ஜூலை-1 (ஞாயிறு) அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு, கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது. தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை கவனப்படுத்துதல் ஆகிய பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அமைப்பு இது.
தொல்லியல் துறை அதிகாரிகள், வரலாற்று அறிஞர்கள் வழிகாட்டுதலில் கலை ஆர்வலர்கள், களப் பணியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.
ஜூலை-1 (ஞாயிறு) அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
கே.கே.மேத்தா அரங்கம், ஆர் எஸ் புரம், கோவை (சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் அருகில்).
அழைப்பிதழ் இங்கே. அனைவரும் வருக!
\\\\\\ தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை கவனப்படுத்துதல்\\\\
எறும்பூரக் கல்லும் தேயும் என்பது பழமொழி. இந்த ஸ்தாபனம் ஈடுபட்டிருக்கும் கார்யம் மிக உயர்வானதும் தெய்வீகம் சம்பந்தப்பட்டதும் ஆகும். எத்தனையோ கோவில்கள் இவர்களது நன் முயற்சியால் சரியான முறையில் சீரமைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் உள்ளன. முயற்சி திருவினையாக்கும் என்ற படிக்கு இவர்களது நன்முயற்சிகள் நமது பாரம்பர்யத்தை காப்பதில் வெற்றிகள் பல ஈட்டட்டும் என ஞானபண்டிதப் பெருமானை ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்தாபனம் முக்யமாக கவனம் செலுத்தும் அம்சங்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வம்சங்களுடன் மேலும் சில அம்சங்களைச் சேர்ப்பது அவசியம் என கருதுகிறேன்.
கோவில் என்ற சொல்லுடன் இணைந்தே பேசப்படுவது குளம். கோவில் குளம் என்ற சொல்லாடல் தமிழகத்தில் மிகப்பழமையானதே. இவ்வாறிருக்க நான் தமிழகம் வரும்போதெல்லாம் தமிழகத்துப் பாரம்பர்யமிக்க கோவில்களில் இருக்கும் குளங்களின் நிலையைக் காண்கையில் மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறேன்.
இத்தனைக்கும் கோவில் எத்தனை புனிதமானதோ அதே அளவு புனிதம் அதைச் சார்ந்த தீர்த்தம். ஸ்தல புராணங்கள் கோவில் தீர்த்தங்களின் பெருமைகள் பற்றி பேசுகின்றன. இத்தீர்த்தங்களால் யார் யார் எவ்வாறு பயன் பெற்றுள்ளனர் என்ற தகவல்கள் தருகின்றன கதாரூபமாகவே ஆயினும் சரி.
பல குளங்கள் சொட்டு நீர் கூட இல்லாது வரண்டு வெறும் குளம் என்ற ஒரு கட்டிடமாக காட்சி அளிக்கின்றன. பல குளங்கள் வெங்காயத்தாமரை மற்றும் பாசி படிந்து ம்ருகங்கள் கூட உபயோகப்படுத்த இயலாத நிலையில் உள்ளன. எத்தனை குளங்கள் தூர்க்கப்பட்டு அவ்விடத்தில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது கோவில்களில் உறையும் இறைவனுக்கே வெளிச்சம்.
இங்கே நிலைமை இவ்வாறிருக்க குளங்கள் பாதுகாப்பு என்பது இயலும் விஷயமா என்பதற்கு நான் வடக்கே அடிக்கடி செல்லும் ப்ருந்தாவன ஸ்தலம் மனதிற்கு நிறைவான பதில் அளிக்கிறது. இங்கே உள்ள “braj foundation” என்ற ஸ்தாபனம் பெருமுயற்சியெடுத்து ஆங்காங்குள்ள ஸ்ரீவனத்து மக்களையும் ஈடுபடுத்தி ஸ்ரீவனத்து குளங்கள் மட்டுமின்றி ஆங்குள்ள வனங்களையும் (காடுகளையும்) சீரமைக்க முயற்சி செய்து பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். நான் நேரிலேயே சென்று இவர்களது பல முயற்சிகளைப் பார்த்தும் உள்ளேன். மிக முக்யமாக ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க IIT கல்விநிலையங்களில் பயிலும் / பயின்றுள்ள விருப்பமுள்ள மாணாக்கர்களை volunteers ஆக தங்கள் முயற்சிகளில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் sponsor செய்வதில் விருப்பமுள்ள பெரும் வணிக நிறுவனங்களையும் இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களது முயற்சிகள் ஒரு பெரும் INTEGRATED APPROACH என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்களது இணையத்தின் சுட்டியை கீழே தந்துள்ளேன்.
https://brajfoundation.com
ரீச் இயக்கத்தினர் எப்படி “கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் இவைகளைப் பாதுகாத்தல்” போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்களோ அது போலவே கோவில்களைச் சார்ந்த குளங்கள், வனங்கள் இவைகளையும் பாதுகாப்பதில் தங்களது முயற்சிகளை விரிவு படுத்த இயலுமா என்பதையும் விவாதிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.
மிக முக்யமான விஷயம் ப்ரஜ் ஃபவுண்டேஷன் ஸ்தாபனத்தினர் ஸ்ரீ வனத்துக் குளங்களையும் வனங்களையும் சர்வே செய்து மேப்பிங் மூலம் இவற்றை ஆவணப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் அயோத்யாபட்டிணம் கோவிலில் ஒரு மண்டபத்தையே பெயர்த்தெடுத்து அங்கு நூதன முறையில் மார்பிள்கள் பதித்து கோவில் புனருத்தாரணம் என்ற பெயரில் நிகழ்ந்துள்ள கோவில் சிதைப்பு பற்றிய வ்யாசம் வாசிக்க நேர்ந்தது.
இப்போதிருக்கும் நமது புராதனச்செல்வங்களான கோவில்களை சர்வே / மேப்பிங் செய்து இங்குள்ள கோவில்கள் அவற்றைச் சார்ந்த குளங்கள் ப்ராகாரங்கள் மண்டபங்கள் இவற்றை ஆவணப் படுத்துவது மிக அவசியம் எனத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஸப்த ப்ராகாரங்கள் (ஏழு நிலைச்சுற்றுகள்) உள்ள கோவில்கள் என்பவையெல்லாம் வெறும் ச்லோகங்களில் மட்டும் இருப்பவையாகி விடும். கோவில், மண்டபங்கள், ப்ராகாரங்கள், குளங்கள் என்று முழு கோவில் complex ம் தற்போது ஏதாவது ஸ்தாபனத்தால் சர்வே செய்து மேப்பிங் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகத்து அனைத்துப் புராதனக் கோவில்கள் சம்பந்தமான இத்தகைய ஆவணம் இருப்பது மிக அவசியம்.
இல்லாவிடில் அரசாங்கம் ஸப்த ப்ராகாரங்களில் எங்கே குடவுன் கட்டலாம் கடை கண்ணிகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்பதில் கவனம் செலுத்துவதால் கர்ப்ப க்ரஹம் விடுத்து கோவிலைச்சார்ந்த மண்டபங்களும் ப்ராகாரங்களும் குளங்களும் நமது அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுவைக்க முடியுமா என்பதே கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படலாம்.
தினமணி செய்தி
————————————————————
இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவிலை
பழமை மாறாமல் புனரமைக்க ஆலோசனை:
சென்னை ரீச் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆய்வு
———————————————————–
கோவை, ஜூலை 1: பழமை வாய்ந்த இருகூர் ஸ்ரீ சுயம்வர பார்வதி சமேத நீலகண்டேஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கவும், திருப்பணி வேலைகள் நடைபெற்றுவரும் தேவராயபுரம் கொங்கு திருப்பதி கோவிலில் இடிக்கப்பட்ட மண்டபத்தை பழமை வாய்ந்தபடி அமைத்துத் தரவும் சென்னை ரீச் பவுண்டேஷன் நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மத்திய தொல்லியல் துறையின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.சத்தியமூர்த்தியால் நிறுவப்பட்ட சென்னை “ரீச்’ அறக்கட்டளை, பழமை வாய்ந்த கோவில்கள், பாரம்பரியம் மிக்க வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை, பழமை மாறாமல் புதுப்பிக்கும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கோவை குஜராத்தி சமாஜத்தில் ஞாயிற்றுக்கிழமை “கோவில் பாரம்பரியக் காவலர்கள்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. ரீச் அறக்கட்டளையின் கல்வி பிரிவுத் தலைவர் ரவிசாம் தலைமை வகித்தார்.
இதில் ரீச் அறக்கட்டளை நிறுவனர் டி.சத்தியமூர்த்தி பேசியது:
பழமையான கோவில்களை தனித் தன்மையுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். ரீச் அறக்கட்டளை, கல்வெட்டுப் பயிற்சி, பழங்கால ஓவியங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள், மண்டபங்கள், நடுகல் உள்ளிட்ட அனைத்தும் புராதனச் சின்னங்களாகும். அவற்றை சேதப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பழமை வாய்ந்த கோவில்களை தற்போது, சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருள்களால் நவீனமாக மாற்றி அமைக்கின்றனர். அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி கோவில் பழமை மாறாமல் மத்திய தொல்லியல் துறையால் புனரமைப்பு செய்யப்பட்டது. கோவில்களின் பழமை மாறாமல் இருந்தால் தான் அதன் தன்மை பாதுகாக்கப்படும் என்றார்.
காஞ்சிபுரம் அருகே உத்தரமேரு கைலாசநாதர் கோவில் ரீச் அறக்கட்டளை ஆலோசனையின் பேரில் அப்பகுதி மக்கள் உதவியுடன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டது. அது பற்றிய ஆவணப்படம் பயிலரங்கில் திரையிடப்பட்டது. அது குறித்து ரவிசாம் விளக்கினார்.
பாரம்பரிய கட்டடக் கலை நிபுணர் எஸ்.ராஜேந்திரன் பழைய வீடுகளை பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்கும் முறை குறித்து விளக்கினார். பேரூர் தமிழ்க் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமாரசாமி கோவில்களில் பழங்கால பக்தி முறையும், தற்போது மாறிவரும் பக்தி முறை குறித்தும் விளக்கினார்.
இருகூர் சிவாச்சாரியார் நாகேஸ்வர குருக்கள், ரீச் அறக்கட்டளையின் கோவைப் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஆர்.கிருஷ்ணசாமி, செந்தில்ராஜா, யுவசெந்தில் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், கோவை, அவிநாசி, ஆனைமலை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த கோவில் அறங்காவலர்கள், உழவாரப் படையினர், தொல்லியல் ஆர்வலர்கள், கோவில் புனரமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின், ரீச் அறக்கட்டளையினர் தேவராயபுரத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வரும் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடாசலபதி (கொங்கு திருப்பதி) கோவிலுக்குச் சென்று, திருப்பணிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். அக்கோவிலில், ஒருசில பணிகளை பழமை மாறாமல் மீண்டும் புதுப்பித்து தருவதாக ரீச் அறக்கட்டளையினர் ஆலோசனை வழங்கினர்.
இருகூர் ஸ்ரீ சுயம்வர பார்வதி அம்பாள் சமேத நீலகண்டேஸ்வரர் கோவில், 2,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதையும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய ரீச் அறக்கட்டளையினர் ஆலோசனை வழங்கினர்.
நன்றி: தினமணி (கோவை) 02.07.2012
தகவல்: சேக்கிழான்