தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்

தேர் அறிமுகம்

singampunari-therவடமொழியில் இரதம் என்று சொல்லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்குகிறது. இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்கிறது. ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில்  கானல் நீரை, ‘பேய்த்தேர்’ என்றும் ரோகிணி நட்சத்திரத்தை சூடாமணி நிகண்டு  ‘தேர்’ என்ற வினைச் சொல்லாலும் குறிப்பிடக் காணலாம்.

தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக “உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்” (குறள் 667) என்று வள்ளுவர் உவமை கூறக்காணலாம்.

எனினும் இரதம் என்ற சொல்லாட்சி பொலிவும் விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. வானில் பறக்கும் விமானங்களை ஆகாசரதம் என்றும் மனவியல் கற்பனைத்திறனை மனோரதம் என்றும் அறிவாற்றலை ஞானரதம் என்றும் சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை ‘கோரதம்’ என்றும் குறிப்பிடுவர். இதனை கொல்லா வண்டி என்றும் கூறுவர்.  ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளும் கருடத்தாழ்வாரை ‘விஷ்ணுரதம்‘ என்றும் முருகனின் மயிலை ‘ஸ்கந்தரதம்’ என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. மஹாதிரிபுர சுந்தரியாகிய அம்பாள் எழுந்தருள்வது ‘ஸ்ரீ சக்ரரதம்’ என்பர். தமிழிலுள்ள ஆண்பாற் பிள்ளைத்தமிழில் ‘சிறுதேர் உருட்டல்’ என்று ஒரு பருவம் இருப்பதும் சித்திரக்கவி மரபில் ‘இரதபந்தம்’ என்ற ஒரு வகை இலக்கியம் இருப்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.
 

இலக்கியங்களில் தேர்

கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன் சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம். இது போலவே கிரேக்க உரோம நாகரிகங்களிலும் தேர் சிறப்பிடம் பெறுவதை அவர்களின் இலக்கியங்களினூடே அவதானிக்க முடிகின்றது.

ஸ்ரீ ருத்திர பூர்வ பாகமாகிய நமகத்தில்

ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய:
ரதபதிப்யச்ச வோநமோ நமோ

என்று வருவதும் குறிக்கத்தக்கது.

அதாவது, “தேர்களாகவும் (ரதேப்ய:) தேர்வலவர்களாகவும் (ரதபதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஸ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்,” என்கிறது.
 
சங்ககாலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு தேர்களைப் பரிசாக வழங்கியதாகச் செய்திகள் உண்டு. இத்தகு செயல்கள் தேர்வண்மை எனப்படும்.

கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
புரந்தோங்கு சிறப்பிற் பாரி
(புறம் 200)
                  
“பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி” (புறம் 4)

என்பன இவற்றைக் காட்டும்.

pari-vallalமுல்லைக்கு பாரி தேரளித்தமையும் குறிப்பிட வேண்டியது. ஓளவையார் தேர் செய்ய வல்லவர்கள் பற்றி தனது ஒரு பாடலில், “… வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே” என்று பதிவு செய்கிறார்.

இது போலவே சிறுபாணாற்றுப்படையில்,

புருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான்மதி ஊர்கொண்டாங்கு
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
ஆரஞ் சூழ்ந்த வயில் வாய் நேமியொடு
 
என்று தேர் செய்யும் முறையை சங்கப்புலவர்கள் அருமையாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

lord-shiva-in-chariot-with-brahma-as-driverஇது போலவே பரிபாடலில் சிவபெருமான் முப்புரம் அழிக்க, பூமியாகிய தேரில் வேதக்குதிரைகள் பூட்டி நான்முகச்சாரதியுடன் மேரு மலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு சிரிப்பால் எரித்தழித்தமை குறிப்பிடப்படுகின்றமை சங்ககாலத்திலேயே வேத புராண மரபுடன் தமிழிலக்கியம் பின்னிப்பிணைந்திருந்தது என்பதையும் செம்மொழித் திறனையும் அக்காலத்தில் தேர்த்திறன் பற்றியிருந்த எண்ணப்பாங்கையும் வெளிக்காட்டுகிறது.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத் தேரூர்ந்து
நாக நாணும் மலை வில்லாக
முவகை யாரெயில் ஓரழல் அம்பின் முனிய
மாதிரம் அழலவெய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்
(பரிபாடல்-5-வரி 22-27)

இதைத் திருமூலர் தனது திருமந்திரத்தில்

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மலக் காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே

என்கிறார். இது தொடர்பில் இலங்கையில் அழித்தல் தொழிலை வெளிப்படுத்தும் தேர்த்திருவிழாவில் புதுமணத்தம்பதியர் கலந்து கொள்ளக் கூடாது என்றோர் மூடநம்பிக்கை சாதாரண மக்களிடம் புரையோடிப் போயிருக்கவும் காணலாம். ஆனால் அழித்தல் என்பது மும்மலங்களாகிய எம்மிடமுள்ள கெட்ட ஆணவாதி மலங்களையே என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

gurukshetramமஹாபாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் ரதசாரதியாக இருந்து உபதேசித்த பகவத்கீதை பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகும் பெருமை பெற்றுள்ளது. காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்தில் தேர் பற்றிய பலஅபூர்வ செய்திகள் உண்டு. சூரபத்மனுக்கு அவனது தவத்தின் பொருட்டு சிவபெருமான் வழங்கிய தேரின் பெயர் ‘இந்திரஞாலம்’. இது “உண்ணிலா மாயை வல்ல ஒரு தனித்தேர்” என்று சிவாச்சாரியார் குறிப்பிடுவார். அதாவது தானியங்கி நிலையில் மிகுந்த சாமர்த்தியமுடையது இப்பெரும் தேர் என்று குறிக்கப்படுகிறது.  பாரத்வாஜர் எழுதிய ‘யந்திர சர்வாஸ்தா’ என்ற இந்து சிற்ப இயந்திர சாஸ்திரம் இருப்பதாகக் கூறுப்படுவதும் சிந்திக்கத் தூண்டுகிறது.

                  
சிறப்பு மிக்க தேர்கள்

yazhpanam-nallur-skanthan-car-festivalதிருவாரூர் தேர் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. 300 டன் எடையுள்ள தமிழகத்தின் எடை அதிகமுள்ள தேர் என்பதால் ‘ஆழித்தேர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் வில்லிபுத்தூர், திருச்செந்தூர், மதுரை, திருவிடைமருதூர், ஸ்ரீரங்கம் திருத்தேர்கள் சிறப்புற்றுத் திகழ்வதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர கோரதம் நம்மாழ்வாரால் அரங்கருக்கு பரிசாக வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலப் போரினால் பழுதுபட்டுள்ள யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் ஸ்கந்தஸ்வாமி ஆலயத் திருத்தேர் ‘மஹோத்திர மஹாரதம்’ என்ற பெயரால் அழைக்கப்படுவதும் இங்கு குறிப்பிட வேண்டியது. பூரி ஜகன்நாதர் ஆலயத் தேரும் மிகப் பிரசித்தமானது. வருடா வருடம் புதிதாகச் செய்யப்படுவது.

இரதம் செலுத்துவதில் சிறந்தோரை ‘அதிரதன்’ என்றும் ‘மஹாரதன்’ என்றும் இதிஹாசங்கள் சிறப்பிக்கும். ஸ்ரீராமபிரானின் தந்தை ‘தசரதன்’ என்ற பெயர்பெற்றதும் இக்காரணம் பற்றியே ஆகும்.
 
கஜ ரத துரக பதாதி என்ற சதுரங்கச்சேனைகளில் ரதம் என்ற தேரும் இடம்பெறுகிறது. சிந்துவெளிக் காலத்திலே தேரூரும் மக்கட் குழுமம் ஒன்று இருந்ததாக மேலைத்தேய அறிஞர்களான ஏ.எல்.பசாம் போன்றோர் கூறியுள்ளனர்.

suryaவேதகாலத்தில் பூஷனால் செலுத்தப் பெறும் சூரிய பகவானுடைய தேர் மற்றும் அஸ்வினி தேவர்களுடைய தேர்கள் பற்றிய செய்திகளைக் காணமுடியும். தைத்திரிய சம்ஹிதை யாகமண்டபங்கள் இரதஸ்வரூபமாக அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது. கடலில் செல்லும் நீராவிப் படகுகள் ‘அக்னிரதம்’ என்று அழைக்கப்பட்டன என்ற கருத்தும் உண்டு. பிரம்மாவின் தேரை ‘வைராஜம்’ என்றும் வருணனின் தேரை ‘மானிகம்’ என்றும் இந்திரனின் தேரை ‘திரிவிஷ்டபம்’ என்றும் வழங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

புராணமரபில் சிவபெருமான் திரிபுரங்களை எரிக்க எழுந்தருளிய தேருக்கும் இராவணன் மற்றும் குபேரனுடைய புஷ்பகவிமானம் என்ற ஆகாசரதத்திற்கும் அதிக முதன்மை உண்டு.
 
திருநாவுக்கரசர் பெருமான் தமது தேவாரத்தில்
 
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினொட்டெட்டு மற்றுங்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே

என்று குறிப்பிடும் போது கூறும் ‘கரக்கோயில்’ என்பது தேர்வடிவில் செய்யப்பெறும் கோயிலாகும் என்பது இராமநாதபுரம் கலாகேசரி ஆ.தம்பித்துரை ஸ்தபதியின் கருத்தாகும்.
 
இந்த வகையில் கும்பகோணம் ஆராவமுதப்பெருமாள் கோயிலிலும் திருக்கடம்பூர் மற்றும் திருவதிகை ஆகிய கோயில்களிலும் மூலாலயம் தேர்வடிவில் அமைக்கப்பெற்றிருப்பதையும் காணலாம். மாமல்லபுரம் ‘பஞ்சபாண்டவர் ரதங்கள்’ என்பனவும் இவ்வகையில் நோக்கத்தக்கன.
 
தற்போது தங்க வெள்ளி ரதங்களும் பல ஆலயங்களில் உள்ளன. ஆயினும் ரதோற்ஸவத்திற்கு மரத்தாலான சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய மஹாரதமே பயன்படுத்தப்படுகின்றது. காரணம் காமிகம் முதலிய ஆகமங்களிலும் வைஷ்ணவாகமங்களிலும் குமாரதந்திரத்திலும் தேர்கள் பற்றிய பல்வேறு செய்திகளை அவதானிக்கமுடியும். ரதப்பரீட்சை என்பது அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாகக் கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.

தேரின் பாகங்கள்

neervely-arasakesari-pillaiyaar-therதேரின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மூலாலய விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக்காட்சி தரும். இலங்கையில் இவ்வாறு வருடாந்தம் அமைக்காமல் நிரந்தரமாகவே மரக் கூட்டுவேலைப்பாடுகளால் மேல்த்தளத்தை அமைக்கும் வழக்கமும் இருப்பது குறிக்கத்தக்கது.
 
தேரை ஆக்கவல்லவர் ஸ்தபதி எனப்படுவார். திராவிட உத்தரமட்டம் மற்றும் முகபத்திரம் முதலிய கலை மரபுகள் இவற்றுக்கு உண்டு. பார்விதானம், உபபீடம், அதிஷ்டானம், கமலாகார பண்டிகை நராசனமட்டம், தேவாசனமட்டம், உபசித்தூர்மட்டம் போன்ற அங்கங்கள் இறைவனின் இருக்கைப்பகுதிக்குக் கீழும் இருக்கைப்பகுதியில் தேர்ச்சாரதி தேர்க்குதிரைகள் மற்றும் பவளக்கால்களும் மணிமண்டபமும் மேல்விதானம் யாளிகளாலும் சிம்மங்களாலும் தாங்கப்பெறுவதாய் முகபத்திரமடக்கை முதலிய அம்சங்களுடனும் அமைக்கப்படுவதைக் காணலாம்.
 
making-of-wheel-of-car-for-puri-jagannath-temple-orissa1இவற்றை தமிழ் இலக்கண இலக்கியங்களில் முறையே தேரின் அச்சிலிருந்த பீடம் வரையான பாகங்களை ஆரக்கால் உருள் (சில்லு- சக்கரம்) கிடுகு (தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரச்சட்டகம்- நிகண்டு) என்றெல்லாம் அழைப்பர். பீடப்பகுதியிலுள்ள தாமரை மொட்டு வடிவிலுள்ள அமைப்பை ‘கூவிரம்’ என்றும் தேரின் நுகக்காலையும் சிகரத்தையும் இணைக்கும் பகுதியை ‘கொடிஞ்சி’ என்றும் தேரின் வெளிப்பாகத்து நீண்டமேல் வளைவை ‘கொடுங்கை’ என்றும் தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலையை ‘தேர்ச்சீலை’ என்றும் தேரின் நடுவிடம் தேர்த்தட்டு அல்லது ‘தேர்த்தளம்’ என்றும் சில நிகண்டுகளில் ‘நாப்பண்’ என்றும் அழைப்பர்.

தேரின் மேற்றட்டைச் சுற்றியுள்ள மரக்கைப்பிடிச்சுவர் ‘பாகர்’ என்றும் தேரின் நடுவிலுள்ள பீடம்  ‘பார்‘ என்றும் ‘வேதிகை’ என்றும் தேரில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை ‘பிரம்பு’ அல்லது ‘தேர்முட்டி’ என்றும் அழைப்பர். இதை வடமொழியில் ‘ரதாரோஹணமண்டபம்’ என்பதும் குறிப்பிட வேண்டியது. இது போலவே தேர்ச்சில்லை ‘தேர்வட்டை’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. தேர் ஓட்டுவபரை ‘தேர்ப்பாகன்’ என்றும் ‘தேர்வலவன்’ என்றும் கூறும் வழக்கம் உள்ளது.

 
தேர் – சைவ சித்தாந்த விளக்கம்
   
மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்… என்கிறது சைவ சித்தாந்திகளின் கருத்து. அகோர சிவாச்சாரியார் பத்ததியின் அடிப்படையில் ‘ரதப்பிரதிஷ்டா பத்ததி’ என்ற ஒரு கிரந்த நூலும் அபூர்வமாக வழக்கில் இருப்பதாகத் தெரிகின்றது.

 அதே போலவே தேர் பிண்டஸ்வரூபமாக
 
சக்கரங்கள் – தசவாயுக்கள்
முதலாம் அடுக்கு – கீழண்டம்
அச்சு – மூலாதாரம்
அதன் மேலே – சுவாதிஷ்டானம்
அதன் மேலே – மணிபூரகம் – நாபித்தானம்
பீடம் – அநாகதம் – ஹிருதயஸ்தானம் – பகவான் எழுந்தருளும் இடம்
மேலே – விசுத்தி –கழுத்துப்பகுதி
32 குத்துக்கால்கள் – 32 தத்துவங்கள்
மேலே – ஆஞ்ஞா
முடிப்பகுதி – பிரம்மரந்திரம் – சஹஸ்ரகமலம்

என்றும் விளக்குவர்.

     
தேர்த்திருவிழா தொடர்பான நடைமுறைகள்
  
பொதுவாக இறைவனை நோக்கி ஆலயத்திற்கு மக்கள் வருவதே வழக்கம். ஆனால் தோத்திருவிழாவில் மக்களை நோக்கி இறைவன் வருவதை அவதானிக்கலாம். கி.பி 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனயாத்திரிகனான பாஹியன் என்பவனும் தனது குறிப்பில் இத்தேர் விழா பற்றிக் கூறியுள்ளான். சோழர்காலக் கல்வெட்டுகள் பலவற்றிலும் தேர்த்திருவிழா பற்றிக் கூறப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

muttukattaiகோயில் தோத்திருவிழாவில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெரியோர் வழங்கும் காசினை ‘தேர்க்காசு’ என்று வழங்குவதனூடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது போலவே தனது மாப்பிள்ளைக்கு இவ்விழாவை ஒட்டி மாமனார் அளிக்கும் சன்மானம் ‘தேரடிச்சம்பாவனை’ என்றும் கூறப்படும். தேரோடும் வீதியில் இடத்திற்கிடம் அதனை நிறுத்தி வைக்கவும் அதனை திசை திருப்பவும் தேர்ச்சில்லிற்கு ‘முட்டுக்கட்டை’ இடுவர். இதனைச் சறுக்குக்கட்டை என்றும் கூறுவதுண்டு. இது போலவே “தேர் நிலைக்கு வந்து விட்டது” என்பது ஒரு பெருங்காரியத்தை நிறைவு செய்ததைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் நிலைக்கு வர குறைந்தது இரண்டு முன்று நாள்களிலிருந்து ஒரு வாரம் பத்து நாள் என்றெல்லாம் ஆகிவந்த காலத்தில் ‘தேரோடு கிளம்பி தெருவோடு நின்றாளாம்’ என்றே ஆண்டாளுக்கு ஒரு வாக்கிய வழக்கு உள்ளது.
 
udupi-brahma-rathaஇத் தேர் விழா பற்றி ஈழத்தின் புகழ்பூத்த பேராசிரியர்.கா.கைலாஸநாத குருக்கள், “இறைவனுக்குச் செய்யப்பெறும் ராஜோபசாரங்களில் தலை சிறந்தது தேர்த்திருவிழா. பிரம்மோத்ஸவத்தில் நிகழ்த்தப் பெறும் விழாக்களில் இது முதன்மையானது.” என்று குறிப்பிடுகிறார். தேர்த்திருவிழாவில் ஊர்கூடித் தேரிழுப்பதும் தேரில் ராஜமூர்த்தம் என்ற சிறப்புடைய விக்கிரஹம் எழுந்தருள்வதும் சிறப்பாகக் கொள்ளப்படுகின்றது.  இலங்கையில் தேர்த்திருவிழாவுக்கு முருகன் ஆலயங்களாகில் ஷண்முகரும் சிவாலயங்களில் நடராஜமூர்த்தியும் விநாயகர் ஆலயங்களில் பஞ்சமுக விநாயகரும் தேரில் எழுந்தருளும் வழக்கம் உண்டு. தமிழகத்தில் இவ்வாறான வழக்கம் காணப்படுவதாக அறிய முடியவில்லை.

 

 

ther1

முன்பெல்லாம் ஆடவர்கள் மட்டுமே தேரை இழுக்கும் வழக்கம் இருந்தது. இலங்கையில் சில ஆலயங்களில் அம்பாள் தேரைப் பெண்களே இழுக்கும் வழக்கமுண்டு. தற்போது பெருந்தேர்களில் வலப்பக்க வடத்தை ஆடவரும் இடப்பக்க வடத்தை மகளிரும் பிடித்திழுக்கும் வழக்கமும் ஏற்பட்டு வருகின்றது. இயல்பாக தேர் விழாவில் சாதீயப் பிடிமானங்களும் அக்காலத்திலேயே விலக்கப்பெற்று சகோதரத்துவம் வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம். “இறைவனின் தேர் வடம் பிடித்தால் இறையுலகில் இடம் பிடிக்கலாம்” என்பது பக்தர்களின் விஸ்வாசம்.
 
இத்தகு சிறப்புடைய தேர்கள் நம் பண்பாட்டின் ஒரு பாகமாக இருக்கின்றன. சாதாரண மக்களிடம் கூட “திருவாரூர் தேர் அசைந்தாற் போல” என்றும் “திருவாரூர் தேரழகு போல” போன்ற பழமொழிகள் வழக்கிலுள்ளன.  எனவே இவற்றைப் பற்றி சிறிதளவேனும் அறிந்து கொள்வது நம் கலை ரசனையை மெருகூட்டும். பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும்

18 Replies to “தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்”

  1. ஆங்கிலத்தில் juggernaut என்றொரு சொல் உண்டு. “எந்தத் தடையையும் அழிக்கும் சக்தி” என்பது அதன் பொருள். அதன் மூலம் என்ன தெரியுமா?

    மேலே கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூரி ஜகன்னாதர் கோவில் தேர்தான் அதன் காரண கர்த்தா. அந்தத் தேர் மிகப் பெரியது என்பதால் அதை இயக்குவது கடினம்; நிறுத்துவதோ அதனினும் கடினம். பலத்த முட்டுக்கட்டைகளைப் போட்டும் அதைத் தாண்டி வரும் சக்தி அதற்குள்ளது. பலர் நிறுத்தும் முகமாக குறுக்கே விழுந்து உயிர் தியாகம் கூடச் செய்ததுண்டு.

    ஆக Jagan nath என்ற முழு முதற் கடவுளின் பெயரிலிருந்து வந்தது தான் Juggernaut என்ற சொல்லும்.மேலும் பார்க்க இவ்வலைத் தளத்திற்குச் செல்க:
    https://en.wikipedia.org/wiki/Juggernaut

    ராமன்

  2. மிகப்பல அரியசெய்திகள் அடங்கிய கட்டுரை. நன்றி திருசர்மா அவர்களே. ஆகமப்களில் அட்ங்கியசெய்திகளையெல்லாம் இது போன்ர கட்டுரைகளாக அளிக்க வேண்டுகின்றேன். காலவெள்ளம் நம்பண்பாட்டினைஅரித்துச் செல்லாமல் காப்பாற்ற இக்கட்டுரைகள் உதவும்.

  3. mikkavum nandra irukirathu!
    oor orutrumaiku therum oru sacthi!
    veru entha mathathilum kannamudiyathathu!
    kanchipuram varadhar therai petri koda eluthi irukalam!

  4. அழகான கட்டுரை. தேருக்கு இணையான ஊர்கூடும் திருவிழா வேறு இல்லை. ஸ்ரீரங்கத்தில் தேர் வருடத்திற்கு 3 முறை. தேர் நிலைக்கு வந்ததும் வரும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. முட்டுக்கட்டை தனி சுவாரசியம்.

  5. எங்கள் ஊரிலும்( திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ) அம்பாள் தேரை பெண்கள் மட்டும் இழுக்கிறார்கள்! நன்றி! பல பயனுள்ள தகவல்கள்!

  6. அருமையான கட்டுரை வளர்க உமது பணி ஜெய்ஹிந்த்

  7. திரு.மயூரகிரி.சர்மா அவர்களுக்கு,
    தமிழ் இந்து தளத்தில் உங்கள் கட்டுரைக்கு அழியாத இடம் கிடைக்கும்.

    உங்கள் கட்டுரையில் நீங்கள் தொடாத இந்து விஷயங்களே இல்லை எனும்
    அளவிற்கு உங்கள் மேதைமை சுடர் விடுகிறது.

    ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்கள் உடலை வருத்தி உருவாக்கிய
    இந்த தமிழ்நாட்டின் இந்து சமய பாரம்பர்யத்தை இன்று நாத்திகர்கள்
    வளைத்து அழிக்க முயல்கிறார்கள்.

    அந்த தீய சக்திகளுக்கு இது போன்ற கட்டுரைகள் ஒரு “முட்டுக்கட்டை”யாக
    இருக்க வேண்டும் என்று என்னப்பன் ருத்ரனான சிவனை வேண்டுகிறேன்.

    ஒரு செய்தியை நீங்கள் விரிவாக விளக்கி இருக்கலாம். சாதி பேதமின்றி
    எல்லா ஜாதியினரும் தேரை இழுத்து இறைவனின் கைங்கர்யத்தில்
    ஈடுபட்டிருக்கிறார்கள். (நீங்கள் குறிப்பிட்டதைப்போன்று சில விதி
    விலக்குகளை தவிர்த்து).
    தேரை இழுத்து பவனி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தவுடன் குளிக்க
    கூடாது என்ற பழக்கமும் நம் நாட்டில் உள்ளது. அதாவது எல்லா
    ஜாதியினருடனும் கூட்டாக இழுத்தாலும் எந்த தீட்டும் கிடையாது
    என்பது பாரம்பர்யமாகவே வந்துள்ளது.

  8. இது நம்முடய ஹிந்துத்தமிழ்ப் பண்பாடு எவ்வளவு தூரம் மக்களிடையே இணைந்து கலந்து பரவியுள்ளது என்பதைக் காட்டும் அரிய கட்டுரை. இவற்றைப் பார்த்து விட்டுத் தான் இப்பொழுது வேளாங்கன்னியிலும் பிற கிறிஸ்தவ ஆலயங்களிலும் தேரிழுக்கிறார்கள். இவ்வாறு பிறரும் நம்மைப் பார்த்து விட்டு தேர் இழுப்பது தேரின் மேன்மையை தேரின் பலத்தைக் காட்டுகிறது.

  9. அருமையான கட்டுரை. தேர் குறித்த முழுமையான தகவல் களஞ்சியம் இது.

    நன்றி
    விஸ்வாமித்ரா

  10. அன்புள்ள மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    அபாரமான கட்டுரை. செந்தமிழும், சம்ஸ்கிருதமும், இந்து தர்ம தத்துவங்களும், கலை, கலாசார செய்திகளும் ததும்பி வழியுமாறு எழுதியுள்ளீர்கள். அருமை!

    தேர் என்ற ஒரு விஷயம் எத்தனை நூற்றாண்டுகளாக ஒரு மாபெரும் மரபின் பிரதிநிதியாகவும், மக்களை இணைக்கும் சக்தியாகவும் விளங்கி வந்திருக்கிறது என்பது பிரமிப்பூட்டும் விஷயம்.. உலகெங்கும் உள்ள நாகரீகங்கள் முழுதும் தேடினாலும் இப்படி இன்னொரு உதாரணம் காட்ட முடியுமா??

  11. தேர் பற்றிய மிக அருமையான தகவல்களை தங்கள் கட்டுரை மூலம் அறிந்தேன். தமிழ் ஹிந்து இப்படிப்பட்ட தகவல் சுரங்கத்தைத் திறந்து விடுகிறது என்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். திரு ராமன் அவர்கள் தேர் என்பதற்குரிய ஆங்கிலச் சொல்லைப் பற்றி கூறிய பின் விக்கிபீடியாவிற்குச் சென்று பார்த்தேன். அருமையான தகவல். அனைவருக்கும் மிக்க நன்றி.

  12. திரு மயூர கிரி சர்மா அவர்களுக்கு வணக்கம், மிக அருமையான கட்டுரை. நன்றி. அதில் குறிப்பிட்ட படி ரதோத்சவம் நிகழும் பொழுது ஆசௌசம் இல்லை என்பது சிவாகமங்களில் உள்ள தகவலும் உண்மை.
    திருவாரூர் தியாகேசனின் ஆயிர நாமாக்களில் ( முகுந்த , முசுகுந்த, தியாகராஜ? ) தேரின் தத்வம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இயன்றால் பார்க்கவும். ரத வகைகள் ,நிர்மாணம் பற்றி காமிக ஆகமத்திலும் ரத நிர்மாண படலம் உள்ளது. மற்ற செய்திகளும் படங்களும் மிக அருமை .தங்களுக்கு நீண்ட ஆயுளும் ஞானமும் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனமர் ஸ்ரீமத் ஆனந்த நடராஜரின் அருளால் உண்டாக. நன்றி.

  13. Every act of Hindus and their practices are based on some science. This car festival is a PHYSICS
    Principle of Gravitation. The Base is such a heavy one with certain dimension upon which the maximum height can be built to give a decorated height. This science was used by them with certain calculations that some one can do research and tell the world our lay man knows your gravitation theory better in the ancient days itself.

  14. இதில் முதல் படத்தில் ுள்ள தேர் எங்கள் ஊர் தேர் அனைவரும் வரும் 27.5.13 அன்று தேர் திருவிழா வருக

  15. மண்ணின் மாணிக்கம் மயூரகிரியாரே,

    உமக்கு நமது பணிவான வணக்கங்கள் சேரட்டும். உமது கட்டுரையை படித்து உயர்நிலை பெற்றேன். மகிழ்ச்சியோ வாய் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. நம் முன்னோரின் ஒவ்வொரு செயலும் , பொருள் பொதிந்தவை. அந்த பொருள் என்னவென்று தெரியாத , எங்கள் தலைமுறைக்கு உங்கள் கட்டுரை ஒரு ஒளி விளக்காக உள்ளது. உங்களுக்கு சிவகுமாரர்களாம் பிள்ளையாரும், வடிவேல் முத்துக்குமரனும் என்றும் அருள் புரிவர். வையகம் வளமுடன் வாழ்க.

  16. திரு மயூர கிரி சர்மா அவர்களுக்கு வணக்கம், மிக அருமையான கட்டுரை. தேர் பற்றிய மிக அருமையான தகவல்களை தங்கள் கட்டுரை மூலம் அறிந்தேன். தோின் வகைகள் ஏழு என்றும் ஒன்பது என்றும் வேறுவேறான கருத்துக்களைப் படித்தேன். உண்மையில் தோின் வகைகள் எத்தனை? இன்று நவகோணத்தோ் யாழ்ப்பாணத்தில் உண்டு. ஆனாலும் தோின் வகைகளுள் நவகோணத்தோ் இல்லை. இதனைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களை அறிய ஆா்வமாக உள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *