சாணக்கிய நீதி – 8

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

அத்தியாயம் 2-4

3லம் வித்4யா ச விப்ராணாம் ராஜாம் ஸைந்யம் ப3லம் ததா2 |

பலம் வித்தம் ச  வைஶ்யாநாம் ஶூத்ராணாம் பரிசர்யகம்  || 2.16  ||

பொழிப்புரை:    —    கல்வி அறிஞருக்குத் திறனாகும், அவ்வாறே அரசனுக்கு படை வலிமை; வணிகருக்குச் செல்வமும், உடல் உழைப்பாளிகளுக்கு பணியாற்றுவதும் வலிமையாகும்.                …             2.16

விளக்கம்ஒவ்வொரு விதமாகப் பணியாற்றுவோருக்கும் எது அப்பணியில் வலிமை என இச்செய்யுள் விளக்குகிறது.

‘விப்ர’ என்ற சொல்லுக்கு அறிஞர், ஞானி, தீர்க்கதரிசி, வேத விற்பன்னர், அந்தணர், அர்ச்சகர் என்ற பல பொருள்கள் உள.  இவரில் எவராக இருப்பினும், கல்விகற்றுச் சிறந்து விளங்கினால் மட்டுமே அவருக்கு மதிப்பு இருக்கும்.  அவரை எவர் எதிர்கொண்டு அறிவுரை கேட்டாலும், அவரிடம் கல்விகற்க வந்தாலும், அவர் கற்ற கல்விதான் அவருக்குத் துணையாகும்.  அதுதான் அவரது ஆற்றல், திறமை, வலிமை என்று சொல்லலாம். 

அக்காலத்தில் அரசராக விளங்குபவருக்குச் சொல்லப்பட்டது, இக்காலத்தில் நாட்டு அதிபர், தலைமை அமைச்சர், நாட்டை ஆள்பவருக்கும் பொருந்தும். 

எந்த நாட்டையும் காக்கப் படைகள் வேண்டும்.  அந்த நாடு எவ்வளவு தூரம் அமைதி விரும்பும் நாடாக இருப்பினும், அதன் செல்வத்தைக் கவரவோ, வேறு எக்காரணங்களுக்காகவோ, மற்ற நாடுகள் திட்டம் தீட்டிப் படையெடுக்கக் கூடும்.  உலக வரலாறும், புராணங்களும், பழங்கதைகளும் இதையே திரும்பத் திரும்பக் கூறுகின்றன.  எனவே, வலிமையான படைதான் இறுதியில் அந்த நாட்டைக் காக்கும்.  நாட்டைக் காக்கும் கடமை அரசரை/நாட்டை ஆள்பவரையே சாரும்.  அவருடைய பலம் அந்த நாட்டுக்கு அரணாக அமையும் படைகளே ஆகும்.  அதனால்தான் இன்றும் உலகின் வலிமை மிகுந்த நாடுகளும் தங்கள் படைபலத்தை இடைவிடாது பெருக்கிவருகின்றன.  எப்பொழுதும் அமைதிநாடு என்று பெயரெடுத்த சுவிட்சர்லாந்தும் தன் எல்லைகளைக் காத்துப் பத்தே நிமிடங்களில் தனது படையைத் தயார்நிலைக்குக் கொணரமுடியும்.[1]  அதன் மக்கள் அனைவரும் படைப் பயிற்சி பெற்றவரே.[2]

ஒரு தொழிலைத் தொடங்கவேண்டுமென்றால் முதல் , அதாவது செல்வம் வேண்டும்.  முதல் படைத்தவன் என்பதால்தான் தொழிலதிபரை முதலாளி என்று அழைக்கிறோம்.  ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ செய்யும் தொழில்கள் சரிவர நடத்தப்படாவிடில் நசித்துப் போகின்றன.  எப்பொழுதும் கடனின்றிக் கையிருப்பு வைத்திருக்கும் தொழில்கள்தான் சிறந்து விளங்குகின்றன.

ஆகவே, கையிலிருக்கும் செல்வம்தான் வணிகரின், தொழிலதிபர்களின் வலிமையாகத் திகழ்கிறது.

‘சூத்திரர்’ என்று எழுதியிருப்பினும், அதை ஒரு சாதியாகவோ, இழிவாகவோ பொருள்விளக்கம் செய்வது தவறு என்றுதான் தோன்றுகிறது.  அறிஞர், அரசர், வணிகர் என்போர் சாதியல்லர்.  அவர் தமது தகுதியாலோ, திறமையாலோதான் அத்தகுதியைப் பெறுகின்றனர்.  இச்செய்யுளில் அப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளதால், சாணக்கியர் செய்தொழிலை வைத்துத்தான் நான்காகப் பிரித்துள்ளார் என்ற முடிவுக்கு வந்து, ‘சூத்திரர்’ என்ற சொல்லுக்கு ‘உடல் உழைப்பை நல்குபவர்’ என்ற பொருளே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உடலால் உழைப்பவர் யாராக இருப்பினும், அவரது பிறப்பு எதுவாக இருப்பினும், அவர் தமக்கு மற்றவரால் கொடுக்கப்படும் வேலையைச் சிறப்பாகச் செய்தே வாழ்க்கை நடத்துகிறார்.  அதனால், நன்குபணியாற்றுவதே அவரின் வலிமையாகும். 

நிர்த4நம் புருஷம் வேஶ்யா ப்ரஜா ப4க்3நம் ந்ருபம் த்யஜேது |

2கா3 வீதபலம் வ்ருக்ஷம் பு4க்த்வா தா(அ)ப்4யாக3தா க்3ருஹம்  || 2.17  ||

பொழிப்புரை:    செல்வமில்லா மனிதனை விலைமகள், தோல்வியுற்ற அரசனை மக்கள், பழமற்ற மரத்தைப் பறவைகள், (விருந்தோம்பலை) அனுபவித்த (வந்திருந்த) வீட்டை விருந்தாளிகள் ஆகியோர் விட்டுச் (சென்று) விடுவர்.     …           2.17

விளக்கம்ஒவ்வோர் தொழிலைச் செய்பவருக்கும் எது வலிமை என்று தெரிவித்த சாணக்கியர், எதனால் ஒருவரைவிட்டு மற்றவர் நீங்குவர் என்று சொல்லலங்காரம் செய்து அறிவுறுத்துகிறார்.

விலைமகள் ஒரு மனிதனிடம் பணத்திற்காகத்தான் அன்புகொண்டவள்போல நடிக்கிறாள்; அவருடன் இணங்கியிருக்கிறாள்.  இனிய சொற்களால் அவரின் அறிவை மயக்குகிறாள்.  தன் உடலையும் தருகிறாள்.  ஆயினும், பணமில்லாத எவரையும் விலைமகள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்; தன் வீட்டிற்குள்ளும் நுழையவிடமாட்டாள்.  இங்கு விலைமகளை ஏன் உவமித்திருக்கிறார்?  வேறு எந்த உதாரணத்தை ஏன் கொடுக்கவில்லை?  காசுக்காக எவரிடமும் தன்னைக் கொடுக்க முன்வரும் விலைமகள்கூட–பொன்னையும், மணியையும் முன்பு தனக்குவாரி வழங்கிய மனிதனிடம் — பின்பு அக்காசு இல்லாதுபோனால் – அவனைவிட்டு நீங்கிவிடுவாள் என்று மனித இயல்பைப் பற்றிப் பறைசாற்றுகிறார்.

ஒரு அரசனின் வலிமை தன் நாட்டின் படையிடம்தான் இருக்கிறது என்ற செய்யுளில் கண்டோம்.  அது நாட்டுப் பாதுகாப்புக்காகவே.  ஆனால், எதிரிகள் படையெடுத்துத் தோல்வியுற்றால் படைவீரர்கள்மீது பழிவிழாது.  நாட்டுக்காகப் போராடி வீரசுவர்க்கம் எய்தினர் என்ற புகழையே பெறுவர்.  ஆனால், நாட்டைக் காப்பாற்ற இயலாது தோல்வியுற்ற அரசனுக்குத் தமது உள்ளத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பைத் துறந்துவிடுவர்.

பழுத்துக் குலுங்கும் மரத்தில்தான் பறவைகளைக் காணலாம். தோட்டக்காரன் எப்படி விரட்டினாலும், அவனுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டுப் பழங்களைக் கொத்தித் தின்ன அவை வந்தே தீரும்.  அப்படி விடாது சுற்றும் பறவையினம், பழங்களை அறுவடை செய்துவிட்டால், அந்த மரத்தை நாடாது வேறு ஒன்றைத் தேடிச் சென்றுவிடும்.

இதைத்தான், அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்’, என்ற ஔவையின் மூதுரைப் பாட்டும் குறிப்பிடுகிறது.

‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்’ என்பது பழமொழி.  விருந்தினர் ஒரு வீட்டுக் சென்று அங்கு தமக்குக் கொடுக்கப்படும் விருந்தை நன்கு அனுபவித்து இன்புறுவர்.  ஆனால், எதற்காக அந்த வீட்டுக்குத் தாமாகவோ, அன்றி அழைக்கப்பட்டு வந்தாரோ, அந்தக் காரணம் முடிந்தவுடன் அந்த வீட்டில் இருக்கமாட்டார்.

க்3ருஹீத்வா த3க்ஷிணாம் விப்ராஸ்த்யஜந்தி யஜமாநகம்  |

ப்ராப்தவித்4யா கு3ரும் ஶிஷ்யா த3க்தா2(அ)ரண்யம் ம்ருகா3ஸ்ததா2  || 2.18  ||

பொழிப்புரை:  வேள்வி இயற்றியவரிடம் வெகுமதியைப் (தக்ஷிணை) பெற்ற அந்தணரும், ஆசானிடம் கல்வியறிவடைந்த சீடனும், தீப்பற்றி எரியும் காட்டிலிருந்து விலங்குகளும் நீங்குகின்றனர்.                  …           2.18

விளக்கம்சென்ற செய்யுளுடன் நில்லாது, இச் செய்யுளிலும் எவர் எதெதைத் துறப்பர் என்று விளக்குகிறார்.  துறப்பு என்பதற்கு வேறொரு பொருளை இங்கு எடுக்கலாம்.  ஒரு செயலைச் செய்து அதற்குப் பயன் கிட்டிவிட்டால் மீண்டும் அச்செயலுக்கான பயனை எதிர்நோக்குவது தவறு.  அதுவே இங்கு குறிப்பிடப்படுகிறது.

எஜமானர் என்றால் மேற்பார்வையாளர் என்றே நாம் எண்ணுகிறோம்.  ஆனால், வேதத்தில் எஜமானர் என்றால் யக்ஞம் (வேள்வி/ஹோமம்) செய்பவர் என்றுதான் அர்த்தம். 

நம் வீட்டிலும் நாம் கணபதி ஹோமம், நவக்கிரம ஹோமம், திருமணத்திற்காக என்று பலவிதமான ஹோமங்களைச் செல்கிறோம். இறுதிச் சடங்கும் ஒருவிதமான வேள்விதான்.  ஆன்மா உடல் என்னும் கூட்டை விட்டு நீங்கியபின் அந்த உடலே இறுதியாகத் தீக் கடவுள் மூலமாகப் படைத்தவருக்கே ஆகுதியாக அளிக்கப்படுகிறது.[3]

இப்படிப்பட்ட பலவிதமான யக்ஞங்களை, ஹோமங்களை, வேள்விகளைச் செய்யும் எஜமானருக்கு அவற்றை எப்படிச் செய்வது என்று தெரிய நியாயமில்லை.  வேள்விமுறை அறிந்த அந்தணர் மூலம் அதைச் செய்விக்கிறார்.  அப்படிச் செய்தபின், அந்த அந்தணருக்கு தஷிணை என்னும் வெகுமதியை அளித்தவுடன் அந்தணர் அந்த இடத்தைத் துறந்து சென்றுவிடுவார்.  அதன்பின் அச்செயலுக்கு மேலும் வெகுமதியை வேண்டமாட்டார்.

மாணவன் ஆசானிடம் கல்வி கற்கிறான்.  அது எக்கல்வியாக இருப்பினும் பரவாயில்லை.  கல்வியை முழுவதும் கற்ற மாணவன்/வி திரும்பவும் ஆசிரியரை நோக்கிச் செல்லமாட்டான்/ள்.  அது தேவையும் இல்லை.  இக்காலத்துக்கும் அது பொருந்தும்.  உயர்நிலைப் பள்ளியில் தேறியவர் அப்பள்ளிக்கு மீண்டும் மாணவராகச் செல்வதில்லை. கல்லூரிக்கே செல்கின்றனர்.

காட்டில் வாழும் வனவிலங்குகள் பொதுவாக அக்காட்டைவிட்டு நகர்ப்புறம் வாரா.  ஆயினும், கோடையிடினாலோ, காட்டில் வேட்டையாடவோ, களிப்புறவோ செல்வோர் கவனக்குறைவால் அணைக்காத தீயினாலோ, காட்டில் தீ பரவினால், அவ்விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறிவிடும்.

மேலே கொடுக்கப்பட்ட உவமைகளில் ‘துறந்துவிடுவர்’ என்ற சொல்லையே சாணக்கியர் கையாண்டிருக்கிறார்.  ஒன்றைத் துறந்தால், அதை மீண்டும் நாடக்கூடாது.  அது போலத்தான் இங்கு கொடுக்கப்பட்ட உவமைகளும்

து3ராசாரி து3ரத்த்3ருஷ்டிர்து3ரா(ஆ)வாஸீ ச து3ர்ஜன:  |

யந்மைத்ரீ க்ரியதே பும்பி4ர்நர: ஶீக்ரம் விநஶ்யதி  || 2.19  ||

பொழிப்புரை:  தீயநடத்தையுள்ளவன், தீய நோக்கமுள்ளவன், கெட்ட இடத்தில் வசிப்பவன் – இந்த நால்விதமானவருடன் எவர் நட்புவைக்கிறாரோ,  அத்தொடர்புள்ள மனிதர் விரைவிலேயே நாசமடைகிறார்.               …           2.19

விளக்கம்இந்தச் செய்யுளில் விளக்கம் அளிக்க அதிகம் இல்லை.  தீயவருடன் தொடர்பு வைப்பது அழிவுக்கே அடிகோலும்.  இதைத் திருவள்ளுவரும் தீ நட்பு, கூடாநட்பு என்ற அதிகாரங்களில் குறட்பாக்களில் அழகாக விளக்குகிறார்.

ஸமாநே ஶோப4தே ப்ரீதி: ராஞ்ஞி ஸேவா ச ஶோப4தே  |

வாணிஜ்யம் வ்யவஹாரேஷு தி3வ்யா ஸ்த்ரீ ஶோப4தே க்3ருஹே  || 2.20  ||

பொழிப்புரை:  சமமானவர்களுக்கிடையில் (உள்ள) அன்பு ஒளிருகிறது; அரச சேவையும் ஒளிருகின்றது; வணிகம் பண்டமாற்றங்களாலும், அழகிய பெண் வீட்டிலும் பிரகாசிக்கின்றனர்.        …           2.20

விளக்கம்எவ்விதமான செயல்கள் ஒளிவிடுகின்றன என்று இச்செய்யுள் கூறுகின்றது.  பொதுவாக எவை சிறந்து விளங்குகின்றனவோ, அவை ஒளிருவதாகச் சொல்லப்படுகிறது.  நன்றாகப் படிக்கும் மாணவர் கல்வியில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதாகச் சொல்கிறோம்.  அது போலத்தான் இங்கு விவரிக்கப்படுகிறது.

இருவர் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்துகின்றனர்.  அது நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, பாசமாக இருப்பினும் சரி – அந்த இருவரும் சமமாக இருக்கவேண்டும் என்கிறார், சாணக்கியர்.

சமம் என்றால் என்ன?  உயரத்திலா, எடையிலா, செல்வத்திலா, குணத்திலா? அல்லது வேறெதில்?

ஓரு செல்வந்தர் பரம ஏழையிடன் நட்புவைக்கிறார், அல்லது திருமண உறவு – பெண்கொடுத்தோ அல்லது பெண் எடுத்தோ உறவினராகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவர்களிடையே உண்மையான அன்பு நிலவுமா?  அவர்களின் மகன்-மகள் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து அன்புடன் இருப்பார்களா?

ஓரிருவர் இருக்கலாம்.  கிருஷ்ண பரமாத்மா-குசேலர் நட்பையோ, அல்லது ஓரிரு இலட்சியக் காதலர்களையோ உதாரணமாகக் காட்டலாம்.  ஆனால் அவை எடுத்துக்காட்டுகள்தான்.  பொதுவான சான்றுகள் அல்ல.  இவற்றைக் கண்கூடாக செய்திகள், ஊடகங்களில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

சமமில்லாதவரிடம் ஏற்படும் அன்பு — மையல், மோகம், கண்மூடித்தனமான கவர்ச்சி.  அதிகநாள் நிலைக்காது. சிறந்த தொலைநோக்காளர் அரிஸ்டாடிலும் அதையே தன்னுடைய, ‘நிக்கோமாகியன் நெறி’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.[4]

நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கோ பணிசெய்கின்றோம்.  நாம் ஆற்றும் பணி எவரிடம் ஆற்றப்படுகிறது என்பதைப் பொருத்தே, சிறப்பிக்கப்படுகிறது.  இராமபிரான் கடலுக்குக் குறுக்கே அணை கட்டியபோது தன் சிறு முன்னங்கால்களால் சிறிய கற்களைத் தூக்கிப் போட்ட சின்னஞ்சிறு அணிலின் தொண்டு, இராமருக்கு உதவவேண்டும் என்ற உத்வேகம், அழியாப் புகழாகப் போற்றப்படுகிறது.  இராமர் அரசருக்கெல்லாம் அரசர்.

அதுபோல, அரசுப் பணி செய்வோர், அதிலும் ஆள்வோருக்கு நேரடியாகப் பணிசெய்வோர், அவர்கள் கண்பார்வையில் பட்டுக்கொண்டே இருப்பர்.  அவரது நற்பணியும் ஆள்வோர் கண்ணில் படுவதால், அவர்தம் சிறப்பு பலருக்கும் தெரிகின்றது.

எத்தொழிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவேண்டும், கச்சாப்பொருள்கள் தொழிற்சாலைக்கு வரவேண்டும்;  உற்பத்தியாகும் பொருள்கள் விற்பனையாக வேண்டும்; வரும் லாபத்தில் பண்டங்கள் சிறப்பாக உயர, ஆய்வு நடக்கவேண்டும்.  இப்படித் தொடர்ந்து தடையின்றி தொழிலுக்கான பண்டமாற்றங்கள் நடந்தால்தான் அது சிறக்கும்.

இறுதியில், அழகான பெண் வீட்டில் இருந்தால்தான் சிறப்பு என்று இயம்பப்பட்டுள்ளது.  உடனே, ‘ஆணாதிக்கம் பிடித்தவர், சாணக்கியர்;  அவர் தன் குணத்தினைக் காட்டிவிட்டார்,’ என்று பொங்கியெழக் கூடாது.  அவர் காலத்தில் தனியாக வெளியே செல்லும் ஆண்களுக்கே பாதுகாப்பில்லை.  ஓர் ஊர்விட்டு இன்னோர் ஊருக்குச் செல்லக்கூடக் கூட்டமாகக் குழுவாகவே தகுந்த துணையுடனே செல்வர்.  அப்படியிருக்கும்போது, அழகிய பெண்கள் தனியாக வெளிச்செல்வது அவருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

சித்தூர் ராணி பத்மினியின் அழகைக் கேள்விப்பட்டுக் கண்ணாடியில் பார்த்து மயங்கிய அல்லாவுத்தீன் கில்ஜி, அவளை அடையச் சித்தூரையே அழித்தொழித்தான். அவளும் அவனிடம் சிக்கக்கூடாதென்று தீக்குளித்து இறந்தாள்.

அழகான பெண் எவர் கண்ணிலும் – முக்கியமாகச் செல்வந்தர், அல்லது அரசன், அரசனுக்கு வேண்டியவர் கண்ணில் பட்டால் ஆபத்துதான்.  அவளைக் கவர்ந்து செல்ல முயல்வர்.[5]  அது அன்றுமட்டுமல்ல, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.  செய்தித் தாள்கள், ஊடகங்கள் இப்படிப்பட்ட செய்திகளைத் தினமும் பரப்பிவருகின்றன.[6],[7],[8],[9]  பாதுகாப்பு மிகுந்த சிங்கப்பூரில்கூட இம்மாதிரி நிகழ்வு நடந்துள்ளது – அதுவும் ஒரு பஸ்ஸில்.[10]  இதெல்லாம் மேலை நாடுகளில் நடக்காது என்று எண்ணுவதும் தவறு.  அவையும் ஆசிய நாடுகளுக்குச் சளைத்தவை அல்ல.  பெல்ஜியம் நாட்டில் பதினான்கு வயதுச் சிறுமியை ஐந்து இளைஞர்கள் பாலியல் துன்பம் கொடுத்துள்ளனர்.[11]  இன்னும் நூற்றுக்கணக்கான சான்றுகளைக் கொடுத்துக்கொண்டே போகலாம்.

‘அதனால் அழகிய பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவேண்டியதுதானா?’ என்ற கேள்வி எழுவது நியாயமானதே.  என்னதான் பெண்ணுரிமை பேசப்பட்டாலும், இவ்வுலகம் இன்றும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்றே.  அதற்காகப் பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய தேவையில்லை.  அப்படிச் செய்வதும் கூடாது.  செல்லுமிடம் அறிந்து தக்க துணையுடன் செல்லவேண்டும் என்ற மாற்றத்தையே உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்)


[1]    “Bridges wired to blow. Artillery hidden in farms. A vast honeycomb of tunnels bored into mountains, ready to house a division of troops.” — ‘Switzerland’s Military Defense Involves Blowing Up All Roads Into The Country,’ Walt Hickey, Business Insider, Jun 22, 2012, https://www.businessinsider.com/switzerlands-military-defenses-2012-6?op=1

[2]    “Switzerland is known worldwide for its international neutrality. But that neutrality has been fiercely defended over the years, particularly during the two World Wars. To maintain a fighting force, all men are required to do military service.” – ‘Surprising Things You Didn’t Know About the Swiss Military,’ by Sean Mowbray, 17 Jan 2022, Culture Trip, https://theculturetrip.com/europe/switzerland/articles/9-surprising-things-you-didnt-know-about-the-swiss-military/

[3]    “Religion and cremation,’ cremation.com, 2023, https://www.cremation.com/learn-about-cremation/religion/

[4]     “The relationship that exists between the godfather and godson points to what Aristotle in his Nichomachean ethics on ‘Friendship’ regarded as ‘unequal friendship.’ This type of friendship involves the superiority of one of the parties where each should not expect to receive the same affection as he gives from the other.” – ‘FRIENDSHIP OF UNEQUALS IN ARISTOTLE’S NICHOMACHEAN ETHICS VIS-A-VIS GODFATHERISM IN NIGERIAN POLITICS,’ Modish Project, https://www.modishproject.com/friendship-unequals-aristotles/

[5]    ‘The Mass Abduction of Women in Ancient Rome,’ by Kabir, Lessons from History,  Aug 31, 2020, https://medium.com/lessons-from-history/the-mass-abduction-of-women-in-ancient-rome-110927eee97e

[6]     Indian woman who was gang-raped and severely beaten on a bus dies in Singapore hospital,’ Heather Tan, The Associated Press, December 28, 2012, https://news.yahoo.com/indian-woman-gang-raped-severely-beaten-bus-dies-035015393.html

[7]      Girl Attacked By 8 In Bihar, Clothes Ripped Off In Video, No One Helped,’ NDTV, April 30, 2018, https://special.ndtv.com/enough-is-enough-break-the-silence-35/video-detail/girl-attacked-by-8-in-bihar-clothes-ripped-off-in-video-no-one-helped-483878

[8]      Second teenager allegedly raped and set ablaze within days in India.’ By Sugam Pokharel, Huizhong Wu and Ben Westcott, May 8, 2018, https://www.cnn.com/2018/05/07/asia/second-india-rape-attack-intl/index.html

[9]     ‘Aussie woman’s screams for help recorded in call before her rape, murder,’ By Yaron Steinbuch, Aug 3, 2021, https://nypost.com/2021/08/03/aussie-womans-final-moments-recorded-in-call-before-her-rape-murder/  

[10]     Indian woman who was gang-raped and severely beaten on a bus dies in Singapore hospital,’ Heather Tan, The Associated Press, December 28, 2012, https://news.yahoo.com/indian-woman-gang-raped-severely-beaten-bus-dies-035015393.html

[11]    ‘Belgium gang rape: Five arrested over assault on teenager,’ BBC News, 2 June 2021, https://www.bbc.com/news/world-europe-57315750

Series Navigation<< சாணக்கிய நீதி – 4சாணக்கிய நீதி -10 >>சாணக்கிய நீதி – 9 >>சாணக்கிய நீதி – 3 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *