மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்

சங்கீதம் பற்றிய நாவலையோ, சோழர்கள் பற்றிய நாவலையோ சினிமாவாக்கத் துணியும் போது, இசை எவ்வளவு பெரிய துணை என்பது கண்கூடாக, errrr, காதுகூடாக சமீபத்தில் தெரிய வந்தது. முதலில் “ஈயாரி எசமாரி” சமாச்சாரங்கள் தவிர்க்கப் பட வேண்டும், கொஞ்சம் மண்ணின் மனம் வீசவேண்டும். இல்லையென்றால் சக்கரைப்பொங்கலுக்கு மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது போல அவமானமாய் இருக்கும். குமட்டும்.

இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்.

இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் மோகமுள் எனும் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார் இளையராஜா.

நாவல் ஒரு சங்கீத உபாசகனின் கதை. ரங்கண்ணாவிடம் சங்கீதம் சொல்லிக்கொள்ளும் பாபு. குருவே தெய்வம் என்று வாழ்ந்து வருபவன். சங்கீத உலகில் உச்சஸ்தாயியை தொடுவானா இல்லையா என்பது கதையின் முக்கியமான கருவில் ஒன்று. இடையில் “யமுனா” நதியில் நீந்த வேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட படம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று ராஜாவுக்குத் தெரியும்? சங்கீத உலகம் மனதில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தியாகராஜரின் கீர்த்தனையோடு ஆரம்பிக்கிறார் ராஜா. அதுவும் குருபக்தி என்றால் என்னவென்று தியாகராஜர் பாடும் கீர்த்தனை. How apt!

ஷட்ஜம்:

“குருலேக எடுவன்டி” என்ற கெளரி மனோகரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையுடன் ஆரம்பம். நாதஸ்வரத்தில் தியாகராஜரின் ஸ்வரம். அப்படியே ஒரு தெய்வீகம் பரவுகிறது நம் செவிப்பறைகளில். தஞ்சாவூர் மண்ணின் மனத்தை இசையில் நம் காதுகளில் சேர்க்கிறார்.

ரிஷபம்:

நாயகனின் அறிமுகம், ஒரு பாட்டுடன். “கமலம் பாத கமலம் உயர் மறையெல்லாம் புகழும் கமலம் பாத கமலம்” என்று ராமப்ரியா ராகத்தில் அருமையான கீர்த்தனை ராஜா அமைத்துக் கொடுக்கிறார். ராமப்ரியா, அதிகமாக கச்சேரிகளில் பாடாத ராகம். தெய்வீகம்.

காந்தாரம்:

பாடுபவர் குரலில் தேன் இருக்கலாம், மது இருக்கலாமா?

ஒரு பாடகர் கோவிலில் நடக்கும் கச்சேரிக்கு ஸ்வரங்களை சாராயத்தில் ஊறவைத்து பாடவருகிறார். ரங்கண்ணா கோபம் கொண்டு, அவரை விரட்டிவிட்டு, தன் சிஷ்யன் பாபுவை பாடும் படி கேட்கிறார். “சங்கீத ஞானமு பக்திவிநா” என்ற தன்யாசி ராக கீர்த்தனையை பாடுகிறான். கச்சேரித் தரம் + பொக்கிஷமான interludes.

மத்யமம்:

பக்கத்துக்கு வீட்டில் ஒரு இளம் பெண். அவளுக்கு நடந்த திருமணம் அவளுக்கு துரோகம் செய்தது . அழகு நிறைந்தவளுக்கு சற்றும் பொருந்தாத கணவன். மகரந்தச் சேர்க்கை சேராத புதுமலர். காற்று புகாத புல்லாங்குழல். ஒரு கட்டத்தில் தன்னைக் கல்யாணம் செய்துகொண்ட பெரியவருக்காக அலங்காரம் செய்துகொள்ளும் பொழுது, ஏக்கமாக வயலினும், புல்லாங்குழலும் தனித்தனியாக வாசிக்கிறது. ஏழு ஸ்வரங்கள் ஏக்க ஸ்வரங்களாய் மாறும் அதிசயம் ராஜாவிடம் மட்டுமே நிகழும்.

ஒருமுறை பாபுவிடம் தன் தாகத்தை தீர்த்துக்கொள்கிறாள். திருமணம் செய்த துரோகத்தை சாதிப்பூவின் மணத்தால் சரி செய்கிறாள். பாவம் அவளும் என்னதான் செய்வாள்! அங்கே தனியாக ஒலித்த வயலினும் புல்லாங்குழலும் இங்கே ஒன்று சேர்ந்து கொண்டு விடுகிறது. Whatte thought !

பஞ்சமம்:

அசுகத்தில் இருக்கும் குருவின் முன்னால் சிஷ்யன், நாராயண கௌளையில, பாடும் “ஸ்ரீராமம் ரவி குலாப்தி சோமம்” என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை மனதை பக்தியால் நிரப்புகிறது. அதற்கும் மேலாக தியாகராஜ ஸ்வாமிகளின் சாருமதி ராகத்தில் மோக்ஷமு கலடாவில் வரும் ” வீணா வாதன லோலுடௌ சிவ மனோ” வரிகளை வெறும் தம்புராவுடன், KJ ஜேசுதாஸ் ஐயா, பாடும் பொழுது முக்தி வாசனை செவியருகே வந்து போகிறது. அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்தது ராஜமுத்திரை. அதுவும் அந்த “சிவமனோ” வில் முடியும் landing note (நிஷாதம்) மனதை என்னவோ செய்கிறது.

தைவதம்:

காய்ந்து போன மரமாய் நின்ற பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம். The best piece of the movie and my favorite.

நிஷாதம்:

சங்கீத சாகரத்தில் மூழ்குவதுதான் கனவு என்றாலும் “யமுனை”யையும் ஆள நினைத்தவன் பாபு. அதுவும் ஒரு கட்டத்தில் நிறைவேறியபின் படம் ஒரு தானத்துடன் முடிவுறுகிறது. ராகம் தானம் நிறைவேறியது. மீதம் இருக்கும் வாழ்கை பல்லவி என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேல்ஸ்தாயி ஷட்ஜம்:

இசை/காவேரி மண் சம்பந்தப்பட்ட படம் என்பதால் முழுவதும் ராக ஆலாபனை, தீக்ஷிதர், தியாகராஜ ஸ்வாமிகள் க்ரிதிகள், பைரவியின் மகுடமான விரிபோனி வர்ணம் என்று படம் முழுதும் சங்கீத வாசம், ராகத்தின் ராஜ்ஜியம். நாதஸ்வரம் , வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் மற்றும் தம்புரா. இவ்வளவுதான் இவர் இந்தப் படத்தில் உபயோகித்த இசைக்க கருவிகள். ஆனால் இசையோ பிரம்மாண்டம்!!!

இப்படி ஒரு இசை முயற்சி இளையராஜாவால் மாத்திரமே சாத்தியம் ஆகும். இசையும் ஆன்மீகமும் மூச்சாகக் கொண்ட இவர் நமக்கு கிடைத்த வரம்.

மோகமுள் தி.ஜா.வின் எழுத்துக்காகப் படிக்கலாம். மோகமுள் படம் இளையராஜாவுக்காக பார்க்கலாம்.

இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசை மட்டும் கொண்ட காணொளி கீழே. அனுபவியுங்கள். ராஜாவின் உயரம் விண்ணை முட்டுவது தெரியும்.

இந்தப்படத்துக்கு ராஜாவுக்கு தேசியவிருது கிடைக்கவில்லை. பாவம் தேசியவிருது.

(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *