ஹடயோக பிரதீபிகை பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. இந்த நூலில் 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு 1896ல் இந்த நூலின் தமிழாக்கம் தஞ்சை வெ.குப்புசாமி ராஜு அவர்களால் செய்யப்பட்டு அவரே எழுதிய தத்துவப் பிரகாசிகை என்ற உரையுடனும் பல விளக்கக் குறிப்புகளுடனும் வெளியிடப்பட்டது. ஆனால் அதன் மொழிநடை தற்காலத்திய மாணவர்களும் இளைஞர்களும் வாசித்து புரிந்து கொள்வதற்குக் கடுமையானதாக உள்ளது. இப்போது சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னர், முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் ஹடயோக பிரதீபிகை (2022) என்ற இந்த நூல் அருமையாக வெளிவந்திருக்கிறது.
நூலின் சரளமான மொழிநடைக்கு எடுத்துக்காட்டாக, சாம்பவீ முத்ரா, மற்றும் பிராணாணாயம் குறித்த சில பக்கங்கள் கீழே:
தற்போது பல கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் யோகத் துறைகள் நிறுவப்பட்டு வருகின்றன. பல தனியார் அமைப்புகளும் குருகுலங்களும் உயர்நிலை யோகக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றின் பாடத்திட்டத்தில் ஹடயோக பிரதீபிகை கட்டாயம் இடம்பெறும் நூலாக உள்ளது. சரளமான தமிழாக்கம் இல்லாததால் இந்த வகுப்புகளில் இணைந்து பயிலும் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நூல் அக்குறையைத் தீர்க்கும். தமிழ்நாட்டின் யோக ஆசிரியர்களும், யோகப் பள்ளிகளும் இந்த சிறப்பான மொழியாக்கத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஆங்கில நூல்களையே வெளியிடும் இண்டிகா அமைப்பு இந்தத் தமிழ் நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
ஹடயோக பிரதீபிகை – தமிழில்
ஆசிரியர்: முனைவர் ம.ஜயராமன்
இண்டிகா வெளியீடு:
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க:
அச்சுநூலாக இங்கு வாங்கலாம்.
மின்னூலாக இங்கு வாங்கலாம்.
முனைவர் ம ஜயராமன், சென்னைப் பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் (2010) பெற்ற பின், புகழ்பெற்ற கிருஷ்ணமாச்சாரிய யோக மந்திரத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் இயக்குனராக பணியாற்றியுள்ளார் (2010-2021). தற்போது பெங்களூர் SVYASA யோக பல்கலைக் கழகத்தின் கல்வித்துறைத் தலைவராக (Dean) உள்ளார். 15 புத்தகங்கள், தேசிய, சர்வதேச ஆய்வேடுகளில் 17 ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார். பதஞ்சலி சரிதம், யோக சூத்திரங்களுக்கான வியாஸ பாஷ்யம் (3 தொகுதிகள்) ஆகிய நூல்கள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மந்திர-அர்த்தம் எனும் இவரது நூலுக்காக 2021ல் கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலையின் நூல்விருதையும் பெற்றுள்ளார்.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)