ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்

“தமிழில் சமஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள். ஒரு பார்வை” என்கிற கட்டுரை ஒன்றை தமிழ் ஹிந்துவில், ஜூலை ஏழாம் தேதி வெளியிட்டிருந்தேன். அதில் அறம் எனும் சொல்லிற்கு சமஸ்கிருதத்தில் த்ருப்தி, அமைப்பு என்று பொருள் உள்ளதாய் கூறியிருந்தேன். இதை திரு. ஜடாயு அவர்கள் தனது முகநூலில் பகிர்கையில் பேரா. ஜி,சங்கரநாராயணன் எனும் அறிஞர் “அறம் வரும்சொல் என்று கூறியமைக்கே பெரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கருத்தைக் கண்டவுடன் ரிக் வேதத்தில் என்ன என்ன இடத்தில் ‘அறம்’ என்ற சொல் வருகிறது என்று சிந்தித்தேன். அச்சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது.

  1. அறம் விஸ்வஸ்மை || அக்னி அனைவருக்கும் அறமாய் விளங்குகிறார் (1.66.5)
  2. அஸ்மை அறம் ஸூக்தை: || வழிபடுபவன் அக்னிக்கு நன்மொழிகளால் ‘அறம்’ செய்கிறான் (1.70.5)
  3. ஸோம: அஸ்து அறம் || இந்திரனுக்கும் அக்னிக்கும் ஸோமன் உலகளாவிய அறமாய் இருக்கட்டும். (1.108.2)
  4. அறம் க்ருண்வந்து வேதிம் || வழிபடுபவர்கள் வேதிகையை அறம் செய்யட்டும். அங்கு அமிர்த சேதனமான வேள்வியை விஸ்தாரப்படுத்துவோம். (1.170.4) – இது அகஸ்திய முனிவரின் மந்த்ரம்.
  5. அறம் ரோதஸீ கக்ஷ்யே நாஸ்மை || இந்திரனுக்கு புவியும் வானமும் அறமாய் இருக்க இயலவில்லை. (1.173.6)
  6. அறம் பக்ஷாய கம்யா: || அன்னமே! எங்களுக்கு சாப்பிடுவதற்கு அறமாய் வாரீர் (1.187.7)
  7. வித்வான் அறம் கரத் || அறிஞன் அனைத்து தேவர்களுக்கும் அறம் செய்கிறான். (2.5.8)
  8. ஸாஸ்மா அறம் || அனைத்தறிவிற்கும் மேற்பட்டவராய் எவரை அவரது தந்தை ஸ்ரிஷ்டித்தாரோ அவ்விந்திரனே இவ்வுலகிற்கு “அறம்”. (2.17.6)
  9. ஸாஸ்மா அறம் பிரதமம் ஸ த்விதீயம் || அவ்வேள்வியாகிய தேரே முதன்முறையாகவும், இரண்டாம் முறையாகவும், மூன்றாம் முறையாகவும் “அறமாய்” உள்ளது. (2.18.2)
  10. அறம் ஸுதேபி: க்ருணவாம ஸோமை: || பிழியப்பட்ட ஸோமங்களால் “அறம்” செய்கிறோம். (3.35.5)
  11. அறம் மே உஸ்ரயாம்ணே || பயணத்தில் எனக்கு ஹிம்சையற்ற இரு குதிரைகளும் “அறமாய்” இருக்கட்டும். (4.32.24)
  12. யதா அறம் அக்ரன் ரிபவ: || ரிபுக்கள் தம் பெற்றோர்களுக்கு பற்பல பணிவிடைகளால் “அறம்” செய்தனர். (4.33.2)
  13. ய உஸ்வயம் வஹதே ஸோ அறம் கரத் || அவிசை தாங்கும் அக்னி “அறம்” செய்யட்டும். (5.44.8)
  14. அறம் ப்ருது || மிகுதியான “அறம்” எப்படி அமையுமோ அப்படி மித்திரனும் வருணனும் பொழிகின்றனர். (5.66.5)
  15. அறம் வஹந்தி மன்யவே || அக்னியே! தங்கள் தேரை, தங்கள் குதிரைகள் மனனத்திற்காக “அறமாக” தாங்குகின்றன (6.16.43)
  16. அறம் தே ஸோம: || இந்திரனே! தங்களுக்கு ஸோமன் “அறமாய்” இருக்கட்டும். (6.41.5)
  17. அறம்மே கந்தம் ஹவனாயாஸ்மை || அஸ்வினி குமாரர்களே! இவ்வழைப்பிற்கு “அறமாய்” வாரீர். (6.63.2)
  18. ஸோமாருத்ரா தாரயேதாம் அஸுர்யம் ப்ர வாமிஷ்டய: அறமஸ்னுவந்து || ஸோமனும் ருத்ரனும் பலத்தை தரித்து எங்களது இச்சைகளை “அறமாய்” வ்யாபிக்கட்டும் (6.74.1)
  19. விஸ்வஸ்மை சக்ஷுஷே அறம் || இந்து திவ்ய ரூபத்தை அனைவரின் தரிசனத்திற்கும் “அறம்” அமைய கொண்டு வருகிறது. (7.66.14)
  20. அறம் கந்தம் || அஸ்வினி குமாரர்களே! “அறம்” அமையும்படி அவிசுகளை ஏற்க சீக்கிரம் வாரீர் (7.68.2)
  21. அறம் தாஸோ ந மீள்ஹுஷே || யான் பொழியும் வருணனுக்கு சேவகனை போல் அறம் செய்கிறேன் (7.86.7)
  22. அறம் க்ஷயாய நோ மஹே விஸ்வா ரூபாணி ஆவிசன் || எங்களது பெரிய புகலிடத்திற்காக “அறமாய்” அனைத்து உருவங்களிலும் பரவி… (8.15.13)
  23. அறம் தே ஸக்ர தாவனே கமேம || இந்திரனே தங்கள் தானத்தில் “அறம்” அடைந்தோம் (8.45.10)
  24. மஹ: ஸு வோ அறமிஷே ஸ்தவாமஹே மீள்ஹுஷே அறங்கமாய ஜக்மஹே || மகாத்மாவான இந்திரனே! தங்கள் “அறத்தை” விரும்புகிறேன் அறம் அமையும் படி பொழியும் தங்களை துதிக்கிறோம். (8.46.17)
  25. அறம் தே இந்த்ர || இந்திரனே! தங்களுக்கு ஸோமன் “அறமாய்” இருக்கட்டும். தங்கள் ஸ்தானங்களுக்கு அறமாய் இருக்கட்டும். ரிஷி ஸ்ருதக்ஷகன் மாட்டிற்கும், குதிரைக்கும் அறம் அமையப் பாடுகிறான். நாங்கள் பிழிந்த ஸோமங்களிலும், இந்திரா! உமது தானத்திலும் அறம் இருக்கட்டும். எங்களது துதிகள் தூரத்திலிருந்தும் தங்களைப் பரவி அடையட்டும். நாங்கள் அறத்தை அடைவோம் (8.92.24 – 27)
  26. அறம் இந்த்ரஸ்ய தாம்னே || ஸோமனே! இந்திரனின் ஸ்தானத்திற்காக “அறமாய்” திகழ்கிறாய் (9.24.5)
  27. தஸ்மா அறம் கமாம வ: || பாப-நாசத்தின் பொருட்டு ஓ தண்ணீரே! உம்மை “அறமாக” அழைத்துச் செல்கிறேன் என்பது ஸாயநர் உரை.
    ஓ தண்ணீரே! எந்த அன்னத்தை வாழ வைக்க நீர் ஓஷதிகளை திருப்தி செய்கிறீர்களோ அந்த அன்னத்திற்காக தங்களை அறமாய் அடைகிறோம். இது வேங்கட மாதவரின் உரை. (10.9.3)
  28. கோ வே: அத்வரம் துவிஜாதா: அறம் கரத்|| பலவாய் பிறக்கும் தேவர்களே! தங்கள் வேள்வியை யார் “அறம்” செய்வார்? (10.63.6)
  29. கில்பிஷ ஸ்ப்ருத் பிதுஷணி: ஹ்யேஷாம் அறம் ஹிதோ பவதி || இந்த அன்னதான வள்ளல் அப்பழுக்கற்றுவன். இவர்களின் “அறமாயும்” ஹிதமாயும் இருக்கிறான் (10.71.10)
  30. அறம் காமாய ஹரயோ ததன்விரே || இந்திரனின் இச்சைக்காக ஸோமங்கள் “அறமாய்” வைக்கப்படுகின்றன (10.96.7)
  31. அறம் காமாய ஸம் ஹ்ருதே || விருப்பத்திற்கு “அறமாயும்” இதயத்திற்கு மங்களமாயும் மூலிகை இருக்கிறது (10.97.18)
  32. ஆயுதா அறம் க்ருணுத்வம் || ஆயுதங்களை “அறம்” செய்வீர் (10.101.2)
    (“மந்த்ரா க்ருணுத்வம்” ஆனந்த ரஸங்களை செய்யுங்கள்
    “திய ஆ தனுத்வம்” அறிவை செம்மை செய்யுங்கள்
    “யக்ஜம் க்ருணுத்வம்” வேள்வியை செய்யுங்கள்
    முதலிய வாக்கியங்களுடன் சேர்ந்து
    “நாவம் க்ருணுத்வம்” படகை செய்யுங்கள் என்பதும்
    “ஆயுதா அறம் க்ருணுத்வம்” ஆயுதங்களை அறம் செய்யுங்கள்
    என்பதும் வருவதால் இங்கு இதை ஆன்மீகத்தின் குறியீடாகவே எடுத்துக்கொள்ள முடியும். படகு என்பது வேதத்தில் வாழ்க்கை பயணத்தின் குறியீடு. ஆயுதம் விடாப்பிடியான உறுதியான வ்ரதத்தின் குறியீடு. “வ்ரதா விதான ஆயுதா” (9.35.4) என்பதை கவனிக்கவும். அறம் எனும் சொல் தொடர்புடைய குறியீடாக இங்கு ஆயுதம் அமைந்தபடியால் அதன் குறியீட்டை விளக்க நேர்ந்தது.)
  33. பாரிவா அறம் || “அறமாய்” ஆயுதங்களை தரித்த அஸ்வினி குமாரர்கள். பறவை போல் பறப்பவர்கள். ஈர்ப்பவர்கள். மனதை அலங்கரிப்பவர்கள். மனனத்தில் உள்ளவர்கள். (10.106.8)
  34. அறமஸ்மை பவதி யாமஹூதௌ || அன்னம் வேண்டி அலையும் இளைத்தவனுக்கு அளிப்பவனே வள்ளல். இன்புறுபவன். இவனுக்கே வேள்விகளில் “அறம்” ஏற்படும். இவனே மற்றும் பலருடனும் நட்பு கொள்கிறான். (10.117.3)
  35. அறம் வராய மன்யவே || இந்திரனே! உயர்ந்த மனனத்திற்காக “அறமாய்” இருப்பீர் (8.82.3)

மேலே கொடுக்கப்பட்டுள்ள பல மந்த்ரங்களில் பெரும்பாலும் உரைகாரர்கள் ‘பர்யாப்தம்’, ‘போதுமான’, ‘த்ருப்தி’ என்ற பொருளையே கூறுகின்றனர். மேலே கொடுக்கப்பட்ட ஆறாம் மந்த்ரத்திலும், 24 ஆம் மந்த்ரத்திலும் “அறம்” என்பதற்கு ஸாயணர் ஸம்பூர்ணம் அதாவது நிறைவு என்ற பொருளை அளிக்கிறார். “உத் அறம்” (4.15.7), “நி: அறம்” (6.35.5) என்கிற இரு சொல்லாடலுக்குமே உரைகாரர்கள் “வெளிக்கிளம்புதல்” என்கிற பொருளையே கூறுவதால் “அறம்” என்பதற்கு வெளிக்கிளம்பாத நிலை, நிறைந்த நிலை என்கிற பொருளும் தேருகிறது.

மேலே தரப்பட்ட மந்த்ரங்களில் முதல் மந்த்ரத்தில் ஸாயணரும், 4, 7, 12, 28 ஆம் மந்த்ரங்களில் வேங்கட மாதவரும் ‘அறம்’ எனும் சொல்லிற்கு செம்மை செய்தல் செவ்வனே செய்தல் என்று பொருள் தருகின்றனர். இரண்டாம் மந்திரத்தில் ஸ்கந்த ஸ்வாமி எனும் உரைகாரர் “செம்மை செய்யும் திறன்” என்று பொருள் கூறுகிறார்.

நான்காம் மந்த்ரத்தில் ஸாயணர் “தூய்மைப்படுத்துதல்” என்ற பொருளை கூறுகிறார். 12, 13, 14, 20, 31 மந்த்ரங்களில் ஸாயணர் “மிகுதி” என்ற பொருள் கூறுகிறார். 20, 27 மந்த்ரங்களில் ஸாயணரும், 27 ஆம் மந்த்ரத்தில் வேங்கட மாதவரும் “விரைவு” எனப் பொருள் கூறுகின்றனர்.

சுருக்கமாய் சொல்லப்போனால் “அறம்” என்பதற்கு முக்கிய பொருள், போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. இதைத் தொடர்ந்து செம்மைப்படுத்துதல், செவ்வனே செய்தல், நன்கு அமைத்தல் முதலியன.அதன் பிறகே மிகுதி, விரைவு என்கிற பொருட்கள் வரும்.


ரிக் வேதத்தில் வரும் சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம்.

சமஸ்கிருதத்தை பொறுத்தவரை ‘ர’, ‘ற’ என்ற பேதம் கிடையாது. சம்ஸ்கிருதத்தில் உள்ள சில சொற்கள் தமிழுக்கு வருகையில் ‘ர’ என்ற எழுத்து உபயோகப்படுகிறது. உதாரணமாக வரம், கரம், பரம் முதலியவை. ஆனால் புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள். அவ்வாறே. தமிழில் புறம் என்பதற்கு வெளி என்றும் சமஸ்கிருதத்தில் ‘நமது எதிரே’ என்றும் பொருள். இங்கு ‘ற’ என்ற எழுத்து பயன்படுகிறது.

தமிழில் ‘மாறன்’ என்ற சொல் உள்ளது. ‘மாறு’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததாய் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் அகராதி கருதுகிறது. மாறு என்றால் மாறுதல் இறப்பு முதலிய பொருட்களை தமிழ் அகராதி காட்டுகிறது. மாறன் என்றால் அழிப்பவன், தாக்குபவன் என்று பொருள். அழிப்பதாலும், தாக்குவதாலும் மன்மதனுக்கு இந்தப் பெயர். இதே போலவே சம்ஸ்கிருதத்தில் ‘மாறன்’ என்றால் மன்மதன் என்றும், அவன் தாக்குவதாலும், அழிப்பதாலும் அவனுக்கு அந்தப் பெயர். என்றும் உண்டு. சமஸ்கிருதத்தில் ‘மாறன்’ எனும் சொல் ‘ம்ரு’ என்பதிலிருந்து தோன்றியது. இதற்கு அழிவு, சாதல் என்று பொருள். இங்கும் ‘ற’ என்ற எழுத்து பயன்படுகிறது.

ஆதலால் ரிக் வேதத்தில் வரும் ‘அறம்’ என்ற சொல்லை தாராளமாய் வல்லின ‘ற’ வை உபயோகித்துக் கூறலாம்.

‘அறம்’ என்பதற்கு ‘அறு’ வேர்ச்சொல் என்று தமிழ் அகராதி கருதுகிறது. இது உண்மையாகில், ‘அறு’, ‘அறம்’ என்ற இவ்விரண்டுக்குமான தொடர்பை நேராக காட்ட முடியாது. சுற்றி வளைத்து யூகிக்கலாம். தீங்கினை அறுப்பதால் அறம் என்று யூகிக்கலாம். ‘அறு’ என்றால் அறுத்தல் என்று பொருள்.

ரிக் வேதத்தில் உள்ள ‘அறம்’ என்ற சொல்லிற்கு ‘ரு’ என்பது வேர்ச்சொல் . இச்சொல் சமஸ்கிருதத்திலேயே பற்பல இடங்களில் பற்பல காரணங்களால் ‘அரு’ என்று மாறுகிறது. இங்குள்ள ‘ரு’ என்ற வேர்ச்சொல்லை ‘று’ என்றும் ‘அரு’ என்பதை ‘அறு’ என்றும் அழைப்பதில் தவறில்லை. சமஸ்கிருதத்தில் ‘ர’, ‘ற’ என்ற வித்தியாசம் கிடையாது.

சம்ஸ்கிருதத்தில் அறு என்பதற்கும் தமிழ் அறு என்பதற்கும் தொடர்பு உண்டா? தெரியாது. இரண்டுக்கும் இன்றைய அளவு பொருள் வேறு. தமிழ் ‘அறு’ அறுத்தலையும் சமஸ்கிருத ‘அறு’ செல்லுதலையும், செல்லுவித்தலையும் குறிக்கும்.


இனி திரு. அரவிந்தன் நீலகண்டனின் “நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?” (தமிழ் ஹிந்து – நவம்பர் 26, 2013) என்கிற கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

Reason என்பதன் தொல்- இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லான “அர்” என்பதன் abstraction பாரதத்தின் மிக தொடக்கங்களிலிருந்தே “ரிதம்” எனப்பட்டது. ரிதத்தின் வெளிப்பாடே தர்மம். தர்மத்துக்கான தனித்தமிழ் சொல் அறம். அறம், அறிவு, ரிதம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தொன்மையான இழையாக “ar” எனும் வேர்ச்சொல்லை காணலாமா? ஆம் எனக் கொண்டால், தமிழின் சொல் வடிவமும் தொல்-இந்தோ-ஐரோப்பியன் என மொழியியலாளர்களால் அழைக்கப்படுவதும் ஒரு மூலத்திலிருந்து கிளை பிரிந்தவையாக இருக்கலாம்.. ”.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

‘ரு’ (ऋ) என்னும் தாதுவிலிருந்து (வேர்ச்சொல்) ‘அறம்’ வந்ததாய் “சப்த கல்ப த்ருமம்” என்ற சம்ஸ்கிருத நிகண்டு தெரிவிக்கிறது. “ரு-கதௌ” (ऋ गतौ) – ‘ரு’ என்பதற்கு ‘கதி’ அல்லது செல்லுதல் என்று பொருள்.

இந்த தாதுவில் இருந்து தான் ரிதம் / ருதம் என்கிற சொல்லும் வந்தது. இச்சொல்லிற்கு உண்மை என்றும் இயற்கையின் நியதி என்றும் பொருள். இயற்கையில் உள்ள ஸூர்யன், சந்திரன், காலம், க்ரஹங்கள் அனைத்தும் செவ்வனே செல்லுவதால், நல்ல கதியில் இருப்பதால் ‘ருதம்‘ என்ற சொல் வந்தது. ‘ருது’ என்ற சொல் செவ்வனே செல்லும் காலத்தை குறிக்கும்.

ருதத்தையும் அறத்தையும் சேர்த்து கூறும் மந்த்ரமும் உண்டு. மேற்கண்ட 14-ம் மந்த்ரத்தில் மித்திரனும், வருணனும் பொழிகையில் “’அறம்’ எப்படி அமையுமோ அப்படி பொழிகின்றனர்” என்று வருகிறது. அத்துடன் நில்லாமல் தத் ருதம் ப்ருதிவி || “ஓ பூமியே! அதுவே ‘ருதம்’ என்றும் வேதம் கூறுகிறது.

இங்கு ‘ருதம்’ என்பதற்கு தண்ணீர் என்று பொருள் கூறி “அத்தண்ணீரைப் பொழிகின்றனர் மித்ரா-வருணர்கள்” என்றே ஸாயணர் பொருள் கூறுகிறார். ஆனால் வேங்கட மாதவரோ “மித்ரா-வருணர்கள் ‘அறம்’ அமையும்படி பொழிகின்றனர். அது ருதம்” என்று பொருள் கூறுகிறார்.

இந்த மந்த்ரத்தில் உள்ள நான்கு சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை – ருதம், ப்ருதிவி, ப்ருது, அறம்.

ப்ருது என்றால் மிகுதி என்று பொருள். ப்ருதிவி என்றால் மிகுதியை உடையவள் என்று பொருள். இது புவியின் பெயர்.

“ப்ருதுவான (மிகுதியான) அறம் (நிறைவு, செம்மை த்ருப்தி) அமையும் படி மித்ரா-வருணர்கள் பொழிகின்றனர். ப்ருதிவி! (மிகுந்தவளே! புவியே!) அது ருதம் (இயற்கையின் நியதி / ஸத்தியம்).”

ப்ருதிவியின் இலக்கணம் ப்ருது. இக்காரணத்தால் ப்ருதிவி, ப்ருது என்ற இரு சொற்களும் இங்கு சேர்ந்து வருவதாய் எடுத்துக்கொள்ள முடியுமாகில், அறம் என்பது ருதத்தின் இலக்கணம் என்பதால், அவை சேர்ந்து வருகிறதா? இதுதான் ருதத்திற்கும், அறத்திற்கும் உள்ள தொடர்பா? என்று சிந்திக்க தோன்றுகிறது.

ஆரியன் என்னும் சொல் ருதம், அறம் என்னும் சொற்களைப் போல் ‘ரு’ தாதுவில் இருந்து வந்தது தான். இயற்கையின் கதி எப்படி செவ்வனே செல்கிறதோ, அவ்வாறே செவ்வனே நல்வழியில் செல்பவனுக்கு ஆரியன், அர்யன் என்றெல்லாம் வேதத்தில் பெயர் வந்தது.

“யாம் ஸ்வஸ்திம் அக்னி: வாயு: ஆதித்ய: ஸஞ்சரந்தி…”

“எந்த நல்வழியில் அக்னி, வாயு, ஸூர்யன் முதலியவர்கள் ஸஞ்சரிக்கின்றனரோ, அதில் வேத வாழ்வில் நுழையும் இந்த ப்ரும்மசாரி ஸஞ்சரிக்கட்டும்” என்கிற க்ருஷ்ண யஜுர் வேதத்தின் ஏகாக்னி காண்டத்தில் உள்ள உபநயன மந்த்ரத்தை கவனிக்கவும். ஆரியன் என்பதற்கு இதுவே பொருள்.

ஆரியன் என்றால் பண்பாளன். பின்பு புத்தரின் ஆர்ய ஸத்யம், ஆர்ய சீலம் முதலிய சொற்கள் வந்தன. ப்ராக்ருதத்தில் ஆர்ய என்கிற சொல்லே “ஐய” என்றானது. இவ்வனைத்திற்கும் ‘ரு’ என்பதே மூலம். ‘ரு’ தாதுவே அறம் எனும் ரிக் வேத சொல்லிற்கும் மூலம்.

தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா? தெரியாது.

தமிழில் அறம் எனும் சொல் தர்மத்தை குறிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. இருப்பினும் சங்க இலக்கியமாகிய பரிபாடலில் மூன்றாம் பாடலில்

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் ….
தா மா இருவரும் தருமனும் மடங்கலும்”

என்று வருகிறது. இங்கு அறத்தையும், தர்மத்தையும் பரிபாடல் தனித்தனியே கூற காரணம் என்ன? “அறம்” எனும் சொல்லால் புலவர் மனித வாழ்வில் உள்ள தர்மத்திற்கு ஸூக்ஷ்மமான, மூல காரணமான இயற்கையின் ஒரு செம்மையான அமைப்பை, அதாவது வேத மொழியில் சொன்னால் “ருதத்தை” / “ரிதத்தை” குறிக்கிறாரோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.

ரிக் வேதத்தில் “அறம்” எனும் சொல்லுக்கும் ஒரு திருப்தியான அமைப்பு, செம்மையாக அமைத்தல் என்றே பொருள்.

“அறமதி” என்னும் சொல் ரிக் வேதத்தில் சில இடங்களில் வருகின்றது. இதற்கு உரைகாரர்கள் சில பொருட்களை கூறுகின்றனர். அவைகளுள் முக்கியமானது அற-மதி.

“அறம்” சார்ந்த “மதி”. “அறமான” மதி. “அறம்” மிகுந்த மதி.

ஸாயணரும், வேங்கட மாதவரும், உத்கீதரும் சில மந்த்ரங்களுக்கு (7.34.21, 8.31.12, 10.64.15) விளக்கம் அளிக்கையில் மேலே உள்ளவாறே விளக்கியுள்ளனர்.

  1. அறமதி: ஸவிதா தேவ ஆகாத் || அறம் கொண்ட மதியுடைய ஸூர்யன் வந்தார். (2.38.4)
  2. ஆனோ மஹீமறமதீம் ஸஜோஷா: || அக்னியே! “அறம்” கொண்ட மதியுடைய மஹீதேவியை இங்கு கொண்டு வாருங்கள். (5.43.6) இந்த அற-மதி யான மஹீதேவி வேறு இரண்டு இடங்களிலும் (10.92.4,5 & 7.36.8) துதிக்கப்படுகிறாள். இவள் பூமித்தாய். ஸூக்ஷ்மமாய் நோக்குகையில் ப்ரக்ருதி மாதா அல்லது அதிதி.
  3. அதஸ்மானோ அறமதிம் ஸஜோஷஸ: || மருத்துக்களே “அறம்” கொண்ட மதியை நோக்கி செல்பவனை சுகமாய் அழைத்துச் செல்லுங்கள் (5.54.6)
  4. ஹவிஷ்மதி க்ருதாசீ உப ஸ்வைனம்அறமதி: வஸுயு: || அவிசுடன் ஒளி மிக்கவளாய் செல்வங்களை விரும்பும் ஒரு யுவதி இந்த அக்னியை அறம் மிகுந்த மதியுடன் அணுகுகிறாள். (7.1.6)
  5. ஸ்யாதஸ்மே அறமதிர் வஸுயு: || த்வஷ்டா (சிற்ப-தேவதை) நமது துதிக்கு வரட்டும். அறம் கொண்ட மதி உடையவராய் நமது அவிசுகளை விரும்புவராய் இருக்கட்டும். (7.34.21)
  6. ஆ யக்ஞியாம் அறமதிம் வவ்ருத்யா: || தேவர்களே! வேள்வி-சார்ந்த “அறம்” மிகுந்த மதியை எங்களின் பொருட்டு திருப்பி கொண்டு வாருங்கள் (7.42.3)
  7. அறமதி: அனர்வணோ விஸ்வோ தேவஸ்ய மனஸா || தேவனுடைய அனைத்து ஜனங்களும் “அறம்” கொண்ட மதியுடன் உள்ளனர். (8.31.12)

இதைத் தவிர ‘அறம்’ என்கிற சொல் ‘ஆரம்’ (சக்கரத்தில் மையத்தை வெளிவட்டத்துடன் இணைக்கும் கோடு) என்கிற பொருளில் ரிக் வேதத்தில் வருகிறது. இங்குமே காலச்சக்கரத்தை வருணிக்கையில் வருகிறது. காலச்சக்கரத்தின் ஆரங்கள் ஆறு என்றும் ஐந்து என்றும் கணக்கு தரப்படுகிறது. இதை உரைகாரர்கள் ருதுக்கள் /ரிதுக்கள் என்று விளக்குகின்றனர் ஆறு அல்லது ஐந்து ரிதுக்களே காலச்சக்கரத்தின் ஆரங்கள்.

ஹேமந்தத்தையும் சிசிரத்தையும் சேர்த்து விட்டால் ரிதுக்கள் ஐந்து. “ருதத்தை/ரிதத்தை” அனுசரிப்பதால் “ருது / ரிது”.

காலச்சக்கரமே ருதத்தினால் தான் சுழல்கிறது. ஆதலால் இது தர்மசக்கரமாகவும் ஆகிறது. ஏனெனில் ருதமும் தர்மமும் மிகவும் தொடர்புடையது.

ருதத்திற்கும் ரிதுவிற்கும் உள்ள தொடர்பால் ருதத்துடன் தொடர்புடைய ‘அறம்’ எனும் ரிக் வேதச்சொல் காலச்சக்கரத்தின் ஆரத்திற்கும் பயன்பட்டு பின்பு சமஸ்கிருத இலக்கியங்கள் பலவற்றுள் பொதுவாக எந்த சக்கரத்திற்கும் பயன்படுகிறதோ?

வேத சாஸ்திர அறிஞரும், ஆசாரியருமான கட்டுரையாசிரியர் டாக்டர் ரங்கன் ஜி அவர்கள் புகழ்பெற்ற இராமாயண உபன்யாசகர், ஆராய்ச்சியாளர். பெங்களூரில் வால்மீகி ஆசிரமம் என்ற பாரம்பரியமான வேத குருகுலத்தை நடத்தி வருகிறார். இவரது உரைகளை யூட்யூபில் இங்கு கேட்கலாம்.

2 Replies to “ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்”

  1. அறம் எனும் தமிழ்ச் சொல்லுக்கு பண்பட்ட வாழ்வியல் நெறி என்பதே பொருளாகும். முற்றிலும் பொருந்தாத பொருளை வலிந்து ஒப்பு நோக்கும் முட்டாள்தனத்தை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *