இரண்டாம் பகுதி -1
எவர்களுடைய குழந்தைக்கு கல்வி கற்பிக்கப்படவில்லையோ, அதன் தாய் எதிரி, தந்தை விரோதி; அன்னங்களுக்கு இடையிலுள்ள கொக்குபோல அவை நடுவில் ஒளிரமாட்டாது.
சாணக்கிய நீதியின் இரண்டாம் பகுதியிலுள்ள அழுத்தம் திருத்தமான செய்யுள் இதுதான். கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமானது, அதைச் செய்யாவிடில், குழந்தையின் நன்மையை விரும்புகின்ற தாய் தந்தையவரே அதற்கு – அதனுடைய வாழ்வுக்கு எதிரியாகிவிடுவர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார், சாணக்கியர்.
இப்பகுதியில் அவர் என்ன அறிவுறுத்துகிறார் என்று பார்ப்போமா?
அனுருதம் ஸாஹஸம் மாயா மூர்க்க2த்வமதிலுப்3த4தா |
அஶௌசத்வம் நிர்த3யத்வம் ஸ்த்ரீணாம் தோ2ஷா: ஸ்பா4வஜா: || 2.1 ||
பதவுரை: பொய்யுரைத்தல், துணிச்சல், மயக்குதல், மூர்க்கத்தனம், பேராசை, தூய்மையின்மை, இரக்கமின்மை பெண்களின் இயற்கைக் குறைபாடுகள். … 2.1
விளக்கம்: இப்படி ஒருவர் பெண்களைப் பற்றிக் குறைகூறுவதும், அது நீதிநெறி, அறிவுரை என்பதும் எங்ஙனம் என்று தோன்றுகிறதல்லவா? தமிழ் சின்னத்திரையில் பெண்களைச் சித்தரிக்கும் விதமாக அல்லவா சாணக்கியர் எழுதியிருக்கிறார்!? பெண்களைத் தெய்வமாய்ப் போற்றாது இப்படித் தூற்றுவதை அறிவுரை என்று எடுத்துக்கொள்வதைவிட அதை எரியிட்டுக் கொளுத்தவேண்டும் என்று பொங்கியெழத் தோன்றுகிறதும் நியாயம்தான்.
ஆனால், ஆய்ந்தறிந்து பார்த்தால் இச்செய்யுள் ஆண்களை இடித்துக் கூறும் அறிவுரை என்றே எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
எப்படி?
சாணக்கியர் காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும்கூட ப் பெண்களுக்கு எவ்வித உரிமை கொடுக்கப்பட்டுள்ளது?
இந்தியா, இஸ்ரேலின் முதல் பிரதமர், இரும்பு மனிதி என்று சொல்லப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர், ஜெர்மனியின் அதிபர் பெண்கள் – அந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று மார்தட்டிக்கொள்ளலாம்.
பொறுமை. இன்னும் உலகத்தின் வல்லரசுகளான அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் எந்தப் பெண்ணும் அதிபராகவில்லை. எல்லா நாடுகளிலும் பெண்கள் அத்துமீறப் படுவதும், பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுச் சித்திரவதைப் பட்டுக் கொலைசெய்யப்படுவதும் தினமும் செய்திகளிலும், ஊடகங்களிலும் வந்துகொண்டுதானே உள்ளன?
ஆகவே, பெண்கள் தங்களை அடக்கி ஆளும் ஆண்களிடமிருந்து தங்களை எப்படிக் காத்துக் கொள்வது?
ஆபத்திலிருந்து தப்பிக்கப் பொய்யுரைக்கத்தான் வேண்டும்.
பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
என வள்ளுவப் பெருமானும் கூறியுள்ளார். ஆகவே, தன்னைக் காத்துக்கொள்ளப் பொய்யுரைப்பது எப்படித் தவறாகும்? அதற்காகத் துணிவுடன் செயல்பட வேண்டும்; மயக்கித்தான் தப்பிக்கலாம்; அது மூர்க்கத்தனமாகத்தான் தோன்றும்.
கணவனை இழந்த கைம்பெண்களின் நிலை இக்காலத்திலும் மோசமாகவே உள்ளது. ஆகவே, பிற்காலத்திற்காகவும், தமது பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் பொன் நகைகள் போன்று விலையுயர்ந்த பொருள்களை வாங்கிச் சேமிக்கவேண்டும். இது பேராசையாகத்தான் விஷயமறியா ஆண்களுக்குத் தோன்றும்.
மாதம் மூன்றுநாள் மாதவிடாய் ஏற்படுவது இயற்கை பெண்களுக்கு அளித்த வழக்கம். அதைத் தூய்மையின்மை என்றுதான் சொல்லிவந்தனர். இப்பொழுதான் அந்த எண்ணம் நீங்கிவருகிறது.
இரக்கமின்மை என்று ஏன் குறைசொல்கிறார்கள்? ஆண்கள் யாரிடம் இரக்கம் காட்டுகிறார்கள்? அப்படி இரக்கத்துடன் செயல்பட்டால் உலகமே சுவர்க்கபுரியாக அல்லவா மாறியிருக்கும்! தன்னிடம் அத்துமீறுபவர்களிடம், தன்னை அடிமைசெய்து களிப்பவரிடம் இரக்கமா காட்ட இயலும்?
எண்ணிப்பார்த்தால், இந்தச் செய்யுள் ஆண்களுக்குச் சாணக்கியர் கொடுக்கும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது. அரசர் இதை மனதில் கொண்டே செயல்பட வேண்டும்.
போஜ்யம் போஜநஶக்திஶ்ச ரதிஶக்திர்வராங்கனா |
விபவே தானஶக்திஶ்ச நா(அ)ல்பஸ்ய தபஸ: பலம் || 2.2 ||
பதவுரை: உணவு, உணவுண்ணும் திறன், இல்லற இன்பத் திறன், வாழ்க்கைத் துணை, கற்றோருக்கு தானமளிக்கும் சக்தியும் குறைத் தவசிக்குக் கைகூடா. … 2.2
விளக்கம்: கானகம் சென்று கண்களை மூடிப் பலகாலம் , தலைகீழாகவோ, ஒற்றைக் காலில் நின்றோ, அமர்ந்தோ நிஷ்டையில் ஆழ்வதுதான் தவம் என்பதற்குப் பொருள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படித் தன்னை வருத்தி இறைவனைத் தேடுபவரைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதால் அதையே தவம் என்று எண்ணிவருகிறோம். ஆனால், இலக்கை அடையத் தன்னை வருத்திக்கொண்டு விடாமுயற்சியில் ஆழ்வதே தவம்.
‘தபதி’ என்ற வடசொல் சுடுகிறது என்று பொருள் கொடுக்கிறது. விடாமுயற்சியுடன் செயலில் ஆழ்ந்தால் உடலில் சூடு ஏறும்; அறிவியலும் செயல் சூட்டை உண்டுபண்டும் என்று சொல்கிறது. சூட்டின் வாயிலாக செயலை நிகழ்த்தலாம். கார் ஓடுவது, மின்சாரம் உண்டுபண்ணுவது எல்லாம் சூட்டைச் செயலாக மாற்றுவதன் வாயிலாகத்தான். ஆகவே, விடாது செயலாற்றுவது ஒருவகையில் தவம்தான்.
உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று தலையாய தேவைகளில் முதலிடம் பெறுகிறது, உணவு. அந்த உணவைத் தான் மனித இனம் தேடுகின்றது. உணவு தானாகக் கிட்டிவிடாது. அதற்காக உழைத்துப் பொருள் ஈட்டித்தான் உணவை அடையவேண்டும்.
உணவு கிட்டிவிட்டால் மட்டும் போதாது; அந்த உணவைச் செரித்து, உடலில் திறன் பெருக வேண்டும். அதற்குக் கண்டகண்ட உணவுகளை உண்ணக்கூடாது. உடல் ஆராக்கியமாக இருக்க, உடலில் செரிமன சக்தி பெருக உடலுழைப்பு தேவை. அது இப்பொழுது இல்லாததால்தான் – உடலுழைப்பு இல்லாமல் நாற்காலியில் அமர்ந்தே வேலைசெய்வதால்தான், பலருக்கு நீரிழிவு என்ற டயாபிடீஸ் நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
உழைத்து முன்னேறி நல்ல உடல்கட்டுடன் இருந்தால்தான் எவரும் அவருக்கு வாழ்க்கத் துணை விரும்பி அமைவர். உடல்நலம் குன்றி, சோம்பேறித்தனத்துடன் இருப்பவரை எவரும் விரும்பார். அப்படிப்பட்டவருடன் இல்லற இன்பம் எப்படிக் கிட்டும்?
இல்லாதவருக்கு எவரும் இரங்குவர். அதனால்தான் கூன், குருடு, ஊனமுற்றோர் தொழுகைத் தலங்களில் அமர்ந்து பிச்சை கேட்கின்றனர். அதைப் பற்றிச் சாணக்கியர் இங்கு குறிப்பிடவில்லை.
நாடு முன்னேறவேண்டும், மக்கள் நாட்டில் நற்பண்புடன் திகழவேண்டும் எனில், கற்றோரைப் போற்றவேண்டும்; இது எத்துறையானாலும் பொருந்தும். ஏன் அனைவரும் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் செல்ல விரும்புகின்றனர்? அங்கு கற்றோர் போற்றப் படுகின்றனர். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் பலரும் மானியம் அளிக்கின்றனர். எந்த அளவுக்கு மானியம் அளிக்கின்றனர் என்றால், வெளிநாட்டிலிருந்து மாணவர் வந்து இலவசமாகக் கற்கும் அளவுக்குக் கல்விக்காகப் பணம் செலவிடப்படுகின்றது.
இதே நிலை பாரத தேசத்திலும் இருந்தது. இருக்கவேண்டும். அதை அனைவரும் தவமாகவே செய்யவேண்டும். இதைத்தான் சாணக்கியர் எதிர்மறையாக வலியுறுத்துகிறார்.
யஸ்ய புத்ரோ வஶீபூ4தோ பா4ர்யா ச2ந்தா(அ)நுகா3மிநீ |
விப4வே யஶ்ச ஸந்துஷ்டஸ்தஸ்ய ஸ்வர்க3 இஹைவ ஹி || 2.3 ||
பதவுரை: எவருடைய மகன் கீழ்ப்படிந்திருக்கிறானோ, இறுதிவரை நேசிக்கும் மனைவி, கிடைப்பதில் மகிழ்வடைபவர் எவரோ அவருடைய சுவர்க்கம் இங்குதான் இருக்கிறது. … 2.3
விளக்கம்: எச்சமயத்தோராக இருப்பினும் இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் விண்ணுலகத்தில் சுவர்க்கத்தில்தான் இருக்க விரும்புகின்றனர். ஒவ்வொரு சமயமும் அதை அடையப் பல வழிகளை வலியுறுத்துகின்றன்.
ஆனால், சாணக்கியரோ, இவ்வுலகத்திலேயே இருக்கிறது என்று எடுத்துச் சொல்கிறார்.
நாம் அனைவரும் நிறையப் பொருளீட்டி, காண்பதையெல்லாம் வாங்கிக் குவித்தால் சுவர்க்க இன்பத்தைத் துய்க்கலாம் என்றே எண்ணுகிறோம். நிறையச் செல்வம் இருந்தால், அதைக் கட்டிக் காக்கவேண்டும், பாதுகாக்க வேண்டும். அது மனத்தில் நிம்மதியைக் கொடுக்காது. முதலில் கார் இருந்தால் மகிழ்ச்சியாக் இருக்கும் என நினத்துக் கார் வாங்கினால் அந்த மகிழ்வும் நம்மிடம் இருக்கும் காரைவிட அதிக விலைமதிப்புள்ள ஒன்றை நமது பக்கத்துவீட்டுக்காரரோ, நம்முடன் வேலைசெய்பவரோ வாங்கிவிட்டால் மறைந்துவிடும். அதுபோலத்தான் வீடு, ஆடை, மற்ற பொருள்களெல்லாமே. இருப்பதில் நிறைவடைந்தால் ஏற்படும் மகிழ்வுதான் உண்மையானது; மற்றவை கானல் நீரை ஒத்தவையே.
திருமணம் ஆகிறது; ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது சொலவடை. ஆனால், இறுதிவரை நேசிக்கும் வாழ்க்கைத் துணை அமைந்தால் இல்லற வாழ்வின் இன்பத்திற்கு இணையேது? அழகான வாழ்க்கைத் துணையைத் தேடி அலையலாம். ஆனால் இறுதிவரை ஒருவரையொருவர் நேசிக்காவிடில் இல்லறம் நல்லறமாக இருக்கவே இருக்காது. இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.
இல்லறம் வாழ்க்கைத் துணையை மட்டும் பெற்றுத் தருவதில்லை; மகவை/களையும் தருகிறது. மனித இனம் தொடருவதற்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது என்பதை அறிந்ததாலேயே, அனைத்துச் சமயங்களும் இல்லற வாழ்வையும், குழந்தை பேறையும் போற்றுகின்றன.
அப்படி மனித இனம் தொடரத் தேவையான மகவு/கள் பிறந்ததும் அதைப் போற்றி வளர்க்கும் பெற்றோர் தமது குழந்தைகள் அறிவுடனும், நற்பண்புகளுடனும் வளரவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.
ஆதலால்தான், பொய்யாமொழிப் போதாரும்,
தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தியிருப்பச் செயல்
என்றும்,
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனும் சொல்
பகர்ந்திருக்கிறார்.
தந்தை/தாய் தன் மகனை(ளை) முன்னேறச் செய்யவேண்டுமெனில், மக்கட் செல்வங்கள் தங்கள் பெற்றோருக்குத் தகுந்த மதிப்புக் கொடுத்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்தான் இயலும்.
இவ்வளவும் நடந்தால் சொர்க்கத்தைத் தேடி வாழ்வின் முடிவுவரை காத்திருக்க வேண்டாம், அது இவ்வுலகிலேயே அப்படிப்பட்டவருக்குக் கிட்டிவிடும்.
தே புத்ரா யே பிதுர்ப4க்தா: ஸ பிதா யஸ்து போஷக: |
தந்மித்ரம் யஸ்ய விஶ்வாஸ: ஸா பா4ர்யா யத்ர நிர்வ்ருதி: || 2.4 ||
பதவுரை: தந்தைக்கு அடியவர் (பக்தர் எவரோ, அவரே மக்கள்; அவருக்கு ஊட்டமளித்துக் காப்பவன் தந்தை; எவனிடம் உண்மையாக இருப்பவனே அவனது நண்பன்; யாரிடம் மிகவும் அன்புடனிருக்கிறாளோ அவளே மனைவி. … 2.4
விளக்கம்: திரும்பவும் குடும்பம், நட்பைப்பற்றி விளக்க முற்படுகிறார், சாணக்கியர். இதிலிருந்து இவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை நாம் அறீயலாம். ஆகவே, பலவிதமாக அதை விளக்க முற்படுகிறார்.
எந்த மகன்/ள் பெற்றோரைக் கடவுளராக எண்ணி அடிபணிந்து பக்திசெலுத்துகிறார்களோ, அவரே மக்கட்செல்வம் என்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டதுதானே ராமாயணம்? அப்படிப்பட்ட ராமகாதையைச் சொல்லிச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்ப்பது நமது பாரத சமுதாயம்! அதுபோல தாயின் சொல்லைத் தலைமேல் கொண்டு செயலாற்றிவர்கள்தான் மகாபாரதத்தின் நாயகர்களான பாண்டவர்கள்! இந்த இரண்டும்தான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் மாபெரும் காவியங்களாகத் திகழ்ந்து வருகின்றன.
அதுபோலவே, தந்தையும் தன் தனயரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும். சரிவர அவர்களின் தேவையை முன்கூட்டியே உணர்ந்து பராமரிக்க வேண்டும்.
நட்புக்கு இலக்கணம் நினைத்தவுடன் நம் அனைவருக்கும் கர்ணன்-துரியோதனனின் நினைவுதான் வரும். ‘எடுக்கவோ, கோக்கவோ,’ என்று கேட்டு, தன் மனைவியையும், நண்பனையும் சந்தேகப்படாத பாங்கையும் சான்றாகக் காட்டுவோம். ஆனால், அதைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக மறுக்கவேண்டியுள்ளது.
- மகாபாரதப் போர் துவங்குமுன் அவனை அர்த்தரதி என்று பீஷ்மப் பிதாமகர் கூறியதற்காக, அவர் களத்தில் உள்ளவரை தான் களமிறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான் கர்ணன். ஏனெனில், அர்த்தரதனான அவன், கௌரவர் படையில் சிறப்பான இடத்தைப் பெற இயலாது. ஆகவே, தனது பெருமைக்காகத் தன் நண்பன் துரியனின் வெற்றிக்கு அடிகோல மறுத்துவிட்டான்.
- ‘நாகாஸ்திரத்தைத் தலைக்குக் குறிவைக்காதே, மார்புக்குக் குறிவைத்து விடு!’ என்ற சல்லியனின் அறிவுரையைப் புறந்தள்ளி, ‘வீரனுக்கான சாவு விஜயனுக்குக் கிட்டக்கூடாது. தலையின்றிப் புகழின்றிச் சாகவேண்டும்,’ என்ற இறுமாப்புடன் தலைக்கே குறிவைத்து, அர்ஜூனன் பிழைக்க வழிவகுத்தான். அப்பொழுதும், பழிதீர்க்கும் பகைதான் தலைதூக்கியதே தவிரத் தன் நண்பன் துரியன் போரில் வெல்லவேண்டும் என்று நினைத்தான் அல்லன், அவன்.
ஆனால், கண்ணனை நட்புக்கு முன்னுதாரணமாகக் காட்டலாம்.
- பாஞ்சாலி துகிலுறியப்பட்டபோது அனைவரும் கைகட்டுக்கொண்டுதான் நின்றனர் – அவளது ஐந்து கணவர்களும். ‘ஹே, கண்ணா!’ என்று அவள் இரு கைகளையும் உயர்த்திக் கதறியபோது, எங்கிருந்தோ அவளுக்கு அவிழ்க்க அவிழ்க்க, அவிழ்க்க இயலாத அளவுக்கு ஆடைகளை அளித்துக் காப்பாற்றினான்.
- கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் தலையைக் குறிவைத்து எய்தபோது, தேரைக் காலால் அழுத்தித் தரையில் புதையச் செய்து, ‘தலைக்கு வந்ததைத் தலைப்பாகையுடன்’ செல்லவைத்தான்.
- ‘என் மைந்தன் அபிமன்யுவின் இறப்புக்குக் காரணமான ஜயத்ரதனை இன்று கதிரவன் சாய்வதற்குள் கொல்லாவிடில் என் உயிரைத் தியாகம் செய்வேன்,’ என்று சூளுரைத்த தன் நண்பன் அர்ஜுனனின் உயிரைக் காக்கக் கதிரவனையே சிறிது நேரம் தன் சக்கரப் படையால் மறையச் செய்தான், அந்த மாயக் கண்ணன்.
இதை எவரும் எடுத்துச் சொல்லவில்லை. அதனால், கர்ணனே புகழப் படுகிறான்.
உடுக்கை இழந்தவன் கைபோல மற்றாங்கு
இடுக்கண் களைவதே நட்பு
என்ற வள்ளுவப் பெருந்தகையின் தமிழ்மறையே கண்ணனையே உதாரணமாகக் காட்டா நிற்கிறது.
மனைவிக்கு உதாரணம் என்றால், அது நளாயினி எனலாம். இறுதிவரைத் தன் கணவனின் உயிருக்காக இயமனுனே போராடி வெற்றியும் பெற்றாள். அவள் தன் கணவன்பால் கொண்ட உண்மையான அன்பு அவனுடைய உயிரை மீட்டதோடு மட்டுமல்ல, அவனைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து விலைமகள் இல்லமும் செல்லவைத்தது.
பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதி3னம் |
வர்ஜயேத்தாத்3ருஶம் மித்ரம் விஷகும்ப4ம் பயோமுக2ம் || 2.5 ||
பதவுரை: (நமக்குப்)பின்னால் செயலைக் கெடுப்பவனும், எதிரில் அன்பாகப் பேசுபவனும், நஞ்சுள்ள குடத்தைப் பால் என்னும் நண்பனை விட்டுவிடவேண்டும் … 2.5
விளக்கம்: ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்,’ என்றுதான் வள்ளலாரும் இறைவனை வேண்டினார்.
நமக்கு நேரில் போரிடும் எதிரியைவிட, நம் முதுகில் குத்த முயலும் அணுக்கரிடம்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும் என அரச தந்திரிகளும் அறிவுரை கூறுகின்றனர். நண்பன் என்று போற்றப்பட்ட புரூட்டஸும், ஜூலியஸ் சீசரை இறுதியில் கத்தியால் குத்திக் கொன்றதும் வரலாறு.
அப்படிப் பட்டவர் பாலில் நஞ்சைக் கலந்து கொடுக்கவும் தயங்கார். அவர்கள் நண்பர்களே அல்லர். ஆயினும் உதட்டில் தேனைக் கலந்து பேசுவர், நாமறியாது, நமக்குப் பின்னால் நமது வெற்றிக்கோ, நமது செயல்களுக்கோ குழிபறிப்பர். அப்படிப்பட்டவர் நம்மை நண்பர் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் அப்படிப்பட்டவரின் ஒரு செயலை அறிந்துகொண்டவுடனேயே அவரது தொடர்பைத் துண்டித்துவிடவேண்டும்.
இதைத்தான், ‘வம்புசெறி துர்ச்சனர் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி,’ என்று நீதிநூல்களும் இடித்துரைக்கின்றன.
(தொடரும்)