ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

முந்தைய பகுதிகள்:   பகுதி 1பகுதி 2

தொடர்ச்சி…

கூனிக் குறுகும் நமது முன்னோடிகள்…

.நமது சமூக வீழ்ச்சியின் விளைவாக, நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் விசனத்துக்குரிய விஷயம். நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய அந்தத் தலைவர்கள் இன்று இருந்திருந்தால், முச்சந்திகளில் நிற்கும் தங்கள் சிலைகள் போலவே கல்லாய் சமைந்திருப்பார்கள்.
.
நாடு என்பது மக்கள் திரளால் உருவாவது. இதில் ஒவ்வொரு சமூகமும் நாட்டு முன்னேற்றத்துக்கு தங்கள் சமூகம் அளித்த பங்களிப்பை பெருமிதத்துடன் நினைவு கூர்வதில் தவறில்லை. ஆனால், தமிழகத்தில், இதுவே ஒருவகை அரசியல் உத்தியாக மாற்றப்பட்டுவிட்டது. அதனால் தான், தமிழகத்தின் ஆதார வேர்களாக ஒருகாலத்தில் விளங்கிய தேசத் தலைவர்கள் பலரும் குறுகிய ஜாதிவட்ட சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆங்கிலேய சிறையில் அவதிப்பட்டபோது கூட, அந்த தலைவர்கள் இன்றுள்ள நிலைக்கு கூசுவது போல வருந்தி இருக்க மாட்டார்கள்.
.

Muthuramalings Thevar

மதுரையில் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத ஐயர் முற்பட்டபோது சில ஆதிக்க ஜாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது, வைத்தியநாத ஐயருக்கு உறுதுணையாக, அரணாக வந்து நின்றவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். மூன்று பிரிவுகளாக சிதறிக் கிடந்த தேவர் இன மக்களை ஒன்றுபடுத்தி அவர்கள் மீதான அரசின் ஒடுக்குமுறைச் சட்டங்கள் நீங்கக் காரணமான தேவர்தான், ஹரிஜன ஆலயப் பிரவேசத்துக்கு உதவியாக இருந்தார். அதே தேவர் இன்று தேவர் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டார்.
.
அதற்கு எதிர்விளைவாக, தேவர் சமூகத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தேவர் சிலையை அசூயையாகப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தேசத் தலைவரான தேவரை ஒரு ஜாதித் தலைவராகக் குறுக்கிய நமது ஜாதிவெறி தான். பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடக்கும் தேவர் குருபூஜை காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்படும் ஒரு அரசியல் சடங்காகிவிட்டது. இதில் பங்கேற்க அனைத்து அரிசயல் கட்சியினரும் முண்டி அடிக்கின்றனர்- தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உருவான கட்சியினர் தவிர்த்து!
.
kamarajar1சமூகத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்த நாடார்கள் வாழ்வில் உயர வழி வகுத்தவர் காமராஜர். ஆனால், அவர் அதை ஜாதிரீதியாகச் செய்யவில்லை; தனது வாக்கு வங்கிக்காகவும் அதை அவர் செய்யவில்லை. மக்களின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவது தனது கடமை என்ற முறையில் தான் அவர் செயல்பட்டார். அதேசமயம் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைப்படும் அற்புதமான ஆட்சியை அவர் வழங்கிச் சென்றார். இன்று தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காமராஜர் தான் காரணம். ஆனால், அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் நாடார்கள் கொண்டாட விட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்க்கிறோம். காமராஜர் இப்போது நாடார்களின் அரசியல் அடையாளம். சில இடங்களில் மட்டும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் அரசியலுக்காக அவருக்கு விழா கொண்டாடி, காமராஜர் ஆட்சி கனவை மீட்டெடுத்துக் கொள்கிறார்கள்!
.
நாட்டு விடுதலைக்காக செக்கிழுத்து, கல்லுடைத்து, தனது சொத்து, சுகம் அனைத்தையும் இழந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தமிழகத்தின் தலைமகனாகப் போற்றப்பட வேண்டியவர். ஆனால், அவரை ஆண்டுக்கு இருமுறை நினைவுகூரவும் கூட சைவ வேளாளர் பேரவையினர் தான் வர வேண்டி இருக்கிறது. ஜாதி வேற்றுமை இன்றி தொழிலாளர்களை ஒன்றுபடுத்த முயன்ற வ.உ.சி.க்கு இதுதான் நாம் அளிக்கும் மரியாதையா?
.
கொங்கு மண்டலத்தின் மாபெரும் வீரனாக ஆங்கிலேயரை எதிர்த்து முழக்கமிட்ட தீரன் சின்னமலைக்கு விழா கொண்டாட கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கவுண்டர்கள் சங்கமும் தான் முன்னிற்கின்றன. கொங்கு வேளாளர் சார்ந்த அரசியல் கட்சிகளின் முத்திரையாக சின்னமலை மாற்றப்பட்டிருக்கிறார். இதே நிலைமை தான் கட்டபொம்மனுக்கும் அவர் சார்ந்த நாயக்க ஜாதியினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
.
நாட்டின் கொடிக்காக இன்னுயிர் ஈந்த திருப்பூர் குமரனை நினைவுகூர, முதலியார் சங்கமும் நீதிக்கட்சியும் தான் முன்னிற்கின்றன. ராட்டை பொறித்த தேசியக் கொடி மண்ணில் விழக் கூடாது என்று போராடிய குமரன் முதலியார்களுக்காகவா போராடினார்? தமிழுக்குப் பாடுபட்ட மாமுனிவர் திரு.வி.க.வையும் முதலியார்கள் போஷிக்க விட்டாயிற்று.
.
வன்னியர்களுக்கு, நீதி வழுவாமல் ஆண்ட சம்புவரையர்கள் முத்திரையாக அமைந்திருக்கின்றனர். அதே வன்னியர்கள் தான் இப்போது தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொள்ளையிட்டு இருக்கின்றனர். தமிழக அரசியலில் செல்வாக்கில்லாத பிராமணர்களும் கூட தங்கள் நாயகனாக வாஞ்சிநாதனை முன்னெடுக்கின்றனர். வாஞ்சி ஆங்கிலேயனை சுட்டது இதற்காகவா? ஆங்கிலேயரை எதிர்த்த மருது பாண்டியர், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் போன்றவர்களையும் ஜாதி அடையாளத்துக்குள் அடைத்தாகிவிட்டது.
.
DR_ BHIM RAO AMBEDKAR5இதை எல்லாம் விட, தாழ்த்தப்பட்ட மக்களின் கடவுளாகவே டாக்டர் அம்பேத்கர் மாற்றப்பட்டுவிட்டார். இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பி அவர். அவரை அனைத்து சமூகத்தினரும் இணைந்து அல்லவா கொண்டாட வேண்டும்? ஆனால், அவர் சார்ந்த சாதியினருக்கே அவரை ஒப்புக் கொடுத்தாகிவிட்டது. இன்று அம்பேத்கர் பெயர் சொல்லாமல் ஒரு தலித் அமைப்பும் இயங்குவதில்லை. ஆனால், அம்பேத்கர் கூறிய வழிமுறைகளுக்கு முரணாகச் செயல்படுவதே இந்த அமைப்புகளின் நடைமுறை ஆகி இருக்கிறது.
.
தலித் மக்களுக்காகவே வாழ்ந்த சிதம்பரம் சுவாமி சகஜானந்தரை தலித் மக்களே மறந்துவிட்டனர். அவர்களுக்கு, மக்களிடையே பேதம் வளர்க்க உதவியாக இருக்கும் இம்மானுவேல் சேகரனை நினைவு கூர்ந்தால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஹரிஜன சமூகத்தில் பிறந்து அந்த சமுதாயத்துக்கே பெருமை சேர்ந்த்த தியாகி கக்கனை தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்க நேரமில்லை. அவர்களுக்கு வெறுப்பரசியல் பாடம் நடத்துவோருக்கு கக்கனைத் தெரியுமா என்பதே தெரியவில்லை. தலித் மக்கள் மறந்தாலும், கக்கனையும் சகஜானந்தரையும் பிற சமூகத்தினர் மறக்கலாமா? அவர்கள் தங்கள் சொந்த ஜாதிக்காகவா வாழ்ந்தார்கள்?
.
இதுதான் நமது வீழ்ச்சியின் காரணம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும், வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், டாக்டர் அம்பேத்கரையும், கர்மவீரர் காமராஜரையும், தீரன் சின்னமலையையும், திருப்பூர் குமரனையும், ஜாதி வட்டாரத்தில் திணித்துவிட்டோம். நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம். நமக்கு கிடைக்குமா மீட்சி?
.
நமது அரசுகளும் கட்சிகளும் தலைவர் சிலைகளுக்கு மாலையிடும் சடங்கை நிறைவேற்றுவதற்கும் கூட வாக்குவங்கி அரசியல் தான் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள வாக்குகளைக் கவர்வதற்காக, 1997ல் முதல்வராக இருந்த கருணாநிதி கொண்டுவந்த மாவட்ட, போக்குவரத்துக்கழக பெயர்சூட்டும் படலம், அதனால் தான் தோல்வி அடைந்தது. சுந்தரலிங்கம் பெயரில்  போக்குவரத்துக்கழகம் அமைய வேண்டும்; இம்மானுவேல் பெயரில் மாவட்டம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளும், அதற்கு எழுந்த எதிர்ப்பும் தான் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் பயிர் மாற்ற வைபவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
.
சேரன்,  சோழன்,  பாண்டியன் என்ற பெயர்களில் இயங்கி தமிழகத்தின் பழம் பெருமையை வெளிப்படுத்திவந்த அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்கள் பெயரை சூட்ட கருணாநிதி முயன்றதே ஒரு சரித்திரப் பிழை. குறிப்பிட்ட பெயர் கொண்ட போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் குறிப்பிட்ட பகுதியில் தாக்கப்படும் என்ற உளவுத்தகவல் கிடைத்தவுடன், அப்படியே ‘பல்டி’ அடித்தார் திராவிடக் கொழுந்து. விளைவாக, மாவட்டங்கள் பழைய பெயரைப் பெற்றன; போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாகரீதியான பெயர்களைப் பெற்றன.  இதே கருணாநிதி தான், ஜாதிக் கட்சிகளுக்கு கூட்டணியில் இடமும், கூட இருந்த நண்பர்களுக்கு இதயத்தில் இடமும் அளித்தவர். தமிழகத்தின் ஜாதீய சீரழிவுக்கு முதற் காரணமாக ஒருவரைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் இவரைத் தான் சொல்ல வேண்டும்.
.
முன்னேர் செல்லும் வழியில் பின்னேர்கள் செல்வது போல, மூத்த அரசியல்வாதியான கருணாநிதியை ராமதாசும், திருமாவளவனும், இன்ன பிறரும் பின்தொடர, தமிழக அரசியல் ஜாதி அடிப்படையில் நிர்ணயம் செய்யக் கூடியதாக மாறிவிட்டது. இன்று தமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் (தனித் தொகுதிகள் தவிர்த்து) அந்தந்தப் பிரதேச ஜாதிவாரி கணக்கீட்டைக் கணக்கில் கொண்டே அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. உதாரணமாக, ஆர்க்காடு வட்டாரத்தில் வன்னியரே  எல்லா கட்சிகளிலும்  வேட்பாளர் ஆக முடியும். கொங்கு மண்டலப்  பகுதியில் கவுண்டர்களே வேட்பாளர் ஆக முடியும்.
.
இதைவிடக் கொடுமை,  அமைச்சரவையிலும் கூட ஜாதிவாரி பிரதிநிதித்துவம் தான் கோலோச்சுகிறது. இன்னின்ன ஜாதிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று  சில  பத்திரிகைகள் பட்டியல் வாசிப்பதையும் காண முடியும். ஜாதிரீதியான இட ஒதுக்கீடு அமைச்சரவையிலும் கூட இடம் பெற்றுவிட்டது. பிறகு, அரசு நிர்வாகம் திறமையாக இயங்குவதில்லை என்று அங்கலாய்த்தால் எப்படி?
.
உண்மையில் தனித்தொகுதி முறை மட்டும் இல்லாது போயிருந்தால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி முதற்கொண்டு நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவம் கிடைப்பது குதிரைக்கொம்பாகவே போயிருக்கும். எனினும், ஒரு நெருடல். ஏதாவது ஒரு பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை வேட்பாளராக எந்த ஒரு அரசியல் கட்சியாவது நிறுத்த முடியுமா? பொதுத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு தலித் பிரதிநிதி வெற்றி  பெறும்போது தான் நமது ஜனநாயகம் உண்மையிலேயே ஜனநாயகமாக இருக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் வெகு தூரத்திலேனும் காணக் கிடைக்கின்றனவா?  நாம் உளப்பூவமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.
.
நமது பிரச்னை என்னவென்றால், அரசியல் தாண்டி சிந்தித்து மக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு இல்லாதது தான். ஹிந்து அமைப்புகள் இந்த வெற்றிடத்தை எளிதாக நிரப்பி இருக்க முடியும். ஆனால், ஊடகங்களின் தொடர் எதிர் பிரசாரத்தாலும், அரசின் பாகுபாடு காட்டும் தன்மையாலும், அந்த நிலையை ஹிந்து இயக்கங்கள் அடைய முடியாமல் தவிக்கின்றன. அதையும் மீறித்தான் உத்தப்புரம் போன்ற முன்னுதாரணங்களை ஹிந்து இயக்கங்கள் உருவாக்கி இருக்கின்றன.
.
uthhapuram01உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும்? நமது ஊடகங்கள் ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்ற பெயரில் மார்க்சிஸ்ட்கள் நடத்திய போராட்டத்தை மட்டும்  தானே காட்டின? இயல்பாகத்  தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள். பிரச்னையை வேரும் வேரடி மண்ணும் இன்றி இயல்பாகத் தீர்த்துவைத்த ஹிந்து இயக்கங்கள் குறித்து ஹிந்து  இயக்கங்களில் பணி புரிவோருக்கே தெரியாது.
.
இதே உத்தப்புர உதாரணத்தை பாப்பாப்பட்டி,  நாட்டார் மங்கலம்,  கீரிப்பட்டியிலும், கண்டதேவியிலும் பிரயோகிக்க முடியும். கண்டதேவியில் இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஆனால், நாம் அறிவதெல்லாம் வன்முறை மிகுந்த கலவரச் சூழல் செய்திகள் தான். நமக்குத் தெரிந்தது எல்லாம் ஜாதி அடிப்படையிலான அமைப்புகளின் முழக்கங்கள் தான். இது தான் நமது பிரச்னை. இதற்கு என்ன காரணம்?
.
bharati3”பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று முழங்கிய விடுதலைக் குயில் மகாகவி பாரதியையே ‘பார்ப்பான்’ என்று வசைபாடிய கும்பல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததன் வினை இது. நாட்டுக்காகவே உழைத்த தீரர் சத்தியமூர்த்தியையும் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியரையும் ‘ஆரிய வந்தேறிகள்’ என்று பிலாக்கனம் பாடிய நாசகாரக் கும்பலை நாம் வேடிக்கை பார்த்த பாவத்தின் விளைவு இது.
.
ஜாதீய வேறுபாடுகள் சமூக,  பொருளாதார நிலைகளால் உருவாக்கப்பட்டவை; அவற்றை சமன்படுத்த இயல்பான ஒருங்கிணைப்புப் பணிகள் தேவை- என்பதை மறந்து,  ஜாதிக் கொடுமைகளுக்கு காரணமாகும் தங்கள் சுயநலனை மறைக்க இந்து மதம் மீது சேற்றை இறைத்த அரசியல்வாதிகளை நம்பியதற்கு கிடைத்த பலன் இது.
.
இதுவும் ஒரு நோய் தான். தனது தவறுகளை மற்றவர்கள் மீது கற்பிக்கும் ஒருவித மனோவியாதி இது. இதற்கு ஒரே தீர்வு, பிளவுபடுத்துபவர்களை மீறி, அனைவரும் சகோதரர் என்ற உணர்வுடன் ஆரத் தழுவிக் கொள்வது தான். அதற்கு நமது முன்னோடிகள் தான் ஆசி அளிக்க வேண்டும்.
.
.

வன்கொடுமை தடுப்பு சட்டம்- கவசமா, ஆயுதமா?

.

தாழ்த்தப்பட்ட மக்களின் இயல்பான் வாழ்க்கையை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘வன்கொடுமை தடுப்புச்சட்டம்’ குறித்து இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமூக ஒற்றுமை நாடுவோர் இதைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது.

.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை  மேல் ஜாதியினரின் வன்கொடுமைகளில் இருந்து காப்பதற்காக  1989ல் ‘வன்கொடுமை தடுப்புச்சட்டம்’ கொண்டுவரப்பட்டது.  இச்சட்டத்தில் 15 விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி வனகொடுமையில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தணடனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.  இதைத் தவிர்த்து குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டப் படியும்,  இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7 வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டு அதற்கு ஏழாண்டுகள் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

.
இந்தச் சட்டம் தேவையா? என்ற விவாதம் இப்போது கிளம்பி உள்ளது. பல இடங்களில் மேல் ஜாதியினரை மிரட்டவும் பழி வாங்கவும்  இச்சட்டம் ஒரு கருவியாக இருப்பதாக புகார்கள் கிளம்பி உள்ளன. வழக்கம் போல இதையும் பாமக தலைவர் ராமதாஸ் முன்வைத்து வருகிறார். “இதுவரை பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் 2.2 சதவீதம் மட்டுமே நிருபணமாகியுள்ளன. மற்றவற்றை நிரூபிக்க முடியவில்லை. எனவே அவை யாவும் பொய் வழக்குகள்” என்கிறார் ராமதாஸ். இதற்கு ஆதிக்க ஜாதிகள் சார்ந்த அமைப்புகளிடையே ஆதரவு கிடைத்திருக்கிறது. மாறாக, தலைத் அமைப்பினர் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

.
இவ்விஷயத்தை நாம் சமநிலையில் நின்று அவதானிக்க வேண்டும். ஒருகாலத்தில் தலித் ஜாதிப் பெயரையே ஒரு தரம் கெட்ட   வார்த்தைப் பிரயோகமாகப் பயன்படுத்த முடிந்த சூழல் இருந்தது. ‘பறையர், சக்கிலியர்’ என்ற ஜாதிப் பெயர்கள் வசைச் சொல்லாகவே புழங்கியதுண்டு. இன்றும் சில கிராமப்புறங்களில் நிலைமை முற்றிலும் மாறிவிடல்லை.  ஒருவனை அவமதிக்க இந்தப் பெயர்களில் வசை பாடினால் போதும். தலித் மக்களை தலையில் அடித்து உட்கார வைக்க இந்த வார்த்தையே  போதும் என்ற நிலைமை இருந்தது. அதை ஒரு வன்கொடுமையாக சட்டத்தில் சேர்த்ததால் தான், இன்று அவ்வழக்கம் 90 சதவீதம் குறைந்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம், மிக சாதாரணமான விவகாரங்களிலும் கூட, எதிர்த்தரப்பை முடக்க, இச்சட்டத்தை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது. ஏனெனில் பிணை இல்லாமல் கைது செய்யும் வாய்ப்பு இச்சட்டத்தில் இருப்பதால், இதைப் பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை பழி தீர்த்துக்கொள்ள சிலர் முயற்சிக்கிறார்கள். இதுவும் உண்மையே. இவ்வாறு ஆங்காங்கு நடக்கும் சில சம்பவங்களால் இச்சட்டம் தனது தார்மிகத் தன்மையை இழப்பதை உணர முடிகிறது.

.
எனினும்,  எந்த சட்டம் தான் நமது நாட்டில் 100 சதவீதம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது?  இக்கேள்விக்கு கிடைக்கும் பதிலே, வன்கொடுமை தடுப்பு சட்டம் விஷயத்திலும் நம்மால் பரிசீலிக்கப்பட வேண்டும். எந்த சட்டத்திலும்   துளைகளைக்  கண்டறிந்து தப்ப முயற்சிப்பதே குற்றவாளிகளின் இயல்பு. வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம்  செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன?

.
உண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒரு அற்புதமான கவசம்- தலித் மக்களுக்கு. எனினும் சிலர் இதையே ஒரு ஆயுதமாகப் பிரயோகிப்பது தவறே. இதுகுறித்து தலித் மக்களுக்கு விளக்கி அவர்களை நேர்வழியில் கொண்டுசெல்லும் தலைமை இல்லாததே இப்போதைய பெரும் குறை. டாக்டர் அம்பேத்கர் இப்போது இருந்திருந்தால் இச்சட்டத்திற்காக மகிழ்ந்திருப்பார்; அதே சமயம், இச்சட்டம் தவறாகப் பிரயோகிக்கப்படுவதை கடுமையாகக் கண்டிக்கவும் செய்திருப்பார். தலைவன் என்பவன் தன்னை நம்பியுள்ள மக்களின் அபிலாஷைகளைத்  தீர்ப்பவன் மட்டுமல்ல; அவர்களை வழிநடத்துபவன். அத்தகைய தலைவர்கள்  தலித் மக்களுக்கு மட்டுமல்ல, பிற சமூகங்களிலுமே பற்றாக்குறையாகத் தான் இருக்கிறது.

.
இன்றைய தேவை, தங்கள் சமூகத்துக்காகப் போராடியபடியே,  நாட்டுநலம் குறித்தும் சிந்திக்கும் தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் தான். முத்துராமலிங்கரும் அம்பேத்கரும் கடவுளுக்கு இணையாக வழிபடப்படுவது அதனால் தான். அவர்களை தங்கள் லட்சிய புருஷர்களாக, வழிகாட்டிகளாக மட்டும் நாம் கருதினால் போதாது. அவர்களின் செயல்முறையை சுவீகரிக்கவும் தயாராக வேண்டும்.

.
எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் சில தவறான விளைவுகள் ஏற்படினும், அதன் பயன்களைக் கண்ணுறும்போது,  அதன் முக்கியத்துவம் புலப்படுகிறது. எல்லா கிராமங்களிலும் சரிநிகர் சமானமாக தலித்  மக்கள் நடத்தப்படும் வரையில், இச்சட்டத்தின் தேவை இருக்கும்-  தலித்  மக்கள் சிலர் இதைத் தவறாக பிரயோகித்தாலும் கூட. ஏனெனில், பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் அடைந்த அவமானங்களுக்கு, நமது முன்னோரின் தவறுகளுக்கு அது ஒரு வகையில் பிராயச்சித்தம் மட்டுமே.

.

செய்தி ஆதாரங்கள்:

கண்டதேவி கோவில் தேரோட்டம் (ஒன்  இந்தியா செய்தி – 12.07.2003)

தேர்களை சீர் செய்து தேரோட்டம் நடத்தவேண்டும்: ராம.கோபாலன்  (தினத்தந்தி- 12.09.2012)

வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவையா? சாவித்திரி கண்ணன் கட்டுரை

 

(தொடரும்)

11 Replies to “ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3”

  1. சேக்கிழானின் கட்டுரை உண்மையை தெளிவாக சுட்டுகிறது.

    விஸ்வ இந்து பரிஷத் செய்த பணி சேக்கிழான் அவர்களின் கட்டுரையை படித்து தான் தெரிந்து கொண்டேன். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு நமது பாராட்டுக்கள். அது வாழ்க பல்லாண்டு.

    அண்ணா, காமராஜர், பெரியார், பாரதிதாசன், எம் ஜி ஆர் , மனோன்மணீயம் சுந்தரனார், என்ற பெயர்களில் பல பல்கலை கழகங்கள் இயங்குகின்றனவே, அவற்றின் பெயரால் இன்றுவரை ஒரு கலாட்டாவும் நடக்கவில்லையே . பின் ஏன் மாவட்டம் , போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவேண்டும் ? சோழன் , சேரன் , பாண்டியன் என்ற பெயர்கள் கூட ஏனய்யா நீக்கப்பட்டன ? ஏனென்றால் , தமிழகத்தின் பழம்பெருமை ஆங்கிலேயர்களின் அடிவருடி பாதபூஜை செய்து வந்த ஜஸ்டிஸ் கட்சியின் வழித்தோன்றல்கள் ஆகிய திமுகவினருக்கு வேப்பங்காய் போல கசக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன கும்பல் தான் அது.

    எனவே, கருணா அவர்கள் முதல்வராக இருந்தபோது அள்ளித்தெளித்த கோலம், அவசரகோலமாக, ஜாதிக்கட்சிகளை அரவணைத்து கூட்டணி உருவாக்கியதனாலேயே , அவர் 2001- தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டிய சூழல் ஏற்பட்டது. திமுக தனித்து போட்டியிட்டிருந்தால் கூட, சிறிய மெஜாரிட்டியுடன் வென்றிருக்கும். ஜாதி அடிப்படையிலான ரிசர்வேஷன் முறை இந்தநாட்டை பாழ்படுத்திவிடும். நம் நாட்டையே அழிக்க அது ஒன்று போதும்.

    கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் குழந்தைகளுக்கு சாதியற்றவர் என்று சான்றிதழ் அளித்து, அவர்களுக்கு மட்டுமே நூறு சதவீதம் அரசு வேலை என்று இந்திய அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் இந்த ஜாதிகளும், ஜாதிகளை வைத்து வோட்டு வங்கி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளும் காணாமல் போகும்.

  2. சேக்கிழான் அவர்களின் கருத்துக்களை ஒட்டி ஒரு அலுவலகக் கூட்டத்தில்
    இதே கருத்துக்களை முன் வைத்தேன். சுவாமி சகஜானந்தர் ஆற்றிய பணிகளை பற்றியெல்லாம் எடுத்து உரைத்தேன்.அண்ணல் அம்பேதகரின் நல்லெண்ணக் கருத்துக்களை முன் வைத்தேன்.

    தாழ்த்தப்ப்பட்டவர்களை ‘தலித்’ என்று குறிப்பிட வேண்டும் என்று அப்போது எனக்குத்தெரியாது. எனக்குப் பரிச்சயமான ‘ஹரிஜன்’ என்ற சொல்லையே பயன் படுத்திவிட்டேன்.அதற்காக உடனே எஸ் சி எஸ் டி நலச்சங்கம் அவசரக்கூட்டம் நடத்தி என் மீது வன் கொடுமை தடைச் சட்டத்தில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.இறையருளாலும் ,கூட்டத்தில் நான் கூறிய நல்லெண்ணக் கருத்தாலும் கவரப்பட்ட ஒரு சில எஸ்சி ஊழியர்கள் எனக்கு சாதகமாகப் பேசி என்னை வழக்கிலிருந்து காப்பாற்றினர்.

  3. வீடியோவில் உள்ள உரையை கேட்டு மிக்க வருத்தம் அடைந்தேன். இவர்களுக்கு வன்முறையை தூண்டும் பேச்சு என்பது திக, திமுக போன்ற கும்பல்களால் தான் வளர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஒருவரை நான் கொள்கிறேன் என்று சொல்லும் நபரை காவல்துறை என்ன செய்யப்போகிறது ?

  4. தமிழகத்தில் சமுதாய சமத்துவ கருத்தாக்கங்களும், தலித் உரிமைப் போர்களும் பரவலாகாது போனதற்கும், சாதி வெறி இன்றைக்கும் நீடிப்பதற்குமான ஒட்டுமொத்தக் குற்றவாளி ஈ.வெ.ராவும் திராவிட இயக்கமுமே.

    தருமபுரி கலவரங்களை முன்வைத்து ஜெயமோகன் இன்று எழுதியுள்ள அருமையான கட்டுரையில் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார் – https://www.jeyamohan.in/?p=33488

  5. எடுதகரியம் முடித்தபின் சாட்சிக்கு தனது முகம் கூட தெரியக்கூடாது என்று தன்னைதானே சிதைத்தவன் வாஞ்சி , இரண்டாம் விவேகாணந்தர் தேவர் அவர்கள் . அவரது சமாதி கோயில் பின்பக்கம் உள்ள அவரது அறையில் ஹெட்கேவர்ஜி புகைப்படத்திநை 8 வருடம் முன் பார்த்தேன் . அம்பேத்கர் அவர்களின் பாகிஸ்தான் பிரிவினை எழுத்தோவியம் அனைவரும் படிக்கணும். வள்ளலாரின் செயல் வடிவம் காமராஜர் . கைகள் இருப்பவன் தொழ வேண்டும் கக்கன் அவர்களை.

  6. ஜெயமோகன் அவர்களின் எழுத்தோவியம் உண்மையை அப்பட்டமாக சொல்லும் ஒரு காவியம். திராவிட இயக்கங்களான திக மற்றும் திமுக சாதி நச்சினை விதைத்து, நீரூற்றி, உரமிட்டு, பெரும் ஆலமரமாக்கி வளரச்செய்துள்ளன. இந்த மோசடிக்காரர்கள் மேடைகளில் தாங்கள் சாதியற்ற சமுதாயம் உருவாக்குவோம் என்று பொய்யுரை பரப்பி , வீண் வேடதாரிகள் என்பதை செயலில் நிரூபித்துள்ளனர்.

    திராவிடம் என்றாலே தமிழ் சமுதாயத்தின் குடிகேடிகள் என்று பொருள். காலை எழுந்தவுடன் டாஸ்மாக் கடைவாசலில் குற்றுயிரும் குலை உயிருமாக தமிழனை சந்திக்க வைத்த தீய சக்திகள். இங்குள்ள தமிழன் உடல் நலம் இழந்து, எந்த வேலையும் செய்ய தகுதி அற்றவன் ஆகிவிட்டான். எனவே தான் சரவணா பவன் உட்பட பல ஓட்டல்களிலும், பல தொழில்களிலும், அதாவது கட்டுமான வேலைகளில் சிற்றாள் வேலைக்கு கூட பீகார் , நேபாளம் போன்ற முறையே வெளிமாநிலத்தோர் மற்றும் வெளிநாட்டோர் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதுதான் 1969- க்குப்பின்னர் தமிழக ஆட்சிக்கட்டிலில் ஏறிய தீய சக்திகள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் சாதனை. வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்! வீழ்க திராவிட மோசடிக்கும்பல்.!

  7. தேசிய தலைவர்களையும் ஆண்மீக பெரியவர்களையும் ஜாதிய கண்ணோட்டத்தில் அணுகும் முறை தமிழகத்தில் தீவிரமாகதான் உள்ளது. இதை பற்றி விஜயபாரதம் 14.12.12 இதழில் ஒரு அழகிய அட்டைப் படத்துடன் (ஜாதியத் தலைவர்களா … சாதித்த தலைவர்களா?) என்று தலைப்பிட்டு உள்ளே சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் தலைவர்களுக்கு விழா எடுப்பதும் ஜாதி அடிப்படையில் சாதித்து காட்டிய தலைவர்களை அவதுறு கூறுவதும் நிச்சயம் தவறுதான்.
    இப்பொழுது ராமதாஸ் ஒரு புதிய ஜாதி கூட்டணியை மாற்று மொழி பேசும் இனத்தவருக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிராகவும் முதலியார் வன்னியர் வேளாளர் சிறுபான்மையிரான இஸ்லாமியர்கள் கூட்டாம். இதில் கிருஸ்துவர்களுக்கு இடம் இல்லை போலும் (பல ஜாதி கலவரங்களுக்கு இந்த மதமாறிய ஹிந்துகளை கிருஸ்துவம் தூண்டிவிடுகிறது என்ற காரணமா) ஆனால் வெளிபடையாக அவர்களை எதிர்பதில் தயக்கம். ராமதாஸ் புதுகூட்டணி பழைய நீதிகட்சியின் கிளையா?

  8. புதிய ஜனநாயகம் ஜனவரி 2013 இதழின் தலையங்கத்தில் ராமதாஸ் ”அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை” என்பதை உருவாக்கி அதில் 51 ஜாதி சங்கங்களை கூட்டியிருப்பதாகவும் அதில் ஹிந்து மக்கள் கட்சியும் மறுமலர்சி மூஸ்லீம் லீகும் கலந்து கொண்டது என்கிறார்கள். இது உண்மையா என தெரியவில்லை. ஹிந்து மக்கள் கட்சி இப்படிப் பட்ட ஜாதி சங்கங்களில் சேருவது மிகவும் தவறு. இன்றைய பல ஜாதி கலவரங்கள் ஹிந்து மதத்திலிருந்து கிருஸ்துவத்திற்கு மாறியவர்களை கிருஸ்துவம் தூண்டிவிடுவதினால் நிகழ்கிறது என்பதை திரும்பவும் சொல்கிறேன். மதம்மாறத தலித்துஹிந்துகளை ஹிந்துகள் அரவணைத்து ஆதரிக்க வேண்டுமே தவிற எதிர்மறையான செயலில் இறங்கக்கூடாது. மதமாற்று தடைசட்டம் வேண்டும் என்பவருடனும் சிறுபான்மையினரை அனுசரிப்போம் ஆனால் அரவணைத்து செல்லமாட்டோம் என்பவருடனும்தான் ஹிந்துக்கள் கூட்டு சேரவேண்டும்

  9. வணக்கம்,
    மன நோயாளி ஒருவர் உளரியதை Sathyaa on January 7, 2013 at 9:10 pm
    See how Casteism Reaction in Tamil Nadu:) வெளியிட்டுள்ளீர்கள், இதைப்போல் பல மனநோயாளிகள் இங்கு உள்ளனர்,

    சமுதாயத்தில் அமைதிநிலவவும், அனைத்துதரப்பு மக்களும் முன்னேறவும் முதன்மையான தேவை இப்படிப்பட்ட கேஸ்களின் பிதற்றல்களை நாம் புறக்கணிப்பதும், அவற்றின் இடத்தை சீரிய சிந்தனையாளர்களைக்கொண்டு நிரப்புவதும்தான்.

    மேலும் தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோருக்கு உண்மையில் முன்னேற்றம் வேண்டுமென்றால் அது அவர்களிடமும், அவர்களைப்பற்றி மற்ற சாதியினரிடமும் ஏற்படும் ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வினால்தான் சாத்தியம். கண்டிப்பாக வன்கொடுமைச் சட்டத்தின் இப்போதைய வடிவில் அது சாத்தியமே இல்லை.

    இப்போதைய வடிவில் வன்கொடுமைச் சட்டத்தால் பிளவுகளையும் பிரச்சினைகளையும் வளர்க்கத்தான் முடியும், இச்சட்டம்தான் மேலே நாம் கண்டதைப்போன்ற பொறுப்பற்ற மனநோயாளிகள் தோன்றுவதற்கும் காரணம்.

    பயிர்களை வளர்க்கப் பாடுபடுவோம், களைகள் தானாக மடிந்துவிடும்

  10. சாதி அரசியலுக்கு இது தான் தீர்வு.

    உலகெங்கும் மக்கள் யாருமே புதிய நிலத்தை உருவாக்க முடியாது. இருக்கிற நிலத்தை தான் அனைவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. உணவு உற்பத்தியை கூட அதிகரிக்க முடியும். ஆனால் நிலத்தின் அளவை கூட்டவோ,குறைக்கவோ முடியாது. ஒரு ஐ ஏ எஸ் அந்தஸ்து உள்ள அதிகாரி சுமார் 30 முதல் 40 வருடம் வேலை பார்த்து ஒய்வு பெறும்போது , சொந்தமாக ஒரு வீட்டுக்குமேல் இரண்டாவது வீடு வாங்க முடியாது. அவருடைய ஓய்வூதிய பலன்கள் மொத்தமாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்குள் தான் வரும்.( அவருடைய சேமநல நிதி உட்பட.)

    ஆனால் இன்றைய அரசியல் வாதிகளை பார்த்தால், மிக குறுகிய காலத்தில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாங்கிவிடுகிறார்கள். ஒன்றிய செயலாளர்கள் கூட நிறைய சேர்த்துவிடுகின்றனர். மேலும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே, தனி நபர் மற்றும் ஒரு குடும்பத்துக்கு இத்தனை சதுரஅடி நிலம் தான் வைத்துக்கொள்ளலாம் என்று உச்ச வரம்பு கொண்டுவரவேண்டும். ஜாதிகளின் செல்வாக்கு அவர்கள் வைத்துள்ள நிலத்தின் பரப்பளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் சாதிகள் என்பவை உண்மையில் யார் என்பது , நில உடமை கணக்கெடுப்பு நடத்தி , குறிப்பிட்ட சில சாதியாரிடம் , மற்றும் குறிப்பிட்ட சில மதத்தினரிடம் அளவுக்கு அதிகமாக நில உடமை இருப்பது கண்டறியப்படும் போது மட்டுமே சாத்தியமாகும்.

    மக்கள் தொகையில் ஒரு சாதியினர் எவ்வளவு சதவீதம் இருக்கிறார்களோ, மொத்த நிலப்பரப்பில் அந்த சாதியினருக்கு அதே சதவீதம் தான் இருக்க வேண்டும்.கூடுதலாக இருக்கும் நிலப்பரப்பை பறித்து , நிலமில்லாத பிற சாதியினருக்கு வழங்க வேண்டும்.

    நில உடைமை தான் உலகெங்கிலும் மனிதனுக்கு பிறர் மீது அதிகாரம் செலுத்த வாய்ப்பு அளிக்கிறது. டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமா போன்றோர் , தங்கள் சாதியினருக்கு அரசில் வேலை வாய்ப்பு தேடுவதால் , அந்த சமூகங்கள் என்றைக்கும் உயராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாதி மற்றும் மதம் வாரியாக நில உடமை கணக்கெடுத்து , அதிக நிலம் வைத்துள்ள சாதிகளின் மற்றும் மதங்களின் நிலத்தை பறிமுதல் செய்து , குறைவாக நிலம் வைத்துள்ள , மற்றும் நிலமே இல்லாத சாதிகளுக்கும், மதங்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும். இதனை செய்தால் எல்லா மத வெறியும், சாதி வெறியும் காணாமல் போய்விடும். அரசாங்கத்தில் எவ்வளவு பதவிகள் கிடைத்து அரசு ஊழியர் எண்ணிக்கை அதிகம் பெற்றாலும், சம்பளத்தில் ஒரு வீடு தான் வாங்க முடியும். லஞ்சம் வாங்கும் பேய்கள் தான் ஊரை அடித்து உலையில் போட முடியும். ஆனால் அவர்களில் சிலர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டு , வேலையை இழந்து சிறை தண்டனை பெறுவதும் நடக்கிறது. எனவே, சாதி ஒழிய நிலம் கைமாறினால் தான் , தீர்வு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *