என்றெல்லாமும் கூட கருத முடிகிறது.

எனவே, குறிப்பாக பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் கூட பாண்டிய – சோழ அரச காலத்தில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றுகளை இன்று எம்மால் கண்டறிய இயலாதுள்ளன.

ஆயினும் அச்சம கால இலங்கை தமிழ் இலக்கியம் அக்குறையை நீக்குகிறது. அது ஒரு செய்தியை சொல்வதாக ஊகிக்கலாம்.

அதாவது, எழுநூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர் என்பதே அதுவாகும்.

இரவி நற்துலை சேர் மாதம் இராக்கதிர் குறையும் பக்கம்
வரு பதினான்கு வந்த வைகறைப் பொழுது தன்னில்
உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய்
மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே.

2 Replies to “எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்”

  1. மிகவும் பயனுள்ள கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி.

  2. திராவிடர்கள் தமிழர்களை இந்தியர்களிடமிருந்தும், இந்துக்களிடமிருந்தும் பிரித்து ஒதுக்குவதற்காகவே, தமிழர்கள் இந்தியர்கள் இல்லை, இந்துக்கள் இல்லை என்று கபடநாடகம் ஆடுகிறார்கள்.
    அதேநேரம், திராவிடர்கள் மற்ற மாநில இந்தியர்களோடு நல்ல உறவில் வாழ்கிறார்கள், மற்ற மாநிலத்திலுள்ள கோவில்களில் ஆரிய முறையில் வழிபடுகிறார்கள்.

    தமிழர்கள் திராவிடரிடமிருந்து பிரிந்து விடுதலையடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *