3.0 : தேசியக் கணக்குகள்
ஸ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு செய்யும் ஸ்ரத்தாஞ்சலியாக 370 இடங்கள் வென்றாகவேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் சுமார் 35-30 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கவேண்டும். மஹாராஷ்டிராவில் கூடுதலாக 20, ராஜஸ்தானில் கூடுதலாகப் பத்து, மேற்குவங்கத்தில் மேலும் பத்து என சுமார் 80 இடங்கள் அதிகம் கிடைத்திருக்கவேண்டும். அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் இந்த நான்கு மாநிலங்கள் மட்டுமே பெரிய பின்னடைவைத் தந்திருக்கின்றன.
இந்து விரோத சக்திகளின் எண்ணிக்கையும் ஒற்றுமையும் பலமாக இருக்கும்பகுதிகளில் சந்தேஷ்காலி போன்றும் அந்நிய மத ஊடுருவலும் தாக்குதலும் என இன்னும் எவ்வளவு இந்து விரோத நடவடிக்கைகள் நடந்தாலும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது மிக மிகக் கடினம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
ஒரு இடத்தில் 30%க்கு மேல் இந்து விரோத மதங்கள் செல்வாக்குபெற்றுவிட்டால் அதன் பின் அந்த பகுதியை மறந்துவிடவேண்டியதுதான். கேரளா, தமிழகம், பஞ்சாப் எல்லாம் அந்த வகையில் வருபவையே.
வட இந்தியாவில் முஸ்லிம் அடிப்படைவாத ஆதிக்கம், தெற்கில் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதிக்கம் என வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகளின் இலக்கு இது. நாம் இருவர், நமக்கு இருவர் என்று ஆரம்பித்து நாம் நம் எண்ணிக்கையை குறைத்துக்கொள்வதில் கணிசமான வெற்றியைப் பெற்றுவிட்டிருக்கிறோம். நவீன வாழ்க்கை வேறு பிறப்பு விகிதத்தை குறைக்கிறது. என்ஜாய்மெண்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸிலிட்டி கும்பலின் வலையில் இந்துக்களே பெரிதும் விழவும் செய்கிறார்கள். மத மாற்றம் தடையற்று நடந்துவருகிறது.
வரவிருக்கும் தலைமுறையை நம் தெய்வங்களால் காப்பாற்ற முடியாது. இந்து ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் ஏதேனும் செய்தால்தான் உண்டு.
*
உத்தரபிரதேசத்தில் சராசரி வாக்குப்பதிவு 57% என்று நினைக்கிறேன். வாக்களிக்காத 43% பெரும்பாலும் நம்மவர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எப்படியும் வென்றுவிடுவோம் என்ற மெத்தனமா… வாக்குச் சாவடிக்குப் போகாமலிருந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா தெரியவில்லை. காங்+சமாஜ்வாதி கூட்டணி, இந்து விரோத சக்திகள் ஓரணியில் திரண்டு வாக்களிக்க பெரிதும் உதவிவிட்டது. பி.ஓ.கே., கச்சத்தீவு இவற்றை தேர்தலுக்கு முன் மீட்டெடுத்திருக்கவேண்டும். ராமர் கோவில் கட்டியதே போதும் என்ற எண்ணம் உ.பி. தவிர பிற மாநிலங்களில் மட்டுமே கை கொடுத்திருக்கிறது.
இந்துவுக்கு மட்டுமேயான வெற்றியைவிட இந்துவுக்கும் இந்தியாவுக்குமான வெற்றியே நம் இலக்காக இருக்கவேண்டும்.
அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் எவ்வளவுதான் ஆப்ரஹாமிய மதங்களை அரவணைத்துச் சென்றாலும் இந்து மதிப்பீடுகள், இந்து வாக்குவங்கி பலப்படுவதென்பது அவர்களுக்குத் துளியும் பிடிக்காது.
அயோத்தி பகுதியில் தேர்தலுக்கு முன்னர் கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் இஸ்லாமிய பகுதிகளில் சென்று அவர்களுடைய மனநிலையைக் கேட்டறிந்திருக்கிறார்கள்.
’எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ராமர் கோவில் கட்டப்படுவதில் ஒரு பிரச்னையும் இல்லை. எங்கள் நிலங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தால் இப்போது 20-30 லட்சம் என விலை உயர்ந்திருக்கிறது. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; சுற்றுலா வருமானம் பெருகும்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
தேர்தல் கணிப்பாளர்கள் இதிலிருந்து என்ன முடிவுக்கு வந்தார்களென்றால் முஸ்லிம்கள் தமது நிலத்தின் மதிப்பையும் சுற்றுலாவையும் உயரவைத்த பாஜகவுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நம்பினார்கள். ஆனால், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததையும் சுற்றுலா வளர்ச்சியையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்கள். நன்றியை அல்லாவின் உத்தரவுப்படி செலுத்தியிருக்கிறார்கள்.
அரசின் நலத்திட்டங்களில் ஆப்ரஹாமிய மதங்களுக்கு உரிய பங்குக்கும் அதிகமாகக் கொடுக்க பாஜக முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகள் எல்லாம் இப்படித்தான் சென்று முடியும். இதில் ஆப்ரஹாமிய மதத்தினரைக் குறைசொல்லவே முடியாது.
எங்களுடைய மதத்தலைவர்களின் ’பேரம் பேசும்’ திறனினால் இந்த நன்மைகள், சலுகைகள் கிடைக்கின்றன. எங்கள் கர்த்தரும் அல்லாவும் எங்களுக்குத் தரும் பரிசுகள் இவை. எனவே இந்திய அரசு தரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு எங்கள் மதத்தைப் பெருக்கும் வழியில் நாங்கள் நடப்போம் என்பது அவர்களுடைய எளிய அணுகுமுறை.
மாறாக, ‘பாஜக செய்த நன்மைகள் இவை; நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்’ என்று யாரேனும் வெளிப்படையாகச் சொன்னால் அவரை அந்த மதங்களின் அடிப்படைவாதத் தலைமைகள் எளிதில் ஓரங்கட்டிவிடும். பாஜகவால் அவர்களுக்கு எந்தவிதமான உரிய பாதுகாப்பு தரவும் முடியாது.
தலித் இயக்கங்களிலும் இதே சிந்தனையைப் பார்க்கமுடியும். பகவத் கீதையைவிட அம்பேத்கரின் அரசியல் சாசனமே எங்களுக்கு முக்கியம் என்று பாஜக சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் அதன்படியே ஆட்சியை நடத்தினாலும் தலித் தலைமைகள் எல்லாம் பாஜகவைப் பெரிதும் எதிர்க்கவே செய்கின்றன. சரியாகச் சொல்வதென்றால் பாஜகவையும் இந்து தர்மத்தையும் எதிர்க்கும் நபர்களையே அந்த கட்சிகளின் தலைமைக்கு ஆப்ரஹாமிய மதங்கள் முன்னிறுத்துகின்றன. தலித்களுக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாத திருமாவளவர்தான் தலித்களின் அசைக்கமுடியாத தலைவராக இங்கு வலம்வருவதெல்லாம் அப்படியாகத்தான்.
பாஜகவுக்கும் இந்துக்களுக்கும் நெருக்கமாக வர எளிய ஆப்ரஹாமிய மதத்தினர் விரும்பினாலும் அந்த மதங்களின் அடிப்படைவாத சக்திகள் விடமாட்டார்கள். எனவே பாஜகவுக்கு வாக்களிக்காத எளிய ஆப்ரஹாமியர்களைப் பெரிதாகக் குறைசொல்லவெல்லாம் முடியாது.
கல்வி கொடுக்கிறோம், மருந்து கொடுக்கிறோம்; கடனை அடைக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்லி மதம் மாற்றுவார்கள். ஆனால் அதைச் செய்துகொடுக்கும் இந்துக்கள்/இந்திய அரசு ஆகியவற்றின் மீது நல்லெண்ணம் வந்துவிடக்கூடாது என்பதிலும் குறியாக இருப்பார்கள். இதற்காக ஆப்ரஹாமிய மத அடிப்படைவாதிகளையும் குறைசொல்லமுடியாது. அவர்கள் அவர்கள் இலக்கில் தெளிவாக இருக்கிறார்கள்.
அதுபோல், ஆப்ரஹாமிய மதத்தினரை அரவணைத்துச் செயல்படும் காந்திய-இந்துத்துவ அணுகுமுறையிலும் எந்தவொரு தவறும் கிடையாது.
யார் மீதும் தவறு இல்லாதபோதிலும் இந்து நலனுக்கு மட்டும் இழப்பு ஏற்பட்டுவருகிறது. இது புரிந்துகொள்ளமுடியாத சிக்கல் அல்ல; தீர்க்க முடியாத சிக்கல் மட்டுமே.
ஆக மாடு மாதிரி எவ்வளவு மூட்டையை வண்டியில் ஏற்றினாலும் சுமந்து செல்லவேண்டும்; மூக்கணாங்கயிறு மாட்டு, காயடித்து, லாடம் கட்டி இழுக்கவைத்து அவ்வப்போது வைக்கோல் தண்ணி காட்டி, அறுவடைத் திருநாளில் பூஜையெல்லாம் செய்து வாழ்நாள் முழுவதும் வண்டியை இழுக்கவைத்துவிட்டு பலம் வற்றியதும் அடிமாடாக கசாப்புகடைக்கு அனுப்பிவைப்பார்கள். உழைத்து ஓடாகத் தேய்ந்து கறியாக முடிவது இந்துக்களின்/இந்து தலைவர்களின் தலையெழுத்து.
*
’இந்து வெற்றி’ என்பது ஆப்ரஹாமிய மதங்களுக்குப் பிடிக்காது என்பதால்தான் முதல் பத்தாண்டுகளில் இந்து மறுமலர்ச்சி என்பதைவிட தேசத்தின் வளர்ச்சி என்பதையே பாஜக முத்திரை முழக்கமாக வைத்து ஆட்சியை நடத்தியவந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், டிஜிட்டல் மயமாக்கம், கொரோனா தடுப்பூசி, இலவச ரேஷன், உள்கட்டமைப்பு சாதனைகள், பின் தங்கிய கிராமங்களுக்கு மின்சாரம், வீட்டுக்கு வீடு குடிநீர், இலவச எரிவாயு, இலவச வீடு, வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், ஆர்ட்டிகிள் 370 நீக்கம், அயல்நாட்டு நல்லுறவு, அயல்நாட்டில் நற்பெயர், அந்நிய முதலீட்டு ஈர்ப்பு, மேக் இன் இந்தியா என பாஜக அரசு பத்தாண்டுகளில் செய்தவை எல்லாமே செக்குலர் சாதனைகளே.
பாஜக செய்த மதம் சார்ந்த சாதனைகள் இரண்டு. ஒன்று யோகாவுக்கான ஆதரவு. இன்னொன்று ராமர் கோவில்.
யோகா விஷயத்தில்கூட அதை இந்து தர்ம வேர்களை நீக்கிவிட்டுத்தான் முன்னிறுத்துகிறது. ராமர் கோவிலில் மதச் சார்பின்மைக்கு வழி இல்லாததால் அதுமட்டுமே இந்துக்களுக்கு மட்டுமான நன்மையாகப் பார்க்கப்படுகிறது. இதிலுமே அயோத்தியில் மிகக் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்களே சுற்றுலா, ரியல் எஸ்டேட் மூலமான வருவாயில் பாதிக்கும் அதிகமானதைப் பெறவும் போகிறார்கள். ஆனால், அவர்கள் இதற்கான நன்றியை பாஜகவுக்குத் தரப்போவதில்லை. இருந்தும் இந்துக்களுக்கு அது செய்திருக்கும் நன்மைகள் அளவிடமுடியாதது.
ராமர் கோவில் கட்ட அரசு சார்பில் ஒரு நயா பைசா கூடத் தரவில்லை. மக்கள் இயக்கமாக நடக்கவேண்டும் என்ற காரணம் சொல்லப்பட்டாலும் மக்கள் தரும் நன்கொடைக்கு இணையான தொகையை இந்திய அரசும் தந்திருக்கவேண்டும். ஹஜ் மானியம் போல் இந்துக்களுக்கும் செக்குலர் அரசின் ஆதரவு அவசியமே.
பிரதமர் ராமர் கோவில் விழா தொடங்கி தேர்தல் முடிவதுவரை முழுக்கவும் காவி உடையில்தான் இருந்தார். அவர் தன்னளவில் மிகப் பெரிய புண்ணியத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டார். இந்துக்களுக்கு நிறைய செய்யவேண்டியிருக்கிறது.
இப்போது அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. ஏற்கெனவே முழுப் பெரும்பான்மை இருந்த நாட்களிலும் அனைவருக்குமான வளர்ச்சி மட்டுமே இலக்காக இருந்தது. இப்போது ராமர் கோவில் கட்டியும் வெற்றி கிடைக்கவில்லை என்று சொல்லி மேலும் செக்குலர் திட்டங்களில் மட்டுமே கவனத்தைக் குவித்துவிடக்கூடாது. உத்தரபிரதேசம் மற்றும் அயோத்தியின் மக்கள்தொகையில் மதம் சார்ந்த/இந்து மத விரோதம் சார்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு இந்தத் தீர்ப்பை எடுத்துக்கொள்ளவேண்டும். பிற மாநிலங்களில் கிடைத்திருக்கும் வெற்றிக்கு ராமர் கோவில் கட்டியது முக்கிய காரணம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
அனைத்தையும் வாக்கு அரசியலாகப் பார்க்கத் தேவையில்லை. இருந்தும் அதுவும் அவசியம்தானே.
*
மூன்றாம் ஆட்சியில் கச்சத்தீவு மீட்பு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுத்தல் போன்றவை மிகவும் அவசியம். ஊடக சீர்திருத்தம், நீதித்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட அதிகாரவர்க்கக் களையெடுப்புகள் அதைவிட மிகவும் அவசியம்.
பாஜக மிதவாதக் கட்சிதான். கோட்ஸேயிஸமும் வாஞ்சிநாதனிஸமும் நிச்சயம் தவறுதான். வாஞ்சியின் கோபத்தைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் வழிமுறை மிகவும் தவறு பாரதி சொன்னது அக்ஷரலட்சம் பெறும் அரசியல் பாடம். இந்த அசட்டு வன்முறையின் அதீத உச்சம் பிரபாகரனிஸம். தமிழ் இந்துக்கள் பக்கம் இருந்த அத்தனை நியாயங்களையும் அது முடக்கிப்போட்டது. எனவே அப்படியான அக்ரெஸிவ் அரசியலை பாஜக விரும்பாததில் துளியும் தவறில்லை.
ஆனால், தொகாடியாக்கள், தாக்கரேக்கள், ராமன்கோபாலன்கள் பாணி அரசியலைக்கூட பாஜக விரும்புவதில்லை. இவர்கள் பெருமளவுக்கு வார்த்தைப் போரில் ஈடுபட்டவர்கள் மட்டுமே. எதிர்த்தரப்பு செய்யும் வெறுப்புப் பிரசாரத்துக்கு சொரணையுடன் பதில் சொல்பவர்கள் மட்டுமே. பாஜக இதையும் தவிர்க்கவே விரும்புகிறது. அப்படியானால் எதிர் தரப்பையும் அந்த வெறுப்பு அரசியல் பேச்சுகளில் இருந்து ஒடுக்கிக் காட்டவேண்டும். நாகரிகமும் கண்ணியமும் நல்லிணக்கமும் ஒருவழிப்பாதையாக இருக்கவே கூடாது. ஒன்றிய அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வார்களென்றால் சென்னை கார்ப்பரேஷன் அரசு என்று பதிலுக்குச் சொல்லிக்காட்டவேண்டும்.
பிராமணக் கட்சி, வட இந்தியக் கட்சி என்றல்லாம் பொய்யாக எதிர் தரப்புகள் குத்தும் முத்திரைகளைப் போக்குவதற்கென தலையால் தண்ணீர் குடித்துவரவும் செய்கிறது. இந்துக்களை சீர்திருத்தும் பொறுப்பையும் இந்து இயக்கங்கள், இந்து சார்பு கட்சிகள் எடுக்கவேண்டியிருக்கிறது.
புதிதாக ஒருவர் (வாரிசாக இல்லாத நிலையிலும்) தலைமைப் பொறுப்புக்குவரும்போது அவருக்கான குழுவை உருவாக்கிக் கொள்வார். முந்தைய குழுக்களுக்கும் தியாகிகளுக்கும் புதிதாக வந்தவர்களும் அவர்களுடைய திடீர் ஆதரவாளர்களும் உபதேசங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்.
எதிர்முகாம்களுடனான நல்லுறவை மத்திய தலைவர்கள் விரும்புவார்கள். மாநிலத் தலைவர்கள் தவிர்ப்பார்கள். எல்லா இடங்களிலும் எளிதில் ஊடுருவும் ஆப்ரஹாமிய மத சக்திகள் பாஜகவுக்குள்ளும் இந்து இயக்கங்களுக்குள்ளும் ஊடுருவியும் இருக்கக்கூடும்.
இதையெல்லாம் தாண்டித்தான் இந்துக்களுக்கான நன்மைகளை இந்து அரசுகள், இந்து இயக்கங்கள் செய்யவேண்டியிருக்கும்.
அறுதிப் பெரும்பான்மை வேறு இல்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்ற பயம் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் மற்றும் பிற கட்சிகளின் உறுதியான, தெளிவான, தேச பக்தி மிகுந்த வாக்குமூலங்களின் மூலம் பெருமளவுக்கு அகற்றப்பட்டுவிட்டது.
முதல் இரண்டு ஆட்சிகளில் உலக விஷயங்களில் காட்டிய அக்கறையை இந்த மூன்றாம் முறை உள் நாட்டு விஷயங்களில் காட்டியாகவேண்டும்.
வாக்குகளை அறுவடை செய்வதில் ஒரு நளினமும் மேதமையும் கைகூடியிருக்கிறது. உள் நாட்டில் நற்பெயரை மூழுமையாக வென்றெடுக்கத் தேவையானவற்றைச் செய்தாகவேண்டும்.
மக்கள் மனதில் எதிரணிக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் ஆதரவு மிகவும் அபாயமானது.
காங்கிரஸ் அதிகாரத்தைக் கைமாற்றித் தருவதில் கை தேர்ந்த கட்சி. பிரிட்டிஷார் எப்படி இந்தியாவை விட்டுச் சென்றாலும் அவர்களுடைய காலனிய ஆட்சி தொடரவேண்டும் என்று திட்டமிட்டு ராம ராஜ்ஜியத்துக்கு எதிராக ஈஸ்வர்-அல்லா ராஜ்ஜியம் என்ற போர்வையில் நேருவிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்களோ அதுபோலவே காங்கிரஸும் ஆம் ஆத்மி, த்ரிணமூல், ரெட்டி, மான் சிங், பவார், ஸ்டாலின், பினராயி என பி டீம்களிடம் ஆட்சியைக் கைமாறித் தந்திருக்கிறது.
ஒரு கட்சி தொடர்ந்து இரண்டு மூன்று முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன காரணத்தினாலோ அந்தக் கட்சி மீது அதிருப்தி வந்துவிடுகிறது. பாஜகவும் அந்த சலிப்பினால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளவேண்டும். முதலில் வடக்கில் பேராதரவு… தெற்கில் பின்னடைவு. அதன் பின் வடக்கில் சற்று பின்னடைவு தெற்கில் ஆதரவு என்ற நிலை தொடரும் என்று சொல்லமுடியாது. பாஜக தனக்கான பி.டீம்களைக் கண்டடைந்தாகவேண்டும்.
காங்கிரஸ் தன்னால் செய்யமுடியாத பிரிவினை விஷயங்களை மேற்குவங்கம், தில்லி, பஞ்சாப், கேரளா, தமிழகம் போன்ற இடங்களில் தனது பி டீம்கள் மூலம் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. பாஜகவும் தன்னல் முடியாத இந்து – இந்திய நலன்சார்ந்த விஷயங்களைத் தீவிரமாக முன்னெடுக்க பி.டீம்களை உருவாக்கியாகவேண்டும். பாஜக மீதான சலிப்பு இந்து நலனுக்கு எந்தவொரு தீங்கையும் தந்துவிடக்கூடாது. பாஜகவின் வெற்றியைவிட இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் நலன் மிகவும் அவசியம். திக தனக்கு செல்வாக்கு இல்லையே என்று கவலைப்படுவதில்லை. ஏனென்றால் திமுக அந்த வேலையைச் செய்துவருகிறது. திமுகவுமே ஆட்சியில் இருப்பதால் கொஞ்சம் அடக்கிவாசித்தாலும் தன்னுடைய கிளைகளை வைத்து இந்து-இந்திய விரோதச் செயல்களைத் தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது.
காங்கிரஸ் தனக்கு செல்வாக்கு போனது பற்றிக் கவலைப்படவில்லை. ஏனென்றால் அதன் பி டீம்கள் அந்த சனாதன தர்ம-தேச அழிப்பு வேலைகளைச் செய்துவருகின்றன. பாஜகவும் இந்து தர்ம-தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கவேண்டும். தானே அனைத்தையும் செய்ய விரும்பினாலும் சரி. பி டீம்களைப் பலப்படுத்திச் செய்தாலும் சரி. இலக்கு என்பது கட்சியின் நலனைத் தாண்டியதாக இருந்தாகவேண்டும்.
*
3.0 : தமிழகக் கணக்குகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக + பாஜக கூட்டணி பற்றிய பேச்சுக்கள் மீண்டும் முன்னிலைக்கு வந்திருக்கின்றன.
அந்தக் கூட்டணி அவசியம் என்று தேர்தல் முடிவுகளை வைத்து சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி சேராததால்தான் பாஜகவுக்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுகவுக்கு அத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் சேர்ந்திருந்தால் இருவருக்குத் தனித்தனியே கிடைத்த வாக்குகள் சேர்த்துக் கிடைத்திருக்கும்; திமுக கூட்டணியைப் பல இடங்களில் வீழ்த்தியிருக்கலாம் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது.
பரஸ்பர ஓட்டுப் பரிமாற்றம் நடக்காமல் இதே தோல்வியே கிடைத்திருக்கும் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதிலும் பாஜக வாக்குகள் அதிமுக பக்கம் போயிருக்கும். அதிமுக வாக்குகள் பாஜக பக்கம் வந்திருக்காது. அதிமுக வேண்டுமென்றால் ஒரு சில இடங்களில் வென்றிருக்கும். மத்திய பாஜகவுக்கு அதிமுக எம்.பிகளின் ஆதரவு கிடைத்திருக்கும். ஆனால், தமிழகத்தில் பாஜக சொந்தக் காலில் நிற்பது மேலும் தாமதப்பட்டுப் போயிருக்கும்.
இதுவே இப்போதைய மற்றும் இதற்கு முந்தைய காலக் கள யதார்த்தம்.
இப்போது பாஜக+அதிமுக கூட்டணி ஏன் உருவாகவேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்கவேண்டும். இந்துக்களுக்கு சாதகமான அரசு அமையவேண்டுமென்றால் இந்தக் கூட்டணி ஜெயிக்கவேண்டும் என்று ஒரு பதில் சொல்லலாம்.
இது குறுகிய கால நன்மை. நீண்ட கால நோக்கில் கூட்டணி அமைத்தால் பாஜகவினால் தனியாகக் கால் ஊன்ற முடியாமல் போகும். அதிமுகவையே சார்ந்து இருக்கவேண்டிவரும். இது நல்லதல்ல என்றொரு விஷயமும் இருக்கிறது.
எதிரணிக்கும் இதே பிரச்னை இருக்கிறது. அங்கு திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருக்கின்றன. திமுகவுக்கு அதிக ஆதிக்கத்தைத் தருவதால் காங்கிரஸ் பலவீனப்பட்டுத்தான் போயிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்புகூட காங்கிரஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. இப்போது 10க்கும் குறைவான இடங்களே தரப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் தன் இந்து விரோத இலக்கில் தெளிவாக இருக்கிறது. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஆதரவான ஆட்சி அமைந்துவிடக்கூடாது; அதற்காக திமுகவைத் தோளில் சுமக்க அது மனப்பூர்வமாக தயாராக இருக்கிறது.
இதில் திமுகவின் பங்குமே உண்டு. காங்கிரஸில் மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள், கொங்கு கட்சி என அனைத்திலும் தனக்கு சாதகமான ஆட்களையே அந்தக் கட்சித் தலைமையில் உட்காரவைத்திருக்கிறது. சர்ச்சின் உதவி இதில் பெருமளவுக்கு இருக்கவும் செய்கிறது.
இந்துக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டிய பாஜக மற்றும் அதிமுகவுக்கிடையே இந்த ஒற்றுமை இல்லை. அதை உருவாக்கவேண்டிய ஆர்.எஸ்.எஸ். அது தொடர்பாக எதையும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் பாஜகவே ஆர்.எஸ்.எஸிடமிருந்து விலகி நிற்கவே விரும்புகிறது. அதிமுகவைக் கேட்கவே வேண்டாம்.
ஆக பாஜக, அதிமுக என இந்து ஆதரவு சக்திகள் யார் பெரியவர் என மோதிக்கொள்வதால் இந்துக்களுக்குத்தான் தீமை விளைகிறது. இதில் பெரிதும் தவறு அதிமுக பக்கமே இருக்கிறது. அதிமுக அடிப்படையில் இந்துக்களுக்கான கட்சியே அல்ல; திமுகவை எதிர்த்து உருவான கட்சி. திமுகவுக்கு இந்து எதிர்ப்பே முக்கிய கொள்கை. அதிமுகவுக்கு திமுக எதிர்ப்பு மட்டுமே கொள்கை. இந்து ஆதரவு என்பது அதிமுகவின் கொள்கையே அல்ல.
திமுக எதிரி என்றால் அதிமுக துரோகி என்பதுதான் தமிழக இந்துக்களுடைய அனுபவம்.
எம்.ஜி.ஆரின் காலத்தைவிட ஜெயலலிதாவின் காலத்தில் இந்துக்களின் நிலைமை மோசமானது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் மேலும் மோசமானது.
எனவே பாஜக ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவே கூடாது.
இது ஒரு பார்வை.
ஆனால், அதிமுகவின் தலைவர்கள்தான் இந்து விரோதிகளாக இருக்கிறார்களே தவிர அதிமுகவின் வாக்காளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்குக் கிடைக்கவேண்டுமென்றால் கூட்டணி அவசியமாகிறது.
அந்த அதிமுக விசுவாசிகளான இந்துக்களுக்கு பாஜகவைப் பற்றி நல்ல அபிப்ராயம் வந்துவிடக்கூடாதென்றுதான் கடந்த பத்து ஆண்டுகளாக திமுக கும்பலும் அதிமுக தலைவர்களும் தீயாகச் செயல்பட்டுவந்திருக்கிறார்கள்.
பாஜக இதைச் சரி செய்யத் தவறிவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இந்து வாக்குகள் பாஜக பக்கம் அப்படியே வந்திருக்கவேண்டும். சல்லிக்கட்டு மீட்பு என்ற டூல் கிட் போராட்டத்தை நடத்தி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெறலாம் என்று பாஜக நினைத்துச் செயல்பட்டது. ஆனால், இந்து விரோத, இந்திய விரோத சக்திகள் அதை எளிதில் ஹைஜாக் செய்து பாஜக விரோதமாக மாற்றிவிட்டனர். பாஜக அன்னா ஹஸாரே மூலம் நடத்திய போராட்டத்தை கெஜ்ரிவால் கடத்திச் சென்றதுபோல் இங்கும் பாஜக தோற்றுப்போனது. அதிலிருந்து பாஜகவினால் மீளவே முடியவில்லை.
நீட் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ, விவசாயக் கடன் ரத்து, எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் என தொடர்ந்து அடித்து பாஜகவை இங்கு கால் ஊன்றவிடாமல் திமுக செய்தது. அதிமுக துணை நின்றது.
உண்மையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மெள்ளக் கால்பதிப்போம். அதன் பின் தனியாகச் செல்லலாம் என்று பாஜக மத்திய தலைமை முடிவு செய்திருந்தது. அதில் தவறே இல்லை. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைத்தபோது காங்கிரஸ் எப்படி திமுகவை தமிழினத் துரோகம்வரை செய்யவைக்கும் அளவுக்கு வலிமையுடன் அதிகாரத்துடன் செயல்பட்டதோ அப்படி பாஜகவும் நடந்துகொண்டிருக்கவேண்டும்.
டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தால் 300 ரன்களுக்கு மேல் குவிக்கவேண்டும். கவாஸ்கர் 60 ஓவர்கள் ஆடி 37 ரன்கள் எடுத்து நாட் அவுட் என்று இருந்ததுபோல் தடுப்பாட்டம் ஆடக்கூடாது.
மத்திய பாஜக 2014க்குப் பின் இப்படித்தான் தவறு செய்தது.
ஒன்று ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி நேரடியாக களம் கண்டிருக்கவேண்டும். அதிமுகவுடன் சிறிது காலம் பயணித்து அதன் பின் தனித்துச் செல்வோம் என்று முடிவு செய்தால் அதிமுகவை வைத்து திமுகவை காலி செய்திருக்கவேண்டும்.
பாஜக+அதிமுக கூட்டணி வெற்றிபெறவேண்டுமென்றால் பிரதான எதிரியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் வெலவெலக்க வைக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் திமுகவினர் முன்பு செய்த தவறுகளுக்கு சட்டரீதியான தண்டனைகளைப் பெற்றுத் தந்திருக்கவேண்டும். திமுகழகம் ஒரு தமிழினத் துரோகக் கூட்டம் என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கவேண்டும்.
அல்லது அதிமுக கொத்தடிமைக் கட்சி; தமிழர் விரோதக் கட்சி என்றெல்லாம் திமுக செய்த பிரசாரத்துக்கு அதிமுகவுமே துணை நின்றதைத் தடுத்திருக்கவேண்டும். தெர்மோகோல் விட்டு நாங்கள் எவ்வளவு புத்திசாலி தெரியுமா என்று தன்னைத்தானே கேவலப்படுத்திக்கொண்டதன் மூலம் பாஜக+அதிமுக கூட்டணியை மக்கள் மத்தியில் காமடி பீஸாக ஆக்கிக் கொண்டதையாவது தடுத்திருக்கவேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணியை விரும்பிய மத்திய பாஜகவினர் அந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைக்க என்ன செய்யவேண்டுமோ அதில் 100-ல் ஐந்து சதவிகிதம் கூடச் செய்யவில்லை.
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் மத்திய அரசு பல விஷயங்கள் வேகமாக, விவேகமாகச் செய்து அதை நடத்திக் காட்டியது. உண்மையில் நரேந்திர மோதிதான் ஆவணங்கள், சட்டங்கள், அரசுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சல்லிக்கட்டு நாயகர். ஆனால், மக்கள் மத்தியில் அவர்தான் வில்லன். இந்த சிக்கலைச் சமாளிக்க ஊடக பலம் அவசியமாக இருந்தது. பாஜக அதை எந்த ஜென்மத்திலும் புரிந்துகொள்ளப்போவதே இல்லை.
ஒருவேளை 2014-2019 காலத்தில் நல்லாட்சி வழங்கினால் அதிமுகவுக்குத்தான் அந்த நற்பெயர் போகும். எனவே அதிமுகவுடனும் கூட்டணி தேவை இல்லை என்பதுதான் பாஜகவுக்கான வியூகமாக இருந்திருக்கவேண்டும். தனித்து ஜெயிப்பதுதான் அவசியம் என்பது தமிழக பாஜகவுக்குப் புரிந்திருந்தது. ஆனால். இந்தப் பாடத்தை மத்திய பாஜக கற்றுக்கொள்ளவில்லை. அதிமுக விலகிச் சென்றதால் கூட்டணி முறிந்தது.
அது ஒருவகையில் தமிழகத்துக்கு நடந்த சிறிய நன்மை. 2024 தேர்தலில் தனித்து பாஜக நன்றாகக் களமாடியது. ஆனால், இதையுமே முழுமையாகச் செய்யவில்லை.
திமுக கூட்டணி செய்யும் தவறுகளைப் பட்டியலிட்டால் பிராமண வெறுப்பு முதலிடத்தைப் பிடிக்கும். இந்து விரோதம் அடுத்த இடத்தைப் பிடிக்கும். இந்திய விரோதம் அதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும். தமிழினத் துரோகம் என்பதும் அதன் முக்கியமான குணமாக இருக்கிறது. அதிகார துஷ்பிரயோகம், ஆப்ரஹாமிய மதங்களின் அடிப்படைவாத நலன், கஞ்சா-சாராயப் பெருக்கம், இலவசப் பெருக்கம் என பல இருக்கின்றன.
வாரிசு அரசியல், ஊழல்மயம் என்பவையும் மிக முக்கியமான பிரச்னைகளே. ஆனால், பாஜக அந்தக் கடைசி இரண்டை மட்டுமே பிரதானமாக எதிர்க்கிறது. அது தவறு.
ஊழலைத் தடுப்பது மிக மிக அவசியமே. ஆனால் எந்தவொரு கட்சியையும் ஊழல் கட்சி என்று சொல்லி மட்டுமே வீழ்த்திவிடமுடியாது. அதிலும் தேசிய அளவில் ஊழலில் சிக்கியவர்களை பாஜகவில் சேர்த்துக்கொள்ளும் சாணக்கியத்தனமும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது; பல ஊழல்வாதிகள் தண்டிக்கப்படவே இல்லை; ஒரே ஒரு அரசியல்வாதியை அதுவும் அனைத்துக் கட்சிகளிலும் இருந்துவிட்டு வந்த ஒருவரைக் கைது செய்வதிலேயே இத்தனை தடுமாற்றமென்றால் ஊழல் எதிர்ப்பிலும் போதிய தீவிரம் காட்டவில்லை என்றே அர்த்தம்.
மக்கள் மத்தியில் நூற்றுக்கு பத்து மதிப்பெண் கூட இந்த முயற்சிகளுக்குக் கிடைக்கவில்லை. பாஜக பல மடங்கு நேர்த்தியான, ஊழலற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்திவருகிறது. ஆனால், நான்கு ஊழல்வாதிகளைக் கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றால்தான் தமிழக மக்களுக்குப் புரியும். அதிலும் அவர்கள் திமுகவின் முக்கிய புள்ளிகளாக இருக்கவேண்டும். பிற கட்சியில் இருந்துவந்துவிட்டு திமுகவே பகடைக்காயாகப் பயன்படுத்தும் டம்மிகளாக இருக்கக்கூடாது. ஜெயலலிதாபோல் உள் கட்சியினருக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக விளங்கினால் போதாது. எதிர்க்கட்சிகளையும் நடு நடுங்கச் செய்யவேண்டும்.
வாரிசு அரசியல் சார்ந்த விமர்சனத்தைப் பொறுத்தவரையில் கோட்பாட்டுரீதியில் குடும்ப அரசியல் தவறு. ஆனால் நடைமுறையில் அதுவே பலன் தருவதாக இருக்கிறது.
காங்கிரஸிலும் திமுகவிலும் சமாஜ்வாதி கட்சியிலும் லாலு பிரசாத் கட்சியிலும் ரெட்டி கட்சியிலும் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. அங்கு ஒரு பிரச்னையும் இல்லை. பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. ஆனால் வாரிசு அல்லாத ஒருவரை மத்திய தலைமை தன்னிச்சையாக நியமிப்பதுமே தவறுதான். மாநில உறுப்பினர்கள் கூடி மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இதுவே உள் முரண்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
பாஜகவிலும் தந்தை-மகன், மகள் என பதவிக்கு வருகிறார்கள். ஆனால் தலைமையில் அப்படி இல்லை என்பதால் அதை வாரிசு அரசியலாகச் சொல்லமுடியாது. தனி நபர் ஒருவருடைய வாரிசு அரசியலுக்கு வந்தால் அவருடைய செல்வாக்கு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். தலைமைப் பதவிக்கே ஒரு வாரிசு நியமிக்கப்பட்டால் அது கட்சியின் உண்மையான தொண்டர்கள், முந்தைய நிர்வாகிகள் அனைவரையும் ஓரங்கட்டும் விஷயமாகப் போய்விடும்.
பாஜகவில் இருப்பவர்கள் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள் என்பதாலும் மத்திய தலைமை மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள் என்பதாலும் புதிய நியமனங்களினால் பெரிய பிரச்னைகள் எதுவும் எழாமல் இருக்கிறது. ஆனால், இது ஆரோக்கியமானதல்ல. அதிலும் வாரிசு அரசியல் சார்ந்த விமர்சனத்தை முன்வைக்கும்முன் இதுபோன்ற அதிருப்திகள் எழாமல் பார்ப்பது மிகவும் அவசியம்.
புதிய நியமனத் தலைவர் அவருக்கான குழுவை அமைக்க முயற்சி செய்யும்போது முந்தைய குழுக்களின் அதிருப்தியைத் தவிர்க்கவே முடியாது. அதிலும் புதிய தலைவருக்கு அதீத நெருக்கமும் குழைவும் காட்டுபவர்கள் முந்தைய தலைவர்களையும் அவர்களுடைய குழுவினரையும் பார்த்து உபதேசங்கள் செய்யும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.
காந்தியத் தியாகிகளை நேருவியப் பண்ணையார்கள் ஓரங்கட்டினார்கள். உண்மையில் காந்தியே காந்தியவாதிகளை ஓரங்கட்டித்தான் நேருவை முன்னிறுத்தியிருந்தார். எனவே நேரு, சுதந்தரப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்.
அம்பேத்கர் என்றைக்குமே மக்கள் தலைவராகவோ குழு அமைப்பு கொண்டவராகவோ இருந்திருக்கவில்லை. எனவே அம்பேத்கரை ஓரங்கட்டுவதன் மூலம் அம்பேத்கரிஸத்தையே நேருவால் ஓரங்கட்டிவிட முடிந்தது.
திமுகவில் ஆரம்பகாலம் முதல் பாடுபட்ட பலரை கருணாநிதி தந்திரமாக ஓரங்கட்டினார். எம்.ஜி.ஆருடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற பலரை ஜெயலலிதா உதிர்ந்த ரோமங்களாக சுருட்டிவீசினார்.
வாரிசுகளாக வந்த ஸ்டாலினும் உதயநிதியுமே கூட கருணாநிதியின் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களை ஓரங்கட்டியிருக்கிறார்கள். இந்திரா, சோனியா போன்றோரும் இதைவிடக் கொடூரமாக கேவலமாக தியாகிகளைப் புறக்கணித்திருக்கிறார்கள். காமராஜரை இந்திரா ஓரங்கட்டியதெல்லாம் எந்த ஜனநாயகவாதியாலும் மக்கள் மீது அக்கறைகொண்டவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஆக வாரிசுகள் வந்து ஓரங்கட்டுகிறார்களா… நியமனத் தலைவர்கள் வந்து ஓரங்கட்டுகிறார்களா என்பது பெரிய விஷயமே இல்லை. இந்த ஓரங்கட்டல் எல்லா அமைப்புகளிலும் இருந்துவருகிறது. சரியான நேரத்தில் சரியான நபரின் பின்னால் அணி திரள்பவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். மற்றவர்கள் கழற்றிவிடப்படுவார்கள். வரலாறு அப்படிக் கொடூரமானதுதான். தியாகிகளுக்கு தியாகமே பரிசு.
கோட்பாட்டளவில் தவறாக இருக்கும் வாரிசு அரசியல், நடைமுறையில் நன்மையைத் தருகிறது; கோட்பாட்டளவில் சரியாக இருக்கும் வாரிசு அல்லாத தலைமை என்பது சில நெருக்கடிகளைத் தருகிறது. இது பெரியதோர் நகைமுரணே. அதிலும் இந்து விரோத சக்திகள் கட்டுக்கோப்புடன் வாரிசு அரசியலை அழகாக அனுசரித்துச் செல்கிறார்கள். இந்து ஆதரவு சக்திகளிடையே நியமனத் தலைவர்களினால் இடைவெளி உருவாகிறது. இது மிகவும் தவறு.
எதிரிகள் தவறான வழியில் சென்று எளிதில் ஜெயிக்கிறார்கள். நாம் சரியான வழியில் சென்றும் தோற்கிறோம். இதற்கான காரணம் என்னவென்றால் நாம் சரியான வழியில் முழுமையாகச் செல்வதில்லை. அரைகுறையாக நின்றுவிடுகிறோம்.
மத்திய தலைமை மாநிலத் தலைவர்களை மாநில உறுப்பினரிடம் கேட்டுத் தீர்மானிக்காமல் இருப்பதற்கான காரணம் மிகவும் தவறானது. மத்திய தலைமையின் கட்டுப்பாட்டில் இருந்து மாநிலக் கிளை விலகிச் செயல்படக்கூடும் என்ற பயமே அதற்கான காரணம்.
இந்திரா அனைத்து மாநிலக் கிளைகளிலும் தன் சொல் கேட்டு நடப்பவர்களையே நியமித்தார். காமராஜரை ஓரங்கட்டியதெல்லாம் அப்படியான சர்வாதிகார மனநிலையின் வெளிப்பாடுதான். சோனியா இன்னொருபடி மேலே சென்று பிரதமராகவே ஒருவரை நியமித்தார். அவரைத் தேர்தலில் போட்டியிடவிடாமலும் தடுத்தார்.
பாஜக அப்படி மாநிலத் தலைவர்களை இழிவாக நடத்துவதில்லை. மனோகர் பாரிக்கர், எடியூரப்பா, ஃபட்னவிஸ், யோகி, அண்ணாமலை போன்றோரெல்லாம் தனித்தன்மை மிகுந்த தலைவர்களாக பரிணமிக்க இங்கு இடமிருக்கிறது. இருந்தும் நியமனங்கள் செய்யப்படுவதும் அது சார்ந்த உரசல்கள் சரியாவதற்கு சிறிது அவகாசம் எடுப்பதும் தவிர்க்கப்படவேண்டும். இந்த உள் உரசல்கள் எல்லாம் விரைவிலேயே தீர்க்கப்பட்டுவிட பாஜகவினரின் கொள்கைப் பிடிப்பே முக்கிய காரணம். எனினும் சில சிராய்ப்புகள் தவிர்க்கப்படவேண்டும்.
வெற்றி முகத்தில் இருக்கும் பகுதிகளில் இந்த நியமனங்கள் பெரிய இழப்பைத் தராதுதான். ஆனால், தோல்வி முகத்தில் இருக்கும் இடங்களில் இது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.
எனவே ஊழல் எதிர்ப்பு, வாரிசு அரசியல் எதிர்ப்பு என்ற விஷயங்கள்தான் மக்களுக்கு எளிதில் புரியும் என்று வியூகம் அமைப்பது தவறு.
வோட்டுக்குப் பணம் கொடுப்பது மிகப் பெரிய தவறு. அதைச் செய்ய விரும்பாத பாஜகவுக்கு அதனால் வெற்றி வாய்ப்பு குறைகிறது என்பது ஒரு எல்லைவரை மட்டுமே சரி. ஒருவேளை நாளை பாஜகவும் பிற கட்சிகளைவிட அதிகப் பணம் தந்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காது என்பதே நிஜம். ஏனென்றால் வெறும் காசுமட்டுமே வாக்குகளைத் தீர்மானிப்பதில்லை. அது கடைசியாகச் சாப்பிடும் ஆறாவது இட்லியால்தான் வயிறு ரொம்புகிறது; அதையே முதலில் சாப்பிட்டிருக்கலாமே என்று சொல்வதைப் போன்றது. காசு தருவது வாக்குகள் கிடைக்க ஒரு காரணம். அதுவே முழு காரணம் அல்ல; காசைப் பெற்றுக்கொண்டாலும் ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பத்துக்குரிய கட்சிக்குத்தான் வாக்கு செலுத்துவார்கள். எனவே அந்த விஷயத்தைக் குறித்து அதிகம் பேச எதுவும் இல்லை.
மதரீதியாக மிரட்டி வாக்களிக்க வைத்து வெற்றி பெறச் செய்வதை மறைக்க காசு கொடுப்பதென்பது ஒரு அலிபியாகப் பயன்படுத்தப்படுகிறது. வோட்டுக்குக் காசு கொடுப்பதும் பெறுவதும் மிகப் பெரிய தவறுதான். ஆனால், பாஜகவின் தோல்விக்கு அதன் பங்கு 10% மட்டுமே இருக்கும்.
***
3.0 : தர்மக் கணக்குகள்
உண்மையில் திமுக கூட்டணி செய்யும் முக்கியமான தீமைகளை எதிர்த்தே களத்தை அமைக்கவேண்டும்.
சனாதனத்தை அழிப்பேன் என்று சொல்பவர்களை சுதந்தரமாக உலவவிட்டால் மத்திய தலைமையுமே அதைத்தான் விரும்புகிறதுபோலிருக்கிறது என்று மக்கள் அனைவரும் அந்தக் குரலின் பின்னாலே அணிதிரள்வார்கள்.
குமரி முனையில் தியானம் செய்ததென்பது சனாதனம் மீதான பாஜகவின் அழுத்தமான நம்பிக்கையையும் ஆதரவையும் எடுத்துக்காட்டத்தான் செய்தது. ஆனால், ஏப்ரல் 19க்கு முன்பாக சில கைது நடவடிக்கைகள் நடந்திருக்கவேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் என்ற பெயரில் ஹிந்து மதத்தைத்தான் அழிக்க நினைக்கிறோம். எங்கள் கொள்கையே ஆரம்பத்தில் இருந்து அதுதானே என்று தொலைகாட்சிகளிலும் அலட்சியமாக பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
டி.எம்.கே ஃபைல்ஸ் என ஊழல் எதிர்ப்பில் காட்டில் அக்கறையில் 100-ல் ஒரு பங்கு கூட இந்து விரோதப் பேச்சுகளை அடக்குவதில் காட்டவில்லை. உண்மையில் இந்துக்கள் அந்தப் பேச்சுகளினால் கோபப்பட்டு பாஜகவுக்கு ஆதரவாக அணி திரண்டிருக்கவேண்டும். செய்யவில்லை. ஆக மக்கள் மீதும் மிகப் பெரிய தவறு இருக்கிறது. ஆனால், வல்லாதிக்க வாக்குகளின் ஓரணித் திரளலும் இந்து சார்பில் வலுவான முகம் இல்லாமல் இருப்பதுமே இந்தத் தோல்விக்குக் காரணம். மக்கள் இந்து சக்தியின் பின்னால் அணி திரளத் தயாராகவே இருக்கிறார்கள். ஒரு வசீகரத் தலைவரின் தேவை இருக்கிறது. திமுக கூட்டணியை இவரால் பந்தாட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எம்.ஜி.ஆர். ஒருவரின் தேவை இப்போதும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஏற்கெனவே திரைப்படங்களில் நம்பியார், கருணாநிதி வகையறாக்களை வீழ்த்திக் காட்டியிருந்தார். எனவே மக்கள் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்ததுமே அவரை நாயகராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அரசியல் களத்தில் பாஜக முதலில் திமுகவையும் அதன் கூட்டணிகளையும் அவர்களுடைய இந்து விரோத, இந்திய விரோதச் செயல்பாடுகளுக்காக ஓடஓட விரட்டியடித்துக் காட்டவேண்டும். ஊழல் வழக்குகளிலும் இறங்கி அடிக்கவேண்டும். அதன்பின்னரே தமிழக பாஜக தலைவரை எம்.ஜி.ஆரின் மறு வடிவமாக ஏற்றுக்கொள்வார்கள். 2026க்குள் இதைச் செய்தாலே தமிழக பாஜகவுக்கு நல்லது.
ஒவ்வொரு படியாக ஏறுவோம் என்பதெல்லாம் மிகவும் நியாயமான விஷயம்தான். ஆனால், சுமார் 50 ஆண்டுகள் மட்டுமே வயதாகியிருக்கும் பாஜக என்ற அரசியல் கட்சிக்கு தமிழக மக்கள் மத்தில் செல்வாக்கை ஏற்படுத்தத்தான் கஷ்டப்படவேண்டியிருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் இருக்கும் சனாதன தர்ம சிந்தனைகளுக்கு ஆதரவு பெறவைக்கவேண்டுமென்றால் படிப்படியாகவெல்லாம் ஏறவேண்டியிருக்காது. பூமிக்குள் புதைந்துகிடக்கும் தங்க விக்ரஹத்தை துலக்கினாலே ஒளிவீசத்தொடங்கிவிடும். புதைந்த காலம் எவ்வளவோ ஒளிவீசவைக்கவும் அவ்வளவு கால தாமதம் ஆகவெல்லாம் செய்யாது. நூறாண்டு இருள் அடைந்திருக்கும் அறைக்குள் வெளிச்சம் வரவைக்கவேண்டுமென்றால் ஜன்னலைத் திறந்தாலே போதும். ஒரு நொடியில் அறை முழுவதும் ஒளி பெற்றுவிடும்.
சனாதன எதிர்ப்பு என்பது வைதிக எதிர்ப்பு; அதாவது பிராமண எதிர்ப்புதான் என்றுமே விளக்கங்கள் தரப்பட்டன. இதுதான் எதிரியின் தந்திரம். துரதிஷ்டவசமாக இதை பாஜகவும் ஏற்கிறது. பிராமணியம் தவறு என்பதுதான் பாஜகவின் கொள்கையும்.
ஜாதியத்துக்கு பிராமணியம் என்ற பெயர் வைத்ததே தவறு. மேலும் ஜாதியம்-பிராமணியம் என்பது ஆப்ரஹாமிய மதவாதம் அளவுக்குக் கெட்டதில்லை என்பதை உரக்கச் சொல்லும் ஒரே ஒரு இந்து – இந்தியத் தலைவரைக் கூட நம்மால் பார்க்கமுடியவில்லை. இது மிகப் பெரிய துரதிஷ்டம். விவேகானந்தர், பாரதி, சாவர்க்கர், காந்தி என பலரும் உருவாக்கி வைத்த சீர்திருத்தச் சிக்கல் இது.
உலகம் முழுவதும் ரத்தக் களறியைப் பெருக்கெடுக்கச் செய்த இஸ்லாமின் கடந்த காலம் குறித்தோ கிறிஸ்தவத்தின் கடந்த காலம் குறித்தோ அவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்வதே இல்லை. காலனியத்தின் கொடை என்றுதான் அந்த கிறிஸ்தவ அராஜகங்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள். இந்துக்கள் மட்டுமே தமது தவறுகளுக்கு இவ்வளவு சுய நிந்தனை செய்துகொள்ளத் தேவையே இல்லை. நவீன காலத்தில் வெகுவாக தம்மை மாற்றிக்கொண்டிருக்கும் இந்துக்கள் மற்ற மதங்களைவிட முன்பும் இன்றும் பல படிகள் மேலானவர்களே. இந்து தர்மத்தைப் பழிக்கும் சக்திகளுடன் விட்டுக் கொடுத்துப் பேசி சமாளிக்கவேண்டும் என்ற அணுகுமுறையே தேவையில்லை.
துரதிஷ்டவசமாக, திமுகவின் பிராமண விரோதச் செயல்பாடுகளை பாஜக ஒருவகையில் சமூக நீதிச் செயல்பாடாகவே பார்க்கிறது. அம்பேத்கரை அரசியல் வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு திமுகவின் ’சமூக நீதி’ செயல்பாடுகள் உவப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
இஸ்லாமிய எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு, இந்திய தேசியப் பற்று ஆகிய விஷயங்களில் ஈ.வெ.ராவை விட அம்பேத்கர் பல மடங்கு மேலானவர். அந்தவகையில் பாஜக அவரை தமது வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறது. ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்றவகையில் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரை பாஜக நேச சக்தியாகவே கருதுகிறது. அதனால்தான் திமுக மீது காங்கிரஸ் அளவுக்குக்கூட எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக எடுப்பதே இல்லை.
திமுகவின் இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றையாவது பாஜக தீவிரமாக எதிர்க்கலாம். அதையும் செய்வதில்லை. ஈழத் தமிழினத் துரோகம் என்பதைக்கூட பேசுவதே இல்லை. மாநில உரிமை என்ற பெயரில் திமுக ஆடும் பிரிவினை ஆட்டம் முழுவதற்கும் சரியாகத் தடுப்பாட்டம்கூட ஆடமுடியாமல் பாஜக தடுமாறிவருகிறது. திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் முடியவில்லை. முகநூல் பதிவுகளுக்குக் கைது என்ற அராஜகத்தைக்கூடத் தடுக்க முடியவில்லை.
உண்மையில் திமுக இந்த ஃபாசிஸ நடவடிக்கைகளை பாஜகவுக்குள் உள் மோதலைப் பெருக்கும்வகையில் மிகத் தந்திரமாகவும் செய்துவருகிறது. அதன் பின்னரும் பாஜக இதைத் தடுக்கப் பெரிய முனைப்பு எதையும் காட்டவில்லை. அல்லது அது காட்டும் முனைப்பு போதுமானதாக இல்லை. எந்தவொரு தவறைச் செய்வதற்கு முன்பாகவும் இரண்டு அப்பாவி இந்துக்களைத் துணைக்குச் சேர்த்துக்கொள்வது, உள் முரணைப் பெரிதாக்கும் வகையில் குட்டையைக் குழப்புவது, மிகப் பெரிய தவறு செய்தவனையும் பேட்டரி வாங்கிக் கொடுத்தான் என்று ஃபிலிம் காட்டுவது என எதிரி விரிக்கும் வலை அத்தனையிலும் தேடித் தேடிச் சென்று மாட்டிக்கொள்வதில் இந்துக்களுக்கு நிகர் இந்துக்கள் மட்டுமே.
அற நிலையத் துறை செய்துவரும் அராஜகங்களைத் தட்டிக் கேட்பதுகூட இல்லை. ஐந்தாண்டுக்கு மேல் ஓர் ஆலயத்தில் அரசு உட்காரக்கூடாது என்று சட்டத்தைக்கூட அமல்படுத்தவில்லை.
தமிழகத்தில் இந்து நலன் என்பதை மத்திய பாஜக ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆப்ரஹாமிய மதத்தினரின் வாக்குகள் மட்டுமல்ல; இந்துக்களின் அதிருப்தியுமே வலுவாக இருந்துவருகிறது. நல்லாட்சி முழக்கங்கள், செயல்பாடுகள் நீங்கலாக இந்துக்களின் காவலராக பாஜகவை நம்பி மக்கள் அணி திரள, பாஜக செய்த செயல் என்ன என்று தேடித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் திமுகவை ஸ்டிக்கர் ஒட்ட அனுமதித்துவிட்டு, தமிழக பாஜகவைப்போய் முட்டி மோது; வென்று காட்டு என்று முடுக்கிவருகிறது.
திராவிட பிளஸ் என்று மத்திய தலைமை வகுத்துத் தந்திருக்கும் வழிமுறை போலி திராவிடத்திலிருந்து பெரிதும் மாறுபடப்போவதில்லை என்பது ஆப்ரஹாமிய மதத்தினருக்குப் புரிந்து அவர்கள் ஆதரித்தால்தான் உண்டு. ஆனால், அப்படியான மாற்று பெரிதும் ஏமாற்றாகவே இந்துக்களுக்கு இருக்கும்.
தமிழகத்துக்கென்று புதிய அணுகுமுறையை மத்திய தலைமை முன்னெடுத்தாகவேண்டும். தமிழகத் தலைமைக்கு முழு சுதந்தரம் தரவேண்டும்.
ஆலயங்களை மீட்டு உரியவர்களிடம் தருதல் (அத்தனை ஜாதிகளிலும் இருக்கும் க்ரிப்டோக்களை வைத்து நிச்சயம் கலகமூட்டுவார்கள். அதையும் மீறி இதைச் செய்தாகவேண்டியிருக்கும்);
தவறு செய்த எதிரணியினர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உடனே தண்டித்தல்;
உள்கட்சிக் களையெடுப்பைப் போலவே எதிரணிக் களையெடுப்புக்கும் மிக மிக அதிக முக்கியத்துவம் தருதல்;
சன் டிவி போல் வலுவான காட்சி ஊடகம் ஒன்றை பாஜக உடனே உருவாக்குதல்;
கருத்து சுதந்தரத்தை முறையாகக் காப்பாற்றுதல்; வெறுப்புப் பேச்சுகளை முறையாகத் தண்டித்தல்;
மத்திய அரசின் திட்டங்களில் இந்துக்களுக்கானவற்றை இந்து அமைப்புகள் மூலமாகவே அமல் செய்தல்;
அரசுத்துறை, தனியார் துறை, காட்சி ஊடகங்கள் ஆகியவற்றில் உயர் மற்றும் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களின் மத வாரியான கணக்கெடுப்பு;
மதச் சிறுபான்மைகளுக்கான சலுகைகளை இந்துக்களின் அத்தனை ஜாதிகளுக்கும் தருதல்
ஆகியவற்றின் மூலம் ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகள்+கம்யூனிஸ்ட்கள்+ போலி திராவிட, போலி தலித் சக்திகள் ஆகியவற்றை ஜனநாயகப் பாதைக்குக் கொண்டுவரவேண்டும்.
இல்லையென்றால் 1956லேயே கேரள அரசைக் கலைத்த நேரு மற்றும் நெருக்கடி நிலை அறிவித்து நாட்டையே முடக்கியவரும் 39 முறை மாநில அரசுகளைக் கலைத்தவருமான இந்திராவின் இடுப்பில் உட்கார்ந்துகொண்டு வட இந்திய தென்னிந்திய பப்புக்கள் எல்லாம் ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றப்போகிறேன் என்று கோஷம் போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
இந்து நலன் சார்ந்து எந்தவொரு முயற்சியையும் முடக்குவார்கள்.
இஸ்லாமிய கிறிஸ்தவ அப்பீஸ்மெண்டை மட்டுமே முன்னெடுக்கும்படிச் செய்வார்கள்.
தலித்களுக்கென்று உள்ள நலத்திட்டங்கள் அனைத்தையும் க்ரிப்டோக்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்வார்கள்.
தேசிய அளவில் 3.0 இந்த வலையை உடைத்தெறிந்தாகவேண்டும். கூடவே மத்திய பாஜக, தமிழகத்தின் மீது உண்மையான அக்கறையை வைக்கவேண்டும். ஊழலையும் எதிர்க்கவேண்டும். திமுக கூட்டணி முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலையும் முற்றாக ஒழிக்கவேண்டும்.
தமிழக மக்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்களே என்று பாஜக மத்திய தலைமை யோசிக்கக்கூடாது. மத்திய பாஜக ஒருபோதும் திமுகவை எதிர்ப்பதில்லை என்பதால்தான் தமிழக மக்கள் இந்து அமைப்பின் பின்னால் அணி திரளாமல் இருக்கிறார்கள். பிரதான எதிரியை அவர்களுடைய உயிர் மூலத்தில் தாக்கி வீழ்த்தவேண்டும்.
அரசியல் கணக்குகளை விட்டுவிட்டு தர்மக் கணக்குகளைப் போடுங்கள். வெற்றி தானாகக் கிடைக்கும்.
*
நல்ல நகைச்சுவை பதிவு. பணிச்சோர்வு நீங்கியது. அதற்கு நன்றிகள் பல.
அருமையான அலசல். மிக நுணுக்கமான பார்வையும் இருக்கிறது. அருமை அருமை